மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான்காம் சுவர் - 2

நான்காம் சுவர்
News
நான்காம் சுவர் ( பாக்கியம் சங்கர் )

பாக்கியம் சங்கர்

பிள்ளையின் முகத்தைத் துடைத்து முடித்தபோதுதான் திருப்பால் கவனித்தார், கழுத்து நெரிக்கப்பட்டிருந்ததை. உடல் முழுவதும் ஆங்காங்கே கீறல் இருப்பதையும் கவனித்தார். போத்தலை ஒரே மடக்காகக் குடித்து வைத்தார். பிள்ளையைக் கையில் ஏந்தி ஃப்ரீஸர் அறையைத் திறந்தார். ஒரே டிரேயில் இரண்டு சடலங்களையும் சகாயம் வைத்திருந்தான். அநாதைச் சடலங்களைத் தேடி யாரும் வராததால், நடக்கும் வழியெங்கும் சடலங்கள் கிடத்தப்பட்டிருந்தன. எதையும் மிதித்துவிடாமல் பிள்ளையைத் தனி டிரேயில் ஒரு விரிப்பை விரித்து, கிடத்தினார். பக்கத்து டிரேயில் ஒரு பெண்மணி கடந்த 20 நாளாக யாரும் தேடி வராத அநாதை வரிசையில் இருந்தார். அவரது டோக்கனைப் பார்த்தார். `இனியும் யாரும் தேடி வரப்போவதில்லை’ என்பதாக நினைத்துக்கொண்டார். பிள்ளையின் முகத்தை மூடி வைத்துவிட்டு, பிணவறையின் கதவுகளைத் தாழிட்டு வெளியே வந்தார். 

நான்காம் சுவர் - 2

ஆலமரத்தின் அடியில் பிள்ளையின் தகப்பன் பிணவறையை வெறித்தபடி பார்த்துக்கொண்டிருந்தான். இரண்டு நண்பர்கள் அவனோடு இருந்தார்கள். அதில் ஒருவன் உட்கார்ந்தபடியே தூங்கியிருந்தான். எப்போதும்போல சோடியம் விளக்கு மஞ்சள் ஒளியை உமிழ்ந்துகொண்டிருந்தது. கொன்றைமரத்தின் இலைகள் காற்றில் சரசரத்துக்கொண்டிருந்தன. அந்த இரவில் கறுத்த பூனை ஒன்று, தனது மருட்டும் விழிகளால் எதையோ உருட்டி உருட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. வரவேற்பறையின் வாசலில் குளிரின் கூதலில் கம்பளியில் சுருண்டுகொண்டிருந்த வாட்ச்மேனிடம் வந்தார் திருப்பால்.

``யோவ் பெர்சே… பீடி இருந்தா குடுய்யா.”

பெரியவர் உறக்கத்திலிருந்து விழித்தார். பக்கத்தில் இருக்கும் தண்ணீர் பாட்டிலைத் திறந்து ஒரு மடக்கு குடித்துக்கொண்டார். ஜோபியில் இருந்து இரண்டு பீடிகளை எடுத்தவர், ஒன்றைத் திருப்பாலுக்குக் கொடுத்தார். இருவரும் பரஸ்பரம் பற்றவைத்துக்கொண்டனர்.

``இன்னா திரு… ரெண்டு வூடு வெச்சுக்கினுகிறோம்னு ஓட்டில்லாம் பாக்குறபோல…” - பெரியவர் பீடியை இழுத்துக்கொண்டார்.

``டூட்டி பாத்தாலே காசு கொடுக்க அழுவானுங்கோ… இதுல ஓட்டி பாத்து வூடா கட்டப்போறன்? நீ வேற… நம்ப மாசாணம் மச்சானுக்குக் கல்யாணமா… அதான் அவன் டூட்டிய சேத்துப்பாக்குறேன்’’ திருப்பால் தண்ணீரைக் கொஞ்சமாகக் குடித்துக்கொண்டார்.

