
அதிஷா - ஓவியம்: கோ.ராமமூர்த்தி
The Times 03/Jan/2009 Chancellor on brink of second bailout for banks
- பிட்காயின் பிளாக்செயினின் முதல் பிளாக்கில் (Genesis block) உட்பொதிந்து (Embed) வைக்கப்பட்டிருந்த செய்தி இது.

மர்மநபர்
`சடோஷி நாகமோட்டோ’ ( Satoshi nagamoto). பிட்காயினின் பிரம்மா என்று நம்பப்படுகிற நபர். அப்படி நிஜமாகவே ஒருவர் இருக்கிறாரா, அவர்தான் பிட்காயினை உருவாக்கினாரா என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆனால் பிட்காயினைத் தெரிந்திருந்தால், சடோஷியைத் தெரிந்திருக்கும். சடோஷி என்கிற புனைபெயரில் ஒரு நபர் 2008-09 வாக்கில் உண்மையாகவே இணையத்தில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். பிட்காயினுக்கான முதல் மென்பொருளை அவர் உருவாக்கினார். பிட்காயின் பயன்பாட்டுக்கு வந்த பிறகு அவர் காணாமல் போய்விட்டார். அவர் நிஜமான மனிதராக இருந்தால் இன்றைய தேதியில் அவருடைய சொத்துமதிப்பு, நாற்பதாயிரம் கோடி ரூபாய்.
உலகப் பொருளாதார வரலாற்றில் சடோஷி மிகமுக்கியமான நபர். வங்கிகள் வழி நடக்கும் பணப் பரிவர்த்தனைகளை நேரடியாக மக்களிடமே வழங்குகிற முயற்சிகளில் இறங்கியவர். சடோஷியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள பிட்காயினையும் பிளாக்செயினையும் புரிந்துகொள்ள வேண்டும்.
மாயப்பணம்
2008-ல் ‘Occupy wallstreet’ போராட்டத்துக்குப் பிறகுதான் பிட்காயின் உருவானது. வங்கிகள் மக்களின் பணத்தை முறையாகக் கையாள்வதில்லை, மல்லையாக்களுக்குக் கடனாகக் கொடுத்துவிடுகிறார்கள், பரிவர்த்தனைகளுக்கு ஏராளமாகக் காசு வசூல் செய்கிறார்கள் என்கிற புகார்களுக்குப் பிறகுதான் வங்கிகளுக்கு மாற்றாக `பிட்காயின்’ முன்மொழியப்பட்டது. 2008-ல் சடோஷி எழுதிய கட்டுரையும் அதைப்பற்றியதாகத்தான் இருந்தது.

இன்று பிட்காயின் உலகின் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக மாறிவிட்டது. போலந்து, ஜப்பான் மாதிரி நாடுகளும் டெல், மைக்ரோசாப்ட் மாதிரி கார்ப்பரேட் நிறுவனங்களும்கூட பிட்காயின் பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளன. பிட்காயின் ஏடிஎம்கள், பிட்காயின் பற்றிய செய்தித்தளங்கள், பத்திரிகைகள் எல்லாம் வந்துவிட்டன. பிட்காயின் போலவே நிறைய க்ரிப்டோ கரன்ஸிகள் முளைத்துவிட்டன.
பிட்காயின் என்பது டிஜிட்டல் பணம். இது உலோகத்தாலோ, காகிதத்தாலோ, பிளாஸ்டிக்கிலோ செய்யப்பட்டதில்லை. ஒவ்வொரு பிட்காயினும் ஒரு 16 இலக்கக் குறியீட்டு எண்ணாக நமக்குக் கிடைக்கும். அதைத்தான் வாங்குவோம், விற்போம், சேமிப்போம். பிட்காயினை வாங்கவேண்டும் என்றால் பிட்காயின் டீலர்கள் மூலம் நம்முடைய ரூபாயையோ டாலரையோ அனுப்பினால், அன்றைய மதிப்பில் எவ்வளவு பிட்காயின் கிடைக்குமோ அதை நமக்குக் கொடுப்பார்கள்.
பிட்காயினை உற்பத்தி செய்யவோ கட்டுப்படுத்தவோ அரசோ, அமைப்போ, வங்கியோ எதுவுமே கிடையாது. இது பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது.
