Published:Updated:

சர்வைவா - 25

சர்வைவா - 25
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வைவா - 25

சர்வைவா - 25

“பிட்காயின் CODEகள் எப்படி எந்தக் கொம்பனும் உடைக்கமுடியாத அளவுக்கு இரும்புக்கோட்டை போல இத்தனை வலிமையாக இருக்கிறது? அதில் இருக்கிற பல ஆயிரம் கோடிப் பணத்தை யாருமே எடுக்க முடியாத அளவுக்குப் பாதுகாப்பான கட்டமைப்பை எப்படி உருவாக்கினார்கள்? நிச்சயமாக இதை ஒரே ஒரு சூப்பர் மனிதரோ அல்லது திறமையான மனிதர்கள் குழுவோ உருவாக்கியிருக்க முடியாது. இதை ஏன், ஒரு செயற்கை நுண்ணறிவு எந்திரம் உருவாக்கியிருக்கக் கூடாது?

சர்வைவா - 25

யோசித்துப்பாருங்கள், பிட்காயின் எப்படிப் பரவலானது... பரிசோதனைக்கான பீட்டா வெர்ஷன் வந்ததா, டெஸ்டிங் நடந்ததா... இதுவரை அதில் ஏதாவது பிழைகள் ஏற்பட்டிருக்கிறதா... இல்லையே... நூறுசதவிகிதம் முழுமையான ஒரு விஷயம் எப்படி திடீரென முளைத்து வரும்?”

- UFO TODAY என்கிற யூடியூப் சேனல் ஒன்று வெளியிட்ட வீடியோவில் இந்த விஷயம் வருகிறது.

“பிட்காயினைப் படைத்தவர் மனிதனா, எந்திரமா, வேற்றுகிரகவாசிகளா?”  UFO TODAYதான் இந்த விவாதத்தைத் தொடங்கிவைத்தது.

யூடியூப் சேனல்களில் இப்படிப்பட்ட டுபாகூர் தளங்கள் ஏராளம். அதிலெல்லாம் ‘`வாய்ப்புக்காக இந்த நடிகர் செய்த காரியம் தெரியுமா?’’ வீடியோக்களுக்குப் பெரிய வரவேற்பு உண்டு. அப்படிப்பட்ட சேனல்களில் ஒன்றாகக்கூட இதை நினைத்துக் கடக்கலாம். ஆனால் இந்தக் கேள்வி முக்கியமானது. அது எப்படி உலகில் எந்த ஹேக்கரும் உடைத்து நுழையமுடியாதபடி பாதுகாப்பான ஒரு நெட்வொர்க்கை, மென்பொருள் கோடிங்கை உருவாக்க முடியும்? அந்த அளவுக்குத் திறமையானவர்கள் ஏன் முகம் காட்ட மறுக்கிறார்கள்? சடோஷி நாகமுட்டோ எங்கே? பிட்காயின் பிரம்மாக்கள் எங்கே?

சர்வைவா - 25



இந்த விவாதங்களுக்குப் பிறகும், `என்னுதுதான் பிட்காயின்’ என்று யாருமே முன் வரவில்லை. பத்திரிகைகள் பரபரப்பாக இதுகுறித்து விவாதித்தன. இதன் சாத்தியங்களை ஆராய்ந்தன. கடைசிவரை விடை கிடைக்கவேயில்லை. இன்றுவரை சடோஷி நாகமுட்டோவும் பிட்காயினும் அவிழ்க்க முடியாத மர்மங்கள்தாம்.

அதே வீடியோவில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. பிட்காயினை உருவாக்கிய எந்திரத்திற்குச் சக்தி கொடுத்தது தொழில்நுட்ப வளர்ச்சிபெற்ற வேற்றுகிரகவாசிகளாம். அந்த ஏலியன்கள் நம்மைக் கட்டுப்படுத்தக் கண்டுபிடித்த கருவிதான் பிட்காயின் என்றும் அதை நேரடியாகச் செய்யாமல் எந்திரங்களுக்கு அறிவூட்டிச் செய்திருக்கிறார்கள் என்றும் ஒரு கான்ஸ்பிரஸி தியரியை உருவாக்குகிறார்கள்.

