மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 93

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

போர்க்களத்திலிருந்து முரசின் ஓசையைக் கேட்டவுடன் இகுளிக்கிழவன் விளக்கை ஊதி அணைத்தான். கொம்மனும் கொம்மையும் இன்றைக்கு உதவாமல்போனது, அவனுக்கு மிகுந்த மனவருத்தத்தை உருவாக்கியது. பறம்புவீரர்கள் கானவர்களுக்கு அளித்த வாக்குப்படி, தட்டியங்காட்டில் யானைப்போர் நடப்பதைத் தவிர்த்துவிட்டனர். சமவெளியில் உள்ளவர்கள் யானையைப் பயிற்றுவிக்கும் முறையுடனும் போரில் ஈடுபடுத்தும் முறையுடனும் ஒப்பிட்டுப்பார்த்தால் மலைமக்களின் ஆற்றல் அளவிடற்கரியது.

சமவெளி மனிதர்கள், யானையைப் பழக்குவது எப்படி என்று மட்டும் அறிந்தவர்கள். மலைமக்கள், யானையின் பழக்கங்களையெல்லாம் அறிந்தவர்கள். அதுவும் பறம்பில்தான் யானையுடனான ஆதிமொழியை உருவாக்கிய தந்தமுத்தத்துக்காரர்கள் இருக்கின்றனர். அவர்கள் யானையைக் கைக்கொள்ளும்முறையை யாராலும் நினைத்துபார்க்கக்கூட முடியாது. இன்று யானைப்போர் நடந்திருந்தால் வேந்தர்படை பேரழிவைச் சந்தித்திருக்கக்கூடும்.

எந்தவொரு படையிலும் பெருவலிமைகொண்டது யானைப்படைப் பிரிவே. அது கடுமையாகத் தாக்கப்படும்போது மொத்தப் படையின் மனநிலையும் பெரும்பாதிப்புக்குள்ளாகும். யானைப்படை வீழ்ச்சியைச் சந்தித்துவிட்டால், அதன் பிறகு மற்ற படைப்பிரிவுகளால் வலிமையான ஆற்றலை வெளிப்படுத்தி முன்னேறிவிட முடியாது. பறம்புக்கு இருந்த மிகச்சிறந்த வாய்ப்பு, எதிரியின் யானைப்படையை நிலைகுலையச்செய்வது. ஆனால், கானவர்களுக்குக் கொடுத்த வாக்கின்படி பறம்பு இன்று யானைப்படையின் மீதான தாக்குதலை முழுமுற்றாக விலக்கிக்கொண்டது. அதற்குக் கைம்மாறு செய்யும்படி காற்றோ, காற்றியோ இன்று வீசவில்லை.

வீரயுக நாயகன் வேள்பாரி - 93

இகுளிக்கிழவன் மிகுந்த கவலைகொண்டான். பாரியிடம் சொல்ல அவனுக்கு வார்த்தையில்லாமல் இருந்தது. கைகளை விரித்துக் காட்டி ஏதோ சொல்ல வந்தான். அதை அறிந்த பாரி, ``இயற்கை ஒருபோதும் நம்மைக் கைவிடாது. நாளை பார்ப்போம்” என்று சொல்லி, குதிரையில் ஏறினான்.

இரலிமேட்டின் குகைகளுக்குச் சற்றுக் கீழே வேங்கைமரத்தின் அடிவாரத்தில், பாட்டாப்பிறை போன்ற அமைப்புகொண்ட பெருந்திட்டுகள் இருந்தன. அங்குதான் இரவு பகலாகப் போர் பற்றிய பேச்சுகள் நடக்கின்றன. இன்றைய போர் பற்றியும், நாளைய தாக்குதல் பற்றியும் பேசுவதற்காக அனைவரும் காத்திருந்தனர்.

ஆங்காங்கே பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. மருத்துவக் கூடாரங்களில் காயம்பட்டவர்களுக்கான மருத்துவம் நடைபெற்றுவந்தது. முறியன் ஆசான், எண்ணற்ற மருத்துவர்களோடு தீவிரமாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். முதுவேழன், நாளைய போருக்கான ஆயுதங்களைப் பிரித்துக்கொடுக்கும் வேலையைத் தொடங்கிவிட்டார். குகைகளுக்குள்ளிருந்து ஆயுதங்கள் வெளியேறியபடி இருந்தன. மற்றவர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர்.

முடியனும் தேக்கனும் வேங்கைமரத்திட்டின் இடதுபுறத்தில் அமர்ந்திருந்தனர். அதற்கு நேரெதிராக வாரிக்கை யனும் கபிலரும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு அடுத்தபடியாக வேட்டூர் பழையனும் கூழையனும் இருந்தனர். இரவாதன், உதிரன், ஈங்கையன் ஆகியோர் வீரர்களோடு நாகக்கரட்டிலும் மருத்துவக் கூடாரங்களிலும் இருந்தனர். பாரியும் காலம்பனும் இன்னும் வந்துசேரவில்லை. அவர்களின் வரவுக்காக அனைவரும் காத்திருந்தனர்.

குலசேகரபாண்டியனின் கூடாரத்துக்கு உதியஞ்சேரல், செங்கனச்சோழன், சோழவேழன், பொதியவெற்பன் ஆகிய நால்வரும் வந்து சேர்ந்தனர். சாகலைவனின் இறுதிச்சடங்குக்காகப் போயிருந்தான் கருங்கைவாணன். அவனோடு அமைச்சர்கள் மூவரும் போயிருந்தனர். விசாரணைக்காக மையூர்கிழாரை வரச் சொல்லியிருந்தார் குலசேகரபாண்டியன்.

