
சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,
திசைவேழரின் கையுயர்வின் வழியே மேலெழுந்தது பேரோசை. தட்டியங்காட்டுப் போரின் இரண்டாம் நாள் தொடங்கியது. இனி ஒவ்வொரு நாளும் போர் முடிவுறும் நாழிகையின்போது போர்க்கள நிகழ்வுகளை உற்றுநோக்க வேண்டும். முதல் நாள் இழப்புக்கு வஞ்சினம் உரைத்தவர்கள், மறுநாள் பழிவாங்க அனைத்து வழிகளிலும் முயல்வார்கள். அவர்களுக்கான கடைசி வாய்ப்பாக, போரின் இறுதி நாழிகை இருக்கும். போர் முடிவுற்றதாக முரசுகள் ஒலி எழுப்பினாலும் அந்தக் கணத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவே முயல்வார்கள். எவன் ஒருவன் முரசோசைக்கு மதிப்புகொடுத்து ஆயுதத்தைத் தாழ்த்துகிறானோ, அவனே பாதிக்கப்படுகிறான். நேற்றைய போரில் தளபதி ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். அப்படியென்றால், இன்றைய போரில் அதற்குப் பலியெடுக்கப்படும். ஒருவேளை பகற்பொழுதில் அந்த வாய்ப்பு அமையாவிடின் கடைசி நாழிகையில் சதிகள் அரங்கேறத் தொடங்கும்.
நிலைமான் கோல்சொல்லிகளின் வேலை இனிமேல்தான் கடினமானதாக மாற இருக்கிறது. வேட்டை விலங்குகளை விதிமுறைகளைச் பேணச்செய்வது எளிதன்று. போர்க்களத்தில் எல்லோரும் வேட்டை விலங்குகள்தான். தனக்கான இரையைப் பற்றியிழுக்கக் கடைசிவரை முயல்வார்கள். அதுவும் கடைசிக்கணத்தில் மூர்க்கமேறிய பாய்ச்சல் இருக்கும். அப்போது ஒலிக்கும் முரசோசை செவிப்புலனுக்குள் நுழையாது. கொலைவெறி ஊறிய அவர்களின் கண்களுக்கு வேறெதுவும் தெரியாது.

போர்க்களம் முழுவதும் விதிகளின் வழியே காத்து நிற்பதுதான் நிலைமான் கோல்சொல்லிகளின் கடமை. முடிவுறும் நாழிகையில் கொலைவெறியை மறித்து நிறுத்தும் செயலில்தான் அவர்களின் திறன் இருக்கிறது. காற்றில் அங்குமிங்குமாக அம்புகளும் ஈட்டிகளும் பறப்பதன்று பிரச்னை. முரசோசையையே தனது திட்டத்தின் பகுதியாகத் தீர்மானித்துச் செயல்படுபவர்கள்தான் விதிமுறைகளைத் தகர்த்தெறிகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் நிலைமான் கோல்சொல்லியின் பார்வையெல்லைக்கு அப்பால்தான் தங்களின் திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள். திசைவேழர் முடிவுசெய்தார், `இனிமேல் நடுவில் இருக்கும் இந்தப் பரணில் மட்டும் இருப்பதில்லை. போரின் போக்கிற்கேற்ப முடிவுறும் நாழிகையின்போது வெவ்வேறு பரண்களின்மேல் ஏறி நின்று களத்தைத் துல்லியமாகக் கண்காணிக்க வேண்டும்.’
எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கையில் தட்டியங்காடெங்கும் வீரர்கள் போரிட்டுக்கொண்டிருந்தனர். ஒரு கணம் திகைப்புற்றார் திசைவேழர். `இத்தனை ஆயிரம் வீரர்கள் போரிடுவதைக் கண்கள் பார்த்தபடியிருக்க, எண்ணங்கள் தாம் செய்யவேண்டிய வேலையில் மட்டுமே கவனம்கொண்டிருக்கின்றன. போர்க்களத்துக்குரிய மனிதராக அவர் மாறிக்கொண்டிருந்தார். சரிந்துவிழும் எண்ணற்ற உடல்களைப் பார்க்காது கடப்பதைப்போலவே பார்த்துக் கடக்கும் மனநிலை உருவாகிறது. வீரர்கள் அனைவரும் இந்த மனநிலையில்தான் இருப்பார்கள். மரணத்தை மதிப்பற்ற ஒன்றாகக் கைக்கொண்டால் மட்டுமே போர்க்களத்துக்குரியவராக மாற முடியும். திசைவேழர் போர்க்களத்துக்கானவராக மாறியிருந்தார்.
நேற்றைய இழப்பின் தாக்கம் ஏதும் வேந்தர்படையில் இல்லை. தளபதிகள் பலருக்கும் இப்போது தெளிவு கூடியிருந்தது. சமதளப் போர்க்களத்தில் பறம்புவீரர்கள் வெளிப்படுத்தும் ஆற்றலைப் பற்றிய குறை மதிப்பீட்டிலிருந்து அவர்கள் மீண்டனர். நேற்றைய போரில் எதிரியைச் சரியான உத்திகளின் மூலம் சந்திக்கவில்லை. எளிதாக வெற்றியை எட்டும் மனநிலையிலேயே அவர்கள் போரைத் தொடங்கினர். ஆனால், இன்று அப்படியல்ல. எதிரியை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதைச் சாகலைவனின் மரணம் உணர்த்தியிருந்தது.
