
வீரயுக நாயகன் வேள்பாரி - 96
தட்டியங்காட்டுப் போர்க்களம் இன்று யாரும் கணிக்க முடியாத ஒன்றாக இருந்தது. காலையில் போர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே காற்று வீசியது. மற்ற நிலத்தில் வீசும் காற்றைப் போன்றதன்று... சீவிச்செல்லும் இந்தக் காற்றின் வேகம் இணையற்றது. குளவன்திட்டின் பின்புறம் உள்ள கணவாயிலிருந்து சீற்றத்தோடு வெளிவந்து தட்டியங்காடெங்கும் இருக்கும் ஈக்கிமணலையும் கருமணலையும் உருட்டி எடுத்துக்கொண்டு போனது. பரண்மேல் நின்றிருந்த திசைவேழர், ஒரு கணம் நடுங்கிப்போனார். காற்றின் வேகம், பரணை இழுத்து ஆட்டியது. கம்பங்களை இறுகப்பிடித்து நின்றார். அவரின் கண்களின் முன்னால் நாழிகை வட்டிலைத் தூக்கி எறிந்தது. நாழிகைக்கோல் எங்கோ பறந்தது. மாணவன் ஒருவன் அவற்றைப் பிடிக்க முயன்றான். ஆனால், கணநேரத்தில் அவை மறைந்துவிட்டன.

காற்றின் வேகம் அளவிடற்கரியதாக இருந்தது. செம்புழுதி மேலேறி வந்து கொண்டிருக்கும்போதுதான் எண்ணிலடங்காத அம்புகள் காற்றோடு பறந்து சென்றதைப் பார்த்தார். அவருடைய கண்களையே அவரால் நம்ப முடியவில்லை. இங்கு நிகழ்வது எதிர்பாராத ஒன்றா அல்லது எதிர்பார்த்த ஒன்றா என்று அவருக்குப் புரியவில்லை. பரண்கட்டிய கம்பங்கள் வில்லென வளைந்து மீண்டன. இந்த நிலத்தின் தன்மைக்கு ஏற்ப மரக்கட்டுமானம் இருந்ததால் அவர் தப்பித்தார்.
ஆனாலும் ஆழ்மனம் நடுங்கியபடியே இருந்தது. அதற்குக் காரணம், அவரின் கண் முன்னால் நாழிகைவட்டிலை, காற்று தூக்கியெறிந்ததுதான். நிலைமான் கோல்சொல்லியின் முன்னால் வைக்கப்பட்ட நாழிகைவட்டிலும் அதில் பரப்பப்பட்ட குறுமணலும் நாழிகைக்கோலும் போரின் உயிர்நாடி போன்றவை. ஆனால், காற்று அவருடைய கண்களின் முன்னால் அவற்றைத் தூக்கியெறிந்தது. திசைவேழர் நிலைகுலைந்து நின்றார்.
பறம்புவீரர்கள் எந்தவிதத் திகைப்புக்கும் ஆட்படாமல் தாக்குதலை முன்னெடுத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் காற்றைக் கையாண்டவிதம் யாரும் கேள்விப்பட்டிராத ஒன்றாக இருந்தது. காரமலையிலிருந்து ஓசை கேட்ட கணத்தில்தான் பெருங்காற்று வீசியது. அந்தக் கணத்தில் அம்புகள் அலையலையாய் மேலேறிப் பறக்கின்றன. திசைவேழருக்கு இந்தச் செயல்பாட்டுக்குள் இருந்த இணைப்புப் பிடிபடவில்லை. `காற்றை வருமுன் உணரும் ஆற்றல்கொண்டவர்களாகப் பறம்பு மக்கள் இருக்கின்றனரா? விண்மீன்களின் நகர்வைக்கொண்டு காலத்தைக் கணிக்கிறோம். ஆனால் இவர்களோ காற்றையே கணிக்கிறார்கள். இது எளிய செயலன்று.’ திசைவேழரின் எண்ணங்கள் நடுக்கத்தை அதிகப்படுத்தியபடியே இருந்தன.
தட்டியங்காட்டின் முழு ஆற்றலும், இன்று வெளிப்பட்டுக்கொண்டிருந்தது; அந்த நிலத்தில் நின்று போரிட்டுக்கொண்டிருக்கும் இருதரப்புக்கும் யாராலும் கணிக்க முடியாத புதுப்புதுச் சவால்களை உருவாக்கியபடியே இருந்தது. நடுப்பகலுக்குப் பிறகு வழக்கம்போல் வெக்கையின் தாக்கம் அதிகமாகியது. போர்க்களம், இதுவரை இல்லாத குழப்பத்துடனும் ஆவேசத்துடனும் இருந்தது. வீரர்கள் வழக்கத்தைவிட பேரோசையை எழுப்பிக்கொண்டி ருந்தனர்.

உள்ளும் புறமும் நடுக்கத்தை உணர்ந்தபடி இருந்த திசைவேழர், மாணவன் ஒருவனைக் கீழே அனுப்பி இன்னொரு வட்டிலில் மணலையும் நாழிகைக்கோலையும் எடுத்துவரச் சொன்னார். மாணவன் கீழே இறங்கினான். வீரர்கள் ஒருவரை யொருவர் வெட்டிச்சரித்துக்கொண்டிருந்தனர். குதிரைகளும் தேர்களும் குறுக்கிட்டு ஓடிக்கொண்டிருந்தன. நிலமெங்கும் அம்புகளும் ஈட்டிகளும் காற்றைக் கிழித்தன. தேரில் ஏறி, போர்க்களத்தினூடே புகுந்து, குடிலுக்குச் சென்று திரும்ப முடியும் என அவனுக்குத் தோன்றவில்லை. என்ன செய்வதெனத் தெரியாமல் மிரட்சியோடு நின்றான்.