அரசப்படைகள் பலவகைப்படுகின்றன. பன்னெடுங்காலமாக நாள் தவறாமல் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டு, எந்தக் கணமும் போர்க்களம் புகுவதற்குத் தகுதிகொண்ட படையே மூலப்படையாகும். எல்லாக் காலங்களிலும் அரசனின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் படை இது ஒன்றே. அனைத்துவகை ஆயுதப் பயிற்சிகளும் இடைவிடாது வழக்கப்படுவதால் இந்தப் படையின் வீரர்களே போர்க்களத்தில் வலிமையான தாக்குதலை நடத்தக்கூடியவர்களாக இருக்கின்றனர். மூலப்படைக்கு அடுத்தபடியாக வலிமைவாய்ந்ததாகக் கருதப்படுவது உரிமைப் படையாகும்.

உரிமைப்படை வீரர்களுக்கு மானியமும் உண்பளமும் எல்லாக் காலங்களிலும் கொடுக்கப் படுகின்றன. அவற்றைப் பெற்றுக்கொண்டு ஆயுதப்பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுவர். அவர்கள், ஓர் இடத்திலிருந்து அந்தப் பயிற்சியை மட்டும் மேற்கொள்பவர்கள் அல்லர்; தத்தமது இடங்களில் இருந்துகொண்டு வெவ்வேறு பணியையும் செய்துகொண்டிருப்பர். போருக்கான ஆணை வந்தவுடன் அரசனுக்காகப் போர்க்களம் புகுவர். அவர்கள் `உரிமைப்படை’ என அழைக்கப்படுகின்றனர். கூலி பெற்றுக்கொண்டு அதற்காகப் போரிடுவோர் `கூலிப்படை’ என்று அழைக்கப்படுகின்றனர். இந்தப் படைகள் தவிர, துணைப்படை, கானப்படை, வன்படை, குழுப்படை எனப் பல்வேறு படைகள் உள்ளன.

இவையெல்லாம் போர்க்களத்தில் ஆயுதம் ஏந்தும் படையணிகள். ஆனால், போர்க்களம் மட்டுமல்லாமல் எல்லாக் காலங்களிலும் அரசனின் பாதுகாப்புக்கு என்றே உருவாக்கப்பட்டுள்ள படைதான் `அகப்படை.’ இந்தப் படையானது அரண்மனையில் அரசப் பாதுகாப்பின் பொருட்டுப் பல்வேறு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கக் கூடியது. அரண்மனைக்குள் ஆயுதங்கள் வைத்துக்கொள்ளும் உரிமை யார் யாருக்கானது என்பதில் தொடங்கி, அரசனிடம் பேசும்போது யார் யார் எவ்வளவு இடைவெளியில் நின்று பேசவேண்டும் என்பதுவரை இந்தப் படையால் வரையறுக்கப் பட்டுள்ளது.

அரசனுக்கு அணுக்கக்காவலர்கள் இருவர் எந்நேரமும் உடன் இருப்பர். மெய்க்காவலர்கள் அறுவர், அரசருக்கும் அடுத்தவருக்கும் இடைநிலையில் குறுக்கிடாத தன்மையில் இருப்பர். ஆபத்துதவிகள் இருபதின்மர், அரசர் இருக்கும் அவைக்குள் இருப்பர். இவை எல்லாம் அரங்குக்குள் மட்டும் இருக்கும் ஏற்பாடு. இந்த வடிவங்கள் மூவேந்தர்களின் அரண்மனைகளில் ஒருசில மாறுபாடுகளைக் கொண்டிருக்கும். பாண்டியனின் மெய்க்காப்பாளர்கள் `ஆபத்துதவிகள்’ என்றும், சோழனின் மெய்க் காப்பாளர்கள் `வேளப்படையினர்’ என்றும், சேரனின் மெய்க்காப்பாளர்கள் `காக்குவீரர்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றனர். இதுபோல பெயர் மாறுபாடுகள் இருக்குமே தவிர, அகப்படையின் அடிப்படைப் பணிகளில் மாறுபாடு ஏதும் இருக்காது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 93

மூஞ்சல் உருவாக்கப்பட்டவுடன் அந்த நகருக்கெனத் தனித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவைப்பட்டன. கடல்போல் பரந்துகிடக்கும் படைவீரர்களுக்கு நடுவில் பெருவேந்தர்கள் மூவரும் தங்கியுள்ளனர். எனவே, மிகுந்த கட்டுப்பாடுகளை வகுக்கவேண்டியிருந்தது. அமைச்சர்கள் மூவரும் பேசி மூஞ்சலுக்கான அகப்படை ஒன்றை உருவாக்கினர்.

