மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 95

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

ரண்டாம் நாளின் பிற்பகல் போரில், வேந்தர்களின் குதிரைப்படையை நிலைகுலையச்செய்தது பறம்புப்படை. நேரம் ஆக ஆக குதிரைகள் முற்றிலுமாகச் செயலிழந்தன. ஒருகட்டத்துக்குப் பிறகு உறுமன்கொடி முழுப் பாதுகாப்பை வேண்டி நின்றான். இன்றைய போரில் வேந்தர்படையின் முன்கள வீரர்களில் பெரும்பான்மையோர் நன்கு பயிற்சிபெற்ற நிலைப்படை வீரர்கள் அல்லர். எனவே, அவர்களைக்கொண்டு குதிரைப்படையைக் காக்கும் முயற்சி ஆபத்தில் முடிந்துவிடும் என நினைத்தான் கருங்கைவாணன். 

வீரயுக நாயகன் வேள்பாரி - 95

செயலிழந்து நிற்கும் குதிரைப்படைக்கு முழுமையான பாதுகாப்பைக் கொடுத்தால் மட்டுமே அதைக் காக்க முடியும். எனவே, இரண்டாம் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த படைப்பிரிவை உள்ளிறங்க உத்தரவிட்டான். பெரும் எண்ணிக்கையில் இரண்டாம் நிலைப்படை வீரர்கள் உள்ளிறங்கினர். குதிரைப்படையைக் காக்க, அவனுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை.

போர்க்களத்தில் உரிய காரணத்துக்காகப் படைகளை முன்னும் பின்னுமாக நகர்த்துவதில்தான் தலைமைத் தளபதியின் மதிநுட்பம் இருக்கிறது. ஆனால், அது தாக்குதல் வியூகமாக அமையும்போது பேராற்றலை வீரர்களுக்குத் தன்னியல்பிலே உருவாக்கும். தற்காப்புக்கு அவ்வாறு செய்யும் போது எதிர் மனநிலையை உருவாக்கும் ஆபத்தும் உண்டு.

வீரயுக நாயகன் வேள்பாரி - 95



முதல்நிலைப்படையைக் காக்க, இரண்டாம் நிலைப்படையை இறக்கவேண்டிய நிலை வந்துள்ளதை ஒவ்வொரு வீரனும் அறிவான். போர் தொடங்கிய இரண்டாம் நாளே வேந்தர் படை சற்றே திணறுவது வெளிப்படையாகத் தெரிந்தது. இரண்டாம்நிலைப்படை இறங்கியதும் பறம்புவீரர்கள் பின்னகர்ந்து தற்காப்பு நிலைக்கு வந்தனர். அவர்களைப் பொறுத்தவரை ஓங்கலத்தைப் பயன்படுத்திக் குதிரைப்படையில் பேரிழப்பை உருவாக்குவதுதான் அன்றைய தாக்குதலின் இலக்கு. அது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுவிட்டது.

திசைவேழரின் கை உயர்வு தட்டியங் காடெங்கும் முரசை ஒலிக்கச்செய்தது. இரண்டாம் நாள் போர் முடிவுக்கு வந்தது. வீரர்கள் பாசறைக்குத் திரும்பிக்கொண்டிருந்த நேரத்திலேயே நாகக்கரட்டில் இருந்த கபிலரை அழைத்துவரச் சொல்லி திசைவேழரின் மாணவன் வந்தான். தன்னை ஏன் அழைத்துள்ளார் திசைவேழர் என்பது கபிலருக்கு விளங்கவில்லை. வழக்கம்போல் வாரிக்கையனும் கபிலருடன் புறப்பட்டார்.

நாழிகை வட்டில் வைக்கப்பட்டிருந்த பரணின் அடிவாரத்தில் பந்தங்கள் ஏற்றப்பட்டிருக்க, அங்கேயே திசைவேழர் இருந்தார். போர்விதிகள் மீறப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டால், அவற்றை விசாரித்து முடிவெடுக்காமல் நிலைமான் கோல்சொல்லி போர்க்களம் விட்டு அகலக் கூடாது என்பது மரபு.

கபிலர் வாரிக்கையனோடு அவ்விடம் வந்தபோது கருங்கைவாணனுடன் பெருங்கூட்டம் நின்றுகொண்டிருந்தது. குதிரைப்படைத் தளபதி உறுமன்கொடியும் அமைச்சர்கள் ஆதிநந்தி, நாகரையர் ஆகியோரும் உடன் இருந்தனர். பறம்புவீரர்கள், தங்களின் ஆயுதத்தில் நஞ்சு கலந்து குதிரைகளைச் செயலிழக்கச் செய்து விட்டனர் என்பதுதான் குற்றச்சாட்டு.

வீரயுக நாயகன் வேள்பாரி - 95

குற்றச்சாட்டைக் கேட்டபோது அதிர்ச்சிக்குள்ளானார் கபிலர். நேற்றிரவு முடியனும் வாரிக்கையனும் தன்னைக் குறிப்பிட்டுப் பேசியது இதைப் பற்றித்தானா என நினைத்தார். வாரிக்கையன் இதை எதிர் பார்த்துதான் வந்துள்ளார்.