மையூர்கிழாரை விரட்டிச் சென்ற வேட்டூர்பழையன், எதிரியின் படையைச் சரிபாதிக்குமேல் கடந்தார். இவ்வளவு தொலைவு உள்ளே வருவது சரியன்று எனத் தோன்றியது. ஆனால், முடியன் ``இவனைக் கொன்றழித்துவிடு” என்று சொல்லியே அவனது தேரை ஒப்படைத்துள்ளான். போர்க்களத்தில் முடியனின் வாக்கைப் பறம்புத்தளபதிகள் மீறுவதில்லை. அதுமட்டுமன்று, மையூர்கிழாரைக் கொல்வதைவிட முக்கிய வேலை இந்தப் போர்க்களத்தில் வேறில்லை. எனவே, பழையன் விடாது விரட்டிச் சென்றார்.
முன்திட்டப்படி படையின் ஓரப் பகுதியாகவே சென்றுகொண்டிருந்தார் மையூர்கிழார். அதனால்தான் இவ்வளவு தொலைவு முடியனின் தேரை இழுத்துவர முடிந்தது. குறிப்பிட்ட அளவு கடந்ததும் பின்தொடர்ந்து வருவது முடியன் அல்ல; வேட்டுர்பழையன் என்பதை மையூர்கிழார் அறிந்துவிட்டார். ஏற்கெனவே வகுக்கப்பட்ட திட்டப்படி உள்ளிழுத்துச் செல்லவேண்டியது முடியனைத்தான். அவன்தான் முதலில் பின்தொடர்ந்து தாக்குதல் தொடுத்தபடி வந்தான். இடையில் பழையன் எப்போது மாறினார் என்பது மையூர்கிழாருக்கு விளங்கவில்லை.

மையூர்கிழாருக்கு நீலன் மீதும் வேட்டூர்பழையன் மீதும்தான் அதிக கோபம் இருந்தது. தன் மகன் இளமாறனின் மரணத்துக்கு வேட்டுவன் பாறையைச் சேர்ந்தவர்களே காரணம் என்று அவர் நம்பினார். எனவே, பின்தொடர்வது முடியனல்ல, வேட்டுர்பழையன்தான் என்பது தெரிந்த பிறகும் அவர் எதையும் காட்டிக்கொள்ளாமல் அதே வேகத்தில் போய்க்கொண்டிருந்தார். பழையனின் மரணம் நிகழப்போவதைக் காணும் வெறி அவரது செயலிலே இருந்தது. மற்ற இரு தளபதிகளான நகரிவீரனும் சூலக்கையனும் வளைத்துத் தாக்குவதற்கு ஏதுவான இடைவெளியில் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தனர்.
முடியன், இரவாதனோடு வந்து இணைந்தான். இது குதிரைப்படை வீரர்கள் யாரும் எதிர்பாராத ஒன்று. பறம்புவீரர்களின் ஆவேச உணர்வு, வெள்ளம்போல் சீறிப்பாயத் தொடங்கியது. எதிரிகளின் தற்காப்புநிலைகளை நினைத்துப்பார்க்க முடியாத வேகத்தில் தகர்த்து முன்னேறியது பறம்பின் குதிரைப்படை. அந்தத் திசையில் நின்றிருந்த வேந்தர்படைத் தளபதி உறுமன்கொடி, `இவர்களால் அதிக தொலைவு முன்னேறி வந்துவிட முடியாது’ என்றுதான் நினைத்தான். ஆனால் பறம்புப்படை, எதிரிப்படையைக் கிழித்துக்கொண்டு இறங்கியது. வாள்வீச்சும் அம்புகளின் தாக்குதலும் எதிர்கொள்ள முடியாத வேகத்தில் இருந்தன.
நேற்றைய தாக்குதலில் தனது படையில் இருந்த பெரும்பான்மையான குதிரைகளை இழந்தான் உறுமன்கொடி. அப்படியிருந்தும் இன்று வாள்வீரர்களைப் பெரும்பகுதியாகத் தனது அணிகளில் நிறுத்தி, மிகக்குறைவான குதிரைகளைப் பின்னிலையில் நிறுத்தியிருந்தான். ஆனால், எதிரிகளின் தாக்குதல் ஈடுகொடுக்க முடியாததாக இருந்தது. பாய்ந்து முன்னேறும் எதிரிகளைத் தடுத்து நிறுத்த முடியாத சூழ்நிலை வந்துவிடுமோ என்று உறுமன்கொடியின் மனதுக்குள் அச்சம்படரத் தொடங்கியது.
அப்போது உதிரனின் தலைமையிலான பறம்பின் விற்படையானது, வேந்தர் படையின் இரண்டாம் நிலையின் மீது முழுவீச்சில் தாக்குதல் நடத்தி உள்நுழைந்துகொண்டிருந்தது. களத்தின் மையப்பகுதியை வழக்கம்போல் தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் உதிரன். உண்மையில் பறம்புப்படையின் அச்சு உதிரனின் கையில்தான் இருந்தது. வேந்தர்படை பறம்புப்படைக்குள் எளிதில் நுழைய முடியாத தன்மையை உருவாக்குவது மட்டுமன்று, தேவைப்படும் நேரத்தில் வேந்தர்படையைத் தாக்குதலின் மூலம் திசைதிருப்பவும் உதிரனால் முடிந்தது.