ஐந்துநிலைப் பிரிவுகளைக் கொண்ட `அகப்படை’யின் கட்டுப்பாட்டில்தான் மூஞ்சல் இப்போது இருக்கிறது. போர் தொடங்கிய பிறகு அரச விதிகள் இரும்பாலான கையுறைகளை மாட்டிக்கொள்கின்றன. எளிதில் யாருக்கும் அது இரக்கம் காட்டுவதில்லை. மூஞ்சலின் அரண்களைக் காத்து நிற்பது முதல் நிலைப்படை. மூஞ்சலின் வீதிகளைக் காப்பது இரண்டாம் நிலைப்படை. முஞ்சலுக்குள் இருக்கும் தனித்தனிக் கூடாரங்களைப் பாதுகாப்பது மூன்றாம் நிலைப்படை. அரசர்களைச் சுற்றி நிற்கும் மெய்க்காவலர்கள் நான்காம் நிலைப்படை. அணுக்கக்காவலர்கள் ஐந்தாம் நிலைப்படை.

வரவழைக்கப்பட்ட மையூர்கிழார், முதல் மூன்று நிலைகளில் உள்ள காவலர்களைக் கடந்து கூடாரத்துக்குள் நுழைவதே பெரும்பாடாகிப் போனது. பேரரசர்கள் மூவர், அரச குடும்பத்தினர் களான சோழவேழன், பொதியவெற்பன் மற்றும் மகாசாமந்தனான கருங்கைவாணன் ஆகிய அறுவர் மட்டுமே மூஞ்சலுக்குள் எந்நேரமும் நுழையக்கூடியவர்கள். இவர்களில் மூவேந்தர்கள் மட்டுமே எந்தவித ஆயுதமும் வைத்துக்கொள்ளும் உரிமை கொண்டவர்கள்.

சோழவேழன், பொதியவெற்பன் இருவரும் இடையிலக்கக் கருவிகளையோ, அணுக்கக் கருவிகளையோ வைத்துக்கொள்ளக் கூடாது. ஈர்வாளையும் உடைவாளையும் வைத்துக் கொள்ளலாம். மெய்க்கவசம் பூணலாம். ஆனால், கருங்கைவாணன் மெய்க்கவசம் பூணக் கூடாது. குறுவாள் மட்டும் வைத்துக்கொள்ளலாம்.

இவற்றைத் தவிர மூஞ்சலுக்குள் வர அனுமதிக்கப்பட்டவர்களுக்குத் தனித்ததோர் அடையாள வில்லை கொடுக்கப்பட்டிருந்தது. அது வைத்திருப்பவர்கள் விசாரணையின்றி உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். வில்லைகளின்றி அழைக்கப்பட்டு உள்ளே வரும் யாரும் முழுமையான சோதனைக்குப் பிறகே பேரரசர்களின் கூடாரங்களுக்குள் அனுமதிக்கப் படுகின்றனர். உடல் அசைவற்ற மொழியில் பேச அனுமதிக்கப்படும் அவர்கள், ஒரு கணத்தில் மெய்க்காவலர்களால் வாள்கொண்டு தலை சீவப்படும் இடைவெளியில்தான் நிற்கவைக்க படுகின்றனர்.

இப்போது அவ்விடம் நிறுத்தப்பட்டார் மையூர்கிழார். பாண்டியப் பேரரசின் அரண்மனைக்குள் நுழையும்போதுகூட அவர் இவ்வளவு நெருக்கடியான சோதனையைச் சந்தித்ததில்லை. ஆனால், மூவேந்தர்கள் ஒன்றாக உள்ள இடம். ஆதலால், கடும் சோதனைக் குள்ளானார். இந்த இடத்தில் மூஞ்சல் அமைக்கலாம் என்று சொன்னவரே அவர்தான். ஆனால், அவரிடம் `நீதானே இந்த இடம் பற்றிச் சொன்னாய்?’ எனப் பேரரசர் கேட்டால், அவர் சட்டெனத் தலையசைத்துவிடக் கூடாது. அவர் பேசவேண்டிய முறை பற்றி அவருக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஐயத்துக்கிடமான அசைவுகள் எந்த விளைவையும் ஏற்படுத்தக்கூடும். அவருக்குப் பின்னால் நிற்கும் மெய்க்காவலர்களின் வாள் நீளத்தையும் சேர்த்தே அவரிடம் சொல்லி அனுப்பியுள்ளனர்.

மூஞ்சலுக்கு வரச்சொல்லி அழைப்பு வந்தபோதே மையூர்கிழாருக்குப் பதற்றமானது. முதல் நாள் போரில் வேந்தர்கள் தரப்பில் பேரிழப்பு நேர்ந்திருக்கிறது. போர்நிலத்தைப் பற்றி முழுமையான செய்திகள் தெரியாததால்தான் இழப்புகள் அதிகமாகி யிருக்கின்றன என்று பேசிக்கொள்கிறார்கள். உள்ளுக்குள் சற்றே அச்சத்துடன் வந்தார் மையூர்கிழார். உண்மையில் தட்டியங்காட்டைப் பற்றி வெங்கல்நாட்டு மக்கள் யாருக்கும் எதுவும் தெரியாது. அந்தப் பாழ்நிலத்தில் போர்க்களத்தைத் தீர்மானித்ததே பெருந்தவறு. இதை எப்படி வேந்தரிடம் சொல்ல முடியும் என்ற குழப்பத்தோடு வந்தவருக்கு அகப்படையினரின் கெடுபிடிகள் மேலும் பதற்றத்தை உருவாக்கின. பேரரசர்கள் இருந்த அவையைப் பணிந்து வணங்கி தலை தாழ்த்தியபடி நின்றார் மையூர்கிழார்.

``இன்று பாரி போர்க்களம் புகுந்தானா?” எனக் கேட்டார் குலசேகரபாண்டியன்.

