மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சோறு முக்கியம் பாஸ்! - 27

சோறு முக்கியம் பாஸ்! - 27
பிரீமியம் ஸ்டோரி
News
சோறு முக்கியம் பாஸ்! - 27

சோறு முக்கியம் பாஸ்! - 27

பெரிய பெரிய ரெஸ்டாரன்ட்டுகளில் சாப்பிடுவதைவிட  சிறு மெஸ்களில் சாப்பிடும் அனுபவம் சிறப்பானது. சுவை, ஆரோக்கியம் எல்லாவற்றையும் தாண்டி, மெஸ் உணவில் அன்பும் கனிவும் உபசரிப்பும் மனசுக்கு நெருக்கமாக இருக்கும். கிட்டத்தட்ட வீட்டில் சாப்பிடுவதைப்போல. எவ்வளவு தேவையோ, அவ்வளவு சமைப்பது. மிச்சம் மீதியையெல்லாம் மஞ்சள்தூள் போட்டு வெள்ளைத்துணியில் கட்டி ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சுடவைத்துப் பரிமாறாமல், அவ்வப்போது சூடாக சமைத்துப் பரிமாறுவது; அளவு சாப்பாடு என்றாலும்கூட முகம் பார்த்து, கூடக்குறைத்து  அள்ளி வைப்பது என ஓர் அந்நியோன்யம் இருக்கும். 

சோறு முக்கியம் பாஸ்! - 27

திருவண்ணாமலை சந்நிதித் தெருவில் உள்ள காரைக்குடி ஆச்சி மெஸ்ஸில் சாப்பிடுபவர்கள் இதை அனுபவபூர்வமாக உணரலாம். திண்ணை உள்ள சிறு வீடுதான் மெஸ். முகப்பில், பெயரைத் தாங்கிய பெரிய பிளெக்ஸ் போர்டு. சிறுவாசல் கடந்து நுழைந்தால் நடுவில் அகலமான முற்றம்.  அதைச்சுற்றிலும் இருக்கும் வெளியில் டேபிள் போட்டிருக்கிறார்கள். கூட்டம் அதிகமானால் உள்ளிருக்கும் இரண்டு அறைகளிலும் கீழே அமரவைத்துப் பரிமாறுவார்களாம்.  

உள்ளே சமையலறை.  மண்ணால் கட்டப்பட்ட பெரிய அடுப்பு மேடை. ஒரே நேரத்தில் மூன்று பாத்திரங்களை வைத்துச் சமைக்கலாம். கனகனவென்று இருக்கிறது விறகடுப்பு. சமைத்ததை அடுப்புக் கதகதப்பிலேயே வைத்திருக்கிறார்கள். ருசியை அதிகரிக்கும் கிராமத்துத் தொழில்நுட்பம் அது. 

சோறு முக்கியம் பாஸ்! - 27

லஞ்ச் மட்டும்தான். 12 மணிக்குத் தொடங்கி 4 மணிக்கு நிறைவடைந்துவிடும். 12 மணிக்கெல்லாம் வெளித்திண்ணை நிறைந்துவிடுகிறது. இலை போட்டு சாதம் பரிமாறிவிட்டுதான் உள்ளே அழைக்கிறார்கள். ஸ்பெஷல் சாப்பாடு 170 ரூபாய். ஒரு கப் சிக்கன், ஒரு கப் மட்டன், ஒரு துண்டு மீன்,  ஒரு முட்டை, கூட்டு, பொரியல், சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, மீன்குழம்பு, சாம்பார், ரசம், மோர், தயிர்.

சாப்பாடு அன்லிமிடெட்.  சிக்கன்  செமி கிரேவியாக இருக்கிறது. பிராய்லர் சிக்கன்தான். விறகடுப்பில் வெந்ததால் பஞ்சு மாதிரி இருக்கிறது. மல்லி தூக்கலான மசாலா வாசனை சுகம். மட்டனும் மென்மையாகத் தான் இருக்கிறது. சிக்கன் பதத்திற்கு வெந்திருக்கிறது. சாதத்தில் போட்டுப் பிரட்டிச் சாப்பிடலாம். சாத்தனூர் அணையில் பிடிக்கப்படும் கட்லா, ரோகு வகை மீன்களைக் கையகலத்துக்குப் பொரித்து வைக்கிறார்கள். மீனுக்குப் பயன்படுத்தும் மசாலாவைத் ‘தாளிப்பு மசாலா’ என்கிறார்கள். மீனின் வால், தலையைப் போட்டுக் குழம்பு வைத்திருக்கிறார்கள். புளிப்பும் காரமுமாக செமையாக இருக்கிறது. சிக்கன் குழம்பில் ஸ்பெஷல் ஏதுமில்லை. மட்டன் குழம்பு நன்றாக இருக்கிறது. எல்லாவற்றிலும் மிதமான காரம் துருத்திக்கொண்டிருக்கிறது. வாடிக்கையாளர்கள் அப்படித்தான் விரும்புகிறார்களாம். தினமும் கூட்டாகவோ, பொரியலாகவோ கீரை ஒன்றும் இடம்பெற்றுவிடுகிறது. ரசத்தில் கறிவேப்பிலை வாசனை. செரிமானத்துக்கு உதவும். வழக்கமாக, அசைவ சாப்பாடு சாப்பிட்டதும் ஒருவித ‘கனம்’ வயிற்றைச் சூழ்ந்துகொள்ளும். இங்கு அந்தத் தொந்தரவு இல்லை.  

