மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 98

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

ஓவியங்கள்: ம.செ.,

பிறைநிலவு எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. விளாமரத்தின் அடிவாரத்தில் கூழையனைப் புதைத்தனர். தன் கண்களுக்கு முன்னால் கூழையன் வெட்டிச்சாய்க்கப்பட்டதை, தேக்கனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சிறுவயது முதல் உற்ற தோழனாய் இருந்தவனைப் பறிகொடுத்த பதற்றம் அவனது உடல் முழுவதும் இருந்தது. மறுகணமே கருங்கைவாணனை வீழ்த்தக் கிடைத்த வாய்ப்பையும் பயன்படுத்த முடியாமல்போய்விட்டது. ஒருவேளை அது நடந்திருந்தால்கூட மனம் சற்றே ஆறுதலடைந்திருக்கும். தேக்கனின் முகம் மிகவும் இறுகியிருந்தது. 

வீரயுக நாயகன் வேள்பாரி - 98

புதைத்து முடித்தவுடன் எல்லோரும் இரலிமேட்டில் இருக்கும் பாட்டாப்பிறை நோக்கி வலதுபுறமாகத் திரும்பி நடந்தனர். தேக்கன் மட்டும் இடதுபுறமாக நாகக்கரட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். இறுதியாகச் சென்றுகொண்டிருந்த முடியன் அவனைப் பார்த்தபோது, ``முறியன் ஆசானைப் பார்த்துவிட்டு வருகிறேன். நீ போ’’ என்றான்.

முடியனுக்குப் புரிந்தது. `உடல்வலியோடு மனவலியும் சேர்ந்திருக்கிறது. கிழவன் எதையும் வாய் திறந்து சொல்ல மாட்டான்’ என எண்ணியபடி நடந்தான். எங்கும் வீரர்களின் ஓசை கேட்டபடி இருந்தது. நாகக்கரட்டுக்கும் இரலிமேட்டுக்கும் இடைப்பட்ட சமவெளிப் பள்ளத்தாக்கு எங்கும் ஓலை வேய்ந்த சிறு குடில்கள் எண்ணற்றவை அமைக்கப்பட்டிருந்தன. வீரர்களுக்கு உணவு, தங்கல் எல்லாம் அந்தக் குடில்களில்தான்.

தேக்கன் அக்கம்பக்கம் யாரையும் பார்க்கவில்லை. நேராக முறியன் ஆசானின் குடிலை நோக்கி வேகமாக நடந்தான். வளர்பிறையாதலால், வானில் ஒளிப்பரவல் விரைவாக இருந்தது. ``ஆசானின் குடில் சற்றுத் தொலைவில் இருக்கிறது. குதிரையில் போகலாம்’’ என்று வீரர்கள் சொன்னதற்கு தேக்கன் மறுத்துவிட்டான்.

குதிரை பாய்ந்து செல்லும்போது விலாவெலும்பு உள்குத்தி ஏறுகிறது. வலி தாங்க முடியவில்லை. அதனால்தான் குதிரையைத் தவிர்த்து வேக வேகமாக நடந்தான். எங்கும் பந்தங்கள் ஏற்றப்பட்டிருந்தன. உலைக்களங்களில் தீப்பொறிகள் பறந்துகொண்டிருந்தன. சாணைக்கல்லில் கருவிகள் கூர்தீட்டப்பட்டுக்கொண்டிருந்தன. பொதினிமலை சாணைக்கற்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. மற்ற சாணைக்கற்களைவிட இருமடங்கு வேகத்தில் ஆயுதங்களைக் கூர்தீட்டக்கூடியவை. அவை கருவிகளோடு உரசும்போது தெறிக்கும் பொறியில் நீலமேறியிருக்கும். வேல், ஈட்டி, எஃகல், ஆலம், சகடம், குந்தம், கயலி, ஈர்வாள் என நாள்தோறும் ஆயுதங்களைக் கூர்தீட்டி வாங்கிக்கொள்வது போர்வீரர்களுக்கு வழக்கம்.

காட்சிகளைப் பார்க்கப் பார்க்க தேக்கனின் மனவேதனை அதிகமாகிக்கொண்டே இருந்தது. வாழ்வில் இனி தனக்கான ஆயுதங்களைக் கூர்தீட்டவே முடியாதோ எனத் தோன்றியது. போர் முடிந்த இரவில் நீலநிறப் பொறிகள் உதிர்க்கும் தீக்கங்குகளை ஒவ்வொரு வீரனும் ஆசையோடு பார்த்துக்கொண்டிருப்பான். இன்றைய போரில் எதிரியோடு தான் நிகழ்த்திய தாக்குதலால் தனது ஆயுதங்கள் முனை மழுங்கிப்போயுள்ளன என்பதை உலைக்களத்தில் உள்ளவர்களிடம் சொல்வதில்தான் அவனது பெருமை இருக்கிறது.

``ஒருவேளை, இன்று நான் எனது ஆயுதத்தைக் கூர்தீட்ட உலைக்களம் சென்றிருந்தால் என்ன பேசியிருப்பேன்? `எனது கைக்கெட்டும் தொலைவில் எதிரிப்படைப் தளபதி இருந்தும் அவனது தலையை வெட்டிச்சரிக்காமல் விட்டுவிட்டேன்’ எனச் சொல்லி யிருப்பேனா? பறம்பின் எந்த ஒரு வீரனுக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பை இழந்து நிற்கிறேன். இனி நான் போர்க்களம் புகவேண்டுமா?’’ என்று அடுக்கடுகாய்க் கேள்விகள் மேலேறியபடி இருந்தன. ஆனாலும் மனவோட்டத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டான்.

கயிறுகள் இறுக முடைந்திருந்த கட்டில் ஒன்றில் குடிலின் முன் உட்கார்ந்திருந்தார் முறியன் ஆசான். சுற்றிலும் இளம் மருத்துவர்கள் தங்களின் வேலைகளைப் பார்த்தபடி இருந்தனர். தேக்கன் வந்தவுடன் அவர்கள் சற்று விலகிப் போயினர்.

