Published:Updated:

சரித்திரங்கள் திரும்புகின்றன! - சிறுகதை

சரித்திரங்கள் திரும்புகின்றன! - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சரித்திரங்கள் திரும்புகின்றன! - சிறுகதை

ஆனந்த விகடன் 9.10.1988

ங்கிலாந்து.

1795-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் -ஆம்; அந்த மாதம் முழுவதுமே வேல்ஸ் இளவரசனின் மாளிகை விழாக்கோலம் பூண்டு காட்சியளித்தது. பல வண்ணக் கண்ணாடி விளக்குகளின் தகத்தகாய ஒளியில், தங்க இழை நிறைந்த பட்டுத் திரைகள் பளபளத்துக்கொண்டிருந்தன. தாழ்வாரங்கள், கைப்பிடிச் சுவர்கள் அனைத்திலும் நிறத்துக்கொன்றாக. மலர்க்கொத்துகள் அழகுகாட்டிக் கொண்டிருந்தன. வெண்பட்டு ஆடைகள் அணிந்த சேடியர், கரங்களில் ஏதாவது ஒரு பொன்னாலான பொருளைத் தூக்கிக்கொண்டு அங்குமிங்கும் பரபரத்துக்கொண்டிருந்தனர். ஆயுதமேந்திய காவலர்களின் முரட்டுக் காலணிகளின் ஒலி, ஒருவிதத் தாள ஓசைபோல ஓரத்துத் தாழ்வாரங்களில் கேட்டுக் கொண்டிருந்தன. புறாக்கூட்டம் போலும், கிளிக்கூட்டம் போலும் அரச குடும்பத்து இளம்பெண்கள் மாளிகைத் தோட்டத்தில் குழுமியிருந்தனர். அவர்கள்மீது பார்வையைப் பம்பரமாகச் சுழலவிட்டு, வாலிபப் பிரபுக்கள் அந்த வட்டாரத்தையே வட்டமிட்டுக் கொண்டிருந்தனர். வெள்ளைக்காரக் கிழங்களிலும் இருபாலோரும் அப்போதுதான் இளமை திரும்பியதுபோல, ஒருவரோடு ஒருவர் தோளைப் பிடித்துக்கொண்டும், இடுப்பை இறுக அணைத்துக்கொண்டும் அந்த நந்தவனத்தில் ஒய்யார நடை பழகிக்கொண்டிருந்தனர். மையத்தில் போடப்பட்டிருந்த நவரத்தினக் கற்கள் இழைத்த மேஜைமீது மது நிறைந்த ஜாடிகளையும் - அந்த ஜாடிகளின் அருகிருந்த, நன்கு பக்குவப்படுத்தப்பட்ட ஆட்டுக்கால் சப்பைகளையும் - நெய்யிலும், மசாலாவிலும் ஊறிய முழுக்கோழிகளையும் அந்தக் கூட்டம் காலி செய்துகொண்டிருந்தது. 

சரித்திரங்கள் திரும்புகின்றன! - சிறுகதை

ஏப்ரலில் எல்லா நாட்களும் கொண்டாட்டமும், குதூகலமும் எனினும், அந்த ஒரு நாள் - அவற்றில் ஒரு முக்கியமான நாள். மூன்றாம் ஜார்ஜ் மன்னர், தனது மகன் நான்காம் ஜார்ஜுக்கு மணமுடிக்கத் தீர்மானித்த மணமகள் அன்றுதான் வரப் போகிறாள்! அரசனாகும் வரையில், நான்காம் ஜார்ஜுக்கு ‘வேல்ஸ் இளவரசன்’ என்ற பட்டம்தானே!