கேள்வி, மையூர்கிழாரைச் சற்றே இளைப்பாறச் செய்தது. அவர் அஞ்சியது போன்ற கேள்விகள் கேட்கப்படவில்லை. சிக்கல் இல்லாத கேள்வியைத்தான் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனவே, தெளிவான குரலில் சொன்னார், ``பாரி வரவில்லை பேரரசே!”

``அவன் எங்கு இருந்தான்?”

``நாகக்கரட்டின் மேல்தான் இருந்திருக்க வேண்டும். அங்கிருந்துதான் கொம்போசைகள் எழுப்பப்பட்டு, தாக்குதலுக்கு வழிகாட்டப் பட்டது.”

``அவன் எப்போது போர்க்களம் புக வாய்ப்பிருக்கிறது?”

``குடி ஆசானும் குடி முடியனும் இருக்கும் வரை பறம்பின் குடித்தலைவன் தனது மண்ணை விட்டு வெளியேறி வர மாட்டான்.”

``குடி ஆசான் யார்?”

``தளபதி சாகலைவனைக் கொன்றவன்.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 93

``இன்று போர்க்களத்தில் ஈட்டி எறிந்து யானையை வீழ்த்தியது குடி முடியன்தான்” என்றான் உதியஞ்சேரல்.

அப்போது கருங்கைவாணன் உள்ளே வந்தான். அவனோடு தளபதிகள் நால்வரும் வந்தனர். பேரரசர்களை வணங்கிவிட்டு இருக்கையில் அமர்ந்தான் கருங்கைவாணன். தளபதிகள் நால்வரும் எதிர்ப்புறமாக நின்றனர். மெய்க்கவசங்களோ, ஆயுதங்களோ அவர்களிடம் இல்லை. போர்க்களத்தில் ஏற்படும் மரணங்களை அவையில் பேசக் கூடாது. நடந்த தாக்குதலைப் பற்றியும், நடக்கவேண்டிய தாக்குதலைப் பற்றியும் தான் பேசவேண்டும். எனவே, சாகலைவனின் மரணத்தைப் பற்றிய பேச்சு அவையில் எழவில்லை.

``அவர்கள் ஏன் யானைப்போருக்கு வர மறுத்தார்கள்?” எனக் கேட்டார் குலசேகர பாண்டியன்.

``தெரியவில்லை பேரரசே. யானைப்போரில் நாம் அவர்களை வீழ்த்துவது கடினம். எனவே, அவர்கள் வர மறுத்தது நல்ல செய்திதான்” என்றார் மையூர்கிழார்.

சாகலைவனின் இறுதிச்சடங்கை நடத்திய வெறியோடு வந்து உட்கார்ந்த கருங்கைவாணனுக்கு மையூர்கிழாரின் கூற்று மேலும் வெறியூட்டியது. வீற்றிருந்த ஐவருக்கும் அவரின் பதில் அதிர்ச்சியைக் கொடுத்தது.

``நம்மிடம் இருப்பதில் பத்தில் ஒரு பங்கு யானைகள்கூட பறம்பின் தரப்பில் இருக்காது என்பதை நீங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டான் அருகில் நின்றிருந்த யானைப்படைத் தளபதி உச்சங்காரி.

``எண்ணிக்கையில் என்ன இருக்கிறது தளபதியாரே!” என்று சொல்லி நிறுத்திக் கொண்டார் மையூர்கிழார்.

மேலும் சினமூட்டும் பதிலாக இருந்தது அது.

``அவர்களிடம் இருந்தாலும் நம்மிடம் இருந்தாலும் யானைகள் யானைகள்தானே?” எனக் கேட்டார் சோழவேழன்.

இதற்கு என்ன பதில் சொல்வது என மையூர்கிழாருக்குத் தெரியும். ஆனால், எப்படிச் சொல்வது என்பதுதான் விளங்கவில்லை. சற்றே அமைதியாக இருந்தார்.

``ஏன் அமைதியாக நிற்கிறீர்?”

``நம்முடைய குதிரைகள் ஏன் ஓட முடியாமல் தேங்கி நின்றன? அவர்களின் குதிரைகள் எப்படி நாள் முழுவதும் ஓடின? இருவரிடமும் இருந்தவை குதிரைகள்தானே?”

``கூர் மணல் குத்திக் கிழிக்க முடியாதபடி அவர்களின் குதிரைகளுக்குக் குளம்புக்குறடு அமைக்கப்பட்டிருக்கிறது. நம் குதிரைகளின் குளம்புக்குறடுகள் அதற்கு ஏற்ற வடிவில் இல்லை. எனவே, நம் குதிரைகள் தொடர்ந்து ஓட முடியாமல் தேங்கிவிட்டன” என்றான் குதிரைப் படைத் தளபதி உறுமன்கொடி.

``நம் குதிரைகளுக்கும் அதே போன்று குளம்புக்குறடுகள் இருந்திருந்தாலும் நாள் முழுவதும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்திருக்குமா?”

எதிர்பாராத கேள்வியாக இருந்தது. பேரரசர்களுக்கு முன்னால் நடக்கும் உரையாடல் இது. எதிரியின் தரப்பில் சொல்லிக்கொள்ளும்படி எந்தவித இழப்பும் ஏற்படவில்லை. ஆனால், நம் தரப்பில் வாள்படைத் தளபதியை இழந்திருக்கிறோம். இந்தப் பின்னணியில் அவையில் பேசும் ஒவ்வொரு சொல்லையும் மிகுந்த கவனத்தோடு பேசவேண்டும் என்ற விழிப்போடு இருந்தனர் தளபதிகள் அனைவரும்.