வேந்தர்படையின் வில் வீரர்கள் எய்யும் அம்பைவிட இரு மடங்குத் தொலைவுக்கு பறம்புப்படை அம்பெய்வதால், எதிரிகளால் அருகில் நெருங்கவே முடிவதில்லை. எனவே, இரண்டு நாள் போரிலும் சிறு பாதிப்புகூட விற்படைக்கு ஏற்படவில்லை. உதிரனுக்கு இன்றைய போரில்தான் முழு வேகத்தில் தாக்கி முன்னேற அனுமதி கொடுக்கப்பட்டது. இதற்காகத்தான் அவன் காத்திருந்தான். உதிரனின் வேகம் காலையிலிருந்தே எதிரிகளால் ஈடுகொடுக்க முடியாததாகத்தான் இருந்தது. நடுப்பகலுக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமானது. பறம்பின் விற்படை வேந்தர்படையின் இரண்டாம்நிலையைப் பிளந்து உள்நுழைந்தபோதுதான் முடியன், இரவாதன் ஆகிய இருவரின் தாக்குதலையும் எதிர்கொள்ள முடியாமல் உறுமன்கொடி திணறி நின்றான். உடனடியாக இரண்டாம்நிலைப் படையை உதவிக்கு அழைக்கலாம் என்று அவன் நினைத்தபோது அங்கு நிலைமை மோசமடைந்துகொண்டிருந்தது. உதிரனின் தாக்குதல், இரண்டாம்நிலைப் படையின் வீரர்களைக் கணக்கின்றி வீழ்த்திக்கொண்டிருந்தது.
தலைமைத் தளபதி கருங்கைவாணன், பறம்புப்படையின் இறுதிப் பகுதியில் நின்றிருந்த தேக்கனை வந்தடைந்தான். அவன் இங்கு வருவான் என்று தேக்கன் உள்ளிட்ட யாரும் எதிர்பார்க்கவில்லை. அவன் வருவது அறிந்ததும் சீழ்க்கை ஒலியெழுப்பினான் தேக்கன்.
அவன் எழுப்பிய ஓசை எதற்கானதென்று கருங்கைவாணனுக்குத் தெரியவில்லை. அவன் குதிரையிலிருந்து கீழே இறங்கினான். கடுமையான வாள்வீச்சுக்குப் பிறகும் கிழவன் மீண்டும் போர்க்களம் வந்து நிற்பதே கருங்கைவாணனுக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் அவனது வாழ்வு அடுத்த சில கணங்களில் முடியப்போகிறது என எண்ணியபடியே உறையிலிருந்து வாளை உருவினான்.
தேக்கனோ, வாளை ஏந்த ஆயத்தமாக இல்லை; கருங்கைவாணனைப் பார்த்தபடியே நின்றிருந்தான். வீரர்கள் வாள்வீச்சுக்கு இடம்விட்டு விலகினர். அப்போது அங்கு வந்த குதிரையிலிருந்து கூழையன் இறங்கினான். தேக்கனின் சீழ்க்கை ஓசை கூழையனுக்கானது. கருங்கைவாணன், கூழையனைப் பார்த்ததும் அறிந்துகொண்டான், இவன் பறம்பின் தேர்ப்படைத் தளபதியென்று.
கூழையன் குதிரையிலிருந்து இறங்கினான். தேக்கன் போரிட ஆயத்தமாக இல்லாதது ஏன் என்று கருங்கைவாணனால் புரிந்துகொள்ள முடிந்தது. கிழவன் கடுமையான வலியோடு நின்றுகொண்டிருக்கிறான். ஆனாலும் போர்க்களம் நீங்கக் கூடாது என்பதற்காக வாளேந்தி நிற்கிறான் என எண்ணியபடி கூழையனை நோக்கி முன்னகர்ந்தான்.
தேக்கன், கூழையனை நோக்கி சத்தமாகச் சொன்னான், ``இவன் அதிக நேரம் நிற்க மாட்டான், ஓசை கேட்டதும் பின்னால் ஓடிவிடுவான். எனவே, ஏறித் தாக்காதே; வாங்கித் தாக்கு.”
தேக்கன் சொன்னது கருங்கைவாணனுக்குத் தெளிவாகக் கேட்டது. சுழற்றிய வாளோடு உள்ளிறங்கியவனை அந்தச் சொல் ஒரு கணம் தாக்கி நிறுத்தியது. கிழவன் ஏன் இதைச் சொல்கிறான் என்று கருங்கைவாணன் எண்ணத் தொடங்கியபோது, இயற்கையாகவே அவனது கவனம் படையின் பின்பக்கமிருந்து எழும் ஓசையை அனுமானித்தது. கிழவன் வீசிய முதல் சொல், கருங்கைவாணனின் கவனத்தைச் சிதறச்செய்தது.

கூழையன், விற்போரில் நிகரற்ற வீரத்தை வெளிப்படுத்தக்கூடியவன். ஆனால், வாள்வீச்சில் பெருவீரன் எனச் சொல்லிவிட முடியாது. அதுவும் வேந்தர்படையின் தலைமைத் தளபதியான கருங்கை வாணனின் வாள்வீச்சைக் கூழையனால் எதிர்கொள்ள முடியாது. எனவேதான் எதிரியின் கவனத்தைத் திருப்பும் உத்தியாகவும் இதைக் கையாண்டான் தேக்கன்.