தேக்கனின் முகத்தைப் பார்த்ததும் வலியின் கூறுகளை முறியன் ஆசானால் உணர முடிந்தது. எதிரில் இருந்த மரப்படுக்கையில் படுக்கச் சொன்னார். ஒருபக்கமாகச் சாய்ந்து கையூன்றி உடலைக் கிடத்தினான் தேக்கன். அவன் படுக்கும்விதமே காயத்தின் தன்மையைச் சொன்னது. நெஞ்செலும்பின் அடிப்பகுதி சற்றே வீக்கம்கொண்டிருந்தது. அதை ஆசான் தொட்டபோது வலி பொறுக்க முடியவில்லை. ஆனால், அதை வெளிக்காட்டாமல் இருந்தான் தேக்கன்.

அந்த இடத்தை விரலால் அழுத்தியபடி தேக்கனின் முகத்தை ஆசான் பார்த்தபோது தேக்கன் சொன்னான், ``என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். போர் முடியும் வரை நான் களத்தில் நிற்க வேண்டும்.’’

``மருத்துவனிடம் முன்நிபந்தனை கூடாது.’’

``சிகிச்சை பெறுவதற்கான காரணத்தை மருத்துவனிடம் மறைக்கக் கூடாதல்லவா!’’

``போர்க்களத்தில் நின்றால் மட்டும் போதுமா... போரிட வேண்டாமா?’’

``வேண்டாம். இந்தப் போரை வெற்றியாக்குவது முடியனின் கடமை. அவன் அதைச் செய்து முடிப்பான். நான் களம் விட்டு அகன்றால் பாரி களம் இறங்கும் சூழல் உருவாகிவிடும். அதைத் தவிர்ப்பதுதான் எனது வேலை. அதே நேரம் எனது செயல் மற்றவர்கள் ஐயம்கொள்ளாதபடி இருக்க வேண்டும்.’’

வீரயுக நாயகன் வேள்பாரி - 98

உடலெங்கும் அழுத்திப்பார்த்து உள்காயங்களைக் கணித்தபடியே ஆசான் சொன்னார், ``வாளும் வில்லும் ஏந்தக் கூடாது. ஈட்டியை வைத்துக்கொள்ளுங்கள். ஆயுதம் கைக்கொண்டதாகவும் இருக்கும்; ஊன்றி நிற்க உதவியாகவும் இருக்கும்.’’

தேக்கன் பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால், அவன் கண்கள் வார்த்தைகளின் கசப்பை விழுங்க முடியாமல் துடித்தன.

அப்போது தேக்கனைச் சந்திக்க வீரன் ஒருவன் வந்தான். ஆனால், மாணவர்களோ தேக்கனுக்குச் சிகிச்சை தொடங்கிவிட்டதால் வீரனைச் சற்றுத் தொலைவிலேயே நிறுத்தினர். வடகோடியில் காட்டுக்குள் நுழைந்த வேட்டூர் பழையன் ஆட்கொல்லி மரத்தை அண்டி எண்ணற்றோரைக் கொன்று தானும் இறந்துள்ளார் என்ற செய்தியைச் சொல்வதற்காக அந்த வீரன் காத்திருந்தான்.

லைக்களங்களில் எண்ணிலடங்காத ஆயுதங்களை உருவாக்கும் வேலை இரவு பகலாக நடந்தது. ஆனால், அவற்றின் ஓசை எதுவும் மூஞ்சலுக்குள் கேட்காது. ஏனென்றால், உலைக்களம் இருக்கும் பகுதி, படைக்கலப் பேரரங்கு இருக்கும் பகுதி, மருத்துவக்கூடாரம், மூஞ்சல் என எல்லாம் தனித்தனியே வெகுதொலைவில் இருந்தன.

பொழுது, நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது. குலசேகர பாண்டியன் சொல்லியதைப்போல புதிய தாக்குதல் திட்டத்தோடு கூடாரத்துக்குள் நுழைந்தான் கருங்கைவாணன். உள்ளே அனைவரும் காத்திருந்தனர். செங்கனச்சோழன் கரும்பாக்குடியினரைப் பற்றிச் சொன்ன செய்தியைக் கேட்டு மகிழ்ந்துபோயிருந்தான் உதியஞ்சேரல். தந்தை குலசேகரபாண்டியனின் திட்டத்தைக் கேட்டு ஆச்சர்யம்கொண்டி ருந்தான் பொதியவெற்பன். அனைவரும் மிக இறுக்கமான சூழலில் இருப்பார்கள் என நினைத்து உள்ளே வந்த கருங்கை வாணன், வேந்தர்களின் முகங்களைப் பார்த்து சற்றே குழப்பமானான். ஆனாலும் அவன் வகுத்த திட்டத்தைப் பற்றிக் கூறலானான். நிறைந்த அவையில் அவமானப்பட்ட ஒரு தளபதியின் சினம், அவன் வகுத்த திட்டத்தின் வழியே வெளிப்படத் தொடங்கியது.

``மூன்று நாள் போர்களின் அனுபவத்திலிருந்து நான் சில முடிவுகளுக்கு வந்துள்ளேன். எதிரிகளின் போர் உத்தி, நம்மால் முன் உணர முடியாததாக இருக்கிறது. இனிமேலும் அப்படித்தான் இருக்கும். ஆனால், அவர்கள் படையின் வலிமை எதில் இருக்கிறது என்பதை என்னால் கணிக்க முடிந்திருக்கிறது’’ என்றான்.

இதுவரை தாக்குதல் உத்தியைப் பற்றி மட்டுமே பேசிய கருங்கைவாணன் முதன்முறையாக எதிரிப்படையின் நுணுக்கங்களைப் பற்றிப் பேசத் தொடங்கியதை அவை உன்னிப்பாகக் கேட்டது.