மையூர்கிழாரின் கேள்விக்கு, சட்டென விடை சொல்லிவிட முடியாத நிலை இருந்தது. அவையில் அமைதி நிலவியது. `இவன் என்ன சொல்ல வருகிறான்?’ என்று கூர்ந்து கவனித்தபடி இருந்தான் கருங்கைவாணன்.

``தரையில் இருக்கும் குதிரைகளைவிட மலையில் இருக்கும் குதிரைகளுக்கு ஆற்றல் அதிகம் எனச் சொல்லவருகிறீரா?” எனக் கேட்டான் உறுமன்கொடி.

``இல்லை. போர்க்குதிரை என்றாலும் ஆண் குதிரை சிறுநீர் கழிக்க வேண்டுமென்றால் நின்றுவிடும். அதனால்தான் எதிரிகள் ஆண் குதிரைகளைப் போரில் பயன்படுத்துவதில்லை.”

ஒரு கணம் உறுமன்கொடி ஆடிப்போனான். இப்படியொரு காரணத்தை அவன் எதிர் பார்க்கவேயில்லை. ``ஆண் குதிரைகளின் ஆற்றல் உணர்ந்து அவற்றையே நாம் முன்களப் படைகளில் பயன்படுத்துகிறோம். அதுமட்டுமன்று, நாள் முழுவதும் குதிரைகள் களத்திலே நிற்கவேண்டிய தேவையிருப்பதால், காலையிலே நன்றாக நீர் குடிக்கவிட்டுத்தான் களத்துக்குக் கொண்டு வருகிறோம். நம்முடைய தேர்வும் முன்னேற் பாடுகளுமே போர்க்களச் செயல்பாட்டுக்கு எதிரானதா?” பேச்சற்று நின்றான் உறுமன்கொடி.

தலைகுனிந்து பேசத் தொடங்கிய மையூர் கிழாரின் குரல், தளபதிகளைத் தலைகுனிந்தே நிற்கவைத்துக்கொண்டிருந்தது. ``இதற்கு முன்பு நடைபெற்ற போர்களில் பறம்புவீரர்கள் யாரும் மெய்க்கவசம் அணிந்ததில்லை. இந்தப் போரில் வீரர்கள் அனைவரும் மெய்க்கவசம் அணிந்திருக்கின்றனர். நாம் அணியும் இரும்பாலான மெய்க்கவசத்தைவிடப் பலமடங்கு எடை குறைவானதாகவும் ஆயுதங்களால் எளிதில் உள்நுழைய முடியாததாகவும் இருக்கிறது அது.”

``முன்கூட்டியே எப்படி இவ்வளவு ஏற்பாடுகளைச் செய்தார்கள்?” எனக் கேட்டான் உதியஞ்சேரல்.

``நான் அறிந்தவரை பறம்புவீரர்கள் போர் என்று வந்தால் எதிரிகளை ஒரு பொருட்டாக மதித்ததே கிடையாது. முதன்முறையாக அவர்கள் போருக்கான முன்னேற்பாடுகளைச் செய்துள்ளனர். இந்தச் செயலுக்கு உள்ளே இருப்பது நமது படைவலிமையைப் பற்றிய அச்சம். அந்த அச்சத்தை ஊதிப்பெருக்க வேண்டும். அவர்களின் வலிமையைப் பொருட்டாக நினைக்கக் கூடாது. அவர்களின் அச்சத்தைக் கையாள்வதைப் பற்றியே நாம் சிந்திக்க வேண்டும்.”

மையூர்கிழாரின் சொற்கள் போர்க்களத்துக்குத் தேவையான ஆயுதமாக இருப்பதாகக் கருங்கைவாணன் கருதினான். ஆனால், குலசேகர பாண்டியனின் எண்ணம் வேறாக இருந்தது. `பறம்பைப் பற்றி நமக்கு முழுமையாகத் தெரிவிக் காமல், அவனது கூற்றின் முக்கியத்துவத்தின் வழியே நம்மை அவனது விருப்பத்தின் வடிவத்துக்குள் இழுக்கிறான்’ என அவருக்குத் தோன்றியது. ``சரி, நீ போகலாம்” என்றார்.

ஆழமானதோர் உரையாடலை சட்டென வெட்டித்தள்ளுவதுபோல் இருந்தது குலசேகரபாண்டியனின் உத்தரவு.

மையூர்கிழார், அவையை வணங்கி வெளியேறினார்.

பாரி வேங்கைமரத்திட்டுக்கு வந்ததும் பேச்சு தொடங்கியது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 93

சற்றே சினத்தோடு இருந்தான் வேட்டூர் பழையன். ``யானைப்போரைத் தவிர்க்கும் வாக்கை நாம் கானவர்களுக்கு வழங்கியிருக்கக் கூடாது. எதிரிகள் ஆடுகளைப்போல யானை களைக் கொண்டுவந்து நிறுத்தியிருந்தார்கள். நமது தாக்குதல் இன்று யானைப்படையில் இருந்திருக்குமேயானால் எதிரிகள் நிலை குலைந்திருப்பார்கள். நாம் மிகச்சிறந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டோம்” என்றார்.

