அலசல்
Published:Updated:

9 ஐ.ஏ.எஸ்-கள்... 2 அமைச்சர்கள்! - ரெய்டில் சிக்கிய திமிங்கிலங்கள்

9 ஐ.ஏ.எஸ்-கள்... 2 அமைச்சர்கள்! - ரெய்டில் சிக்கிய திமிங்கிலங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
9 ஐ.ஏ.எஸ்-கள்... 2 அமைச்சர்கள்! - ரெய்டில் சிக்கிய திமிங்கிலங்கள்

9 ஐ.ஏ.எஸ்-கள்... 2 அமைச்சர்கள்! - ரெய்டில் சிக்கிய திமிங்கிலங்கள்

ந்தியாவின் மெகா வருமானவரி ரெய்டுகளில் ஒன்றாக மாறியிருக்கிறது, கிறிஸ்டி நிறுவனத்தில் நடைபெற்ற ரெய்டு. இந்தியா முழுக்க 100-க்கும் மேற்பட்ட இடங்கள்... ஐந்து நாள்களையும் தாண்டி நடைபெறும் சோதனைகள்... ரகசிய விசாரணைகள்... மூட்டை மூட்டையாக ஆவணங்கள் என கிறிஸ்டி மற்றும் அதன் துணை நிறுவனங்களைக் கிடுக்கிப்பிடி போட்டு வளைத்திருக்கிறது வருமானவரித் துறை. விவசாயமே செய்யாமல் பருப்பும், கோழிப்பண்ணையே இல்லாமல் முட்டையும், நகைக்கடையே இல்லாமல் தாலிக்குத் தங்கமும் சப்ளை செய்யும் டெண்டர்களை எடுத்துக் கோடிகளைக் குவித்திருக்கும் இந்த நிறுவனம், பல்வேறு கட்டுமான கான்ட்ராக்ட்களையும் பெற்றிருப்பது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. தமிழக அரசியல்வாதிகளை மட்டுமின்றி, வெளி மாநில அரசியல்வாதிகளையும் மிரளவைத்துள்ளது இந்த ரெய்டு. இந்த நிறுவனத்தினர் பல மாநிலங்களின் ஆட்சியாளர்களை பணபலத்தின் மூலம் வளைத்து, அரசுகளிடம் பல நூறு கோடி ரூபாய்க்கு உணவு வர்த்தகம் செய்துள்ளனர். இந்த நிறுவனங்களால் மறைமுக ஆதாயம் பெற்ற அனைவரும் இப்போது திகிலில் இருக்கிறார்கள்.

9 ஐ.ஏ.எஸ்-கள்... 2 அமைச்சர்கள்! - ரெய்டில் சிக்கிய திமிங்கிலங்கள்

கிறிஸ்டி ஃபிரைடு கிராம் நிறுவனம், மற்றும் அதன் துணை நிறுவனங்களில் ஜூலை 5-ம் தேதி தொடங்கியது ரெய்டு. மத்தியப் பிரதேசத்தில் பிடிக்கப்பட்ட இந்நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமியிடமும், அவரின் மூத்த மகளும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான திவ்யா என்ற கிறிஸ்டியிடமும் மறைமுக இடத்தில் தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது. ‘‘சமூகநலத் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கட்டங்களில் பொறுப்பு வகித்த ஒன்பது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்குக் கோடிகளில் பணம் கொடுத்திருப்பதாக குமாரசாமி சொல்லியிருக்கிறார். அந்த அதிகாரிகள் பக்கம் அடுத்து எங்கள் கவனம் திரும்பும். கடந்த 20 ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறக்கிறது கிறிஸ்டி நிறுவனம். அதிக விலைக்கு முட்டையையும், தரமற்ற பருப்புகளையும் இந்த நிறுவனங்களிலிருந்து வாங்குவதற்குக் காரணமாக இருந்த இரு அமைச்சர்கள்மீது அடுத்தகட்டமாக நடவடிக்கை பாயப்போகிறது’’ என்கிறார்கள் வருமானவரித் துறை அதிகாரிகள்.

யார் இந்த குமாரசாமி?

