Published:Updated:

சர்வைவா - 23

சர்வைவா - 23
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வைவா - 23

அதிஷா - ஓவியம்: கோ.ராமமூர்த்தி

திர்காலத்தில் வங்கிக் கடன் வாங்குவது அவ்வளவு சுலபமாக இருக்காது.  `இப்பவே அப்படித்தான் இருக்கிறது’ என்கிற மனக்குரல்கள் கேட்கின்றன. இப்போதாவது மனித அதிகாரிகள் கொஞ்சம் அலையவிட்டாலும், அழவிட்டாலும், அந்த டாகுமென்ட் இந்த டாகுமென்ட் எனக்  கதறவிட்டாலும் கடைசியில் கொடுத்துவிட வாய்ப்பிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் மனிதர்களின் இடையூறுகள் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு எந்திரங்கள்தான் கடன் கொடுப்பது குறித்து முடிவெடுக்கும். அல்லது முடிவெடுப்பதில் முக்கிய ஆளாக இருக்கும். சொந்தக்காரன், வேண்டப்பட்டவன் பார்க்காது; கட்டிங்  கொடுத்தாலும் காரியம் நடக்காது, நேர்மையோ நேர்மைதான். நாம் யார், என்ன செய்கிறோம், குணநலன்கள் என்ன, எப்படிப்பட்ட ஆள் நாம், மான மரியாதைக்கு அஞ்சுகிறவரா, பழைய ரெக்கார்டுகள் சொல்லும் செய்தி எல்லாம் பார்த்து அனலைஸ் பண்ணித்தான்  லோன் அப்ரூவல் பண்ணும். நாம் எப்போதோ ஆதியில் செய்த ஒரே ஒரு பிழைகூட உங்களுக்கான கடனைத் தரவிடாமல் செய்துவிடும். 

சர்வைவா - 23

``வாவ்டா... அப்போ இனிமே மல்லையாக்கள் ஏமாற்ற முடியாதில்ல!’’ என்று துள்ளிக்குதிக்க வேண்டாம். நிரவ் மோடிகள் உருவாவதில்லை... உருவாக்கப்படுகிறார்கள். மல்லையாக்களும் நிரவ் மோடிகளும் சிந்து சமவெளி காலத்திலிருந்தே தப்பிப்பிழைக்கிற திருடாளி வர்க்கம். ஆபத்து, அச்சுறுத்தல் எல்லாம் நம்மைப்போன்ற உழைக்கும் ஏழைபாழைகளுக்குத்தான். அப்பா செய்த பிழைக்காக மகனுக்குக்  கல்விக்கடன் கிடைக்காமல் போகலாம், மகனுடைய தவற்றுக்காக  அப்பாவுக்கு வீட்டுக்கடன் மறுக்கப்படலாம்... காரணம், உங்களை ஆராய்வதென்பது உங்களுடைய குடும்பத்தையும் உங்கள் நண்பர்களையும் சேர்த்துத்தான்.

கடனில் மட்டுமல்ல மாற்றம், எதிர்காலத்தில் வங்கிகளே இருக்கப்போவதில்லை. வங்கிச்சேவைகள் வேறு மாதிரியாக இருக்கும். பாஸ்புக் கொண்டுவரலையா என முறைக்கிற அதிகாரிகள் மறைந்துபோவார்கள். “ஸ்லிப் எப்படி எழுதணும்னுகூடத் தெரியாம வந்துர்றாங்க” எனச் சலித்துக்கொள்கிற காட்டன் புடவை மேடம்களை சந்திக்கத் தேவையிருக்காது. ஃபார்ம் பில் பண்ண பேனாவுக்கு அலையத் தேவையிருக்காது... ஏன்... வங்கிகளே இருக்காது.

