
வீரயுக நாயகன் வேள்பாரி - 97
மூன்றாம் நாள் போர் முடிவுறுவதைக் குறிக்கும் முரசின் ஓசை, எங்கும் கேட்டது. ஓசை கேட்டதும் காயம்பட்டவர்களைத் தூக்கிச் செல்லும் பணியாளர்கள் களம் நோக்கி ஓடினர். வீழ்ந்து கிடப்பவர்களை எடுத்துச்செல்ல கயிற்றுத்தொட்டிலைத் தூக்கியபடி இரலிமேட்டிலிருந்து பெருங்கூட்டம் தட்டியங்காட்டுக்குள் இறங்கியபோது, திசைவேழரின் மாணவன் ஒருவன் இரலிமேடு நோக்கி மேலேறிக்கொண்டிருந்தான்.

நேற்றைக்கு இதே பொழுதில் கபிலரை அழைக்க வந்த மாணவனே இன்றும் வந்தான். வாரிக்கையனும் கபிலரும் ஒரே இடத்தில்தான் இருந்தனர். போர் முடிவுற்ற நேரத்தின் பதற்றம் எல்லோருக்குள்ளிருந்தும் மேலேறிவந்தது. அப்போது அங்கு வந்த அவன், கபிலரை வணங்கிச் சொன்னான், ``ஆசான் உங்களை அழைத்து வரச் சொன்னார்.”
கபிலர் அதிர்ச்சியோடு வாரிக்கையனைப் பார்த்தார். `நேற்று ஓங்கலத்தால் சிக்கல் ஏற்பட்டதைப்போல, இன்றும் ஏதோ பிரச்னையில் மாட்டிவிட்டீர்களா?’ என்று கேட்பதுபோல் இருந்தது அவரது பார்வை. அதைப் புரிந்துகொண்டு வாரிக்கையன் சொன்னார், ``அப்படி எதுவும் நாம் செய்யவில்லை.”
``பிறகு ஏன் அழைத்து வரச் சொல்லியுள்ளார்?”
``என்னிடம் கேட்டால், எனக்கென்ன தெரியும்?” என்று கேட்டவர் சற்று இடைவெளி விட்டு, ``நீங்கள்தான் முன்கூட்டியே சொல்லிவிட்டீர்களே” என்றார்.
``நான் என்ன சொன்னேன்?”
``திசைவேழர் யார் என நான் கேட்டதற்கு, `அறத்தின் அடையாளம்’ என்றீர்கள். பாரியிடம் பேசியபோது `போர்க்களத்தில் அறம் நெடுநேரம் உயிர்வாழாது’ என்றீர்கள்.”
வாரிக்கையனின் ஒப்பீட்டால் நடுங்கிப்போனார் கபிலர். ``ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்?” எனப் பதறிக் கேட்டார்.
வாரிக்கையன் சொன்னார், ``நாள்கள் செல்லச் செல்ல, போர்க்களத்தில் நிற்கும் மனிதன் தனது வலிமையை இழந்துவிடுவான். முடிவுறாத வேட்டையை எந்த உயிரினமும் நடத்தாது. மனிதன்தான் `போர்’ என்ற பெயரில் அதை நடத்திக்கொண்டிருக்கிறான். இரக்கமற்ற அந்தக் காட்சிகளைப் பொழுதெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பதைப்போலக் கொடுமையானது வேறில்லை. கண்களைத் திறப்பதைவிடக் கடினமானது மூடுவது. மனத்துக்குள் விழுந்துகிடக்கும் கொடூரங்களை எதைக்கொண்டு அப்புறப்படுத்த முடியும்? புறமும் அகமும் வெட்டுண்ட மனிதச்சதைகள் துடித்துக்கொண்டிருக்க, எதிலிருந்து தப்பித்து எங்கே ஓடுவார் அவர்? யாரிடமாவது பேசினால் இந்தத் துயரிலிருந்து மீண்டெழ முடியுமா என்ற தவிப்பு அவரை அலைக்கழிக்கும். அந்தத் தவிப்பிலிருந்து மீள்வதற்கு உங்களை அழைத்திருப்பார்.”

வாரிக்கையனின் விளக்கம், கபிலரைப் பொறிகலங்கச்செய்தது. போர்க்களம் நோக்கிப் பெருங்கலக்கத்தோடு நடக்கத் தொடங்கினார். அவலத்தின் துயரத்தை நெருங்க, கால்கள் அஞ்சின. காட்சிகளை, கண்கொண்டு பார்க்க முடியவில்லை. போர் முடிவுற்ற கணத்தில் களம் நோக்கிப் பயணிப்பதைப்போல் கொடுந்துன்பம் வேறில்லை. ஆயுதங்கள் துளைத்துக்கிடக்கும் மனிதர்களின் ஓலம், எங்கும் கேட்டது. உடல்கள் கிடத்தப்பட்ட கயிற்றுத்தொட்டில்களை சாரிசாரியாகத் தூக்கிச்சென்றனர். எல்லாவற்றையும் கடந்து நாழிகைவட்டில் இருக்கும் பரண் நோக்கி நடந்தார் கபிலர்.

அவரது வருகைக்காகக் காத்திருந்தார் திசைவேழர். திசைவேழரின் முகத்தில் இருளேறியிருந்தது. என்ன நடந்திருக்கும் என, கபிலரால் சிந்திக்க முடியவில்லை. வணங்கியபடி அவர் அருகில் அமர்ந்தார்.
