மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புத்துணர்வு தரும் மொட்டைமாடியும் படிக்கட்டுகளும்! - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு

புத்துணர்வு தரும் மொட்டைமாடியும் படிக்கட்டுகளும்! - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு
பிரீமியம் ஸ்டோரி
News
புத்துணர்வு தரும் மொட்டைமாடியும் படிக்கட்டுகளும்! - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு

டீ கிளட்டரிங்

வனிப்பாரற்றுக் கிடக்கும் பகுதிகளில் நிச்சயம் வீட்டு மொட்டைமாடிகளும் அடங்கும். முன்பெல்லாம் அரிசி, பருப்பு, மிளகாய் உலரவைப்பதில் தொடங்கி நிலாச்சோறு சாப்பிடுவது வரை மொட்டைமாடிகளின் பயன்பாடு விரிந்து பரந்திருந்தது. மொபைலுக்குள் முடங்கிப்போன மனித வாழ்க்கையில் மொட்டைமாடிகளின் தேவையும் குறைந்துவிட்டது.

இயற்கை ஆர்வலர்களின் தயவால் சமீபகாலமாக மாடித் தோட்டங்கள் பிரபலமாகிவருவதால், சிலர் வீட்டு மொட்டைமாடிகளுக்கு மோட்சம் கிடைத்திருக்கிறது. மொட்டைமாடியை அழகாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை எல்லோருமே அறிந்துகொள்வது அவசியம் என்பதற்காகத்தான் இந்த அத்தியாயம்.

தனி வீடோ, அப்பார்ட்மென்ட்டோ... இன்றெல்லாம் மொட்டைமாடிக்குப் பெரிய முக்கியத்துவமில்லை. துணிகள் உலரவைக்கவும், வற்றல், வடாம் போடவும் மட்டுமே நாம் எட்டிப் பார்க்கிற மொட்டைமாடியை, சரியான திட்டமிடல் இருந்தால் பல விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம்.

புத்துணர்வு தரும் மொட்டைமாடியும் படிக்கட்டுகளும்! - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு

மொட்டைமாடி ஏரியாவில் தோட்டம் அமைப்பது இன்று ரொம்பவே பிரபலம். இயற்கையின் மீது நேசமும் பாசமும் இருந்தாலும், இடப்பற்றாக்குறையில் வசிக்கிற நாம், தோட்டம் அமைக்க நிலப்பகுதிக்கு எங்கே போவது? மொட்டைமாடி அமையப் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். மரங்களை அழித்துக்கொண்டிருக்கிறார்களே என்கிற கவலையிலிருந்து நம்மை ஆற்றுப்படுத்தும் விஷயமாகவும் இதைப் பார்க்கலாம்.

மாடியின் ஒரு பகுதியைத் தோட்டத்துக்காக ஒதுக்கிவிட்டு, மீதிப் பகுதியை வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம்.

மாடித்தோட்டம் அமைப்பது பெரிய விஷயமல்ல. அதற்குமுன் ஃபவுண்டேஷன் எப்படி இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். மொட்டைமாடியின் தரைப் பகுதியில் மண்ணைக் கொட்டிச் செடிகள் வளர்ப்பதானாலும் சரி, தொட்டிகளில் வளர்ப்பதானாலும் சரி, ஃபவுண்டேஷன் பலமாக இருக்க வேண்டியது மிக அவசியம். புதிதாக வீடு கட்டுகிறவர்கள் அல்லது அப்பார்ட்மென்ட் வாங்குகிறவர்கள், மொட்டைமாடியில் தோட்டம் அமைக்கிற ஐடியாவில் இருந்தால், அதை முன்கூட்டியே யோசித்து அதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும். கூடியவரையில் மாடித் தோட்டங்களில் தொட்டிகளில் செடிகள் வளர்ப்பது பாதுகாப்பானது.

செடிகள் வைக்கிறபோது அவற்றுக்கு ஊற்றும் தண்ணீர் வடிந்து, மாடியிலேயே தேங்குகிற மாதிரி இருக்கக் கூடாது. தொட்டிகளின் அடியில் தட்டு வைத்தால், அதிகப்படியான தண்ணீர் அதில் சேரும் அல்லது அதிகப்படியான தண்ணீர் கீழே வெளியேறும்வகையில் அதற்கு ஒரு பாதை அமைக்கலாம்.

மொட்டைமாடியில் ஒரு குடில் அமைப்பது நல்ல ஐடியா. அந்தக் குடில் நீங்கள் உங்கள் குடும்பத்தாருடன் நேரம் செலவழிக்க ஏற்ற இடமாக இருக்கும். மாலை வேளைகளில் இளைப்பாறலாம். உடற்பயிற்சிகள் செய்யலாம். குழந்தைகளைப் படிக்கவைக்கலாம். இயற்கையான காற்றும் வெளிச்சமும் சேர்ந்த அந்தச் சூழல் உங்களுக்குள் புத்துணர்வைத் தரும்.