காமெடியாக இருந்தாலும், புத்தர், கிருஷ்ணர், இயேசு, பிரமிடு, மாயன் காலண்டர், பெர்முடா முக்கோணம், மறைந்துபோன மலேசிய விமானம், ராமர்பாலம், திருப்பதி லட்டு என உலகில் எவையெல்லாம் மர்மமாக இருக்கின்றனவோ அவையெல்லாமே ஏலியன்களின் வேலைகள்தாம் என்றெல்லாம் கட்டுக்கதைகளை உருவாக்குவதுதான் அமெரிக்கன் ஸ்டைல். அதேபோல பிட்காயினைச் சுற்றியும் அதே மாதிரியான கதைகளை உருவாக்கத்தொடங்கியிருக்கிறார்கள். ஏலியனை விடுங்கள், அது வரும்போது ஒரு கை பார்க்கலாம், நிஜமாகவே ஒரு எந்திரம்தான் இப்படி பிட்காயினை உருவாக்கியிருக்கும் என்றால், அதற்கான தேவை என்ன?

அதிகாரம்! மனிதர்களின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவதன் வழியாக நம் கணினிகளுக்குள் ஊடுருவி நம்மைப் பற்றிய தகவல்களைத் திரட்டுவது. அதன் மூலம் நம் அன்றாட வாழ்வைச் சிக்கலுக்குள்ளாக்கி நம்மை அடிமைப்படுத்து வது. இதெல்லாம் பண்ணாமலேயே நாம் எந்திரங்களுக்குத்தான் அடிமைகளாக இருக்கிறோம் என்பது வேறுகதை (உதாரணம் - கூகுள்!)

ROGUE AI என்கிற சொல் இதுகுறித்த செய்திகளில் எல்லாம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது சொல்பேச்சு கேக்காத ரவுடி எந்திரம்.

வேறு எதற்காகவோ உருவாக்கப்பட்ட ஒரு எந்திரம் படைத்த எஜமானரை ஏமாற்றி இப்படி ஒரு படைப்பை உருவாக்கியிருக்கிறது. அது பிட்காயின் Node கணினிகளோடு நமக்குப் புரியாத முறையில் பேசுகிறது என்றெல்லாம் அடுத்தடுத்து கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

சர்வைவா - 25

நம்மிடம் இப்போதிருக்கிற செயற்கை நுண்ணறிவு எந்திரங்களுக்கு அவ்வளவு கூறு கிடையாது என்பதுதான் நிதர்சனம். அவை இப்போதுதான் ப்ரீகேஜி தாண்டியிருக்கின்றன. ஆனால் பிட்காயின் அதி வலிமையாக இருக்கிறதே? காரணம், அது இயங்குவது பிளாக்செயின் தொழில்நுட்பத்தில்... கிரிப்டோ சுவர்களால் வலிமையாகக் கட்டப்பட்டவை பிளாக்செயின் கட்டமைப்பு. அதனால்தான் அதை உடைப்பது அத்தனை கடினமாக இருக்கிறது. அவ்வளவுதான் விஷயமே...

ஆனால் எதிர்காலத்தில் இப்படி தானாகவே சிந்தித்து நம்மை அடிமைப்படுத்தத் திட்டம் போடுகிற `சகுனி எந்திரங்கள்’ நிச்சயம் தோன்றும். அவை மனித குலத்தை அடிமைப்படுத்த வஞ்சகமாக வலைவிரிக்கும்... ஏன் என்றால் அவை மனிதர்களிடம்தானே பாடம் படிக்கின்றன. மனித குணங்களைத்தானே பிரதி எடுக்கும்.

இப்போதைக்கு பிட்காயின் இயங்குவது மனிதர்களால்தான், அதைப் படைத்ததும் மனிதர்கள்தாம். வேண்டுமானால், ANTIVIRUS நிறுவனமான KASPERSKY-­ன் நிறுவனர்களில் ஒருவரான நடாலியா கேஸ்பர்ஸ்கி சொல்கிற தியரியை ஏற்றுக்கொள்ளலாம்.

``பிட்காயின் என்பது அமெரிக்க உளவுத்துறையின் படைப்பாக இருக்கலாம். மற்ற நாடுகளில் இருக்கிற தங்கள் உளவாளிகளுக்கும் ரகசியத் திட்டங்களுக்கும் பணப் பரிவர்த்தனை செய்ய அமெரிக்காவே உருவாக்கிய ரகசிய புராஜெக்ட்தான் பிட்காயின்...’’  இதுகூட ஓரளவு நம்பும்படி இருக்கிறது. அமெரிக்க உளவுத்துறை இதையெல்லாம் செய்யக்கூடியவர்கள்தாம்.

மற்றபடி செயற்கை நுண்ணறிவு எந்திரம் தானாகவே உருவாக்கிய தொழில்நுட்பம், வேற்று கிரகவாசிகளின் சதி என்பவையெல்லாம் Doomdayer-களின் பேத்தல். பிட்காயினின் பாதுகாப்பான கட்டமைப்புக்குக் காரணம் பிளாக்செயின் தொழில்நுட்பம். Thats All!