`நிலைமான் கோல்சொல்லியின் உயிர் எனக் கருதப்படும் நாழிகைவட்டிலையும் நாழிகைக்கோலினையும் என்னிடமிருந்து பிடுங்கியெறிந்தது காற்று’ என்றுதான் சொல்ல நினைத்தார் திசைவேழர். ஆனால், அவரை அறியாமலேயே, முடத்திருக்கண்ணைப் பற்றிய பேச்சைத் தொடங்கினார்.
``தவறிழைத்தவன் தண்டனையின் வழியே காட்டிக்கொடுத்த நிலத்தை நாம் தேர்வுசெய்திருக்கக் கூடாதோ?” எனக் கேட்டார்.
இப்போது ஏன் இதைக் கேட்கிறார் எனக் கபிலருக்குப் புரியவில்லை. ``தவறேதும் நடந்ததா?” எனக் கேட்டார் கபிலர்.
``எல்லாம் தவறுதலாக நடக்கின்றன” என்றார் திசைவேழர்.
எதைச் சொல்கிறார் என்பது புரியாமல் விழித்தார் கபிலர்.
``நிலைமான் கோல்சொல்லியின் உயிர்நாடி நாழிகைவட்டிலும் கோலும்தானே. அவை இரண்டையும் இன்று என்னிடமிருந்து காற்று பறித்துக்கொண்டது” என்று சொன்னவர், ``இன்று எதைக்கொண்டு பொழுதளந்தேன் தெரியுமா?”

கலங்கிய அவருடைய கண்களையே கூர்ந்துபார்த்தார் கபிலர்.
``கொல்லப்பட்ட போர்வீரனின் தசைகள் ஒட்டியிருந்த ஒரு கேடயத்தில், குருதியால் ஊறிப்போன மண் எடுத்து, முறிந்த அம்பை நட்டுப் பொழுதளந்தேன்.”
அவரது சொல்லிலிருந்த நடுக்கம் கபிலரின் மீதும் பரவியது.
``போர்க்களத்தில் மரணத்தின் கருவிகொண்டு பொழுதளந்துள்ளேன். இனி இந்த நிலம் எண்ணிப்பார்க்க முடியாத மரணத்தைக் காணும். கவசங்கள் வீரர்களைக் காத்து நிற்காது. முறிந்த அம்புகளால் நீளும் பொழுது வீரர்களின் குருதியைக் குடித்துக் கொண்டேயிருக்கும். மரணத்தின் அடையாளமே பொழுதென ஆகிவிட்டது. இனி போர்க்களத்தின் பொழுதை மரணமே ஆட்சிசெய்யும்.”
திசைவேழரின் சொற்கள் கபிலரை உறையச்செய்தன.

``இந்த நிலத்தைத் தேர்வுசெய்யும்போது நான் சொன்னது நினைவிருக்கிறதா உங்களுக்கு? `நாம் இழைத்த தவறுகளுக்கும் தண்டனை இந்தத் தட்டியங்காடுதான். நமது தலை சாயும் வரையிலும் இந்த நிலம் நம்மைத் துரத்திக்கொண்டே இருக்கும்’ என்றேனே!”
`ஆம்’ எனத் தலையசைத்தார் கபிலர்.
``துரத்திச் செல்லும் இடைவெளியைக் கூட இந்த நிலம் வழங்காது என நினைக்கிறேன். இந்த நிலத்திலேயே நானும் சாய்ந்துவிடுவேன். முடத் திருக்கண்ணின் உயிர் பிரியும்போது அவன் இழைத்த தவற்றுக்கான தண்டனை என நினைத்தேன். எனது உயிர் பிரியும்போதும் அதையே நினைப்பேன்” என்றவர், நின்றுகொண்டிருக்கும் பரண்கம்பங்களைக் கைகளால் தொட்டபடி, ``எனது வாழ்வின் பொழுதை இந்தப் பரண் அளந்து கொண்டிருக்கிறது கபிலரே. எந்தக் கணமும் அளவை முடியலாம்.”
கலங்கிப்போயிருக்கும் திசைவேழரை எந்தச் சொல்கொண்டு மீட்பது எனத் தெரியாமல் திணறிய கபிலர் சொன்னார், ``நீங்கள் இன்னும் நெடுநாள் வாழவேண்டியவர். மரணம் பற்றி அதற்குள் ஏன் பேசுகிறீர்கள்?”
``வாழ்வை எளிய கணக்குகளால் அளவிட முடிவதில்லை புலவரே. பொங்கும் புதுப்புனலைப் பார்த்து மகிழவே வைகையின் கரையில் குடில் அமைத்துத் தங்கினேன். ஆனால் இப்போதோ, வீழ்ந்துகிடக்கும் மனித உடலுக்குள்ளிருந்து பல்லாயிரம் கறையான்கள் பொங்கி மேலெழும் காட்சியைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் என் கால்களாலேயே இங்கு இழுத்து வரப்பட்டேன். எத்தனையோ முறை இதைத் தவிர்க்க நினைத்தேன். ஆனால், எனது சொல்லின் வழியே நான் வரவழைக்கப்பட்டேன். நான் நன்கு அறிவேன், வேந்தர்கள் அறவழிப்பட்டு வாழ விரும்புவார்கள். ஆனால், அறம் எனப்படுவது விருப்பத்தின்பாற்பட்ட செயலன்று; அது இயல்பின்பாற்பட்டது; அன்பின்பாற்பட்டது. எனவேதான் வேந்தர்களால் அறவழியில் வாழ முடிவதில்லை. அதிகாரமும் அறமும் இரண்டு எல்லைகள். அதிகாரத்தில் இருப்பவர்கள் அறம் பேணவே முடியாது. அப்படியிருக்க, என்னை அழைத்து ‘அறம் பிறழாமல் இந்தப் போரை நடத்துங்கள்’ எனச் சொல்கிறார்கள் என்றால், நான் ஏதோ ஒருவகையில் அவர்களுக் கானவனாக இருந்திருக்கிறேன். அதிகாரத்தின் மறுப்பையோ நிராகரிப்பையோ நான் பெறவில்லை. நான் பேணிய அறம் அவர்களின் அதிகாரத்தை உறுத்தாமல் இசைவாய் இருந்திருக்கிறது. அதற்கான தண்டனைதான் இது.”