திரும்பி ஆலமரத்தின் அடியில் பார்த்தார். பிள்ளையின் தகப்பனும் தாயும் சுருண்டுகிடந்தார்கள். ``இப்போதைக்கு இவங்களுக்குக் கிடைக்கிற சொற்ப நிம்மதி… இந்தத் தூக்கம்தான்ல பெர்சு...” பீடியை இழுத்துச் செருமிக்கொண்டார் திருப்பால். 
சுருண்டு இருந்தவன் திடீரென எழுந்து திருப்பாலிடம் வந்தான். பீடியின் கடைசிக் கங்கை இழுத்து, சுண்டி எறிந்தார் திருப்பால். ``என் கொழந்த… எப்பிடிண்ணே இருக்கு?” என்று கேட்டதும், திருப்பால் என்ன சொல்வது எனத் தெரியாமல் அவனைப் பார்த்தார். அவன் அளவில் அந்தப் பிள்ளை இறந்துபோகவில்லை. ஒரு வனத்தில் இவன் கண்களைக் கட்டிவிட்டு அந்த தேவதை கண்ணாமூச்சு விளையாடிக்கொண்டிருக்கிறாள். அந்த வனமெங்கும் அந்த இருவரின் விளையாட்டு அவன் வாழ்வின் முச்சூடும் நிகழும் ஒரு துன்பியல் சித்திரம் எனத் திருப்பால் நினைத்துக்கொண்டார். 

நான்காம் சுவர் - 2

``என் பிள்ளைய அறுத்துடாதண்ணே… பச்ச மண்ணுண்ணே… நாசம் பண்ணிட்டான்ணே அந்தப் படுபாவி. `மாமா… மாமா’ன்னு கூப்புட்டுட்டு திரிஞ்சபுள்ளய இப்படிப் பண்ணிட்டானேண்ணே… `உட்று மாமா… உட்று மாமா’ன்னு கொழந்த கெஞ்சும்போதும் கழுத்த நெரிச்சுக் கொன்னுட்டானே பாவி... கொன்னுட்டானே” என்று ஆங்காரம் ஒலித்த குரலில் தரையில் ஓங்கி ஓங்கி அடித்தான். இந்த அரவத்தில் விழித்த அவன் மனைவி, எந்தச் சலனமுமில்லாமல் தன் கணவனை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தாள். மிருக இச்சையின் நாவுக்கு வாரிக்கொடுத்த ஒரு தகப்பனின் ஆற்றாமையின் முன் என்ன பேசுவது எனத் தெரியாமல், அங்கிருந்து தலத்துக்குள் நுழைந்தார் திருப்பால்.

விடிந்தது. கொன்றைமரத்தின் பூக்கள், தலத்தைச் சுற்றிச் சிதறிக் கிடந்தன. விளக்குமாற்றால் பெண் ஊழியர் ஒருவர் பெருக்கிக்கொண்டிருந்தார். ராத்திரி முழுவதும் வலம்வந்துகொண்டிருந்த கறுத்த பூனை, கொன்றைமர நிழலில் கவட்டில் கால் வைத்தபடி ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தது.

நான்காம் சுவர் - 2சகாயம் தேநீரோடு வந்தான். பொறையும் பிஸ்கோத்துப் பொட்டலமும் வைத்திருந்தான். வாட்ச்மேன் பெரியவருக்குத் தேநீரும் பிஸ்கோத்தும் கொடுத்துவிட்டு, தலத்துக்குள் நுழைந்தான். பல் துலக்கிக்கொண்டிருந்த திருப்பால், சகாயத்தைப் பார்த்தார். தேநீரை இரண்டு லோட்டாவில் ஊற்றினான். திருப்பால், வாயைக் கொப்புளித்து ஜன்னல் வழியாக உமிழ்ந்தார்; முகத்தைத் துடைத்துக்கொண்டு சகாயம் ஊற்றிவைத்த தேநீரை எடுத்துக்கொண்டார். பொட்டலத்தில் இருந்த பொறையை இடதுகையால் தேநீரில் முக்கி முக்கி எடுத்துச் சாப்பிட்டபடியே தேநீரையும் குடித்துக்கொண்டார்.

``இன்னா மாமே… ராவெல்லாம் தூங்கலியா… கண்ணு ரெண்டும் தூக்குல தொங்குனா மாறி நட்டுக்கினு நிக்குது?” என்றபடி சகாயம் தேநீரைக் குடித்து முடித்து லோட்டாவை வைத்தான்.