மெய் நிகர் வங்கிகள்தான் எதிர்காலம்

எதிர்காலத்தின் வங்கிகள் முழுக்கவே செயற்கை நுண்ணறிவுத்துறையினால்தான் செயல்படும் என்கிறார்கள் ஃப்யூச்சரிஸ்டுகள். வங்கிகள் மட்டுமல்ல, பொருளாதார நிறுவனங்களும் மனிதர்களைவிட   AIகளையே சார்ந்து இயங்க ஆரம்பிக்கும். ஏற்கெனவே டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நோக்கி வங்கிகள் நகவர்வது ஒருபக்கம், கிரிப்டோ கரன்ஸிகளின் வரவு இன்னொருபக்கம், நம்முடைய பரிவர்த்தனைகள் எல்லாம் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரே இடத்தில் தகவல்களாகக் குவிவது என, வங்கிகள் ரொக்கமாகப் பணமே இல்லாமல் இயங்க ஆரம்பித்திருக்கின்றன. எதிர்காலத்தில் நமது கைப்பேசிதான் நம்முடைய வங்கிக்கான கிளையாக இருக்கும்.

எப்போதாவது நினைத்துப்  பார்த்திருப்போமா, வங்கிக்கே போகாமல் சென்னையிலிருக்கிற ஒருவர், டெல்லியில் இருக்கிற ஒருவருக்கு சொடக்குப் போடுகிற நேரத்தில் வாரத்தின் எந்த நாளும்  IMPS முறையில் பணம் அனுப்ப முடியும் என்பதை. அதுவும் நம்முடைய கைப்பேசி  வழியாக... நம்முடைய PAN எண்ணை மட்டுமே வைத்துக்கொண்டு நம்முடைய பொருளாதார ஜாதகத்தையே அலசி ஆராய்ந்து கிரெடிட் ஸ்கோர் கொடுப்பார்கள் என நினைத்திருப்போமா... இவற்றையெல்லாம் சாத்தியப்படுத்தியது கடந்த பத்தாண்டுகளின் மென்பொருள் துறை வளர்ச்சிதான். செயற்கை நுண்ணறிவுத்துறையின் வருகை இந்த மாற்றங்களையும்கூடப் புரட்டிப்போட இருக்கிறது.

சர்வைவா - 23நாம் அன்றாடம் பயன்படுத்துகிற வங்கிகளும் நிதி நிறுவனங்களும் ஏற்கெனவே செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. பிளாக்செயின் தொழில்நுட்பமெல்லாம் ஸ்டேட் பேங்கிற்கே வந்துவிட்டது. அதுதான் அடுத்த கட்டத்துக்கான ஆயத்தம்.

நிதி நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் செயற்கை நுண்ணறிவுத் துறை எப்படி உதவக்கூடும்... செயற்கை நுண்ணறிவுத்துறையின் முக்கியப் பங்காளியான மெஷின் லேர்னிங்தான் வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் பெரிய மாற்றங்களைச்  செய்யப்போகிறது.

பித்தலாட்டங்களைக்  கண்டறிதல் மற்றும் தவிர்த்தல் ( Fraud Detection and Prevention)

இனி எல்லாமே ஆன்லைனாக மாறும் என்னும்போது சைபர் க்ரைம் அபாயங்களும் அதிகமாகும் இல்லையா? அதிலிருந்தும் நம் பணத்தைக் களவுகளிலிருந்து காக்கிற எந்திரக்காவலர்கள் அவசியமாவார்கள். குறிப்பாக மொபைல் பேங்கிங் என்பது உலகின் அத்தனை ஆபத்துகளையும் கொண்ட ஒரு சேவை. அதிலிருந்து நம்மைக்  காப்பதுதான் இனி பெரிய சவாலாக இருக்கும். உலகெங்கும் அத்தகைய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. அமெரிக்காவைச்  சேர்ந்த  KOUNT அப்படிப்பட்ட மெஷின் லேர்னிங் எந்திரங்களை உருவாக்குகிறது. இந்த எந்திரங்கள் வங்கிப்பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து கவனித்து, ஏற்கெனவே நடந்த குளறுபடிகளை ஆராய்ந்து இனி மீண்டும் அப்படி நடக்காதபடி பார்த்துக்கொள்ளும்.