உற்சாகம் கரைபுரண்டு - கேளிக்கைமிகுந்து - அந்த மாளிகையேகூட மதுபோதையில் அசைந்து அசைந்து கும்மாளம் போடுகிறதோ என எண்ணுகிற அளவுக்கு மகிழ்ச்சி வெள்ளம் அலைமோதும் அந்த நேரத்தில், வேல்ஸ் இளவரசன் நான்காம் ஜார்ஜ் மட்டும் வைரமிழைத்த ஒரு நாற்காலியில் சாய்ந்த நிலையில், தங்கத் தகடு போட்ட ஒரு மேஜையில் தலையைக் கவிழ்த்தவாறு அமர்ந்திருந்தான். ஒரு வெள்ளி ஜாடி நிறைய மது வைக்கப்பட்டிருந்தது. வாத்துப் போன்ற நடுத்தர வயதுடைய மாதொருத்தி, இரண்டு பொற்கோப்பைகளைக் கொண்டு வந்து ஜாடிக்கருகே வைத்துவிட்டுப் போனாள். எதையும் கவனிக்காதவனாகக் கவலையால் தாக்குண்டிருந்தான் அந்தக் காளை!

அவனருகே மற்றொரு நாற்காலியில் சுருட்டுக் குழாயிலிருந்து புகையை இழுத்து இழுத்து, அங்கொரு மேக மண்டலத்தை உருவாக்குபவனைப் போல, ஜார்ஜின் நண்பன் சார்லஸ் ஜேம்ஸ்பாக்ஸ் உட்கார்ந்திருந்தான். மாளிகையின் கூட்டங்களிலும் மாடங்களிலும் ஆங்காங்கு இசை, நடனமென இன்பக் களியாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, மன வாட்டத்துடன் மணமகன் எவ்வளவு நேரம்தான் அப்படியே உட்கார்ந்து கிடப்பது?

அவனது சோக மௌனத்தைக் கலைக்க முடிவு செய்து கொண்டவனாக, சார்லஸ் ஜேம்ஸ்பாக்ஸ் மெள்ளக் கனைத்துக் கொண்டான். பிறகு லேசாக இளவரசனைத் தொட்டான், பேசவும் தொடங்கினான்:

‘`ஜார்ஜ்! நமது அரண்மனை மட்டுமல்ல; அயர்லாந்து - இங்கிலாந்து ஆகிய இரு நாட்டுகளிலுமுள்ள நமது ராஜ குடும்பத்துப் பிரபுக்கள், பிரதானியர், நம்மீது பிரியமுள்ள மக்கள் எல்லோருமே உனது திருமணச் செய்தியினால் மகிழ்ச்சியாக இருக்கும்போது நீ மட்டும் வதங்கிப்போன வாழைத்தண்டு மாதிரி கிடக்கிறாயே... வெளி உலகத்துக்காகவாவது நீ சந்தோஷமாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டாமா..?’’

‘`சார்லஸ்! என்னை என்ன செய்யச் சொல்லுகிறாய்? மேரி ஆனியை என்னால் மறக்கவே முடியவில்லையே! அவளை மறந்துவிட்டுக் கரோலினாவை மணப்பதென்றால் - ஆனியிடம் இன்பம் அனுபவித்த என்னைப்போன்ற ஓர் ஆண் மகனுக்கு முடிகிற காரியமா? மேரி ஆனி, மேனியெழில் மிக்கவள் மட்டுமல்ல; என் காமப்பசிக்குத் தெவிட்டாத தீனியாகவும் இருந்தவள்! இடைவிடாது இன்பம் தந்தவள் - இப்போதும் தந்து கொண்டிருப்பவள் - இனியும் தரத் தயாராக இருப்பவள். சார்லஸ்! நான் அவளைத் திருமணம் வேறு செய்து கொண்டிருக்கும்போது, அவளை உதறிவிட்டுக் கரோலினாவை என் மனைவியாக்கிக்கொள்ள எப்படியப்பா என் மனம் இடம் தரும்..?’’

‘`அட, என் முட்டாள் நண்பா! யார் அந்த மேரி ஆனி? இரண்டு முறை விதவையாகி உன்னை விவாகம் செய்து கொண்டவள்! அதுவும், அவள் உனக்கு ஆசைநாயகியாக இருக்க மறுத்துவிட்டதால், அவளைத் திருமணம் செய்துகொண்டாய்! ஒரு குழந்தை வேறு பெற்றுக்கொண்டவளிடம் என்னப்பா குலாவல், கொஞ்சல் எல்லாம் வேண்டிக் கிடக்கிறது!’’

