மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 92

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

காரிக்கொம்போசை மேலெழும்போது, நடுப்பகல் கடந்திருந்தது; போர்க்களத்தின் சரிபாதி நேரம் முடிவடைந்திருந்தது. முன்களத்திலிருந்து அடுத்தடுத்து வந்த செய்திகள் கருங்கைவாணனுக்குக் குழப்பத்தையே உருவாக்கின. உறுமன்கொடி குதிரைப்படையில் நிகழ்ந்துள்ள பாதிப்பைப் பற்றி அனுப்பிய செய்தி, அதிர்ச்சியை உருவாக்கியது. அது உண்மை என நம்புவதே கடினமாக இருந்தது. ஆனால், போர்க்களத்தில் தனக்கு வந்துசேரும் செய்தி உண்மையா என ஆராய்வதில் தளபதி நேரத்தைச் செலவிடக் கூடாது. ஏனென்றால், அது அவன் படை அவனுக்கு அனுப்பும் செய்தி. அந்தச் செய்தியைக் கொண்டு அடுத்து செய்ய வேண்டியதைத்தான் சிந்திக்க வேண்டும்.

குதிரைப்படை சந்தித்த அதே சிக்கலைத்தான் தேர்ப்படையும் சந்தித்தது. ஈக்கிமணல்கள், பாய்ந்து செல்லும் குதிரையின் வேகத்தைக் கட்டுப்படுத்தின. நகரிவீரன், வெகுவிரைவில் தனது ஆவேசத்தை இழந்து குழப்பத்துக்குள் சிக்கினான். பறம்பின் தரப்பில் கூழையனின் தாக்குதல் வேகம், நேரம் ஆக ஆக அதிகரிக்கத் தொடங்கியது. வேந்தர்படையின் தேர்கள் விரைந்து செல்ல முடியாத நிலையில் பறம்பின் தேர்கள் பாய்ந்து முன்னகர்ந்துகொண்டிருந்தன.

வீரயுக நாயகன் வேள்பாரி - 92

வாள்படை மோதும் களத்தில்தான் வேந்தர்படை வெகுதொலைவு முன்னேறியிருந்தது. வாள்படைத் தளபதி சாகலைவன், மூர்க்கத்தோடு தாக்கி முன்னேறிக்கொண்டிருந்தான். ஆனாலும், பறம்பின் தரப்பில் பேரிழப்பு எதுவும் நிகழாமலிருந்தது. நீண்டநேரத்துக்குப் பிறகுதான் அவன், பறம்புவீரர்கள் அணிந்திருக்கும் மெய்க்கவசத்தை உற்றுக்கவனித்தான்.

வேந்தர்களின் தரப்பில் தளபதிகள், சேனைவரையர்கள், சேனைமுதலிகள், மெய்க்காப்பாளர்கள் ஆகியோர் மட்டுமே உடலைக் காக்கும் மெய்க்கவசம் அணிந்திருந்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் கைகளில் கேடயத்துடனும் வாளுடனும்தான் களத்தில் போரிட்டுக்கொண்டிருந்தனர். பறம்புவீரர்கள் அனைவரும் மெய்க்கவசம் அணிந்திருந்தனர். ஆனால், அது வேந்தர்படையினர் அணிந்திருந்ததைப் போன்று இரும்பால் ஆன மிகுந்த எடைகொண்ட கவசமல்ல; மாறாக, சிவப்புச் சித்திரமூலி, செங்கொடிவேலி ஆகியவற்றை அரைத்து முறியன் ஆசான் செய்தது. முறியன் ஆசான் இரலிமேட்டுக்கு வந்ததும் முதலில் இட்ட கட்டளையே இந்த வகைச் செடிகளைக் கொண்டுவந்து சேர்க்கச் சொல்லித்தான். பறம்பெங்கும் இருக்கும் ஆண்களும் பெண்களும் அடுத்த ஓரிரு நாளில் போதுமான அளவுக்குக் கொண்டுவந்து சேர்த்தனர். அவற்றைத் தகுந்த சேர்மானத்தோடு அரைத்து, பனைநாரோடு பிசைந்து, வெயில் சூடின்றி நிழலிலே உலர்த்தினர். ஆறிய கஞ்சியில் திரண்ட மேலாடையைப்போல அது உலர்ந்தது. தோலின் குணம்கொண்ட, ஆனால் பாறையின் பக்கு போன்றது அந்த ஆடை. ஒருவகையில் உடும்பின் மேற்தோல் போன்றது. அதைத் துளைத்துக் கொண்டு எந்தவோர் ஆயுதமும் எளிதில் உட்புக முடியாது.

பறம்புவீரர்கள் அந்த மெய்க்கவசத்தையே அணிந்திருந்தனர். மார்பின் மேல் போர்த்தி, பின்புறக் கயிறுகளால் இழுத்துக் கட்டியிருந்தனர். கனமில்லாத ஆடையாகவும் அதே நேரத்தில் அம்பும் வாளும் எளிதில் உட்புக முடியாததாகவும் இருந்தது அந்த மெய்க்கவசம்.

வேந்தர்களின் விற்படையின் தாக்குதிறனைப் பறம்பின் தாக்குதிறனோடு ஒப்பிட்டால், சரிபாதிக்கும் குறைவுதான். அதுவும் உலோக வில் ஏந்தியவர்கள் படையின் முன்னணியினர் மட்டுமே. அவர்களின் அம்புதான் வீரியத்துடன் சீறின. மற்ற வீரர்களின் அம்புகளோ பறம்புவீரர்கள் நிற்கும் தொலைவை வந்தடையும்போதே உயிரற்றதாகிவிடுகின்றன.

