Published:Updated:

”எனக்கு நான் மட்டும் போதும்!” - கொரியாவை மாற்றியெழுதும் #Honjok லைஃப்ஸ்டைலுக்கு என்ன காரணம்?

”எனக்கு நான் மட்டும் போதும்!” - கொரியாவை மாற்றியெழுதும் #Honjok லைஃப்ஸ்டைலுக்கு என்ன காரணம்?

மொழி, கலாசாரம், பழக்க வழக்கங்கள் ஆகியவைதான் ஓர் இனத்தின் முக்கிய அடையாளங்கள். இவையாவுமே அதன் தன்மையை, முக்கியத்துவத்தை இழக்க நேரிடலாம் என அஞ்சுகிறார்கள். “சோ வாட்?” என அந்தக் கேள்வியை இரண்டே சொற்களில் உடைத்தெறிந்துப் போகிறார்கள் Honjoks.

Published:Updated:

”எனக்கு நான் மட்டும் போதும்!” - கொரியாவை மாற்றியெழுதும் #Honjok லைஃப்ஸ்டைலுக்கு என்ன காரணம்?

மொழி, கலாசாரம், பழக்க வழக்கங்கள் ஆகியவைதான் ஓர் இனத்தின் முக்கிய அடையாளங்கள். இவையாவுமே அதன் தன்மையை, முக்கியத்துவத்தை இழக்க நேரிடலாம் என அஞ்சுகிறார்கள். “சோ வாட்?” என அந்தக் கேள்வியை இரண்டே சொற்களில் உடைத்தெறிந்துப் போகிறார்கள் Honjoks.

”எனக்கு நான் மட்டும் போதும்!” - கொரியாவை மாற்றியெழுதும் #Honjok லைஃப்ஸ்டைலுக்கு என்ன காரணம்?

கொரிய மக்கள் நம்மைப் போன்றவர்கள்தான். குடும்ப அமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். சேர்ந்து வாழ்வதுதான் கொண்டாட்டம் எனத் திடமாக நம்புகிறவர்கள். ஆனால், இவையெல்லாம் விரைவில் “அந்தக் காலத்துல...” எனச் சொல்லும் நாஸ்டால்ஜியா கதைகளாக மாறிவிடக்கூடும் என அச்சப்படுகிறார்கள் அந்த நாட்டுச் சமூக ஆராய்ச்சியாளர்கள். காரணம், தென் கொரியாவில் வேகமாகப் பரவிவரும் Honjok கலாசாரம். இளைஞர்களிடம் வைரலாகப் பரவும் Honjok கொரியாவையே மாற்றியெழுதக்கூடும் எனக் கணிக்கிறார்கள். அது என்ன Honjok?

Hon என்றால் தனிமையில் வாழ்பவர் என்றும், Jok என்றால் பழங்குடியினர் என்றும் அர்த்தம் கொள்ளலாம். யாருடனும் சேர்ந்து வாழாமல் தனியே வாழ்பவர்களை ஹான்ஜாக் என்கிறார்கள். ஹான்ஜாக்-ல் 3 உட்பிரிவுகளும் உண்டு

hon-bap: சாப்பிடும்போது தனியே அமர்ந்து சாப்பிடுகிறவர்கள். நோ ஷேரிங். கொரியாவில் பல உணவகங்களில் இவர்களுக்கு ஏற்றது போன்ற இடங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

hon-sul: பாருக்குப் போனாலும் தனியேதான் சொல்வார்கள் சியர்ஸ் சொல்ல வேண்டிய தேவையே இல்லாதவர்கள்.

Hon-nol: தனிமையில் இருந்தாலும் தனியே உணராத நல்லவர்கள்.

ஒரு வீடு ஓரே ஆள்:

இப்படி சிலரை நாம் பார்த்திருக்கலாம். அஞ்சலி படத்தில் வரும் பிரபு கதாபாத்திரம் போல சினிமாவிலும், நிஜத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்த்திருக்கலாம். ஆனால் கொரியாவில் இந்த எண்ணிக்கை மலைக்க வைக்கிறது. 24% வீடுகளில் ஒரேயொருவர் மட்டும்தான் வசிக்கிறாராம். 2020-ல் இந்த எண்ணிக்கை 30 சதவிகிதத்தைத் தாண்டும் எனக் கணித்திருக்கிறார்கள்.