‘`உனக்குத் தெரியாது அவள் உடற்கட்டு! பிறந்த குழந்தையை அவள் என்னமோ பிரியாமல் மார்பிலும் மடியிலும் போட்டு வளர்க்கிறாள் என்று எண்ணிக்கொண்டு உளறுகிறாய் நீ! தாய்தான் அவள்! தாதி வேலை பார்ப்பது வேறொருத்தி! இரண்டு முறை விதவையானவள் என்கிறாயே, அதனால் அவள் பெற்ற அனுபவம் முழுவதையும் நான்தானே பயன்படுத்திக்கொள்கிறேன்!’’

‘`மேரி ஆனி ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவள். என்னமோ - அந்த பர்ட் - அதுதான் அந்த வாலிபப் பாதிரி, பத்து வருடங்களுக்கு முன்பு ஐந்நூறு டாலர் லஞ்சமும், ஒரு சிறிய பதவி உயர்வும் உன் மூலம் பெற்றுக்கொண்டு, உங்களிருவரின் திருமணத்தை ரகசியமாக நடத்தி வைத்துவிட்டான். அந்தத் திருமணம் எந்த வகையிலும் உன்னைப் பொறுத்தவரையில் செல்லாது. இருபத்தைந்து வயதுக்குக் குறைவாக இருக்கும்போது அரசரின் அனுமதியின்றித் திருமணம் செய்துகொள்ளக்கூடாது! நீ மேரி ஆனியை ரகசியமாக மணந்தபோது, உனக்கு இருபத்துமூன்று வயதுதான்! அது மட்டுமல்ல, கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவரை மணந்து கொண்டால், மகுடம் புனையப் பெருந்தடை உண்டு. ஏதோ உன் திருமணம் சட்டப்படி நடக்காமல், செல்லாமல் போனதாலும் - வெளியே தெரியாத விவகாரமாகப் போனதாலும், அரசுரிமையை இழக்காமல் தப்பித்திருக்கிறாய்!’’

‘`சார்லஸ்! என்னால் அரசுரிமையையும் இழக்கமுடியாது! அதிகார போதை, ஆடம்பரம், அந்தஸ்து இவை என்னை ஆசைகாட்டி அழைத்துக்கொண்டிருக்கின்றன! அதேபோல, என் ஆசைக் கிளி மேரி ஆனியின் அழகும் குழைவும் நெளிவும் வளைவும்... அப்பப்பா! என்னைச் சுண்டியிழுத்துக் கொண்டேயிருக்கின்றன!’’

‘`ஜார்ஜ்! மேரி ஆனி உன்னை மிகவும் கவர்ந்து விட்டாள் என்பதும், அவளது லீலா விநோதங்களுக்கு நீயோர் அடிமையாகிவிட்டாய் என்பதும் எனக்குத் தெரியாத விஷயங்களல்ல! ஆனால், ஒன்று - நீ மேரி ஆனியை மட்டும் காதலித்தவனல்லவே! பதினேழாவது வயதை நீ எட்டிப் பிடிப்பதற்குள்ளாகவே நாமிருவரும் கட்டிப்பிடித்த கன்னி இளமான்கள் எத்தனை பேர் என்பதை மறந்துவிடாதே! அந்த நடிகை மேரி ராபின்சனுடன் நீ அடித்த கூத்தும் கும்மாளமும்! நீச்சல் குளத்தில் ஒரு நாள் தண்ணீருக்குப் பதிலாக மதுவை நிரப்பச் சொல்லி இருவரும் நீந்தி மயங்கினீர்களே, நினைவிருக்கிறதா..?’’