விற்படை, தேர்ப்படை, யானைப்படை ஆகிய மூன்று படைகளிலும் முதன்மையான ஆயுதம் வில்தான். ஆனால், வேந்தர்படை வீரர்கள் எதிரிகளைத் தாக்குவதற்காகத் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவேண்டிய இடத்துக்கு அருகில்கூட வர முடியாதபடி இருந்தது பறம்புப்படையின் தாக்குதல். அதுமட்டுமன்று, பறம்புவீரர்கள் அனைவரும் மெய்க்கவசம் அணிந்தவர்களாக இருந்தனர். எனவே, பறம்பின் தரப்பில் ஒரு வீரனைச் சாய்ப்பதே பெரும்பாடாக இருந்தது. பறம்பின் வாள்படையில் உள்ள அனைவரும் மெய்க்கவசம் அணிந்திருந்ததால், முன்னேறிச் சென்று தாக்கிய சாகலைவனால் எதிரிகளை வீழ்த்தி முன்னேற முடியவில்லை. நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் அவன் உணர்ந்தான், எதிரிகள் விலகிப் பின்வாங்கும் வழியில் மட்டுமே தனது படை முன்னேறுகிறது என்றும், அவர்களைச் சிதைத்தோ அழித்தோ முன்னேறவில்லை என்றும். ஆனாலும், ஒரு கிழவன் தனக்கு எதிரான படைக்குத் தலைமையேற்கிறான் என்பதை அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அம்பும் ஈட்டியும் போன்றதன்று வாள். அதன் ஒவ்வொரு வீச்சிலும் வீரனின் முழு ஆற்றலும் வெளிப்பட்டாக வேண்டும். கைப்பிடியின் இறுகிய விரல்களுக்குள் காற்று புகுந்தால்கூட வாளின் வீச்சு வலிமையிழக்கும்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 92

போர் என்பது, உயிரைவைத்து விளையாடும் விளையாட்டு. அதை ஒவ்வொரு கணமும் உணரச்செய்வது வாள்சண்டை. ஈட்டியும் அம்பும்போல, எங்கோ இருப்பவனை நோக்கிய தாக்குதல் அன்று இது. தான் பிடித்திருக்கும் கேடயத்தில் மோதும் எதிரியின் வாள் வலிமையை, அந்த அழுத்தம்கொண்டு மதிப்பிட முடியாதவனால் ஒருபோதும் வெற்றியை ஈட்ட முடியாது.

பறம்பின் தரப்பில் வாள்படைக்குத் தலைமையேற்ற தேக்கன், எதிரிகளை முடிந்த அளவுக்குத் தனது எல்லைக்குள் உள்வாங்கும் உத்தியையே கடைப்பிடித்தான். எனவே, வேந்தர்படை மிக அதிக தொலைவுக்குப் பறம்பின் தரப்புக்குள் இழுக்கப்பட்டிருந்தது. சாகலைவன், தேக்கனுடனான நேரடித் தாக்குதலை எதிர்பார்த்து முன்னகர்ந்து கொண்டிருந்தான்; கிழவனை வெட்டிச்சரிப்பதன் மூலம் எதிரியின் தளபதியை முதலில் வீழ்த்திய பெருமையை அடைவதற்காக விரைந்து கொண்டிருந்தான்.

வேந்தர்படை இப்போது நிலைகொண்டுள்ள வரைபடம் மிகவும் ஏற்ற இறக்கத்தோடு இருக்கிறது. வாள்படையானது எதிரிகளின் தரப்புக்குள் மிகவும் முன்னேறியிருக்கிறது. ஆனால், விற்படையும் குதிரைப்படையும் தனது தரப்புக்குள் உள்வாங்கியிருக்கின்றன. தேர்ப்படையானது இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கிறது. இதுபோன்ற நிலைதான் தலைமையேற்கும் தளபதிக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கும். படையின் இத்தகைய நிலையால் அடுத்து உருவாகப்போகும் சூழலை எளிதில் கணிக்க முடியாது.

அதனால்தான் தனக்கு வந்துசேர்ந்த செய்தியிலிருந்து பெருங்குழப்பத்தைச் சந்தித்துக்கொண்டிருந்தான் கருங்கைவாணன். பறம்புவீரர்களை, எண்ணிக்கையைக் கொண்டு மட்டுமே மதிப்பிடக் கூடாது என்பதை அவன் நன்கு அறிவான். ஆனால், சமதளப்போர் என்பதாலும், தன்னுடைய படையில் இருக்கும் வீரர்களின் எண்ணிக்கை அளவிடற்கரியதாக இருப்பதாலும் அவன் பெருநம்பிக்கை கொண்டிருந்தான். முதல் நாளே இந்தப் போர் முடிவுக்கு வரும் என நினைத்தான். ஆனால், போர்க்களத்தில் மேலெழும் செம்புழுதி, நம்பிக்கையை மறைக்கத் தொடங்கியது.

