
சோறு முக்கியம் பாஸ்! - 26
பரபரப்பான ஒரு தெருவில் நின்று சுற்றும் முற்றும் பாருங்கள். கண்படும் இடமெல்லாம் உணவகங்கள். எல்லா உணவகங்களிலுமே கூட்டம் நிறைந்திருக்கிறது. அதுவும், மதிய நேரத்தில் உள்ளே நுழைந்துவிட்டால், சாப்பிடுபவர்களின் பின்னால் நின்று இடம் பிடிக்க வேண்டியிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் நம் வாழ்க்கைமுறையில் நிகழ்ந்த பெரிய மாற்றம் இது. இதைச் சரியாக உள்வாங்கியே, பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் உணவகத் தொழிலில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கின்றன.

சைவம், அசைவம், தென்னிந்தியா, வட இந்தியா, கிரில், பார்பிக்கியூ, சைனீஸ் என இளம் தலைமுறையைக் குறிவைத்து விதவிதமாக உணவகங்கள் தொடங்கப்படுகின்றன. நம் இளைஞர்கள் எதையும் தள்ளிவைப்பதில்லை. அதிலும், வித்தியாசமாக எது இருந்தாலும் அதை ரசித்து ருசித்துப் பார்த்துவிட வேண்டும்.
அப்படித்தான், சென்னை, பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள கார்னிவல் ஃபேமிலி ரெஸ்டாரன்டில், ‘ராஜபோக விருந்தை’ வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். `ராஜபோக விருந்தி’ல் மொத்தம் 25 டிஷ்கள். சிக்கன், மட்டன், இறால், காடை தொடங்கி தேன்மிட்டாய், கடலை மிட்டாய், இளநீர்ப் பாயசம் வரை விதவிதமாகக் கொண்டுவந்து அடுக்கி மனதையும் வயிற்றையும் நிறைய வைத்துவிடுகிறார்கள்.

கார்னிவல் ஃபேமிலி ரெஸ்டாரன்டின் உரிமையாளர் ஜனா, பொறியாளர். பெரிய நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர். `ரசித்து ருசித்துச் சாப்பிடுவதற்கென்றே தொலைதூரம் பயணிக்கும் குரூப்’பைச் சேர்ந்தவர். இந்தியா முழுவதும் சுற்றியிருக்கிறாராம். அந்த அனுபவத்தில், பார்த்த வேலையை விட்டுவிட்டு இந்த உணவகத்தைத் தொடங்கியிருக்கிறார். கையேந்தி பவன் தொடங்கி நட்சத்திர உணவகங்கள் வரை, ருசிபார்த்த உணவுகளையெல்லாம் பரீட்சார்த்த முயற்சியாகத் தன் உணவகத்தில் செய்து பார்க்க, நல்ல வரவேற்பு கிடைத்தது. எல்லாவற்றையும் ஓர் இலையில் குவித்து, ‘ராஜபோகம் விருந்தா’க்கிவிட்டார்.
பெரும்பாலும் எல்லாம் செட்டிநாட்டு ஸ்டைல். உபசரிப்பாளர்கள் எல்லோரும் வேட்டி, சட்டையில் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள். விசாலமான டைனிங். தலைவாலை இலை போட்டு ராஜபோக விருந்தைப் பரிமாறுகிறார்கள். முதலில் இனிப்பு. சர்க்கரைப் பொங்கல் தருகிறார்கள். சிலநாள், கவுனி அரிசி அல்வா வருமாம். இனிப்பை ரசித்துச் சாப்பிட்டு முடிப்பதற்குள் சிறு பானையில் தளும்பத் தளும்ப மோர் கொண்டுவந்து வைக்கிறார்கள். குடிக்க அமுதமாக இருக்கிறது. அடுத்து, தொடுகறிகள் வரிசைகட்டுகின்றன.
