அலசல்
Published:Updated:

காவேரியில் கடைசிப் போராட்டம்!

காவேரியில் கடைசிப் போராட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
News
காவேரியில் கடைசிப் போராட்டம்!

காவேரியில் கடைசிப் போராட்டம்!

காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட முதல் நாள் தொடங்கி 11-ம் நாள் வரை, ஏறி இறங்கியது அவரது ‘பல்ஸ் ரேட்’ மட்டுமல்ல... ஒட்டுமொத்தத் தமிழகத்தின் நாடித் துடிப்பும்தான்.

காவேரியில் கடைசிப் போராட்டம்!

அனுமதிக்கப்பட்டது முதலே அவரது உடல்நிலையில் முன்னேற்றம், பின்னடைவு என இரண்டும் மாறி மாறி இருந்தன. மஞ்சள்காமாலை இருப்பது உறுதி செய்யப்பட்டபோதே, அவரது உடல்நிலை மீண்டு வருவது கடினம் என்பதை உணர்ந்துவிட்டனர். ஆகஸ்ட் 4-ம் தேதி காலை கல்லீரல் சிறப்பு மருத்துவர் முகமது ரெலா கருணாநிதியின் உடல்நிலையைப் பார்த்துவிட்டு, ‘அவருக்கு இனி மருந்துகள் தந்தால், அதை உடல் ஏற்பதிலும் சிரமம் ஏற்படலாம்’ என்று சொன்னார். ஆகஸ்ட் 5-ம் தேதி வழக்கமாக நடத்தப்படும் சோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டபோது, அவரது கல்லீரல் செயல்பாடு முடங்கியது தெரியவந்தது. அதேபோல், சிறுநீரகத்தின் செயல்பாடும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்தது.

ஆகஸ்ட் 6-ம் தேதி கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகிக்கொண்டே வந்தது. அன்று காலையே கருணாநிதியின் உறவுகள் எல்லாம் காவேரியில் முகாமிட்டிருந்த நிலையில், தயாளு அம்மாளையும் கடைசியாகப் பார்க்க வைத்துவிடலாம் என்று குடும்ப உறுப்பினர்கள் முடிவுசெய்து, அவரை காவேரிக்கு அழைத்துவந்து, ஐ.சி.யூ-வில் கருணாநிதியைக் காணச்செய்தனர். அன்று மாலை கருணாநிதியின் உடல்நிலை மேலும் கவலைக்கிடமாகியது. இதயத்துடிப்பு தொடர்ந்து குறைந்துகொண்டே வந்துள்ளது. அதன்பிறகுதான், 24 மணி நேரக் கெடுவை மருத்துவமனை தரப்பில் கொடுத்தனர்.

அன்று நள்ளிரவே கருணாநிதியின் இதயத்துடிப்பின் செயல்பாடு நின்று போகும் அளவுக்கு நிலை இருந்துள்ளது. ஆனால், கடைசிக்கட்ட முயற்சிகளைச் செய்து, இதயத்துடிப்பைத் தொடர்ந்து இயங்கவைத்தனர். ஆனால், 7-ம் தேதி காலை நிலவரம் மீண்டும் மோசமாகவே, ‘மருத்துவ அறிக்கை வெளியிடலாம்’ என்று காவேரி மருத்துவமனை தரப்பில் கேட்டார்கள். ஆனால், கருணாநிதி உறவுகள் அப்போது வேண்டாம் என்று மறுத்துள்ளனர். அன்று காலை கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவருக்கும், ‘கருணாநிதியின் இறுதி நிமிடங்கள் எண்ணப்படுகின்றன’ என்ற தகவல் சொல்லப் பட்டது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவமனையில் ஆஜராகினர்.

காவேரியில் கடைசிப் போராட்டம்!

ஸ்டாலின், துர்கா, செல்வி, கனிமொழி, ராஜாத்தி அம்மாள், மோகனா உள்ளிட்டவர்கள் நான்காவது மாடியில் உள்ள அறைகளில் கண்ணீர்மல்க நின்றுள்ளனர். அழகிரியும், ஸ்டாலினும் தங்கள் மனஸ்தாபங்களை விட்டுவிட்டு, தந்தைக்குச் செய்யவேண்டிய கடமை குறித்துப் பேசியுள்ளார்கள். ஐ.சி.யூ அறைக்குச் செல்வதும் அழுதுகொண்டே வெளியில் வருவதுமாக இருந்தார் செல்வி. 12.30 மணிக்கு கருணாநிதியின் உடல்நிலையைச் சோதித்த மருத்துவர்கள், ‘இன்னும் சில மணி நேரங்கள்’ என்ற குறிப்பை ஸ்டாலினிடம் சொல்லியுள்ளனர். அதைகேட்ட உறவுகள் அப்போதே கண்ணீர்விட ஆரம்பித்து விட்டனர்.