உதிரனின் தலைமையிலான விற்படை, ஆவேசம்கொண்டு வேந்தர்படையின் கட்டமைப்பைப் பிளந்து முன்னேறிக் கொண்டிருந்தது; பறம்புவீரர்கள் முதுகில் வைத்துள்ள அம்பறாத்தூணி, கம்பங்கதிர் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருந்தது. மையத்தண்டைச் சுற்றி அம்புகள் செருகப் பட்டிருந்தன. வெவ்வேறு வகையான அம்புகள், அதற்குத்தக்க உயரத்தில் இடம்பிடித்திருந்தன. நூறிலிருந்து நூற்றிருபது அம்புகளைக் கொண்டதாக ஒவ்வோர் அம்பறாத் தூணியும் இருந்தது. வேந்தர்படைவீரர்கள் பயன்படுத்தும் அம்பறாத்தூணி கூம்பு வடிவம்கொண்டிருந்தது. நீண்டிருக்கும் சுரைக்குடுவையைப் போன்று அதற்குள் முப்பது அம்புகளை மட்டுமே வைக்க முடிந்தது.

எதிரிகளைத் தாக்கி அழிக்க முடியாத நிலையில் வெகுவிரைவாகத் தங்களின் அம்புகளைத் தீர்த்த வேந்தர்படைவீரர்கள் அம்புக்கட்டு வரும் வரை பின்படைக்கு வழிவிட்டு ஒதுங்கவேண்டியிருந்தது. முன்வந்து தாக்கும் அடுத்தடுத்த படைப்பிரிவுகளும் அம்புகளைத் தீர்ப்பதில் மிக வேகமாகச் செயல் பட்டு ஒதுங்கின. உதிரனின் தலைமையிலான விற்படை, தடைகளற்ற வேகம்கொண்டிருந்தது.

தாகம் மேலிட வீரர்களிடம் களைப்பு உருவாகத் தொடங்கியது. கதிரவனின் வெப்பத்தால் தட்டியங்காட்டுக் கருமணலெங்கும் வெப்ப வளையங்கள் உருவாகிக்கொண்டிருந்தன. காலையிலிருந்து பேராவேசத்தோடு போரிட்டுக்கொண்டிருக்கும் வீரர்களின் உடலில் நீர்வற்றி தாகம் ஏற்பட, பெரும் அயர்வுக்குள்ளானார்கள்.

முறியன் ஆசான் நீர்வேலிப் படர்கொடியின் இலைகளை அதன் சிறு சிறு காய்களோடு சேர்த்துச் சுருட்டி, கைகளின் மணிக்கட்டுக்கு மேலும் கழுத்திலும் தாயத்துபோல ஒவ்வொரு வீரனுக்கும் கட்டியிருந்தார். `தாகம் மேலிட்டு மயக்கம் வருவதுபோல் இருந்தால், அந்தத் தாயத்தை அப்படியே கடித்துத் தின்றுவிடுங்கள்’ என்று சொல்லியிருந்தார். அந்த இலையும் காயும் உடனடியாக நீர்ச்சத்தைச் சுரக்கக்கூடியவை. பறம்புவீரர்கள் மிகச்சிலரே தாயத்தைக் கடித்தனர். அவர்கள் அதைக் கடிக்கும்போது எதிரில் வேந்தர்படைவீரர்கள் ஆயுதங்களைக் கைக்கொள்ள முடியாத கிறக்கத்தில் இருப்பது தெரிந்தது.

கருங்கைவாணனுக்குக் களத்தின் எல்லா திசைகளிலிருந்தும் செய்திகள் வந்து கொண்டிருந்தன. ஆனால், ஒரு செய்திகூட அவன் நினைத்ததைப்போல இல்லை. வாள்படை மட்டும்தான் வெகுவாக முன்னோக்கிப் போய்க்கொண்டிருந்தது. அதைச் சொல்ல வருபவன் மட்டும்தான் உற்சாகத்தோடு சொல்லிச் செல்கிறான். ஆனால், மற்ற படைகள் இருக்கும் நிலைக்கும் வாள்படை இருக்கும் நிலைக்கும் பெருத்த வேறுபாடு இருந்தது. வேட்டுவன்பாறைத் தாக்குதலில் திதியன் முன்னேறிப்போனபோது வந்த எண்ணம் இப்போது உருவாகத் தொடங்கியது. `சாகலைவன் ஏதோ பொறியில் மாட்டப்போகிறான்!’ எனத் தோன்றியது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 92

இந்த எண்ணம் தோன்றிய கணத்தில்தான் காரமலையின் மேலிருந்து அடுத்ததொரு பேரோசை கேட்டது. இந்த ஓசையின் மூலம் எதிரிகள் என்ன செய்தியைச் சொல்கின்றனர் என்பதைக் கணிக்க முடியவில்லை. ஆனால், இதன் அடிப்படையில்தான் அவர்கள் உத்தியை வகுக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது.

