மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 2 - ஷாஜி

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 2 - ஷாஜி
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 2 - ஷாஜி

சாத்தான் சேவைஓவியங்கள் : ரவி

சாத்தான் எனும் பட்டப்பெயரைக்கொண்டவன் எனது சொந்தக்காரப் பையன். நல்லவர்களைக்கூடத் தவறான வழியில் இழுத்துக்கொண்டுப் போகிறவன் என்ற பொருளில் அவனுக்கு அப்பெயரைச் சூட்டிவிட்டவர் எங்கள் தாத்தா. என்னைவிட இரண்டு மூன்று வயது அதிகமிருந்த சாத்தான்தான் அக்காலத்தில் எனது சினிமா சோதனைக் குற்றங்களின் முக்கியக் கூட்டுக்களவாணி. பள்ளிக்கூடங்களை ஏறெடுத்துப் பார்க்கப் பிடிக்காத சாத்தான், ஒரு பள்ளிக்கூடத்திற்குள் புகுந்தால், அன்றைக்கு அங்கே சினிமா திரையிடல் உண்டு என்று அர்த்தம். பள்ளிகளில் அரங்கேறும் 16 எம்.எம் சினிமாக் காட்சிகள் எங்களூர்களின் முக்கியக் கலைநிகழ்ச்சியாக மாறியிருந்தது. கிராமப் பள்ளிகள் போட்டி போட்டுத் திரைப்படங்களைக் கொண்டுவந்தன. ஏதாவது ஒரு பள்ளியில் மாதம் ஒரு படமாவது இருக்கும். கொட்டகைகளுக்குச் சென்று படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட சாத்தானுக்கும் எனக்கும் பள்ளிக்கூடப் படங்கள் பெரும் வாய்ப்பாக மாறின.

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 2 - ஷாஜி

சென்பகப்பாற அரசு நடுநிலைப் பள்ளியில் ‘செம்பரத்தி’ படத்திற்கு மூன்று காட்சிகள். மூன்றையும் சாத்தானும் நானும் பார்த்தோம். அப்படத்தில் வந்த சோபனா எனும் இளவயது நடிகையை அளவிற்கும் அதிகமாக எனக்குப் பிடித்துப்போனது. 16 வயது கடக்காத அந்தப் பிஞ்சிளம் பேரழகியை சுதீர் எனும் நடிகன் கொட்டும் மழையினூடாக விரட்டிப் பிடித்து நாசமாக்குகிறான். எனக்குள் இனம்புரியாத ஒரு வலி. “இது சரிக்கும் உள்ளதாடா? இப்படியெல்லாம் நடக்குமா?” என்று கேட்டபோது, “அது பிலீன் ஓட்டும்போது ஆட்டறது தான்டா. சும்மா க்யாமரா ரிக்கு” என்றான் சாத்தான். எனக்குச் சிறு ஆசுவாசாம். ஆனால், அந்தக் காட்சி வரும்போதெல்லாம் தலைமை ஆசிரியர் படம் ஓட்டுபவரிடம் “சீக்கிரம் ஓட்டி விடு... சீக்கிரம் ஓட்டி விடு” என்று சொல்வது எதற்கு என்று புரியவில்லை. அது ஒரு ‘கறுப்பு அளிப்பு’ காட்சி என்றும் நம்மை மாதிரியான பொடிப்பயல்கள் அதைப் பார்த்துக் கெட்டுப்போகாமல் வாத்தியார் தடுக்கிறார் என்றும் சாத்தான் விளக்கினான். ஒரு செம்பருத்திப் பூவைப்போல் அழகாய், அப்பாவியாய் இருந்த சோபனாவின் வாயையும் மூக்கையும் அழுத்திப் பிடித்து அவளை மூச்சு முட்டவைத்துக் கொன்று கிணற்றுக்குள் தள்ளுகிறான் அந்த மகா கொடூரன். படம் முடிந்து வெளியே வரும்போது, இதயத்தில் பெரும் பாறாங்கல் ஒன்று இறங்கியதுபோல் உணர்ந்தேன்.

கிடைத்த சன்மானம்

‘சம்மானம்’ எனும் படம் பள்ளிக்கானம் பள்ளிக்கூடத்தில் காண்பித்தனர். பிரேம் நஸீர், ஜெயபாரதி நடித்த குடும்பச் சித்திரம். சாத்தானும் நானும் சரியான நேரத்தில் பள்ளிக்கூடம் சென்றோம். ஆனால், சிக்கல் இருந்தது. படம் பார்க்கப் பணமில்லை. இரண்டு வாசல்கள் வழியாக ஆள்கள் உள்ளே செல்லத் தொடங்கினர். முன்வாசலில் சீட்டுக்களைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு சிறுவர்கள் முண்டியடித்தனர். சாத்தான் அங்கேயே சுற்றிச் சுற்றி வந்தான். ஓலிக்கல் பாக்கரனின் மகன் ரகு, ஒரு மந்தமான பையன். கையில் சீட்டைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு உள்ளே செல்ல உந்தித் தள்ளுகிறான். ஆனால், நெரிசலில் மீண்டும் மீண்டும் பின்தள்ளப்படுகிறான். அவன் பின்னால் ஒட்டியொட்டி நின்றுகொண்டு ரகுவின் சீட்டைத் திடீரெனப் பறித்தெடுத்தான் சாத்தான். என்ன நடந்ததென்று ரகுவுக்குத் தெரியும் முன்னே சீட்டைக் காட்டி உள்ளே ஓடினான். “என்னோட ரிக்கெட்டு காணாமப்போச்சே... எவனோ திருடிட்டானே... என்டெ அம்மச்சியே…” என்று கத்திக் கூப்பாடுப் போட்டுக்கொண்டு ரகு நாலாபக்கமும் ஓடுகிறான். 