கருங்கைவாணனைப் பொறுத்தவரையில் தளபதிகளுக்கான தனித்த ஆணை எதையும் இன்று அவன் பிறப்பிக்கவில்லை. பொதுவான தன்மையிலான தாக்குதலுக்கே அவன் அனுமதி கொடுத்திருந்தான். அவனுக்கு நேற்றைய போர் ஒரு மதிப்பீட்டுக்களம்தான். எதிரிகள் செயல்படும் வேகத்தையும் அவர்களின் ஆற்றலையும் மதிப்பிட்டான். இன்றோ அவர்கள் சோர்வடையும் வரை தமது படைத் தாக்குதலை நிறுத்தாமல் தொடரவேண்டும் என்று கூறியிருந்தான். பறம்புவீரர்கள் முழு ஆற்றலோடு போரிடும் வரை அவர்களோடு தீவிரமாக மோதுவதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் சோர்வுறும் வரை நமது முன்னணிப் படையினர் விடாது மோதிக்கொண்டிருக்க வேண்டும். அதனால் ஏற்படும் இழப்புகள் ஒரு பொருட்டல்ல. எண்ணற்ற வீரர்களின் இழப்பின் வழியேதான் பறம்புவீரர்களைச் சோர்வடையச் செய்ய முடியும். அதன்பிறகே தாக்குதல் போரை முழு வேகத்தோடு தொடங்க வேண்டும் என்று முடிவுசெய்திருந்தான்.
வழக்கம்போல் முதல்நிலைப் படையின் நடுப்பகுதியில் கருங்கைவாணன் நின்றிருந்தான். நேற்றைய போரில் முதல்நிலைப் படை மூன்றில் ஒரு பகுதி வீரர்களை இழந்திருந்தது. அதே அளவுக்குப் புதிய வீரர்கள் இப்போது படையில் நின்றிருந்தனர். இரண்டாம் நிலையிலும் மூன்றாம் நிலையிலும் இருந்த வீரர்களை இதில் இணைத்திருந்தான். ஆனால், அங்கு இருந்த நிலைப்படை வீரர்கள் யாரையும் இங்கு வந்து சேர்க்கவில்லை. எதிரிகளைச் சோர்வடையச்செய்யும் உத்தியே பின்பற்றப்பட்டது. இழப்பதையே உத்தியின் பகுதியாக மாற்றியிருந்தான். அதற்கேற்ப கூலிப்படை வீரர்களைத்தான் முன்களத்தில் நிறுத்தியிருந்தான்.
முரசோசை கேட்டதும் உதிரனின் தலைமையிலான விற்படை தங்களது தாக்குதலைத் தொடங்கியது. கூழையனின் தேர்ப்படையும் தேக்கனின் வாள்படையும் முன்னேறத் தொடங்கின. வேந்தரின் குதிரைப்படைத் தளபதி உறுமன்கொடி பாய்ந்து தாக்கவில்லை. நின்ற இடத்திலேயே அணிவகுத்து நின்றுகொண்டான். இது எதிர்பார்க்கப்பட்டது தான். பறம்பின் குதிரைப்படைத் தளபதி இரவாதன் சிறிது நேரம் போக்குக்காட்டிக்கொண்டிருந்தான்.
தொடக்க நாழிகையில் போரின் குணத்தைக் கருங்கைவாணன் நிதானமாக மதிப்பிட்டுக்கொண்டிருந்தபோது, குளவன்திட்டிலிருந்து பாரியும் அதைத்தான் செய்துகொண்டிருந்தான். காலையில் பாரி இந்த இடம் வந்துசேரும்போதே இகுளிக்கிழவனின் முகம் சோர்வுற்று இருந்தது. ``நேற்று இரவெல்லாம் உள்காடுகளில் நல்ல மழை. இப்போதும் கணவாய்ப் பகுதியில் தூறல் விழுந்துகொண்டுதான் இருக்கிறது” என்றான்.

அவன் என்ன சொல்லவருகிறான் என்பது பாரிக்குப் புரிந்தது.
மெல்லிய குரலில் தயக்கத்தோடு சொன்னான், ``இன்றும் காற்றும் காற்றியும் வருவதற்கு வாய்ப்பில்லை.”
பாரியின் முகத்தில் கவலைதோய்ந்த மாற்றங்கள் எதுவுமில்லை. அதைப் பார்த்தபடி இகுளிக்கிழவன் மேலும் சொன்னான், ``தட்டியங்காட்டு நிலத்தில்கூட அதிகளவுக்கு வெக்கை இருக்காது” என்றான்.
அப்படியென்றால், வேந்தர்படை வீரர்கள் நடுப்பகலுக்குப் பிறகு சோர்வடைய மாட்டார்கள் என்பதை எண்ணியபடியே போர்க்களத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான் பாரி. பறம்பைப் பொறுத்தவரை இன்றைய போர் உத்தி என்பது, தாக்கி முன்னேறுவதன்று; முழுவதும் இரவாதனைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள உத்தியே. அவனது தாக்குதலுக்குக் குறுக்கே யாரும் வந்துவிடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
மரத்திலிருந்து கலைந்து வானத்தில் பறக்கும் பறவைகள் சிறிது தொலைவு பறந்த பிறகு ஓர் ஒழுங்கை அடைவதைப்போல, போர் தொடங்கிய கணத்தில் தாக்கி முன்னேறிய பறம்புவீரர்கள் திட்டமிடலுக்கேற்ற ஒழுங்கை அடைந்துகொண்டிருந்தார்கள். பாரியின் கண்கள், அவர்களைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தன.