இப்போது வெளிப்பட்ட காரிக்கொம்பின் ஓசை இறுதி ஐந்து நாழிகையின் தொடக்கத்தை அறிவிப்பதாகும். பறம்புவீரர்கள், தாங்கள் வகுத்த போர் உத்தியின் இறுதிப்பகுதியை நிறைவேற்ற ஆயத்தமாகினர். தாகமும் தாங்க முடியாத மயக்கமும் வேந்தர்படை வீரர்களுக்கு உருவாகும் இந்த நேரத்தில், பறம்புவீரர்கள் தங்களின் தாக்குதல் வேகத்தை இரட்டிப்பாக்கினர். விற்படையினர் இதுவரையிலும் பயன்படுத்தாத கொடுமர அம்புகளைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

கருங்கைவாணன் நிலைமையைக் கணித்து `என்ன செய்யலாம்?’ எனச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது பறம்பின் அனைத்துப் படைகளும் பல கூறுகளாகப் பிரிந்து ஆவேசம்கொண்டு தாக்கி முன்னேறினர். அவர்கள், நேரெதிர் திசையில் மட்டும் முன்னேறவில்லை. மாறாக, பல திசைகளில் பிரிந்து கலைந்தனர். அதேநேரத்தில், அவர்கள் எந்தத் திசையில் போக நினைக்கிறார்களோ அந்தத் திசையில் போகவிடாமல் மறித்து நிறுத்த முடியாத நிலையில் வேந்தர்படை இருந்தது. குறுக்கும் மறுக்குமாகப் பல இடங்களில் அவர்கள் நுழைந்துகொண்டிருந்தனர்.

வேந்தர்படை வீரர்களிடம் குழப்பம் உருவாகத் தொடங்கியது. என்ன நடக்கிறது என்பது புரிபடாததாக இருந்தது. முதல்நிலைப் படையில் இருந்த வீரர்களுக்கு உடனடியாக அம்புக்கட்டு தேவைப்பட்டது. அவர்களுக்காக ஆயுதவாரியின் உத்தரவின்பேரில் யானை ஒன்று அம்புக்கட்டை ஏந்தி முதல்நிலைப் படைக்குள் நுழைந்தது. எங்கும் கூச்சலும் மோதலின் பேரோசையுமாக இருந்தது. கருங்கைவாணன், சாகலைவனுக்கு உத்தரவு அனுப்பினான், `தொடர்ந்து முன்னோக்கிச் செல்லாதே!’ என்று. அவன் சொல்லிய செய்தியைக் கொண்டுசென்றான் வீரன் ஒருவன்.

`நீண்டநேரமாகக் குதிரைப்படையின் தளபதி உறுமன்கொடியிடமிருந்து எந்தச் செய்தியும் இல்லையே!’ எனச் சிந்தித்தான் கருங்கைவாணன். அந்த எண்ணம் தோன்றியபோதுதான் ஆயுதக்கட்டைக் கொண்டுவந்த யானையின் பிளிறல், போர்க்களம் முழுவதும் எதிரொலித்தது.

சட்டெனப் பின்புறம் திரும்பிப் பார்த்தான் கருங்கைவாணன். முடியன் எறிந்த மூவிலைவேல் யானையின் செவிப்புறத்தின் இறங்குகுழியில் குத்தி இறங்கியது. போர்க்களம் முழுவதும் எதிரொலித்தது யானையின் பிளிறல். தேரில் நின்றபடியே அடுத்த மூவிலைவேலைக் கையில் எடுத்தான் முடியன். அதை எறிவதற்குள் முடியனைத் தாக்கவேண்டும் என நினைத்த கருங்கைவாணன், தன்னிடம் இருந்த வில்லில் நாண் ஏற்றியபோது மத்தகத்தின் இடது முனையில் குத்தி உள்ளிறங்கியது அடுத்த மூவிலைவேல்.

கல்லூசிகளும் எஃகூசிகளும் பன்றியின் முன்கொம்பால் செய்யப்பட்ட நீள்ஊசியும் கொண்ட பறம்பின் தனித்துவமான ஆயுதம் `மூவிலைவேல்.’ மூன்று திசைகளில் விரிந்திருக்க, குத்துப்பட்ட வேகத்தில் யானை வெறிகொண்டு கழுத்தை மறுத்து அசைக்க, வேலின் கூர்முனை துளைத்து உட்சென்றுகொண்டிருந்தது. ஏதோ நடக்கப்போகிறது எனக் கருங்கைவாணன் நினைத்தபோது அம்புக்கட்டுகளைப் பிரித்துக் கொடுப்பதற்காக யானையின் மேலேயும் பக்கவாட்டிலும் நின்றிருந்த பன்னிரு வீரர்கள் தூக்கி வீசப்பட்டனர். யானையின் பிளிறலை விஞ்சியது வீசப்பட்ட வீரர்களின் ஓலம்.

கீழே விழுந்தெழுந்த பாகன் ஒருவன், குத்தப்பட்டிருந்த ஈட்டியைப் பிடுங்க முயன்றான். அப்போதுதான் அந்த பயங்கரம் அரங்கேறத் தொடங்கியது. மூவிலைவேலின் வடிவமைப்பே, எதிரெதிர் திசையில் உள்நுழைந்து செருகிக் கிடப்பதுதான். இப்போது அதை இழுக்க நினைத்தால், ஒரு திசையில் இருக்கும் கூர்முனை வெளிவர மற்ற இரு திசைகளில் இருக்கும் கூர்முனைகள் அழுத்தி உள்நுழையும். எஃகூசியும் கல்லூசியும் பன்றிக்கொம்பு இருக்கும் கூர்ஊசியும் மத்தகத்தின் இடது சப்பைக்குள் கிழித்திறங்க, யானை வெறிகொண்டு சுழற்றியது துதிக்கையை. வேந்தர்படைவீரர்களுக்கு நடுவே நின்றிருந்த அதன் தாக்குதல், கணநேரத்துக்குள் பன்மடங்கு ஆவேசமடைந்தது; எறும்புக்கூட்டங்களை நசுக்குவதுபோல, திறன்கொண்ட படையணியை நசுக்கத் தொடங்கியது.