``தூக்கமே வர்றலடா” - பீடியைப் பற்றவைத்துக்கொண்டார்.

``மாமே இந்த மாசம் அன்க்ளைம்டு பாடி டிடெயில்ஸு பாஸ்கர் டாக்டரு கேட்டாப்புல… அநாத பாடி எல்லாத்தையும் க்ளியர் பண்ணணுமாம்… டீன் பிரஷரு… அடுத்த வாரம் அடக்கம் பண்ண, டிரஸ்ட்டுலேருந்து ஆனந்திமா வந்துடுவாங்களாம்… அய்யரு... பாதிரி… மௌலவிகிட்டயும் சொல்ட்டாங்களாம்” என்றவன், அறுவை மேடையைத் தயார்செய்ய ஆரம்பித்தான்.

``ஒரு விஷயம் கவனிச்சியாடா சகா?”

சகாயம், திருப்பாலைப் பார்த்தான்.

``ஊரு பேரோட செத்தா… ஒரு மதத்தோட சாங்கியம்தான் கெடைக்குது. அநாதயா செத்தாதான் அய்யரு, பாதிரியாரு, மௌலவின்னு மூணு மதத்தோட சாங்கியமும் நடந்து, சமத்துவமா போய்ச் சேர்றான். எல்லாக் கடவுளும் ஒண்ணுதான்னு ஆகணும்னா… அநாதப் பொணமாத்தான்டா சாவணும்” என்று சத்தமாகச் சிரித்தார்.

``சோக்கா சொன்ன மாமே… மூணு சாமிங்க ஆசீர்வாதத்தோட ஜென்மத்த முடிக்கிறதுன்னா சும்மாவா… ஆனா, நமக்குலாம் இந்தக் கொடுப்பன வராதுதான். நமக்குதான் குடும்பம் இருக்குதே… செத்துப்போன ஒடனே புள்ளைக்கு வேல… பரம்பர பரம்பரயா கத்திய புடிக்கிற நாம, அநாதயா சாவ முடியாது. நமக்குலாம் ஒரு சாமி ஆசீர்வாதம்தான்” என்றபடி பிளீச்சிங் பவுடரைத் தூவி அறுவை மேடையைச் சுத்தம் செய்தான் சகாயம். 

நான்காம் சுவர் - 2

``என் பரம்பரையில நான்தான் கடசியா கத்தி புடிப்பேன் போலக்குது… என் மவன் காந்திக்கு, நம்ம வேலயில இஷ்டம் இல்ல… பொணம் அறக்குறவன் புள்ளன்னு தெரிஞ்சு… எத்தன ஸ்கூல்ல என் புள்ளய நிறுத்தியிருக்கானுங்க தெரியுமா? சிநேகிதக்காரன் எத்தன பேரு பேசாமப் போயிருக்கான். அப்படி இன்னா, தேசத்துரோகமாடா பண்றோம்… வழி வழியா புடிச்ச கத்திய ரத்தத்தோட என்னாண்ட கொடுத்தான் என் அப்பன். என்னோட போகட்டும் இதெல்லாம்…” என்றவர் ஒரு பீடியைப் பற்றவைத்துக்கொண்டே ``காந்தியாவது வெளிச்சமா ஒரு வேலய செய்ட்டும்… குலத்தொழில்னு நம்மளே செய்ணும்னு சட்டம் இருக்கா இன்னா? கொஞ்ச காலத்துக்கு வேற யாராவது அறுக்கட்டும்” தலைக்கு அண்டக் கொடுக்கும் `ப’ கட்டையைக் கழுவினார் திருப்பால்.