‘`ஏய் சார்லஸ்! நீதானே அந்த ஏற்பாட்டை அன்றைக்குச் செய்து முடித்தாய்! அந்த நாளை நான் என்றுமே ஞாபகத்தில் பதிய வைத்துக் கொண்டிருப்பேன். கடல் முழுமையும் மதுவாக்கி, அதில் கலம் செலுத்திக் களிக்க வேண்டும்; காரிகைகள் பலரைத் தழுவியவாறு என கனவு காணும் எனக்கு - அந்த ஒரு நாள் நீச்சல் குளத்தில் நீ நிரப்பிக் கொடுத்த மது என் நினைவை விட்டகலாது!’’

‘`அப்படி உன்னோடு ஒத்துழைத்த அந்த நாரீமணி நடிகை மேரி ராபின்சனையே மறந்துவிட்டுத்தானே - மேரி ஆனியை மஞ்சத்து ராணியாக்கிக்கொண்டாய்! இப்போது மேரி ஆனியை ஒதுக்கிவிட்டுக் கட்டழகி கரோலினாவை மணந்துகொள்ளத் துணிய வேண்டியதுதான்!’’

‘`உனக்குத் தெரியாது சார்லஸ்! மேரி ஆனி வழங்கும் இதழ்த் தேனின் தித்திப்பு! அடைகாக்கும் கோழியிடம்கூட அவ்வளவு இதமான கதகதப்பைப் பெற முடியாது - மேரி ஆனியின் அணைப்புச் சுகத்தில் கிடைக்கிற கதகதப்பைப் போல! அவள் கால் பெருவிரல் நகத்தில் நான் முகம் பார்ப்பேன் - இடையில் இரு கை சேர்ப்பேன் - நாளெல்லாம் அவளை இன்பக் கோயிலின் இறவாத தேவதையாய்த் தொழுது கிடப்பேன்! அவளெங்கே? எனை மணக்க இப்போது அரண்மனையை நாடி வரும் கரோலினா எங்கே..?’’

‘`உன் தந்தை மூன்றாம் ஜார்ஜ் மன்னருக்குப் பிறகு முடி புனைய வேண்டியவன் நீ!’’

‘`அவர் என்ன அவ்வளவு சீக்கிரமாகவா அந்தச் சிம்மாசனத்தை விட்டுப் பிரிந்துவிடுவார்! அவர் உடல், உயிர் எல்லாம் மிகவும் கெட்டி!’’

‘`இயற்கை என்றோ ஒரு நாள் அவரை அழைத்துக்கொள்ளாமலா போய்விடும்? அப்போது நீதானே மன்னன்! உனக்குப் பிறகு ஒரு வாரிசு தேவையில்லையா? அந்த வாரிசை, மேரி ஆனி மூலமோ அல்லது அந்த நடிகை மேரி ராபின்சன் மூலமோ நீ அடைவதை இந்த நாட்டுச் சட்டம் ஏற்குமா? அதற்குக் கரோலினாதானே தேவைப்படுகிறாள்! அவள் யார்? உன் அத்தை மகள்தானே! இன்னுமொரு மிகப் பெரிய ஆதாயமும் கரோலினாவின் திருமணத்தினால் உனக்குக் கிடைக்க இருக்கிறது!’’

‘`என்ன ஆதாயம் சார்லஸ்..?’’

‘`எதற்காகக் கரோலினாவை உனக்கு மணம் முடிக்க மன்னர் முடிவு செய்தார் என நினைக்கிறாய்? உனது ஆர்ப்பாட்டக் கேளிக்கைகளால்...’’

‘`நமது... என்று சொல் சார்லஸ்!’’

‘`சரி, திருத்திக்கொள்கிறேன்! நமது ஆர்ப்பாட்டக் கேளிக்கைச் செலவுகளால் உனக்கு ஏற்பட்டுள்ள பெருங் கடன் சுமையை அடைத்துவிடுவதாக உனது வருங்கால மாமனார் வில்லியம் ஃபர்டினான்ட் பிரபு உறுதியளித்துள்ளார். உன் அத்தை அகஸ்டா - அதுதான் உன் தந்தையின் சகோதரி சாமான்யமான பெண்மணி அல்லவே! தன் மகளை உனக்கு மனைவியாக்கி, தனது பேரனுக்கோ, பேத்திக்கோ இங்கிலாந்தின் வாரிசுரிமையைப் பெற்றுக்கொள்ளத் திட்டம் தீட்டிவிட்டாள்! இருந்தாலும், கரோலினா பேரழகி! அந்தக் கரும்பைச் சுவைக்கத் தயாராகிக் கொள்!’’

