
இருந்தார்கள் இல்லாமல்! - கவிதை

குளக்கரைப் பூங்காவொன்றில்
ஒளிந்து கொண்டவர்களை
ஒளித்துக் கொண்டவள்
கண்டறிந்த தருணம்
எழுந்தது பேரொலி.
கேட்டுக்கொண்டிருந்த தலைவனின்
பாடலை மிஞ்சியதால்
திட்டித் தீர்த்தார்
எரிச்சலுற்ற காவலாளி
பின்னிசையாக
ஒன்றே குலமென்று பாடுவோம்...
புங்கைப் பூக்கள்
மிதந்த நிலம் நின்றவள்
அலைபேசியைத் தடவியபடி நுழைவு
வாயிலைப் பார்த்திருந்தாள்.
இருந்தாற்போல் எதிர்ப்பட்டான்
ஆடை சரிசெய்யும் சாக்கில்
துளிர்த்த நாண வியர்வையை ஒற்றினாள்.
பொய்யான கோபம் மாயமாகிட
அங்கிருந்தோர்களை இல்லாமலாக்கி
செல்லமும் சிணுங்கலுமாக
காட்சிகள் மாறிக்கொண்டிருந்தன.
காத்திருந்த சூரிய ஒளி
குளிர்ச்சியடைந்தது.
குளத்தில் பறவைகள் மிதந்தன.
செங்கொன்றை
பூக்களை உதிர்த்துக்கொண்டிருந்தது.
நடையிட்ட பேரிளம் பெண்
எங்கேடா தொலைந்தாய்
பேசியோடு சலித்தாள்.
கலி முத்திப் போச்சென்றோர் கடக்க
கனிவில் ததும்பியது காவலாளி முகம்
அவரின் சட்டை ஒலித்தது
நிலவு ஒரு பெண்ணாகி...
என்னுள்ளோ
புகுமுகம் புரிதல்
பொறிநுதல் வியர்த்தல்
நகுநயம் மறைத்தல்
தலைவனும் தலைவிக்குமான
அகத்திணைக் காட்சிகள்.
பெரியசாமி - ஓவியம்: வேலு