வேட்டூர் பழையனின் கவலை எல்லோருக்கும் புரிந்தது. இன்று எதிரிகளின் யானைப்படை தாக்கப்பட்டிருந்தால் அவர்களது படையின் கட்டுக்கோப்புகள் மொத்தமாகச் சீர்குலைந்திருக்கும். ஆனால், எதுவும் இன்று நடக்கவில்லை. காலை முதல் மாலை வரை பறம்புவீரர்கள் கடுமையாகப் போரிட்டாலும் முன்புறப் படையணியின் ஒரு பகுதியை மட்டும்தான் அழித்தொழிக்க முடிந்தது. இந்த எண்ணத்தின் வெளிப்பாடாகத்தான் வேட்டூர் பழையனின் சொல் இருந்தது.

``வாக்களிக்கப்பட்ட பிறகு நமக்குக் கிடைக்கும் நன்மையைக் கருதி, அளிக்கப்பட்ட வாக்குக்காக வருத்தப்படுதல் கோழைத்தனமல்லவா?” எனக் கேட்டான் பாரி.

``எனக்குப் புரிகிறது. ஆனால், மூவேந்தர்களின் பெரும்படைக்கு எதிராகப் போர்க்களத்தில் நின்றுகொண்டிருக்கும் நமக்கு, நாமே சிக்கல்களை உருவாக்கிக்கொள்வது எந்த வகையில் அறிவார்ந்த செயல்?”

``அறிவு என்பது, ஆசைகொண்டு அளக்கப் படுவதல்ல. வெற்றியின் மீது ஆசைகொண்டு, அளிக்கப்பட்ட வாக்கை அளக்க முயல்கிறீர்.”

``இல்லை பாரி! நான் வெறும் ஆசையின் பொருட்டு இதைக் கூறவில்லை. போர் எவ்வளவு விரைவாக முடிக்கப்பட வேண்டுமோ, அவ்வளவு விரைவாக முடிக்கப்பட வேண்டும். நாம் யார் என்பதை எதிரி அறிந்துகொள்ளும்முன் அவர்கள் அழிக்கப்பட்டாக வேண்டும். அவர்களிடம் எண்ணிலடங்கா வீரர்களைக்கொண்ட படை இருக்கிறது என்பது ஒரு பொருட்டே அல்ல. ஆனால், மையூர்கிழார் என்ற ஒருவன் இருக்கிறான். அவனை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. அவன் சொன்ன குறிப்பைவைத்தே மயிலாவுக்கான நிறைசூல் விழாவை அறிந்து எதிரிகள் தாக்குதல் தொடுத்துள்ளனர். நம் மீது எப்போதெல்லாம் எதிரிக்கு அச்சம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் அந்த அச்சத்தை அவனால் கலைக்க முடியும். எனது கவலை அவன் பொருட்டுதான்.”

அவை சற்றே அமைதி கொண்டது. சிறிது நேரத்துக்குப் பிறகு பாரி கேட்டான், ``அவனுக்கு, தட்டியங்காட்டு நிலம் பற்றித் தெரியுமா?”

``எனக்கே தெரியாதே. அவனுக்கு எப்படித் தெரியும்?”

``அவன் கானவர்களை அறிவானா?”

``வாய்ப்பில்லை.”

``காற்றையும் காற்றியையும் பற்றித் தெரியுமா?”

``தெரிந்திருக்காது.”

``மெய்க்கவசத்தையும் மூவிலை வேலினையும் அறிவானா?”

``அறிய மாட்டான்.”

``பிறகு, ஏன் அவன்குறித்து இவ்வளவு கவலை கொள்கிறீர்கள்?”

``இவை எல்லாவற்றையும் அவன் அறியவில்லை என்பது பெரிதன்று. ஆனால், அவன் அறிந்துவைத்திருப்பது இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது.”

``அப்படி எதை அவன் அறிந்திருக்கிறான்?” என வேகமாகக் கேட்டான் தேக்கன்.

``அவன் பாரியை அறிவான்.”

யாரும் எதிர்பாராததாக இருந்தது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 93

``பறம்பின் மரபுகளை அறிவான். இங்கு உள்ள குடிகளின் வீரத்தை அறிவான். ஆனால், இவை எல்லா வற்றையும்விட முக்கிய மானது, எதிரியின் கூடாரத்தில் பாரியை அறிந்தவன் அவன் ஒருவனே.”

``அவன் பொருட்டு நாம் பதற்றப்பட வேண்டாம். அவன் போர்க்களம் புகும் நாளுக்காகக் காத்திருப்போம்” என்றான் முடியன்.

அப்போதுதான் இரவாதனும் உதிரனும் ஈங்கையனும் வந்து சேர்ந்தனர்.

மையூர்கிழாரோடு தளபதிகள் நால்வரும் அவை விட்டு வெளியேறினர். பேரரசர்களோடு தலைமைத் தளபதி கருங்கை வாணன் மட்டுமே அவையில் இருந்தான்.

சோழவேழன் சொன்னார், ``மையூர்கிழார், பறம்பினைப் பற்றிய எல்லாச் செய்திகளையும் துல்லியமாகக் கூறுகிறார்.”

