
சர்வைவா - 26
க்ராட் (KRATT)
எஸ்டோனியத் தொன்மத்தில் வரும் பாத்திரம் இந்த க்ராட். வைக்கோலால் செய்யப்பட்ட மனித உருவ பொம்மை. இதற்கு உயிர் கொடுக்க சாத்தானுக்கு மூன்று சொட்டு ரத்தத்தைக் காணிக்கையாகத் தரவேண்டும். உயிர் பெற்ற க்ராட் தன் எஜமானருக்கு விசுவாசமாக இருக்கும். அவர் என்ன வேலை சொன்னாலும் செய்யும். ஆனால் சக்தி வாய்ந்த க்ராட்டுக்கு வேலை கொடுக்காமல் இருந்தால் அது எஜமானரையே அழித்துவிடும். இது தெரியாமல் மாட்டிக்கொண்டவர்கள் க்ராட்டுக்கு செய்யவே முடியாத வேலைகளைக் கொடுத்துத் தப்பலாம். ஆனால் க்ராட் செய்யமுடியாத வேலை என்று எதுவுமே இல்லை.
ஈ-நாடு!
``திருமணம் செய்துகொள்ள முடியாது, விவாகரத்து பெற முடியாது, வீட்டு மனைகள் வாங்க முடியாது. இந்த மூன்று தவிர மற்ற எல்லாமே எங்கள் நாட்டில் டிஜிட்டல்தான்.’

- எஸ்டோனிய அரசின் வெளியுறவுத்துறை இயக்குநர் சான்ட்ரா சேராவ்.
இன்னும் ஐம்பது ஆண்டுகளில் உலகம் எப்படி இயங்கும்? தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் ஒருமுறை எஸ்டோனியாவுக்கு விசா போட்டு விசிட் அடிக்கலாம். முடியாதவர்கள் www.e-estonia.com போகலாம்.
`உலகின் முதல் Smart நாடு’ எஸ்டோனியா. உலக மேப்பில் பூதக்கண்ணாடி வைத்துப்பார்த்தால் மட்டுமே கண்டுபிடிக்கக்கூடிய ஐரோப்பிய பால்டிக் நாடு. திருநெல்வேலிக்கு அல்வா மாதிரி எஸ்டோனியாவிற்குத் தொழில்நுட்பம். அந்த அளவுக்கு இந்த நாடும் நாட்டுமக்களும் எல்லையில்லாமல் தங்களை விஞ்ஞான ரீதியாக அப்டேட்டிக்கொண்டே இருக்கிறார்கள். ‘`இணையம் என்பது இங்கே குடிமக்களுக்கு அடிப்படை உரிமை!’’

எஸ்டோனியாவில் மூன்று நிமிடங்களில் வருமான வரித் தாக்கல் செய்துவிட முடியும். 18 நிமிடங்களில் ஒரு புதிய நிறுவனத்தைத் தொடங்கிவிட முடியும். யாருமே எளிதில் ஊழல் பண்ண முடியாது; வெளிநாட்டிற்குத் தப்பிக்க முடியாது. அரசாங்கத்தை ஏமாற்ற முடியாது. E-Ambulance, E-Police, E-Voting, E-Taxing, E-hospital என ஈ மயம்தான். எஸ்டோனியாவில் வசிக்க, தொழில் செய்ய அங்கேயே வசிக்கவேண்டும் என்கிற அவசியம்கூட இல்லை E-Residency கொடுக்கிறார்கள். இந்திய ஸ்டார்ட் அப்களுக்கான புகலிடம் எஸ்டோனியாதான். இங்கிருந்தே எஸ்டோனியக் குடிமகனாக தொழில் தொடங்கலாம்.

ஆனானப்பட்ட ஆஸ்திரேலியாவே தங்களுடைய மருத்துவத்துறை அப்டேட்களுக்கு எஸ்டோனியாவிடம்தான் போய் நிற்கிறது. அமெரிக்காவுக்கும் மற்ற ஐரோப்பிய உலக நாடுகளுக்கும் E-Governance-ல் எஸ்டோனியாதான் ரோல்மாடல்.