``நம்மோடு ஒப்பிட்டால் பறம்பின் படை அளவில் மிக மிகச் சிறியது. ஆனாலும் அவர்கள் மூன்று நாள் போர்களிலும் முன்னேறித் தாக்கியுள்ளனர். அதற்குக் காரணம், அவர்களது படையின் மைய அச்சாக இருக்கும் விற்படைதான். அவர்கள் அம்பெய்யும் தொலைவில் சரிபாதிதான் நம் வீரர்களால் அம்பெய்ய முடிகிறது. எனவே, விற்படையினரை நம்மால் நெருங்கவே முடியவில்லை. அந்தப் படையினர் போர்க்களத்தின் நடுவில் இருக்கின்றனர். அதனால், எதிரிப்படையின் மீது நம் படையினர் தாக்குதலைக் குவித்து முன்னேற முடியவில்லை. எனவே, நமது தாக்குதலின் மூலம் எதிரிகளைத் தற்காப்புநிலைக்குத் தள்ள முடியவில்லை. மாறாக, எதிரிப்படையின் ஏதாவது ஒரு பிரிவு மூஞ்சலை நோக்கித் தொடர்ந்து முன்னேறித் தாக்குகிறது’’ என்றான்.

கருங்கைவாணனின் கணிப்பு மிகச் சரியானது எனத் தோன்றியது. ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் இருந்தார் குலசேகரபாண்டியன்.

நாளைய போரில் பறம்பின் விற்படையை முழுமுற்றாகச் செயலிழக்கவைப்பதற்கான திட்டத்தை விளக்கினான். போர் உத்திகளை வகுப்பதில் அவன் கொண்டிருந்த அனுபவம், அவன் உச்சரித்த ஒவ்வொரு சொல்லிலும் மிளிர்ந்தது. சோழவேழன், மிரட்சியோடு அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார். கருங்கைவாணன் திட்டத்தைக் கூறி முடிக்கும்போது யாரும் மறுசொல்லின்றி அதை நிறைவேற்ற ஆயத்தமாயினர். நாளைய போர், வேந்தர்கள் கொண்டாடும் செய்தியைத் தரும் என்பதில் ஐயமேதுமில்லை.

டலும் மனமும் தளர்ந்தபடி பரண்மீது நின்றுகொண்டு, எழும் கதிரவனைப் பார்த்தார் திசைவேழர். செம்பிழம்பின் வட்டவடிவை மேகத்துண்டுகள் தழுவிக் கடந்தன. வானில் பறவை ஏதும் தென்படவில்லை. கண்கள், வெளியெங்கும் பார்த்துத் திரும்பின. வழக்கத்துக்கு மாறாக வேந்தர்படைகள் நிலைகொண்ட பகுதியில் தூசியும் புழுதியும் சூழ்ந்திருந்தன. `போர் தொடங்கி நீண்டபொழுதுக்குப் பிறகுதானே இவ்வளவு புழுதி மேலெழும். இன்று என்ன நடந்துள்ளது... போர் தொடங்கும் முன்பே புழுதி இவ்வளவு உயரத்துக்குச் சூழ்ந்துள்ளதே!’ என நினைத்தபடியே நாழிகைவட்டிலைப் பார்த்தார். கோலின் நிழல் உள்ளிழுத்துக்கொண்டிருந்தது. சரியான இடத்தைத் தொட்டதும் வலதுகையை உயர்த்தினார். பரணெங்குமிருந்து ஓசை எழுப்பப்பட்டது. தட்டியங்காட்டுப் போரின் நான்காம் நாள் தொடங்கியது.

கை உயர்த்தி இமைப்பொழுது கடப்பதற்குள் நிலம் எங்குமிருந்து வீரர்களின் பெருமுழக்கமும் முரசுகளின் பேரோசையும் வெளியை அதிரச்செய்தன. வழக்கத்தைவிடப் பல மடங்கு ஓசை கணப்பொழுதில் மேலெழும்பியது. களத்தில் என்ன நடக்கிறது என்று திசைவேழர் கூர்ந்துபார்த்தார். பறம்புப்படை வழக்கம்போல் தாக்குதலுக்கு ஆயத்தமானது. ஆனால், வேந்தர்படையோ வழக்கத்துக்கு மாறாக வெள்ளம்போல் பரவி விரியத் தொடங்கியது.

எல்லா திசைகளிலும் ஓசையுடன் புழுதி மேலெழுந்துகொண்டிருந்தது. இதுவரை வேந்தர்படை வடக்கு தெற்காக வரிசைகளை ஏற்படுத்தி, கண்ணுக்கெட்டும் தொலைவு வரை அணிவகுத்து நிற்கும். முதல்நிலைப் படை, இரண்டாம்நிலைப் படை, மூன்றாம்நிலைப் படை என மூன்று பெருந்தொகுப்புகளாகப் படை நின்றிருக்கும். முதல்நிலைப் படை பறம்புப்படையோடு மோதிக்கொண்டிருக்கும். இழப்புகள் அதிகமாகும்போது அடுத்தடுத்த நிலையில் இருக்கும் வீரர்கள் முதல்நிலைப் படையோடு வந்து இணைவர். ஆனால், இன்றைய போரில் வேந்தர்படை வழக்கம்போல் அணிவகுக்கவில்லை. பெரும்மாற்றம் நடந்துள்ளது. ஆனால், என்னவென்று புரிபடவில்லை.