``எந்த ஓர் ஆயுதம், காயங்களின் தன்மையையும் அளவையும் மீறிப் பல மடங்கு அதிகமான பாதிப்பை உருவாக்குகிறதோ, அந்த ஆயுதம் ஐயத்துக்குரியது. இன்றைய பொழுதில் பறம்புவீரர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், குதிரைகளுக்கு மிகச்சிறிய காயங்களையே உருவாக்கியுள்ளன. ஆனால், குதிரைகளை முழுமையாகச் செயலிழக்கச் செய்துள்ளன. எனவே, இந்த ஆயுதங்கள் நஞ்சு பூசப்பட்டவை” என்று வாதிட்டான் உறுமன்கொடி.

வாரிக்கையன் வெற்றிலையை மென்று கொண்டே சொன்னார், ``பறம்பு அளித்த வாக்கை மீறாது. விலங்குகளின் நஞ்சோ, தாதுக்களின் நஞ்சோ பயன்படுத்தக் கூடாது என்று ஏற்றுக்கொண்ட போர்விதிகளை நாங்கள் மீறவில்லை.”

``அம்புகளால் தாக்கப்பட்ட குதிரைகளுக்கு, சிறுகாயங்கள்தான் உருவாகியுள்ளன. சிறு காயங்களால் எப்படி குதிரையைச் செயலிழக்கச் செய்ய முடியும்?”

``அம்புகளின்தன்மை அதற்குக் காரணம்” என்றார் வாரிக்கையன்.

``அதைத்தான் நாங்கள் சொல்கிறோம். நஞ்சூறிய அம்பை நீங்கள் பயன்படுத்தியுள்ளீர்கள்” என்றான் ஆதிநந்தி.

தலையை மறுத்து ஆட்டியபடியே வாரிக்கையன் கேட்டார், ``நஞ்சென்றால் என்ன?”

ஆதிநந்தி ஒரு கணம் திகைத்தான். அவன் என்ன விளக்கம் சொன்னாலும் வாரிக்கையன் அதிலிருந்து தப்பித்து வெளியே வருவார் என அவனுக்குத் தெரியும். எனவே, சற்று சிந்தித்தான்.

அதுவரை அமைதியாக இருந்த திசைவேழர் இப்போது கூறினார், ``எண்ணிலடங்கா குதிரைகள் செயலிழந்து கிடக்கின்றன. நீங்களோ சொற்களைக்கொண்டு விதிகளைக் கடக்க நினைக்கிறீர்கள்.”

திசைவேழரின் கூற்று கபிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், வாரிக்கையன் அதைப் பொருட்படுத்தவில்லை. வெற்றிலையை மென்று கொண்டே அவரைப் பார்த்துக் கேட்டார், ``நீங்களே சொல்லுங்கள். நஞ்சென்றால் என்ன?”

வீரயுக நாயகன் வேள்பாரி - 95

``கேள்வியின் வழியே எதிர்நிலையில் பயணிக்க நினைக்கிறீர்கள். அது நஞ்சுதான் என்பதற்கு, செயலற்றுக் கிடக்கும் குதிரைகளே சான்று. அது நஞ்சல்ல என்பதற்கு நீங்கள் அளிக்கும் சான்றென்ன?”

வாரிக்கையன் திசைவேழரைச் சொற்களால் மடக்க நினைக்கவில்லை. சொல்லிப் புரிய வைக்கவே நினைத்தார். ``எந்த அம்பு தைத்து குதிரைகள் செயலிழந்து கிடப்பதாகச் சொல்கிறார்களோ, அதே அம்பால் ஒரு மனிதனை தாக்குவோம். அவன் செயலிழந்தால் அது நஞ்சென்று ஏற்கிறேன்.”

யாரும் எதிர்பாராத பதிலாக இருந்தது. எதிர்த் திசையில் நிற்பவர்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

வாரிக்கையன், திசைவேழரைப் பார்த்து மீண்டும் சொன்னார், ``நஞ்சென்பது உயிர்களுக்குப் பொதுவானது; பாகுபாடற்றது. குதிரைகள் செயலிழந்து கிடப்பதன் காரணம் அம்புகள் செய்யப்பட்ட மரமாக இருக்கலாம். அந்தக் குறிப்பிட்ட மரம் அந்த விலங்குக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கலாம். சில உணவு சில உயிரினங்களுக்குச் செரிமானம் ஆகாததைப்போலத்தான் இதுவும். இதற்கெல்லாம் மேலாக ஒன்று சொல்கிறேன், அது நஞ்சன்று என்பதற்குச் சான்று எந்தக் குதிரையும் சாகவில்லை என்பதுதான்.”

ரவு குலசேகரபாண்டியனின் கூடாரத்தில் அதிக பேச்சில்லை. பறம்புவீரர்கள் நஞ்சைப் பயன்படுத்தித்தான் குதிரைகளைச் செயலிழக்கச் செய்தனர் என்பதை  மெய்ப்பிக்க முடியவில்லை. வாரிக்கையன் முன்வைத்த கூற்றை, திசைவேழர் ஏற்றுக்கொண்டுவிட்டார். தட்டியங்காட்டு நிலமெங்கும் வீழ்ந்து கிடக்கும் எண்ணிலடங்கா குதிரைகளை அவற்றுக்கான கொட்டிலுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க, பெருமுயற்சி நடந்து கொண்டிருந்தது. இரவுக்குள் அனைத்தையும் செய்துவிட முடியுமா எனத் தெரியவில்லை. ஆனாலும் கடும்முயற்சி நடந்துகொண்டிருந்தது.

பேரரசர்களின் கூடாரத்திலிருந்து கருங்கை வாணன் வெளியே வந்தான். மறுநாளைய போருக்கான திட்டமிடல் மிக விரைவிலேயே முடிந்தது.