கருங்கைவாணனால் படையின் பின்புறத்திலிருந்து எழும் ஓசையை மதிப்பிட முடியவில்லை. ஆனால், பறம்புத்தளபதி முடியன் வழக்கத்துக்கு மாறாக முற்பகலிலேயே முன்னேறிவந்ததும் காற்றில் பறந்த கணக்கற்ற அம்புகளும் அவனது எண்ணத்தைக் குறுக்கிட்டபடியே இருந்தன. ஆனால் கூழையன், கண்ணுக்கு முன்னால் வாளைச் சுழற்றி இறங்கிவிட்டான். கருங்கைவாணனின் கண்களிலிருந்த குழப்பத்தைத் தேக்கனால் அறிய முடிந்தது.
முழு வேகத்தில் வாள்வீச்சைத் தொடங்க முடியாத சிறு குழப்பத்தைத் தன்னுள் உணர்ந்தான் கருங்கைவாணன். பறம்புப்படையின் கடைசிப் பகுதியில் அவன் இருக்கிறான் என்பதும், பறம்புவீரர்கள் காற்றில் எய்த அம்புகள் அவனது படையின் பின்பகுதியை ஒருவேளை தாக்கியிருக்கக்கூடும் என்பதும் அவனது கவனத்தை முழுமையாகக் கவ்விக்கொண்டன. இவையெல்லாம் எதிரிகளின் தெளிவான திட்டமிடல் என்பதை அவன் உணரும் வேளையில் கூழையனின் வாள் முன்சுழன்று வந்தது.
கருங்கைவாணனைப்போல தேக்கனுமே அந்தக் கணம் அதிர்ச்சியடைந்தான். `வாங்கித் தாக்கத்தானே சொன்னோம். இவன் ஏன் ஏறிப் பாய்கிறான்!’ என்று தேக்கன் சற்றே அதிர்ச்சிக்குள்ளானான். கருங்கைவாணனோ கவனத்தைச் சிதறவிடக் கூடாது என எண்ணியபடி வாளை ஏந்தி முன்னகர்ந்தான்.
பரண் விட்டுக் கீழிறங்கிய திசைவேழரின் மாணவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பொழுதாகிக்கொண்டிருந்தது. இன்றைய போர் முடிய இன்னும் இரண்டொரு நாழிகைகள்தான் இருந்தன. எனவே, வேகமாக ஆசான் கேட்டதைக் கொண்டுபோய்க் கொடுக்க வேண்டும் என்று பதற்றம்கொண்டான். சற்றுத் தொலைவில், வேந்தர்படை வீரன் பயன்படுத்திய கேடயம் ஒன்று கிடந்தது. வேகமாகப் போய் அதை எடுத்தான். கேடயத்தைத் திருப்பி அதில் மண்ணை அள்ளி நிரப்பினான். குருதி தோய்ந்த அம்பு ஒன்று கிடந்தது. அதை எடுத்து எட்டு விரல்கட்டை அளவு நீளத்துக்கு ஒடித்தான். என்றும் இல்லாத அளவுக்குப் போர்க்களத்தின் ஓசை இன்று பலமடங்கு அதிகமாக இருந்தது. என்ன நடக்கிறது என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி பரண் மேல் ஏறத் தொடங்கினான்.
மையூர்கிழாரின் தேர், முன்திட்ட மிட்டபடி மூன்றாம்நிலைப் படையின் இறுதிப் பகுதிக்குச் சென்றது. ஆனால், அங்கு பெருங்குழப்பம் நிலவியது. கல்லூழி வேரால் ஆன அம்பைப் பிடுங்க முயலும்போது அதன் வலி நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. அம்பின் உள்நுழைந்த பகுதி சுருண்டுவிட்டதால், தசையோடு பிய்த்துக்கொண்டுதான் வந்தது. எனவே, வீரர்களின் உடலில் தைத்த எந்த அம்பையும் பிடுங்க முடியவில்லை. `வைக்கோல் அளவுகொண்ட சிறு அம்புதானே, இது என்ன செய்துவிடும்’ என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால், பிடுங்க முடியாமல் ஒவ்வொரு வீரனும் துடிக்கத் தொடங்கிய பிறகுதான் நிலைமையின் விபரீதம் புரியத் தொடங்கியது.
மூன்றாம்நிலைப் படையில் பெருங் குழப்பம் நிலவியதால், மையூர்கிழார் தேரை, படையின் நடுப்பகுதிக்குக் கொண்டுசெல்லவில்லை. மாறாக, ஓரப்பகுதியின் வழியே படை நின்றிருக்கும் பகுதிக்கு வெளிப்புறம் நோக்கி இழுத்துச்செல்லலாம் என்ற முடிவுக்கு வந்தார். தேரை ஓட்டும் வலவனிடம், ``வெளிப்புறமாக விரைந்து ஓட்டு” என்றார்.
அவரின் தேரைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார் வேட்டூர்பழையன். `இந்தப் போருக்கான முக்கியக் காரணமாக இருப்பவன் மையூர்கிழார். இவன்தான் பறம்பைப் பற்றிய பல குறிப்புகளை வேந்தர்களுக்கு வழங்குபவன். அவன் இருக்கும் துணிவில்தான் காரமலையின் அடிவாரத்தில் இவ்வளவு பெரிய படையைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றனர்’ என்று அவனைப் பற்றிய எண்ணங்கள் மேலேறியபடியே இருந்தன. `எதிரிப்படையின் கடைசிப் பகுதிக்கு வந்துவிட்டோம். இவ்வளவு தொலைவு ஏறி வருதல் நல்லதன்று. ஆனால், இத்தனை நாள் களத்துக்கு வராத இந்தத் துரோகி, இன்று போர்க்களத்துக்குள் வந்துள்ளான். இவனை இன்றோடு கொன்றழிக்காமல் விட்டால் பறம்புக்குக் கடும்பாதிப்பைத் தொடர்ந்து உருவாக்குவான். எனவே, இன்றைய போரில் தனக்கு என்ன நேர்ந்தாலும் மையூர்கிழாரைக் கொன்றழிக்காமல் விடக் கூடாது’ என்ற உறுதியோடு அவனை விரட்டிச் சென்றார் வேட்டூர்பழையன்.