வீரயுக நாயகன் வேள்பாரி - 98

முரசின் ஓசை கேட்டதும் தாக்குதலுக்குத் தயாரானது பறம்புப்படை. நேற்றைய போரில் மூஞ்சலின் அருகே பறம்பின் குதிரைப்படை சென்றது. இன்றைய போரில் மூஞ்சலுக்குள் நுழையும் திட்டத்தோடு முடியன் வந்திருந்தான். குதிரைப்படையை ஆறு கூறுகளாகப் பிரிப்பது என முடிவெடுத்திருந்தான். மூஞ்சலின் வடிவம் அவன் கண்களுக்குள்ளேயே இருந்தது. குதிரைப்படையின் இரண்டு பிரிவுகள் மூஞ்சலை அடையும் வரை போரிடக் கூடாது. அந்த இரண்டு பிரிவுகளையும் மூஞ்சலின் அருகில் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டியது மற்ற நான்கு பிரிவுகளின் வேலை. அந்த நான்கு பிரிவுகளுக்கும் முடியன் பொறுப்பாவான். மூஞ்சலின் அருகில் சென்றதும் எதிரிகளின் தாக்குதல் பல மடங்கு வலிமைகொண்டதாக இருக்கும். ஏறக்குறைய அனைவரும் கவச வீரர்களாக இருப்பர். எனவே, மிக வலிமையான தாக்குதலின்றி மூஞ்சலைச் சுற்றியுள்ள அரணை உடைத்து உட்செல்ல முடியாது. எனவே, மிகத் தேர்ந்த வீரர்களைக்கொண்டு அந்தப் பிரிவினரை உருவாக்கியிருந்தான். அதற்கு இரவாதனைப் பொறுப்பாக்கியிருந்தான்.

போர் தொடங்கிய கணத்தில் வேந்தர்படையின் மின்னல் வேகச் செயல்பாடு யாரும் எதிர்பாராத ஒன்றாக இருந்தது. எல்லா திசைகளிலும் வேந்தர்படையினர் பிரிந்தும் கலைந்தும் விரைந்துகொண்டிருந்தனர். பறம்புப்படையின் மீது அவர்கள் தாக்குதல் தொடுக்கவில்லை. ஆனால், களமெங்கும் விரைந்துகொண்டிருந்தனர். என்ன செய்கிறார்கள் என்று யாருக்கும் பிடிபடவில்லை. முன்னணியில் விரைந்துகொண்டிருந்தவை தேர்கள்தாம். திகிரியையும் ஆழியையும் உருளியாகக்கொண்ட வலிமைமிகுந்த கூவிரம் வகைத் தேர்கள் விடுபட்ட அம்புகளைப்போல விரைந்துகொண்டிருந்தன.
 
பரண் மேல் நின்றபடி திசைவேழர் இமைக்காமல் அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தார். பறம்புப்படையை விட்டு மிக விலகி எங்கே அவர்கள் போகின்றனர் எனப் பார்த்துக்கொண்டிருக்கும்போதுதான் அதற்கும் அப்பால் தேர்ப்படையின் இன்னோர் அணி போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. சற்றே அதிர்ச்சியோடு, முன்னேறிச் செல்லும் அந்த அணியைக் கூர்ந்து பார்த்தார். விரையும் தேர்களின் மீது காலைக்கதிரவனின் ஒளி பட்டுச் சிதறியபடி இருந்தது. உற்றுக் கவனித்தார், அவையெல்லாம் நிறைந்த பூண்களைக்கொண்ட கொடிஞ்சிவகைத் தேர்கள். இந்த வகைத் தேர்களை எந்தக் கருவிகொண்டும் சேதப்படுத்த முடியாது. திசைவேழர் தலையை எக்கிப் பார்த்தார். தேர்களின் உச்சியில் இருந்த கூம்புமொட்டுகள் கதிரவனின் ஒளிபட்டுத் தகதகத்தன. உராய்வில் பறக்கும் தீப்பொறிபோல விரையும் அவற்றின் வேகத்தில் மின்னி நகர்ந்தது வெய்யோன் பொன்னொளி. கண்கள் பார்க்கும் நில விளிம்பில் தேர்கள் எழுப்பும் மண்புழுதி அலையலையாய் மேலெழுந்து  கொண்டிருந்தது. என்ன நடக்கிறது என்று திசைவேழருக்குப் புரியத் தொடங்கியது.

மூன்று நிலைகளில் நின்றிருந்த வேந்தர்படையின் ஒழுங்கை, கருங்கைவாணன் இன்று மாற்றிவிட்டான். முதல்நிலைப் படை வழக்கம்போல் பறம்புப்படையை எதிர்கொள்ள முன்னால் நகர்ந்து போய்க்கொண்டிருக்கும்போது, இரண்டாம்நிலைப் படை பறம்புப் பகுதியின் இடுப்புப்பகுதியைச் சூழவேண்டும். அதேநேரம் மூன்றாம்நிலைப் படை அதைவிடத் தொலைவில் அரைவட்டவடிவில் பயணித்துப் பறம்புப்படையின் பின்புறத்தை அடையவேண்டும். அதாவது, பறம்புப்படை முழுமுற்றாக வேந்தர்படையால் சூழப்பட வேண்டும். அவ்வளவு தொலைவு பயணித்து, பறம்பின் மொத்தப் படையையும் முற்றுகையிடுவதற்குத் தேவையான அளவுக்கு வீரர்கள் வேந்தர்படையில் இருந்தனர். அதனால்தான் கருங்கைவாணன் இந்தத் திட்டத்தைத் தீட்டினான்.

அவன் வகுத்த திட்டப்படி வேந்தர்களின் தேர்ப்படை மின்னல் வேகத்தில் பறம்புப்படையின் பின்பகுதியை நோக்கி மிகத்தொலைவில் அரைவட்டமடித்து விரைந்துகொண்டிருந்தது. அந்தத் தேர்கள் எல்லாவற்றிலும் மணிகள் கட்டப்பட்டிருந்தன. எனவே, மணிகளின் பேரோசை எங்கும் எதிரொலித்தது. எழும் புழுதியும் வீரர்களின் பேரோசையும் தெறிக்கும் மணியோசையுமாகப் போர்க்கள வெளியெங்கும் வேந்தர்படையின் ஆதிக்கம் மேலெழுந்தது.