வேந்தர்களின் வாள்படைக்குப் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட சூலக்கையன் திட்டமிடப்பட்டபடி படையை நகர்த்திக்கொண்டிருந்தான். எதிரில் நின்றிருந்த பறம்புத்தளபதி தேக்கன் முன்னகர்ந்து செல்வதற்கான வாய்ப்புகளைக்கூடப் பயன்படுத்தவில்லை. இன்றைய போரில் பறம்புத்தளபதிகள் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட பணி இரவாதனுக்குத் துணைசெய்வதே.
இரவாதன், தனது குதிரைப்படையைக் கொண்டு பெயரளவிலான தாக்குதலையே நடத்திக்கொண்டிருந்தான். அவனது திட்டத்தை நடைமுறைப்படுத்த இருபுறமும் இருந்த பறம்புத்தளபதிகளான உதிரனும் கூழையனும் குறிப்பிட்ட தொலைவு வரை முன்னேறிப் போகவேண்டியிருந்தது. அதைக் கணித்தபடியே இரவாதன் அங்குமிங்குமாக அலைமோதிக்கொண்டிருந்தான். உறுமன்கொடியோ, தங்களின் குதிரைப்படை நிலைகொண்ட தாக்குதலை நடத்துவதால் என்ன செய்வதென்று புரியாமல் எதிரி திணறுகிறான் என நினைத்தான்.
இரவாதன் உள்ளிட்ட பறம்பின் குதிரைப்படை வீரர்கள் அனைவரின் அம்பறாத்தூணிகளிலும் ஓங்கல அம்புகள் இருந்தன. இன்றைய போரில் பறம்பு நம்பியிருக்கும் பேராயுதம் ஓங்கலம்தான். `ஓங்கலம்’ என்பது மூங்கிலின் குறிப்பிட்டதொரு வகை. இந்த வகை மூங்கிலைப் பறவைகளோ, விலங்குகளோ நெருங்காது.
ஓங்கலத்தின் தோகை அறுத்தாலோ, கணு குத்தினாலோ விலங்குகளுக்கு மயக்கம் ஏற்படும். அதன் ஈக்கியில் கசியும் நீர் கணநேரத்தில் உயிரினங்களைக் கண்பார்வை மங்கச்செய்யும். கருவுற்ற யானை ஓங்கலத்தின் தோகையைத் தின்றால், தின்றவுடன் கருக்கலையும். நாகத்தின் நஞ்சால் தாக்குண்ட விலங்கு மட்டும் ஓங்கலத்தைத் தேடிவந்து அதன் தோகைகளை வேகவேகமாக மென்று தின்னும். எதிர்குணம்கொண்ட நஞ்சு, நாகத்தின் நஞ்சைச் செயலிழக்கச்செய்யும் என்பதால், விலங்குகள் இந்த மருந்தைக் கண்டறிந்துள்ளன. ஓங்கலத்துக்குள் நாகங்கள் நுழைவதில்லை. நாகங்கள் அஞ்சும் நஞ்சு, ஓங்கலத்தின் தோகைச் சுணைகள்தான். ஊர்ந்து செல்லும் பாம்பின் மீது தோகையின் விளிம்பில் உள்ள கூர்முனைகொண்ட சுணை பட்டால்போதும், பாம்பின் செதில்களுக்குள் சிக்கிக்கொள்ளும். பாம்பு அசைய அசைய அதன் செதில்களே சுணையை உடலுக்குள் செலுத்திவிடும். நாகம் நஞ்சால் செயலிழக்கும்.
`வேந்தர்களின் குதிரைப்படை பாய்ந்து தாக்காமல் நிலைகொண்டு தாக்கும் உத்தியைத்தான் பின்பற்றும்’ என்று நேற்றிரவு வேங்கைமரத்திட்டில் பேசும்போதே முடியன் கணித்தான். அவர்கள் முன்னேறிவந்து தாக்காமல் நிலைகொண்டு தாக்கும் உத்தியைப் பின்பற்றினால் வேந்தர்களின் குதிரைப்படையை எளிதில் வீழ்த்த முடியாது. அவர்கள் படையில் பெரும் எண்ணிக்கையில் குதிரைகள் இருக்கின்றன. அவற்றை வெகுவாகக் குறைத்தால் மட்டுமே மூஞ்சல்நகரை நெருங்க முடியும். மூஞ்சலின் பாதுகாப்பை நொறுக்கி நீலனை மீட்கச் செய்யவேண்டுமென்றால், முதலில் எதிரிகளின் குதிரைப்படையைக் குறைத்தாக வேண்டும். அதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு ஓங்கலத்தைப் பயன்படுத்துதல் மட்டுமே.
நேற்றிரவு வேங்கைமரத்திட்டில் ஓங்கலத்தைப் பயன்படுத்துவதற்கான முடிவை எடுத்தவுடன் செய்திகள் எல்லா இடங்களுக்கும் தெரிவிக்கப்பட்டன. இரவோடு இரவாக ஓங்கல மூங்கிலின் கட்டுகள் தலைச்சுமையாக இரலிமேட்டுக்கு வந்துசேரத் தொடங்கின. உடனடியாக அவை அம்புகளாகச் சீவப்பட்டு குதிரைப்படை வீரர்களின் அம்பறாத்தூணிகளில் செருகப்பட்டன.