கபிலருக்கு என்ன மறுமொழி சொல்வதெனத் தெரியவில்லை. ஆனால், துயரத்தில் மூழ்கும் அவரது மனத்தை மீண்டெழச்செய்ய வேண்டும் என்று மட்டும் தோன்றியது, ``இந்தக் கொடும் தண்டனையை அறத்தின் பொருட்டே நாம் ஏற்றிருக்கிறோம். ஒருவகையில் இதுவும் நமது கடமைதானே!” என்றார்.
``வெல்ல நினைப்பவர்களும் அழிக்க நினைப்பவர்களும்தாம் போரை விரும்புகிறார்கள். வாழ நினைப்பவர்கள் வேறு வழியின்றி அந்தப் போரை எதிர்கொள்கின்றனர். நான் முதல்தரப்புக்காகப் பரணேறியிருக்கிறேன். எனவே, எனது உள்ளொளி அணைந்து கொண்டிருக்கிறது. நீங்களோ இரண்டாம் தரப்புக்காக நிற்கிறீர். எனவேதான் அணையவிடாமல் தடுக்கும் துணிவை இழக்காமல் இருக்கிறீர்” என்று சொன்னவரின் கண்களில் நீர் பெருகியது.
சற்றே தலை கவிழ்ந்த திசைவேழர் குரல் தாழ்த்திச் சொன்னார், ``என்னை ஆற்றுப்படுத்த முயலாதீர்கள். நேற்றிரவுதான் நான் நீலனைப் பற்றி அறிந்தேன். எவ்வளவு பெரிய சூழ்ச்சியில் நான் சிக்கவைக்கப்பட்டுள்ளேன். நீங்களாவது எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?”
சற்றே தயங்கிய குரலில், ``தாங்கள் நிலைமான் கோல்சொல்லியாக இருக்க ஒப்புக்கொண்ட பிறகு, பேரரசர்கள் வீற்றிருக்கும் அவையில்தானே நான் உங்களைச் சந்தித்தேன். எனவே, இதைப் பற்றிப் பேசும் சூழல் இல்லாமல்போனது” என்றார் கபிலர்.
``இந்தப் போருக்குப் பின்னணியில் இப்படியொரு செயல் நடந்திருக்கிறது எனத் தெரிந்திருந்தால், நான் நிலைமானாக இருக்க ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன் என்பதை நீங்கள் நம்பத் தவறிவிட்டீர்கள். எனவே, இதைப் பற்றிப் பேச வேண்டும் என உங்களுக்குத் தோன்றவில்லை.”
திசைவேழரின் சொற்களைக் கபிலரால் எதிர்கொள்ள முடியவில்லை. நடுங்கிய தன் கைகளைக் குவித்தபடி எதையோ சொல்லவந்தார் கபிலர்.

சட்டென அவரின் கைகளைப் பற்றிய திசைவேழர் சொன்னார், ``என் தோழனாய் என்னை நீங்கள் கவனப்படுத்தத் தவறிவிட்டீர்கள். அதை எனது மனம் ஏற்றுக்கொள்ளாது. ஆனால், நீங்கள் பாரியின் தரப்புக்காக நிற்கிறீர். எனவே, உம் கைகள் நடுங்கக் கூடாது.”
பேரரசர்கள் கூடியுள்ள கூடாரத்தில் பேரமைதி நீடித்தது. மையூர்கிழார் தனது வாக்குமூலத்தைச் சொல்லி முடித்துவிட்டு வெளியேறினார். ``மலைமீது ஏறிச் செல்ல வேண்டாம் என்று நான் எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை” என்பதுதான் அவர் வலியுறுத்திச் சொன்னது.
ஆள்கொல்லி மரத்தின் அருகில் போகாமல் மிகத் தள்ளியிருந்த ஓரிரு வீரர்கள் தப்பிவந்து நடந்ததை விளக்கியுள்ளனர். வேந்தர்படையின் இரண்டு தளபதிகள் இன்றைய போரில் இறந்துள்ளனர். அதேநேரம் பறம்பின் தரப்புத் தளபதிகளான கூழையனும் வேட்டூர் பழையனும் கொல்லப் பட்டுள்ளனர்.
சம அளவில்தான் மரணங்கள் நிகழ்ந்துள்ளன எனத் திருப்திப்பட்டுக் கொள்ளும் நிலையில் இங்கு யாரும் இல்லை. ஏனெனில், இன்றைய போரில் பறம்பின் தாக்குதல் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. இதுவரை வாள் ஏந்தாமல் நின்றிருந்த அரசர்கள் இன்று தாக்குதல் முனைக்குப் போகவேண்டிய நிலைக்கு வந்துள்ளனர். மையூர்கிழார் அவை நீங்கி நீண்ட நேரமாயினும் யாரும் பேச்சைத் தொடங்கவில்லை.
முதன்முறையாக, போர்க்களம் பற்றிய அச்சம் அவையில் அமைதியின் வடிவில் பரவியிருந்தது. இரு தளபதிகளின் மரணம்கூட பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மாறாக, பறம்பின் போர்முறைகள் விடை அறிய முடியாத கேள்விகளாக இருந்தன.