தனது திட்டப்படி விரைந்து தாக்குதலைத் தொடுக்கவேண்டிய முடியன், போர் தொடங்கிய கணமே நிதானம்கொள்ளத் தொடங்கினான். எதிரிகள் என்ன செய்கிறார்கள் என்பது சற்றே குழப்பமாக இருந்தது. அவர்கள் யாரும் பறம்புப்படை நோக்கி ஒற்றை அம்பைக்கூட எய்யவில்லை. ஆனால், எல்லோரும் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கின்றனர். எதிரிகளின் திட்டம் என்ன என்பதை அறிய அவர்களின் செயலைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான் முடியன். ஆனால், கடைசி வரிசையில் ஈட்டியை ஊன்றுகோலாகப் பிடித்தபடி சாய்ந்து நின்றுகொண்டிருந்த தேக்கனுக்குப் பிடிபடத் தொடங்கியது. ஏனென்றால், பறம்புப்படையை விட்டு மிக விலகி அரைவட்ட வடிவில் புழுதி மேலெழுந்துகொண்டிருந்தது. மேலெழும் புழுதியின் முன்முகம் அவன் இருக்கும் பின்புறத்தை நோக்கி வளைந்து வந்துகொண்டிருந்தது.

கருங்கைவாணன் தாக்குதலுக்கான திட்டத்தை உருவாக்கிய கணத்திலிருந்து மிகத் தீவிரமாய்ச் செயல்பட்டுக்கொண்டி ருக்கிறான். நேற்று நள்ளிரவு மூவேந்தர்களும் இந்தத் திடத்தை ஏற்றனர். கொல்லப்பட்ட தேர்ப்படைத் தளபதி நகரிவீரனுக்குப் பதில் வெறுகாளனைப் புதிய தளபதியாக நியமித்தான் செங்கணச்சோழன். சூலக்கையனுக்குப் பதில் மாகனகனைத் தளபதியாக நியமித்தான் குலசேகர பாண்டியன். உடனடியாகத் தாக்குதல் திட்டத்துக்கான வேலைகள் தொடங்கின. படைக்களக் கொட்டிலில் இருக்கும் ஆயுதவாரியை நோக்கி முதல் ஆணை பிறப்பிக்கும் பொழுது நள்ளிரவைத் தொட்டு நின்றது.

வழக்கம்போலவே நாளைய தாக்குதல் நடக்கும் என நினைத்த ஆயுதவாரி, வீரர்களுக்குத் தேவையான ஆயுதங்களை எல்லாம் படைப்பிரிவுகளுக்கு வழங்கிவிட்டு, தனது கூடாரத்துக்குச் சென்றார். உள்ளே சென்று அமர்ந்ததும் தலைமைத்தளபதியின் ஆணையோடு வீரன் ஒருவன் வந்து நின்றான்.

ஆணையைக் கண்டதும் அவர் அதிர்ச்சிக்குள்ளானார். நாளைய போரில் வேந்தர்படையில் இருக்கும் அத்தனை வீரர்களும் களம்புகுந்து எதிரிகளின் மீது தாக்குதல் நடத்தப்போகிறார்கள். எனவே, அனைவருக்கும் தேவையான ஆயுதங்களை உடனடியாகக் கொண்டுசேர்க்கும் ஏற்பாடுகளைச் செய்யும்படி அதில் கருங்கைவாணனின் உத்தரவு இருந்தது.

``இதுவரை முதல்நிலைப் படைவீரர்கள் மட்டுமே தாக்குதல் தொடுத்தனர். மற்ற இரு நிலைகளிலும் இருந்த வீரர்கள் தாக்குதல் களத்துக்குத் தேவைப்பட்டால் மட்டுமே சென்றனர். தாக்குதல் களத்துக்குள் வீரர்கள் அனைவரும் புகுந்தால் அவர்களிடம் இருக்கும் ஆயுதங்களைப்போல குறைந்தது ஆறு மடங்கு ஆயுதங்களை அவர்களுக்குக் கொண்டுசேர்க்க ஆயுதவாரி ஆயத்தநிலையில் இருக்க வேண்டும். தாக்கும் அணியின் பின்புறம் ஆயுதவண்டிகள் எந்நேரமும் அணிவகுத்து நிற்க வேண்டும். இப்போது படை முழுவதும் இருக்கும் அனைத்து வீரர்களும் தாக்குதலுக்குக் களம்புகப் போகிறார்கள் என்றால், அனைவரின் கைகளிலும் தேவையான அனைத்துவிதமான ஆயுதங்களும் இருக்க வேண்டும். அனைத்துப் படையினருக்கும் களத்துக்குத் தேவையான ஆயுதங்களை வண்டியில் ஏற்றி ஆயத்தப்படுத்த வேண்டும். இவையெல்லாம் இந்த நள்ளிரவுக்குப்பின் எப்படிச் சாத்தியமாகும்? ஒருபோதும் முடியாது’’ என்று புலம்பியபடி, ``தலைமைத்தளபதி எங்கே இருக்கிறார்?’’ எனக் கேட்டான் ஆயுதவாரி.

செய்தியைக் கொண்டுவந்த வீரன், ``மூஞ்சலுக்குள் இருந்துதான் இதைக் கொடுத்து விட்டார்’’ என்றான்.

``மூஞ்சலுக்குள் இருந்தால் எந்த உத்தரவையும் பிறப்பிப்பாரா? நள்ளிரவுக்குப்பின் எப்படி இவ்வளவு ஆயுதங்களையும் கொண்டுசேர்க்க முடியும்? நாளைய போரில் சரிபாதி வீரர்களைக் களத்தில் இறக்குவோம். நாளை மறுநாள் முழுமையாக அனைவரையும் களத்தில் இறக்க ஏற்பாடு செய்வோம் என்று நான் சொன்னதாகப் போய்ச்சொல்’’ என்று கூறி அந்த வீரனைத் திருப்பி அனுப்ப முற்பட்டார்.