இரவாதன் தலைமையிலான குதிரைப்படை வீரர்கள் அனைவரின் அம்பறாத்தூணிகளிலும் இப்போது ஓங்கல அம்புகள் இருக்கின்றன. ஆனால், அவற்றை யாரும் இன்னும் பயன்படுத்தவில்லை. மற்ற அம்புகளைப் பயன்படுத்தியபடியே இங்குமங்குமாக அலைந்துகொண்டிருந்தனர். வேந்தர்களின் குதிரைப்படையின் இரு ஓரங்களிலும் இரவாதனின் குதிரைப்படை கடைசி வரை பாய்ந்து செல்வதற்கு வழியமைத்துக்கொடுக்க உதிரனும் கூழையனும் முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.
குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பறம்புப்படை முன்னோக்கி வந்துகொண்டிருப்பதைக் கருங்கைவாணன் கவனித்துக்கொண்டிருந்தான். தங்கள் படையின் முன்கள வீரர்கள் பெரும்வலிமைகொண்டவர்கள் அல்லர்; தனது திட்டபடி அவர்கள் பலியாடுகளே. ஆனால், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் பறம்புப்படை இவ்வளவு உள்நுழைந்துள்ளதே எனச் சிந்தித்தபடி நின்றுகொண்டிருந்தான். பறம்புத் தலைமைத் தளபதி முடியனை அவனது கண்கள் தேடின. வழக்கம்போல முடியன் முன்களத்துக்கு வரவில்லை. நேற்றைக்குப்போல நடுப்பகல் கடந்த பிறகுதான் அவன் முன்னே வருவான். அப்படியென்றால், இன்றும் பிற்பகலில் அவர்களின் தாக்குதல் திட்டம் தீவிரமடையும் என நினைத்துக்கொண்டிருந்தான்.
எவ்வளவு துல்லியமாகத் திட்டமிட்டாலும் நாம் சிந்தித்திராத வாய்ப்புகளைப் போர்க்களம் நமக்கு உருவாக்கித்தரும். மிகக் குறைந்த நேரம் மட்டுமே நீடிக்கும் அந்த வாய்ப்பைச் சரியாகக் கண்டறிந்து செயல்படுத்தும் தளபதியே வெற்றியைப் பறிக்கிறான். கருங்கைவாணனின் திறமையே, களத்தில் உருவாகும் வாய்ப்பைப் பயன்படுத்துவதில் இணையற்றவனாக இருப்பதுதான். இன்றைய நாளுக்காக வகுக்கப்பட்ட உத்தியை, படையணிகள் சரியாகச் செயல்படுத்துகின்றனவா என்பதைத் தளபதி உற்றுகவனிக்க வேண்டும். அதே நேரத்தில் எதிரிகள் வகுத்துள்ள உத்தி என்ன என்பதையும் விரைவில் கண்டறிய வேண்டும். எல்லாத் தளபதிகளும் இந்த இரண்டு எண்ணங்களுடன்தான் போர்க்களத்தில் நிற்பர். ஆனால், இவை இரண்டையும் கடந்து மூன்றாவதான வாய்ப்பு ஒன்று போர்க்களத்துக்குள் உருவாகிக்கொண்டிருக்கும். அதை விரைந்து மதிப்பிடத் தெரிந்தவனே போர்க்கலையின் வல்லுநன் ஆகிறான்.
`எதிரிகள் ஏன் குறிப்பிட்ட சில பகுதியில் மட்டும் இவ்வளவு தொலைவு முன்னகர்ந்து வந்துகொண்டிருக்கின்றனர்’ என்று கருங்கைவாணன் எண்ணிக்கொண்டி ருக்கும்போதுதான் சட்டென இன்னொன்றும் தோன்றியது. இந்தப் புதிய சூழல் உருவாக்கும் வாய்ப்பு என்ன எனக் கண்கள் இங்குமங்குமாகத் தேடத் தொடங்கின. எதிரிகள் எவ்வளவு முன்னகர்ந்து போய்க்கொண்டிருந்தாலும் கருங்கைவாணனுக்கு அச்சம் ஏதுமில்லை. ஏனெனில், முதல்நிலைப் படையைக் கடந்து இரண்டாம்நிலைப் படை நின்று கொண்டிருக்கிறது. அதற்கு அடுத்து மூன்றாம்நிலைப் படை இருக்கிறது. எதிரிகள் எவ்வளவு முயன்றாலும் ஒன்றும் செய்துவிட முடியாது. எனவே, இந்தப் புதிய சூழல் வாய்ப்பை உருவாக்கித் தந்தால் அதைப் பயன்படுத்தலாம் என்று அவனுடைய கண்கள் இங்குமங்குமாக அலைமோதிக்கொண்டிருந்தன.
அப்போதுதான் அவனது கண்ணில் பட்டான் தேக்கன். சாகலைவனின் மரணத்துக்கு மறுநாளே பலியெடுக்கும் வாய்ப்பாக அந்தக் கணம் அவனுக்குத் தோன்றியது. கருங்கைவாணன் அவனை நோக்கிக் குதிரையைச் செலுத்தத் தொடங்கினான். வேந்தர்களின் வாள்படைத் தளபதி சூலக்கையன் சற்றே துடிப்பு நிறைந்தவனாக இருந்தான். தேக்கனோடு நேர்கொண்டு மோதும் வாய்ப்புக்காகக் காத்திருந்த அவனின் நகர்வும் தேக்கனை நோக்கியே இருந்தது.