பிட்காயின்களை எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும், எந்த நேரத்தில் உருவாக்க வேண்டும், அதை எங்கே சேமிக்க வேண்டும் என்பவற்றையெல்லாம் யாருமே கட்டுப்படுத்துவதில்லை. அப்போ பிட்காயினுக்கு யார்தான் ஓனர்?
நாம்தாம். மக்கள்தாம். நாம்தாம் உற்பத்தி செய்ய வேண்டும். நாம்தாம் பயன்படுத்த வேண்டும். நாடு கடந்து, கலாசாரங்கள் கடந்து, மொழி இன அரசியல் சூழல்கள் கடந்து உலக மக்களால் உலக மக்களுக்காக ஓர் உலகக் கரன்ஸி. (சடோஷி ஒரு கம்யூனிஸ்டாக இருக்கலாமோ?!)
இப்போதைக்கு பிட்காயினை அமெரிக்க டாலர் மதிப்பில்தான் கணக்கிடுகிறார்கள். ஒரு பிட்காயின் மதிப்பு சுமாராக 7,000 டாலர். இந்திய மதிப்பில் ஏறத்தாழ 5 லட்சம் ரூபாய். இது பிட்காயின் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப ஏறும்; இறங்கும்.
பிட்காயினை இயக்கும் பிளாக்செயின், Peer to peer தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது. அதாவது, உலகின் எந்த மூலையிலும் இருக்கிற ஒரு மனிதனுக்கும் மயிலாப்பூரில் இருந்தோ மதுரையில் இருந்தோ வங்கிகள், அரசுகள், நிறுவனங்கள், இடைத்தரகர்கள் உதவி இல்லாமல் நேரடியாக பிட்காயினை அனுப்பவோ பெறவோ முடியும். மொபைலிலிருந்து விதவிதமாக பாட்டு, ஃபார்வர்டு மெசேஜ், வாத்துமுக செல்பியெல்லாம் அனுப்புகிறோம் இல்லையா... அதுபோல...
என்றால், நாமே நிறைய பிட்காயினை புரோகிராம் பண்ணி உற்பத்தி செய்து பெரிய பணக்காரர் ஆகிடலாம்தானே? கள்ளநோட்டு போல கள்ள பிட்காயின் அடிக்க முடியாது. காரணம் பிட்காயினில் எல்லாமே கிரிப்டோகிராபிதான்... அதனால்தான் அதை கிரிப்டோகரன்சி என்கிறோம்.
புதிர்நுட்பம்
கிரிப்டோகிராபி என்பது ஒரு தகவலை அல்லது செய்தியை மற்ற யாருக்கும் தெரியாமல் மறைத்துவைக்கிற ஏற்பாடு.
``அட்லது இட்லன்னைக்கு வட்லந்திருக்கா?’’
இது நம் வீடுகளில் பயன்படுத்தப்படும் லோக்கல் கிரிப்டோகிராபி. எல்லாச் சொற்களிலும் முதல் எழுத்துக்குப் பிறகு வருகிற ‘ட்ல’வை எடுத்துவிட்டால் நமக்குத் தேவையான வாக்கியம் கிடைக்கும்.
இதில் மேலே சொன்ன வாக்கியம் என்பது Encrypted message. இதில் வார்த்தையின் ஒவ்வொரு எழுத்துக்கும் முன்னால் ‘ட்ல’வைச் சேர்க்கவேண்டும் என்பது Cipher அந்த ட்லவை நீக்கினால் பொருள் கிடைக்கும் என்பது Key. கிரிப்டோகிராபியின் இரண்டு முக்கியமான விஷயங்கள் இந்த Cipher மற்றும் key. இதில் Cipher மற்றும் key எந்த அளவுக்கு வலுவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நம்முடைய தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும். அதனால் இந்த இரண்டையுமே அடுத்தவர்களால் உடைக்க முடியாததாக உருவாக்குவார்கள்.