ஆனால், வீரனிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே வெளியில் பெருங்கூச்சலோசை கேட்டது. `இந்த நள்ளிரவில் என்ன இவ்வளவு சத்தம்?’ என எண்ணியபடி கூடாரத்தை விட்டு வெளியில் வந்து பார்த்தார். படைக்கலப் பேரரங்கை நோக்கி ஆயுதங்களை ஏற்றிச் செல்ல யானைகளும் குதிரைவண்டிகளும் மாடுகள் பூட்டிய நீள்வண்டிகளும் அணியணியாய் வந்துகொண்டிருந்தன. படைக்கலப் பேரரங்கின் முன்னால் பெருங்கூட்டம் கூடிக்கொண்டிருந்தது.

தொலைவில் இருந்து இந்தக் காட்சியைப் பார்த்த ஆயுதவாரிக்கு, என்ன செய்வதெனப் புரியவில்லை. மூன்று நாள் போரிலும் கொல்லப்பட்டதுபோக மீதம் இருக்கும் நாற்பத்தைந்து சேனைமுதலிகளும் அவர்களுக்குக் கீழே இருக்கும் நானூற்றைம்பது சேனைவரையர்களும் நாளை தங்களின் படைகளைக் களம் நோக்கித் தாக்குதலுக்கு நகர்த்துகின்றனர். அனைத்துப் படைப்பிரிவுகளுக்கும் தேவையான ஆயுதங்களைப் பெற்றுச்செல்ல சேனைமுதலிகளின் உத்தரவோடு படைப்பணியாளர்கள் போர்க்களப் பேரரங்குக்கு முன்னால் வந்து குவியத் தொடங்கிவிட்டனர்.

மிரண்டுபோனார் ஆயுதவாரி. தன்னிடம் கேட்காமல் இந்த நள்ளிரவுக்குப்பின் இப்படியோர் உத்தரவை சேனைமுதலிகளுக்கு எப்படி வழங்கலாம் என்று கடுங்கோபத்தோடு பேரரங்கு நோக்கி விரைந்தார்.

பாண்டியனின் படைக்கலப் பேரரங்குதான் மூஞ்சலுக்கு அருகில் இருக்கிறது. சேரனின் பேரரங்கு தென்புறத்திலும், சோழனின் பேரரங்கு வடபுறத்திலும் சற்றுத் தொலைவில் இருக்கின்றன. ஒவ்வொரு பேரரங்கும் மூஞ்சல் நகரைவிடப் பெரியது; எண்ணற்ற கூடாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு கூடாரத்திலும் ஒவ்வொரு வகையான ஆயுதங்களை வரிசைப்படுத்தி வைத்திருந்தனர். நான்கு வகையான வில்கள், பதின்மூன்று வகையான அம்புகள், இருபது வகையான வாள்கள், எட்டு வகையான வேல்கள், மூன்று வகையான குறுவாள்கள், மூன்று வகையான தண்டங்கள், மூன்று வகையான கேடயங்கள். இவை தவிர நூற்றுக்கும் மேற்பட்ட தனித்துவமான ஆயுதங்கள் என அனைத்தும் வகை பிரித்து வைக்கப்பட்டுள்ளன. 

வீரயுக நாயகன் வேள்பாரி - 98

இவற்றை எடுத்துத் தருவதிலும், களத்தில் வீரர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதிலும் சிறுகுழப்பம் நடந்தாலும், அது களத்தின் போக்கை வெகுவாக பாதிக்கும். முன்களத்தில் நின்று போரிடும் உலோக வில் ஏந்திய பெருவீரர்களுக்கு, கணை, வாளி, கதிர் ஆகிய மூன்று வகை அம்புகள்தான் கொடுக்கப்பட வேண்டும். மற்றவகை அம்புகள் உலோக வில்லுக்கு ஏற்றவை அல்ல. அதேபோல ஐந்து முடிச்சுகள்கொண்ட மூங்கில் வில்களை ஏந்தி நிற்கும் வீரனிடம் கோலம்பினையோ கதிரம் அம்பினையோ கொடுத்தால் ஒரு பனை தொலைவுகூடப் பாயாது. ஏழு அல்லது ஒன்பது முடிச்சுகளைக்கொண்ட பட்டுநூலால் ஆன நாணைப் பயன்படுத்தும் வில்லாளிதான் விற்படையின் நடுவில் வலிமையோடு நின்று போரிடுபவன். அவனுக்குத் தேவை சரவகை அம்புகள் மட்டுமே. இவை அனைத்தும் துல்லியமான கணக்குகளின் அடிப்படையில் வகை பிரித்து அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. எந்தவிதமான குழப்பமுமின்றி மிகக்கவனமாகச் செய்யப்படவேண்டிய பணியிது.

ஒருமுறை இதில் குழப்பம் ஏற்பட்டு, வரிசையாக அடுக்கப்பட்டுள்ள அம்புக்கட்டுகள் மாறி இன்னோர் அறையில் வைக்கப்பட்டுவிட்டால், அதன்பொருட்டு களத்தில் எத்தனையோ வீரர்கள் உயிரிழக்க நேரிடும். எனவே, பேரரங்கில் ஆயுதம் கையாள்வதை எந்தவித அழுத்தமும் கொடுக்காமல் செயல்படுத்த வேண்டும். ஆனால், `கருங்கைவாணனின் செயல் எதையும் புரிந்துகொள்ளாத ஒரு மூடனின் முடிவையொத்தது’ என மனதுக்குள் வசைபாடியபடியே படைக்களப் பேரரங்குக்கு வந்தார் ஆயுதவாரி.

அங்கோ, எண்ணற்ற போர்க்களப் பணியாளர்கள் தங்களுக்கான ஆயுதங்களை வண்டிகளில் வேகவேகமாக ஏற்றிக்கொண்டிருந்தனர். தான் வரும் முன்பு எப்படி இந்த வேலையைத் தொடங்கினார்கள் என்ற கோபத்தோடு ஆயுதவாரி உள்ளே நுழைந்தபோது, அங்கு கருங்கைவாணன் நின்றுகொண்டு பணிகளை ஒருங்கிணைத்துக்கொண்டி ருந்தான். ``எண்ணற்ற வண்டிகளும் யானைகளும் ஆயுதங்களை ஏற்றிச் செல்லக் காத்திருக்கின்றன. வேகமாக வந்து பணியை ஒருங்கிணையுங்கள்’’ என்று ஆயுதவாரியைப் பார்த்து சத்தம்போட்டுக் கூறினான் கருங்கைவாணன்.