தேக்கனோ தனது வாள்படையின் நடுப்பகுதியில் இருந்தான். வீரர்களின் கால்கள் மூன்றாம் முன்னெட்டைக் கடக்காமல் இருக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தான். ஓசைகளின் வழியேயும் கால்கள் கிளப்பும் புழுதியின் வழியேயும் பார்ப்பவர்களின் கண்கள் வேகத்தை உணர்கின்றன. ஆனால், இருக்கும் இடம் விட்டு முன்னோக்கி நகராமல் அவர்கள் போரிட்டுக்கொண்டிருப்பார்கள். ஏறிவரும் எதிரியை மட்டும் வெட்டிச்சரித்தபடி இருப்பார்கள். தேக்கனின் தலைமையிலான வாள்படை அதைத்தான் செய்துகொண்டிருந்தது.

இரவாதன் தனக்கான வாய்ப்புக்காகத் துடித்துக்கொண்டிருந்தான். எதிரிகளது குதிரைப்படையின் இருபக்கவாட்டிலும் முன்னகர்ந்த பறம்புவீரர்கள் குறிப்பிட்ட தொலைவு சென்றவுடன் ஓசையை எழுப்பினர். வேந்தர்படையின் ஒவ்வொரு பிரிவிலும் ஓசை எழுப்பும் கருவியோடு வீரன் நின்றிருந்தான். ஆனால், பறம்புக்கு அப்படியன்று, போரிட்டிக்கொண்டிருக்கும் வீரர்களிலே கூவல்குடியினரும் இருந்தனர். எல்லையைத் தொட்ட குறிப்பை அவர்கள் சீழ்க்கை ஓசையின் வழியே கணநேரத்தில் கடத்தினர். அந்த ஓசைக்காகத்தான் இரவாதன் காத்திருந்தான். ஓசை கேட்ட மறுகணம் தனது உத்தரவைப் படை முழுமைக்கும் வழங்கினான்.
இரவாதனின் குதிரைப்படை, கண்ணிமைக்கும் நேரத்தில் பல கூறுகளாகப் பிரிந்தது; எதிரியின் குதிரைப்படையில் நிற்கும் குதிரைகளை முதலிலிருந்து கடைசி வரை இடைவெளிவிடாமல் துல்லியமாகத் தாக்கும் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியது. திடீரென இவர்கள் ஏன் இவ்வளவு வேகம்கொள்கின்றனர் என்று உறுமன்கொடிக்குப் புரியவில்லை. `ஒருவேளை அப்படிச் செய்தால்தான் நாம் விரட்டித்தாக்குவோம் என நினைத்துச் செய்கின்றனரா?’ என்று சிந்தித்தான். தம்மைக் கோபமூட்டி விரட்டிச்செல்லவைக்கும் உத்தியாக உறுமன்கொடி நினைத்தான். எதிரிகள் எவ்வளவு வேகமாகச் செயல்பட்டுக் குதிரையை விரட்டினாலும், தான் நிலைகொண்ட தாக்குதலை மாற்றக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.
தொடக்க நிலை அம்புகள் சீறிப்பாய்ந்த பிறகு ஓங்கல அம்புகள் வில்லிலிருந்து விடுபடத் தொடங்கின. அவை மற்ற அம்புகளைப்போல வேகம்கொண்டு தாக்குவதில்லை. அதற்கான தேவையும் இல்லை. குதிரையின் முன்பக்கமோ, பின்பக்கமோ அல்லது உடலின் ஏதாவதொரு பாகத்திலோ மெள்ள உரசிச்சென்றால் போதும். அம்பின் ஈக்கியொன்று உள்நுழையும் அளவுக்குச் சிறுசிராய்ப்பை உருவாக்கினாலே போதும். எனவே, பறம்பு வீரர்கள் முதலிலிருந்து கடைசி வரை நிற்கும் குதிரைகள் அனைத்தின் மீதும் ஏதாவது ஓர் அம்பு தைக்கும்படியான உத்தியைப் பயன்படுத்தினர்.
வேகம், வேகம், அதிவேகம் என்பதே இரவாதனின் செயல்பாடாக இருந்தது. இரண்டு மூன்று அம்புகளுக்கு ஒருமுறைதான் ஓங்கலத்தைப் பயன்படுத்த வேண்டும். எதிரிக்கு எந்த வகையிலும் ஐயம் வந்துவிடக் கூடாது. தாக்கும் போரைப் படுவேகமாகச் செய்கிறார்கள் என்று மட்டும்தான் அவர்கள் நினைக்க வேண்டும். ஆனால், முதலிலிருந்து கடைசி வரை குதிரைப்படை முழுமையும் அம்புகளைப் பொழிந்துதள்ள வேண்டும். இரவாதன், கண்ணிமைக்கும் நேரத்தைக்கூட வீணாக்காமல் செயல்பட்டுக்கொண்டிருந்தான்.