தனியே வாழ்பவர்களுக்குப் பல காரணங்கள் உண்டு. உண்மையிலே, உடன் யாருமே இல்லாமல் தனியே வாழ்பவர்கள். இவர்கள் எல்லா காலத்திலும் இருப்பதுண்டு. அடுத்து, வேலை நிமித்தம் வெளியூருக்குச் சென்று வாழ்பவர்கள் இவர்கள் உலகமயமாக்கலுக்குப் பிறகு கொஞ்சம் அதிகமாகினர். ஆனால், Honjok என்பது தனியே வாழ்வதை தங்கள் தேர்வாகக் கொண்டவர்கள். தனியே வாழ்வதற்காகவே குடும்பத்தை விட்டுப் பிரிந்து வந்தவர்கள். இவர்களுடன் யாராவது சேர்ந்துவாழ விரும்பினாலும் வேண்டாம் எனச் சொல்கிறவர்கள். இந்த எண்ணம்தான் கொரியாவைப் பயமுறுத்துகிறது.

நம்ம ஊரிலும் இப்படி வாழ்பவர்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் மதன். மதனிடம் பேசினேன்.

“நான் 2 வருஷமா தனியாதான் வாழுறேன். நல்ல வசதியான அபார்ட்மெண்ட்தான். ஆபீஸ்ல கூட வேலை செய்றவங்க நிறைய பேர் வீடு ஷேர் பண்ணிக்கலாமான்னு கேட்டாங்க. எனக்கு ஒத்து வரல. எல்லா காலத்திலும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான். ஆனால், சமீபகாலமாதான் நாம நிறைய வேலை செய்றோம்; சமூகத்தோட இணைஞ்சிருக்கோம்னு நினைக்கிறேன். அதனால, நமக்காக நாம செலவு பண்ற நேரம் குறைஞ்சிருக்கு. உண்மையச் சொல்லப் போனா அப்படி நமக்கான நேரத்தை நாம கொடுக்கறதே இல்லை. எப்பவும் நம்ம கூட யாராவது இருக்காங்க. அவங்களோட இன்ஃப்ளூயன்ஸ் நம்மகிட்ட அதிகமா இருக்கும். அதாவது, நான் நானாவே இருக்க முடியாது. ஆபீஸ்ல ஏசி குறைச்சா “அது உனக்கு இல்லை.. கம்ப்யூட்டர் சூடாகாம இருக்க”ன்னு போட்டுவிடுறாங்க. டி.வி பார்க்க உட்க்கார்ந்தா கிரிக்கெட் மேட்ச் போறப்ப சூப்பர் சிங்கர் வைச்சிடுறாங்க. சாப்பிடலாம்னு வெளிய போனா தாய் ரெஸ்ட்டாரண்ட்டுக்கு கூட வர மாட்றாங்க. படம் பாக்க போனா பேய்ப்படங்களாதான் செலக்ட் பண்றாங்க. இப்படி எல்லா இடத்திலும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு வாழ வேண்டியிருக்கு. வீட்டுக்குள்ல வந்தாலும் நம்ம இஷ்டப்படி இருக்க விடுறாங்களா? அட்ஜஸ்ட் பண்ணி போறதுல எனக்குப் பிரச்னை இல்லை. ஆனா, 24 மணி நேரமும் இப்படியே இருந்தா என் இஷ்டப்படி நான் எப்ப வாழுறது? அதான் தனியே இருக்கேன். வீட்டுக்குள்ள போயிட்டா என் உலகம் என் இஷ்டப்படி. யாருமே கேட்க முடியாது. இது எனக்கு அதிக உற்சாகத்தையும் எனர்ஜியையும்தான் தருது. நெகட்டிவ்னு இந்த லைஃப் ஸ்டைல்ல எதுவுமே இல்லை” என்றார்.

மதன் சொல்வதில் உண்மை இருக்கலாம். ஆனால், இந்தப் பழக்கம் என்ன மாதிரியான விளைவுகளைச் சமூகத்தில் ஏற்படுத்தும்? கொரிய ஆராய்ச்சியாளர்கள் இதன் பிரச்னைகளாக இரண்டு முக்கியமான விஷயங்களை முன் வைக்கிறார்கள். ஒன்று, பொருளாதாரம் சார்ந்தது. இன்னொன்று சமூகம் சார்ந்தது.

தனியே வாழ்பவர்கள் அதிகம் செலவு செய்வதில்லை. தங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே வாங்குகிறார்கள். தேவையில்லாமல் ஷாப்பிங் மால்கள், மார்க்கெட், தியேட்டர் என அலையாதவர்கள்; இவர்களுக்குச் சமூக அழுத்தம் எதுவும் கிடையாது. “எதிர் வீட்டுல இருக்கு, மேல் வீட்டுல இருக்கு, கீழ் வீட்டுல இருக்கு” என ஏமாற்றி எந்தப் பொருளையும் இவர்கள் தலையில் கட்ட முடியாது. ”இது தேவை” எனத் தாமாக தோன்றினால் மட்டுமே செலவு செய்வார்கள். இதனால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படலாம் எனக் கருதுகிறார்கள்.