இரண்டாம் உலகப் போரில்தான் கிரிப்டோகிராபி துறை உச்சம்பெற்றது. ஜெர்மனி இப்படிப்பட்ட சங்கேதக் குறியீடுகளை உருவாக்குவதற்காக `எனிக்மா மெஷின்’ என்ற ஒன்றை உருவாக்கி வைத்திருந்தார்கள். இங்கிலாந்தின் ஆலன் டூரிங் கண்டுபிடித்த ``british bombe” என்கிற எந்திரம் எனிக்மாவின் செய்திகளை உடைத்துத் தள்ளியது. அது உலகப்போரின் முடிவையே மாற்றியது . (இந்தச் சம்பவம் The imitation game என்கிற திரைப்படமாகவும் வெளியாகி ஆஸ்கர் விருதெல்லாம் வென்றது. )
இன்று டிஜிட்டல் உலகம் மொத்தமுமே இந்த கிரிப்டோகிராபியில்தான் இயங்குகிறது. நம்முடைய தகவல்கள் அத்தனையும் சேமிக்கப்படுவது இப்படித்தான். ஏடிஎம் தொடங்கி மொபைல் போன் வரை எல்லாமே கிரிப்டோதான். இந்த எலக்ட்ரானிக் பூட்டுகளை உடைத்துதான் ஹேக்கர்ஸ் கஷ்டப்பட்டுத் தகவல்களை, பணத்தை எல்லாம் திருடுகிறார்கள். ஹேக்கர்கள் உடைக்கமுடியாதபடி வலுவான பூட்டுகளைப் போடத்தான் உலகமே போராடுகிறது. பிளாக்செயின் தொழில்நுட்பம் இயங்குவதும் அப்படித்தான்!
மந்திரச்சங்கிலி
பிட்காயினின் உடைக்கமுடியாத Blockchain பூட்டுகளுக்குப் பின்னால் இருப்பவை Blocks. இந்த பிளாக்குகளுக்குள்தான் நம்முடைய பரிவர்த்தனை விவரங்கள் சேமிக்கப்படும். கமல் ரஜினிக்கு இன்ன தேதியில் இவ்வளவு பிட்காயின் கொடுத்திருக்கிறார், இந்த பிட்காயினை ரஜினி சிவகார்த்திகேயனுக்கு இந்த தேதியில் விற்றுள்ளார் என்கிற விவரங்கள் எல்லாம் இந்த பிளாக்குகளுக்குள் சேகரமாகும். இதை யாராலும் அழிக்கவோ மாற்றவோ முடியாது. பார்க்கலாம், கூடுதலாக விவரங்கள் சேர்க்கலாம். இதுமாதிரி புதுப்புதுப் பயனாளர்கள் இணைய இணைய லட்சக்கணக்கான பிளாக்குகள் பிட்காயின் நெட்வொர்க்கில் பதிவுசெய்யப்படும். இந்த அத்தனை பிளாக்குகளும் ஒன்றோடொன்று சங்கிலித்தொடர்போலப் பிணைக்கப் பட்டிருக்கும்.
இப்படி உலகம் முழுக்க ஒவ்வொருவரும் செய்கிற பிட்காயின் பரிவர்த்தனைகள் அத்தனையும் சேகரமாகும் இடம்தான் பிளாக்செயின். `உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் லெட்ஜெர்.’ இந்தக் கணக்குப்புத்தகத்தில் ஒவ்வொரு பரிவர்த்தனையும் தானாகவே என்ட்ரி ஆகிக்கொண்டே வரும். இதற்கான மென்பொருளை உருவாக்கி அதன் முதல் பிளாக்கைத் திறந்து பரிவர்த்தனைகளைத் தொடங்கி வைத்தவர் சடோஷி. அந்த முதல் பிளாக்கிற்கு Genesis block என்று பெயர்.
பிளாக்செயின் ஒரு Decentralized Network. யார் வேண்டுமானாலும் இந்த லெட்ஜரை அப்டேட் பண்ணலாம் . பிரதி எடுத்து வைத்துக்கொள்ளலாம், கண்காணிக்கலாம். நாம் எது செய்தாலும் எல்லோருக்கும் தெரியும் என்பதுதான் இதன் பலம். உலகம் முழுக்க ஒரே டேபிளுக்குக் மேல்... ஆனால், நம் பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக நடக்குமா, நம் பணம் பத்திரமாக இருக்குமா என்றால், அதற்குத்தான் பிட்காயின் வாலட்டுகள் இருக்கின்றன. அவையும் கிரிப்டோகிராபி முறையில் பாதுகாக்கப்பட்டவைதாம்.