இந்தத் தாக்குதலில் மிகக் கடினமானது எதிரியின் குதிரைப்படையின் நடுப்பகுதியில் இருக்கும் குதிரைகளைத் தாக்குவதுதான். ஏனெனில், ஓங்கல அம்பை மற்ற அம்புகளைப்போல வேகம்கொள்ளச்செய்ய முடியாது. அதன் எடையும் தன்மையும் பாய்ந்து செல்வதற்கான வாகினைக்கொண்டதன்று. எனவே, இழுபடும் நாணின் விசையால் மட்டுமே அதை எதிரிப்படையின் நடுப்பகுதிக்குச் செலுத்த வேண்டும். சூளூர் வீரர்களுக்கு இரவாதன் வரையறுத்தது நடுப்பகுதிக் குதிரைகளைத் தாக்க வேண்டும் என்பதுதான். மற்ற வீரர்கள்தாம் ஓரப்பகுதியைத் தாக்கினார்கள்.
பறம்பின் குதிரைப்படையின் வேகமும் குறுங்காது முயலின் குருதியில் ஊறவைக்கப்பட்ட நாணின் இழுத்துத்தள்ளும் வேகமும் ஒன்றாய் இணைய, ஓங்கல அம்புகள் இடைவெளியின்றிப் பொழிந்தன.
போர்க்களம் தனது போக்கில் உருவாக்கிக் கொடுக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துதலே அறிவார்ந்த தளபதியின் வேலை. நேற்றைய போரில் சாகலைவனின் தலையைச் சரித்தவனை நோக்கி முன்னகர்ந்துகொண்டிருந்தான் கருங்கைவாணன். ஏற்கெனவே அவனை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தான் சூலக்கையன். தேக்கன், முன்திட்டமிட்டபடியான உத்தியின்படி பறம்புப்படைகளின் தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தான்.
தேக்கனின் அருகில் வந்து சேர்ந்த சூலக்கையன் நேரடித் தாக்குதலில் ஈடுபடத் தொடங்கினான். தேக்கன் அதை வழக்கம்போல் எதிர்கொண்டபடியிருந்தான். சூலக்கையன், வயதால் இளையவன்; துடிப்பு நிறைந்தவன். கிழவனைச் சாய்க்கும் வெறியோடு அவன் மோதுவதைத் தேக்கன் உணர அதிக நேரமாகவில்லை. ஆனாலும் தேக்கனின் கவனம் இரவாதன் செயலின் போக்கை அறிவதிலேயே இருந்தது.
கிழவன் பெரிதாகக் கவனம்கொள்ளாமலேயே போரிடுகிறான் என்பதைப் புரிந்துகொண்ட சூலக்கையன் சீற்றம்கொண்டு தாக்கினான். முனையால் சீவிச்சரிக்கும் உத்தியைப் பயன்படுத்தி வாளின் மூக்குப் பகுதியைக் கண்ணிமைக்கும் நேரத்தில் கேடயத்தின் உள்விளிம்பை நோக்கிப் பாய்ச்சினான். பாய்ச்சிய வேகத்தில் கிழவனின் மேலிருந்து கொப்புளிக்கும் குருதியை அவன் கண்கள் தேடின. கேடயத்தின் உள்விளிம்பு ஆயுதத்தின் வேகத்தை உணர்ந்து வெளிப்புறம் நோக்கித் தள்ளியபோது, உடல் உள்வளைந்து எழுந்தது. தேக்கன் எளிதாகச் சுழன்றுகொடுத்து நின்றான். சூலக்கையன் அதிர்ச்சியோடு தேக்கனைப் பார்த்தபோது கருங்கைவாணன் வந்து இறங்கினான்.
மூவேந்தர்படைத் தலைமைத் தளபதி மகாசாமந்தன் போர்க்களம் தனது போக்கில் தந்த வாய்ப்பை வணங்கி வாளேந்தி நின்றான். சூலக்கையனுக்கு ஒதுங்கிக்கொள்வதா இணைந்துகொள்வதா எனத் தெரியவில்லை. சற்றே தயக்கத்தோடு விலகினான். அவன் விலகத் தயங்கிய நேரத்தில் கருங்கைவாணனின் கால்கள் தாக்கப்போகும் தன்மைக்கு ஏற்ப அடியெடுத்து நின்றன. சூலக்கையன் அவனுடைய கால்களைப் பார்த்தான். சட்டென நிமிர்ந்து அவனுடைய கைகளைப் பார்த்தான். இடதுகையில் இருந்த கேடயம் மட்டுமே துருத்தித் துருத்தி முன்னால் நகர்ந்துகொண்டிருந்தது. வலதுகையில் இருந்த வாள் சரியான கணத்துக்காகக் காத்திருந்தது.

தேக்கன், கருங்கைவாணனின் கண்களையே பார்த்தான். இருவரின் கால்களும் பின்னல் வட்டத்தில் நகர்ந்துகொண்டிருந்தன. கிழவனின் கண்களில் அச்சமேதும் தெரியவில்லை. தன்னைத் தாக்கி வீழ்த்த அவன் ஆயத்தமாக இல்லை; தற்காப்பு மட்டுமே அவனது நோக்கமாக இருக்கிறது என்று கணித்தான் கருங்கைவாணன். போர்க்களத்தின் சூழல் கணத்துக்குக் கணம் மாறக்கூடியது. இப்போதைய வாய்ப்பை அடுத்த கணம் வழங்குமா எனத் தெரியாது. எனவே, காலம் தாழ்த்த வேண்டாம் என எண்ணிய கருங்கைவாணன், தனது வலிமைமிகுந்த தாக்குதல் முறையால் மின்னல் வேகத்தில் பாய்ந்தான். வாள்கள் ஒன்றோடொன்று மோதித் திரும்பின. இவன் ஒவ்வொரு தாக்குதலிலும் உயிர் குடிக்க எண்ணுகிறான் என்பதைத் தேக்கன் உணர வெகுநேரம் ஆகவில்லை. கால்கள் முன்பாயும் வேகத்தில் மூன்று மடங்கு ஆற்றலை வெளிப்படுத்திப் படபடக்கும் சிறகுபோல வாளால் இடைவிடாது தாக்கி எதிரியை நிலைகுலையச் செய்வதே கருங்கைவாணனின் உத்தி.