சோறு முக்கியம் பாஸ்! - 27

சாதாரணச் சாப்பாடும் கிடைக்கிறது. 70 ரூபாய் தான். சாதம், கூட்டு, பொரியல், சிக்கன் குழம்பு, மீன்குழம்பு, மட்டன் குழம்பு, ரசம், மோர். நிறைவாகத்தான் இருக்கிறது. மட்டன், சிக்கன் தேவைப் பட்டால் தனியாக வாங்கிக்கொள்ளலாம்.

சோறு முக்கியம் பாஸ்! - 27



மெஸ்ஸின் உரிமையாளர் வைத்தீஸ்வரன், ஓவியர்.  கைவினைக்கலைஞரும்கூட. வீட்டில் பயன்படுத்தும் விளக்கு முதல் பாய் வரை எல்லாமே அவர் செய்ததுதானாம். திருவண்ணாமலை கோயிலருகில் பேக்கரி நடத்தினார். அதற்குக் கிடைத்த வரவேற்பால், 2004-ல் இந்த மெஸ்ஸைத் தொடங்கியிருக்கிறார். இப்போது திருவண்ணாமலையில் எங்கு விசாரித்தாலும் கைகாட்டும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

சமையல், பரிமாறல் என எதற்கும் வேலையாட்கள் இல்லை.  சமையலறை வைத்தீஸ்வரனின் மனைவி ஜீவாவின் கையில் இருக்கிறது. குடும்பத்திலேயே 12 பேர் இருக்கிறார்கள். எல்லா வேலைகளையும் அவர்களேதான் செய்கிறார்கள் என்பதால் ஞாயிறு மட்டும் மெஸ்ஸுக்கு விடுமுறை. 

சோறு முக்கியம் பாஸ்! - 27

“அறந்தாங்கி பக்கத்துல சுப்பிரமணியபுரம்ங்கிற ஊர்தான் எங்க பூர்வீகம். எனக்கு ஆறு அக்காக்கள். சைவம், அசைவம் எதுவா இருந்தாலும் அவ்வளவு ருசியா சமைப்பாங்க. சின்ன வயசுல இருந்தே  அப்படிச் சாப்பிட்டுப் பழகுன ஆளு நான். என் மனைவியும் நல்லா சமைப்பா... எங்க வீட்டுல சாப்பிடுற நண்பர்கள், ‘நீங்க ஒரு ஹோட்டல் திறந்தா நல்லா போகும்’னு சொல்வாங்க. அந்தமாதிரி வார்த்தைகள் கொடுத்த உற்சாகத்துலதான் சின்னதா இந்த மெஸ்ஸை ஆரம்பிச்சோம். இப்போ பேர் சொல்ற அளவுக்கு வளர்ந்திருக்கு. நிறைய ரெகுலர் கஸ்டமர்கள் இருக்காங்க.. சிக்கனை  வெட்டி மஞ்சள், தயிர் சேர்த்து அலசுவோம். மட்டனை அலசும்போது ஒருதுளி மிளகாய்த்தூள் போட்டு ஊறவெச்சு அலசுவோம். இதெல்லாம் வாசனையையும் ருசியையும் அதிகரிக்கும்...” - சுவாரஸ்யமாகப் பேசுகிறார் வைத்தீஸ்வரன்.

திருவண்ணாமலை பக்கம் சென்றால், காரைக்குடி ஆச்சி மெஸ்ஸுக்குப் போய் ஒரு ஸ்பெஷல் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு வாருங்கள்! வயிறும் மனதும் நிறையும்!

- பரிமாறுவோம்

வெ.நீலகண்டன் - படங்கள்: கா.முரளி

சோறு முக்கியம் பாஸ்! - 27

சாப்பிட்டவுடன்  நடப்பது செரிமானமாக உதவும் என்கிறார்களே... அது உண்மையா?
 
“சா
ப்பிட்டவுடன் நடப்பதோ உடற்பயிற்சி செய்வதோ நல்லதல்ல. அதனால், வயிற்றுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, செரிமானப் பணிகள் பாதிக்கும். ‘அசிடிட்டி’ போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.  சாப்பிட்டு அரைமணி நேரம் கழித்து 10 நிமிடங்கள் மெதுவாக நடக்கலாம். ஓடவோ, வேகமாக நடக்கவோ கூடாது. குறுநடையாக இருக்க வேண்டும். இதை இன்றைய மருத்துவம் மட்டுமல்ல, அந்தக் காலத்தில் வாழ்ந்த தேரையர் போன்ற சித்தர்களும் சொல்லியிருக் கிறார்கள். ‘நண்புபெற உண்ட பின்னர் குறுநடை பயில்வோம்’ என்று ‘நோயணுகா விதி’களில் ஒன்றாக இதைக் குறிப்பிட்டுள்ளார் தேரையர்.  உடற்பயிற்சி அல்லது  உடலுழைப்பு உள்ள வேலைகள் செய்வதாக இருந்தால், சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்துச் செய்வதே நல்லது...”

- வி.விக்ரம்குமார், சித்த மருத்துவர்