மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேம் சேஞ்சர்ஸ்

கேம் சேஞ்சர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கேம் சேஞ்சர்ஸ்

புதிய தொடர் - 1

கேம் சேஞ்சர்ஸ்

ரு நல்ல ஐடியா சிக்கினால் போதும். உலகையே `யார்ரா இவனுங்க’ எனப் பேச வைத்துவிடலாம். 

கேம் சேஞ்சர்ஸ்

அந்த இரண்டு இளைஞர்களுடைய எண்ணம், லட்சியம், கொள்கை, இலக்கு எல்லாமே இதுதான். டெக்-புலிகளான இருவரது கையிலும் ஏராளமாகப் பணம்... அப்போதுதான் தங்களுடைய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை விற்றுக் கணிசமாகக் காசு பார்த்திருந்தார்கள். அடுத்து என்ன? தேவை ஒரு புதிய ஐடியா!

2008, பனிப்பொழிவில் எக்ஸ்ட்ரா அழகுடன் இருந்தது பாரீஸ் நகரம். அந்த இருவரும் ஒரு கருத்தரங்குக்காக அங்கு சென்றிருந்தார்கள். கருத்தரங்கு முடிந்து அறைக்குத் திரும்ப டாக்ஸி கிடைக்குமா எனக் காத்திருந்தார்கள். எதுவுமே கிடைக்கவில்லை. குளிர் வாட்டிய அந்த இரவில்... டாக்ஸிக்குப் பதிலாக அந்த ஐடியா கிடைத்தது. உலகையே மாற்றப்போகிற மகத்தான ஐடியா...

கேம் சேஞ்சர்ஸ்



Cut

அவர்கள் யாரென்று பார்ப்பதற்கு முன் ஸ்டார்ட் அப் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு மட்டும் சின்ன இன்ட்ரோ. எந்தப் பெரிய பின்புலமும் இல்லாமல், தொழில்செய்த அனுபவமும் இல்லாமல் ஐடியா மட்டுமே மூலதனம் எனக் களமிறங்கிய எத்தனையோ பேரை பில்லியனர் ஆக்கிய ’ஜீபூம்பா’தான் ஸ்டார்ட் அப். வேண்டிய பொருளை இருக்கும் இடத்திலிருந்தே வாங்க உதவும் ஃப்ளிப்கார்ட், பசித்தால் 15 நிமிடத்தில் ஜூஸ் தரும் ஸ்விகி, காய்கறிகள் தரும் பிக் பாஸ்கெட், காதலனை/காதலியைத் தரும் டிண்டர், தம்பதிகளை உருவாக்கும் மேட்ரிமோனி ஆகியவை ஸ்டார்ட் அப்கள்தான். பிசினஸ் மாடல் என்பது பிறந்த குழந்தை என்றால்... ஸ்டார்ட் அப் என்பது கர்ப்பத்தில் இருக்கும் சிசு. இந்தக் கால இளைஞர்களுக்கு பூஸ்ட், சத்துமாவு, எனர்ஜி டிரிங்க்...
 
ஓகே, மீண்டும் விட்ட இடத்திலிருந்து...

அந்த இருவரில் ஒருவர் ட்ராவிஸ் கேலநிக் (Travis Kalanick). “ஸ்டார்ட் அப் கலாசாரத்துக்குப் படிப்பு முக்கியமல்ல; அறிவும் உழைப்பும்தான் அவசியம்” என ட்ராவிஸ்க்குத் தெரிந்திருந்தது. படித்துக்கொண்டிருக்கும்போதே நண்பர்கள் ஆரம்பித்த தொழிலுக்கு உதவ தன் படிப்பைக் கைவிட்டார். ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு வேண்டிய ஃபைலை அனுப்ப அப்போதிருந்த இணைய வேகம் போதவில்லை. ஃபைலை அனுப்பும் முறையில் மாற்றம் செய்தால் வேலை எளிதாக முடியுமென்பதை ட்ராவிஸ்ஸின் நண்பர்கள் கண்டுபிடித்திருந்தார்கள். ஆனால், பிரச்னை காப்பிரைட்ஸ் ரூபத்தில் வந்தது. அமெரிக்க இசைச் சங்கங்கள் இவர்கள்மீது சட்டப்போர் தொடுத்தார்கள். “எப்படி அனுப்பணும்னு யோசிச்சியே... எதை அனுப்பணும்னு யோசிச்சியா? எடு காசை” என்றார்கள். என்ன செய்வதெனத் தெரியாமல் நிறுவனத்தை இழுத்து மூடினார்கள். இந்த ஐடியாதான் இன்று ‘டோரன்ட்(Torrent)’ ஆக உலகம் முழுவதும் ஹிட் ஆனதென்பது சுவாரஸ்யம். 

