மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆரோக்கியத்தின் அட்சய பாத்திரம்!

ஆரோக்கியத்தின் அட்சய பாத்திரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரோக்கியத்தின் அட்சய பாத்திரம்!

ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?யாழ் ஸ்ரீதேவி

பதின்பருவத்தில் ஆண் குழந்தைகளின் வளர்ச்சியை முழுமைப்படுத்த, விளையாட்டு மிக மிக முக்கியம். வயது மற்றும் ஆரோக்கியத்தின் அடிப்படையில், அதற்கான ஆலோசனைகளைப் பகிர்கிறார்கள் துறைசார்ந்த நிபுணர்கள்.

எந்தெந்த வயதில் என்னென்ன விளையாட்டுகள்?

ஆண் குழந்தைகளுக்கு எந்தெந்த வயதில் என்னென்ன விளையாட்டுகளை அறிமுகப்படுத்தலாம் என்பது பற்றிச் சொல்கிறார், சேலம் அம்மாபேட்டை நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமார்.

“ஆண் குழந்தைகளின் வளர்ச்சி நிலைகளைப் புரிந்துகொண்டால், அந்தந்த வயதில் அவர்களுக்கான விளையாட்டுகளை அறிமுகம் செய்வது எளிதாகும். ஒரு வயது முதல் மூன்று வயது வரை ஆண் குழந்தையின் உடல் உறுப்புகள் வேகமாக வளர்ச்சி அடையும். இந்த வயதில் தொடு உணர்வின் வழியாக எந்த விஷயத்தையும் புரிந்துகொள்ள குழந்தை முயற்சி செய்யும். அள்ளி அணைப்பதையும், மடியில் இருப்பதையும், நெற்றியில் முட்டி, விரல்கள் பிடித்து விளையாடுவதையும் அவர்கள் விரும்புவார்கள். ஆண் குழந்தைக்கு நான்கு வயது முதல் ஏழு வயது வரை உடலின் தசை மற்றும் எலும்பு வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஏழு வயதில் இருந்து 10 வயது வரை உடல் உறுப்பு வளர்ச்சியுடன் ஹார்மோன் மாற்றங்களும் தொடங்கும். 11 வயதில் இருந்து 13 வயது வரை ஆணாக அவன் பருவமடைதல் நிகழும்.

ஆரோக்கியத்தின் அட்சய பாத்திரம்!

ஏழு வயதில்...

தன் சுத்தம், மற்றவர்களோடு பழகுவது, படிப்பது, விதிகளைப் பின்பற்றுவது என ஏராளமான விஷயங்களைப் பழக்கப்படுத்த வேண்டிய பருவம் இது. இந்தப் பருவத்தில் ஜிம்னாஸ்டிக், நீச்சல் இரண்டிலும் ஆண் குழந்தைகளை ஈடுபடுத்தலாம். மரபு விளையாட்டுகளோடு மற்ற குழந்தைகளுடன் இணைந்து ஆடும் மனமகிழ் விளையாட்டுகளும் அவசியம். இந்த விளையாட்டுகள் நரம்பு மண்டலத்தின் செயல்திறனைத் தூண்டி, மூளைக்குத் தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்க வழி செய்யும். இரண்டு பக்க மூளையையும் உற்சாகத்துடன் செயல்பட வைக்கும்.
பதின்பருவத்தில்...

11 வயதுக்கு மேல் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும். விஷமத் தனங்களையும் பார்க்க முடியும். பதின் பருவத்தில் குரல் உடைவது முதல், உடல் வளர்ச்சியில் அதிகபட்ச மாற்றங்கள் வரைஆண் குழந்தைகள் பல விஷயங்களைக் கடக்கின்றனர். ஹீரோயிசம், பெண்களை ஈர்ப்பது போன்ற செயல்களிலும் ஆர்வம் அதிகரிக்கும்.

பதின்பருவத்தின் தொடக்கத்திலேயே ஆண் குழந்தைகளை ஷட்டில், ஃபுட்பால், சிலம்பம், கிரிக்கெட் என ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபடுத்துவது அவசியம். இந்தப் பருவத்தில் அவர்கள் உடலில் அதிகபட்ச ஆற்றல் உருவாகும். அதற்கான ஆரோக்கியமான வடிகாலாக விளையாட்டு இருக்கும். மூளை சுறுசுறுப்பாக இருப்பதால் படிப்பிலும் ஆர்வமாக இருப்பார்கள். தேவையற்ற சிந்தனைகள் தவிர்க்கப்படும்.

விளையாட்டால் மேம்படும் மன வளம்!


 ஆண் குழந்தைகள் விளையாட்டில் ஈடுபடும்போது சம வயது சிறுவர்களின் நட்பு கிடைக்கும்.