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 2 - ஷாஜி

நானில்லாமல் சாத்தான் மட்டும் படம் பார்ப்பதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஒருவகைப் பதற்றத்திற்கு ஆளானேன். வாசலில் நெருக்கியடிக்கும் சிறுவர்களின் இடைமுறிவு வழியாக உள்ளே தள்ளிக் கடக்க முயன்ற என்னை, சீட்டைக் கிழிக்கும் சேட்டன் கையும் களவுமாகப் பிடித்தார். குண்டிமேட்டில் தடதடவென அடி விழுந்தது. இரண்டு பேர் சேர்ந்து என்னைப் பிடித்து இழுத்து பள்ளிக்கூட அலுவலகத்திற்குக் கொண்டுசென்றனர். இடையே நழுவி ஓடித் தப்பிக்க முயன்றபோது, நடந்த கைகலப்பில் எனது சட்டையின் கழுத்துப்பட்டை கிழிந்து தொங்கியது. ‘சம்மானம்’ பார்க்க வந்தவனுக்கு கிடைத்த சன்மானம் பெரும் அவமானம். நான் ஓ... என்று அழத் தொடங்கினேன்.

முதன்மை ஆசிரியையான பெஸலிஸா எனும் கன்னிகா ஸ்திரீ வெளியே வந்தார். பெஸலிஸாம்மா என்று ஊர்க்காரர்கள் மரியாதையுடன் அழைக்கும் அவர், என்னைப் பார்த்ததும் “அட! நீயாடா டிக்கெட் இல்லாம உள்ளே போகப் பாத்தே? என்னாச்சுடா செறுக்கா ஒனக்கு?” என்று மென்மையாகக் கேட்டார். எனது அழுகை மேலும் அதிகரித்தது. நான் நல்லப்பையன் என்று நம்பி என்மேல் அன்பு வைத்திருக்கும் பெண்மணி அவர். அடியும் வாங்கி சட்டையும் கிழிந்து ஒரு திருட்டுபையன் மாதிரி அவர்முன் நின்றுகொண்டிருப்பதை நினைத்து நான் விம்மி விம்மி அழுதேன். பெஸலிஸாம்மா எனது சட்டையைப் பிடித்துச் சரிசெய்தார். தலைவிரி கோலமாகிப்போன எனது முடியைக் கையால் வாரினார். என் கையைப் பிடித்துக்கொண்டு பள்ளிக்கூடத்திற்குச் சென்று “நீ உள்ளே போய் ஒக்காந்து சினிமா பாத்துக்கோடா...” என்று சொல்லி வாசலைத் திறந்து என்னை ஏற்றிவிட்டார். ‘என்டெ கையில் பூத்திரி… நின்டெ கையில் பூத்திரி...’ படத்துக்குள்ளே கொண்டாட்டப் பாட்டு ஒன்று களைகட்டுகிறது. இருந்தும் என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

சினிமாப் பள்ளிகள்

ஐந்துவயதான எனது தம்பியைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும். ஊர்ப் பிரச்னைகளைத் தலையில் தூக்கிக்கொண்டு அப்பா அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்த காலம். தம்பியின் பிறப்புச் சான்றிதழும் ஐந்து ரூபாவும் கையில் தந்து அவனைப் பள்ளியில் கொண்டுசென்று காண்பித்துப் பெயர் பதிவுசெய்யும்படி அம்மா என்னிடம் சொன்னார். பள்ளிக்கூடத்தை நெருங்கினபோதுதான் தெரியவந்தது அன்றைக்கு அங்கே ஒரு சினிமா திரையிடப்படுகிறது என்று. ‘ஒரு பெண்ணின்டெ கத’ எனும் படம். சத்தியனும் ஷீலாவும் முக்கிய நடிகர்கள். எங்கள் ஊர்களின் ஒரேயோர் ஓவியரும் சிற்பியுமாக இருந்த பொந்தன்புழ விஜயனின் கருத்தின்படி அதுநாள் வரைக்கும் மலையாள சினிமாவில் ஒரேயொரு நடிகர்தான் தோன்றியிருக்கிறார். அவர்தான் சத்தியன். நான் அதுவரைக்கும் பார்த்த படங்களில் எதிலும் சத்தியன் இருக்கவில்லை. அந்த நடிகனின் ஒரு படத்தையாவது பார்க்க வேண்டுமே என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இதோ அதற்கான அரிய சந்தர்ப்பம்! நான் யோசிக்கவே இல்லை. தம்பியைப் பள்ளியில் சேர்க்கத் தந்த பணத்தைவைத்துச் சீட்டெடுத்துப் படம் பார்க்க நுழைந்தேன்.