முடியனும் இரவாதனும், வேந்தர்படையின் இரண்டாம்நிலையைக் கடந்து மூன்றாம்நிலையை அடைந்தனர். உறுமன்கொடியின் தடுப்பரண்கள் சிதறிப்பறந்தன. எதிர்கொள்ளவே முடியாத தாக்குதலால் நிலைகுலைந்துகொண்டிருந்தான் உறுமன்கொடி. முடியனும் இரவாதனும் ஒரே களத்தில் ஒன்றாய் நின்று இதுவரை போரிட்டதில்லை. தன் மகன் எப்படிப் போர்புரிவான் என்பதை மற்றவர்கள் சொல்லித்தான் முடியன் கேட்டுள்ளான். தட்டியங்காட்டில்தான் அவனது தாக்குதலை முடியனால் பார்க்க முடிந்தது.
இன்று இருவரும் ஒரே படைப்பிரிவில் முன்னேறிப் பாய்க்கின்றனர். உள்ளுக்குள் பெருமிதம் இருந்தாலும் கண்களில் அதைக் காட்டிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையோடு தாக்குதலை முன்னெடுத்தான் முடியன். தந்தையோடு இணைந்து களத்தில் நின்று போராடும் இந்நாளில், வழக்கத்தைவிட வீரியமாக இருந்தது இரவாதனின் தாக்குதல். சூளூர் வீரர்கள் முன்புற அணியில் தாக்கி முன்னேற, பறம்பின் குதிரைப்படை வேந்தர்படையின் மூன்றாம் நிலைக்குள் வகுடுபிளந்து போய்க்கொண்டிருந்தது.
குளவன்திட்டிலிருந்து போர்க்களத்தை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் பாரி. `பறம்பின் குதிரைப்படை இதே வேகத்தில் முன்னேறினால் இன்னும் சிறிது நேரத்தில் மூஞ்சலை நெருங்கிவிட முடியும்’ எனக் கணித்தான். குகைக்குள்ளிருந்து மீண்டும் ஓசை எழுப்பினான் இகுளிக்கிழவன். சற்று நேரத்துக்குப் பிறகுதான் அவனது ஓசையைக் கவனித்தான் பாரி. இகுளிக்கிழவன் கூறினான், சுடர் இடதுபுறம் அசையப்போகிறது. இப்போது வரப்போவது காற்றி. அது தட்டியங்காட்டை இடதுபுறமாக உருட்டிச்செல்லும் என்று சொல்லி, கையை உயர்த்தினான். ஆனால் பாரியோ, கூவல்குடியினரை நோக்கிக் கை அசைக்கவில்லை.
சற்றே அதிர்ச்சிக்குள்ளானான் இகுளிக்கிழவன். ``ஏன் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்த மறுக்கிறாய்?” என்று இகுளிக்கிழவன் கேட்டதற்குப் பாரி சொன்னான், ``பறம்பின் குதிரைப்படை வீரர்கள் எதிரிகளின் மூன்றாம்நிலைக்குள் நுழைந்துவிட்டனர். இந்தச் சூழலில் முதல்நிலையில் இருந்து எய்யப்படும் அம்பு மூன்றாம்நிலையில் இருக்கும் நம் வீரர்களையே தாக்க வாய்ப்புண்டு. எனவேதான் உத்தரவிடவில்லை.”
இகுளிக்கிழவன் மீண்டும் விளக்கைப் பார்த்தான். சாய்ந்த சுடர் மீண்டும் நிமிர நேரமானது.
தேக்கன் கூறியபடி வாங்கித் தாக்காமல், ஏறித் தாக்கிய கூழையன் ஒருகட்டத்துக்குப் பிறகு களைப்படையத் தொடங்கினான். சிறிது நேரம் பின்புறப் படையில் எதுவும் நிகழ்ந்துவிடுமோ என்று கவனத்தைச் செலுத்திய கருங்கைவாணன், நேரம் கடந்த பிறகு தாக்குதலைத் தீவிரப்படுத்தினான். தனது கவனத்தைத் திருப்பவே கிழவன் இப்படிச் சொல்லியுள்ளான் என நினைத்தான் கருங்கைவாணன். இப்போதும் கூழையன் தற்காப்பு நிலையில் நிற்காமல் முன்களம் நோக்கியே பாய்ந்துகொண்டிருந்தான்.
அவனது செயல் பொருத்தமானதில்லை. எதிரிப்படைத் தளபதியை மிகவும் குறைத்து மதிப்பிடுவதால் இவ்வாறு செய்கிறான் எனத் தேக்கனுக்குத் தோன்றியது. ஆனால், போரிட்டுக் கொண்டிருப்பவனை நோக்கிச் சத்தம்போட்டுச் சொல்வது குழப்பதையோ, தவறான புரிதலையோ உருவாக்கிவிடும் என்பதால் அமைதி காத்தான். கூழையன் அணிந்திருக்கும் மெய்க்கவசம் எவ்வளவு வேகமான தாக்குதலையும் வாங்கி நிற்கும். எனவே, கவனமாகத் தாக்கினால்தான் இவனை வீழ்த்த முடியும் என நினைத்தபடியே வாளைச் சுழற்றினான் கருங்கைவாணன். இருவரின் கால்களும் பின்னல் வடிவில் வட்டக்களத்தில் நகர்ந்துகொண்டிருந்தன.