வே
ங்கைமரத்தின் அடிவாரத்திட்டில் கூடியவர்களும், திட்டமிடலை முடித்துக்கொண்டு எழுந்தனர். பாரி, ஏழாவது குகை நோக்கி நடந்தான். இன்றிரவு குகைக்காவல் கூழையன். அவனும் சிறிது நேரம் கழித்து அந்தக் குகை நோக்கி நடந்தான்.

மற்றவர்கள் அவரவர்களின் தங்கும் இடம் நோக்கிச் செல்லத் தொடங்கினர். முடியன் மட்டும் வேங்கைமரத் திட்டிலேயே உட்கார்ந் திருந்தான். பறம்புப்படை முழுமையையும் கொண்டுசெலுத்தும் ஆற்றல்கொண்டவனின் முகத்தில் சற்றே கவலையின் கீற்று ஓடிக் கொண்டிருந்தது. உணவு அருந்திய பிறகு மீண்டும் அவன் அருகில் வந்து உட்கார்ந்தார் வாரிக்கையன்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 95

``உனது கவலைக்கான காரணம் என்ன?” என்று கேட்டார் வாரிக்கையன்.

சற்றே தயங்கினான் முடியன். ஆனாலும் வாரிக்கையனிடம் பகிர்ந்துகொள்வதில் தவறில்லை என்ற முடிவுக்குவந்து சொன்னான், ``மூன்று காரணங்கள் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.”

னது கூடாரத்துக்கு வந்துசேர்ந்த கருங்கை வாணனால் உறங்க முடியவில்லை. நீண்டநேரம் விழித்தே இருந்தான். அவனுக்கு முன்னால் இருந்த வட்டப்பலகையை விட்டு அவனுடைய கண்கள் அகலவில்லை. அப்போது வெளியே ஏதோ ஓசை கேட்பதுபோல் இருந்தது. என்னவென்று திரும்புவதற்குள் உள்நுழைந்த வீரன் ஒருவன் சொன்னான், ``பேரரசர் வருகிறார்.”

குலசேகரபாண்டியன் உள்ளே நுழைந்தார்.

நள்ளிரவில் தனது கூடாரத்துக்கு வந்துள்ள பேரரசரை வணங்கி வரவேற்றான் கருங்கை வாணன். அவனுக்கு முன்னால் இருந்த வட்டப்பலகையில் பறம்புவீரர்கள் பயன்படுத்தும் மெய்க்கவசம் ஒன்றும், வாள் ஒன்றும், ஓங்கல அம்பு ஒன்றும் வைக்கப்பட்டிருந்தன. இந்த மூன்றையும்தான் அவன் உற்றுப்பார்த்தபடி இருந்தான்.

``மூன்று காரணங்கள் என்னென்ன?” என்று கேட்டார் வாரிக்கையன்.

முடியன் சொன்னான், ``நாம் எடுக்கவேண்டிய முடிவை, எடுக்க முடியாதவாறு சிக்கலை நாமே உருவாக்கிக்கொண்டுவிட்டோம்.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 95

``எதைச் சொல்கிறாய்?”

``காற்றும் காற்றியும் வீசுவதற்கு ஏற்பவே நாம் திட்டமிடவேண்டியுள்ளது.”

``ஒருவேளை காற்றும் காற்றியும் நமக்கு ஒத்துழைக்கவில்லையென்றால், மாற்றுத் திட்டமும் நம்மிடம் இருக்கத்தானே செய்கிறது?”

``இருக்கிறது. ஆனால், எதை, எப்போது செய்யப்போகிறோம் என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்தக் குழப்பத்துடனே போர்க்களத்தில் தொடர்ந்து நின்றுகொண்டிருக்க முடியாது. எதிர்பாராத நேரத்தில் பாதிப்புகள் அதிகமாகிவிடக்கூடும்.”

முடியன் சொல்வது சரியான காரணமாகத்தான் இருக்கிறது என நினைத்த வாரிக்கையன், ``இரண்டாவது காரணம் என்ன?” என்று கேட்டார்.

``என் மகன் இரவாதன்” என்றான்.

``போர்க்களத்தில் மிகச்சிறந்த வீரத்தை வெளிப்படுத்திவருகிறான். அவன் குறித்துக் கவலைப்பட என்ன இருக்கிறது?”

``அவன் வெளிப்படுத்தும் வீரம்தான் எனக்குக் கவலையளிக்கிறது.”

``புரியும்படி சொல்.”

``அவன் தாக்குதல் போரை நிகழ்த்துவதில் நிகரற்றவனாக இருக்கிறான். அந்த அவசரத்தில் மற்றவற்றின் மீதான கவனத்தைத் தவறவிடுகிறான். உதிரன், எதிரிகளின் படையை நடுவில் பிளந்து உள்ளிறங்குகிறான். தாக்கும் வேகத்திலும் தற்காக்கும் உத்தியிலும் சிறந்தவனாக விளங்குவதால், அவனால் அதைச் செய்ய முடிகிறது. ஆனால் இரவாதன், சூழலைக் கவனிப்பதில் தவறிழைக்கிறான்.”

``அது இளைஞர்களுக்கே உரிய சிக்கல்.”

``புரிந்துதான் அவனை தாக்கும் உத்திக்கு மட்டும் பயன்படுத்துகிறேன். ஆனால், எதிரிகள் வேறு மாதிரி சூழ்ச்சி செய்துவிட்டால் ஆபத்தில் மாட்டிக்கொள்வான்.”