கேம் சேஞ்சர்ஸ்

படிப்பும் பணமும் வேலையும் போன ட்ராவிஸ் `ஐடியா நல்ல ஐடியாதானே’ என நினைத்து, அதையே மாற்றி மீண்டும் முயல் கிறார். கொஞ்சம் பிக்கப் ஆனதும், இன்னொரு நிறுவனத்துக்கு அதை விற்றுவிடுகிறார். ட்ராவிஸ்க்குத் தெரியும், தன்னால் இன்னும் பெரிய ஐடியா ஒன்றைப் பிடிக்க முடியுமென. அதற்காகத்தான் பாரீஸ் சாலையில் நின்று கொண்டிருந்தார் ட்ராவிஸ்.

அன்று ட்ராவிஸுடன் காத்திருந்த இன்னொரு நபர் கார்ரெட் கேம்ப். நண்பர்களுடன் சேர்ந்து Stumbleupon என்ற ஸ்டார்ட் அப் ஒன்றை கார்ரெட் தொடங்கியிருந்தார். வாசிக்க நினைப்பவர்களுக்கு ஏராளமான நன்மைகளைத் தந்த இணையதளம் அது. ஈபே நிறுவனம் அதன் அருமை தெரிந்து நல்ல விலைக்கு வாங்கிக் கொண்டது. காலம் இவர்களை அன்று டாக்ஸிக்காகக் காத்திருக்க வைத்தது; அவர்களைக் கைகுலுக்க வைத்தது. 
 
அமெரிக்கா இந்தியாவைப் போல நெருக்கமான நிலப்பகுதிகளைக் கொண்ட நாடு அல்ல. அகண்ட நிலங்களைக் கொண்ட ஒரு நாடு. அதனால் மக்கள் தள்ளித் தள்ளித்தான் வாழ்கிறார்கள். வேலைக்கோ, கடைகளுக்கோ போக நினைத்தால் பயணம் தவிர்க்க முடியாதது. எல்லோருமே கார் வைத்திருக்க வேண்டியது அவசியம். டாக்ஸிகள் உண்டு. புக்கிங் செய்வது சிரமம்; விலை அதிகம்; எளிதில் கிடைக்காது. அலுவலக நேரத்தில் கிடைக்கவே கிடைக்காது. ட்ராவிஸ், கார்ரெட் இருவரின் கைகள் உரசியபோது, இத்தனை பிரச்னைகளுக்குத் தீர்வளித்த ஒரு ஜீபூம்பா வெளியே குதித்தது. அதுதான் ‘ஊபர்.’

அது ஒரு ‘டிஸ்ரப்டர்(Disrupter)’ ஐடியா அல்ல. டிஸ்ரப்டர் என்றால்? ஒரு சந்தை இயங்கும் முறையைக் குறைந்த காலத்தில் முற்றிலுமாக மாற்றி, அதன் வருமானத்துக்கான வழியையோ அது இயங்கும் முறையையே புதிதாகத் திருத்தி எழுதுவதை டிஸ்ரப்டர் என்பார்கள். வாட்ஸ் அப் வரும் முன் தீபாவளி வாழ்த்துகளைக் குறுஞ்செய்தி மூலம் சொன்னோமே... ஆக, வாட்ஸ் அப் ஒரு டிஸ்ரப்டர். வாழ்த்து அட்டைகள் காலத்தில் வந்த குறுஞ்செய்தியும்  டிஸ்ரப்டர்தான்.

