
டீகிளட்டரிங்எழுத்து வடிவம்: சாஹா - ஓவியங்கள் : ரமணன்
சுத்தம் என்பது வீட்டுக்குள், நான்கு சுவர்களுக்குள் மட்டுமே கடைப்பிடிக்கப்பட வேண்டிய விஷயமல்ல. வீட்டுக்கு வெளியிலும் அது அவசியம். வீட்டுக்கு வெளியில் வாகனங்களை நிறுத்தும் இடத்தை ‘கராஜ்’ அல்லது பார்க்கிங் ஏரியா என்கிறோம். வாகனங்களை நிறுத்துவதற்காகவே ஓர் அறை கட்டி, கேட் போட்டு மூடி வைத்தால் அது கராஜ். பார்க்கிங் ஏரியா என்பது மேற்கூரையுடனோ, அது இல்லாமலோ இருக்கும். எல்லாப் பக்கங்களும் திறந்திருக்கும். கராஜ் என்பதைப் பழைய வீடுகள் சிலவற்றிலும் தனி வீடுகள் சிலவற்றிலும் மட்டுமே பார்க்க முடிகிறது. பார்க்கிங் ஏரியாவைப் பரவலாக எல்லா அப்பார்ட்மென்ட்டுகளிலும் பார்க்கிறோம்.

கராஜ் அல்லது பார்க்கிங் ஏரியாவை கார், பைக்குகளை நிறுத்த மட்டும்தான் பயன்படுத்துகிறோமா? பல வீடுகளிலும் வாகனங்கள் சர்வீஸுக்குப் போய் வரும்போது சர்வீஸ் ஸ்டேஷன் அல்லது மெக்கானிக் கடையிலிருந்து கொண்டு வரும் பழைய பாகங்களை, உடைந்த பாகங்களைத் தூக்கிப்போட மனமின்றி பத்திரப்படுத்துகிறார்கள். இதற்குச் சிறந்த உதாரணம் பழைய டயர்கள். அதற்கு என்ன காரணமிருக்குமோ தெரியாது. உடைந்த, உபயோகமில்லாத பொருள்களைப் பழைய சாமான்கள் வாங்குவோரிடம் கொடுத்து விடுவதுதான் சிறந்தது.
காருக்கோ, டூவீலருக்கோ நாம் பயன்படுத்துகிற பொருள்களை மட்டுமே கராஜிலும் பார்க்கிங் ஏரியாவிலும் வைத்திருக்க வேண்டும். கார் அல்லது டூவீலரைச் சுத்தப்படுத்துகிற துணி, வாகனங்களை மூடி வைக்கும் கவர், வேக்குவம் க்ளீனர் (சிலர் கார்களைச் சுத்தப்படுத்த வேக்குவம் க்ளீனர் உபயோகிப்பதுண்டு), டூல் கிட் மாதிரியான பொருள்களுக்கு மட்டுமே அங்கே அனுமதி.

சில அப்பார்ட்மென்ட்டுகளில் ‘அலாட்டடு பார்க்கிங்’ இருக்கும். அதாவது அந்தந்த வீடுகளுக்கென தனியே இடம் ஒதுக்கப் பட்டிருக்கும். அப்படி மேற்கூரையுடன் அலாட்டடு பார்க்கிங் வசதி இருப்பவர்கள், பிளாஸ்டிக் கபோர்டு (கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கிறது) வாங்கி வைத்துக்கொள்ளலாம். வாகனங்களுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் அதனுள் வைத்துவிடலாம். ஏன் பிளாஸ்டிக் என்கிறீர்களா? இரும்பு, மரம் போன்றவற்றைத் திறந்தவெளியில் வைக்கும்போது நீண்ட நாள் உழைக்காது என்பதே காரணம்.
சிலர் வீட்டுக்கு வெளியே தோட்டம் அமைத்திருப்பார்கள். தோட்ட வேலை களுக்குத் தேவையான மண்வெட்டி, கத்தரி, உள்ளிட்ட கருவிகளை வாகனங்களை நிறுத்தும் இடத்தில் வைத்துக்கொள்ளலாம். ஆனால், இந்தக் கருவிகளை எல்லோருக்கும் தெரிந்த, யார் வேண்டுமானாலும் எடுக்கக் கூடிய இடத்தில் வைக்காதீர்கள். ஒருவேளை திருடர்கள் வந்தால் அந்த ஆயுதங்கள் அவர்களுக்குச் சாதகமாக அமைந்துவிடும். கதவுகள் பொருத்திய பாதுகாப்பான கராஜினுள் வைக்கலாம். திறந்தவெளி பார்க்கிங்கில் வேண்டாம்.
(குப்பைகள் அகற்றிப் பேசுவோம்!)