`மழையின் காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை' இந்த அறிவிப்பு டிவியில் வருகிறதா? என்பதைக் குழந்தைகள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பது அநேகமாக எல்லா வீடுகளில் நடக்கக்கூடிய ஒன்றுதான். அவர்களின் ஆவலைத் தீர்ப்பதுபோல, அவ்வப்போது விடுமுறைகளும் அளிக்கப்படுகிறது. அந்த நாள்களில் வீடே அமளிப்படும். எப்போதுமே டிவியில் கார்ட்டூன் சேனலையே பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் ஏராளம். பெற்றோர்கள், இதற்கு மாற்றாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்.
நம்முடைய குழந்தைகளின் விளையாட்டு முறையே நாம் வாழும் பகுதியின் தட்ப வெட்ப நிலையைப் பொறுத்தே உருவாகியுள்ளன. ரொம்பவும் குளிராக உள்ள ஊர்களில் வெளியில் ஆடும் விளையாட்டுகளை அதிகம் பார்க்க முடியாது. அதேபோல, மழை பெய்வதே அதிசயம்தான் எனும் ஊர்களில் வீட்டுக்குள் ஆடும் ஆட்டங்கள் வெகு குறைவாக இருக்கும். இப்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் குழந்தைகளுக்கான மழைக்கால விளையாட்டுகள் சிலவற்றை அறிமுகப்படுத்துமாறு இனியன் மற்றும் ரத்தினப் புகழேந்தி ஆகியோரிடம் கேட்டோம்.
கப்பல் விடலாம் வா! மழை என்றதுமே குழந்தைகளுக்கு முதலில் நினைவுக்கு வருவது, கப்பல் விடுவதுதான். அதனால், பயன்படுத்திய காகிதங்களில் விதவிதமான கப்பல்கள் செய்யும் முறையைச் சொல்லிக்கொடுத்து, செய்ய வைக்கலாம். ஒவ்வொரு மடிப்பின்போது சதுரம், செவ்வகம், கூம்பு என மாற்றம் அடைவதையும் கூறலாம். அடுத்து, ஒவ்வொரு கப்பலில் பெயர் எழுதுகையில், உறவுகள் பெயர், நண்பர்கள் பெயரை எழுதி, அவர்களைப் பற்றிய இனிமையான சம்பவங்களைப் பகிரச் சொல்லலாம். பெற்றோரே அப்படிப் பகிர்வதைத் தொடங்கி வைக்கலாம்.
ஓரி : நீரில் ஆடும் விளையாட்டு. நிலத்தில் ஓடிப்பிடித்து விளையாடுவதுபோல, நீரில் மூழ்கி நீந்திச்சென்று பிடிக்க வேண்டும். ஆட்டத்தின் தொடக்கத்தில் பாடப்படும் பாடல்...
``ஆத்துல கெண்ட புடிச்சேன்
எல்லாருக்கும் குடுத்தேன்
எங்க வெங்கடேசனுக்கு மட்டும் குடுக்கலே!
இந்த விளையாட்டை, மழை விட்ட நேரங்களில் பெரியவர்களின் துணையோடு, குழந்தைகளை ஆட வைக்கலாம். குளம் அல்லது ஆற்றில் இதை ஆடும்போது சுகாதாரமான நிலையில் உள்ளதா என்பதைப் பார்க்கவும் தவற வேண்டாம்.
ராஜா ராணி: இந்த விளையாட்டை 5 முதல் 10 நபர்கள் ஆடலாம். விளையாடும் நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சிறுசிறு காகிதங்களில் ராஜா (1001), ராணி (500), மந்திரி (300), சேவகன் (200) போலீஸ் (100), திருடன் (0), என மதிப்பெண்ணுடன் எழுதிக்கொள்ளவும்.
மடித்த காகிதங்களைக் குலுக்கிக் கீழே வீசியதும், ஆளுக்கொரு காகிதத்தை எடுக்க வேண்டும். போலீஸ் பெயர் வந்தவர், திருடனைக் கண்டுபிடிக்க வேண்டும். சரியாகக் கண்டுபிடித்துவிட்டால், போலீஸின் மதிப்பு அவருக்கே கிடைக்கும். தவறாகச் சொன்னால், போலீஸ் மதிப்பு திருடனுக்குச் சென்றுவிடும். பல சுற்றுகள் முடிவடைந்து அதிக மதிப்பெண் பெற்றவர் வெற்றியாளர்
அம்புலி: இருவர் ஆடும் விளையாட்டு இது. குழந்தையைக் காலில் கிடத்தி விளையாட்டுக் காட்டுவதையே `அம்புலி’ என்று நாட்டுப்புற மக்கள் குறிப்பிடுவர். குழந்தையைப் படத்தில் உள்ளவாறு அமர்த்தி, கீழ்க்காணும் பாடலைப் பாடி, விளையாட்டுக் காட்டுவர். பெரியவர் பாடலைப் பாட, குழந்தையும் பின்பற்றிப் பாடுவதாக விளையாட்டு தொடரும்.
அம்புலி அம்புலி எங்க போன?
ஆவாரங்காட்டுக்கு
ஏன் போன?
குச்சி ஒடிக்க
ஏன் குச்சி?
குழி தோண்ட
ஏன் குழி?
பணம் பொதைக்க
ஏன் பணம்?
மாடு வாங்க
ஏன் மாடு?
சாணி போட
ஏன் சாணி?
வீடு மொழுவ
ஏன் வீடு?
பிள்ளைகள் வளர
ஏன் பிள்ளைகள்?
ஆத்து மணலுல... அஞ்சி வெளையாட...
கோரப்பாயில... கொஞ்சி வெளையாட...
பாடல் முடிய, விளையாட்டும் நிறைவுபெறும்.
ஏழாங்காய்: இந்த விளையாட்டை இருவர் ஆடலாம். ஏழு கற்களைக்கொண்டு ஆடுவதால், இந்தப் பெயர். ஒரு காயைக் கையில் வைத்துக்கொண்டு, மற்ற காய்களைச் சிதறவிடுவர். கையிலிருக்கும் காயை மேலேவிட்டு, கீழிருக்கும் காயை எடுத்தவாறு, மேலிருந்து வருவதையும் பிடிக்க வேண்டும். இருவரும் விரும்பும்போது முடிவுக்கு வரும்.
இவை மட்டுமல்ல, புதிதாக விளையாட்டுகளை நாமே குழந்தைகளோடு சேர்ந்து உருவாக்கலாம். எல்லா விளையாட்டுகளுமே இப்படி உருவானதாகத்தானே இருக்கும். உடலையும் மனத்தையும் வளப்படுத்தும் விளையாட்டுகளில் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். சில குழந்தைகள் ஆர்வமில்லாமல் இருக்கக்கூடும். பெற்றோரும் சேர்ந்து ஆடியோ அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள குழந்தைகளையும் இணைத்து ஆட வைத்தோ, உங்கள் குழந்தைக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள்.