யானை தனது கட்டுப்பாட்டை இழந்து தாக்குதலைத் தொடங்கிவிட்டது என்பதை அறிந்த கருங்கைவாணன், ``அதைக் குத்தி வீழ்த்துங்கள்” எனப் பெருங்குரலெடுத்துக் கத்தினான். வழக்கமான போர் ஈட்டிகளைக் கொண்டு யானையை வீழ்த்திவிட முடியாது. கூர்வாள் செருகப்பட்ட பெரிய ஈட்டியாலும் தந்த ஈட்டியாலும்தான் யானையைத் தாக்கி வீழ்த்த முடியும். அதுவும் இந்த யானைக்கு முன் நெற்றியிலும் பக்கவாட்டிலும் சங்கிலிகளால் பின்னப்பட்ட போர்க்கவசம் போர்த்தப் பட்டிருந்தது. வீரர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள யானையை வீழ்த்தியே ஆகவேண்டிய நிலை உருவானது. தாக்குதல் தொடுக்கத் தொடுக்க, யானையின் ஆவேசம் பன்மடங்கு பெருகிக்கொண்டிருக்கிறது; துதிக்கையைச் சுழற்றியெறிந்து அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தது. மத்தகத்தின் இடது சப்பைக்குள் இறங்கிய மூவிலைவேல் வேதனையைப் பல மடங்கு அதிகப்படுத்தியது. பிளிறலின் ஓசையில் அதன் மூர்க்கம் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 92

இரும்புச்சங்கிலியால் போர்க்கவசம் போர்த்தப்பட்ட யானையை இரு வேல்கம்பு வீச்சுகளால் பறம்பின் பின் வீரன் ஒருவன் தாக்க முடிந்ததை வேந்தர்படைவீரர்கள் மிரண்டுபோய்ப் பார்த்தனர். ஆனால், இந்த மிரட்சி அடுத்த சில கணங்களுக்குக்கூட நிற்கவில்லை. அதே யானை தங்களை அழித்தொழிக்கும் நிலை உருவானதால் ஆவேசத்தோடு இறங்கிப் போரிடவேண்டியதாகி விட்டது. எவ்வளவு வேகமாக இதை வீழ்த்துகிறோமோ, அவ்வளவு வேகமாகப் படையின் பாதிப்பு குறையும்.

வேந்தர்களின் விற்படையின் மையப்பகுதி, யானையுடன் போரிட்டுக்கொண்டிருந்த போதுதான் முதல்நிலைப் படையின் கட்டுக்கோப்பு குலையத் தொடங்கியதைக் கருங்கைவாணன் உணரத் தொடங்கினான். எதிரிப்படையின் தளபதியான முடியன் எங்கே இருக்கிறான் எனக் கருங்கைவாணனின் கண்கள் காலையிலேயே தேடின. அவன், கண்களிலேயே படவில்லை. அதற்குமேல் அவனைப் பொருட்படுத்தித் தேட ஒன்றுமில்லை என்ற முடிவுக்குப் போனான்.

காரிக்கொம்பின் ஓசை கேட்டதும் போர்க்களத்தின் கடைசி நாழிகை தொடங்கியது. பறம்பின் தரப்பில் படைப்பிரிவின் பின்னிலையில் நின்றிருந்த பலர், இப்போது முன்னிலைக்கு வந்துகொண்டிருந்தனர். அப்போதுதான் முடியனின் தேர், களத்தின் நடுவில் வந்து நின்றது. திடீரென இந்த இடத்துக்கு எப்படி இவன் முன்னேறி வந்தான் எனக் கருங்கைவாணன் நினைத்துக்கொண்டிருக்கும்போது, குறுக்கும் நெடுக்குமாக எல்லாப் பகுதிகளிலும் பறம்பு வீரர்கள் நுழைந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

குளவன்திட்டின் மேல் இருந்த பாரி, இப்போதுதான் முதன்முறையாக குகைக்குள் இருக்கும் விளக்கைப் பார்த்தான். காலையிலிருந்து போர்க்களத்தை விட்டு அவன் கண்கள் விலகவில்லை. இகுளிக்கிழவனோ காலையிலிருந்தே குகைக்குள் இருக்கும் விளக்கைத்தான் பார்த்துக்கொண்டே இருந்தான். போர்க்களத்தின் பக்கம் திரும்பவேயில்லை. விளக்கின் சுடர் ஈட்டிபோல மேல் நோக்கி எரிந்துகொண்டிருந்தது. இப்போது காற்றோ, காற்றியோ வீசினால் வேந்தர்படையின் நடுப்பகுதியில் நின்றிருக்கும் எண்ணிலடங்கா வீரர்கள் கணநேரத்தில் தாக்கப்பட்டுச் சரிவார்கள். முதல்நிலைப் படையில் பெருங்குழப்பம் நிலவிக்கொண்டிருக்கும் சூழலில், இரண்டாம்நிலைப் படையின் மீது பெருந்தாக்குதல் நடந்தால் படையின் தன்மை மொத்தமும் குலையும். இறுதி நாழிகையின்போது ஏற்படும் பதற்றத்தை, பறம்புவீரர்கள் மிகத்திறமையாகக் கையாண்டு எதிரியின் படைகளை நடுங்கச்செய்வார்கள் எனப் பாரி கருதினான். ஆனால், கொம்மனும் கொம்மையும் அவனுக்கு உதவ ஆயத்தமாக இல்லை. கணவாயின் பின்புறம் இருந்த அவர்கள், வாய் திறந்து ஊத மனமின்றி இருந்தனர். இகுளிக்கிழவனின் மனம், காற்றியை அனுப்பச் சொல்லி கொம்மையிடம் மன்றாடிக் கொண்டிருந்தது.