சற்றும் எதிர்பாராமல் காற்று பெருவேகத்தோடு வீசியது. அப்போது எதிர்த்திசையில் கூழையனும் பறம்பின் திசையில் கருங்கைவாணனும் நின்றுகொண்டிருந்தனர். `இப்பெருங்காற்று வீசும்போது காரமலையிலிருந்து ஏன் ஓசை எழுப்பப்படவில்லை; பாரி என்ன செய்துகொண்டிருக்கிறான்?’ என்று கண நேரத்தில் கூழையனின் சிந்தனை காற்றின் வழியே குளவன்திட்டை அடைந்தபோது கருங்கைவாணனின் வாள் கூழையனின் கழுத்துப் பகுதியில் இறங்கி வெளியேறியது.
மூன்றாம்நிலைப் படையைப் பறம்பின் குதிரைப்படை பிளந்து முன்னேறிக்கொண்டி ருந்தபோது ஆபத்து அதன் உச்சத்தை அடைந்தது. உறுமன்கொடியின் கைகளில் இருந்து படையின் கட்டுப்பாடு வழுவத் தொடங்கியது. ஒரு தளபதி வேறு வழியே இன்றிச் செய்யும் கடைசிச் செயலுக்கான உத்தரவை இட்டான். முச்சங்கு ஊதப்பட்டது. அது பேராபத்தைத் தெரிவிக்கும் குறியீடு. மற்ற சங்குகள் ஊதப்பட்டால் அது ஆபத்து பற்றித் தலைமைத் தளபதிக்குத் தெரிவிக்கும் செயல். அவர் உடனடியாக உரிய ஏற்பாட்டைச் செய்வார். ஆனால், முச்சங்கு ஊதப்பட்டால் தலைமைத் தளபதி உட்பட அதைக் கேட்கும் ஒவ்வொரு தளபதியும் உடனடியாக அந்த இடத்துக்கு வந்துசேர வேண்டும்.
ஆனால், உடனடியாக வரும் நிலையில் வேந்தர்படைத் தளபதிகள் எவரும் இல்லை. நகரிவீரனும் சூலக்கையனும் முன்வகுக்கப்பட்ட திட்டப்படி படையின் பின்புறத்தைக் கடந்து மையூர்கிழாரால் கொண்டுசெல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். கருங்கைவாணனோ பறம்புப்படையின் முன்களத்தில் ஏறிப்போய்ப் போரிட்டுக்கொண்டிருந்தான். விற்படைத் தளபதி துடும்பனோ, உதிரனின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மிகவும் பின்னகர்ந்துகொண்டிருந்தான். உறுமன்கொடி எதிர்பார்த்த எந்த ஒரு தளபதியும் உதவிக்கு வரவில்லை. பறம்பின் குதிரைப்படைத் தாக்குதல் இணையற்ற வேகத்தில் இருந்தது.
முடியனும் இரவாதனும் கணக்கின்றிக் கொன்றழித்து முன்னேறினர். எங்கும் குருதி பீறிட்டது. சூளூர் வீரர்களின் பாய்ச்சலுக்கு முன் வேந்தர்படையால் நிலைகொள்ள முடியவில்லை. உறுமன்கொடி முச்சங்கை மீண்டும் மீண்டும் ஊதச் சொன்னான். களத்தில் ஓசையெழுப்ப நிறுத்தப்பட்டிருந்த அனைவரும் இனி இந்த ஓசையையே எதிரொலிக்க வேண்டும். நிலைமை மிக மோசமாகிறது என்பதன் அறிகுறி இது.
மூன்றாம் நிலையில் மூஞ்சலுக்குப் பக்கத்தில் முழுப் பாதுகாப்போடு நின்றிருந்த வேந்தர்களுக்கு இப்போதுதான் ஆபத்தின் அளவு புரிந்தது. தங்கள் தளபதிகள் ஒன்றுகூட முடியாதபடி சிதறிக்கிடக்கின்றனர்; எதிரிகளின் குதிரைப்படையோ மூஞ்சலை நெருங்கிக்கொண்டிருக்கிறது எனத் தெரிந்ததும் பொதியவெற்பனும் உதியஞ்சேரலும் உறுமன்கொடிக்கு உதவ, தங்களின் படைப்பிரிவினரோடு விரைந்தனர். சோழவேழன், விற்படைத் தளபதி துடும்பனுக்கு உதவ விரைந்தான்.
கூழையன் மண்ணில் சரிந்த பிறகு, தேக்கன் களத்தில் இறங்கினான். கருங்கைவாணன் எதிர்பார்த்த வேட்டை இப்போது அவன் முன்னால் வாளேந்தி நின்றது. ஆனால், படையின் முன்வரிசையிலிருந்து மாறி மாறி ஓசை எழுப்புவதைப் போன்ற உணர்வு தொடர்ந்து இருந்தது. அவனால் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை. தேக்கன் வாளை ஏந்திப்பிடித்தான். விலா எலும்பு குத்தி உள்ளிறங்குவதுபோல வலியெடுத்தது. ஆனாலும் நிலைமையைச் சமாளித்தாக வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் கருங்கைவாணனைக் கொன்றழிக்க வேண்டும் என்ற முடிவோடு மீண்டும் முன்னகர்ந்தான்.