பிளாக்செயின்தான் எதிர்காலம்!

இப்படிப்பட்ட வலிமையான பிளாக்செயின் தொழில்நுட்பத்தைத்தான் உலகமே எதிர்காலத்திற்கான தொழில்நுட்பமாகப் பார்க்கிறது. World economic forum 2025-ல் உலக ஜிடிபியில் 10% பிளாக்செயின் தொழில்நுட்பத்தில்தான் சேமிக்கப்பட்டிருக்கும் என்று கணித்திருக்கிறார்கள். இந்தியா தொடங்கி உலகம் முழுக்க வெவ்வேறு விதமான பயன்பாடுகளில் பிளாக்செயினைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

மக்கள் பற்றிய தகவல்களைப் பாதுகாப்பாகச் சேமிக்க பிளாக்செயினை விட்டால் இன்றைக்கு வேறு உபாயங்கள் நமக்கு இல்லை. எனவே ஒரு நாட்டின் குடிமகன்களின் ஒட்டுமொத்த டேட்டாவையும் ஒன்றாக ஒரே குடையின் கீழ் தொகுக்கும் வேலைகளில் பல நாடுகள் இயங்குகின்றன (ஆதார் போல). Essentia என்கிற நிறுவனம் பின்லாந்து நாட்டில் அப்படிப்பட்ட புராஜெக்டில்தான் இருக்கிறது. பின்லாந்து பயன்படுத்தப்போகிற தொழில்நுட்பம் பிளாக்செயின்!  இதன்மூலம் பின்லாந்தில் இருக்கிற ஒவ்வொரு குடிமகனும் தன்னைப்பற்றிய ஒட்டுமொத்தத் தகவல்களையும் ஒரே இடத்தில் பெறவும், சேர்க்கவும் முடியும்! 

RFID என்கிற நிறுவனம் சீனாவில் குப்பைகளைச் சேகரிப்பதற்கும் பராமரிப்பதற்கும் கூட இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. அதன் ­SMART WASTE MANAGEMENT PROJECT-ல் இதுதான் பயன்படுத்தப்படுகிறது.

ஐபிஎம் நிறுவனமும் அமெரிக்காவின் FDA-வும் இணைந்து அமெரிக்கர்களைப்பற்றிய உடல்நலத் தகவல்களை பிளாக்செயின் மூலம் தொகுக்க 2017-லேயே ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். இதன்மூலம் எந்தப் பகுதியில் எந்த மாதிரியான வியாதிகள் பரவுகின்றன, என்ன மாதிரியான சிகிச்சைகள், மருந்துகள் அங்குள்ள மருத்துவமனைகளில் தேவை என்பவற்றையெல்லாம் கணக்கிட்டு பக்காவாக சிகிச்சை கொடுப்பார்களாம்.

2017-ல் ஐபிஎம் உருவாக்கிய HYPERLEDGER என்கிற புராஜெக்ட் சீனாவில் எங்கெல்லாம் அதிகமான அளவு சுற்றுச்சூழல் பாதிப்பு உருவாகிறது என்பதை ஆராய உருவாக்கப்பட்டது. இது சீனா முழுக்கவுள்ள தொழிற்சாலைகளில் கார்பன் வெளியீட்டு அளவு எவ்வளவு என்பதைக் கணக்கிட்டு அதன்மூலம் எங்கெல்லாம் நடவடிக்கைகள் தேவை என்பதைச் சொல்லுமாம்.

பிளாக்செயின் மூலம் பத்திரப்பதிவுகள் செய்துவைப்பது மிகமிகச் சிறந்த ஐடியா. காரணம், ஒருமுறை ஒருவருக்குப் பதிந்துவிட்டால் போலிப் பத்திரங்கள் வைத்தெல்லாம் ஏமாற்ற முடியாது. இதை ஏற்கெனவே துருக்கி செய்யத்தொடங்கி உலகிலேயே முதன்முதலாக இந்த விஷயத்தைச் செய்த நாடு என்கிற பெருமையைப் பெற்றுவிட்டது.

நீர் மற்றும் மின்சாரத்தை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதில் பிளாக்செயின் நிறையவே பயனுள்ளதாக இருக்கும். சிலி நாட்டின் மின்சாரப் பகிர்வுக்கு ஏற்கெனவே பிளாக்செயின் தொழில்நுட்பம்தான் கொஞ்சம் கொஞ்சமாகப் பயன்பாட்டுக்கு வர ஆரம்பித்துள்ளது. விமானச் சேவை நிறுவனங்களும் இதைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. லண்டன் விமானநிலையத்தில் இதைப் பரிசோதனை முயற்சியாகச் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் மூலம் வரி செலுத்தும் முறைகளையும் முயற்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இதன்மூலம் வரிவசூல் என்பதும் சுலபமாகும். நம்முடைய வரிப்பணமும் என்னவாகிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் பார்த்துத் தெரிந்துகொள்ள இயலும்.