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டூர் அருகேயுள்ள திருமங்களம் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி. ‘‘குமாரசாமியின் அப்பா பெயர் பொன்னா கவுண்டர், அம்மா பாவாயி. ஏழை விவசாயக் குடும்பம். குமாரசாமியின் மனைவி செல்வி. இவர்களுக்கு கிறிஸ்டி என்கிற திவ்யா, சிந்து என இரண்டு பெண்கள். மூத்த பெண் கிறிஸ்துமஸ் தினத்தில் பிறந்ததால் கிறிஸ்டி என்று பெயர் வைத்துள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு குமாரசாமியும், அவரின் அப்பாவும், வறுத்த பொட்டுக் கடலையை வாடகை சைக்கிளில் எடுத்துச் சென்று கடைகளுக்கு விற்பனை செய்துவந்தார்கள். 1991 அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் குமாரசாமிக்கு அன்றைய சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரியின் நட்பு கிடைத்தது. அதையடுத்து கிறிஸ்டி நிறுவனத்தைத் தொடங்கி, தமிழக அரசுக்கு சத்துமாவு சப்ளை செய்யத் தொடங்கினார். அதன்பிறகுப் படிப்படியாக முன்னேறினார். தி.மு.க., அ.தி.மு.க என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவர்களின் பிசினஸ் கொடிகட்டிப் பறக்கும். போட்டி நிறுவனங்களே உருவாகாத அளவுக்கு இவர்களே பல பெயர்களில் நிறுவனங்களைத் தொடங்கி அரசு ஒப்பந்தங்களைப் பெற்றார்கள். போலியான பெயர்களில் நிறுவனங்களைத் தொடங்கி, நிழலான பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதால்தான், இப்போது ரெய்டில் சிக்கியுள்ளார்கள்’’ என்கிறார்கள் நாமக்கல் பகுதியைச் சேர்ந்தவர்கள். 

9 ஐ.ஏ.எஸ்-கள்... 2 அமைச்சர்கள்! - ரெய்டில் சிக்கிய திமிங்கிலங்கள்

அத்தனை டெண்டருக்கும் ஆசைப்படு!

அங்கன்வாடி மையங்களில் பயிலும் லட்சக்கணக்கான குழந்தைகள், மூன்று லட்சம் வளர்இளம் பெண்கள், ஆறு லட்சம் கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்துமாவு தருகிறது தமிழக அரசு. இதற்கான ஒப்பந்தம் குமாரசாமியைத் தவிர வேறு யாருக்கும் கிடைக்காது. சத்துணவுத் திட்டத்திற்கு தமிழகம் முழுக்க முட்டை விநியோகம் செய்வது இவரின் நிறுவனம்தான். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்குத் துவரம்பருப்பு உள்ளிட்டவற்றை விநியோகம் செய்யும் டெண்டரையும், விதிகளை மீறி இவர்தான் பெற்றார். மார்க்கெட் விலையைப்  பொருட்படுத்தாத விலை நிர்ணயம், தரம் குறைவான பொருள்கள் சப்ளை என எதையுமே அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. அமைச்சர்களின் பரிபூரண ஆசியும் இதற்கு இருந்தது. இப்படிப் பல்வேறு டெண்டர்களைப் பெற்றுப் பலவித தொழில்களைச் செய்வதற்காக நேச்சுரல் ஃபுட் புராடக்ட்ஸ், சொர்ணபூமி எண்டர்பிரைசஸ், அக்னி பில்டர்ஸ், ராசி நியூட்ரி ஃபுட்ஸ் என 75-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை குமாரசாமி நடத்திவருகிறார். 

ஏன் இப்போது ரெய்டு?

சர்ச்சைக்குரிய முன்னாள் மத்திய அமைச்சர் குடும்பத்தினருக்குச் சொந்தமாகச் சுமார் 89 ஏக்கர் நிலம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது. இந்த நிலத்தை கிறிஸ்டியின் துணை நிறுவனம் ஒன்றின் பெயரில் குமாரசாமி வாங்கியிருக்கிறார். 46 கோடி ரூபாய்க்கு முடிக்கப்பட்ட இந்த நில விற்பனை தொடர்பான ஆவணம், அந்த அமைச்சர் வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு ரெய்டு நடந்தபோது வருமானவரித் துறையிடம் சிக்கியது. ‘சிதம்பர ரகசியமாக’ அதை வைத்துக்கொண்டு, குமாரசாமியைக் கண்காணிக்க ஆரம்பித்தது வருமானவரித் துறை. அவரின் அத்தனை நிறுவனங்களையும் பட்டியல் எடுத்தது.