மிகுந்த கோபத்தோடு வந்த ஆயுதவாரிக்கு, வீரர்களும் பணியாளர்களும் நிறைந்த இந்த இடத்தில் தலைமைத்தளபதியிடம் எப்படி சினத்தை வெளிப்படுத்துவதெனத் தெரியவில்லை. ஆனால், வேலை வேகவேகமாக நடைபெற்றுக்கொண்டி ருந்தது. ``விரைவாகப் பிரித்தனுப்புங்கள். சேரனின் பேரரங்கிலிருந்து ஆயுதமேற்றப்பட்ட வண்டிகள் அப்போதே வெளியேறிவிட்டன’’ என்றான்.

பாண்டியனின் ஆயுதவாரி சற்றே அதிர்ச்சிக்குள்ளானார். ``அதற்குள் எப்படி அவர்கள் பிரித்தனுப்பினார்கள்?’’ என்றார்.

``அவர்கள் ஆயுதவாரி இரவில் கூடாரத்துக்குச் சென்று ஓய்வெடுப்பதில்லையாம். ஆயுதப்பேர ரங்கில்தான் இருப்பாராம். எனவே, செய்தி கிடைத்ததும் வேலையைத் தொடங்கிவிட்டார்’’ என்றான் கருங்கைவாணன். அதன் பிறகு அவர் பேச்சு ஏதுமின்றி ஆயுதங்களைப் பிரித்தனுப்பும் வேலையில் ஈடுபட்டார்.

உண்மையில் கருங்கைவாணன், மற்ற இரு ஆயுதவாரிகளுக்கும் இன்னும் செய்தியையே அனுப்பவில்லை. நள்ளிரவுக்குப்பின் இவ்வளவு பெரிய வேலையைச் சொன்னால், எந்த ஆயுதவாரியும் ஒப்புக்கொள்ள மாட்டார். அதுமட்டுமன்று, வலுக்கட்டாயமாகச் செய்யும் சூழலை ஏற்படுத்தினால் அது போர்க்களத்தில் குழப்பத்தில் முடிய வாய்ப்பிருக்கிறது. எனவேதான், மிகக் கவனமாக இந்த வேலையைச் செய்தான் கருங்கைவாணன்.

பாண்டியனின் பேரரங்கிலிருந்து ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு வண்டிகள் வெளியான பிறகுதான் மற்ற இரு ஆயுதவாரிகளுக்கும் செய்தி சென்று சேர்வதைப்போலப் பார்த்துக்கொண்டான். சிறு முணுமுணுப்புகளும் கோபமும் வெளிப்பட்டனவே தவிர, வேலையை மறுக்கும்நிலை எங்கும் ஏற்படவில்லை. ஏனென்றால், ஒரு பேரரசு இன்னொரு பேரரசைவிடப் பின்தங்கும் நிலை ஏற்படக் கூடாது என்பதில் மூன்று பேரரசுகளின் பொறுப்பாளர்களும் ஆயுதவாரிகளும் மிகக்கவனமாக இருந்தனர்.

பல்லாயிரம் வீரர்களுக்கு எண்ணற்ற வகையான ஆயுதங்களைக் கணக்குகளின்படி துல்லியமாக வகை பிரித்து அனுப்பும் பணியை ஆயுதவாரிகள் மூவரும் அவர்களுக்குக் கீழே பணியாற்றும் எண்ணிலடங்காத போர்ப்பணியாளர்களும் இரவு முழுவதும் செய்தனர். விடியும்போதுகூட ஆயுதமேற்ற யானைகளும் வண்டிகளும் பேரரங்கின் முன்னால் காத்திருந்தன. அப்போதுதான் திசைவேழரின் சங்கொலி கேட்டது.

காற்றெங்கும் செம்புழுதியேறி மிதக்க திசைவேழரின் முரசோசை கேட்டதும் தேர்கள் தங்களுக்கான இலக்கு நோக்கி வேகம்கொள்ளத் தொடங்கின. கருங்கைவாணன் மிகக் கவனமாகத் திட்டங்களை வகுத்து அவற்றை சேனைமுதலிகளுக்கும் தளபதிகளுக்கும் விளக்கியிருந்தான்.

``அனைத்துப் படைப்பிரிவுகளையும் எதிரியின் படையைத் தாக்கப் பயன்படுத்தினால் மூஞ்சலின் பாதுகாப்புக்கு என்ன ஏற்பாடு?’’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. ``மூஞ்சலை வேந்தர்களின் கவசப்படையும் அகப்படையும் காத்தால் போதும். எதிரிகள் யாரும் இன்று மூஞ்சலை நெருங்க எந்தவித வாய்ப்பும் இல்லை. ஒருவேளை சிறு குழு ஏதாவது நெருங்கினால் இந்தப் படையால் அவர்களை எளிதில் வீழ்த்த முடியும்’’ என்றான்.

``காற்றின் துணைகொண்டு தாக்கும் அம்பை எதிரிகள் பயன்படுத்தினாலும் நமக்கு எந்த பாதிப்பும் நிகழப்போவதில்லை. ஏனென்றால், நமது படை எதுவும் தொலைவில் நிற்கப்போவதில்லை. மொத்தப்படையும் எதிரிகளைச் சூழ்ந்துதான் நிற்கப்போகிறது’’ என்றான்.