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 2 - ஷாஜி

படம் தொடங்கி நெடுநேரம் கடந்தும் சத்தியன் வரவேயில்லை. கோட் சூட் போட்டுக் கறுப்புக் கண்ணாடி வைத்த மாதவன்தம்பி எனும் ஒரு கிழவன் படம் முழுவதும் வருகிறான். மிகவும் கெட்டவன் அக்கிழவன். அப்போது, அதோ வருகிறார் பிரேம் நஸீரைப்போலவே அழகான சத்தியன்! “அதோ சத்தியன்... அதோ சத்தியன்...” என்று நான் சத்தம் போட்டேன். பக்கத்தில் அமர்ந்திருந்த ஒருவர் “அதுவாடா சத்தியன்? மடத்தனமாப் பேசாதெடா முட்டாள்... அது உம்மர்” என்று சொன்னார்.

“உம்மரா? அப்போ சத்தியன் எங்கே? அவரு இன்னும் வரலயே?”

“சத்தியன் வரலையா? அப்றம் அந்த மாதவன்தம்பியா வர்றது யாரு? அதுதான்டா சத்தியன்”

எனக்குப் பெரும் ஏமாற்றமாகிப்போனது. பிரேம் நஸீரைவிட அழகானவராக இருக்கும் என்று நான் நினைத்த சத்தியன்தான் அந்தக் கெட்ட கிழவனா? அவன்தானே “பூந்தேனருவீ... பொன்முடிப் புழையுடெ அனுஜத்தீ...” என்று பாடியாடித் திரிந்த இளம்பெண் ஷீலாவைப் பிடித்து இழுத்து நாசம் பண்ணினவன்! அது சத்தியனாக இருக்க வாய்ப்பேயில்லை. ஆனால், சத்தியன் என்று நான் நினைத்தவர் படத்தில் அவ்வப்போதுதான் வருகிறார். மாதவன்தம்பி தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்யுமிடத்தில்தான் படம் முடிகிறது. இறுதியில் அவர்தான் சத்தியன் என்று அறிந்துகொண்டேன். ஒரு சினிமாவின் கதாநாயகன் எல்லா நற்குணங்களுக்கும் விளைநிலமாக இருக்க வேண்டியதில்லை என்றும் உணர்ந்தேன். ஒரு பெண்ணின் கதை என்னை மிகவும் பாதித்தது. ஆனால், அப்படம் பார்த்த ஒரு பையனின் கதைதான் பெரும் பாதிப்புகளுக்குள்ளானது.

தம்பியைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்ததாகவே வீட்டில் பொய் சொன்னேன். படம் பார்த்ததன் பாக்கிப் பணத்தை வைத்துப் பிள்ளேச்சனின் சாயைக் கடையிலிருந்து பிடித்ததையெல்லாம் வாங்கித் தின்றேன். மீதமிருந்த பணத்தாளையும் சில்லறைகளையும் தம்பியின் பிறப்புச் சான்றிதழுக்குள் பத்திரமாகப் பொதிந்து கட்டி ஒரு மிளகுச் செடியின் கொடியிலைகளுக்குள்ளே மறைத்துவைத்தேன். வீட்டில் எங்கே பதுக்கினாலும் பிடிபடும் என்பது உறுதி. நான்கு நாள்கள் கழித்து, மிளகுக் கொடியின் கீழே கறையான் மென்று பாதியான சான்றிதழும் பணத்தாளும் மண்பொதிந்த சில்லறைத் துட்டுக்களும் அப்பாவின் கையில் சிக்கியது. எனது கைகளிரண்டும் வீட்டின் உத்தரத்தில் கட்டித் தூக்கி என்னைத் தொங்கவிட்டார். கீழே நின்றுகொண்டு அடித்து அடித்துத் துவைத்தார். கைகள் முறிந்து பிரிவதுபோன்ற வலியில் நான் தொங்கியாடினேன். “கள்ளக் கழுவேறி மவனே... நின்டெ அம்மேடெ சினிமா...” என்று கடும் வசைகளைத் துப்பியவாறு கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்து என்னை அடித்து நாராக்கினார்.

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 2 - ஷாஜி

ஆனால், சினிமா விஷயத்தில் அப்பாவும் சற்றுமே குறைந்தவரல்ல என்று விரைவில் எனக்குத் தெரியவந்தது. நண்பர்களுடன் சினிமாவுக்குப் போவதை வழமையாக வைத்திருந்தார். அப்பா என்னை அழைத்துச் சென்று மூன்று திரைப் படங்களைப் பார்க்க வைத்த ஞாபகம் இருக்கிறது. ஒருநாள் கட்டப்பனாவுக்கு என்னை அழைத்துச் சென்றார்.  சட்டை, நிக்கர் துணிமணிகளையும் செருப்பையும் வாங்கித் தந்தார். அசோகா ஓட்டலிலிருந்து வாங்கிய ‘வெறோட்டாவும் பீஸ் கறி’யும் சாப்பிடத் தந்தார். அதன்பின், கட்டப்பன சங்கீதாவுக்கு என்னைக் கொண்டுசென்றார். கொட்டகையை நெருங்கியபோதுதான் தெரியவந்தது சினிமா தொடங்கும் நேரம் கடந்துவிட்டது என்று. “வேகம் வாடா” என்று என்னை இழுத்துக்கொண்டு ஓடத் தொடங்கினார். சூழ்ந்த இருட்டில் தட்டித் தடுமாறிக் கொட்டகைக்குள் சென்றமர்ந்தோம். ஜீசஸ் எனும் புராணப்படம். நான் பார்த்த முதல் வண்ணப் படமும் அதுவே. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு என்று சொன்னாலும் அதில் சலோமியாக வந்த ஜெயலலிதாவும்* மத்தலநாட்டு மேரியாக நடித்த உஷாகுமாரியும்** கால்களைத் தூக்கித் தூக்கி உல்லாச நடனமாடினர். பளபளத்த ஆடைகளில் ஆட்டமும் பாட்டமும் நகைச்சுவைகளுமாகப் பாத்திரங்கள் கலகலப்பாகத் தோன்றினர். அந்தப் பலவண்ணக் காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்துப்போயின.