தேக்கன், அவனது வேகத்தை மதிப்பிடும் முன்பே அடுத்தடுத்து வேகத்தைக் கூட்டிக்கொண்டிருந்தான். முன்னும் பின்னுமாகக் கேடயத்தைச் சுழற்றியபடி வாள்வீச்சை வாங்கிக்கொண்டிருந்தான் தேக்கன். கிழவன் எதிர்கொள்ளத் திணறுகிறான் என்பதை உணர்ந்த கருங்கைவாணன், சரியான நேரத்தில் தேக்கனின் கேடயத்தை ஏமாற்றி நடுமார்பைக் கிழித்தபடி சீவி முன்னகரும் தாக்குதலைத் தொடுத்தான். மின்னல் வேகத்தில் குறுக்கிட்டு வெளிவந்தது கருங்கைவாணன் வீசிய வாள். காற்று அறுபடும் ஓசை காதில் கேட்டது. கிழவன் மண்ணில் சரிந்திருப்பான் என எண்ணியபடியே திரும்பினான். இந்தக் கணத்தைத்தான் தேக்கன் எதிர்பார்த்திருந்தான். கொலை முடிந்த மறுகணத்தில் ஆற்றலேதும் இன்றி அகமகிழ்ந்து திரும்பும் வீரனின் தலையைக் கொய்து முடிப்பதில்தான் சுகம் உண்டு. தனது உயிரைப் பணயம்வைத்து நடக்கும் இந்த விளையாட்டில் வீரர்கள் இந்த உணர்வைச் சுவைக்கவே மீண்டும் மீண்டும் வாள் சுழற்றுகின்றனர். தேக்கன் சுழற்றிய வாள் கருங்கைவாணனின் கழுத்தை நோக்கி வந்தபோது கண நேரத் தாமதமின்றிக் குறுக்கிட்டுப் பாய்ந்தான் சூலக்கையன்.
அதிர்ந்து மீண்டான் கருங்கைவாணன். இமைப்பொழுதில் எல்லாம் மாறத் தெரிந்தன. பின்பக்கமாகத் திரும்பிய கருங்கைவாணனின் முகத்தில் மரணத்தின் ஒளிபட்டுத் தெறித்தது. `கிழவனைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டோமே!’ எனத் தோன்றியபோது அவனது மெய்க்கவசத்தைப் பார்த்தான். சரிபாதியாகப் பிளந்து வெளிவந்திருந்தது அவன் வீசிய வாள். இரும்பாலான கேடயமேயானாலும் இந்தத் தாக்குதலால் உள்ளெலும்பு உடைத்திருக்கும். `இவன் எப்படி சாயாமல் நிற்கிறான்?’ என நினைத்தபடி கால்களை முன்னகர்த்தினான். `கிழவனின் நெஞ்செலும்பு நடுங்கியபடிதான் இருக்கும். இப்போது இளைப்பாற இடம்தரக் கூடாது’ என்ற முடிவோடு வாளைச் சுழற்றி முன்னகர்ந்தான்.
சூலக்கையன், கருங்கைவாணனைப் பார்த்து மிரண்டு நின்றான். கழுத்தின் முனை நோக்கி வாள் பாய்ந்து திரும்பிய மறுகணமே, சீறி முன்னகரும் அவனது சீற்றம் யாரையும் மிரளச்செய்யும்.
இருவரும் கால்களைப் பின்வளைவு போட்டு நகர்த்தி, தேவையான இடைவெளியை உருவாக்கிக்கொண்டனர். இருவருக்கும் மிக அருகில் மரணம் வந்துபோயுள்ளது. ஆனாலும் இருவரும் அதைப் பொருட்படுத்தவேயில்லை. சூலக்கையன், மிரட்சி குறையாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
கிழவன் வலியை உணர்ந்து நிற்கிறானா, இல்லை வாய்ப்பைக் கணித்து நிற்கிறானா என்பதைக் கருங்கைவாணனால் கணிக்க முடியவில்லை. ஆனால், நேற்றைய போரில் சாகலைவன் எப்படி வெட்டிச்சரிக்கப்பட்டான் என்பதை உணர முடிந்தது. கிழவனைப் பலியெடுக்காமல் இந்த இடம்விட்டு நகரக் கூடாது என மனம் உறுதிகொண்டது. வாளின் பிடியை விரல்கள் இறுக்கிக்கொண்டிருந்தன. கால்கள் வீசி முன்னகர ஆயத்தமாயின. வெறிகொண்டு தாக்கப்போகும் அந்தக் கணத்தைக் கணித்தபடி சிற்றலையென அசைந்துகொண்டிருந்தான். அப்போதுதான் போர்க்களத்தின் இடதுபுறமிருந்து நீள்சங்கின் ஓசை கேட்டது.