‘‘இதற்கிடையே உத்தரப் பிரதேசத்தில் முட்டை டெண்டரில் கலந்துகொண்ட கிறிஸ்டியின் துணை நிறுவனம் ஒன்று, அந்த மாநிலத்தைச் சேர்ந்த பி.ஜே.பி சார்புடைய தொழிலதிபரிடம் நேரடியாக மோதியது. இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் இவர்கள் பிசினஸ் செய்து, ஆட்சியாளர்களை நன்கு கவனித்து வருகிறார்கள். குறிப்பாக, பி.ஜே.பி அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குமாரசாமி நிறுவனங்களுக்கு அதிகமாகவே ஆதரவு கிடைக்கிறது. எனவே, அந்த ஆட்சியாளர்களுக்கு செக் வைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தச் சோதனைகள் நடத்தப் படுகின்றன’’ என்கிறார்கள் குமாரசாமிக்கு நெருக்கமானவர்கள்.

கைப்பற்றப்பட்டவை என்னென்ன?

கணக்கில் வராத ரூ.17 கோடி ரொக்கம், 10 கிலோ தங்கம், பல லட்ச ரூபாய் மதிப்பிலான அமெரிக்கன் டாலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பல கோடி மதிப்புடைய சொத்து ஆவணங்கள், சட்ட விரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதற்கான ஆவணங்கள், பென் டிரைவ்கள் சிக்கியுள்ளன. சத்துமாவு மற்றும் முட்டை ஒப்பந்தங்கள் பெறுவதற்கு பலரின் வங்கிக் கணக்குகளில் பரிமாற்றம் செய்யப் பட்டதற்கான ஆவணங்கள் எடுக்கப்பட்டுள்ளன. பெண் அமைச்சர் ஒருவரின் மகள் திருமணம் கடந்த ஆண்டு நடந்தது. அதற்கு குமாரசாமியும் வந்ததும், திருமணப் பரிசாக ஆடி கார் ஒன்றை வழங்கியதும் தெரியவந்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சேலம் மத்தியக் கூட்டுறவு வங்கியின் திருச்செங்கோடு கிளையில் ஒரு கணக்கில் ரூ.245 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. அந்தக் கணக்குக்கும் குமாரசாமிக்கும் உள்ள தொடர்பு பற்றி இப்போது வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரித்துவருகிறார்கள். கிறிஸ்டி ஃபுட்ஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளிலிருந்து பல அதிகாரிகள் மற்றும் அவர்களின் உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண் இயக்குநர் சுதாதேவி வீட்டிலிருந்து சிக்கியுள்ளன.

கிணற்றில் பென் டிரைவ்கள்!

ரெய்டு நடந்தபோது கிறிஸ்டி நிறுவனத்தில் இருந்த ஊழியர்களிடம் பேசினோம். ‘‘திருச்செங்கோட்டைச் சுற்றியுள்ள பல கிராமங்களிலிருந்து இங்கு மொத்தம் 6,000 பேருக்கு மேல் பணியாற்றுகிறோம். இந்தியாவின் பல மாநிலங்களில் எங்கள் நிறுவனம் டெண்டர் எடுக்கிறது. அந்தந்த மாநிலத்தில் குடோன் இருக்கும். இங்கிருந்து 50 கிலோ பையில் சத்துமாவு அனுப்புவோம். குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் தரும் பொருள் என்பதால், அதிகக் கவனத்துடன் தயாரிக்கிறோம்.

எல்லோருக்கும் மாதாமாதம் 5-ம் தேதி சம்பளம் தருவாங்க. 5-ம் தேதி காலையிலேயே ரெய்டு ஆரம்பித்ததால், எங்களுக்குச் சம்பளம் கிடைக்கவில்லை. இதனால் வீட்டு வாடகை தர முடியாமல், குழந்தைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியாமல் தவிக்கிறோம். ரெய்டுக்கு வந்த அதிகாரிகள், அக்கவுன்ட் செக்‌ஷனில் இருக்கும் ஊழியர்கள் பலரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்’’ என்றார்கள் அவர்கள்.

இவர்களில் கேஷியர் கார்த்திகேயன், விசாரணையின்போது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். குமாரசாமியின் பர்சனல் பரிவர்த்தனைகள் தொடர்பான அத்தனை விவரங்களும் அவரிடம்தான் இருந்தன. எல்லாத் தகவல்களையும் 100-க்கும் மேற்பட்ட பென் டிரைவ்களில் ரகசியமாகப் பிரதி எடுத்துக் கிணற்றில் போட்டிருந்தார். அவற்றை வருமானவரித் துறை அதிகாரிகள் கைப்பற்றிவிட்டனர். ‘‘அந்தப் பென் டிரைவ்களில்தான், அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சிக்கவைக்கும் அத்தனை ஆதாரங்களும் உள்ளன’’ என்கிறார்கள் வருமானவரித் துறை அதிகாரிகள்.