நம் ஊரில் எப்படி பள்ளிகளில் தமிழ் கட்டாயம் என்று அறிவித்திருக்கிறார்களோ, அதுபோல எஸ்டோனியாவில் எல்கேஜியில் இருந்தே பள்ளிகளில் IT Skills கட்டாயம். 7 வயதுக் குழந்தைகூட கோடிங் பண்ணும். 2020-க்குள் ஒட்டுமொத்தப் பாடத்திட்டத்தையும் டிஜிட்டலாக்கிப் புத்தகங்களையே ஒழித்துக்கட்டப்போகிறார்களாம். `பேப்பர்லெஸ் பள்ளிகள்.’
இத்தனைக்கும் எஸ்டோனியாவின் மக்கள் தொகை வெறும் 13 லட்சம்தான், கோயம்புத்தூரைவிட கம்மி. நாட்டில் பாதிக்குமேல் பனிமலைதான். வளமிக்க நாடுகூடக் கிடையாது. 1991 வரை ரஷ்யாவின் ஆதிக்கத்தில்தான் இருந்தது. 1991-ல் சோவியத் ரஷ்யா சிதறுண்ட பிறகுதான் எஸ்டோனியாவுக்கு நல்ல காலம் பிறந்தது.
முதலிலிருந்து தொடங்க வேண்டும். கம்யூனிச அரசாங்கம் நாட்டை மிகுந்த வறுமையில் வைத்திருந்தது. நாட்டில் இருந்த குடும்பங்களில் பாதிதான் டெலிபோன் இணைப்பே வைத்திருந்தன. எஸ்டோனியாவின் புதிய அரசாங்கத்துக்கு அண்டை நாடான பின்லாந்து பழைய கணினிகளைக் கொடுத்து உதவியது. அந்தக் கணினிகளை வைத்துக்கொண்டு ஒரு தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தை உருவாக்க ஆரம்பித்தனர் எஸ்டோனியர்கள்.
சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியை நிர்வகிக்கும் பொறுப்பைத் தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்தது எஸ்டோனியா. அடுத்த பத்தாண்டுகளில் ஒட்டுமொத்த நாடும் டிஜிட்டலுக்கு மாறிவிட்டது. 2000 வது ஆண்டிலேயே முதன்முறையாக E-TAX Declaration முறையைக் கொண்டு வந்தார்கள்.
எஸ்டோனியாவின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தது ஒவ்வொரு குடிமகனுக்கும் 2002-ல் வழங்கப்பட்ட டிஜிட்டல் ஐடி. இதைச் சிலர் எதிர்க்கவே செய்தனர். இருந்தாலும் எஸ்டோனிய அரசு அதை வலுக் கட்டாயமாக எல்லோருக்கும் கொடுத்தது. எஸ்டோனியாவில் அடையாள அட்டை வழி சேமிக்கப் படும் தகவல்கள் எதையுமே அரசு சேமித்துவைப்பதில்லை. எல்லாமே டிஸ்ட்ரிபியூட்டட் நெட்வொர்க்தான். X-ROADS என்கிற புதிய மென்பொருளைப் பயன்படுத்தினர்். அது PKI (Public Key Infrastructure) தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இரண்டுவழி PIN எண்கள் வழி தகவல்கள் பாதுகாப்பாக இணையத்தில் இருக்கும். வேண்டிய வர்கள் மட்டுமே தகவல்களை எடுக்க முடியும். ஒருமுறை ஒரு தகவல் சேமிக்கப்பட்டால், அதை அரசு மற்றும் அதற்கு உரியவர் இருவரும் சேர்ந்து மாற்றினால் மட்டுமே முடியும். யாருக்கு எந்தத் தகவலைத் தரவேண்டும் என்பதைக் குடிமகன்தான் தீர்மானிப்பார். இப்படிப்பட்ட ஒரு தொழில் நுட்பத்தை எஸ்டோனியா கண்டு பிடிக்கக் காரணமாக இருந்தது அந்த நாட்டின் வறுமை.
ஒரு Centralised database server வைத்துக்கொள்ள வசதி இல்லாமல் இருந்தபோது, அதை எப்படிச் சமாளிப்பது என்பதற்காகவே இதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

2007-ல் ரஷ்யாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் எஸ்டோனியாமீது சைபர் தாக்குதலைத் தொடுத்தார்கள். ஒட்டுமொத்த நாட்டையும் முடக்குகிற அளவுக்கு இருந்தது இந்த டிஜிட்டல் தாக்குதல். ரஷ்யாவின் ஆதிக்கத்தில் இருந்தபோது எஸ்டோனியாவின் தலைநகர் டல்லின்னில் ரஷ்யா ஒரு ராணுவ வீரன் சிலையை அமைத்திருந்தது. அதை அகற்ற எஸ்டோனிய அரசு உத்தரவிட, கோபப்பட்டு `யாரோ’ ரஷ்ய ஹேக்கர்கள் நாட்டையே முடக்கி விட்டார்கள். அப்போதுதான் சைபர் செக்யூரிட்டியை அதிகரிக்கும் முயற்சிகளில் இறங்கினார்கள்.