சில நிமிடங்களில் தமிழரசு மனைவி மோகனா, அழுது கொண்டே மருத்துவமனை யிலிருந்து வெளியே வந்தார். அப்போதே, ‘கருணாநிதிக்கு ஏதோ நடந்துவிட்டது’ என்ற தகவல் வெளியே பரவியது. அதன்பிறகு, முதல்வர் வீட்டுக்குச் செல்வதற்காக ஸ்டாலின் உள்பட குடும்ப உறுப்பினர்கள் காவேரியிலிருந்து கிளம்பினர். நான்காவது தளத்திலிருந்து கீழ்த்தளத்துக்கு வந்த கனிமொழி, கீழே நின்ற நிர்வாகிகளைப் பார்த்துக் கண்கலங்கியபடி காரில் ஏறியுள்ளார். இதெல்லாம் கட்சியினருக்கு நிலைமையை உணர்த்தின.

அதேபோல், செவ்வாய்க்கிழமை காலை முதலே நான்காவது மாடிக்கு யாரையும் அனுப்ப வேண்டாம் என்று ஸ்டாலின் சொல்லிவிட்டார். ஸ்டாலின் அன்று முழுவதும் கண்கள் கலங்கியபடியே நான்காவது மாடியில் உறவுகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். எந்தநேரமும் எதுவும் நடக்கலாம் என்ற பரபரப்பு அனைவரிடத்திலும் இருந்துள்ளது. குடும்பத்தில் பெரியவர்கள் முதல் கருணாநிதியின் கொள்ளுப் பேரன்கள்வரை அனைவரையும் கருணாநிதியைக் காணச் செய்துள்ளார்கள்.

அடக்கம் செய்யப்படும் இடம் குறித்துப் பேச்சு எழுந்துள்ளது. தனி அறையில் முதலில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறிய ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளனர். பிறகு முதல்வர் சந்திப்புத் திட்டம் முடிவாகியது. கருணாநிதியின் மரணத்துக்குப் பிறகு உடலை எம்பாமிங் செய்ய வேண்டுமென மருத்துவர் களிடம் குடும்பத்தினர் சொன்னதும், ‘‘அதற்கான மருத்துவக் குழு ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே உள்ளது’’ என்று காவேரி மருத்துவமனை நிர்வாகம் சொல்லியுள்ளது. ராமச்சந்திரா மருத்துவமனைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கிருந்து மாலை ஒரு மருத்துவக்குழு காவேரி மருத்துவமனைக்கு வந்துவிட்டது.

காவேரியில் கடைசிப் போராட்டம்!

கருணாநிதியின் உடலை வைப்பதற்காக ஃப்ரீஸர் பாக்ஸுக்கு ஆர்டர் தெரிவிக்கப்பட்டது. மாலை 4.40 மணிக்கு ஆம்புலன்ஸும் மற்றும் ஃப்ரீஸர் பாக்ஸும் காவேரி மருத்துவமனையின் பின்புற வாசல் வழியாக வந்துள்ளது. கட்சியினருக்குத் தெரியாத வண்ணம் பின்பக்க லிஃப்டில் ஃப்ரீஸர் பாக்ஸ் கொண்டு செல்லப்பட்டது.

கருணாநிதியின் இறப்புச் செய்தியை அறிவிப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன், ஸ்டாலின் பெண்கள் அனைவரையும் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் செல்லுமாறு கூறினர். அதன்படி துர்கா, செல்வி உள்பட பலரும் ஐ.சி.யூ அறையில் கருணாநிதியைக் கடைசியாகப் பார்த்துவிட்டுக் கண்ணீர் மல்க காரில் கிளம்பினார்கள். செல்வி மட்டும் கருணாநிதி இருந்த அறையைவிட்டு வெளியேறாமல் அழுதுகொண்டே இருந்துள்ளார். அவரின் மகள் அவரை சமாதானம் செய்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து அவர் அழுதுகொண்டே இருந்ததும், அழகிரியும் தமிழரசுவும் அவரைச் சமாதானம் செய்து அழைத்துவந்துள்ளனர்.