``நீ இன்னொன்றைக் கவனிக்கத் தவறுகிறாய். இளைஞர்கள் தங்களின் அவசரத்தால் ஏற்படுத்தும் இழப்பை, ஆவேசமிக்க தாக்குதலால் பல மடங்கு சரிகட்டிவிடுவார்கள். எனவே, நீ அதைப் பற்றிக் கவலைகொள்ளாதே. மூன்றாவது என்னவென்று சொல்.”

வாரிக்கையன் சொல்வதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத தயக்கத்துடனே மூன்றாவது காரணத்தைச் சொன்னான், ``தேக்கன், இன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். எதிரிப்படைத் தளபதி வீசிய வாள் ஒன்று அவரது நெஞ்செலும்பைக் கடுமையாக பாதித்துள்ளது. ஆனாலும் `நாளைக்கும் போர்க்களம் புகுவேன்’ என்று சொல்கிறார். `சற்று ஓய்வெடுத்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று சொன்னால் கேட்க மறுக்கிறார்” என்றான்.

``நான் அவனிடம் பேசி, சிகிச்சை எடுத்துக்கொள்ளச் சொல்கிறேன்.”

``நீங்கள் சொன்னாலும் தேக்கன் ஏற்க மாட்டார்.”

``ஏன்?”

``குடி ஆசானோ, குடி முடியனோ போர்க்களத்தில் இல்லையென்றால், பாரி போர்க்களம் புகுந்துவிடுவான். எக்காரணம் கொண்டும் பாரி பறம்பின் எல்லை தாண்டி, போர்க்களம் நோக்கிச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்பதால், அவர் ஓய்வெடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்” என்றான்.

மூன்றைப் பற்றியும் விளக்கினான் கருங்கைவாணன். ``நான் இன்று எனது வாளால் அந்தக் கிழவனைத் தாக்கினேன். இரும்பால் ஆன கேடயமே என்றாலும் அந்தத் தாக்குதலின் வேகத்தில் நெளிந்து அவனது எலும்புகளை நொறுக்கியிருக்க வேண்டும். ஆனால், அவனது மெய்க்கவசம் எனது வாளின் முழுவீச்சையும் உள்வாங்கி, அவனைக் காத்துள்ளது. எடை குறைவான, ஆனால் இரும்பைவிட வலிமையான கவசத்தைப் பூண்டு ஒவ்வொரு வீரனும் நிற்கிறான். இதோ, இந்தச் சாதாரண மரக்குச்சியினால் ஆன அம்பு, நிகரற்ற ஆற்றல்கொண்ட நமது குதிரைப்படையைச் செயலிழக்கச் செய்யும் என்பதை நம்மால் கற்பனைசெய்ய முடியுமா?” என்று கேட்டுக்கொண்டே வட்டப்பலகையில் இருந்த வாளைக் கையில் எடுத்தான் கருங்கை வாணன்.

``இது அவர்கள் பயன்படுத்தும் வாளா?” எனக் கேட்டார் குலசேகரபாண்டியன்.

``இல்லை பேரரசே! சாகலைவன் பயன்படுத்திய வாள். போர்க்களத்தில் எதிரியோடு போரிடும்போது இரு வாள்களின் மோதலில் சில இடங்களில் முனை மழுங்கும். ஆனால், இந்த வாளின் முனையைப் பாருங்கள். ஆங்காங்கே வெட்டுப்பட்டுள்ளது. ஒரு வாள் இன்னொரு வாளின் முனையை வெட்டி இறங்குமா என்ன? அவர்களது வாளின் முனை இரும்பின் தன்மையை மட்டும் கொண்டதன்று, அதைவிடக் கூர்மையான ஏதோ ஒன்றை அவர்கள் தமது வாளின் முனைக்குப் பயன்படுத்துகின்றனர் பேரரசே” என்றான். 

கேட்டுக்கொண்டிருந்த குலசேகரபாண்டியன், ``என்ன செய்ய வேண்டும் என்கிறாய்?”

``நான் முதலிலே குறிப்பிட்டதைப்போல, வழக்கமான போர் முறைகளால் இவர்களை வீழ்த்த நினைப்பது நமக்குப் பெருஞ்சேதத்தை உருவாக்கும். எனவே, வரைமுறையற்ற தாக்குதலால் அவர்களை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டும்” என்றான்.

``விதிகளைக் கைவிடுவது பற்றியே நீ சிந்திக்கிறாய். விதிகளைப் பயன்படுத்திக் கொள்வதைப் பற்றி நீ சிந்திக்க மறுக்கிறாய்.”

பேரரசரின் குற்றச்சாட்டு, கருங்கைவாணனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

``நான் முடிவெடுத்துவிட்டேன். நாளை மிக முக்கியமான நாள். எதிரிகளின் குதிரைப்படை பேரழிவைச் சந்தித்துள்ளது. எனவே, தற்காப்புப் போருக்கான உத்தியைத்தான் அவர்கள் பயன்படுத்துவார்கள். இந்நிலையில் நான் முன்னேறித் தாக்கப்போகிறேன். பறம்பின் மொத்தப் படையும் முன்னேறித் தாக்குவதை நாளைதான் அவர்கள் முதன்முறையாக எதிர்கொள்ளப்போகின்றனர். ஏறக்குறைய அவர்களின் அனைத்துப் படைகளையும் முற்பகலிலேயே நிலைதடுமாறச் செய்துவிடலாம். எதிரிகளின் முழு கவனமும் என்மீதுதான் இருக்கும். நான் இடது ஓரத்திலிருந்து தாக்கி முன்னேறுவேன். உதிரனோ, தனது வலிமை மிகுந்த விற்படை கொண்டு நடுவில் தாக்கி முன்னகர்வான். இந்த நேரத்தில் இரவாதனின் தலைமையிலான சூளூர் வீரர்களின் படை, ஓங்கலத்தையும் பகழி அம்பையும் பயன்படுத்தி எதிரிகளின் அணிவகுப்பைப் பிளந்துகொண்டு மூஞ்சல் நோக்கி நகர்வார்கள்.