மொட்டைமாடியை அழகாகப் பராமரிப்பது மட்டுமின்றி, சுத்தமாக வைத்துக்கொள்வதும் அவசியம். தோட்டம் அமைத்திருக்கிறபட்சத்தில் காய்ந்த இலைகளும் சருகுகளும் சேரும். வீட்டுக்குள் சுத்தப் படுத்துகிற மாதிரி மொட்டைமாடியையும் அடிக்கடிப் பெருக்கி, குப்பைகளின்றி வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, மழைக்காலத்தில் இது ரொம்பவே முக்கியம். மழைநீர் வெளியேற அமைத்திருக்கிற பெரிய குழாய்களுக்குள் இலைகளும் சருகுகளும் போய் அடைத்துக்கொண்டால், மாடியில் தண்ணீர் தேங்கி நிற்கும். அதைக் கவனிக்காமல் விட்டால் கட்டடத்தில் நீர் கசியலாம். தொடர்ச்சியான கசிவு, கட்டடத்தையே ஆட்டம்காணச் செய்துவிடும்.

புத்துணர்வு தரும் மொட்டைமாடியும் படிக்கட்டுகளும்! - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு

மொட்டைமாடியில் சிவப்பு நிறத்தில் ரூஃபிங் டைல்ஸ் போட்டிருப்பார்கள். நாளாக ஆக, அந்த டைல்ஸில் வெடிப்பு விடலாம். இரண்டு டைல்களுக்கு இடையிலான சிமென்ட் ஃபில்லிங் போய்விடலாம்.  மொட்டைமாடியின் தரைகளை அவ்வப்போது செக் செய்யுங்கள். இப்படி ஏதேனும் வெடிப்போ, சிதறலோ இருந்தால் உடனடியாக சிமென்ட், மணல், வாட்டர் புரூஃபிங் கெமிக்கல் கலந்து அதன்மேல் பூசிவிட்டால் நீர்க் கசிவு இருக்காது. நீர்க்கசிவு இல்லாத கட்டடங்கள் நீண்டகாலம் நிற்கும்.

மொட்டைமாடி டைல்ஸை எந்தக் காரணத்துக்காகவும் சேதப்படுத்தக் கூடாது. வீட்டில் ஏதோ விசேஷம், பந்தல் போட கம்பு நட வேண்டும் என்றோ, கொடிகட்ட ராடு அடிக்கிறோம் என்றோ தரையைச் சேதப்படுத்தவே கூடாது. ஏனென்றால், அந்த டைல்ஸின் அடியில் வாட்டர் புரூஃபிங் கெமிக்கல் பூசப்பட்டிருக்கும். அதில் சின்னதாக ஒரு விரிசல் விழுந்தாலும் வீட்டுக்குள் ஒழுக ஆரம்பிக்கலாம்.

அடுத்தது படிகள்...

ஒருசில வீடுகளில், படிகள் வரவேற்பறையை ஒட்டினாற்போல இருக்கும். அந்த வீடுகளில் படிகளுக்குக் கீழே உள்ள இடத்தை நன்றாகப் பயன்படுத்த முடியும். படிகளுக்குக் கீழே உள்ள பகுதியில் படிகளின் வடிவத்திலேயே ஸ்டோரேஜ் யூனிட் அமைத்தால் வசதியாக இருக்கும். அதன் கீழ்ப்பகுதியில் `டீப் டிராயர்ஸ்’ என்று சொல்லக்கூடிய 2 அடிகள் உள்ள டிராயர்களை வைத்து, அதன்மேல் தேவைக்கேற்ப கதவுகளும் பொருத்திக் கொள்ளலாம். இது பயன்பாட்டுக்கும் ஏற்றதாக இருக்கும். பார்க்கவும் அழகாகத் தெரியும்.

படிகளையொட்டிய சுவரில் குடும்ப போட்டோ அல்லது ஓவியங்கள், ஆர்ட் வொர்க் போன்றவற்றை மாட்டிவைக்கலாம். அது அந்தப் பகுதிக்கு ஒருவித பர்சனல் டச் கொடுக்கும். பல வீடுகளில் படிகள் இருக்கும் பகுதியில் வெளிச்சமே இருக்காது. லைட் போட்டால்தான் படிகளிலேயே ஏற முடியும். புதிதாகப் படிகள் அமைக்கிறவர்கள் இதைக் கருத்தில்கொண்டு இயற்கையான வெளிச்சம் உள்ளே வரும்படி ஜன்னல் அமைத்துக்கொள்ளலாம்.

புதிதாக வீடு கட்டும்போது படிகள் 10 இன்ச் அகலமும் 6 இன்ச் உயரமும் இருந்தால் தான் ஏறுவதற்கு  வசதியாக இருக்கும். பத்து படிகள் ஏறியதும் `மிட் லேண்டிங்’ எனப்படும் பகுதி இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது. மிட் லேண்டிங் பகுதி இருந்தால் எத்தனை முறை படிகளில் ஏறி இறங்கினாலும் கால்கள் வலிக்காது. படிகளின் உயரம் ஒரே மாதிரி இருக்க வேண்டும். அளவு வேறுபட்டால் கால் மூட்டுகளுக்குச் சிரமம் தரும். படிகளுக்கான டைல்ஸ் சொரசொரப்புத் தன்மையுடன் இருப்பது சிறப்பு. அகலப் பகுதியையும் உயரப் பகுதியையும் வேறு வேறு கலர்களில் வைத்துக் கொள்வது இன்னும் அழகு!

- குப்பைகள் அகற்றிப் பேசுவோம்

எழுத்து வடிவம்: சாஹா

ஓவியங்கள் : ரமணன்