பொட்டலத்தை அறுத்தெடுக்கும் கத்திகளை, சாணையில் தேய்த்துப் பதம்பார்த்துக்கொண்டார். மனிதக் கழிவுத் தொட்டியில் தேவையற்ற மனித உறுப்புகள்கொண்ட பாலித்தீன் உறையைத் தூக்கிப் போட்டார். உறையிலிருந்து சுருங்கிப்போன குடல் ஒன்று பந்துபோல கீழே விழுந்தது. அதை எடுத்துப் பார்த்த திருப்பால் ``டரிக்கியோட கொடலு சகாயம்… எப்டி சுருங்கிப்போயி இருக்குது பாரு… இப்டிதான் ஒரு தடவ, பாஸ்கர் டாக்டர் ஒரு பீசோட கொடல எடுத்து கெமிக்கல் பவுடரைத் தடவி… வெயில்ல காயவைக்கச் சொன்னாரு… அரை மணி நேரம்தான்டா இருக்கும் சகாயம்… சுருங்கி இரும்பு கணக்கா ஆயிடுச்சி… என்னையும் மாசாணத்தையும் புடிச்சு இழுக்கச் சொன்னாரு. நாங்களும் இழுத்துப் பாத்தோம்… முடியவேலடா பையா… குடிச்சிக்கினே இருந்தா இப்டிதான் கொடலு இறுகிடுமாம். அதனாலத்தான் சோறுகூட எடுக்காதுன்னு சொன்னாரு” காய்ந்த ரத்தத் திட்டுகள்கொண்ட கை உறையை உதறினார். சிறுசிறு ரத்தத் துணுக்குகள் குங்குமச் சிதறல்களைப்போல கீழே சிதறின.

``ஏன்டா பையா... நம்ம கொடலும் இப்டிதான் இருக்கும்ல?” என்று குடலை ஒரு பந்தைப்போல் தொட்டியில் எறிந்தார் திருப்பால்.

``நமக்குலாம் குடல்னு ஒண்ணு இருக்குமா மாமே…” என்று சிரித்த சகாயம், `கடலையம்மா கடல… கரிசக்காட்டு கடல… அத்தமக வெடல… இன்னும் நான் தொடல…’ என்று பாடியபடி ஒரு வாளி தண்ணீரை எடுத்துத் தரையில் ஊற்றினான்.
 
``பஸ்ட்டு  கேஸு இன்னா மாமே?” என்று கேட்டவன், விளக்குமாற்றைக் கொண்டு தரையைக் கழுவித்தள்ளினான்.

``நேத்து கடைசி கேஸுடா… அந்தக் கொழந்த...” டூடொன்டி பிளேடைப் பிரித்துவைத்த திருப்பால், சகாயத்தைப் பார்த்து ``டேய் சகாயம், அந்தக் கொழந்தய நா அட்டன்பண்ணல. நீயே பாத்துக்கோ… சும்மா ஒரு கீறு கீறி விஸ்ரா மட்டும் எடுத்துட்டு கட்டிற்ரா” என்று மனிதக் கழிவுத் தொட்டியை வெளியே கொண்டுபோனார்.

சகாயம், திருப்பாலைப் பார்த்தான் ``இன்னா மாமே… செத்துப்போன உன் கொழந்த நெனப்பு வந்துச்சா…?” என்று கேட்டான். தொட்டியைத் தோளில் வைத்திருந்தவர், சகாயத்தை வெறுமனே திரும்பிப் பார்த்துவிட்டு வெளியே சென்றார்.

நான்காம் சுவர் - 2

கழிவுகளை ஏற்றிச் செல்லும் கைவண்டியோடு கொண்டையா நின்றுகொண்டிருந்தார். ``ஏமிரா திருப்பாலு… நேத்து பீஸுங்க தண்டிகா ஒச்சிந்தா… பெத்த வருமானம் போலக்கிது… ஒக குவாட்டருகூட லேதாடா தொங்கனா கொடுக்கா” - கொண்டையா, திருப்பாலை வம்புக்கிழுத்தார்.

``நூ வேற பெத்தையா… அம்பது காசு வாட்டர் பாக்கெட்ட… எட்டு ரூபாய்க்கு வித்தாக்கூட ஏன்னு கேக்காம குடிப்பானுங்க. நமக்குக் குடுக்கும்போதுதான் சொத்தையே எழுதிவைக்கிற மாரி மூஞ்ச வெச்சிப்பானுங்க” கறை படிந்த பற்கள் அனைத்தும் தெரியும்படி சிரித்தார் திருப்பால். அடக்க முடியாமல் சிரித்தால், திருப்பாலுக்குக் கண்களில் நீர் வந்துவிடும். கண்களைத் துடைத்துக்கொண்டே உள்ளே சென்றார்.