சார்லஸ் ஜேம்ஸ்பாக்ஸ், புன்னகை நெளிய இதனைக் கூறிக்கொண்டே, ஜார்ஜின் தோளைப் பிடித்து ஒரு குலுக்குக் குலுக்கியவாறு எழுந்து நின்று மேஜைமீதிருந்த கிண்ணங்களில் மதுவை நிறைத்தான். ஒரு கிண்ணத்தை ஜார்ஜ் கையில் கொடுத்துவிட்டு, தனது கிண்ணத்தைக் காலி செய்தான். மகிழ்ச்சியில் துள்ளவும், மன வருத்தத்தை மறக்கவும் ஒரே மருந்து மதுவென இளமைப்பருவம் முதல் பழகிக்கொண்ட ஜார்ஜ், மூன்றாம் ஜார்ஜுக்குப் பிறந்த ஒரு முட்டாள் பிள்ளையல்ல! ஜெர்மன், இத்தாலி, பிரெஞ்சு மொழிகளில்கூடத் தேர்ச்சி பெற்றவன்தான்! படிப்புக்கும் பண்பாட்டுக்கும் தொடர்பு இருக்க வேண்டுமென்பது இலக்கணமாயினும், விதிவிலக்காக இருந்து அந்த இலக்கணத்தை உடைத்தெறிந்தவன் அவன்! அவனைக் கெடுப்பதற்கென்றே ஓர் இளைஞர் கூட்டம்! அந்தக் கூட்டத்துக்கு வழிகாட்டிதான் சார்லஸ் ஜேம்ஸ்பாக்ஸ்!

ஜார்ஜின் திறமையைப் பெருக்கவும் ஆட்சிப் பொறுப்பை ஆற்றலுடன் ஏற்கவும் - ஒரு பயிற்சியாக அவனது தந்தை மூன்றாம் ஜார்ஜ் அவனது இருபத்தோறாம் வயதில் அவனிடம் அரசின் ஒரு தனி நிர்வாகத்தை ஒப்படைத்தார். இளம் நிர்வாகியாக நற்பெயர் எடுப்பான் என நாட்டோர் எதிர்பார்த்ததற்கு மாறாக, அவன் தன்னை ஓர் அரைவேக்காடாகவும், பிஞ்சிலேயே வெம்பிவிட்ட காயாகவும் அடையாளம் காட்டிக்கொண்டான்.

அண்ணன் மகனான அவனுக்குத் தனது மகள் கரோலினாவை மணமுடிப்பதன் வாயிலாக இங்கிலாந்தின் வாரிசுரிமை, தனது பேரன் அல்லது பேத்திக்கு வந்து சேரும் என அகஸ்டா என்ற அந்த ஆசைக்காரி எதிர்பார்த்ததும் அதற்கெனத் திட்டம் தீட்டியதும் உண்மைதான்! அதன்பொருட்டே ஜார்ஜ் பட்டிருந்த கடன் முழுவதையும் தீர்க்கச் சொல்லித் தனது கணவனை வற்புறுத்தி அதில் வெற்றியும் பெற்றாள்.

தனது வாரிசுக் கனவு பலிக்க வேண்டுமென்ற பிரார்த்தனையுடன் அகஸ்டாவும், அவள் கணவன் வில்லியம் ஃபர்டினான்டும், மகள் கரோலினாவை அழகிய சாரட்டில் அழைத்துக்கொண்டு மாளிகை வாசலில் வந்து இறங்கினர்.

ஆயிரக்கணக்கான மெழுகுவத்திகள் தாங்கிய பெண்கள், சிலைகளைப்போல இருமருங்கிலும் அணிவகுத்து மணப்பெண் கரோலினாவை மாளிகைக்குள் அழைத்து வந்தனர். மலர்கள் தூவிய சிவப்புக் கம்பளத்தில் மலர்ப் பாதங்கள் நோக, கரோலினா அன்னம்போல் நடந்து வந்தாள்.