அன்றிரவு வீடு திரும்பும் வழியில் இரட்டையார் நிர்மலாவிலிருந்து  ‘அபராதி’ எனும் படத்தையும் எனக்குக் காட்டினார் அப்பா. பிரேம் நஸீர், ஷீலா, மது, ஜெயபாரதி என அக்காலத்தின் முன்னணி நடிகர்கள் பலர் அப்படத்தில் இருந்தனர். அப்போதைய ஆஸ்தான குழந்தை நட்சத்திரங்களான மாஸ்டர் ரகுவும் பேபி சுமதியும் முக்கியப் பாத்திரங்கள். ‘மாமலையிலே பூமரம் பூத்தநாள், முரளீதரா முகுந்தா…’ அப்படத்தின் பாடல்கள் என்னை ஆழமாகப் பாதித்ததன் காரணம் சலில் சௌத்ரியின் விசேஷ இசைதான் என்று அப்போது எனக்குப் புரியவில்லை. சில நாள்கள் கழித்து ஓர் இரவில் ஏதோ பயணம் முடித்து அப்பாவும் நானும் திரும்பி வரும் நேரத்தில் செட்டிக்கவல பிந்துவில் இரண்டாம் ஆட்டம். “ஒனக்கு சினிமா பாக்கணுமா?” எதிர்பாராமல் அப்பாவின் கேள்வி. வேண்டாம் என்று நான் சொல்லவே மாட்டேனே! ‘பிரேம சில்பி’ என்று ஒரு படம். மிகவும் அசிங்கமான படமாக எனக்குத் தோன்றியது. ஓர் அப்பாவும் மகனும் ஒன்றாக அமர்ந்து பார்க்க முடியாத அளவிற்குக் கடுமையான காதல் காட்சிகள். இனம்புரியாத அருவருப்பு ஒன்று எனக்குள்ளே புகுந்தது. அப்பாவும் அதை உணர்ந்திருக்கலாம். படம் முடியும்முன்னே வெளியே வந்தோம். அதன்பின் அப்பாவும் நானும் சேர்ந்து ஒருபோதும் ஒரு திரைப்படத்தைப் பார்த்ததில்லை.

ர்களின் சில பகுதிகளில் மின்சார வசதி வந்தபோது, அங்கு கொட்டகைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. பள்ளிக்கூடங்களில் காட்டப்படும் பதினாறு அங்குலப் படங்களின்மேல் எங்களுக்கு இருந்த நாட்டம் குறைந்தது. பள்ளிக்கூடப் படங்கள் குழந்தைகளுக்கானவை. நாங்களோ வேகமாக வாலிபத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் ஆண்கள். ஆண் ஒருத்தன் கொட்டகையில்தானே படம் பார்ப்பான்? செட்டிக்கவலயில் முன்சொன்ன ‘பிந்து’ கொட்டகை வந்த காலம் அதுதான். பிந்துவுக்கு எங்கள் வீட்டிலிருந்து வெகு தூரமில்லை. ஓலைக் கொட்டகையானாலும் பிந்துவின் ஒலியும் ஒளியும் அப்பகுதிகளின் எல்லாக் கொட்டகைகளையும்விடச் சிறப்பாக இருந்தது. எனது வீட்டைவிட நான் பிந்துவை நேசித்தேன். பல மலைக் கிராமங்களுக்கான ஒரேயொரு சினிமாக் கொட்டகை. தினமும் ஏழு மணிக்கு முதல் ஆட்டம். பத்து மணிக்கு இரண்டாம் ஆட்டம். சனி ஞாயிறு நாள்களில் பிற்பகல் மூன்று மணிக்கு மாற்றினி (மேட்னி) உண்டு. அந்த வார இறுதிகளில் மதியம் ஒரு மணிக்கே யாரிடமும் சொல்லாமல் நான் வீட்டைவிட்டு வெளியேறி மலைப் பள்ளங்களின் ஒற்றையடிப் பாதைகளில் வேகமாக நடந்து செல்வேன். பிந்துவை நெருங்கிய பிறகுதான் மூச்சுவிழும். கூம்புவடிவக் கோளாம்பிகளில் பாடல்கள் ஆரம்பித்திருக்காது.