``காற்றின் வீச்சும் போக்கும் அம்பை இழுத்துச் செல்லும் அல்லது மறித்துச் சாய்க்கும்; வலுவிழக்கச் செய்யும். ஆனால், காற்றின் துணைகொண்டு எப்படி அம்பெய்ய முடியும்? காற்றின் வருகையை எப்படிக் கணித்தனர்? அது வருவதற்கு முன் எப்படி அம்பை விடுத்தனர்? கண்பார்வைக்கு அப்பால் அம்புகள் பறவைகளைப்போலப் பாய்ந்து செல்கின்றன. மனிதர்களால் இதுபோன்ற முயற்சியைச் செய்ய முடியுமா? நாம் மனிதர்களோடுதான் போரிட்டுக் கொண்டிருக்கிறோமா?” கேள்விகள் அடுக்கடுக்காய் மேலெழுந்தன. ஆனால், யாரிடமும் விடையில்லை.

உதியஞ்சேரல் சொன்னான், ``வீரர்களைத் தைத்த அம்புகளில் ஒன்றைக்கூட எளிதில் பிடுங்க முடியவில்லை. காற்றின் வேகத்தோடு உள்ளேறிய அம்புகள் சதைகளையும் நரம்புகளையும் பிய்த்துக்கொண்டுதான் வருகின்றன. இதுவரை யாரும் கேள்விப் பட்டிராத அம்புகளாக இருக்கின்றன. போர்முனைக்குத் தொடர்பே இல்லாமல் மூன்றாம் நிலையில் நின்றிருந்த வீரர்களில் எண்ணற்றோரை நாம் இழந்துள்ளோம்.”
``நம் தலைமைத் தளபதி எதிரிப்படையின் கடைசிப் பகுதியில் நின்றிருக்கும்போது, அவர்கள் நமது படையின் இறுதி அணியை வீழ்த்தியுள்ளனர். யாராலும் நெருங்கவே முடியாத அளவுக்கு நிறுத்தப்பட்டிருந்த படையணிகளைப் பிளந்துகொண்டு எதிரிகள் மூஞ்சல் வரை வந்துள்ளனர். முப்பெரும் பேரரசுகளின் தாக்குதல் திட்டங்களை ஒரு சிறுகுடி மன்னனின் படை அசைத்துப்பார்க்கிறது. இது எப்படி நிகழ்கிறது?” எனக் கேட்டார் சோழவேழன்.
கேள்வி, நேரடியாகக் கருங்கைவாணனை நோக்கியதாக இருந்தது. நேற்று அவன் வகுத்த திட்டப்படி பறம்பின் குடி முடியனும் குடி ஆசானும் கொல்லப்பட்டிருக்க வேண்டும். பறம்புப்படை இன்று பெரும்நெருக்கடியைச் சந்தித்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது, இதற்கு நேரெதிராக இருக்கிறது. போர்க்களத்தின் செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியது தலைமைத் தளபதியான கருங்கைவாணனே!
அவையில் நடந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த குலசேகர பாண்டியன் இதுவரை கருத்தேதும் சொல்லவில்லை. போர்க்களத்தில் நிகழும் உரையாடலில் சொற்களின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்தவர், இன்று எந்த ஒரு சொல்லையும் உச்சரிக்காமல் அமைதியாக இருந்தார். ஆனால், முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குக் கருங்கைவாணன் மறுமொழி சொல்லியே ஆகவேண்டிய நிலை இருந்தது.
அவன் பேரரசர்களை வணங்கிவிட்டுச் சொன்னான், ``நான் போர் தொடங்கும் முன்னரே தெரிவித்தேன். இவர்கள் நம்மைப் போன்ற மனிதர்கள் அல்லர்; நெருப்பைப் பிளந்து வெளிவரக்கூடியவர்கள். பாறைகளை உருட்டியும் மரங்களைப் பிடுங்கியெறிந்தும் தாக்கக்கூடியவர்கள். எந்தவொரு விலங்குடனும் மனிதன் விதிகளை உருவாக்கிப் போரிட முடியாது. இந்த விலங்குகளை அழிக்க வேண்டுமென்றால், நாமாக உருவாக்கிக்கொண்ட விதிகளைத் தூக்கியெறிய வேண்டும்.”

கருங்கைவாணனின் சீற்றத்தை மறித்து நிறுத்தினார் சோழவேழன். ``மூன்று பேரரசுகள் ஒன்றிணைந்து ஒரு சிறுகுடி மன்னனை வீழ்த்தும் போரில், மரபுகளையும் விதிகளையும் விட்டொழிக்கச் சொல்வது இழிவென்று தோன்றவில்லையா?”
``நான் எதிரிகளை வீழ்த்த முடியாதவனல்ல. நம்முடைய எதிரிகள் யாரென்றே தெரியாமல் இந்தப் போர்க்களத்தின் விதிகள் வகுக்கப்பட்டுவிட்டன. இத்தனை ஆயிரம் குதிரைகள் போர்க்கொட்டிலில் செயலற்றுக் கிடப்பதை யாராவது பார்த்திருக்கிறீர்களா? இவ்வளவு தொலைவு பறக்கும் அம்புகளை மனிதனால் எய்துவிட முடியும் என்றால், யார் நம்புவார்கள்? நாம் நம்மைப்போன்ற மனிதர்களிடம் போரிடவில்லை. விலங்குக் குணமேறிய காட்டுமனிதர்கள். தீயகுணமும் அதீத ஆற்றலும்கொண்ட கூட்டம் அது. அவர்களால் நமது அறிவுப்புலனுக்கு எட்டாத பலவற்றைச் செய்ய முடியும். எனவேதான் நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன், இந்தப் போரை வழக்கப்படி நடத்தக் கூடாது. ஒரே நாளில் முழுமுற்றாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.”
