
முலைகள்படம் : காயத்ரி ராமச்சந்திரன்
பண்டைய தமிழர், நம்மைப்போல பெண்ணுடலைப் பொத்திப் பாதுகாக்க வேண்டிய `செல்வமாக’ ஆண் சமூகத்தின் `உடைமையாக’க் கருதினார்களா அல்லது அது மிக இயல்பான ஒன்றாகக் கருதப்பட்டதா? இன்று இந்நிலை எப்படியுள்ளது? இலக்கியத்தில் இதற்குக் கிடைக்கும் பதில் என்ன?

கம்பராமாயணம் போன்ற காப்பியங்களிலோ, திருக்குறள் போன்ற நீதி இலக்கியத்திலோ, சங்க இலக்கியத்திலோ பெண் உடல் குறித்த வர்ணனைகள் மலிந்துகிடக்கின்றன. கொசலை நாட்டுத் தெருக்களில் எதிர்படும் மகளிர், அந்தப்புர அழகியர் என யாரைக் குறித்தென்றாலும் கம்பன் தடமுலைகளைக் குறிப்பிடாமல் நகர்வதில்லை. ஏன்?
`பெண்ணின் மேலுடலை மறைப்பது, இந்திய வரலாற்றில் சமீபத்திய நிகழ்வு’ என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது, இன்றுள்ளது போன்ற மிகையான சமூகக் கூச்சம் அன்று இல்லாதிருந்திருக்க வேண்டும். உதாரணமாக, சிலப்பதிகாரத்தில் பதிகத்தின் முதல் பாடலில் ஒற்றை முலையுடன் மரத்தின் கீழ் நிற்கும் கண்ணகியின் சித்திரம் வருகிறது. அவள் முலையைத் திருகி வீசுவதும் தெருவிலே பட்டவர்த்தனமாக நடக்கிறது. முலை எனும் சொல்லின் வேர்ச்சொல் `முல்’ - இதன் பொருள் முன்னே. முலை என்றால், முன் நிற்கும் உறுப்பு என அர்த்தம். அவ்வளவுதான். அதில் எந்தக் கவர்ச்சியான உட்செய்தியும் இல்லை. ஆதித்தமிழர், முலையை இவ்வாறு சாதாரண ஓர் உடலுறுப்பாகவே கண்டனர்.
போதுமான ஆதாரம் இல்லையெனிலும், ‘முலை’ என்றால் மார்பு அல்ல, ‘கண்’ என விளக்குகிறார்கள் சில ஆய்வாளர்கள். கண்ணகியால் தன் முலையைக் கத்தி இன்றி அறுத்து எறிந்திருக்க இயலாது, ஆகையால் அவள் பறித்து எறிந்தது தன் கண்ணையே எனக் கூறும் இவர்கள், பா எண் ஐந்தில் வரும் “மட்டார் மறுகின் மணிமுலையை” (வண்டு பூவென நம்பி மயங்கும் கண்) எனும் வரியைக்கொண்டு இதை நிறுவுகிறார்கள்.
கம்பராமாயணத்தில் நூற்றுக்கணக்கான முறை முலைகள் வருகின்றன. அண்ணாதுரை வைணவ பக்தி இலக்கியத்தை விமர்சித்து, திராவிட அடையாளத்தை அதற்கு மாற்றாகக் கட்டமைக்கும் நோக்கில் `கம்பரசம்’ (1947) எனும் நூல் எழுதினார். அதில் பக்கம் பக்கமாகக் கம்பனெழுதிய பெண் பாலுறுப்பு வர்ணனைகளை மேற்கோள் காட்டி கம்பராமாயணத்தை ஆபாச இலக்கியம் என வரையறுக்கிறார்.
பழந்தமிழ் பெண்டிர், ஆடைக் கட்டுப்பாட்டைப் பொறுத்தமட்டில் கூடுதல் சுதந்திரத்துடன் இருந்திருக்கலாம். ஆனால், பெண்ணுடலை உடைமையாகக் காணும் நோக்கு அன்றும் வலுவாகவே இருந்திருக்க வேண்டும்.
நவீன காலத்தில், ஒரு பக்கம் பெண்கள் பொருளாதார சுதந்திரமும் தன்னிறைவும் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அவர்கள் மீதான கண்காணிப்பும் கற்பு குறித்த விசாரணைகளும் பலாத்காரங்களும் வன்முறையும் இன்று அதிகமாகியுள்ளன. `முலை’ என்ற சொல்லை வெளிப்படையாக உச்சரிக்கவே நாம் தயங்குகிறோம். இப்போது பெண் உடலை வெளிப்படையாகச் சித்திரிப்பதே பெண் சுதந்திரத்தை அடைய சிறந்த வழி எனும் நிலைப்பாட்டைப் பெண் கவிகள் உலகம் முழுக்க எடுத்திருக்கிறார்கள்.
இரண்டாயிரத்தில் குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, சல்மா, சுகிர்தராணி எனும் படைப்பாளிகளின் வருகை, தமிழ்க் கவிதை உலகைத் தடம் புரளச்செய்தது; புத்துணர்வு அளித்தது. ஆனால், நவீன இலக்கிய உலகம் இதைச் சரிவர புரிந்துகொள்ளும் முதிர்ச்சியுடன் இல்லாதிருந்ததால் பெண் கவிதை கடும் சர்ச்சைக்குள்ளானது. குட்டி ரேவதியின் `முலைகள்’ (2002) எனும் தொகுப்பு ஏற்படுத்திய சலசலப்பை இங்கு குறிப்பிடலாம். ஆனால், பண்டைய இலக்கியத்தில் தென்படும் ஆண்-மைய நோக்கு, ஆணின் பார்வை (male gaze) குட்டி ரேவதியின் கவிதைகளிலும் உள்ளது ஆச்சர்யமே!
`ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும்
சிசு கண்ட அதிர்வில்
குருதியின் பாலையும்
சாறெடுக்கின்றன
ஒரு நிறைவேறாத காதலில்
துடைத்தகற்ற முடியாத
இரு கண்ணீர்த்துளிகளாய்த் தேங்கித்
தளும்புகின்றன’ (முலைகள்)
இங்கு முலைகளின் இருப்பே, ஆணின் தழுவலில் ஏற்படும் பூரிப்பிலும் மழலையின் உறிஞ்சுதலில் கிடைக்கும் புளகாங்கிதத்திலும் ஆணுடனான வருத்தத்தில் ஏங்கித் தளும்புதலிலும்தான் நிகழ்கிறது. ஆணின்றி முலைகளைக் கட்டமைக்க முடியாது எனும் இடத்தில் மீண்டும் பெண்ணிருப்பு வந்து நிற்கிறது. ஆனால், இதற்கான எதிர்நிலையில் நின்று, ஆண்-மைய நோக்கை மறுத்து, லீனாமணிமேகலை, மாலதி மைதிரி, சுகிர்தராணி ஆகியோர் எழுதினர்.
இப்படி ஆண் அதிகாரத்தை முறியடிக்க, பெண் கவிகள் முலைகளை வெளிப்படையாய்ச் சித்திரிக்கத் தொடங்கியபோது கடும் சர்ச்சைகள் கிளம்பின. அவற்றின் தாக்கம் இன்னும் ஓயவில்லை.