ஈரோலி அப்பச்சன் எனும் கிறிஸ்தவர்தான் பிந்துவின் உரிமையாளர். ஆதலால் முதல் பாடல் கிறிஸ்துவுக்கு. ‘கால்வரிக் குந்நிலே கண்ணீரு நம்மள்...’ பாடியவர் ஜெயச்சந்திரன். அடுத்து யேசுதாஸ் பாடும் ‘சபரிமலையில் தங்கச் சூரியோதயம்...’ அது ஐயப்ப சாமிக்கு. எங்கள் ஊர்களில் இஸ்லாத்தினர் குறைவு. இருந்தாலும் அடுத்த பாடல் அல்லாவுக்குத்தான். ஆயிஷா பேகம் பாடிய  ‘முத்து ரசூலின்டெ உம்மத்தி...’ அதன்பின், நான் கேட்கத் துடித்துக்கொண்டிருக்கும் மலையாளம், தமிழ், ஹிந்தி சினிமாப் பாடல்கள் ஒன்றொன்றாக ஒலிக்கும். நாட்டுப் பாதைகளினூடாக மக்கள் கூட்டமாக வந்து உந்தித் தள்ளிச் சீட்டெடுத்து உள்ளே செல்வார்கள். வெளியே உள்ள கோளாம்பிகளிலிருந்து பாடல்கள் உள்ளேயுள்ள ஒலிபெருக்கிக்கு மாறும்போது நான் வீட்டை நோக்கித் திரும்பி நடப்பேன். உள்ளே சென்று படம் பார்க்க அளப்பரிய ஆசை இருக்கும். ஆனால் வாய்ப்பில்லை. தரித்திர நிலை.

ஏலக்காய்த் திருடர்கள்

பள்ளிக்கூடப் படங்களைப் பார்க்கத் தேவயானதைவிட இரண்டு மடங்குப் பணம் கொட்டகைப் படங்களைப் பார்க்கத் தேவைப்பட்டது. நிலத்தில் விளைந்து நிற்கும் பழுக்காய்ப் பாக்கு, மூங்கில் பாயில் வெய்யில் காயும் மிளகு, பச்சை ஏலக்காய் போன்றவை யாருக்கும் தெரியாமல் சுருட்டினால் படம் பார்க்க பணம் கிடைக்குமே என்று சாத்தான் ஆலோசனை வழங்கினான். “திருடறது தப்பில்லையாடா?” என்று கேட்ட என்னை “நம்ம நெலத்திலேந்து நாம ஏதாச்சும் எடுத்தா அது திருட்டாடா?” என்ற மறுகேள்வியால் வாய் பொத்தினான். சாகசக் காரியங்களுக்குச் சற்றும் தைரியமில்லாதவன் நான். மரங்களில் ஏறும்போதும் திருட்டுத்தனங்கள் செய்யும்போதும் ஒரே தாளத்தில்தான் எனது கால்கள் நடுங்கின. ஆனால், அடிதடி சினிமாக்களை நேசித்த சாத்தானுக்கு ஆரோக்கியமும் தைரியமும் இருந்தது. மரம் ஏறுதல், திருட்டுப் பொருள்களை மறைத்தல் என அனைத்துமே அவன் ஏற்றுக்கொண்டான். நான் உடன் இருந்தால் மட்டும் போதும். அக்காலத்தில் கட்டப்பனையில் நவீன வசதிகளுடன்  ‘சாகரா’ எனும் புதுக்கொட்டகை கட்டப்பட்டது. முதல் படம் பிரேம் நஸீரும் ஜெயனும் லதாவும் நடிக்கும் ‘லவ் இன் சிங்கப்பூர்’. சிங்கப்பூரை எப்படியாவது பார்த்தே ஆக வேண்டும்.

பழுக்காய்ப் பாக்கைப் பறித்தெடுக்க வழியில்லை. பாக்கு மரங்கள் மழைத்தண்ணி வழிந்து, பாசிக்காளான் பிடித்து வழுவழுத்துக் கிடந்தன; நிழற்காடு மூடின. எங்களது ஏலத் தோட்டத்திற்குள் சாத்தானும் நானும் புகுந்து பதுங்கினோம். “இது பொட்டு, இது காய், இது கருங்காய், இது பளம்” எனச் சொல்லிக்கொண்டு ஓர் ஏலக்காய் நிபுணரைப்போல் மெதுவாக எண்ணியெண்ணிக் காய் எடுக்கிறான் சாத்தான். அருகிலுள்ள வயல்களிலும் தோட்டங்களிலும் பல ஆள்கள் வேலை செய்கிறார்கள். யாராவது எங்களைப் பார்த்தால் எல்லாமே முடிந்துவிடும். வேலையை விரைவில் செய்துமுடிக்க எனக்கு ஒரு வழி தெளிந்தது. ஏலச் செடியின் சரங்களை அடியோடு அறுத்து எடுப்பது. ஆண்டு முழுவதும் ஏலம் பூப்பூத்து காய்கள் ஆவது அந்தச் சரங்களின்மேல்தான். ஆனால், அது எதுவுமே யோசிக்காமல் ஏலச் சரங்களை மொத்தமாகப் பறித்தெடுத்து சாத்தானின் வீட்டுப் பக்கம் உள்ள எழுகுப்புல் காட்டிற்குள் பதுக்கினோம். பூவும் பிஞ்சும் எல்லாம் சேர்ந்த காய்களை அறுத்து செட்டிக்கவலயில் கொண்டுசென்று விற்றோம். எங்களைப் போன்ற திருட்டுப் பயல்கள் தங்களது வீடுகளிலிருந்து சுட்டுக்கொண்டு வரும் மலை நறுமணச் சரக்குகளைக் குறைந்த விலையில் வாங்கும் நம்பிக்கையான ஒரே நிறுவனம் அங்குதான் இருந்தது.