`மதுரைப் பொரிச்ச கோழி’ என்ற பெயரில் ஒரு லெக் பீஸ் வைக்கிறார்கள். கறுக்க ஃப்ரை செய்திருக்கிறார்கள். மதுரை என்றாலே கொஞ்சம் காரசாரம் இருக்கும். ஆனால், இது சாப்பிடும் பதத்தில் இருக்கிறது. ஒரு முழுக் காடையை சிக்ஸ்டி பைவ் செய்து அதன் வடிவத்திலேயே இலையில் பரப்பி வைக்கிறார்கள். மொறுமொறுப்பாக இருக்கிறது. அதைச் சாப்பிட்டு முடிக்கும் முன்னரே, நாட்டுக்கோழி வறுவல் வருகிறது. எலும்பும் கறியுமாக மசாலாவில் ஊறி, பஞ்சு மாதிரி கரைகிறது. கூடவே, செமி கிரேவியாக மட்டன் சுக்கா வைக்கிறார்கள். கறிவேப்பிலையும் வெங்காயமும் இரண்டறக் கலந்து வித்தியாசமான வண்ணத்தில் இருக்கிறது. சுவை அபாரம். அடுத்து சிக்கன் சுக்கா. இதுவும் மட்டன் சுக்கா பதத்தில் இருக்கிறது. கூட ஒரு முட்டை.
வைத்ததையெல்லாம் சாப்பிடும்வரை இடைவெளி விட்டு, அடுத்த ரவுண்டு ஆரம்பிக்கிறார்கள். இப்போது கடலுணவுகள். பொரித்த மீன், கையகலம் இருக்கிறது. கிரேவி நிறைந்த இறால் வறுவலையும் வஞ்சனை இல்லாமல் அள்ளி வைக்கிறார்கள்.
இதன்பிறகுதான் மெயின் டிஷ் கொண்டு வருகிறார்கள். பரோட்டா வைத்து அதன்மீது மட்டன் வெள்ளைக்குருமாவை அள்ளி வைக்கிறார்கள். கூடவே, பெரிய மட்டன் பீஸும். மட்டன் வெள்ளைக்குருமா, காரமில்லாமல் வாசனையாக இருக்கிறது. தேங்காய், முந்திரி, கசகசா, ஏலக்காய் சேர்த்துச் செய்தது. பரோட்டாவைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே, பிரியாணி வருகிறது. ஆம்பூர் வாசனை. பிரியாணிக்குத் தோதாக கெட்டியான வெங்காயப் பச்சடியும் வைக்கிறார்கள். இவற்றையெல்லாம் சாப்பிட்டு முடித்து இடமிருந்தால், சாதம் வாங்கிக்கொள்ளலாம். நீங்கள் கேட்கிறீர்களோ இல்லையோ, சாதச் சட்டியோடு ஒருவர் முன்னால் நின்றுகொண்டேயிருப்பார்.
சாதத்துக்கு மூன்று விதமான குழம்புகள். மீன் குழம்பு மிதமான புளிப்பும் காரமுமாக இருக்கிறது. சிக்கன் குழம்பு, மட்டன் எலும்பு கொழுப்புக் குழம்பு இரண்டும் கெட்டிப்பதம். போதாக்குறைக்கு குழம்புகளிலும் பீஸ்கள் நிறைந்திருக்கின்றன. இதையும் தாண்டி இடமிருந்தால், ரசம், மோர் என்று நகரலாம்.
நிதானமாக, ரசித்து, ருசித்துச் சாப்பிட்டு முடித்து, கைகழுவி, சற்று ஆசுவாசப்பட்டதும், நான்கு தேன் மிட்டாய், இரண்டு கடலை மிட்டாய், இரண்டு எள் மிட்டாய், பீடா, வாழைப்பழம் எனத் தட்டை நிரப்பிக் கொண்டு வந்து வைக்கிறார்கள். கூடவே, ஒரு டம்ளர் இளநீர்ப் பாயசம், ஒரு கப் ஐஸ்கிரீம். இளநீர்ப் பாயசம் விருந்தைத் தித்திப்பாக்கிவிடுகிறது. வயிற்றில் இண்டு இடுக்குகள் நிரம்பித் தொண்டைக்குழி வரைக்கும் வந்து நிற்கிறது உணவு. பத்து நிமிடம் உக்கார்ந்து ரிலாக்ஸ் செய்துகொண்டுதான் நகர வேண்டும்.
உண்மையில், ராஜபோக விருந்துதான். எல்லாமே அன்லிமிடெட். சாப்பிடச் சாப்பிட அள்ளி வைத்துக்கொண்டிருக்கிறார்கள். விலை, 599 ரூபாய். உணவு, உபசரிப்போடு ஒப்பிடும்போது விலை ஓகேதான்.