அன்டர் ரைட்டிங்

வங்கிகளுக்கும் நிதிநிறுவனங்களுக்கும் இருக்கிற பெரிய சவால், கடன்காரர்களிடம் இருந்து நம் பணத்தைக் காப்பதுதான். எந்த நிறுவனம் இந்த விஷயத்தில் கில்லியாக இருக்கிறதோ அதுவே சிறந்த நிறுவனம். காரணம் நம்முடைய பணத்தைத்தான்  வங்கிகள் கடனாக மற்றவர்களுக்குக்  கொடுக்கின்றன. அப்படிக் கொடுக்கிற கடன் மூலம் வருகிற வருவாயைத்தான் நமக்கு வட்டியாகத்  திருப்பித்தருகின்றன. அப்படி இருக்கும்போது நல்ல ஆட்களுக்குப் பணம் தரவேண்டும். வாராக்கடன்கள்தான் இந்திய வங்கிகளின் சாபக்கேடு. இந்தக் கணக்கிடலைத்தான் செயற்கை நுண்ணறிவு எந்திரங்கள் செய்யவிருக்கின்றன. யார் நல்ல வாடிக்கையாளர், அவருடைய கடன் வாங்கும் தகுதி என்ன, எவ்வளவு தொகை கொடுக்கலாம் என்பதை எல்லாம் கணக்கிடும் முறைதான் அன்டர் ரைட்டிங். 

சர்வைவா - 23

காப்பீட்டு நிறுவனங்களில் அன்டர் ரைட்டிங் என்பது ஒருவருக்கு அல்லது ஒரு நிறுவனத்துக்கு அல்லது ஓர் அமைப்புக்கு எந்த அளவுக்குக்  காப்பீடு கொடுக்கலாம், அந்தக்  காப்பீட்டுக்காக அவர் எவ்வளவு ப்ரீமியம் செலுத்தவேண்டும் என்பவற்றையெல்லாம் இந்த அன்டர் ரைட்டர்கள்தான் தீர்மானிப்பார்கள். உலகெங்கும் உள்ள இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் பெரிய பிரச்னை இந்த அன்டர் ரைட்டர்களின் சொதப்பல்தான். சரியான கணக்கிடல் என்பது பெரிய சவால். இந்த இரண்டு இடங்களிலும் சரியான தீர்வுகளைக் கொடுக்கிற அன்டர் ரைட்டிங் எந்திரங்கள் வரவிருக்கின்றன. இதன் மூலம் இரண்டு நல்ல விஷயங்கள் நடக்கும். தவறான ஆட்களுக்குக் கடன் கொடுக்க மாட்டார்கள். நேர்மையான ஆட்களுக்கு எளிதில் கடன் கிடைக்கும். அபாயம், மெஷினுக்கு ஏழையின் கண்ணீர், நேர்மையெல்லாம் தெரியாது; நம்முடைய அவசர ஆத்திரமெல்லாம் புரியாது. நம்மை எண்களால் கணக்கிட்டுக் கடன் தரும். இன்று சில அறமுள்ள வங்கி மேலதிகாரிகள் நம்முடைய நல்ல குணத்தைப் பார்த்துத் தொழிற்கடனெல்லாம் தருகிறார்கள் இல்லையா... அந்த வாய்ப்புகள் குறையும்!

வாடிக்கையாளர் சேவை

கஸ்டமர் கேர் என்பது முன்புபோல இல்லை. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக வங்கிக்கே போனில் அழைத்து விசாரிப்பது, அல்லது சாட்டிங்கில் தீர்வுகள் கேட்பது என்பதுதான் தற்போதைய நடைமுறை. இதற்கான மனிதவளம் என்பதும் அதற்கான செலவு என்பதும் மிகப்பெரியது. இந்த இடங்களில் எல்லாம் இனிவரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு எந்திரங்களைப் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள்.  `கஸிஸ்டோ’ என்கிற நிறுவனம் அப்படிப்பட்ட எந்திரங்களைத் தருகிறது. வாடிக்கையாளர்களோடு நிஜ மனிதர்கள் போலவே உரையாடி அவர்களுடைய பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லக்கூடியது இந்த கஸிஸ்டோ அஸிஸ்டென்ட்!  Natural language processing உதவியோடு இயங்குபவர்கள் இந்த வகை அஸிஸ்டென்ட்கள், அதனால் குரல் மற்றும் அவர்களுடைய உச்சரிப்பு எல்லாமே மனிதர்களைப்போலவே இருக்கும். இவைபோக அனேக சாட்பாட்கள் இப்போதே உலகெங்கும் பரவிக்கொண்டிருக்கின்றன. இவையும் சேர்ந்துவிட்டால் மனித கஸ்டமர்கேர் என்கிற விஷயமே மொத்தமாக அழிந்துபோக நேரிடலாம். 

பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லும் எந்திரங்கள் மட்டுமல்ல, வங்கியின் நல்ல புராடெக்ட்களை தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி அவற்றை விற்பனை செய்கிற தானியங்கி விற்பனைப் பிரதிநிதிகளும் வரவிருக்கிறார்கள். நம்முடைய கணக்கில் தீபாவளி போனஸ் விழுந்ததும், உடனடியாக வங்கியிலிருக்கும் எந்திரத்திடம் இருந்து அழைப்பு வரும், மியூச்சுவல் ஃபண்டில் காசு போடுங்கள் என்று.

போர்ட்போலியோ மேனேஜ்மென்ட்


எங்கு முதலீடு செய்வது, எதில் செய்வது, நம்முடைய இலக்குகளுக்கும் ரிஸ்க் எடுக்கிற தகுதிக்கும் ஏற்ப நமக்கு சரியான முதலீட்டு யோசனைகள் சொல்லுகிற ரோபோ - அட்வைஸர்கள் உருவாகத் தொடங்கியிருக்கி றார்கள். “உங்களுக்கு வயசாகிடுச்சு, நீங்க பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்யாதீர்கள், ஃபிக்ஸட் டெபாசிட்டே போதும்” என்று நம்முடைய வயது, வருமானம் எல்லாம் ஆராய்ந்து அறிவுரை சொல்லும். அமெரிக்காவைச் சேர்ந்த பெட்டர்மென்ட், வெல்த் ஃப்ரெண்ட் நிறுவனங்கள் எல்லாம் ஏற்கெனவே இப்படிப்பட்ட ரோபோ அட்வைஸர்களை அறிமுகப்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. 90களில் பிறந்த மில்லினியன்கள் பெரும்பாலும் மனித அட்வைஸர்களைவிட எந்திரங்களையே விரும்புகிறார்கள் என்பதும் சமீபத்திய ஆய்வுகளில் வந்திருக்கிற முடிவு.

டிரேடிங் அஸிஸ்டென்ட்கள்


பங்குச்சந்தையின் போக்கை முன்னறிந்து சொல்லுகிற, பங்குகளின் அன்றைய நாள் ஏற்ற இறக்கங்களைக் கணக்கிட்டு டெய்லி டிரேடிங்கில் உதவுகிற சிறந்த தானியங்கி ஆலோசகர்கள் வைத்திருக்கிற ஆலோசனை நிறுவனங்கள்தான் எதிர்காலப் பங்குச்சந்தையின் ராஜாக்களாக இருப்பார்கள். இதை  Algorithmic Trading என்கிறார்கள். அதன் அடுத்தகட்டம்தான்  HFT (High frequency trading). ஏற்கெனவே இவ்வகை அதிவேக டிரேடிங் எந்திரங்களை ரகசியமாக ஆலோசனை நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன என்கிறார்கள். எதிர்காலத்தில் அது வெளிப்படையாகவே நடக்கலாம். சென்றவாரம் நிதி ஆலோசனை நிறுவனங்கள் கால்பந்தாட்டக் கணிப்பு எந்திரங்களை உருவாக்குவதைப் பற்றிப் பார்த்தோமில்லையா... அதன் பின்னணி எல்லாம் இந்த டிரேடிங் அஸிஸ்டென்ட்கள்தான்.

பிட்காய்ன் மாதிரியான கிரிப்டோ கரன்ஸிகள் எல்லாம் செயற்கை நுண்ணறிவுதான் உருவாக்கியதாகச் சொல்கிறார்களே...? பிளாக்செயினுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் என்ன தொடர்பு? எல்லாம் அடுத்த வாரம்...

- காலம் கடப்போம்