கிடைத்த காசை வாங்கிக்கொண்டு கட்டப்பன சாகராவிற்குப் பறந்தோம். வாழ்க்கையில் முதன்முதலாகக் காரைச் சுவர்களும் காரை மேற்கூரையும்கொண்ட ஒரு கொட்டகையைப் பார்த்தோம். ஆனால், அதைக் கொட்டகை என்றல்ல தியேட்டர் என்றுதான் சொல்லவேண்டுமாம். வெள்ளித் திரைக்கு முன்னால் ஜிமிக்கி விளக்குகள் தொங்கும் சிவப்புத் திரைச்சீலை. படம் தொடங்கும்முன் ஆங்கிலப் பாடலின் தாளத்தில் அத்திரைச்சீலை விலகி மேலே செல்கிறது. நுரைமெத்தை போன்ற இருக்கைகள். புகைப்பிடித்தல் முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டிருக்கிறது. சங்கர் கணேஷின் இசையில் ‘சாம் சச்ச சோம் சச்ச சும்மரு சச்ச சாம்’ என்ற கவித்துவமான பாடலுக்கு ஜெயனும் ஒரு சிங்கப்பூர் நடிகையும் கால்தூக்கி ஆடும் பாடலுடன் தொடங்கிய லவ் இன் சிங்கப்பூரை நாங்கள் பார்த்து ரசிக்கும் நேரத்தில் எங்கள் கிராமத்தில் பெரும் குழப்பம் நிலவியது. ஏலத் தோட்டங்களிலிருந்து சரம் அறுத்து காய் திருடும் ஈவு இரக்கமில்லாத திருடர்களைப் பற்றியான பேச்சு மட்டும்தான் எங்கும் ஓடியது. சில நாள்களுக்குள் சாத்தானின் வீட்டுப் பக்கம் எழுகுப்புல் காட்டில் கருகிக் கிடந்த ஏலச் சரங்கள் கண்டெடுக்கப்பட்டன. சாத்தான் உடனடியகப் பிடிபட்டான். முதல் அடியிலே எல்லாவற்றுக்கும் காரணம் ‘சாஜி’தான் என்று என்னைக் காட்டிக்கொடுத்தான். கொடூரமான அடிஉதைகளுக்கு ஆளானோம். “சாத்தானும் சாஜியும் நல்ல தங்கமான பசங்க” என்ற எங்களின் நற்பெயர் ஊரெல்லாம் பரவியது.

பிந்துவில் ஓடின ‘ஈற்றா’ எனும் படம் யாருடனோ சென்று பார்த்து வந்த சாத்தான்  ‘பயங்கரமான படம் டா... கமலாதாஸன் ஷீலாவே புறம் தேச்சுக் குளிப்பாட்டிவிடறான். காமெடிக்காரன் பப்பு ஒரு காட்டு யானைய பாறைன்னு நெனச்சு அதுமேலே அடுப்பு வெச்சு கஞ்சி காச்சுறா...” என்றெல்லாம் சொல்லி என்னை உசுப்பேற்றினான். என்னைக் கூட்டிச் செல்லாததற்கு நான் சத்தம் போட்டபோது மீண்டும் ஒருமுறை எனக்காக ஈற்றா பார்க்கலாம் என்றான். ஆனால், பணம்? வளைந்த ஒரு கத்தியுடன் பழுக்காய் பறிக்க அவர்களது நிலத்தில் உள்ள மிக உயரமான ஒரு பாக்கு மரத்தின்மேல் வலிந்து ஏறினான். வளைந்து ஆடும் ஒல்லியான மரத்தடியில் இடது கையால் அள்ளிப் பிடித்துக்கொண்டு வலது கையிலுள்ள கத்தியால் பாக்குக் குலையை அறுத்து இழுத்தான். சரியாக வெட்டப்படாத குலை மரத்தின் மேல் இறுகப் பற்றி நின்றது. தன்னையறியாமல் மரத்திலிருந்து கைவிட்ட சாத்தான் இரண்டு கைகளைக்கொண்டும் பாக்குக் குலையைப் பிடித்து இழுத்தான். சட்டென்று பிரிந்துவந்த குலையுடன் அய்யோஓஓஓஓஓ… அம்மோஓஓஓஓஓஓ… என்ற நீண்ட அலறலுடன் கீழ்நோக்கி வந்து  ‘பொத்துக்கோ’ என்று தரையில் அடித்து விழுந்தான். சற்று தூரமாக நின்று எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த நான் ஓடி வருவதற்குள் சாத்தானின் அப்பாவும் அம்மாவும் ஓடிவந்தனர். தண்ணீர் நிரம்பிக் கிடந்த ஒரு பாக்குமரப் பாளையில்தான் வந்து விழுந்திருந்தான். ஒரு வழிந்த மஞ்சள் சிரிப்புடன் “எனக்கு ஒண்ணுமே ஆகல” என்று எழுந்து அமர்ந்தான். அவன் விழுந்த இடத்திலிருந்து இரண்டு அங்குலம் மட்டும் தள்ளி வெட்டப்பட்ட ஒரு சிறு மரத்தின் நடுத்தண்டு கூரிய வேல்போல் துருத்தி நின்றது.

