அலசல்
Published:Updated:

செலவை மிச்சம் செய்ய... அமைச்சர்களே கார் ஓட்டுவார்களா?

செலவை மிச்சம் செய்ய... அமைச்சர்களே கார் ஓட்டுவார்களா?
பிரீமியம் ஸ்டோரி
News
செலவை மிச்சம் செய்ய... அமைச்சர்களே கார் ஓட்டுவார்களா?

செலவை மிச்சம் செய்ய... அமைச்சர்களே கார் ஓட்டுவார்களா?

யார் நடத்துகிறார்கள் என்பதே தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறது தமிழக அரசு. இந்த அரசுதான், ‘நடத்துநரே இல்லாமல் பேருந்தை ஓட்டலாம்’ என்ற ஒரு முடிவையும் எடுத்திருக்கிறது.

515 புதிய அரசு சொகுசுப் பேருந்துகளை ஜூலை 3-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பல நவீனத் தொழில்நுட்பங்களுடன், குளிர்சாதன வசதி, படுக்கை வசதி, கழிப்பறை வசதியுடன் கூடிய சொகுசுப் பேருந்துகள் தற்போது தமிழகத்தில் ஜம்மென்று வலம்வருகின்றன. இதில், ‘தொலைதூரங்களுக்குச் செல்லும் பேருந்துகள் நடத்துநர் இல்லாமல் இடைநில்லாப் பேருந்தாக (End to End) இயக்கப்படும்’ என அறிவித்திருக்கிறார்கள். அதாவது, பேருந்து நிலையத்தில் பயணிகள் ஏறியதும், நடத்துநர் டிக்கெட் கொடுத்துவிட்டுப் பேருந்திலிருந்து இறங்கிவிடுவார். அதன்பிறகுப் பேருந்தின் கதவு சாத்தப்பட்டால், இடையில் எங்குமே கதவு திறக்கப்படாது. இடையில் பயணிகளும் ஏற்றப்படமாட்டார்கள்.

செலவை மிச்சம் செய்ய... அமைச்சர்களே கார் ஓட்டுவார்களா?

ஈரோடு - கோவைக்கு இடையே கடந்த 10 வருடங்களாகவே, நடத்துநர் இல்லாமல் இதுபோல நான்கு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. ஆரம்பத்திலேயே இதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, ‘புதுமுயற்சிக்கு ஒத்துழைப்பு தாருங்கள்’ என அதிகாரிகள் கேட்டிருக்கின்றனர். போக்குவரத்து ஊழியர்களும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ‘‘தற்போதுவரை அந்த நான்கு பேருந்துகளுமே நஷ்டத்தில் ஏதோ கடமைக்காகத்தான் இயங்கிவருகின்றன. அப்படியிருக்க, மறுபடியும் அரசு ஏன் இந்த முயற்சியைக் கையில் எடுத்திருக்கிறது? இதனால், எதிர்காலத்தில் நடத்துநர்களின் வேலை பறிபோகும் அபாயம் இருக்கிறது. போக்குவரத்துக் கழகங்கள் மேலும் நஷ்டமடையும்’’ என்று பல குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர் போக்குவரத்து ஊழியர்கள்.

இதுகுறித்து தொ.மு.ச பேரவையின் பொதுச்செயலாளர் சண்முகத்திடம் பேசினோம். “எப்போது எதைக் கேட்டாலும், ‘போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன’ என்ற பதிலைத் தமிழக அரசு சொல்கிறது. மக்களுக்குச் சேவை செய்கிற பொதுப் போக்குவரத்தை எக்காலத்திலும் லாபகரமாக இயக்க முடியாது. போக்குவரத்துக் கழகத்தின் நஷ்டத்தை ஈடுகட்டும் நோக்கில், நடத்துநர் இல்லாத பேருந்து சேவையைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது. ஒரு நாளைக்கு அரசுப் பேருந்துகளுக்கு 17 லட்சம் லிட்டர் டீசல் போடுகிறார்கள்.அதில் டீசலுக்கு மறைமுக வரி மட்டும் தினமும் ரூபாய் ரூ.60 லட்சம் ஆகின்றது. அந்த வரியிலிருந்து ஏன் அரசு விலக்கு கேட்கக் கூடாது? டோல்கேட்டில் கோடிக்கணக்கில் வரி கட்டுகிறார்கள். மக்களுக்குச் சேவை செய்யும் அரசு, ஏன் டோல்கேட்டில் பணம் கட்ட வேண்டும்? நஷ்டத்தைச் சரிசெய்ய என்ன வழியோ அதை யோசிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு நடத்துநர் இல்லாமல் பேருந்தை இயக்கினால் லாபம் கிடைத்துவிடுமா?

