
குறிஞ்சி - மனநல மருத்துவர்ஹெல்த்
காதல்... மனித உணர்வுகளில் ஒன்றாகத் தன்னை நிலைநிறுத்தி, எவ்வளவு முயன்றாலும் அடக்க முடியாமல், தன்னை வெளிக்காட்டியே தீரும் ஓர் அனிச்சைச் செயல். காதலில் விழுந்தவுடன் நம் செயல்களில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. “டிவில பாட்டே கேட்காதவன், லவ் சாங்க்ஸ் போட்டா சேனல் மாத்த விட மாட்டேங்கறான். பல்லு வெளக்குறதுல இருந்து பக்கோடா சாப்பிடற வரைக்கும் எல்லா டைமும் போனைக் கையிலேயே வெச்சிருக்கான். ஒண்ணு மெசேஜ் அனுப்பறான்... இல்லனா ஹெட்செட் போட்டுட்டு போன் பேசறான்” எனக் காதலில் விழுந்தவர்களின் நண்பர்கள் பெரிய லிஸ்டே போடுவார்கள். ஆனால், காதல் குறித்துப் பேச, அதன் காரணி மற்றும் விளைவுகள் குறித்து அறிவியல் ரீதியாக விவாதிக்க நாம் என்றாவது முற்பட்டிருக்கிறோமா? காதல் உணர்வு எப்படித் தோன்றுகிறது? அது பிறக்கும்போது நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன? காதலின் உளவியலும் உடலியலும் அறிவோமா?

காதல் எங்கு உயிர்பெறுகிறது?
மூளையின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அன்பு அருவியாகப் பெருக்கெடுக்கிறது என்கிறது மருத்துவ அறிவியல். ஹிப்போகாம்பஸ் (Hippocampus), மீடியல் இன்சுலா (Medial Insula) மற்றும் ஆன்டீரியர் சிங்குலேட் (Anterior Cingulate) என்ற மூன்று பகுதிகள்தாம் நம் உணர்வுகளைச் சீர்படுத்திக் காதல் தோன்றக் காரணமாக இருக்கின்றன. பிட்யூட்டரி சுரப்பி ஹைப்போதலாமஸ் (Hypothalamus) டோபமைன் (Dopamine), ஆக்ஸிடோசின் (Oxytocin) மற்றும் வாஸோப்ரெஸின் (Vasopressin) ஆகிய ஹார்மோன்களைச் சுரக்கச் செய்கிறது. இவைதான் நம் மனதில் காதல் உருவாகக் காரணம்.

காதலால் நிகழும் மாற்றங்கள்
ஹைப்போதலாமஸ் டோபமைனைச் சுரக்கும்போது உற்சாகம் பிறக்கிறது. அளவுக்கதிகமான ஆற்றல் பெருக்கெடுக்கிறது. டோபமைன் அதிகரிக்கும்போது செரட்டோனின் (Serotonin) என்னும் ஹார்மோனின் அளவு குறைகிறது. இதுதான் பசியின்மை போன்ற உணர்வுகளைத் தருகிறது. மோக உணர்வு தலை தூக்குகிறது. நரம்பு வளர்ச்சிக் காரணியும் (Nerve Growth Factor - NGF) அதிகமாகிறது. புதிதாகக் காதலில் விழுந்தவர்களுக்கு இந்த NGF அளவுக்கதிகமாக உருவாகிறது. அப்போது காதல் உணர்வுகள் மேலோங்கி இருக்கும். ஹைப்போதலாமஸ் உருவாக்கும் ஆக்ஸிடோசின் மற்றும் வாஸோப்ரெஸின் ஹார்மோன்களால் இணைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுகள் அதிகரிக்கின்றன. உருவான இந்த ஹார்மோன்கள், பிட்யூட்டரி சுரப்பிகளில் சேமிக்கப் படுகின்றன. பின்னர் காதலில் திளைக்கும்போது ரத்தத்தில் கலந்து நீண்டகால உறவுக்கு வழிவகுக்கின்றன.இந்த ஹார்மோன்களால் நம் குணாதிசயங்களில் பல மாறுதல்கள் நிகழ்கின்றன. துணையிடம் மரியாதையையும் அதீத அன்பையும் காட்டுவதற்கும் காரணமாகின்றன.

காதலின் இயல்பு என்ன? அதை உருவாக்கும் உளவியல் என்ன? விவரிக்கிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி.
“மனிதன் என்றுமே ஒரு சமூகமாக வாழ விரும்புகிற உயிரினம். அதனால்தான் நம்மை ‘சோஷியல் அனிமல்’ என்று கூறிக் கொள்கிறோம். நம்மால் ஒரு துணையின்றி வாழவே முடியாது. அதனால்தான் சக மனிதர்களின் மேல் காதல் பிறக்கிறது. சில நேரங்களில் அது ஒருபால் ஈர்ப்பாகவும் அமைந்து விடுகிறது. செக்ஸ் என்பதையும் தாண்டி வாழ்வில் உற்றதுணைக்கான தேடலாகத்தான் காதல் இருக்கிறது. ஒரு கட்டத்திற்குப் பிறகு உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ள, சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ள, உறவு ஒன்று அவசியமாகிறது. ஒருவரின் மேல் அன்பு பிறக்க மிக முக்கியக் காரணம் ஆக்ஸிடோசின் (Oxytocin) என்ற ஹார்மோன்தான். ஒரு தாய், தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது அவளுக்கு அதிக அளவில் ஆக்ஸிடோசின் சுரக்கும். இதுதான் குழந்தையின் மேல் ஒரு பிணைப்பை உண்டாக்கும். இதே ஆக்ஸிடோசின்தான் காதல் மற்றும் இதர உறவுகள் உருவாகவும் காரணமாக அமைகிறது.
பார்த்ததும் பற்றிக்கொள்ளுமா காதல்?
ஒவ்வொருவருக்கும் தன் துணை எப்படி இருக்க வேண்டும் என்று பல கற்பனைகள் இருக்கும். அந்த எதிர்பார்ப்புகள் அத்தனையும் பூர்த்தியாகாவிட்டாலும், ஒரு சில எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையும்படி ஒருவர் நம் கண்முன் தோன்றினாலே அவரின்பால் ஈர்ப்பு கொள்கிறோம். அவரை மீண்டும் மீண்டும் பார்க்கத் தொடங்கும்போது அது காதலாக உருவெடுக்கிறது.
காதலும் காமமும் ஒன்றா?
காமத்தையும் தன்னுள் அடக்கியதுதான் காதல். ஆனால், காமம் மட்டுமே காதல் அல்ல. உடலால் இன்பம் காண முடியாத தம்பதிகளிடையேயும் காதல் இருக்கிறது.
- ர.சீனிவாசன்