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 2 - ஷாஜி

ள்ளிக்கூடப் பகல் காட்சிகளுக்குச் சிறுவர்களைத் தவிர யாருமே வரமாட்டார்கள் என்றானது. ஆனால், அக்காலத்தின் பெரும்பாலான படங்கள் சிறுவர்களுக்குக் காட்டமுடியாத அளவில் காதல், காம, கற்பழிப்பு, அடிதடி வெட்டுக்குத்து காட்சிகளால் நிரம்பியிருந்தன. இக்காரணங்களால் என நினைக்கிறேன், பள்ளிக்கூடங்களில் சினிமாத் திரையிடல்கள் குறைந்து, கோவில் உற்சவங்களுக்கும் தேவாலயப் பெருநாள்களுக்கும் இரவுக் காட்சிகளாக அப்படங்கள் இடம்பெயர்ந்தன. ஸ்ரீதேவி முதன்முதலில் கதாநாயகியாக நடித்த ‘நாலுமணிப் பூக்கள்’ எனும் படம்,  ‘அஜயனும் விஜயனும்’, ‘விஜயனும் வீரனும்’,   ‘மல்லனும் மாதேவனும்’ என ஒரே பாணிப் பெயர்கள்கொண்ட பல படங்கள் போன்றவற்றை நான் கோவில் மைதானங்களிலோ தேவாலய முன்றில்களிலோதான் பார்த்தேன்.

பேபி சூப்பர் ஸ்டார்

கொச்சுகாமாட்சி தேவாலயப் பெருநாளில் ‘தெம்மாடி வேலப்பன்’ எனும் அடிதடிப் படம் திரையிடப்பட்டது. பிரேம் நஸீருக்கும் முதலாளியின் அடியாள்களுக்கும் இடையே அனல்பறக்கும் சண்டை. ஒரு பத்துப் பேரைக் கிடைத்தால் நஸீரை நகலெடுத்து அவர்களை அடித்துத் துவைக்கலாமே என்று ஆவேசப்பட்டு நான் நிற்கும்போது, அதோ திரைக்கு முன்னால் யார் யாரெல்லாமோ குதித்து பெரும் அடிதடியைத் தொடங்கினர். என்போல் சினிமா சண்டை பார்த்து ஆவேசமடைந்த யாரோ சிலர் அடித்துக்கொள்கிறார்கள் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால், ஊர் மக்கள் அனைவரும் காணும் வகையில் ஒரு பழிவாங்குதல்தான் அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தது. சினிமா நிறுத்தப்பட்டு விளக்குகள் எரிந்தன. சைமண்டி எனும் ஒருவரை நான்கு அண்ணன் தம்பிகள் சேர்ந்து அடித்து ஒடுக்குகிறார்கள். வாயிலிருந்து வழியும் ரத்தமும் எச்சிலுமாக சைமண்டி மிகவும் சோர்ந்துவிட்டார். ஆனால், அடிக்காரர்கள் அடித்துக்கொண்டேயிருந்தனர். யாருமே அவர்களைத் தடுக்கவில்லை. திடீரென்று எங்கள் ஊரின் ஆஸ்தான இசை, கதாப்பிரசங்கக் கலைஞனான காரப்பாட்டு பேபி களத்தில் குதித்து, “இவன இனி ஒரு பய தொடக் கூடாது’ என்று அலறினார். அடி நின்றது. அடிக்காரர்கள் பதுங்கி அங்குமிங்கும் மறைந்தனர். சைமண்டியை அங்கிருந்து காப்பாற்றிக் கொண்டுபோனார் பேபி. சினிமாவில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் அவ்வப்போது கதாநாயகர்கள் அவதரிப்பார்கள் என்று அச்சம்பவம் எனக்குச் சொல்லியது.

பதினோரு வயதிருக்கும்போது, எட்டாவது படிப்பதற்கு எட்டு மைல் தொலைவிலுள்ள இரட்டையாற்றின் புனித தோமையார் பள்ளியில் சேர்ந்தபோதுதான் எனது சினிமா வெறி எல்லையைக் கடந்தது. எட்டாவது படிப்பதற்கு பதிமூன்று வயது தேவை அல்லவா? ஆனால், மூன்று வயதில் ஐந்து வயது என்று சொல்லிப் பள்ளியில் சேர்த்தமையால் பதினோறு வயதிலேயே எட்டாவதுக்கு வந்தேன். என்னைவிட இரண்டு மூன்று வயது அதிகமிருப்பவர்களும் என்னைவிட சினிமாப் பைத்தியம் தலைக்கு ஏறியவர்களுமான பல நண்பர்கள் அங்கே எனக்குக் கிடைத்தனர். பி.கே.விஜயன், ஜெயனின் தீவிர விசிறி. நெடும்பதாலிக்கு சோமன்தான் ஆகச் சிறந்த நடிகர். சோமனுக்கு எதிராகப் பேசுபவர்களை அடிக்க எந்நேரமும் சித்தமாக இருந்தான். லைச்சன் என்ற பிரியனின் பிரிய நடிகன் சுகுமாரன்.*** ஆனால், எந்தப் படம் பார்க்கவும் அவன் தயாராகயிருந்தான். பிரியனும் நானும் பிரியாத நண்பர்கள் ஆனோம். அக்காலத்தில் பிரேம் நஸீரும் ஜெயனும் எனக்குப் பிரதானமாக இருந்தாலும் சோமன், சுகுமாரன், வின்சென்ட், ராகவன், சுதீர், ஜோஸ், ரவிகுமார் என யாராகயிருந்தாலும் சம்மதமாக இருந்தது. எப்படியாவது சினிமா பார்த்தால் போதும். இதழ்களிலிருந்து திரை நடிகர்களின் புகைப்படங்களை வெட்டியெடுத்துப் பள்ளிப் புத்தகங்களின்மேல் ஒட்டிவைத்து ஆசிரியர்களிடமிருந்து அடிக்கடி அடி வாங்குவதுதான் அப்போதைய எனது பிரதானப் பொழுதுபோக்கு.