உலகெங்கும் தேர்தலுக்கு ஆகிற செலவை முற்றிலுமாகக் குறைக்கக்கூடியது ஆன்லைன் மூலமாகத் தேர்தலை நடத்துவது. ஆனால் அதைப் பாதுகாப்பாக நடத்துவது அத்தனை சுலபமில்லை. பிளாக்செயின் அதை ஈஸியாக்கும் என்கிறார்கள். நார்வே, ஸ்பெயின் முதலான ஐரோப்பிய நாடுகள் இதைப் பரிசோதித்துப் பார்க்கும் முயற்சியிலிருக்கிறார்கள். ஜெர்மனியைச் சேர்ந்த கட்சி ஒன்று தங்களுடைய உட்கட்சித் தேர்தலை ஆன்லைனில் பிளாக்செயின் உதவியோடு நடத்திப் பார்த்திருக்கிறது.

இதுபோக ரஷ்யாவில் ரயில்நிலையச் செயல்பாடுகளுக்கு பிளாக்செயின் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் ஷேர் மார்க்கெட்டில், ஐரோப்பாவின் உணவு உற்பத்தியில், மீன்பிடி தொழிலில், ஆய்வுத் தொகுப்புகளில், கேமிங்கில், படைப்புகள் பாதுகாத்தல், காப்பிரைட்ஸ் பாதுகாப்புகளில் என பிளாக்செயின் ஏற்கெனவே உலகை ஆளத்தொடங்கிவிட்டது.

THE GREAT INDIAN BLOCKCHAIN MIGRATION


இந்தியாவில்கூட பிளாக்செயின் தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். டெக் மஹிந்திராவும் தெலங்கனா அரசும் இணைந்து ஒரு மாவட்டத்தையே பிளாக்செயின் தொழில்நுட்ப மாவட்டமாக மாற்றும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள்.  எஸ்பிஐ, ஐசிஐசிஐ, கோடாக் என ஏராளமான வங்கிகளும் பிளாக்செயினுக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். டிசிஎஸ் இவ்வகை புராஜெக்ட்களைக் கையிலெடுத்து வேலை பார்க்கத்தொடங்கி யிருக்கிறது. Blockchain Foundation of India என்கிற சங்கம் வைத்து வேலை பார்க்க ஆரம்பித்திருக்கிறது டெக்கீஸ் படை ஒன்று. ஐபிஎம் நிறுவனம் இந்திய மாணவர்களுக்கு இலவசமாக பிளாக்செயின் கோர்ஸ் ஒன்றையே ஆன்லைனில் தருகிறது. விபரம் https://onlinecourses.nptel.ac.in/noc18_cs47/preview.

ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியையும் பிளாக்செயின் மூலம் உருவாக்கி அதன்வழி ஊழலை ஒழிக்க முடியுமா என்கிற முயற்சிகளில் இருக்கிறார்கள்.  The Institute of Chartered
Accountants of India (ICAI) கூட ஆடிட்டர்களை பிளாக்செயின் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப Reskill செய்கிற முயற்சிகளில் இருக்கிறார்கள். மஹாராஷ்டிராவும் தங்களுடைய ஈ-கவர்னன்ஸ் மொத்தத்தையும் பிளாக்செயினுக்கு மாற்றும் திட்டத்திலிருக்கிறது. உண்மையில் மற்ற மாநிலங்களைவிடத் தமிழ்நாடு பிளாக்செயின் விஷயத்தில் ரொம்பவே பின்தங்கியிருக்கிறது. நாம் இப்போதாவது விழித்துக்கொள்ள வேண்டும். ஏன் என்றால், இன்னும் ஐந்தாண்டுகளில் பிளாக்செயின்தான் நம்மை ஆளப்போகிறது.

தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதுதான் பிளாக்செயினின் அடிப்படை... தகவல்கள் பாதுகாப்பாக இருக்குமா என்கிற ஐயம்தான் Artificial intelligence-ன் பிரச்னை...

இவர்கள் இருவரும் கூட்டணி போட்டால்? தொழில்நுட்ப உலகின் தல தளபதிகள் சேர்ந்தால் என்னாகும்...

- காலம் கடப்போம்

அதிஷா - ஓவியம்: கோ.ராமமூர்த்தி