இருவரும் சுழற்கட்டுக்கட்டி கேடயத்தை முன்னகர்த்தியபடி வட்டக்களத்தில் கால்களை நகர்த்தினர். நேற்றைய போரில் கிழவன் வீசிய வாளை சூலக்கையன் தடுத்திருக்காவிட்டால் நிலைமை என்னவாகியிருக்கும் என்று நினைத்த கணத்தில், அவனுக்கு வெறி உச்சத்தில் ஏறியது. இன்றோடு இவனைக் கொன்றழிக்க வேண்டும் என்று வாளின் கைப்பிடி நொறுங்குவதுபோல இறுகப்பிடித்தான். கால்கள் தாவி முன்செல்ல ஆயத்தமானபோதுதான், முச்சங்கின் பேரோசை இடைவிடாது எதிரொலித்தது.
ஒரு கணம் நடுங்கி நின்றான். `அப்படியென்றால், அப்போதிருந்து சங்கோசை கேட்டுக்கொண்டே இருந்ததா? நிலைமை கைமீறியதால்தான் முச்சங்கை விடாது ஊதவேண்டிய நிலை வந்துள்ளது. கிழவன் சொன்னது உண்மைதானா?’ எனத் திணறி நின்றான் கருங்கைவாணன். தேக்கன் வலிமையோடு இருந்திருந்தால் இந்தக் கணத்தில் கருங்கைவாணனை வெட்டிச்சரித்திருப்பான். வாளை உயர்த்தியபடி செயலற்று நின்ற கருங்கைவாணனை நோக்கிப் பாய்ந்து வாள் வீச முடியாத நிலையில் தேக்கன் இருந்ததால், அவன் தப்பித்துப்போய் குதிரையில் ஏறினான்.
கண்பார்வையின் எல்லையில் மூஞ்சல் கூடாரத்தின் மேல்முனைகள் தெரியத் தொடங்கியபோது பறம்புவீரர்கள் உச்ச அளவுத் தாக்குதலை வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர். முடியனின் மனதுக்குள் பற்றியெறிந்த தீ சுழற்காற்றைப்போல வேகம்கொண்டது. எதிரிகளின் படைவீரர்களால் மறித்து நின்று போரிட முடியவில்லை. இந்நிலையில்தான் பொதியவெற்பனும் உதியஞ்சேரலும் தங்களின் வலிமைமிகுந்த படையோடு வந்துசேர்ந்தனர்.
உடல் முழுவதும் கவசம் அணிந்த சிறப்புப்படை வீரர்கள் எதிரிகளின் தாக்குதலை வலிமையோடு சந்தித்தனர். மூஞ்சலைக் கண்கொண்டு பார்த்த கணத்தில், பறம்புவீரர்களின் தாக்குதல் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. வேந்தர்களின் சிறப்புப்படைப் பிரிவு அவர்களின் வேகத்தை நிறுத்த, பேராற்றலை வெளிப்படுத்தியது.
கைகள் மட்டுமல்ல, முழு உடலும் நடுங்கியது. மணலின் மீது நீண்டுபடர்ந்தது நாழிகைக் கோலின் நிழல். அதை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த போது திசைவேழரின் கண்களில் நீர் பெருகியது; மனம் துடித்தது. பதற்றத்தில் அவரின் உடல் முழுவதும் ஆடத் தொடங்கியது. எதையும்வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாது என நினைத்தார். ஆனால், அவரது வயது அனைத்தையும் வெளிக்காட்டியது. கைகளை மெள்ள மேலே உயர்த்தினார். தட்டியங்காடெங்கும் முரசின் ஓசை மேலெழுந்தது. மூன்றாம் நாள் போர் முடிவுக்கு வந்தது.
அதிர்ந்து நின்றான் முடியன். முரசின் ஓசையை அவனால் நம்பவே முடிய வில்லை. இன்னும் சிறுபொழுது இருந்தால்கூட நிலைமை வேறு மாதிரி ஆகியிருக்கும். பறம்பின் குதிரைப்படை வீரர்கள் அனைவரும் அளவுகடந்த ஆவேசத்தோடு போரிட்டனர். `இலக்கை இவ்வளவு நெருங்கியும் பயனின்றிப் போய்விட்டதே!’ என வேதனைப்பட்டான் இரவாதன். முடியனோ, முதற்கணத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தை மறுகணத்தில் சரிசெய்துகொண்டான். `மூஞ்சலைக் கண்கொண்டு பார்த்துவிட்டோம். இனி, பறம்பின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது!’ எனத் தோன்றியது.
போர்க்களத்தை விட்டு வெகுதொலைவுக்கு அப்பால் போயிருந்தனர் மையூர்கிழாரும் வேட்டூர்பழையனும். ஒருவரை ஒருவர் வீழ்த்தியே தீருவது என்ற உறுதியோடு விரைந்துகொண்டிருந்தனர். காரமலைக் குன்றுகளின் அடிவாரத்தில் முன்சென்ற மையூர்கிழாரின் தேர், பார்வையிலிருந்து சட்டென மறைந்தது. `எந்தப் பக்கம் போனான்?’ என நினைத்தபடி சற்றே திரும்பினார் வேட்டூர்பழையன். எதிரில் இரு தளபதிகளான நகரிவீரனும் சூலக்கையனும் இருநூறு குதிரைவீரர்கள் சூழ வந்து நின்றனர்.