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: க.தனசேகரன்

விதிகளையே வளைத்த கிறிஸ்டி!

ரே
ஷன் கடைகள், சத்துணவுத் திட்டம், அரசு விடுதிகள் ஆகியவற்றுக்கு தரமற்ற பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்கள் விநியோகம் செய்யப்படுவது ஐ.ஏ.எஸ் அதிகாரி சுதாதேவியின் வீட்டில் நடைபெற்ற ரெய்டால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரேஷன் கடைகள் மற்றும் அரசு விடுதிகளுக்கு துவரம் பருப்பு, உளுந்து, பாமாயில் உள்ளிட்ட பொருள்களும், அரசுப் பள்ளிக்கூடங்களுக்குச் சத்துணவுத் திட்டத்துக்காக துவரம் பருப்பு, உளுந்து, பாமாயில் ஆகியவற்றுடன் பச்சைப்பயறு, கொண்டைக்கடலை ஆகியவையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக விநியோகம் செய்யப்படுகின்றன.

இதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து நம்மிடம் சொன்னார்கள், இங்கு பணியாற்றும் சில நேர்மையான அலுவலர்கள். ‘‘மாதாமாதம் சுமார் 50 டன் உணவுப்பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. முன்பு இதற்கு மாதாமாதம் டெண்டர் விட்டார்கள். கிறிஸ்டி நிறுவனம் வந்ததும், டெண்டர் நடைமுறை மாறியது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறைதான் டெண்டர் என்றார்கள். டெண்டருக்கான டெபாசிட் தொகையானது கோடிக்கணக்கில் எகிறியதால், ஏற்கெனவே இருந்த நிறுவனங்கள் இதில் போட்டியிட முடியாத நிலை உருவானது. புதிதாக உள்ளே நுழைந்த கிறிஸ்டி இதில் கிங் ஆக உருவெடுத்தது. இதன் துணை நிறுவனங்களின் பெயர்களிலும் டெண்டரில் பங்கேற்பார்கள். இவர்களின் ஏதோ ஒரு நிறுவனத்துக்கே டெண்டர் கிடைக்கும்.

சென்னை அண்ணாநகர், தண்டையார்பேட்டை, செங்குன்றம் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் உள்ள எங்கள் குடோன்களுக்கு பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களைக் கொண்டுவந்து, தரத்தை ஆய்வுசெய்த பிறகுதான் இறக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், இந்த விதியை அவர்கள் மதிக்கவே இல்லை. பருப்பு உள்ளிட்ட பொருள்களை மூன்று மாதங்களுக்கு தனித்தனியாகப் பிரித்துக்கொடுக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், வெளிச்சந்தையில் விலை குறைவாக இருந்தால், ஒரேயடியாக மூன்று மாதங்களுக்கும் சேர்த்துக் கொடுத்துவிடுவார்கள். இதனால், பருப்பில் பூச்சிகள் வந்து மேலும் தரம் குறையும். சுதாதேவிக்கு முன்பு நிர்வாக இயக்குநராக இருந்த கோபால் மிகவும் கறாரானவர். தரம் குறைவாக இருப்பதாகச் சொல்லி, மூன்று, நான்கு மாதங்கள் பருப்பு கொள்முதலையே நிறுத்திவைத்திருந்தார். அதனாலேயே அவர் இங்கிருந்து ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார். தங்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்பதாலேயே, இமாசலப் பிரதேசத்திலிருந்து வந்த சுதாதேவியை தமிழக அரசு இங்கு நியமித்தது’’ என்கிறார்கள் அவர்கள். 

- கு.ராமகிருஷ்ணன்

யார் இந்த சுதாதேவி?

கு
மாரசாமியிடம் அடிக்கடி நீண்ட நேரம் பேசிய உரையாடல்களும், கிறிஸ்டி நிறுவனத்தில் கிடைத்த ஆவணங்களும் சுதாதேவியைச் சிக்கவைத்தன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், இந்திய உணவுக் கழகத்திடம் ரேஷன் பொருள்களை வாங்காமல் கிறிஸ்டி மற்றும் அதன் துணை நிறுவனங்களிடம் வாங்குவதற்கு ஒப்பந்தம் விட மூளையாகச் செயல்பட்டவர் சுதாதேவி. இவருக்கும் நாமக்கல் மாவட்டமே பூர்வீகம். இமாசலப் பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்துவிட்டு, கடந்த ஆண்டு தமிழகப்பணிக்கு வந்தவர்.