மூஞ்சலைக் கண்ணில் பார்க்கும் தொலைவை அடைந்துவிட்டால் போதும். அதன்பிறகு, நம் வீரர்கள் பல மடங்கு ஆற்றலை அதிகப்படுத்தித் தாக்குவார்கள். உள்ளுக்குள் இருக்கும் நீலனை மீட்கும் எண்ணம் ஒவ்வொரு வீரனையும் மாவீரனாக மாற்றிவிடும். இந்தத் தாக்குதல் நடக்கும்போது இறுதி வரிசையில் தேக்கன் நிற்பான். அவனை இனி வாள் ஏந்த விட மாட்டேன். அதே நேரம் போர்க்களம் விட்டு வெளியேறவும் விட மாட்டேன்” என்றான் முடியன்.

நீண்ட சிந்தனைக்குப் பிறகு தனது புதிய திட்டத்தை விளக்கினான் கருங்கைவாணன். வகுத்துக்கொண்ட விதிகளின் வழியே எதிரியைச் சிக்கவைக்கும் புதிய திட்டம் இது. இதற்குக் குலசேகரபாண்டியன் ஒப்புதல் தந்தார். ``பாரி இல்லாத போர்க்களத்தின் கடைசி நாள் நாளைதான். நாளை மறுநாள் அவன் போர்க்களம் வந்தே ஆகவேண்டும். ஏனென்றால், குடி ஆசானையும் குடி முடியனையும் ஒரே நாளில் வீழ்த்தும் திட்டமிது” என்று முழங்கினான் கருங்கைவாணன்.

பொழுது விடிந்தது. கதிரவன் மேலெழுந்த ஐந்தாம் நாழிகையில் திசைவேழர் கைகளை உயர்த்தினார். மூன்றாம் நாள் போர் தொடங்கியது. போர்க்களத்தின் தன்மை இப்போது இருபக்கப் படைகளுக்கும் சற்றே பழகியிருந்தது. வேந்தர்படை வழக்கம்போல் அலையலையாய் முன்னகர்ந்து வந்து தாக்குதலைத் தொடங்கியது. வழக்கத்துக்கு மாறாக தொடக்கம் முதலே பறம்புவீரர்கள் ஆவேசம்கொண்டு தாக்கத் தொடங்கினர்.

போர் தொடங்கும் கணத்திலேயே எதிரிகளின் தாக்குதலில் இருந்த ஆவேசத்தைக் கருங்கை வாணனால் உணர முடிந்தது. வேந்தர்படை இன்று வகுத்திருந்த திட்டத்துக்கு எதிரிகள் ஆவேசம்கொண்டு முன்னேறுவது உதவியாகத்தான் இருக்கும் எனத் தோன்றியது. வழக்கம்போல் நடுப்பகல் வரை சற்றே நிதானம்கொண்டு தாக்குபவர்கள், நடுப்பகலில் நாகக்கரட்டிலிருந்து ஊதப்படும் காரிக்கொம்பின் ஓசையைக் கேட்டவுடன் தாக்குதலை வேகப் படுத்துவார்கள். உத்திகளையும் மாற்றுவார்கள். அடுத்த ஓசை கேட்கும்போது முழுமைகொண்ட வேகத்தோடு தாக்குவார்கள். இதைக் கணித்துதான் கருங்கைவாணன் இன்றைய உத்தியைத் தீர்மானித்திருந்தான். ஆனால், பறம்புவீரர்கள் தொடக்கத்திலேயே ஆவேசத்தோடு முன்னகர்வது தெரிந்தது.

மையூர்கிழாரின்மேல் பறம்புத் தளபதிகள் எவ்வளவு சினத்தோடு இருக்கிறார்கள் என்று கருங்கைவாணன் முழுமையாக அறிந்தே அன்றைய திட்டத்தை வகுத்திருந்தான். நடுப்பகல் வரை வழக்கமான தாக்குதல் போரை நடத்த வேண்டும். நடுப்பகலில் மலைமேலிருந்து காரிக்கொம்பு ஓசை கேட்கும்போது பின் களத்திலிருந்து முடியன் முன்பகுதிக்கு வருவான். அந்த நேரத்தில் மையூர்கிழாரின் தேர் அவன் கண்ணில்பட வேண்டும். முடியன், மையூர் கிழாரைத் தாக்க அவரை நோக்கி விரைவான். மையூர்கிழார் படையின் வலதுபுற ஓரத்தின் வழியாக முடியனைப் பின்னோக்கி இழுத்துச் செல்லவேண்டும்.

படையணியின் ஓரப்பகுதி வழியாக முடியனை எவ்வளவு தொலைவு பின்னோக்கி இழுக்க முடியுமோ, அவ்வளவு தொலைவு இழுத்துச் செல்ல வேண்டும். மையூர்கிழாரை வீழ்த்தும் வெறிகொண்டு முன்னகரும் முடியனை, வேந்தர்படைத் தளபதிகளான சூலக்கையனும் நகரிவீரனும் பின்தொடர வேண்டும். பொருத்தமான இடத்தில் படையணியின் சுழலுக்குள் சிக்கவைத்து அவனை வீழ்த்த வேண்டும்.