``ஒரே நாளிலா... எப்படி?” எனக் கேட்டார் சோழவேழன்.
``நம்மிடம் இருக்கும் அனைத்துவிதமான ஆயுதங்களையும் நஞ்சேற்றி எதிரிகளின் மொத்தப் படையையும் தாக்க வேண்டும். சிறிய வாய்ப்புகூடத் தரக் கூடாது. தாக்கப்பட்ட ஒருவன்கூட குற்றுயிராகவேனும் போர்க்களம் நீங்கி இரலிமேட்டில் கால்பதிக்கக் கூடாது. ஒரு பகலில் முழுமுற்றாகப் பறம்புப்படை அழித்தொழிக்கப்பட வேண்டும். மிச்சம் வைக்காமல் அழித்தால் மட்டுமே நாம் தட்டியங்காட்டை விட்டு வெற்றியோடு வெளியேற முடியும்.”
கருங்கைவாணன் முடிக்கும் முன் சோழவேழன் சொன்னார், ``எதிரி குறித்து, தலைமைத் தளபதிக்கு இவ்வளவு பதற்றமா?”
``சோழப்பேரரசருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது பதற்றம், அவர்கள் வெல்ல முடியாதவர்கள் என்பதால் அல்ல; நாம் எண்ணிலடங்காத வீரர்களை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதால்தான்.”
இவ்வளவு நேரமும் அமைதிகாத்த குலசேகரபாண்டியன் இப்போது சொன்னார், ``நீ விதிகளில் நம்பிக்கையின்றி இருப்பதால்தான் எதிரிகளின் மீதான தாக்குதல் உத்தியை உன்னால் நம்பிக்கையோடு வகுக்க முடியவில்லை.”
அவை, அமைதியோடு அவரின் குரலைக் கேட்டது.
``அடுத்த கூடாரத்தில் நீலன் இருக்கிறான். அவனைப் போய்ப் பார். விதிகள் வகுக்கப்பட்ட இந்தப் போரில் பாரி வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கையை அவனது ஒவ்வோர் அசைவிலும் உன்னால் உணர முடியும். எதிரிகளிடம் சிறைப்பட்ட ஒருவனுக்கு, அவனது படையின் மீதும் தாக்குதலின் மீதும் முழு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், சிறைப்பிடித்து வந்த உனக்கு அந்த நம்பிக்கை இல்லை.”
வாழ்வில் முதன்முறையாக, போர்க்களக் கூடாரத்தில் அவமானப்பட்டு நின்றான் கருங்கைவாணன்.
சினமேறிய அவனுடைய கண்கள் வெளித்தெரியாமல் இருக்க, தலை கவிழ்ந்தான்.
அவனுக்கான சொற்களுக்கு இடம் தராமல் குலசேகரபாண்டியன் சொல்லி முடித்தார். ``இரவு உணவை அருந்திய பிறகு கூடுவோம். நாளைய தாக்குதலுக்கான புதிய திட்டத்தோடு வா.”
கருங்கைவாணன் வெளியேறிய பிறகு அரச குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் மட்டும் கூடாரத்தில் இருந்தனர். வெளிப்படையாக எல்லாவற்றையும் பேச முடியாத நிலை மூவேந்தருக்கும் இருந்தது.
`தந்தை சோழவேழன், கருங்கைவாணனைக் கடுஞ்சொற்கள்கொண்டு பேசியது சரியன்று’ என, செங்கனச்சோழனுக்குத் தோன்றியது. ஆனால், பொதியவெற்பனின் எண்ணம் வேறு மாதிரி இருந்தது. தந்தை குலசேகரபாண்டியன் இப்படிப் பேசியதுதான் சரி. தளபதியை அவமானப்படுத்தும் சொற்களை உரிய முறையில் பயன்படுத்தவேண்டியது போர்க்களச் செயல்பாட்டில் முக்கியமான ஒன்று.
தளபதியானவன் வேட்டை விலங்கின் சீற்றம் குறையாமல் போரை வழிநடத்திச் செல்ல வேண்டும். எதிரிகளை வீழ்த்த முடியாததற்கு அவனிடம் தெளிவான காரணங்கள் இருக்கக் கூடாது. போரின் போக்கை மீண்டும் மீண்டும் தனதாக்கிக்கொள்ளும் வெறி மட்டுமே அவனுக்கு வேண்டும். ஆனால் கருங்கைவாணனோ, எதிரிகளின் வலிமைக்கான காரணங்களைத் தன்னுடைய இரண்டு தோள்களிலும் சுமந்துகொண்டு திரிகிறான். அவற்றை வெட்டி வீழ்த்தவேண்டியதே இப்போதைய தேவை. குலசேகர பாண்டியன் அதைத்தான் செய்துள்ளார் எனப் பொதியவெற்பன் நினைத்தான்.

அவை, பேச்சின்றி நீடித்தது. அமைதியை முடிவுக்குக் கொண்டுவந்தது சோழவேழனின் குரல். ``போரில்லாத வழிமுறைகளைப் பற்றியும் நாம் தீவிரமாகச் சிந்திக்கவேண்டிய நேரம் இது.”
``உண்மைதான். ஆனால், மலைமக்களின் கனவுகள் மிகக் குறுகியவை. சமவெளி மனிதர்களைப்போல ஆசைகளுக்கும் விருப்பங்களுக்கும் அவர்கள் விலைபோய் விடுவதில்லை. குலச்சமூகத்தில் உடைப்பை ஏற்படுத்துவதும் எளிதன்று” என்றான் பொதியவெற்பன்.