திட்டமிடலின்போதே கல்லூழிவேர்த் தாக்குதலை எப்போது நடத்துவது என்பதைப் பற்றி முடிவு ஏதும் எடுக்கவில்லை. எப்போது காற்றும் காற்றியும் வருவதை அறிவிக்கக் காரிக்கொம்பின் உச்ச ஓசை கேட்கிறதோ, அப்போது அதைப் பயன்படுத்த வேண்டும். அதைத் தவிர மற்ற உத்திகள் எல்லாம் முன்திட்டமிடல் செய்யப்பட்டவைதாம்.

தேர்ப்படையின் கடைசி நிலையில் இருந்த ஈங்கையன், இப்போது முன்னிலைக்கு வந்தான். இதுவரை கண்ணிலேயே படாமல் இருந்த தளபதி முடியன், எதிரிப்படையின் நடுக்கூறினைப் பிளந்து முன்னேறிக்கொண்டிருந்தான். எங்கும் பேய்க்கூச்சல் கேட்டுக்கொண்டிருந்தது. போர்யானை எளிதில் வீழ்வதாக இல்லை. அது வேந்தர்படையின் நடுவில் இருந்ததால், எந்த நேரம் எந்தப் பக்கம் திரும்பும் என்ற பதற்றம் எல்லோருக்கும் இருந்தது. அனைவரின் கவனமும் அதை நோக்கித் திரும்பியது.

காரமலையின் மேலிருந்து இரிக்கிச்செடியின் பால்கொண்டு வரையப்பட்ட குறியீடுகள் பகல் நேர ஒளியிலும் துல்லியமாக மின்னிக் கொண்டிருந்தன. பிளந்து முன்னேறும் பறம்புப்படையின் அணித்தலைவன் யாரோ, அவன் மட்டும் அதை அண்ணாந்து பார்த்து, படையை அதற்கேற்ப வழிநடத்திக் கொண்டிருந்தான்.

குறுக்கும் நெடுக்குமாகப் பாம்புகள் ஊர்வதைப் போலப் பறம்புப்படை நுழைந்துகொண்டிருந்தது. இவர்கள் எங்கே, எதை நோக்கிப் போகிறார்கள் என்பது வேந்தர்படைக்குப் புரியாத குழப்பமாக இருந்தது. எல்லா வீரர்களும் மெய்யுறைக்கவசம் அணிந்திருப்பதால் அம்பு தாக்கி எளிதில் அவர்கள் வீழ்வதில்லை. ஆனால், அவர்களின் அம்புகளோ, ஈட்டிபோல் வேகம்கொண்டு தாக்குகின்றன; முடியனின் தேர் பெருமரத்தின் நடுவே இறங்கும் இரும்பு ஆப்புபோல வேந்தர்படையின் நடுப்பகுதியில் இறங்கிக் கொண்டிருந்தது. முன்னோக்கிச் செல்லும் முடியனின் தேரைத் தடுத்து நிறுத்த உத்தரவிட்டபடி அவனை நோக்கி விரைந்தான் கருங்கைவாணன்.

இப்போது ஈங்கையனின் தாக்குதல் தொடங்கியது. கரும்பாகுடியில் சோழப்படையின் தாக்குதலை மிகச்சில வீரர்களைக்கொண்டு அழித்து முடித்தவன் ஈங்கையன். அவனையும் அவனது கூட்டத்தையும் காப்பாற்றிய பறம்புக்காக மட்டுமன்றி, கண்ணெதிரே தனது குலத்தை அழித்த சோழர்களைப் பழிவாங்குவதற்காகவும் களத்தில் இருந்தான். சோழனின் முத்திரை தாங்கிய தேர் ஒன்றில் அதன் தளபதியரில் ஒருவனான நகரிவீரன் இருப்பதைப் பார்த்தான். அவனை நோக்கி இடியெனத் தாக்கி முன்னேறினான் ஈங்கையன்.

முன்பகுதித் தாக்குதலைச் சற்றே மாற்றி, ஈங்கையனை நோக்கித் திரும்பினான் நகரிவீரன். ஆனால், அதற்குள் அவன் படையின் பெரும்பகுதியினர் முன்திசைத் தாக்குதலிலிருந்து வெளிவர முடியாத நிலையில் இருந்தனர். கூழையனின் தாக்குதலிலிருந்து யாரையும் விலக்க முடியாத நிலையில் ஏறக்குறைய தான் சூழப்பட்டுள்ளோம் என்பதை அவன் உணரத் தொடங்கினான்.