மாலை ஆறு மணிக்கு கருணாநிதி இருந்த  அறைக்கு ஸ்டாலினை அழைத்தனர் மருத்துவர்கள். சிறிது நேரத்தில் கண்ணீர்மல்க வெளியே வந்த ஸ்டாலினை அங்கு நின்ற நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் கட்டியணைத்துச் சமாதானம் சொன்னார்கள். அதன்பிறகே மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

எம்பாமிங் செய்யும் பணிகள் ஆரம்பித்து 8 மணியளவில், லிஃப்ட் மூலம் கீழ்தளத்துக்குக் கருணாநிதியின் உடல் கொண்டுவரப்பட்டது. வழக்கமாக அணியும் மஞ்சள் துண்டு, கறுப்புக் கண்ணாடியுடன் லிஃப்டிலிருந்து கருணாநிதி உடலை வெளியே கொண்டுவந்த காட்சியைப் பார்த்து, கீழ்த்தளத்தில் இருந்த தி.மு.க நிர்வாகிகள் ‘ஓ’வென்று கதறினார்கள். சிம்ம முத்திரை தாங்கிய ஆம்புலன்ஸ் வாகனத்தில் கருணாநிதியின் உடல் ஏற்றப்பட்டது.

காவேரியில் கடைசிப் போராட்டம்!

இந்தச் சூழலை உணர்ந்துதான், மாலை 4 மணியிலிருந்து காவேரி மருத்துவமனையின் முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து அழ ஆரம்பித்துவிட்டனர். நேரம் செல்லச் செல்ல என்ன ஆகுமோ என்ற பரபரப்பு நிலை உச்சத்தைத் தொட்டது. இதனால் நூற்றுக்கணக்கான போலீஸார் கவச ஆடைகளுடன் பாதுகாப்புப் பணிக்குக் குவிக்கப்பட்டனர். மாலை 6 மணிக்கு மேல் மருத்துவமனை அறிவிப்பு இல்லாமலே அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு உண்மை புரிந்துவிட்டது. இந்த நிலையில், மாலை 6.40 மணியளவில் கருணாநிதி இறந்துவிட்டார் என்ற அறிவிப்பை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது. அதைக் கேட்டதும், தொண்டர்கள் மருத்துவமனை முன் தரையில் புரண்டு அழ ஆரம்பித்தனர். சிலர் அந்த அறிவிப்பை ஏற்கத் தயாராக இல்லை.

அதுவரை அமைதியாக அழுதுகொண்டிருந்த தொண்டர்கள், ‘மெரினாவில் இடம் இல்லை’ என்ற தகவல் வந்ததும், கொந்தளிக்க ஆரம்பித்தனர். அதுவே அந்தக் கூட்டத்தை உணர்ச்சிமயமாக மாற்றிவிட்டது. இரவு 9 மணியளவில் கருணாநிதியின் உடலைச் சுமந்தபடி  மருத்துவமனையை விட்டு ஆம்புலன்ஸ் வெளியேறியது. சாதாரண ஊர்வலமாக கோபாலபுரத்துக்கு ஆம்புலன்ஸை செல்லவிடாத தொண்டர்கள், அதை ஒரு பேரணியாக மாற்றினர். காவேரி மருத்துவமனையிலிருந்து கோபாலபுரம் வரை ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் ஊர்ந்து சென்றது. தொண்டர்களின் அழுகைக்குரல், சென்னை நகரின்  இரவு அமைதியைக் கிழித்துக்கொண்டி ருந்தது.

- அ.சையது அபுதாஹிர், ஜெ.அன்பரசன்

‘‘வேறொரு மனிதரால் இது முடியுமா?’’