கேம் சேஞ்சர்ஸ்

கார்ரெட்டுக்கு டாக்ஸி சந்தையைத் திருத்தி எழுதும் டிஸ்ரப்ஷன் ஐடியா ஒன்று வருகிறது. ஒரு க்ளிக் தான். இருக்குமிடம் தேடி கார் வரும். ட்ராவிஸ்க்கோ இந்த ஐடியாமீது சந்தேகம். கார்ரெட் விட்டால் ஈபிள் டவர் மீதேறி “ஹலோ வேர்ல்டு… வீ ஆர் கமிங்” எனக் கத்திவிடுவார் போலிருந்தது.

இருவரும் சான் ஃப்ரான்சிஸ்கோவுக்குத் திரும்பினார்கள். சம்பிரதாயங்களை நம்புவது ஸ்டார்ட் அப்புக்கு அழகல்ல என்பதால் உடனே ubercab.com என்ற இணையதள டொமைனை வாங்கினார் கார்ரெட். ஐடியாவுக்கான ஸ்பார்க் கார்ரெட்டுக்குத்தான் வந்தது. ஆனால், அடுத்த கட்டம் நோக்கிப் புயலெனக் கிளம்பியவர் ட்ராவிஸ்தான். இணையமும் ஜி.பி.எஸ் வசதியும் உலகை நிச்சயம் மாற்றியமைக்கும் என இருவரும் நம்பினார்கள். டாக்ஸி புக்கிங்கை இந்தத் தொழில்நுட்பம் கொண்டு மாற்றியமைக்க, செலவைக் குறைக்க யோசித்தார்கள். திட்டம் தயாரானது. ஒருவர் எங்கிருக்கிறாரோ அதற்குப் பக்கத்திலிருக்கும் டாக்ஸியை புக் செய்தால் நேரம் மிச்சம். அவர் எங்கே செல்கிறாரோ, அதே இடத்துக்குச் செல்ல விரும்பும் இன்னொருவர் கிடைத்தால் பணம் மிச்சம். இரண்டுக்கும் ஜி.பி.எஸ் உதவியது. ஒரு மொபைல் ஆப் தயாரானது. சொற்ப ஊழியர்களுடனும் சில கேப்களுடனும் ஊபர் தனது முதல் பயணத்தைத் தொடங்கியது.
 
ஊபருக்கு முதல் ஸ்பீடு பிரேக்கரை சான் ஃப்ரான்சிஸ்கோ நகர நிர்வாகம் போட்டது. “நீங்க கேப் சர்வீஸ் லைசென்ஸே வாங்கல. அப்புறம் எப்படி கேப்னு சொல்றீங்க?” என்றது. உண்மைதான். ஸ்டார்ப் அப்பில் ஈடுபடுபவர்கள் எப்போதும் பயப்படக் கூடாது. ட்ராவிஸ் அப்படித்தான். பெயரிலிருந்து Cab-ஐக் கழற்றிவிட்டார். ஊபர் எனப் பெயரிட்டார். வண்டி வேகமெடுத்தது.

கேம் சேஞ்சர்ஸ்

2010-ல் உலகம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டிருந்தது. முதலீடுகள் அதிகரிக்க, ஊபர் வளர்ந்தது. மக்கள் ஊபருக்கு ஹைஃபை தந்தார்கள். இரண்டு கைகள் குலுக்கியபோதே மேஜிக் செய்தவர்கள், இத்தனை கைகள் சேரும்போது சும்மா இருப்பார்களா? விஸ்வரூபம் எடுத்தது ஊபர். ஹெலிகாப்டர் சேவையிலிருந்து நிறைய கவர்ச்சிகரமான சேவைகளையும் வழங்கினார்கள்.

