அலசல்
Published:Updated:

விசாரணை கமிஷன்களா... கண்துடைப்பு கமிஷன்களா?

விசாரணை கமிஷன்களா... கண்துடைப்பு கமிஷன்களா?
பிரீமியம் ஸ்டோரி
News
விசாரணை கமிஷன்களா... கண்துடைப்பு கமிஷன்களா?

விசாரணை கமிஷன்களா... கண்துடைப்பு கமிஷன்களா?

ரசால் நியமிக்கப்படும் விசாரணை கமிஷன்கள்மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். கலவரம், மர்மங்கள், பெரிய மோசடிகள் போன்றவற்றால் அரசுக்கு எதிரான கொந்தளிப்பு நிலையில் மக்கள் இருக்கும்போது, அவர்களைச் சமாதானப் படுத்துவதற்கான ஒரு கருவியாக மட்டுமே விசாரணை கமிஷன்களை ஆட்சியாளர்கள் பயன்படுத்துவதுதான், மக்கள் நம்பிக்கை இழப்பதற்குக் காரணம்.

விசாரணை கமிஷன்களா... கண்துடைப்பு கமிஷன்களா?

ஜெயலலிதா மரண மர்மம், ஜல்லிக்கட்டு கலவரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, நிர்மலாதேவி சர்ச்சை போன்ற விவகாரங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன்கள் தற்போது செயல்பட்டுவருகின்றன. ஏற்கெனவே, மாநில அளவிலும் தேசிய அளவிலும் ஏராளமான விசாரணை கமிஷன்கள் அமைக்கப் பட்டுள்ளன. கமிஷனின் அறிக்கை தங்களுக்குச் சாதகமாக இருந்தால், அதை அரசு வெளியிடும். ஒருவேளை அரசுக்கு எதிராக இருந்தால், அதை அப்படியே அமுக்கிவிடுவார்கள். மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் மோசடி பற்றியும், அதில் அரசு மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் பற்றியும் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது சகாயம் கமிஷன். அது அறிக்கையைச் சமர்ப்பித்து பல மாதங்களாகியும் அதன்மீது எந்த நடவடிக்கை யும் இல்லை.

நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் ஜல்லிக்கட்டு போராட்டங்களின்போது நிகழ்ந்த கலவரம் பற்றி விசாரிப்பதற்காக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இதில் சாட்சி சொல்ல வருபவர்கள் மிரட்டப்பட்டும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் வருவதால், போலீஸுக்கு எதிரான புகார்கள் அதிகம் பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன், மதுரையில் நடந்த விசாரணையில் சாட்சியம் அளிக்க வந்தவர் களிடம் உளவுத்துறை போலீஸ் அந்த வளாகத்தில் இருந்துகொண்டு விசாரித்தது. அதை நேரில் பார்த்து நாம் விசாரணை ஆணையரிடம் புகார் செய்தோம். ‘இப்படி போலீஸ் கண்காணிப்பு உள்ள நிலையில், விசாரணை கமிஷனில் பயமின்றி மக்கள் எப்படி சாட்சி சொல்வார்கள்’ என்ற கேள்வி எழுந்துள்ளது. மதுரை அலங்காநல்லூரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ராஜேஸ்வரன் விசாரணை ஆணையத்தில் வழக்காடிவந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதனை இப்போது தூத்துக்குடி வன்முறை வழக்கில் கைதுசெய்துள்ளனர்.

விசாரணை கமிஷன்களா... கண்துடைப்பு கமிஷன்களா?

‘ஜெயலலிதா மரண மர்மம் பற்றி எடப்பாடி பழனிசாமி அரசு நியமித்த ஆறுமுகசாமி விசாரணை கமிஷனைத் தடை செய்ய வேண்டும், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி கமிஷனை அமைக்கவில்லை’ என்று அப்போதே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அது தள்ளுபடி செய்யப்பட்டு, கமிஷன் அமைக்கப்பட்டது. இதன் விசாரணைக் காலத்தை இரு முறை அரசு நீடித்துள்ளது. இதன் விசாரணை முடிந்து, ஜெ. மரணம் தொடர்பான மர்மங்கள் எப்போது விலகும் என்று தெரியவில்லை.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி மாணவி களைத் தவறாக வழிநடத்திய விவகாரம் பெரிய அளவில் வெடித்தவுடன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் கவர்னரே ஒரு விசாரணை கமிஷனை நியமித்தார். இன்னொருபுறம், இதே விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடக்கிறது. விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாமல் விசாரணை நடத்தினார் சந்தானம். இந்த விசாரணை அறிக்கையை வெளியிட உயர் நீதிமன்றம் தடை போட்டுள்ளது. வேகமாக வந்து வேகமாகத் தடை வாங்கிய விசாரணை கமிஷன் இதுதான்.

விசாரணை கமிஷன்களா... கண்துடைப்பு கமிஷன்களா?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை கமிஷனுக்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ஜுனன் மனு செய்தார். ‘‘சட்டம் ஒழுங்கு பிரச்னையால் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு என்று அரசாணையில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. இப்படி முன்முடிவுடன் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால், இந்த விசாரணை கமிஷன் நியாயமாகச் செயல்படாது. அதனால், அதற்குத் தடை விதிக்க வேண்டும்’’ என்று அர்ஜுனன் மனுவில் கூறியுள்ளார். அந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், விசாரணை கமிஷன் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.

விசாரணை கமிஷன்களா... கண்துடைப்பு கமிஷன்களா?

விசாரணை கமிஷன்கள்மீது மக்களுக்கு அதிருப்தியும், நம்பிக்கையின்மையும் ஏற்பட்டிருப்பது ஏன் என்று ‘சமம் குடிமக்கள் இயக்க’த்தின் தலைவர் வழக்கறிஞர் சி.சே.இராசனிடம் கேட்டோம். ‘‘விசாரணை கமிஷன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குறைந்தபட்ச நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை முன்பு இருந்தது. இப்போது அது இல்லை. பரமக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி விசாரித்த கமிஷனில், சம்பந்தப்பட்ட ஒரு போலீஸாவது தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், கமிஷன்மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். அந்த நேரத்தில் மக்களின் கோபத்தைத் தணிக்கவும், அரசின் செயல்பாட்டை நியாயப்படுத்தவும்தான் கமிஷன்கள் அமைக்கப்படுகின்றன. பொதுவாக, எந்தவொரு சம்பவத்திலும் போலீஸின் செயலை நியாயப்படுத்த சிலர் இருப்பார்கள். ஆனால், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒட்டுமொத்த மக்களும் ஒரு பக்கமாகவும், அரசும் போலீஸும் மற்றொரு பக்கமாகவும் நிற்கிறார்கள். பணியில் உள்ள நீதிபதிகள் மூலமாகவோ, உயர் நீதிமன்றத்தால் கண்காணிக்கப்படும் குழுவாலோ விசாரணை நடத்தினால் மக்களுக்கு நம்பிக்கை வரும். இல்லையென்றால், இவை கண்துடைப்பு விசாரணைகளாகவே இருக்கும்’’ என்றார்.

இந்த விசாரணை கமிஷன்களுக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து லட்சம் லட்சமாகச் செலவுசெய்யப்படுவதுதான் கொடுமை!

- செ.சல்மான், படம்: வி.சதீஷ்குமார்