இந்நிலையில்தான் எதிரிப்படையின் இடுப்புப் பகுதியைப் பிளந்து முன்னேறிக்கொண்டிருந்தான் முடியன். அவன் எதிர்பார்த்த நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. இதற்கிடையில் காற்றோ காற்றியோ வீசினால் போர்க்களத்தில் எதிரிப்படையின் கட்டுப்பாடு சீர்குலையும். அது வீசாவிட்டாலும் பாரி தீட்டிய திட்டப்படி அழித்தொழிக்கும் தாக்குதலை நடத்த வேண்டும்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 92

இறுதி நாழிகையின் இறுதிப்பகுதி நெருங்கிக் கொண்டிருந்தது. எல்லா திசைகளிலும் கலைந்து பிரிந்த பறம்புவீரர்கள், களத்தின் நடுவில் வந்து இணையத் தொடங்கினர். பெருஞ் சங்கிலிப் பிணைப்பால் கருங்கை வாணன் அமைத்த முதல்நிலைப் படையின் மையப்பகுதியைச் சூழ்ந்தனர். கட்டற்று நகரும் அதன் வேகத்தின் முகப்பில் சென்றுகொண்டிருந்தான் பறம்புத்தளபதி முடியன்.

சங்கிலித்தொடரின் வெளிப்புறம் இருந்தான் கருங்கைவாணன். என்ன நடக்கிறது என அவனால் உணர முடியவில்லை. ஆனால், நிலைமை கைமீறிக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. இந்நிலையில் `இரண்டாம் நிலையில் நிறுத்தப்பட்ட பெரும்படைக்குத் தாக்குதல் உத்தரவை வழங்கலாமா?!’ எனச் சிந்தித்தான். ஆனால், அவனது போர்க்கள அனுபவம் அந்தத் தவற்றைச் செய்வதிலிருந்து அவனைக் காப்பாற்றியது.

`இன்றைய நாளின் இறுதிப்பகுதியை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். முதல்நிலைப் படை பெருங்குழப்பத்துக்கு உள்ளாகியுள்ளது. யானை, பெருஞ்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிரிகள், படையின் நடுப்பகுதியில் குவிந்துள்ளனர். நம் தளபதிகள், எதிரிகளின் ஆவேசமிக்க தாக்குதலால் இழுக்கப்பட்டு, படைகளை முறையற்று இயக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இரண்டாம்நிலைப் படையை இந்தக் கடைசி நேரத்தில் தாக்குதலுக்கு இறக்க வேண்டாம். அது நமது வலிமையின் உள்ளார்ந்த ஆற்றலை வீரர்களிடம் குறைத்துவிடும். இன்னும் இருக்கும் சிறிது நேரத்தில் தாக்குதலின் வேகத்தைக் கூட்டி எவ்வளவு முடியுமோ அவ்வளவு சமாளிப்போம்’ என்ற முடிவுக்கு வந்தான்.

வேந்தர்படைத் தளபதி கருங்கைவாணன் குழப்பத்திலிருந்து ஒரு முடிவுக்கு வந்தபோது, பறம்புப்படைத் தளபதி முடியன் தெளிவிலிருந்து முடிவெடுக்க முடியாத குழப்பத்துக்குப் போனான். `திட்டமிட்டபடி தாக்குதல் உத்திகளை நடத்தி, பல்வேறு கூறுகளாகப் பிரிந்து எதிரிப்படையின் நடுப்பகுதியில் இணைந்து விட்டோம். ஆனால், இந்நேரம் இங்கு வந்துசேர்ந்திருக்கவேண்டிய இரவாதன் இன்னும் வந்துசேரவில்லை. குதிரைப்படையின் ஆற்றல்மிகு தாக்குதலால்தான் சூழப்பட்டுள்ள எதிரிகளை முற்றிலும் அழித்தொழிக்க முடியும். இல்லையென்றால், இந்தத் தாக்குதல் திட்டத்தை நிறைவேற்ற முடியாது.

தேர்ப்படையும் வாள்படையும் எதிரிகளின் கவனத்தை முழுமையாகத் திசைதிருப்பி எவ்வளவு தொலைவுக்கு வெளியில் இழுத்துக்கொண்டு போக முடியுமோ அவ்வளவு தொலைவுக்கு வெளியே கொண்டுபோக வேண்டும். உதிரனின் தலைமையிலான பறம்பின் வலிமைமிகுந்த விற்படை, இடதுமுனையிலிருந்து உத்திபிரித்துக் களத்தின் நடுப்பகுதிக்கு வந்து கூடவேண்டும். அந்த நேரத்தில் களத்தின் இடதுமுனையிலிருந்து இரவாதன் தலைமையிலான குதிரைப்படை நடுவில் நிற்கும் விற்படையோடு இணையவேண்டும். அப்போது இடையில் சிக்கியிருக்கும் எதிரிகளின் படையை முழுமுற்றாக அழித்தொழிக்க வேண்டும் என்பதுதான் வகுக்கப்பட்ட திட்டம். இந்தத் திட்டத்தில் கணிக்க முடியாதது காற்றின் வீச்சு மட்டுமே. அது எந்தக் கணத்தில் நிகழ்கிறதோ அந்தக் கணத்தில் அதற்கேற்ப முன்னோக்கித் தாக்கும் உத்தியைச் செயல்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

முன்முடிவின்படி பறம்புவீரர்கள் அனைத்தையும் மிகச்சிறப்பாகச் செய்து முடித்தனர். ஆனால், இரவாதனின் தலைமையிலான குதிரைப்படை மட்டும் முடியன் நிலைகொண்டுள்ள நடுப்பகுதிக்கு வந்து சேரவில்லை. தொலைவில் அவனது படைக்குறிப்புக்கான பதாகையும் கண்ணில் தெரியவில்லை. தாக்குதலுக்கான உத்தரவைப் பிறப்பிப்பதா அல்லது காலம் தாழ்த்துவதா என்ற குழப்பத்தில் சிக்கினான் முடியன்.