டாக்ஸி பயணத்தில் இன்னும் என்னென்ன பிரச்னைகள் என யோசித்தது ‘இருவர்’ மூளை.  இந்தியா போன்ற நாட்டில் பயணமே பிரச்னை. பாதுகாப்பின்மை. கத்திபாராவில் இருக்கும் டிரைவர் சைதாப்பேட்டையில் இருக்கிறேன் என்று பொய் சொல்வார். எல்லாப் பிரச்னைகளையும் பட்டியி லிட்டார்கள். பல பிரச்னைகளை இருக்கும் ஆப் மூலமே தீர்க்க முடிந்தது. மற்ற விஷயங்களுக்குப் புதுப்புது அப்டேட் விட்டனர்.

சிலிக்கான் வேலியில் இருக்கும் நிறுவனங்களின் கான்ஃப்ரன்ஸ் ஹால் பெயர்கள் புகழ்பெற்றவை. ஊபரின் மீட்டிங் ஹால் பெயர் ‘வார் ரூம்.’ அவர்கள் ஐடியாக்கள் யோசிப்பதே ஒரு போர் போலத்தான். வேண்டும் என்றாலும் வேண்டாம் என்றாலும் சண்டை போட வேண்டும். காரணம், அவர்கள் ஓகே சொல்லும் ஐடியாக்கள், உலகம் இயங்கும் முறையையே மாற்றியெழுத வேண்டும். அதற்கு அந்தச் சண்டை அவசியம்.  

கேம் சேஞ்சர்ஸ்

டாக்ஸிகளுக்கு டிமாண்டு அதிகம் இருக்கும் போது பீக் ஹவர் சார்ஜஸ் என இப்போது வசூலிக்கிறார்களே. அதை ஊபர் முதலில் அறிமுகப்படுத்தியபோது வாடிக்கையாளர்கள் வெகுண்டெழுந்தார்கள். காச்மூச் எனக் கத்தினார்கள். ஊழியர்களும் முதலீட்டாளர்களும் ட்ராவிஸ் பக்கம்  திரும்பினார்கள். “நல்ல சேவை வேணும்னா செஞ்சுதான் ஆகணும். மக்கள் புரிஞ்சிப்பாங்க” என்று ஒரு ஸ்டெப் கூட பேக் அடிக்கவில்லை.``நெகட்டிவ் ஃபீட்பேக் வரும்போது நம் முடிவின் மீது நாமே சந்தேகம் கொள்ளக்கூடாது. யாரும் யோசிக்காத ஒன்றை நாம் யோசித்தால் தான் நம்மால் உலகை வெல்ல முடியும். அந்த யோசனையை மற்றவர்கள் சந்தேகிப்பதுதான் நம் முதல் வெற்றி” என்பார் ட்ராவிஸ்.  

கலிபோர்னியாவில் தொடங்கிய ஊபர் இன்று உலகம் முழுவதும் 633 நகரங்களுக்குச் சென்றிருக்கிறது. இருவருடன் தொடங்கிய நிறுவனத்தில் இன்று 12,000-க்கும் அதிகமானோர் வேலை செய்கிறார்கள். ஆண்டு வருமானம் 72 பில்லியன் அமெரிக்க டாலர். இந்திய ரூபாயில் 5 லட்சம் கோடி!

இவ்வளவு பெரிய நிறுவனம்; டாக்ஸிப் போக்குவரத்தை நம்பியிருக்கும் நிறுவனம். இவர்கள் வசம் எத்தனை கார்கள் சொந்தமாக இருக்குமென நினைக்கிறீர்கள்? ஒன்றுகூட இல்லை. ஒரு கார்கூடச் சொந்தமாக இல்லாமல், உலகின் டாக்ஸி பிரச்னைக்குத் தீர்வு கண்டு பிடித்தவர்கள் ட்ராவிஸ்ஸும் கார்ரெட்டும். அதுதான் அந்த `ஜீபூம்பா’ ஐடியா. நம் செலவைக் குறைத்த ஜீபூம்பா. இருவரையும் பில்லியனர் ஆக்கிய ஜீபூம்பா. ஓட்டுநர்களை ஓனர்களாக்கிய ஜீபூம்பா.

செமல்ல!

- ஐடியா பிடிப்போம்

கார்க்கிபவா - ஓவியம்: பிரேம் டாவின்ஸி