``இல்லை. வெங்கல்நாட்டுக்குக் கொடுத்திருக்கும் ஒரே வேலை எதிரிகளைப் பற்றிச் செய்தி சேகரிப்பதுதான். ஆனால், இவனுக்கு ஒத்துழைக்காத ஆறு ஊர்கள் வெங்கல்நாட்டில் உண்டு. உண்மையில் அந்த இடத்தில்தான் இவனால் அதிக செய்தியைச் சேகரிக்க முடியும். அது இவனுக்குத் தெரியவில்லை” என்றார் குலசேகரபாண்டியன்.

``இவன், போர்க்களத்துக்குள்ளே வைத்துப் பயன்படுத்தப்படவேண்டிய ஆள். இவனை வெளியில் வைப்பதால் நமக்குத்தான் இழப்பு எனக் கருதுகிறேன்” என்றான் பொதியவெற்பன்.

``அவன்தான் நமக்கான தூண்டில் புழு. அந்தப் புழுவைக் கடிக்க பறம்புத் தளபதிகள் காத்திருப்பர். பொருத்தமான நேரத்தில் போர்க்களத்துக்குள் இவனை இறக்கலாம்” என்றார் குலசேகர பாண்டியன்.

பேரரசர்களுக்கிடையேயான உரையாடலைக் கவனித்தபடியிருந்தான் கருங்கைவாணன். ஒரு தளபதி, இரண்டு சேனைவரையர்கள், முப்பத்தைந்து சேனைமுதலிகள் இன்று கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால், இந்த மரணங்கள் எவையும் இந்த அவைக்கு ஒரு பொருட்டே அல்ல. அதுதான் பேரரசர்களின் படைபலம். அந்த மாபெரும் படைப் பிரிவுகளுக்கான அடுத்த நாள் திட்டமிடல் என்ன என்பதைப் பற்றி விளக்கினான் கருங்கைவாணன்.

அவையில் உள்ளோர் திட்டத்தை முழுமையாகக் கேட்டனர். யாருக்கும் மறுப்புச் சொல் இல்லை. கேட்கப்பட்டவை ஏற்கப்பட்டவையாகின. அவை கலையும் முன் குலசேகரபாண்டியன் சொன்னார், ``நாளைய போரில் வாள்படைத் தளபதியாக சூலக்கையன் செயல்படுவான்.’’

சரியென அனைவரும் ஏற்றுக்கொண்டனர். கொல்லப்பட்ட சாகலைவன், பாண்டியநாட்டைச் சேர்ந்தவன். அவனுக்குப் பதில் வேறொரு தளபதியை பாண்டிய வேந்தர் சொல்லுதலே முறை. அவ்வாறே செய்தார்.

முடியன் சொன்னான், ``நாளை அவர்கள் குதிரைகளை முன்பாய்ச்சலில் ஈடுபடுத்த மாட்டார்கள். நின்ற இடத்திலே குதிரைப்படை நின்றுகொள்ளும்.”

``அவர்கள் அப்படிச் செய்தால் நம்மால் நெடுந்தொலைவு உட்புகுந்து செல்ல முடியாது. நமது தரப்பில் இழப்பு அதிகமாகும். பயனும் இருக்காது” என்றான் வேட்டூர் பழையன்.

``அதுமட்டுமன்று. காற்றும் காற்றியும் வீசினாலும் குதிரைப்படையின் வலிமையைக் குறைக்காமல் நம்மால் மூஞ்சலை நெருங்க முடியாது” என்றான் தேக்கன்.

`வேறு என்னதான் வழி?’ என்ற சிந்தனையில் அவை மூழ்கியது.

எதிரிகள் தங்களின் படையை மூன்று நிலைகளில் வைத்துள்ளனர். அவற்றில் முதல் நிலையில் நிற்கும் படையில் பாதி குதிரைகளைத் தான் இன்று வீழ்த்த முடிந்தது. ஈக்கிமணலால் குளம்பு கிழிபட்ட குதிரைகள் மீண்டும் போர்க்களம் புக, ஒரு மாதம் ஆகும். அப்போதும் அவை துணிந்து தாவிவிடாது. ஆனால், மீதம் உள்ள குதிரைகளை விலக்கி உட்புகுந்து செல்வது எளிய செயலன்று. சரியான உத்தியால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.

நீண்டநேர சிந்தனைக்குப் பிறகு தேக்கன் சொன்னான், ``ஓங்கலத்தைப் பயன்படுத்துதல் ஒன்றே வழி.’’

சட்டென முடியனைப் பார்த்தான் இரவாதன். அவனது பார்வையில் மகிழ்ச்சி மின்னியது.

``அது முறையா... போர்விதி அதை அனுமதிக்குமா?” எனக் கேட்டான் முடியன்.

``கபிலர் நிலைமான் கோல்சொல்லியாக இருக்கும்போது நாம் எப்படி போர்விதியை மீறுவோம். ஓங்கலத்தைப் பயன்படுத்துதலில் தவறேதும் இல்லை” என்றார் வாரிக்கையன்.

பேச்சினூடே தான் ஏன் உள்ளிழுக்கப்பட்டோம் என்பது கபிலருக்கு விளங்கவில்லை. ஆனால், வாரிக்கையனின் பேச்சில் ஏதோ ஒரு முடிச்சு இருப்பது மட்டும் புரிந்தது.

``இன்றைய தாக்குதலில் எதிரியின் எல்லாத் தந்திரங்களையும் அறிந்துவிட்டோம். ஆனால், அறிய முடியாததாக ஒன்று இருக்கிறதே?” எனக் கேட்டார் உதியஞ்சேரல்.