செலவை மிச்சம் செய்ய... அமைச்சர்களே கார் ஓட்டுவார்களா?

தி.மு.க ஆட்சிக் காலத்தில் 100 ஏ.சி பஸ்கள் வாங்கினார்கள். இப்போது அவையெல்லாம் சரியாகப் பராமரிக்கப்படாமல் வொர்க்‌ஷாப்பில் நிற்கின்றன. பேருந்தில் நடத்துநர் இருந்தால், அவர் டிரைவருக்கு மட்டுமல்ல; பயணிகளுக்கும் உதவிகரமாக இருப்பார். நடத்துநர் இருந்தால் கூடுதலாகப் பயணிகளைப் பேருந்தில் ஏற்றுவார். இதனால், அரசுக்குத்தானே லாபம்?” என்றார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சி.ஐ.டி.யு) மாநிலப் பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார், ‘‘போக்குவரத்துக் கழகங்களின் நஷ்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென, நடத்துநர் இல்லாத பேருந்துகளை அரசு இயக்குவது தவறு. செலவைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் கார்களுக்கு டிரைவர்களைக் கொடுக்காமல், அந்த அதிகாரிகளையே கார்களை ஓட்டச் சொல்லலாமே! அமைச்சர்களும் அவர்களே கார் ஓட்டிக்கொள்ளலாமே. அதனால், செலவு மிச்சமாகுமே?

மோட்டார் வாகனச் சட்டத்தில் விதிகள் 227-ன் படி நடத்துநரும், ஓட்டுநரும் இல்லாமல் பயணிகள் பேருந்தை இயக்கக் கூடாது. அரசு போட்ட அந்தச் சட்டத்தை அரசே மீறுகிறது. டிக்கெட் கொடுப்பது மட்டும் நடத்துநருக்கான வேலை இல்லை. நடத்துநர் இருந்தால்தான் ஓட்டுநரால் வண்டியைச் சிரமமின்றி ஓட்ட முடியும். கூட்ட நெரிசல்களின் போது, பேருந்தை ரிவர்ஸ் எடுக்க, இரவு நேரங்களில் ஓட்டுநருக்கு உறுதுணை யாக இருக்க, பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய என நடத்துநரின் தேவை முக்கியமானதாக இருக்கிறது.

போக்குவரத்து என்பது சேவை. மக்களுக்கான இந்த அரசாங்கமானது, லாபம் வேண்டுமெனச் செயல்படும் ஒரு முதலாளியைப் போல் நடந்து கொள்ளக்கூடாது” என்றார்.

செலவை மிச்சம் செய்ய... அமைச்சர்களே கார் ஓட்டுவார்களா?

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் பேசினோம். “515 புதிய பஸ்கள் விட்டுள்ளோம். இவற்றில் 250 பேருந்துகளில் மட்டுமே கண்டக்டர்கள் இல்லை. இது ஆட்குறைப்பு நடவடிக்கை கிடையாது. தொலைதூரப் பேருந்துகளை இடையில் நிறுத்திப் பயணிகளை ஏற்றாமல், மக்கள் விரைவாகச் செல்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை. மதுரையிலிருந்து சென்னை வரும் ஒரு பஸ்ஸில், மதுரையிலேயே எல்லா இருக்கைகளும் நிரம்பிவிடும் எனும்போது, இடையில் எதற்கு கண்டக்டர்? ரிவர்ஸ் எடுப்பது உள்ளிட்ட தேவைகளுக்கு நவீனத் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எந்த ஊரிலும் பஸ் ஸ்டாண்டுக்குள் வந்துவிட்டால், அங்கிருக்கும் ஊழியர்கள் பார்த்துக்கொள்வார்கள். புதிய முயற்சிகளைத் தொழிற்சங்கங்கள் எதிர்க்கக்கூடாது’’ என்றார் அவர்.

- நவீன் இளங்கோவன்
படங்கள்: கே.தனசேகரன், கா.முரளி