9 ஐ.ஏ.எஸ்-கள்... 2 அமைச்சர்கள்! - ரெய்டில் சிக்கிய திமிங்கிலங்கள்

இவரின் முதல் கணவர் ரமேஷ், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு கை, கால் செயலிழந்த நிலையில் எளையம்பாளையத்தில் வாடகை வீட்டில் இருக்கிறார். ‘‘நாங்க 20 வருஷங்களுக்கும் மேல் திருச்செங்கோடு கொல்லப்பட்டியில் குடியிருந்தோம். எங்க வீட்டுப் பக்கத்தில் சுதாதேவி வீடும் இருந்ததால் இரு வீட்டாரும் சேர்ந்து எனக்கும் சுதாதேவிக்கும் 1994-ல் திருமணம் நடத்தி வைத்தார்கள். எங்களுக்கு சகானா என்ற மகள் பிறந்தாள். குழந்தை பிறந்த பிறகு திடீரென எனக்குப் பக்கவாதம் வந்து வலது கை, கால் செயலிழந்து விட்டது. ‘நமக்குத்தான் இப்படி ஆகிடுச்சு. இவங்க பெரிய ஆளா வரணும்’ என்று சுதாதேவியை எங்க வீட்டையெல்லாம் விற்று பல லட்சம் செலவு செய்து படிக்க வைத்தோம். மேலே வந்ததும், அவங்க பணபலத்தையும் அதிகார பலத்தையும் வைத்து டைவர்ஸ் வாங்கிட்டாங்க. அதெல்லாம் முடிந்துபோன கதை.

என் நிலையைப் பார்த்துக் கவலைப்பட்டே எங்க அம்மா இறந்துட்டாங்க. நானும் அப்பாவும் மட்டும் இருக்கிறோம். அப்பாவுக்கு 72 வயதாகிறது. தனியார் பள்ளியில் டிரைவராக இருக்கிறார். அவருக்குக் கிடைக்கும் சொற்பச் சம்பளத்தை வைத்து வாழ்ந்துக்கிட்டு இருக்கிறோம். எங்களுக்குப் பணமோ, காசோ தேவையில்லை. என் மகளை 11 வயதில் பார்த்தது. ரெண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததாகக் கேள்விப்பட்டேன். ஒரே ஒரு முறை என் மகளைப் பார்த்தால் போதும். சுதாதேவி அதிகார பலத்தாலும், பண பலத்தாலும் என் மகளைப் பார்க்க விடாமல் தடுக்கிறார்’’ என்று கண்ணீர் வடித்தார் ரமேஷ்.

அமைச்சரையே வீழ்த்திய குமாரசாமி!

குமாரசாமி வளர்ந்துவந்த நேரம் அது. அரசுக்கு சத்துமாவை சப்ளை செய்து கோடிக்கணக்கில் குமாரசாமி சம்பாதித்ததைப் பார்த்து, ஈரோட்டைச் சேர்ந்த தி.மு.க அமைச்சர் தன் நண்பர்கள் சிலரை வைத்து இதேபோல ஒரு சத்துமாவு நிறுவனத்தைத் தொடங்கினார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த ஊத்துக்குளி பகுதியில் இதற்கெனப் பிரமாண்டமான நிறுவனம் அமைக்கப்பட்டது. அரசுக்கு சத்துமாவு வழங்கும் டெண்டருக்கு விண்ணப்பிக்கச் சொல்லித் தன் நண்பர்களுக்கு ஐடியா கொடுத்த அமைச்சர், ‘இந்த டெண்டர் நமக்குத்தான்’ என்று நம்பிக்கை கொடுத்தார். ஆனால், அந்த டெண்டர் குமாரசாமிக்குத்தான் கிடைத்தது. வெறுத்துப்போன அமைச்சர், தன் நண்பர்களை வைத்து ஆரம்பித்த கம்பெனியை வேறுவழியில்லாமல் குமாரசாமியிடமே விற்றார்.

சித்தோடு பகுதியில் மசாலாப் பொருள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்திவரும் குமாரசாமி, அந்தப் பொருள்களை அரசின் ரேஷன் கடைகளுக்கு வழங்கும் ஆர்டரைப் பிடிப்பதற்கு சமீபகாலமாக முயற்சி செய்து வந்திருக்கிறார்.

- நவீன் இளங்கோவன்