கருங்கைவாணனின் திட்டம், வேந்தர்களைப்போல தளபதிகளுக்கும் சேனைமுதலிகளுக்கும் பெரும்நம்பிக்கையை உருவாக்கியது. போர்க்களத்தில் தாக்குதலுக்கும் இழப்புக்கும் பின் நம்பிக்கையளிக்கும் திட்டம் தீட்டப்படுமேயானால் அது பல மடங்கு ஆற்றலோடு செயல்பாட்டுக்கு வரும். வேந்தர்படையின் செயல்பாடு இன்று அப்படித்தான் இருந்தது.

பறம்புப்படை நிலைகொண்டுள்ள இடத்துக்கு மேற்குப் பகுதியில் காரமலை உள்ளது. அந்த திசை தவிர, பிற மூன்று திசைகளிலும் முழுமையாக வேந்தர்படை, பறம்புப்படையைச் சுற்றிவளைத்தது.

`ஈக்கிமணலும் கருமணலும் உள்ள தட்டியங்காட்டு நிலத்தில் குதிரைகளால் வெகுதொலைவுக்கு விரைந்து ஓட இயலாது. அதைக் கணித்து ஒரே மூச்சில் குதிரைகளையோட்டி, பறம்புப்படையின் பின்புறம் சென்று சேர்க்க வேண்டும். அதைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் அணியணியாய்ப் பின்தொடர்ந்து தங்களுக்குரிய இடத்தில் நிலைகொள்ள வேண்டும். இடைப்பகுதிக்கும் பின்பகுதிக்கும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாகப் போய்ச்சேர வேண்டும். அந்த விரைவே, இன்றைய தாக்குதல் உத்திக்கான அடிப்படையை உருவாக்கும்’ என்று கூறியிருந்தான் கருங்கைவாணன். அவனது திட்டம் அப்படியே செயல்படுத்தப்பட்டது.

தாக்கி முன்னேறும் தனது திட்டத்தைத் தொடங்காமல் நிறுத்திக்கொண்டான் முடியன். எதிரிகள் என்ன செய்கிறார்கள் என்பதை உற்றுக் கவனித்தான். வேந்தர்படை, பறம்புப்படையை நெருங்கவோ ஆயுதங்களால் தாக்கவோ முற்படவில்லை. ஆனால், முழுமையாகச் சூழ்ந்து அணிவகுத்துக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் குதிரையில் ஏறி பறம்புப்படை முழுமையும் சுற்றிவந்தான் முடியன். எதிரிகளின் தளபதிகள் பலரும் அவன் கண்ணில் பட்டனர். ஆனால், கருங்கைவாணன் மட்டும் அவன் கண்ணில் படவே இல்லை. `இவ்வளவு விரிவாகத் திட்டமிட்டிருப்பதால் அவன் முன்னணியில்தானே நிற்க வேண்டும். எங்கே போனான்?’ என்று சிந்தித்தவண்ணம் பறம்புப்படையின் பின்பகுதியை வந்து அடைந்தான் முடியன்.

அங்கே தேக்கன் நின்றுகொண்டிருந்தான். தேக்கனின் பாதுகாப்புக்காகத்தான், அவனைப் பின்புற வரிசையில் நிற்குமாறு முடியன் சொல்லியிருந்தான். ஆனால், இப்போது அவன் இருக்கும் திசையிலும் எதிரிகள் சூழ்ந்து நிற்பதால் அவனும் முன்வரிசையில் நிற்பவனாக மாறினான்.

தேக்கனின் அருகில் வந்ததும் குதிரையை விட்டு இறங்கினான் முடியன். அப்போது நாகக்கரட்டிலிருந்து நீள்கொம்பின் சுழியோசை கேட்டது. அதிர்ச்சியோடு நாகக்கரட்டைத் திரும்பிப் பார்த்தான். வெளிப்படுத்தப்படுவது சுழியோசைதானா என்பதை மறுபடியும் கூர்ந்து கவனித்தான். ஆபத்தை முன்னுணர்த்தும் நீள்கொம்பின் சுழியோசைதான் அது.

சற்றே கோபத்தோடு, ``எதிரிகள் நமது படையைச் சூழ்ந்துவிட்டால் ஆபத்து என்று பொருள்கொண்டுவிடுவதா?’’ என்று தேக்கனைப் பார்த்துக் கேட்டான்.

ஓசை கேட்ட திசையையே பார்த்துக்கொண்டிருந்த தேக்கன் சொன்னான், ``ஆபத்து இங்கில்லை, அங்கு.’’

முடியன் சற்றே மிரட்சியோடு மீண்டும் நாகக்கரட்டைப் பார்த்தான். இருக்கிக்கொடியின் பால்கொண்டு காட்டப்படும் குறிப்பு குளவன்திட்டை நோக்கிக் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஏற்பட்டுள்ள ஆபத்தைப் பாரிக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர் நாக்கரட்டின் மீதிருந்த கூவல்குடியினர்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

வீரயுக நாயகன் வேள்பாரி - 98

நூறு வினாடி வீடியோ!

`வீ
ரயுக நாயகன் வேள்பாரி' தொடர் நூறாவது வாரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த 50 ஆண்டுக்கால பத்திரிகை வரலாற்றில் ஒரு தொடர்கதை நூறு வாரங்கள் வெளியாவது ஒரு மகத்தான சாதனை. 'வேள்பாரி'யை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் படித்துவருகின்றனர். இந்தத் தொடரின் மூலம் பழந்தமிழர்களின் வாழ்க்கை, பண்பாடு, போர்த்திறம், கலையுணர்வு, இயற்கை அறிவு ஆகியவற்றை அறிய முடிவதாக வாசகர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்கின்றனர். நூறாவது வாரத்தை நெருங்கும் 'வேள்பாரி' பற்றிய உங்கள் கருத்துகளை நூறு வினாடிகள் உள்ள வீடியோவாக, உங்கள் செல்போனிலேயே பதிவு செய்து 87544 44121 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பவும். சிறந்த வீடியோக்களுக்குப் பரிசுகள் உண்டு. உங்கள் வீடியோக்களை அனுப்புவதற்கான கடைசித் தேதி : 10.09.18.