``பறம்பில் வேளிர்குலம் மட்டும் இல்லையே. பல குலங்கள் இருக்கின்றனவல்லவா? அவற்றை நமக்கான முறையில் நாம் ஏன் பயன்படுத்தக் கூடாது?” எனக் கேட்டார் சோழவேழன்.
``நிறைய குலங்கள் இருக்கின்றன. ஆனால், எல்லோரும் தங்களின் குடிகளோடு பறம்பில் வசிக்கின்றனர். எனவே, எளிதில் பாரிக்கு துரோகம் இழைக்க மாட்டார்கள்” என்று சொன்ன குலசேகரபாண்டியன் சற்று இடைவெளிக்குப் பிறகு சொன்னார், ``அதுபோன்ற செயல்களுக்கு நீண்டகாலம் தேவை. போர்க்களத்தில் தாக்குதல் உச்சம்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவற்றைப் பற்றிச் சிந்திப்பது நம்மை வலிமை குன்றச் செய்துவிடும். இப்போதைய தேவை எதிரியை உருக்குலைக்கச் செய்யும் தாக்குதல் உத்திதான். கருங்கைவாணன் என்ன திட்டத்தோடு வருகிறான் என்பதை, பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.
அவரின் கருத்தை ஏற்று உணவு அருந்தக் கலைந்தனர்.
அணுக்கக்காவலர்களும் மெய்க்காப்பாளர்களும் சூழ, பேரரசர்கள் தத்தமது கூடாரம் நோக்கிப் போயினர். காக்குவீரர்கள் அணிவகுக்க உதியஞ்சேரல் அவனது கூடாரத்துக்குள் நுழைந்தான். மூஞ்சல் நோக்கிப் பாய்ந்துவந்த எதிரிகளின் தாக்குதல் வேகம் அவனது மனக்கண்ணை விட்டு எளிதில் அகலவில்லை. பறம்போடு அதிகமான போர்களை நடத்தியது சேரர்குடிதான். எனவே, அவனால் முன்னர் நடந்த போர்களின் தன்மைகளோடு ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. பறம்புவீரர்களின் தாக்குதல் இந்தப் போரில் பல மடங்கு வலிமைகொண்டுள்ளதாகத் தோன்றியது. மூவேந்தர்களின் கூட்டுப்படையின் எண்ணிக்கை யாரும் நினைத்துப்பார்க்க முடியாதது. ஆனால், அவற்றையெல்லாம் அவர்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. போரின் மூன்றாம் நாளிலேயே அவர்கள் மூஞ்சலை நெருங்கிவிட்டார்கள். இனி அவர்களின் வேகம் மேலும் அதிகமாகும். நமது தரப்பில் வலிமையான படையைக்கொண்டுள்ளோம். ஆனால், நம்மிடம் சரியான திட்டங்கள் இல்லை என்ற எண்ணத்தோடு உணவு அருந்த அமர்ந்தான் உதியஞ்சேரல்.
அப்போது காவல்வீரன் உள்ளே வந்து வணங்கிச் சொன்னான், ``சோழப்பேரரசர் தங்களைக் காண வந்துள்ளார்.”
உதியஞ்சேரல் எழுந்து வாயில் நோக்கி வருவதற்குள் ஊன்றுகோலை நகர்த்தி உள்நுழைந்தான் செங்கனச்சோழன்.
இருவரும் உணவு அருந்தியபடியே பேசத் தொடங்கினர்.
பொதியவெற்பனைத் தனது கூடாரத்துக்கு உணவு அருந்த அழைத்து வரச் சொன்னார் குலசேகரபாண்டியன்.
தந்தையின் திடீர் அழைப்பு வியப்பை ஏற்படுத்தியது. ‘எதற்காக அழைத்திருப்பார்?’ என்ற சிந்தனை யுடனேயே கூடாரத்துக்குள் வந்தான் பொதிய வெற்பன்.
உணவு அருந்திக் கொண்டிருந்த குலசேகரபாண்டியன், எதிரில் வந்து நிற்கும் பொதிய வெற்பனிடம் கேட்டார், ``நான் கருங்கைவாணனைக் கடுஞ்சொற்களால் பேசியது ஏன் என உன்னால் புரிந்து கொள்ள முடிந்ததா?”
``புரிந்தது தந்தையே. தாக்குதல் உத்தியில் இன்னும் நமது ஆற்றல் முழுமையாக வெளிப்படவில்லை என்பதால்.”
பொதியவெற்பன் சொல்லி முடிக்கும் முன் குலசேகரபாண்டியன் கூறினார், ``இல்லை. அவன் இதுவரை சரியான உத்திகளைத்தான் வகுத்துள்ளான். ஆனால், அவற்றையெல்லாம் எதிரிகள் எளிதில் தகர்க்கிறார்கள்.”
தந்தையின் பேச்சு பொதிய வெற்பனுக்குச் சற்றே அதிர்ச்சியைக் கொடுத்தது.
``ஆனால், அதை நாம் அவையில் ஏற்றுக்கொண்டால் போரை வழிநடத்தும் நமது தலைமைத்திறன்மீது மற்ற இரு பேரரசுகளுக்கும் நம்பிக்கை பொய்க்கத் தொடங்கும். அதனால்தான் கருங்கைவாணன் பின்பற்றும் உத்தியைக் குறைசொல்லாமல் அவன் கொண்டிருக்கும் கருத்தின்மீது தாக்குதல் தொடுத்தேன்.”