 விளையாட்டு விதிகளைப் பின்பற்றுவது, குழுவாக இணைந்து வெற்றிக்கு முயல்வது, தோல்வி பழகுவது, தனக்கான தனித்துவத்தை அறிந்துகொள்வது போன்றவற்றுக்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.

 பதின்பருவ சவால்களை எளிதாகக் கடக்கவும், தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கவும் விளையாட்டு அவர்களுக்கு உதவும்’’ என்கிறார் முத்துக்குமார்.

ஆரோக்கியத்துக்குக் கைகொடுக்கும்!


ஆண் குழந்தைகளுக்குப் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் இன்றைய காலகட்டத்தில் சவாலாக உள்ளன. விளையாட்டு, இந்த விஷயத்தில் ஆண் குழந்தைகளுக்கு எந்த விதத்தில் கைகொடுக்கிறது என்பது பற்றிச் சொல்கிறார், சேலத்தைச் சேர்ந்த பிஸியோதெரபிஸ்ட் ரம்யா செந்தில்குமார்.

ஆரோக்கியத்தின் அட்சய பாத்திரம்!

பருமன்... பருவமடைதல் தள்ளிப்போதல்...

“பதின்பருவ ஆண் குழந்தைகள் 13 வயதில் இருந்து 17 வயது வரை வழக்கத்தைவிடச் சற்று அதிகளவு உணவு சாப்பிடுவார்கள். பியூபர்டி காலகட்டத்தில் உடலில் ஏற்படும் வளர்ச்சிகளுக்காக நிறைய சாப்பிடத் தோன்றும். அதனால், போதிய அளவு வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ள உணவுகளாகச் சாப்பிட வேண்டும்.  ஆனால், இன்றைய குழந்தைகள் கொழுப்பு, கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளையே நாடுகின்றனர். விளையாட்டு, உடற்பயிற்சிகளில் ஈடுபடாமல் இருப்பதால் பருமன் பிரச்னைக்கு ஆளாகின்றனர்.  இதைக் கண்டுகொள்ளாமல் விட்டால் பருவமடைதல் தள்ளிப்போகும். 30 வயதுக்குள்  நீரிழிவு, இதயநோய் தாக்கத்துக்கு ஆளாகும் அபாயமும் அதிகரிக்கும்.

பெற்றோர் கவனத்துக்கு...

 இன்றைய குழந்தைகள் ஆன் ஸ்க்ரீனிலேயே அதிகம் விளையாடுகின்றனர். இதைத் தவிர்த்து, தசை வளர்ச்சிக்கு உதவும் அவுட்டோர் விளையாட்டு அல்லது உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம்.

 மகனின் நண்பர்களையும் ஊக்கப்படுத்தி உடற்பயிற்சியில் ஈடுபடவைப்பதன் வழியாக, அவர்கள் அனைவரும் தொடர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம். படிப்பால் ஏற்படும் மன அழுத்தத்தை விளையாட்டில் அவர்கள் கரைத்துக்கொள்வார்கள்.

 விளையாடும்போது ஒருவேளை காயம் பட்டால் பெற்றோர், ‘அந்த விளை யாட்டே வேண்டாம்’ எனக் குழந்தைகளை முடக்குவது தவறு. ‘எல்லா காயங்களும் ஆறிவிடும்’ என்று தட்டிக்கொடுத்து அவர்களை மீண்டும் விளையாட வைக்க வேண்டும்.

 இந்த வயதுக்கான மூடு (mood) மாற்றங்களைக் கையாள விளையாட்டு அவசியமாகிறது. உடற்பயிற்சியின் மூலம் உடல் அழகை மேம்படுத்திக்கொள்ளும் மனநிலை இந்த வயதில் ஆண் குழந்தை களுக்கு உண்டாகும். சிக்ஸ் பேக் வைத்துக்கொள்ள விரும்புவார்கள். விளையாட்டை அதிகப் படுத்த அதிகப்படுத்த, பருவமாற்றத்தினால் உண்டாகும் உடல் வளர்ச்சி, அவர்கள் தோற்றத்தை அழகாக்கும். உடல் ஃபிட் ஆகும். அது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

 விளையாட்டில் ஆர்வமுள்ள குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். மூளைக்கான ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் கவனிக்கும் திறனும், நினைவாற்றலும் அதிகரிக்கும். குழுவாக விளையாடுவதால் மற்றவர்களுடன் பழகுவது அவர்களுக்கு எளிதாகும். நேரத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்த கற்றுக்கொள்வார்கள். எதிர்கால வேலைவாய்ப்புக்கும் விளையாட்டு அவர்களுக்கு உதவும். உடற்பயிற்சியும் விளையாட்டும் குழந்தைகளின் உணவு முறையை ஆரோக்கியமாக மாற்றும்” என்கிறார் ரம்யா.

ஆட்டம்... இனி கொண்டாட்டம்!