
சுந்தரி ஜகதீசன், முதலீட்டு ஆலோசகர்
என் சித்தி மகள் பாமா, “அக்கா, ரொம்ப தான் டபாய்க்கிறீங்க. செல்வநிலை, கரன்ட் அக்கவுன்ட் என்றெல்லாம் சொல்லிட்டு, முதலீட்டு ரகசியங்களைச் சொல்லி நம்மைத் தேற்றிவிடுவீர்கள் என்று பார்த்தால், சிக்கனம், பட்ஜெட் என்று லெக்சர் அடிக்கிறீங்களே!'' என்று நொடித்தாள்.
“அட, அசடே! செல்வநிலைக்கு இவை யெல்லாம் மிகவும் அவசியம். ஊட்டிக்கு காரில் டூர் போவதென்றால், முதலில் பிரேக், டயர், ஸ்டியரிங், வீல் என்று எல்லாவற்றையும் சரிபார்ப்போம் இல்லையா? நாலு நாள்கள் பயணத்துக்கே இப்படியென்றால், ஆயுள் முழுக்கப் பயன்தரக்கூடிய செல்வநிலைப் பயணத்துக்கு எத்தனை விஷயங்களைத் தயார்படுத்த வேண்டும்? அதற்காகத்தான் இந்த அத்தியாயங்கள்” என்றேன்.

வாழ்க்கைக்குப் பிறகு...
பெரும் பணம் சேர்ப்பது எப்படி என்பதைப் பார்க்கும்முன், அடிப்படையில் நாம் செய்துகொள்ள வேண்டிய பாதுகாப்புகளில் முதலிடத்தில் நிற்பது காப்பீடு. இது ஒரு முதலீடு எனத் தவறாகப் புரிந்துகொண்டு அதில் வருமானம் பார்க்க முயற்சி செய்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்போது, `காப்பீடு என்பது முதலீடல்ல; பாதுகாப்பு' என்று புரிந்ததால், அதன் மவுசு ஏறிவருகிறது.

நூறு வருஷங்கள் உடன் வருவார் என்று ஆசீர்வதிக்கப்பட்ட கணவர் திடீரென மறைந்தால் வாடகை, கடன் தவணைகள், பள்ளிக் கட்டணம் மற்றும் சாப்பாடு போன்ற செலவுகள் மறைவதில்லையே! இந்தக் கஷ்டத்திலிருந்து காக்க உதவுவது ஆயுள் காப்பீடு. ஒருவரின் வருட வருமானத்தைப்போல, இருபது மடங்காவது காப்பீடு தேவை.
டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கலாமே...
எண்டோவ்மென்ட் பாலிசி, மணிபேக் பாலிசி, ஹோல் லைஃப் பாலிசி எல்லாம் பாதுகாப்புடன் சேமிப்பையும் வழங்குவதால், அதிக பிரீமியம் கட்ட வேண்டியிருக்கும். ஆனால், டேர்ம் பிளானில் மிகக் குறைவான பிரீமியத்தில் அதிகக் காப்பீடு பெறலாம். முன்பு மற்ற பாலிசிகளை எடுத்தவர்கள்கூட, அவை தரும் வருமானம் 6 சதவிகிதத்துக்கும் குறைவு என்பதால், அவற்றை ரத்து செய்து டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து வருகிறார்கள்.

ஹெல்த் இஸ் வெல்த்!
சமீபகாலமாக எல்லோரும் விரும்பி எடுப்பது மருத்துவக் காப்பீடு. காரணம், பரவி வரும் புதிய நோய்களும், அவற்றுக்கு ஆகும் அபரிமிதமான செலவுகளும்தான். இந்தக் காப்பீடு பணமற்றது (Cashless), பணம் திருப்பித் தரப்படுவது (Reimbursement) என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இவற்றில் முதலாவதைத் தேர்வு செய்யலாம்.
குடும்பத்தினர் அனைவருக்குமான ஃப்ளோட்டர் பாலிசி எடுப்பது செலவைக் குறைக்கும். நிறைய கம்பெனிகள் தம்மிடம் வேலை பார்ப்பவர்களுக்குக் குழு பாலிசி எடுக்கின்றன. அதில் சேர்க்கப்படாத விஷயங்களுக்கு மட்டும் நாம் தனிநபர் பாலிசி எடுத்துக்கொள்ளலாம். அரசாங்கம் இதற்கும் வரிச் சலுகை அளிக்கிறது. ஓய்வுபெற்ற பிறகு புதிதாக இந்த பாலிசியை எடுக்கும்பட்சத்தில், முன்பே இருக்கும் நோய்கள் கவர் ஆகாது. ஆகவே, நடுத்தர வயதிலிருந்தே மருத்துவக் காப்பீடு எடுப்பது நல்லது. வீட்டுக் காப்பீடு, நகைக் காப்பீடு, வாகனக் காப்பீடு, விவசாயக் காப்பீடு போன்ற பாலிசிகளும் அளிக்கின்றன.

கவனிக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்...
1 நாம் தேர்வுசெய்யும் காப்பீட்டு கம்பெனி அநாவசியமாக இழுத்தடிக்காமல் தொகையைத் தருகிறதா என்று பார்க்க வேண்டும்.
2 நம் தேவைகளை லிஸ்ட் போட்டு அவை எல்லாம் இடம் பெற்றிருக்கின்றனவா, தேவையில்லாத விஷயங்கள் தவிர்க்கப் பட்டுள்ளனவா என்று பார்க்க வேண்டும்.
3 பெண்களாகிய நமக்கு அதிகம் வரக்கூடிய நோய்களுக்கு கவரேஜ் இருக் கின்றனவா என்று கவனிப்பது நல்லது.
4 பாலிசிகளில் சிலவற்றுக்குத் தனியாக ரைடர் எடுத்து, கவர் செய்ய வேண்டியிருக்கும். இரண்டுக்கும் ஆகும் செலவு மற்றும் கிடைக்கும் பயன்களைச் சீர்தூக்கிப் பார்த்துத் தேர்வுசெய்ய வேண்டும்.
5 விண்ணப்பப் படிவத்தைத் தவறின்றி முழுமையாக நிரப்ப வேண்டும். பாலிசி வந்ததும் அதிலிருக்கும் விவரங்களைச் சரிபார்த்து, தவறிருந்தால் 15 நாள்களுக்குள் பாலிசியைத் திருப்பி அனுப்பி, திருத்தம் செய்யலாம் அல்லது பிரீமியத்தை திரும்பப் பெறலாம்.
ஒரு எக்ஸர்சைஸ்: உங்களிடம் எத்தனை இன்ஷூரன்ஸ் பாலிசிகள் இருக்கின்றன? அவற்றில் தேவையில்லாத பாலிசிகளை சரண்டர் செய்ய முடியுமா?
ப(ய)ணம் தொடரும்
படம் : ப.சரவணகுமார்