பொதியவெற்பன் வாயடைத்து நின்றான்.
``மற்ற இரு பேரரசர்களுக்கும் பறம்பை வெல்ல வேண்டும் என்ற ஒற்றை நோக்கம்தான் இருக்கிறது. ஆனால், நமக்கு இருப்பதோ அந்த ஒற்றை நோக்கம் மட்டுமன்று.”
குலசேகரபாண்டியன் குரலின் வழியே போரின் ஆழம் வெளிப்படத் தொடங்கியது.
குலசேகரபாண்டியன் தொடர்ந்தார், ``மற்ற இரு பேரரசர்களும் முதன்முறையாக நமது தலைமையை ஏற்று வந்துள்ளனர். இந்த நிலையைப் பாதுகாக்க வேண்டும். அது, பறம்பை வெல்வதைவிட முக்கியத்துவம் வாய்ந்தது. அதே நேரத்தில் பறம்பை வெற்றிகொள்ளும் உத்தியின் வழியேதான் நம்மீதான அவர்களின் நம்பிக்கையை இறுகக் கட்ட முடியும்.”
போரின் முழுப்பரிமாணமும் குலசேகரபாண்டியனின் வார்த்தையில் விரிந்தது.
போர்க்களம் உருவாக்கும் நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மையைத் தனது பேச்சு மற்றும் கண்ணோட்டத்தின் வழியே தலைகீழாக மாற்றவேண்டிய ஆற்றல் முக்கியமானது. உண்மையில் போர் தலைமையேற்பவர்களின் மனநிலையை வழிநடத்துவதில்தான் நிலைகொள்கிறது. குலசேகரபாண்டியன் தனித்து நடத்திக்கொண்டிருக்கும் பெரும்போரை விரிந்த கண்களின் வழியே பார்த்துக் கொண்டிருந்தான் பொதியவெற்பன்.
``போரின் போக்கு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
செங்கனச்சோழனின் கேள்விக்கு உடனடியாக பதில்சொன்னான் உதியஞ்சேரல், ``நம்மால் நினைத்துப்பார்க்க முடியாதபடி போரின் போக்குகளை அவர்கள் உருவாக்குவார்கள். என் தந்தையின் காலம்தொட்டு எத்தனையோ தாக்குதல்களைப் பறம்பின்மீது நடத்தியிருக்கிறோம். ஆனால், அப்போதெல்லாம் இல்லாத பேராற்றல் இப்போது பறம்புவீரர்களிடம் வெளிப்படுவதைக் காண்கிறேன்.”
``காரணம்?”
``பாரி இறங்கி வந்து போரிட வேண்டும் என்பதற்காக நாம் கடைப்பிடித்த உத்தி தவறானது என நினைக்கிறேன். அளவுக்கு அதிகமாகச் சினம்கொள்ளும்படி அவர்களை நாம் சீண்டிவிட்டோம் எனத் தோன்றுகிறது.”
``அப்படியா நினைக்கிறீர்கள்?”
``ஆம். குகைக்குள் இருக்கும் விலங்கை வெளியேற்ற அதன் குட்டியைத் தூக்கிவரக் கூடாது. அது வெளியேற்றும் செயலன்று; வெறியேற்றும் செயல். நாம் அதைச் செய்துவிட்டோம்.”
``இதை எதிர்கொள்ள என்ன வழி?”
``கருங்கைவாணன் சொல்வதுபோல ஒரே நாளில் நஞ்சாயுதங்களைக்கொண்டு பெருந்தாக்குதல் நடத்துவதுதான் பயன்கொடுக்கும் என நினைக்கிறேன்.”
``வேறு வழியே இல்லையா?”
``எனக்குத் தெரிந்து வேறு வழியேதும் இல்லை. உங்கள் தந்தை கூறியதைப்போல போர் அல்லாத வழிமுறையைப் பற்றிப் பேச இது நேரமல்ல. குலசேகரபாண்டியன் கூறியதைப்போல எண்ணற்ற குலங்கள் பறம்பில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் தங்கள் குடிகளுடன்தாம் இருக்கின்றனர். எனவே, அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பேதும் இல்லை.”
``இதைப் பற்றிப் பேசுவதற்காகத்தான் நான் வந்தேன்” என்றான் செங்கனச்சோழன்.
``இதைப் பற்றிப் பேச வேறென்ன இருக்கிறது?” என்று சற்றே வியப்போடு உதியஞ்சேரல் பார்த்தான்.
செங்கனச்சோழன் சொன்னான், ``குடிகள் அல்லாத குலத்தலைவர்களும் அங்கு உள்ளனர்.”
``வாய்ப்பேயில்லை. பறம்பைத் தொடர்ந்து கவனித்தும் அறிந்தும் வருபவர்கள் நாங்கள். குடிகளின்றிக் குலத்தலைவர்கள் மட்டும் அங்கு இருக்க வாய்ப்பேதும் இல்லை.”
செங்கனச்சோழன் வலதுகையில் பிடித்திருந்த ஊன்றுகோலை மெள்ளத் திருகியபடி கரும்பாக்குடியைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான்.
``இந்தப் போரில் வரையறுக்கப்பட்ட விதிகளின்படி வெற்றிகொள்ளும் வாய்ப்பைக் கருங்கைவாணனுக்கு வழங்குவேன்” என்றார் குலசேகரபாண்டியன்.
``விதிகளின்படி போரிட்டு வெற்றிகொள்வது மிகக்கடினம் எனத் தெரிந்தும் அந்த வழியே தொடர்ந்து முயல்வது நமக்குத்தானே இழப்புகளை அதிகமாக்கும். ஏன் மாற்றுவழிக்கு நீங்கள் அனுமதி தர மறுக்கிறீர்கள்?”