அடுத்து, சமூக பிணைப்பு சார்ந்தது. சக மனிதன் மீதான நம்பிக்கையே குறையலாம். உரையாடல் நிகழாமல் போகலாம். அதனால், நாகரிக வளர்ச்சியே குறைந்து போகலாம் என்கிறார்கள். மொழி, கலாசாரம், பழக்க வழக்கங்கள் ஆகியவைதான் ஓர் இனத்தின் முக்கிய அடையாளங்கள். இவையாவுமே அதன் தன்மையை, முக்கியத்துவத்தை இழக்க நேரிடலாம் என அஞ்சுகிறார்கள். “சோ வாட்?” என அந்தக் கேள்வியை இரண்டே சொற்களில் உடைத்தெறிந்து போகிறார்கள் Honjoks. 

இந்த வாழ்க்கைமுறைக்கு ஆண், பெண் என்ற பேதமில்லை. ஆனால், பாதுகாப்பு பிரச்னை அதிகமிருக்கும் இந்தியா போன்ற நாட்டில் பெண்கள் விருப்பமிருந்தாலும் இந்த வாழ்க்கைமுறைக்கு வருவது குறைவுதான். ஆனால், தென் கொரியாவில் பெண்களும் நிறைய பேர் இப்படி வாழ்கிறார்கள். அவர்களின் பொருளாதார மேம்பாடும், பாதுகாப்பு வசதிகளும் காரணமாக இருக்கலாம். 

கேட்ஜெட்ஸ், சமூக வலைதளங்கள் ஆகியவை இந்தக் கலாசாரம் பரவுவதற்கு கிரியா ஊக்கியாகச் செயல்படுகின்றன என்று சொல்லலாம். எந்த நொடியும் மொபைல் வழியே இந்த உலகுடன் உரையாடலாம்; இணைந்துகொள்ளலாம் என்ற நம்பிக்கை அவர்களைத் தனியே வாழும் நம்பிக்கையைத் தருகிறது. அழுத்தம் நிறைந்த இந்த உலகில் எல்லாமே தற்காலிகம் என நம்பும் இவர்களுக்கு, எந்த கமிட்மெண்ட்டும் இல்லாத, அந்தந்த நேரத்துத் தேவையை தீர்க்கும் விஷயங்களும், உறவுகளும் இணையம் மூலம் சாத்தியமாவதை கவனத்தில் கொள்ளலாம். டேட்டிங் ஆப்ஸ்தான் காதலிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தன என்ற குற்றச்சாட்டையும் இங்கே நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. வீக் எண்டை செலவு செய்ய ஒரு பார்ட்னர் தேவையென்றால், அதை வெள்ளி இரவு தேடத் தொடங்கினால் கூட போதும் என்ற நிலை இருக்கிறது. திங்கள் அந்த பார்ட்னரின் மொபைல் எண்ணையே கூட அழித்துவிடலாம். அந்த கமிட்மெண்ட் 2 நாளுக்கு மட்டுமே. இது போன்ற சாத்தியங்களும் தனியே வாழ இளைஞர்களை உந்தித் தள்ளுவது உண்மை. 

மேற்கத்திய கலாசாரத்தில் இது போன்று வாழ்பவர்கள் இயல்பிலேயே அதிகம். அதற்கு அவர்கள் குடும்பமும் தயாராகவே இருக்கிறது. ஆனால், ஆசியாவில் அப்படியில்லை. கொரிய தாய்மார்கள் இதுபற்றி கவலைகொள்கிறார்கள். இந்திய அம்மாக்களும் இதுபற்றி கவலைகொள்ளும் நாள்கள் தொலைவிலில்லை என்றே தோன்றுகிறது. உடனே இல்லையென்றாலும் Honjok இந்தியாவிலும் பிரபலமாகக்கூடுமென்றே கருதுகிறேன். ஜப்பானில் பரவிவரும் மினிமலிஸ்ட் லைஃப்ஸ்டைலுக்கும் இதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

இந்த வாழ்க்கைமுறை சரி, தவறென யாரும் தீர்ப்பு எழுதிவிட முடியாது; கூடாது. ஆனால், இப்படியொரு விஷயம் உலகில் மாறிவருகிறது என்பதை எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.