2008-ல் NATO நாடுகளோடு இணைந்து டல்லின்னில் The NATO Cooperative Cyber Defence Centre of Excellence (CCDCOE) என்கிற அமைப்பைத் தொடங்கினார்கள். இன்று ஐரோப்பிய யூனியன் நாடுகள் மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள பல நாடுகளுக்கும் சைபர் செக்யூரிட்டி உதவிகள் செய்கிறது எஸ்டோனியா. ஒரு டிஜிட்டல் எம்பஸியை லுக்ஸம்பர்கில் தொடங்கி அங்கே தங்களுடைய அதிமுக்கியமான தகவல்களையும் சேமித்து வைத்திருக்கிறார்கள்.
2008-ல் அவசரமாக `Hash-linked time-stamping’ என்கிற புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கினார்கள். ஏற்கெனவே இருந்த X-roads தொழில்நுட்பத்தை இதைக்கொண்டு மேம்படுத்தினார்கள். தகவல்களைத் தனித்தனி பிளாக்குகளாகச் சேமிக்கிற தொழில்நுட்பம். கிரிப்டோ முறையில் இயங்கக்கூடியது... வெயிட்... வெயிட்... இது பிளாக்செயினாச்சே என்கிறீர்களா? பிளாக்செயினேதான். சடோஷி நாகமோடோ பிட்காய்ன் பற்றி அப்போது அறிவிக்கக்கூட இல்லை. பிளாக்செயின் என்கிற சொல்லே உலகில் இல்லை. தாங்கள் பயன்படுத்துவது பிளாக்செயின் தொழில்நுட்பம்தான் என்பது தெரியாமலேயே வேறொரு பெயரில் அதைப் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள் எஸ்டோனியர்கள்.
இன்று எஸ்டோனிய அரசாங்கம் இயங்கு வதே பிளாக்செயினில்தான். இப்போதைக்குக் குறையொன்றுமில்லை. செயற்கை நுண்ணறிவு எந்திரங்களோடு பிளாக்செயினை இணைத்துப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த அமைப்பையும் இணைக்கும் முயற்சியிலிருக்கிறார்கள். அதற்கான ஆராய்ச்சிகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள். “Artificial intellegence is the next step of E-governence” என்பதுதான் எஸ்டோனிய அரசின் குரல்.
அதனால்தான் செயற்கை நுண்ணறிவு எந்திரங்களைச் சட்டபூர்வமாக அனுமதிக்க மக்களோடு தொடர்ந்து விவாதிக்கிறது எஸ்டோனியா. `Kratts law” என்கிற ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு எந்திரங்களைப் பற்றி மக்களுக்குப் புரியவைக்க `KRATT’ தான் சிறந்தவழியாம். ஏற்கெனவே தானியங்கிக் கார்களைப் பரிசோதிக்க தன்னுடைய சாலைகளைத் திறந்துவிட்டிருக்கிறது எஸ்டோனியா. பிளாக் செயினும் செயற்கை நுண்ணறிவுத்துறையும் ஒன்றாக இணையும்போது பல சாதனைகளைச் செய்ய முடியும் என்பதுதான் எஸ்டோனியாவின் திட்டம்.
எஸ்டோனியாவில் மட்டுமல்ல; செயற்கை நுண்ணறிவு + பிளாக்செயின் இரண்டையும் எப்படி ஒன்று சேர்த்துப் பயன்படுத்த முடியும் என்கிற ஆராய்ச்சிகள் உலகம் முழுக்கப் பரவலாக நடந்துகொண்டிருக்கின்றன. காரணம், செயற்கை நுண்ணறிவுத்துறையில் இருக்கிற ஓட்டைகளை பிளாக்செயின் கொண்டு அடைத்துவிட இயலும்...
- காலம் கடப்போம்
அதிஷா - ஓவியம்: கோ.ராமமூர்த்தி