இதையும் மீறி எப்படி பிட்காயினில் பணத்தைத் திருடுகிறார்கள்? இந்தத் திருட்டுகள் நடப்பது பிட்காயின் எக்சேஞ்சுகளில்தான். நேரடியாக பிளாக்செயின் தொழில்நுட்பத்தை உடைத்துப் பணத்தைத் திருடுவது சாத்தியமே இல்லை என்கிறார்கள். அதனால்தான் பிட்காயினைப் பிடிக்காதவர்களுக்கும்கூட பிளாக்செயினைப் பிடிக்கிறது.
பிளாக்செயினில் ஒவ்வொரு பிளாக்கும் SHA256 என்கிற கிரிப்டோ முறையில் பூட்டப்பட்டிருக்கும். அந்த டிஜிட்டல் பூட்டுகளைத் திறப்பது ஈஸி கிடையாது. பிளாக்செயின் நெட்வொர்க்கில் இணைந்திருக்கிற அத்தனை பயனாளர்களும் சேர்ந்துதான் திறக்கவேண்டும். அது சாத்தியமேயில்லை. பிளாக்செயினில் ஒருமுறை பரிவர்த்தனை நடந்துவிட்டால் அதை சடோஷியே நினைத்தாலும் மாற்றமுடியாது!
பிட்காயினின் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் கணிதப்புதிர்களை அவிழ்ப்பதன் வழி புதிய பிளாக்குகளை உருவாக்குபவர்ளுக்கு சில பிட்காயின்கள் கிடைக்கும். இதை Mining என்கிறார்கள். தொழில்நுட்ப அறிவும் திராணியும் இருக்கிற யாரும் மைனிங் பண்ணலாம். ஆனால் இந்த கிரிப்டோ புதிர்களை அவிழ்க்கிற மைனிங் விளையாட்டு அத்தனை சுலபமில்லை. எந்த அளவுக்கு கிரிப்டோ பூட்டை உடைக்க முடிகிறதோ அதே அளவுக்கு அந்தப்பூட்டு வலிமையானதாக மாறும் என்பதுதான் சடோஷி எழுதிவைத்திருக்கிற விதி. கூடவே, நமக்குக் கிடைக்கிற பிட்காயின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் ஒரு பிளாக்குக்கு 50 பிட்காயின்கள் கொடுத்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது 12 மட்டுமே கொடுக்கிறார்கள். எதிர்காலத்தில் அதுவும் கிடைக்காது. காரணம் மொத்தமாக இருக்கிற பிட்காயின்களே 21 மில்லியன்தான்.
ஆரம்பத்தில் சின்னச் சின்ன கணினிகளை வைத்துக்கொண்டே பிட்காயின்களை மைனிங் செய்ய முடிந்தது. பிறகு கொஞ்சம் அதிக விலைகொண்ட பெரிய சர்வர்கள் தேவைப்பட்டது. இப்போதெல்லாம் பெரிய தொழிற்சாலை அளவுக்கு சர்வர்களை இறக்கி மைனிங் செய்ய வேண்டியிருக்கிறது.
பிட்காயின் பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் இருக்கின்றன. இந்தியாவில்கூட பிட்காயின் பரிவர்த்தனைகளுக்குத் தடை இருக்கிறது. ஆனாலும் எல்லோருக்கும் பிளாக்செயினைப் பிடித்திருக்கிறது. இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாகப் பரிவர்த்தனைகள் செய்துகொள்கிற Decentralized transaction முறையையும், அதன் பாதுகாப்பு அம்சங்களையும் உலகமே வியக்கிறது. இந்த ஆண்டின் மிகமுக்கியமான வளரும் துறைகளில் ஒன்றாக பிளாக்செயின் தொழில்நுட்பம் மாறியிருக்கிறது. காரணம் அது வெறும் பிட்காயினுக்கு மட்டுமானதல்ல ஒட்டுமொத்த மனிதகுலத்திற்குமானது. பிளாக்செயினை மருத்துவத்துறையில் தொடங்கி அரசு அலுவலகங்கள் வரை பயன்படுத்தும் திட்டங்களில் இறங்கியிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு மகத்தான தொழில்நுட்பத்தைக் கொடுத்த சடோஷி நாகமோட்டோ ஒரு மனிதனே அல்ல, அது ஒரு செயற்கை நுண்ணறிவு எந்திரம் என்கிற வதந்தி உண்மையா? பிட்காயினால் பிரபலமான பிளாக்செயினை எங்கெல்லாம் பயன்படுத்தப்போகிறோம்?
- காலம் கடப்போம்