பள்ளியிலிருந்து பார்வையெட்டும் இடத்தில்தான் ‘நிர்மலா’ கொட்டகை. பள்ளியின் சார்பில் அவ்வப்போது எங்களை அங்கே படம் பார்க்கக் கொண்டு செல்வார்கள். ஆனால், ‘ஹரிச்சந்திரா’,
‘பக்த குசேலா’, ‘ஸ்ரீராம பட்டாபிஷேகம்’, ‘குமார சம்பவம்’, ‘மிசிஹா சரித்திரம்’,  ‘வேளாங்கண்ணி மாதாவு’ போன்ற புண்ணிய புராணப் படங்களுக்கு மட்டும்தான்! ஒருமுறை விதிவிலக்காக  ‘சினேகம்’ எனும் ஒரு சமூகப் படத்தைப் பார்க்க அழைத்துச் சென்றனர். அதில் காதல், காமம், அடிதடி எதுவுமில்லை. கண்பார்வை இல்லாத ஒருவருக்கும் ஊனமுற்று நடக்கக் கஷ்டப்படும் ஒருவருக்கும் இடையேயான அன்பின், நட்பின் கதை. அந்தப் படமும் அதில் இடம்பெற்ற பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால், அப்படம் ‘தோஸ்தி’ எனும் பிரபலமான ஹிந்திப் படத்தின் தரக்குறைவான தழுவல் என்று குளத்துங்கல் குஞ்ஞு சொன்னார்.

குஞ்ஞு, குஞ்ஞச்சன், அச்சன் குஞ்ஞு, ஆன்ட்ரூஸ் என்று பல பெயர்களில் அறியப்பட்ட அவருக்கு எம்சன் என்று ஓர் ஆங்கிலப் பாணி புனைபெயரும் இருந்தது. அப்பெயரில் நாடகம், சிறுகதை, கவிதை, பாடல்கள் என எழுதுவார். கிராமத்து நாடகங்களில் நடிப்பார். ஓரளவுக்குப் பாடவும் செய்வார். அத்துடன் சகலமான திரைப்படங்களையும் பார்ப்பார். ஹிந்திப் படங்கள்தாம் அவருக்கு மிகவும் பிடிக்கும்.  ‘தோஸ்தி படம் ஒரு காவியம் என்று சொன்ன அவர், அதை இவ்வளவு கேவலமாக நகலெடுத்திருக்கக் கூடாது’ என்று கடுமையாகச் சாடினார். ‘சாஹூங்கா மே துஜே... கோயீ ஜப் ராஹ் ன பாயே...’ தோஸ்தி படத்தின் பாடல்களை அவர் எனக்குப் பாடிக் காட்டினார். சினிமாவின் மேலும் பாடல்களின் மேலும் எனக்கிருந்த பெரும் மோகம்தான் என்னைவிடப் பதினைந்து வயது அதிகமிருந்த குஞ்ஞையும் என்னையும் நண்பர்களாக்கியது. நாங்கள் ஒன்றாகச் சென்று பல திரைப்படங்களைப் பார்த்தோம். பார்க்கும் படத்தைப் பற்றியான விவரங்கள் அனைத்துமே தெரிந்து வைத்திருப்பார். நடிக, நடிகைகளின் வரலாறு, படத்தின் இசை மற்றும் பாடல்கள் சார்ந்த தகவல்கள் என அனைத்தும் குஞ்ஞுக்கு அத்துப்படி. சினிமா பற்றி எது கிடைத்தாலும் படிக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. ஹிந்தித் திரைப்படங்களுக்கும் ஹிந்திப் பாடல்களுக்கும் பின்னால் மந்திரித்து விட்டவனைப்போல் நான் அலையத் தொடங்கியதன் முக்கியத் தூண்டுகோல் குஞ்ஞு. அடிக்கடி ஹிந்திப் படங்கள் வரும் கட்டப்பன சந்தோஷ் கொட்டகை பெரும் தீச்சுவாலையில் பற்றியெரியத் தொடங்கியது அப்போதுதான்.

(தொடரும்…)

* ஜெ.ஜெயலலிதா

** தமிழில் வெண்ணிற ஆடை நிர்மலா.

*** இப்போதைய நாயகன் பிருத்விராஜின் தந்தை.