கொண்டையா உலகின் மிகவும் ஆபத்தான தொற்றுகள்கொண்ட கழிவுகளை, கையுறையின்றி தரம் பிரித்துத் தொட்டிகளில் போட்டு மூடி வண்டியைச் செலுத்தினார்.

அப்போது ஒரு ஆம்புலன்ஸ் பரபரப்பாக உள்ளே வந்தது. கூடவே காவல்துறை வாகனமும் வந்தது. நிருபர்களும் உள்ளே வரத் தொடங்கினார்கள். சிறிது நேரத்துக்குள் அமரர் அறை வளாகம் ஒருவிதப் பதற்றத்துக்குள்ளானது. விசாரணை அறையில் 10 நிமிடத்துக்குள் எல்லாம் முடிந்து 40 வயது மதிக்கத்தக்க ஒரு சடலம் உள்ளே வந்தது.

``மாமே... 9 மணிக்கு பாஸ்கர் டாக்டரு வந்து அட்டன் பண்ணுவாப்லயாம். இன்சார்ஜ் சொன்னாரு… பெரிய எடத்து பிரஷரு மாமே.”

திருப்பாலின் முகம் சட்டென மாறியது. ``டேய் சகாயம் பர்ஸ்டு கேஸு… அந்தக் கொழந்ததான்… அப்புறம்தான் மத்ததெல்லாம். ரெடிபண்ணுடா…” என்று தீர்க்கமாகச் சொன்னார். சகாயத்துக்கு, திருப்பால் எது சொன்னாலும் அது வேதவாக்குதான். எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும் இங்கே வந்துவிட்டால் பொத்திக்கொண்டுதான் இருக்க வேண்டும். நாட்டுக்கே ராஜாவாக இருந்தாலும் அம்மணக்கட்டையோடு திருப்பாலின் டூடொன்டி பிளேடுக்கு நெஞ்சுக்குழியைக் காட்டத்தான் வேண்டும்.

வெளிப்புறம் வந்தார். ஒரு கரைவேட்டி, திருப்பாலை அழைத்தார். கூடவே காவல்துறை அதிகாரியும் கரைவேட்டிக்கு சேவகம் புரிவதுபோலவே காட்சியளித்தார். ``ஏய் குவாட்ரும் பிரியாணியும் பசங்க வாங்கிக் குடுத்துருவானுங்க. சீக்கிரம் வேலைய முடிக்கணும் புரியுதா?” ஏக தேசத்தில் அவர் பேசியது திருப்பாலுக்கு எரிச்சலூட்டியது.

``கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்… கொழந்த கேஸு இருக்குது… அதுக்கப்புறந்தான் உங்கள்து…” என்றதும் ஒரு அல்லக்கை எகிறி வந்து திருப்பாலின் முகத்தில் ஒரு குத்து விட்டான். சற்றும் எதிர்பார்க்காத திருப்பால், நிலைகுலைந்தார்.

``பொணம் அறுக்குற நாயி நீ… தலைவரு முன்னாடி சட்டம் பேசுறியா? இப்ப வேலைய முடிக்கல… த்தா… அடுத்த பாடி நீதான்” திருப்பால் நிதானத்துக்கு வந்து, சூம்பிப்போன தனது இடதுகாலை எடுத்துவைத்து எழுந்தார். தனது நிஜாரில் இருக்கும் டூடொன்டி பிளேடை எடுத்துப் பிரித்தார்.

``இது பொணம் அறுக்குற பிளேடு… லைட்டா போட்டன்னா உன் கழுத்து தொங்கிரும்… எச்ச குடிக்குக் கட்சில இருக்கிற நாயி நீ… உழைச்சி சாப்பிடுற என்னாண்ட வந்து கொலைக்கிற… டூட்டில இருக்கும்போது என்ன அடிச்சன்னு கேஸு குடுத்தன்னு வையி, பத்து வருஷம் உள்ள இருக்கணும் நீ… இன்னா சொன்ன… பொணத்த அறுக்குறவன்னா… நீதான் உயிரோட இருக்கிறவனெல்லாம் அறுப்பல்ல… போ… போயி பொணத்த அறுத்துப்பாரு அப்ப தெரியும்டா எங்க வலி… கொழந்தய முடிச்சுட்டுதான்… உங்கள்து” என்று விறுவிறுவென தலத்துக்குள் நுழைந்தார் திருப்பால்.