சார்லஸ் ஜேம்ஸ்பாக்ஸின் தோளைப் பற்றிக்கொண்டு போதையில் நடைபோட்ட வேல்ஸ் இளவரசன், மாளிகைக்குள் நுழையும் கரோலினாவின் கரம் பற்றி மெள்ளக் குலுக்கினான். அவள் அவனைப் பார்த்துச் சிரித்தாள். சிரிப்பு என்றால் புன்னகையல்ல! சதங்கைபோல் கொஞ்சும் ஒலியுமல்ல அந்தச் சிரிப்பில் எழுந்தது! பிறகென்ன? வெகுளித்தனமான ஒரு சிரிப்பு! ஹி! ஹி! ஹி!

பெண்கள் இப்படிச் சிரிக்கலாமா? என் செய்வது? அவள் நாணம் வெட்கமின்றி அப்படித்தான் சிரித்தாள்!

தன் அருகேயிருந்த தோழியைப் பார்த்து, ‘`ஏண்டி! ஜார்ஜ் அப்படியொன்றும் அழகாக இல்லையே! அன்பாகவாவது இருப்பாரா? எப்படியிருந்தால் என்ன? என் தாயாரின் கனவு பலித்தால் சரி!’’ என்று மெதுவாகச் சொல்லிவிட்டு மீண்டும் பலமாகச் சிரித்தாள்! ஹி! ஹி!! ஹி!!! என்று!

மணமகளின் அறைக்கு அவள் அழைத்துச் செல்லப்பட்டதும், ‘`இரவு விருந்துக்குத் தயாராக வேண்டும்’’ எனக் கூறிய தோழிகள், புதிய ஆடை அணிகளை அவளுக்குப் பூட்டத் தொடங்கினர்! ‘`விருந்தா? விருந்தென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்! அங்கே பிரபுக்கள் வீட்டுப் பிள்ளைகள் வருவார்கள் அல்லவா? அவர்களோடு நெருங்கிப் பழக எனக்குக் கொள்ளை ஆசை!’’ என்றாள் கரோலினா! தொடர்ந்து ஹி! ஹி!! ஹி!!!

விருந்து வேடிக்கைகள் முடிந்து, திட்டமிட்டபடி குறித்த வேளையில் கரோலினாவுக்கும் வேல்ஸ் இளவரசன் நான்காம் ஜார்ஜுக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

முதலிரவிலேகூடக் கரோலினாவுக்கு அந்த வெகுளிச் சிரிப்புதான்!

அவள் தாய் அகஸ்டா, அவளை எவ்வளவு பெரிய எதிர்பார்ப்புடன் ஜார்ஜுக்கு மணமுடித்து வைத்திருக்கிறாள் என்பதை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லையோ அல்லது அவளோடு பிறந்த குணமோ, யாரைப் பார்த்தாலும் ஹி! ஹி!! ஹி!!!

எப்படியோ - ஜார்ஜ் அவளை மிக மோசமாக வெறுத்தும்கூட ஓராண்டு காலத்தில் ஒரு பெண் குழந்தைக்கு அவள் தாயானாள்! சார்லட் என்று அந்தப் பெண் மகவுக்குப் பெயர் சூட்டி, இங்கிலாந்து ராணியாகப்போகிறாள் என்று அகஸ்டா ஆனந்தப்பள்ளு பாடிக் கொண்டிருந்தாள்.

ஜார்ஜ், தனது நண்பன் சார்லஸ் ஜேம்ஸ்பாக்ஸை வரச் சொல்லி மகிழ்ச்சியுடன் கூறினான்:

‘`அப்பாடா! என் கடன் பளுவும் தீர்ந்தது! என் பெற்றோருக்கு நான் செலுத்த வேண்டிய வாரிசுக் கடனும் தீர்ந்தது! இனிமேல் நான் எனது மேரி ஆனியைப் பார்க்கலாம் அல்லவா?’’ என்று அவளைத் தேட ஆரம்பித்தான்.