ருணாநிதியின் உடல்நிலை குறித்த 6-வது அறிக்கையை ஆகஸ்ட் 6-ம் தேதி காவேரி மருத்துவமனை வெளியிட்டது. அதையடுத்து, 7-ம் தேதி மாலை நான்கரை மணிக்கு வந்த அறிக்கை, கருணாநிதி கவலைக்கிடமாக இருப்பதை அறிவித்தது. சிகிச்சை பலனின்றி அன்று மாலை 6.10 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

கருணாநிதி நீண்ட காலமாகவே தொண்டையில் ட்ரக்கியோஸ்டமி கருவி பொருத்தப்பட்ட நிலையில்தான் இருந்தார். நினைவிழந்து சிகிச்சையில் இருப்பவர்களுக்குத் தொண்டையில் சளி தேங்கிக்கொள்ளும். அதனால், மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். அந்தத் தருணத்தில், பாதுகாப்புக்காகவே அவருக்கு ட்ரக்கியோஸ்டமி கருவி பொருத்தப்பட்டது. இது நுரையீரலுக்கு ஆக்ஸிஜனை நேரடியாகக் கொண்டு செல்லும். காது மூக்கு தொண்டை நிபுணர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் இந்தச் சிகிச்சையை வழங்கினார். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இந்தக் கருவியை மாற்றிவந்தனர். இந்தக் கருவியுடன், சளியை அகற்ற சக்‌ஷன்  கதீட்டர் (Suction Catheter) என்கிற தனி ட்யூபும் பயன்படுத்தப்பட்டது. 

காவேரியில் கடைசிப் போராட்டம்!

உணவுக்காக கருணாநிதியின் வயிற்றில் பெக் ட்யூப் பொறுத்தப்பட்டது. இந்தக் கருவியைப் பொருத்தி அவருக்குச் சிகிச்சையளித்த டாக்டர் கே.ஆர்.பழனிசாமியிடம் பேசினோம். ‘‘ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக, திடீரென்று ஒருநாள் அவரால் வாய் வழியாகச் சாப்பிட முடியாமல் போனது. பொதுவாக நரம்பு பாதிப்புகள் உள்ளவர்களுக்கும், மூளைச் செயல்பாடுகள் இல்லாதவர்களுக்கும் இந்தக் கருவியைப் பொருத்துவோம். ஒருசில நாள்களுக்கு என்றால் மூக்குவழியாகவே செலுத்தலாம். அவருக்குத் தொடர்ந்து ட்யூப்பின் வழியாகவே உணவளிக்க வேண்டிய சூழல் இருந்ததால், வயிற்றில் துளையிட்டுப் பொருத்தினோம். முதல்முறை மட்டும் மருத்துவமனையில் பொருத்தினோம். மற்றபடி, ட்யூப் மாற்றுவதையெல்லாம் வீட்டிலேயேதான் செய்தோம். வயது மூப்பின் காரணமாக நோய்த்தொற்றும், அதனால் கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பாதிப்பும் ஏற்பட்டுவிட்டன. அதனால்தான் அவர் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்’’ என்கிறார் டாக்டர் கே.ஆர்.பழனிசாமி.

விபத்தில் ஒரு கண் முழுமையாகப் பாதிக்கப்பட்ட பிறகும், படிப்பதையோ, பக்கம் பக்கமாக எழுதுவதையோ அவர் நிறுத்தவில்லை அவர். எப்படி இது சாத்தியமானது? அவருக்குத் தொடர்ந்து கண் சிகிச்சையளித்து வந்த மருத்துவர் அமர் அகர்வாலிடம் பேசினோம். ‘‘அவர் மிகச்சிறந்த தலைவர் மட்டுமல்ல, மருத்துவர்கள் சொல்வதைச் சரியாகப் பின்பற்றும் மனிதரும்கூட. கண்ணை மிகவும் கவனமாகவும் அக்கறையாகவும் பார்த்துக்கொண்டார். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சரியான நேரத்தில் மருந்து ஊற்றிக்கொள்வார். சரியான கால இடைவெளியில் கண்களைப் பரிசோதனை செய்துகொள்வார். கண் எரிச்சல் மற்றும் வலிக்காகத்தான் அவருக்குப் பலமுறை சிகிச்சையளித்திருக்கிறேன். ஒரு கண்ணின் பார்வையுடன், வேறொரு மனிதரால் இவ்வளவு புத்தகங்களைப் படிக்கவோ, எழுதவோ முடிந்திருக்குமா என்பது தெரியவில்லை. ஒரு மருத்துவராக இது எனக்கே ஆச்சர்யமான விஷயமாக இருக்கிறது. ஏதாவது உதாரணத்துக்குச் சொல்லும்போதுகூட ‘கண்ணைப் போலப் பாதுகாப்பது’ என்று சொல்வார்களே... அதை நான் கலைஞரிடத்தில்தான் தெரிந்துகொண்டேன்’’ என்றார் அமர் அகர்வால்.

- இரா.செந்தில்குமார்
 ஜி.லட்சுமணன்