முடியன் தங்களது படையணிக்குள் இழுக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது கருங்கை வாணன், தேக்கனை நோக்கி முன்னகர்வான். பறம்புப்படைக்குள் எந்த இடத்தில் தேக்கன் இருந்தாலும் அந்த இடம் நோக்கி எதிரிகளைக் கிழித்துக்கொண்டு உட்புகும் ஆற்றல் கருங்கைவாணனின் படைக்கு உண்டு. மற்ற தளபதிகள், எதிரிகளை வேறு திசையில் முன்னேறவிடாமல் தடுக்கும் பணியைச் செய்வர். இதுதான் வேந்தர்படையின் இன்றைய திட்டமாக இருந்தது.

நேற்றைய போரில் வேந்தர்களின் குதிரைப்படை பேரழிவுக்கு உள்ளாகியிருந்த நிலையில், இன்று மூஞ்சலை நோக்கி நகர்வதற்கான திட்டமிடலோடு பறம்புப்படை இருந்தது. போர் தொடங்கியதிலிருந்து அதற்கான தன்மையில் அவர்கள் முன்னகர்ந்தனர். இன்று அவர்களுக்குக் கூவல்குடியினரின் மூலம் வழங்கப்படும் உத்தரவு வழக்கம்போல இருக்காது. காரிக்கொம்பின் ஓசை வெவ்வேறு பொழுதுகளில் தேவையறிந்து ஊதப்படும். போர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே முடியனின் தேர் பின்புறமிருந்து படையின் நடுப்பகுதியை நோக்கி நகரத் தொடங்கியது.
 
வழக்கம்போல் குளவன்திட்டின் மேல் நின்றிருந்த பாரி, போர்க்களத்தின் தன்மையை உற்றுகவனித்துக்கொண்டிருந்தான். மூன்றாம் நாள் போரில்கூட, தான் களம் புகுவதைப் பாரி ஏன் மறுக்கிறான் என்பது காலம்பனுக்குப் புரியவில்லை. திரையர்குலம் இனி சிறிய இழப்பைக்கூடச் சந்திக்கக் கூடாது என்பதைப் பாரி மீண்டும் மீண்டும் சொல்லிவருகிறான். அப்படியிருந்தும் கொற்றனைப் பலிகொடுக்க நேர்ந்ததைப் பாரியால் தாங்கிக்கொள்ள முடிய வில்லை. தான் போர்க்களம் புக நேர்ந்தாலும்கூட காலம்பன் போர்க்களம் புகக் கூடாது என்றே பாரி நினைத்தான். தட்டியங்காட்டில் திரையர்குலத்தினரின் குருதி வீழக் கூடாது என்ற பாரியின் எண்ணத்துக்கு, திரையர்குலம் கடந்தகாலத்தில் அடைந்துள்ள இழப்புகளே காரணம். பாரியும் காலம்பனும் போர்க்களத்தை உற்றுகவனித்துக்கொண்டிருக்கையில், சிறியதாய் ஏதோ ஓசை கேட்டுத் திரும்பினான் பாரி. அது இகுளிக்கிழவனின் ஓசை. விளக்கின் சுடர் மெள்ள அசையத் தொடங்கியது.

பாரி, வியப்போடு இகுளிக்கிழவனைப் பார்த்தான். அவனோ கைகளைத் தூக்கிக் கூவல் குடியினருக்கு உத்தரவு கொடுக்கக் காத்திருந்தான். இரண்டு நாள்களாக எதிர்பார்த்தபோது எதுவும் நடக்காமல், சற்றும் எதிர்பாராத நேரத்தில் கொம்மனும் கொம்மியும் உதவப்போவது வியப்பைத் தந்தது. பாரியின் மனதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, விளக்கின் சுடர் சட்டெனச் சாய்ந்தது. இகுளிக்கிழவன் கையை அசைக்க மலையெங்குமிருந்து கூவல்குடியினரின் பீறிட்ட ஓசை கணநேர இடைவெளியின்றி வெளிவந்தது. 

பறம்பின் குதிரைப்படை வீரர்களோ, வாள்படை வீரர்களோ இந்தக் கணத்தைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கல்லூழி அம்புகளை எடுத்து எய்வதற்குள் காற்று அவர்களைக் கடந்தது. ஆனால், உதிரனின் தலைமையிலான விற்படை வீரர்களோ, ஓசையைக் கேட்ட கணத்தில் காற்றின் முகப்போடு அம்பை இணைத்தனர். 

வீரயுக நாயகன் வேள்பாரி - 95

ஆறு அம்புகளைக் கொண்டது ஒரு கொத்து. ஒவ்வொரு வீரனுக்கும் மூன்று கொத்துகள் கொடுக்கப்பட்டிருந்தன. கண்ணிமைக்கும் நேரத்தில் முதல் கொத்தை எடுத்து நாணில் பொருத்தி முழு விசையோடு எய்தது விற்படை. மேற்கு மலைக் கணவாயின் பின்புறத்திலிருந்து கொம்மன் ஊத, வீறுகொண்ட காற்று தட்டியங்காட்டு நிலத்தை நோக்கி வலதுபுறமாகச் சீவிக்கொண்டு இறங்கியது. எண்ணிலடங்காத அம்புகள் காற்றின் முன்முகப்போடு இணைய, கண்பார்வைக்கு அப்பால் சீறிச்சென்றன அம்புகள்.