குழந்தையை சகாயம்தான் அட்டன்செய்தான். திருப்பால், அறுவை அறையின் பக்கத்து ஓய்வறையில் உட்கார்ந்திருந்தார். சகாயம் அரை மணி நேரத்தில் ஓய்வறைக்கு வந்தான்.

``சின்ன கீறுதான் மாமே… தம்தூண்டு ஈரலு… கைலயிருந்து வழுக்கி வழுக்கி ஓடிச்சி… சின்னத் துண்ட வெட்டி விஸ்ரா பாட்டில்ல போட்டு வெச்சிருக்கேன். மறக்காம பேரு எழுதிரு… நா டிபன் சாப்ட்டு வந்துர்றேன்” திருப்பால், சகாயத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். எழுந்தார். அறுவை அறைக்குள் சென்றார்.

அறுவை மேடையில் ஒரு குட்டிப் பூவைப்போல வெள்ளை அங்கி தரித்த தேவதையாகப் படுத்திருந்தது பிள்ளை. எந்தக் காரணமுமின்றிக் காயப்பட்டுக்கிடக்கிற இந்தப் பிள்ளையின் கனிந்த முகத்தைத் திருப்பாலால் பார்க்க முடியவில்லை. ஒரு பெட்டியைத் திறந்தார். அதில் வாசனைத்திரவியங்கள் நிரம்பியிருந்தன. பிள்ளையின் மேலுக்குத் தெளித்தார். கீறல்கள் தெரியாவண்ணம் காடாத்துணியை இழுத்து நன்றாகக் கட்டினார். பவுடரைத் தனது கைகளில் கொட்டி பிள்ளையின் முகத்துக்குக் கொண்டுபோனபோதுதான் தன் பிள்ளையின் முகமாக மாறி திருப்பாலைப் பார்த்துச் சிரிப்பதாகத் தோன்றியது. கைகள் நடுங்க தன் பிள்ளைக்கு பவுடரைப் போட்டுவிட்டார் திருப்பால். உதட்டில் ரத்தத்தை சரிசெய்து ஒரு களிம்பைத் தடவினார். சிறிது நேரம் பிள்ளையைப் பார்த்தவர் நெற்றியில் முத்தினார். `இனி ஒருபோதும் இந்தக் கோரத்தில் பிள்ளைகள் இந்தத் தலத்துக்கு வந்துவிடக் கூடாது’ எனக் கடவுளிடம் பிரார்த்தனை செய்தார்.

``ஸ்டெக்சர்ல தூக்கி வைடா” என்றார். குழந்தையைத் தள்ளிக்கொண்டு வந்தான் சகாயம்.

``அய்யோ என் புள்ள எப்புடி வருது பாருடா..!” என்று பெற்றவள் குலை நடுங்கக் கத்தினாள்.

திருப்பால் எந்தச் சலனமுமில்லாமல் தகப்பனிடம் வந்தார். ``நைனா, உன் புள்ளைய அறுக்கல… கூட்டிட்டு போ” என்றார்.

அவன் திருப்பாலின் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதான். அந்தத் தகப்பனின் வெம்மை தாளாமல் தன் கைகளை விடுவித்துக்கொண்டு உள்ளே சென்றார். விஸ்ரா பாட்டிலை எடுத்து வெள்ளை பிளாஸ்திரியை ஒட்டினார். பாட்டிலினுள் பிள்ளையின் ஈரக்குலையின் ஒரு துண்டும்், இதயப் பகுதியின் ஒரு துண்டும் ரசாயனத்தோடு சோதனைக்காகப் போட்டுவைக்கப்பட்டிருந்தன. மிதந்துகொண்டிருந்த விஸ்ராவில் பிள்ளையின் முகம் வந்துபோனது. பிளாஸ்திரியில் எழுதினார்.

பெயர்: நந்தினி

வயது: 4

- மனிதர்கள் வருவார்கள்...

பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்