பழையன் விரைந்து வில்லுயர்த்திய போது, தளபதிகள் இருவரும் அம்பை நாணிற்பூட்டி இழுத்தனர். வெகு தொலைவுக்கு அப்பால் மெல்லியதாகக் கேட்டது முரசின் ஓசை.
பழையன் நாண் இழுத்த அம்பைக் கீழிறக்கி மண் நோக்கி விடுவித்தான். விடுபட்ட அம்பு மண்ணைக் குத்தி நின்றது. அதைப் பார்த்தபடி நிமிர்ந்து எதிரியைப் பார்த்தான். ஆனால், அவர்கள் இருவரும் தத்தம் வில்களைத் தாழ்த்தவில்லை.
நகரிவீரன் சொன்னான், ``போரின் விதிகள் போர்க்களத்துக்கு மட்டும்தான். நாமோ களம் நீங்கி நெடுநேரமாகிவிட்டது” - சொல்லும்போதே விடுபட்டுச் சீறின அம்புகள்.
சட்டெனத் தடுப்புக்கேடயத்தைத் தூக்கும் முன்பு, எண்ணற்ற அம்புகள் வந்து எகிறின. நெஞ்சில் தைத்த அம்புகள் எல்லாம் மெய்க்கவசத்தில் குத்தி முறிந்தன. ஆனால், வலது தோளிலும் இடது காலிலும் குத்திய இரு அம்புகள் குருதியைப் பீய்ச்சின.
கண்ணிமைக்கும் நேரத்தில் அம்புகளால் தாக்கப்பட்டு வலவன் மண்ணில் சரிந்தான். உருவிய வாளோடு தேரிலிருந்து குதித்து இறங்கிய பழையன், ஓடி மரங்களுக்குள் நுழைந்தான்.
தேரையும் குதிரையையும் விட்டு இறங்கிய வீரர்கள், அவனை விரட்டியபடி மலை ஏறினர். அப்போது ஓசை எழுப்பியபடி இன்னொரு புறத்திலிருந்து வந்தார் மையூர்கிழார். ``இனி அவனைத் தொடர முயலாதீர்கள். அது ஆபத்தில் முடிந்துவிடும்.”
சூலக்கையன் கத்திச் சொன்னான், ``கைகால்களில் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளான். அவனால், அதிக தொலைவு செல்ல முடியாது. ஆயுதத்தையும் கைக்கொள்ள முடியாது. எனவே, அவனை எளிதில் கொன்றழித்துவிடலாம்” என்று விரட்டிக்கொண்டு மலையேறினர்.
இங்கும் அங்குமாக வேட்டூர் பழையனது உருவம் மறைந்து மேலேறிக்கொண்டிருந்தது. வீரர்கள் சுற்றிவளைத்துக் குன்றின்மேல் ஏறினர். பொழுது மறைந்துகொண்டிருந்தது. ``அதிக தொலைவு செல்ல முடியாது விரட்டிப்பிடியுங்கள்” என்று கத்திக்கொண்டே முன்னேறினர் தளபதிகள் இருவரும்.
சிறுகுன்றின் உச்சிக்குச் சென்று மறுபுறம் இறங்கத் தொடங்கினர். வானத்தில் கருமையேறியது. தொலைவிலிருந்து வீரன் ஒருவன், ``அதோ, அங்கே போகிறான்” எனச் சத்தமிட்டான்.
எல்லோரும் அந்த இடம் நோக்கி ஓடினர். வேட்டூர்பழையன், தனித்திருந்த மரம் ஒன்றை நோக்கித் தடுமாறித் தடுமாறி நடந்தார். தளபதிகளும் வீரர்களும் அவரை நோக்கி ஓடினர்.
மரத்தின் அடிவாரத்துக்கு வந்த பழையன், மரத்தோடு சாய்ந்து நின்றார். ஓடிவந்த தளபதிகள் உருவிய வாளோடு அவன் அருகே வந்தனர். வீரர்கள் அனைவரும் மரத்தைச் சூழ்ந்து நெருங்கினர்.
நகரிவீரன் ஏந்திய வாளோடு பழையனை நெருங்கியபடி சொன்னான், ``பறம்புத் தளபதி கோழைபோல் ஓடி ஒளிந்தான் என்று உன்னைப் பற்றி மக்கள் கூறுவர்.”
அதிக அளவு குருதி கொட்டிவிட்டதால் மிகவும் களைத்துப்போன வேட்டூர்பழையன் சொன்னான், ``இல்லை, இரண்டு தளபதிகளையும் நூற்றுக்கணக்கான வீரர்களையும் கொன்றுவிட்டே செத்தான் பழையன் என்றுதான் மக்கள் பேசுவர்.”
வாய்விட்டுச் சிரித்தான் நகரிவீரன், ``நீ, எங்கள் அனைவரையும் கொல்லப்போகிறாயா?” என்று சொன்னபோது அருகில் இருந்தவன் ஏதோ மாற்றத்தை உணரத் தொடங்கினான். மூச்சுக்குழல் எரிச்சலடையத் தொடங்கியபோது, மரத்தில் சாய்ந்திருந்த பழையன் சொன்னான், ``இனி நீங்கள் யாரும் உயிர் பிழைக்க முடியாது. உங்களின் மூச்சுக்காற்றுக்குள் சொனைகள் இறங்கிவிட்டன” என்று கூறியவர், மரத்தோடு சரிந்தபடியே சொன்னார் ``இது ஆட்கொல்லிமரம்.”
- பறம்பின் குரல் ஒலிக்கும்...
சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,