
ஞாயிறு என்பது! - கவிதை

முதல் வீட்டில் திருமணம்
இரண்டாம் வீட்டில் வீடுபுகும் நாள்
மூன்றாம் வீட்டில் ஊருக்கு போயிருக்கிறார்கள்
நான்காம் வீட்டில் வழக்கமான சண்டை
ஐந்தாம் வீட்டில் பெண் காதல் பிரச்னை
ஆறாம் வீட்டில் புதுப்படம் ஓடுகிறது
ஏழாம் வீட்டில் பிரியாணி வாசம்
எட்டாம் வீட்டில் பெரும் மரணம்
வீதி ஏதோ ஒரு கிழமையில் இருக்கிறது
இன்று ஞாயிறில்.....!
பெரியம்மா வீட்டு ஞாயிறு
சித்தப்பா வீட்டு ஞாயிறு
மாமா வீட்டு ஞாயிறு
பாட்டி வீட்டு ஞாயிறு
அண்ணன் வீட்டு ஞாயிறு
தங்கை வீட்டு ஞாயிறு
ஆளுக்கொரு ஞாயிறுகளால்
நிரம்பி இருக்கிறது ஞாயிறு...
எங்கே போனதென்று
தெரியவில்லை
எல்லாரும் நிரம்பியிருந்த
எங்கள் வீட்டு ஞாயிறு...?
தெரு முழுக்க
குறுக்கும் நெடுக்குமாக
பூனையாகிறது ஞாயிறு...
கவிஜி - ஓவியம்: ரமணன்