மேரி ஆனியும் அவனுக்காகக் காத்திருந்தாள். கணவனால் வெறுக்கப்பட்ட கரோலினா நாடு சுற்றக் கிளம்பிவிட்டாள். அவளோடு பிறந்த அந்த ஹி! ஹி!! ஹி!!! ஆடவர் மத்தியில் அவளை ஒரு பலவீனமான பெண்ணாகக் காட்டிக் கொடுத்தது! அதனால் அவனோடு தொடர்பு - இவனோடு தொடர்பு - எனப் புகார்கள் கிளம்பின! ஜார்ஜும் கரோலினாவும் பிரிந்தார்கள்! சில ஆண்டுகள் மன நோயாளியாக வாடிய மூன்றாம் ஜார்ஜ் 1820-ல் காலமான பிறகு தனது 58-வது வயதில் வேல்ஸ் இளவரசன் ஜார்ஜ், நான்காம் ஜார்ஜ் மன்னனாகப் பட்டம் சூட்டிக்கொள்கிறான்.

இத்தாலியில் சில அவப்பெயர்களுக்கு ஆளாகிய கரோலினா, தனது கணவனின் முடிசூட்டு விழா காண ஓடோடி வந்தாள்! விழாவுக்கு அவள் அனுமதிக்கப்படவில்லை! சாதாரணப் பார்வையாளர்கள் அமர்ந்து விழா காணும் இடத்துக்கு விரைந்து சென்றாள்!

‘`அனுமதிச் சீட்டு எங்கே?’’ என்று தடுத்தான் அங்கிருந்த காவலன்!

‘`நான் யார் தெரியுமா?’’ என்று சிரித்தாள். அதே சிரிப்புதான்! ஹி! ஹி!! ஹி!!!

‘`தெரியும், அனுமதிச் சீட்டு இல்லாத பெண்!’’ என்றான் அந்தக் காவலன்!

கரோலினா வாய்விட்டுக் கதறி அழுதாள்! அப்போதுதான் முதன் முதலாக அவள் அழுதாள்! வாழ்நாள் முழுதும் சிரித்துக்கொண்டேயிருந்த கரோலினா, கடைசியாகக் கண்மூடும் போதுதான் அழுதாள்!

அதுதான் அவளின் முதல் அழுகையும் கடைசி அழுகையும்!

ஓர் அரசனாகவோ அல்லது ஒரு மனிதனாகவோ பெருமதிப்புப் பெற்றவன் என்று நான்காம் ஜார்ஜ் மன்னனைக் குறித்துச் சரித்திர ஏடு எதுவும் சொல்லாவிட்டாலும்கூட - அவன் கடைசிவரை யார்மீது மோகம் கொண்டிருந்தானோ அந்த மேரி ஆனியின் உருவம் பதித்த பதக்கத்தைத்தான் தனது உயிர்  போகும் போது தன் கழுத்தில் மாட்டிக்கொண்டான் என்று தெரிவிக்கிறது!

அப்படிப்பட்ட ஒருவனின் உள்ளத்திலேகூட அழியாத ஓவியமாக ஆகிற அளவுக்குச் சக்தி படைத்தவளாக இருந்தாள் மேரி ஆனி!

திணிக்கப்பட்ட திருமணத்தால் திசைமாறிய பறவையாகித் தீர்ந்துபோனாள் கரோலினா!

அத்தை அகஸ்டாவின் வாரிசுக் கனவு நிறைவேறாமலேயே போயிற்று!

நான்காம் ஜார்ஜுக்குப் பிறகு அவனுக்கு மூன்று வயது இளையவனான வில்லியம், இங்கிலாந்தின் அரசனாகப் பொறுப்பேற்றான்!

இது முடிந்துபோன சரித்திரமல்ல; சரித்திரங்கள் திரும்பிக்கொண்டுதானே இருக்கின்றன! 

கலைஞர் மு.கருணாநிதி - ஓவியம்: ஆதிமூலம்