திட்டமிட்டபடி முடியன் நிலைகொண்டுள்ள நடுப்பகுதிக்குத் தன்னால் போய்ச்சேர முடியாது என்ற முடிவுக்கு வந்தான் இரவாதன், பறம்பின் குதிரைப்படைதான் எதிரிகளைப் பேரழிவுக்கு உள்ளாக்கியுள்ளது. காலையிலிருந்து அதன் வேகம் உறுமன்கொடியை நிலைகுலையவைத்து, தற்காப்பு நிலைக்குத் தள்ளியது. ஆனால், நடுப்பகலுக்குப் பிறகு மனிதர்களால் எப்படி இந்த நிலத்தின் வெக்கையை நீரின்றிப் பொறுத்துக்கொள்ள முடியவில்லையோ, அதே சிக்கலைக் குதிரைகளும் சந்தித்தன. இதற்கான மாற்று ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை. அதுவும் காலையிலிருந்து கணப்பொழுதுகூட நிற்காமல் ஓடிய பறம்பின் குதிரைகள் காரிக்கொம்பின் இரண்டாம் ஓசை கேட்டபோது மிகவும் களைத்துப்போயிருந்தன.

இவ்வளவு களைத்திருக்கும் `குதிரைகளைக் கொண்டு எதிரிகளின் குதிரைப்படையைப் பிளந்து உள்நுழைந்தால், நமது தரப்புக்கு இழப்பு அதிகமாகும் எனக் கணித்த இரவாதன், வேறுவழியே இன்றி, திட்டத்தைச் செயல்படுத்தும் முடிவைக் கைவிட்டான்.

கருங்கைவாணனோ, எதிரிகளின் உத்திகளுக்குள் நமது முதல்நிலைப்படை கடுமையாகச் சிக்கிக்கொண்டது, இருக்கும் சிறிது நேரம் வரை பாதிப்பைக் குறைக்கும் உத்தியை மட்டும் கடைப்பிடிப்போம் என்ற நிலையை எடுத்தான்.

அப்போதுதான் நீள்சங்கின் ஓசை தென்மூலையில் கேட்டது. என்ன இது என்று பறம்புத் தளபதிகளுக்குப் புரியவில்லை. ஆனால், ஓசை கேட்ட கணம் திடுக்கிட்டுத் திரும்பினான் கருங்கைவாணன்.

அது, தளபதி கொல்லப்பட்டுவிட்டால் உடனடியாகத் தலைமைத் தளபதிக்கும் அரசனுக்கும் சொல்லும் குறிப்பு. தன் தளபதி ஒருவன் கொல்லப்பட்ட செய்தி ஒரு கணம் நடுக்குறச்செய்தது. உடனடியாக அந்தத் திசை நோக்கிக் குதிரையை விரைவுபடுத்தினான். கடைசி சில நாழிகையில் தளபதி கொல்லப் பட்டால் அந்தப் படையணி முழுமுற்றாக அழிய அதிக நேரமாகாது. பாதிப்பைக் குறைக்க வேண்டும் என்ற வேகத்தோடு விரைந்தான் கருங்கைவாணன்.

எதிரிப்படைக்குள் ஏறி உள்நுழைந்து சென்றது, தேர்ப்படைத் தளபதி நகரிவீரனும் வாள்படைத் தளபதி சாகலைவனும்தான். நகரிவீரன் சோழநாட்டுத் தளபதிகளில் ஒருவன். அவனது வீரத்தைப் பற்றிப் பெரிதாகத் தெரியாது. ஆனால், சாகலைவன் பாண்டியநாட்டின் இணையற்ற வீரன். எனவே, அவன் கொல்லப் பட்டிருக்க வாய்ப்பில்லை என நினைத்தபோது கருங்கைவாணனின் கண்பார்வையின் தொலைவில் நகரிவீரன் போரிட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது.

கருங்கைவாணனால் நம்ப முடியவில்லை. குதிரையை வேகப்படுத்தியபடி முன்னோக்கி விரைந்தான். வேந்தர்களின் வாள்படை அவனது கண்ணுக்குத் தெரிந்தது. உற்றுப்பார்த்தபடி உருவிய வாளோடு விரைந்தான். குதிரை எவ்விப் பாய்ந்தது.

பரண்மேல் இருந்த திசைவேழர் தன் கைகளை உயர்த்தினார். போர்க்களத்தின் இரு திசைகளிலும் இருந்த பரண்களின் மேலிருந்து எண்ணற்ற முரசுகள் ஒலிக்கத் தொடங்கின. தட்டியங்காடெங்கும் எதிரொலித்தது அந்த ஒலி. இன்றைய போருக்கான நாழிகை முடிந்தது.

பாய்ந்துசென்ற கருங்கைவாணனின் குதிரை சற்றே வேகம் குறைத்தது. வரவேண்டிய இடத்துக்கு வந்துசேர்ந்தான். எதிரில் தலை வெட்டப்பட்ட நிலையில் சரிந்துகிடந்தான் சாகலைவன்.

கொப்புளித்த குருதி மேலெல்லாம் பீச்சியடித்திருக்க, முகத்தைத் துடைத்தபடி, விரிந்துகிடந்த தலைமுடியை உச்சந்தலையில் ஏற்றிக்கட்டி, அருகில் இருந்த குதிரையின் மேல் தாவி ஏறினான் தேக்கன்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...