``என்ன?” என்றார் குலசேகரபாண்டியன்.

``எதிரிகள் யானைப்போரில் மிகவல்லவர்கள் என்றால், அதை ஏன் அவர்கள் தவிர்த்தார்கள்?”

``தெரியவில்லை. ஆனால், அதை நாம் சாதகமாக்கிக்கொள்வோம். இனி போர்க்களத்தில் யானைகளுக்கு வேலையில்லை. எக்கணமும் நமது யானைப்படை பறம்புக்குள் நுழையலாம். அது எக்கணம் என்பதைப் பொருத்தமான நேரத்தில் முடிவுசெய்வோம். அவர்கள் நமக்காக ஏற்படுத்திக்கொடுத்துள்ள வாய்ப்பு இது” என்றார் குலசேகரபாண்டியன்.

மிகச்சரியான சிந்தனை என அனைவருக்கும் தோன்றியது. பேச்சு முடிந்த சிறிது நேரத்தில் அவை கலைந்தது. வேந்தர்கள் தத்தமது கூடாரங்களை நோக்கிப் போனார்கள். பாண்டியப் பேரரசரைச் சுற்றி ஆபத்துதவிகள் நடந்தார்கள். சோழனைச் சுற்றி வேளப்படையினர் சென்றனர். சேரனைக் காக்குவீரர்கள் அழைத்துச்சென்றனர். மேற்குமலையின் சரிவில் மின்னல் வெட்டி இறங்கியது. செங்கனச்சோழன் ஊன்றுகோலை ஊன்றியபடி மெள்ள நடந்து கூடாரத்துக்குப் போனான்.

அவன் வருகைக்காகக் கூடாரத்துக்குள் காத்திருந்தான் சோழர்களின் ஒற்றர்படைத்தளபதி. மூஞ்சலுக்குள் நுழைய சிறப்பு வில்லைகள் கொடுக்கப்பட்டது ஒற்றர்படைத் தளபதிகளுக்கு மட்டும்தான். அவர்கள் எந்த நேரமும் வரலாம். இந்த இரவு வேளையில் தனது வரவுக்காகக் காத்திருப்பதில் இருந்தே அதன் முக்கியத்துவத்தை உணர முடிந்தது. ``என்ன செய்தி?” எனக் கேட்டான் செங்கனச்சோழன்.

பேரரசனை வணங்கிவிட்டுச் சொன்னான், ``கரும்பாக்குடித் தலைவன் ஈங்கையன், பாரியின் படையில் பங்கேற்றுப் போர்புரிகிறான்” என்றான் ஒற்றர்படைத்தளபதி.

செங்கனச்சோழனுக்கு அவன் சொல்ல வருவது புரியவில்லை, ``என்ன சொல்கிறாய்... விளங்கும்படி சொல்.”

``தங்களுக்குப் பேரரசர் பட்டம் சூட்டும் வேளையில் கரும்பாக்குடியினரின் மீது மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. கரும்பாக்குடியினர் ஈங்கையனின் தலைமையில் மிகக்கடுமையான எதிர்த்தாக்குதலை நடத்தினர். இறுதியில் அவர்களை வீழ்த்தினார் நம் தளபதி உறையன். வீழ்த்தப்பட்ட ஈங்கையன் உள்ளிட்ட அவன் தோழர்களைக் கப்பல் அடிமைகளாக விற்றார். ஆனால், அந்த ஈங்கையன் இன்று பறம்பின் படையில் தளபதிகளில் ஒருவனாய் நின்று போர்புரிகிறான்.”

வியப்பு நீங்காமல் ஒற்றர்படைத் தளபதியைப் பார்த்தான் செங்கனச்சோழன், ``நீ சொல்வது உறுதியான செய்திதானா?”

``உறுதியான செய்திதான் பேரரசே! நம்மவர்கள் நேரில் பார்த்துள்ளனர்.”

``சரி. மற்றவர்களுக்குத் தெரியவேண்டாம்” என்று சொல்லி அவனை அனுப்பிவைத்தான்.

குலசேகரபாண்டியன் கூடாரத்துக்குள் நுழைந்தபோது அங்கேயும் ஒருவன் இருந்தான். பேரரசரை வணங்கிவிட்டுச் சொன்னான், ``எதிரிகள் தரப்பில் இன்றைய போரில் பங்கெடுத்தவர்களை மதிப்பிட்டோம். நமது படையோடு ஒப்பிட்டால் அவர்களின் படை இருபதில் ஒரு பங்குதான் இருக்கும். இன்றைய போரில் இறந்தவர்களை மதிப்பிட்டோம். நமது தரப்பில் இறந்தவர்களோடு ஒப்பிட்டால் எதிரிகள் தரப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை இருபதில் ஒரு பங்குகூட இருக்காது. அதற்கும் குறைவுதான்.”

வேங்கைமரத்திட்டில் கூடி இருந்தவர்கள் பேச்சு முடிந்து கலைந்தனர். உறங்குவதற்காக ஆறாவது குகையை நோக்கிப் போனான் பாரி. அவன் சென்ற சிறிது நேரத்தில் அந்தக் குகையை நோக்கி உதிரன் போனான். பாரி தங்கும் குகையை நாள்தோறும் தளபதி ஒருவன் காத்து நிற்க வேண்டும் என்பது முடியனின் உத்தரவு.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...