மலைமேலிருந்து கொம்போசை கேட்ட கணத்திலேயே சற்றே அதிர்ச்சிக்குள்ளானான் கருங்கைவாணன். வழக்கமான ஓசையாக அது இல்லை. வழக்கமான நேரத்திலும் ஊதப் படவில்லை. `இது என்ன புதுவகையாக இருக்கிறதே!’ எனச் சிந்தித்துக்கொண்டிருக்கும் போதுதான், சிறுபுல்லின் கனம்கொண்ட எண்ணிலடங்காத அம்புகள் அவன் தலைக்கு மேலே எங்கோ பறந்து சென்றுகொண்டிருந்தன. `என்ன இது?’ எனக் கருங்கைவாணனுக்கு ஒன்றும் புரியவில்லை. தேக்கனை நோக்கி முன்னேறிச் சென்றுகொண்டிருந்தவன் சற்றே குழப்பத்துக்குள்ளாகி அப்படியே நின்றான். பாய்ந்து செல்லும் எண்ணிலடங்காத அம்புகள் எங்கே செல்கின்றன என்று தலையைப் பின்புறமாகத் திரும்பிப் பார்த்தான். வெகு தொலைவுக்கு அப்பால் சென்றன.

வீசிய காற்றின் எதிர்ப்புறமாக வேந்தர்படை நின்றுகொண்டிருந்தது. குறுமணல் தூசிகளை அள்ளி எறிந்தபடி காற்று போய்க்கொண்டிருந்தது. வேந்தர்படை வீரர்கள், கண்களைக் கசக்கிக் கொண்டிருந்தனர். பறம்புவீரர்களைப் பொறுத்த வரை காற்று முதுகுப்புறத்தைத் தாக்கி முன்னகர்ந்தது. இவ்வளவு தொலைவு பறக்கும் அம்புகளை வாழ்வில் முதன்முறையாகப் பார்த்த கருங்கைவாணனுக்கு, ஒன்றும் புரியவில்லை. கண்களைக் கசக்கியபடியே திரும்பினான். எதிர்த்திசையில் பறம்புவீரர்கள் தங்களின் ஆவேசத் தாக்குதலைத் தொடங்கினர்.

கருங்கைவாணன் சட்டென விழிப்படைந்து பேரிகையை முழக்கச் சொல்லி, தன் வீரர்களை எதிரிகளின் தாக்குதலை எதிர்கொள்ள ஆயத்தப் படுத்தினான். பறம்புவீரர்களோ, அவ்வளவு தொலைவு செல்லும் அம்பை எய்த மறுகணமே வழக்கம்போலான தாக்குதலைத் தொடங்கினர். எய்யப்பட்ட கல்லூழி அம்பினால் ஏற்பட்ட விளைவு என்ன என்பது எய்த யாருக்கும் தெரியாது. அது கண்ணுக்கு அப்பால் எங்கோ நிகழ்ந்துகொண்டிருந்தது.

குளவன்திட்டில் இருந்தபடி பாரி பார்த்துக் கொண்டிருந்தான். எய்யப்பட்ட அம்புகள் மூன்றாம் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த வேந்தர்படையின் பிற்பாதியில் போய் இறங்கின. மூன்றாம்நிலைப் படையின் சரிபாதி வீரர்களின் மீது சுருள் அம்புகள் இறங்கின.
 
போர் நடந்துகொண்டிருந்த முற்பகுதியை மூன்றாம்நிலைப் படையினர் கண்கொண்டே பார்க்க முடியாது. அது எங்கோ நடந்து கொண்டிருந்தது. அவர்களைப் பொறுத்தவரை ஆயத்தநிலையில் நிற்க வேண்டும். அவ்வளவுதான். எந்தத் தொடர்பும் இல்லாமல் காற்றின் வழியே வானெங்குமிருந்து பறந்துவந்த வைக்கோல் அளவே கனம்கொண்ட அம்புகள் வீரர்களை நோக்கிச் சரசரவென இறங்கின.

பறந்து போன அம்புகள் எங்கே இறங்கின என்பது, முன்களத்தில் நின்றிருந்த கருங்கை வாணனுக்குத் தெரியவில்லை. இந்தத் தாக்குதல் என்ன என்பதும் அவனுக்குப் புரியவில்லை. ஏதோ நடக்கிறது என்பது மட்டும் புரிந்தது. இந்நிலையில்தான் முடியனின் தேர் நடுக்களம் நோக்கிச் சென்றது. முன்வகுத்த திட்டப்படி அந்தத் தேரின் பார்வையில் படும்படி மையூர்கிழாரைக் களத்துக்குள் வரச்சொல்லும் மறைக்குறிப்பு அனுப்பப்பட்டது.

தேரில் முன்னகர்ந்துகொண்டிருந்த முடியனின் எண்ணமெல்லாம், கல்லூழி வேர் எவ்விடம் கீழிறங்கியிருக்கக்கூடும் என்பதைக் கணிப்பதிலேயே இருந்தது. தேரின் மீது நின்றாலும் அவனது பார்வைக்கு அப்பால்தான் அந்தத் தாக்குதல் நிகழ்ந்திருந்தது. எப்படியிருந்தாலும் கல்லூழி அம்புகள் தைத்தவுடன் அவற்றின் பாதிப்பு தெரியாது. பிடுங்க முடியாமல் தவிக்கும்போதும் தசையோடு பிய்த்துக்கொண்டே அம்புகள் வெளிவரும்போதும்தான் பாதிப்பை உணரத் தொடங்குவார்கள். அப்போது அங்கிருந்து கொடுக்கப்படும் மறைக்குறிப்பு, முன்களத்தில் நிற்கும் வேந்தர்படையைப் பெருங்குழப்பத்துக்குள்ளாக்கும். அவர்களின் மொத்தக் கட்டுக்கோப்பும் அடுத்த சில பொழுதுகளுக்குள் முழுமுற்றாகக் கலையும் என எண்ணிக்கொண்டிருந்த போது ஏந்திய வில்லோடு மையூர்கிழார் சென்றுகொண்டிருந்த தேர் தெரிந்தது.

இத்தனை நாள்களாகப் போர்க்களத்தில் முடியன் எவனைத் தேடினானோ, அவன் இப்போது கண்ணில்பட்டான். தேரோட்டும் வலவனைப் பார்த்து, ``அந்தத் தேரைப் பின் தொடர்” என்று கூறினான். ஆனால், மறுகணமே அவனது எண்ணம் வேறானது. களத்தின் சூழல் இவ்வளவு அருமையான வாய்ப்பை உருவாக்கியுள்ளபோது நாம் மூஞ்சலை நோக்கிச் செல்வதே சரியான முடிவு எனத் தோன்றியது. ஆனாலும் மையூர்கிழாரை விட்டுவைப்பது சரியன்று என்றும் தோன்றியது. தேரோ, மையூர்கிழாரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. முடியனின் சிந்தனை, முடிவெடுக்க முடியாமல் தடுமாறியது.

ஏறக்குறைய இதே குழப்பத்தைச் சந்தித்தான் கருங்கைவாணன். `இத்தனை ஆயிரம் அம்புகள் காற்றில் எப்படி இவ்வளவு தொலைவு பறந்தன. அவையெல்லாம் எங்கே போய் இறங்கின. எங்கே இறங்கியிருந்தாலும் பல காதத் தொலைவுக்கு நிற்கும் நம் படைவீரர்களின் மீதுதானே இறங்கியிருக்கக் கூடும். பார்ப்பதற்கு மிகவும் சிறுத்த இந்த அம்புகளால் பெரிய பாதிப்பு எதுவும் நிகழ்ந்திருக்காது. ஆனாலும் படைத் தலைமைத் தளபதி என்ற முறையில் பின்களப்படையின் பாதிப்பை அறிந்த பிறகு முன்னேறிச் செல்வதுதான் சரியெனத் தோன்றியது. ஆனாலும் நாம் திட்டமிட்டபடி மையூர்கிழாரை நோக்கி முடியனின் தேர் செல்லத் தொடங்கிவிட்டது. இனி நாம் பொறுத்திருக்க வேண்டாம்’ என்று முடிவுசெய்து தேக்கனை நோக்கிப் பறம்புப்படைக்குள் புகுந்து உள்நுழையத் தொடங்கினான் கருங்கைவாணன்.

போர்க்களத்தில் தளபதிகளால் முழுமுற்றான தெளிவோடு இயங்க முடியாது. பல்லாயிரம் வீரர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிச்சரித்து முன்னகரும் போரியக்கத்தைத் துல்லியமாகக் கணிப்பது எளிதன்று. தளபதிகள், குழப்பத்துக்குள் சிக்கிச் சிக்கி மீள்பவர்களாகத்தான் இருப்பார்கள்.

கருங்கைவாணன் குழப்பத்துக்குள்ளிருந்து முடிவுக்கு வந்து தேக்கனை நோக்கிப் புறப்பட்டபோது, மையூர்கிழாரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த முடியன், தேரைச் சற்றே நிறுத்தினான். தொலைவில் குதிரையில் இருந்தபடி போரிட்டுக்கொண்டிருந்த வேட்டூர் பழையனைத் தனது தேரில் ஏறச் சொல்லி மையூர்கிழாரைக் கொன்றழிக்க உத்தரவிட்டு, அவனது குதிரையில் ஏறி இரவாதனை நோக்கிப் புறப்பட்டான் முடியன்.

பொழுதாகிக்கொண்டிருந்தது. வேந்தர்படையின் மூன்றாம் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த எண்ணிலடங்காத வீரர்கள் கல்லூழி அம்பை உருவி எடுக்க முடியாமல் திணறியபோதுதான் ஆபத்தின் அளவு புரியத் தொடங்கியது. கூச்சலும் குழப்பமும் மேலேறி வரத் தொடங்கியபோது முடியன் குதிரைப்படையோடு இணைந்து மூஞ்சலை நோக்கி முன்னகரத் தொடங்கினான்.

முன்திட்டப்படி தன்னைத் தொடர்ந்துவரும் தேரை, படையின் வலதுபுற ஓரமாகவே உள்ளிழுத்துச் சென்றுகொண்டிருந்தார் மையூர்கிழார். தளபதிகள் துடும்பனும் நகரிவீரனும் அவரைக் குறிவைத்துத் தங்களின் தேரை விரைவுபடுத்தினர்.

திட்டமிட்டபடி பறம்புப்படையின் பின்பகுதியை நோக்கி விரைந்து வந்தான் கருங்கைவாணன். எதிரிகளின் படையை விலக்கி முன்னகரும் உத்தியில் அவனது படை இணையற்ற அனுபவம்கொண்டது. விரைந்து முன்னகர்ந்து வந்த கருங்கைவாணனின் கண்களுக்கு வெகுதொலைவில் வாளூன்றி நிற்கும் தேக்கன் தனித்துத் தெரிந்தான்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...