``எது சிறந்த மாற்றுவழி என்பதை நான் அறிவேன். எனவே, அதற்கான முயற்சியை நான் செய்துள்ளேன். ஒருவேளை நான் பின்பற்றும் வழியும் தோல்வியடைந்தால் மூன்றாவதாக, கருங்கைவாணன் சொல்லும் நஞ்சுத்தாக்குதலுக்கு அனுமதி வழங்குவேன்.”
குலசேகரபாண்டியனின் சொற்கேட்டு அசைவற்று நின்றான் பொதியவெற்பன். சற்றும் எதிர்பாராத ஒன்றாக இருந்தது அவர் சொன்னது. அந்த மாற்றுவழியில் அவருக்குப் பெரும்நம்பிக்கை இருப்பதால்தான் விதிமுறைப்படி போரிடத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்பது புரிந்தது. அதுமட்டுமன்று, மற்ற இரு பேரரசுகளும் போர்முனை நோக்கியே கவனம்கொண்டிருக்க வேண்டும், அப்போதுதான் மாற்று வழிமுறையானது பாண்டியரின் தனிப்பெரும் முயற்சியாகத் துலங்கிநிற்கும் என்பதும் விளங்கியது.
``போர்க்களம் நம்பிக்கையை மெய்யாக்கினால் தொடர்ந்து வாள் ஏந்தலாம். நம்பிக்கையைப் பொய்யாக்கினால் தொடர்ந்து வாள் ஏந்தக் கூடாது. ஏனெனில், வெற்றி என்பது வாளோடு மட்டும் தொடர்புடையதன்று” என்றார் குலசேகரபாண்டியன்.
`ஆம்’ எனத் தலையசைத்தான் பொதியவெற்பன்.
``எவ்வளவு பெரும்படையும் துரோகத்துக்கு ஈடில்லை என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும் மகனே.”
போர்க்களம் கடந்து வெற்றி நோக்கிய மாற்றுப்பாதை ஒன்றைக் கண்டறிந்த தந்தையின் சொற்கள், அளவற்ற மகிழ்வைக் கொடுத்தன. பெரும் தயக்கத்தோடு மெள்ளக் கேட்டான், ``அந்தப் பாதை என்ன தந்தையே?”
``அந்தப் பாதை என்ன என்பதையும் அதில் பயணிக்கப்போகிறவர் யார் என்பதையும் நீ தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் உன்னை வரச் சொன்னேன்.”
கரும்பாக்குடியின் மொத்தக் கதையையும் சொல்லி முடித்தான் செங்கனச்சோழன். ஏறக்குறைய உறைந்த நிலையில் அதைக் கேட்டுக்கொண்டிருந்தான் உதியஞ்சேரல்.
``பொருத்தமான மனிதர்கள் மூலம் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். விரைவில் நல்ல செய்தி வரும்.”
``அடைக்களம் தந்த பாரிக்கு எதிராக அவர்கள் எப்படி...” என்று உதியஞ்சேரல் சொல்லி முடிக்கும் முன் செங்கனச்சோழன் சொன்னான், ``கரும்பாக்குடியின் குலத்தலைவர்கள்தாம் அங்கு இருக்கின்றனர். அந்தக் குடிகள் அனைவரும் எம்முடைய நாட்டில்தான் இருக்கின்றனர். நமக்காக இல்லாவிடினும், அவர்கள் குலம் காக்கவாவது நாம் சொல்வதைச் செய்வார்கள். அதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியேதும் இல்லை.”
``உங்களுக்கு நம்பிக்கை உள்ள அந்தப் பாதை என்ன? அதில் பயணிக்கப்போகிறவர் யார் தந்தையே?”
பொதியவெற்பனின் கேள்விக்கு அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்து பதில் சொன்னார் குலசேகரபாண்டியன், ``அந்தப் பாதையில் பயணிக்கப்போவது பொற்சுவை.”
தடுமாறி நின்றான் பொதியவெற்பன். போர்க்களம் வந்து இத்தனை மாதங்கள் கழித்து, தந்தை தன்னைத் தனியே அழைத்துப் பேசுவதன் காரணம் இப்போதுதான் புரியத் தொடங்கியது.
குலசேகரபாண்டியன் சொன்னார், ``அவள் அமைதிவேண்டிப் பாரியைக் காணத் திட்டம் வகுத்திருக்கிறாள். போரில் பங்கெடுக்காத வெங்கல்நாட்டின் ஆறு ஊர்க்காரர்களைக் கொண்டு அந்தச் செயலைச் செய்ய முயல்கிறாள். எனது கணிப்புப்படி விரைவில் அவள் பாரியைக் காண்பாள். அந்த நாளில் நாம் நினைத்தது நடக்கும்.”
தந்தையை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் பொதியவெற்பன். பாண்டியனின் தனித்த முயற்சியால் பாரி கொல்லப்படுவான். அதுவரை மூவேந்தர்களின் கூட்டுப்படையை வகுக்கப்பட்ட விதிகளின்படி கருங்கைவாணன் வழிநடத்துவான். அறம் பிறழாத போரின் சான்றெனப் பரண்மேல் நின்றிருப்பார் திசைவேழர். தட்டியங்காட்டின் வெற்றி பாண்டியப் பேரரசின் தனிப்பெரும் வெற்றியாக நிலைகொள்ளும்.
பெருவேந்தன் குலசேகரபாண்டியனின் திட்டம் இப்போதுதான் பொதிய வெற்பனுக்குப் புரியத் தொடங்கியது.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...
சு.வெங்கடேசன்