அதிர்ந்து திரும்பினான் கருங்கைவாணன். உறுமன்கொடியின் குதிரைப்படை வெளிப்படுத்தும் ஓசையிது. `என்ன ஆனது அங்கு?’ எனச் சிந்தனை மோதிப்புரண்டது. தடுமாறித் திரும்பின கருங்கைவாணனின் கண்கள். நிலைமையை உணர்ந்து சூலக்கையன் உள்ளிறங்கினான். வழியின்றிக் கருங்கைவாணன் வெளியேறினான். கிழவன், அடுத்தவனை எதிர்கொள்ள ஆயத்தமானான்.
உறுமன்கொடி இன்று காலையிலிருந்து நிலைகொண்ட தாக்குதலையே நடத்திவந்தான். கருமணலும் ஈக்கிமணலும் இருக்கும் போர்க்களத்தில் குதிரைகளைப் பாயவிட வேண்டாம் என்று முடிவெடுத்ததால் படையை நிலைகொள்ள மட்டுமே செய்திருந்தான். எதிரிகள் தங்களின் நிலையைக் குலைத்து, பாய்ந்துதாக்கும் போர்முறைக்கு இழுக்க முயல்கின்றனர் என்பதைக் கணித்தவாறே நின்று தாக்கிக்கொண்டிருந்தான். நெடுநேரத்துக்குப் பிறகு அவர்கள் வேகம்கொண்டு பக்கவாட்டிலிருந்து தாக்கியபடி விரைந்து கொண்டிருந்தனர். ஆனால், அந்தத் தாக்குதல் வீறுகொண்டதன்று; போக்குகாட்டித் திசைதிருப்பும் தாக்குதலே. உறுமன்கொடி எதிரிகளின் எந்தவொரு முயற்சிக்கும் இரையாவதில்லை என்ற விழிப்போடு இருந்தான். எதிரிகளின் செயலைக் கவனித்தபடி குதிரையை மெள்ள நகர்த்திக்கொண்டிருந்தான். அப்போது அவனது குதிரை போய் வலதுபுறம் இருந்த குதிரையின் மீது மோதியது. `என்ன இப்படிச் செய்கிறது!’ என நினைத்தபடி கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான்.

சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் குதிரையைக் கிளப்பியபோது அருகில் சென்ற இன்னொரு குதிரையின் மீது அதேபோல முட்டி விலகியது. ஏன் இப்படி நடந்துகொள்கிறது என்பது புரியாமல் குதிரையை விட்டுக் கீழிறங்கினான். கண்பட்டையில் ஏதாவது தூசியோ, கல்லோ சிக்கியிருந்தால் அது குதிரையின் கண்ணை உறுத்திக்கொண்டிருக்கும். அதனால் குதிரை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாகத் தள்ளாடும் என நினைத்து, கண்பட்டையில் கைகளை விட்டுத் துடைத்தான். உள்ளே வேறெந்தத் தூசியும் இல்லை. பிறகு ஏன் இப்படிச் செய்கிறது எனச் சிந்தித்தபடியே வந்து மேலேறி உட்கார்ந்தான். அந்தக் கணம் அவனது பருத்த தொடைகள் முதுகை அழுத்தியபோது நடுமுதுகு திடுக்கிட்டுக் குலுங்கியது. குதிரைக்கு ஏதோ ஆகிவிட்டது என்று அவன் உணரத் தொடங்கினான். அவனது கால் குறிப்புகளை உணர்ந்து செயல்பட அது ஆயத்தமாக இல்லை. உணர்வுகளை இழந்ததைப்போலாகிவிட்டது எனத் தெரிந்ததும் சட்டென மேலிருந்து கீழிறங்கினான்.
கட்டுப்பாடுகளை இழந்த குதிரையின் மீது உட்காருவது மரணத்தை அழைத்துக்கொள்வதற்குச் சமம். இனி அது எப்படி நடந்துகொள்ளும் எனத் தெரியாது. கீழிறங்கியவன் அதற்குக் காயங்கள் ஏற்பட்டிருக்கிறதா எனச் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். எந்த அம்பும் தைக்கவில்லை. `பின்தொடைப் பகுதியில் சின்னதாய் ஒரு கீறல் விழுந்திருக்கிறது. துளி அளவுதான் குருதி தெரிகிறது. வேறேதும் ஆகவில்லையே’ எனக் குழம்பிக்கொண்டிருக்கையில் படையின் நடுப்பகுதியில் கூச்சல்கள் அதிகமாகின. என்னவென்று விசாரிக்கத் தொடங்கியபோது ஏறக்குறைய பல வீரர்கள் குதிரையை விட்டு இறங்கி ஏதுசெய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தனர். நிலைமை கட்டுமீறுவதற்குள் எதிரிகளின் தாக்குதலிலிருந்து குதிரைப்படையைக் காக்கவேண்டும் என்பதால்தான் தலைமைத் தளபதியை வரவழைக்க நீள்சங்கை ஊதச்சொன்னான் உறுமன்கொடி.
சங்கொலியைக் கேட்டு விரைந்து வந்தான் கருங்கைவாணன். அவன் வந்து நின்றபோது இரவாதனின் தலைமையிலான வீரர்கள், எதிரியின் குதிரைப்படை எல்லையைத் தொட்டுக்கொண்டிருந்தனர். ஓங்கலத்தின் வேலை, முடியும் தறுவாயில் இருந்தது.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...