`மெகா ராஜபோக விருந்து’ம் இருக்கிறது. அதன் விலை 699 ரூபாய். மேற்கண்ட டிஷ்கள் தவிர்த்து, நண்டு ஃப்ரை, தலைக்கறி, குடல் வறுவல் கூடுதலாக வரும். மாலையில், `ராஜபோகச் சிற்றுண்டி’ சாப்பிடலாம். அதுவும் 599 ரூபாய். சைடிஷ்கள் எல்லாம் ஒன்றுதான். சாதத்துக்குப் பதில் கொத்துப்பரோட்டா, இடியாப்பம், கறிதோசை தருகிறார்கள். `ராஜபோகம்’ இல்லாத சாதாரண மீல்ஸும் இருக்கிறது. 120 ரூபாய். சாதம், இரண்டு சைவத் தொடுகறிகள், மீன் குழம்பு, சிக்கன் குழம்பு, மட்டன் குழம்போடு நிறைவடையும்.
60 பேர் வசதியாக அமர்ந்து சாப்பிடலாம். திறந்தவெளியிலும் இருக்கைகள் போட்டிருக்கிறார்கள். ராஜபோகச் சிற்றுண்டியை அங்கே அமர்ந்து சாப்பிடலாம். பதினொன்றரை மணிக்கெல்லாம் ராஜபோக விருந்து ரெடியாகிவிடுகிறது. நான்கு மணிவரை கிடைக்கும். 7 மணிக்கு, `ராஜபோகச் சிற்றுண்டி’ தயாராகிவிடும்.
“இந்தியா முழுவதும் பல மாநிலங்களுக்குப் போய் சாப்பிட்டிருக்கேன். குறிப்பா, அந்தந்த வட்டார உணவுகளைத் தேடிப்போய் சாப்பிடுறதுண்டு. அப்படிக் கிடைச்ச அனுபவத்துலதான் இந்த உணவகத்தைத் தொடங்கினேன். எனக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதையெல்லாம் இங்கே பரிசீலனை செஞ்சு பார்த்திருக்கேன். ராஜபோக விருந்துங்கிறது, உணவைக் கொண்டாடுறதுக்கான ஒரு கான்செப்ட். நிறைய புத்தகங்கள் வாசிப்பேன். ராஜாக்களோட உணவுகள் பத்தி தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில ஒரு புத்தகம் வாசிச்சேன். அந்த உத்வேகத்துலதான் ராஜபோக விருந்தை ஆரம்பிச்சேன். ஒவ்வொரு நாளும் டிஷ்சை மாத்திக்கிட்டேயிருப்போம். போனவாரம், மதுரையில ஒரு தள்ளு வண்டிக்கடையில எலும்பு சுக்கா சாப்பிட்டேன். இந்தவாரம் எங்க மெனுவுல அது வந்திடுச்சு...” என்கிறார் உணவகத்தின் உரிமையாளர் ஜனா.
குடும்பத்துடனோ நண்பர்களுடனோ ஒருநாளைக் கொண்டாட விரும்புபவர்களுக்கு கார்னிவல் ஃபேமிலி ரெஸ்டாரன்ட் பொருத்தமான இடம்!
- பரிமாறுவோம்
வெ.நீலகண்டன் - படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

சாப்பிடும்போது தொண்டையில் மீன்முள் மாட்டிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்?
``சாப்பிடும்போது தவறுதலாக மீன்முள்ளை விழுங்கிவிட்டால், அது தொண்டையில் மாட்டிக்கொண்டுவிடும். அதனால் சாப்பிடவோ, பேசவோகூட சிரமமாகிவிடும். உடனே, சிலர் வாய்க்குள் கைவிட்டு முள்ளை எடுக்க முயல்வார்கள். அது தவறு. பாதிப்பு அதிகமாகிவிடும். சிறுமுள்ளாக இருந்தால் சில நிமிடங்களில் தானாகவே உள்ளே போய்விடும். சற்று பெரிய முள்ளாக இருக்கும்பட்சத்தில் சிக்கிய இடத்தில் சீழ் கட்டி தொற்று ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. சிலர் சாதத்தைப் பெரிய உருண்டையாகத் திரட்டி விழுங்குவார்கள். இது சில நேரங்களில் பயனளிக்கலாம் அல்லது நிலைமையை மேலும் சிக்கலாக்கலாம். சில நேரங்களில் மூச்சுத்திணறல் ஏற்படவும் வாய்ப்புண்டு. ஒரு மணி நேரத்திற்கு மேலும் முள் தொண்டையில் உறுத்திக்கொண்டிருந்தால், யோசிக்காமல் காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அணுகவேண்டும்.”

சங்கர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர்