Published:Updated:

சர்வைவா - 27

சர்வைவா - 27
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வைவா - 27

சர்வைவா - 27

“Imagine the possibility waiting in those big beautiful stars if we dare to dream big...”

- கடந்த 2017 டிசம்பரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சொன்னது.

மிகப்பெரிய கற்பனைகள்தானே மகத்தான கனவுகளுக்கான தொடக்கம். அமெரிக்காவின் விண்வெளிக் கனவு நம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சியில் நம்மைவிடப் பல ஒளியாண்டுகளுக்கு முன்னால் இருக்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள்.

சர்வைவா - 27

நாசாவின் அத்தகைய அசாத்திய திட்டங்களுக்கு ஒப்புதல் தெரிவித்துக் கையெழுத்திட்டபோதுதான் ட்ரம்ப் இப்படிச்சொன்னார்.

நிலவுக்கும் செவ்வாய்க்கும் மனிதர்களை அனுப்புவதில் தொடங்கி நிலவிலேயே டேரா போட்டு விண்வெளி ஆராய்ச்சி மையத்தை உருவாக்கி, அங்கிருந்து செவ்வாய்க்கும் மற்ற கிரகங்களுக்கும் விண்கலங்களை அனுப்புவது, சூரியக் குடும்பத்தைத் தாண்டி Deep Space-லும் ஆராய்ச்சிகள் செய்வது என இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கான ரூட்மேப் போட்டு வேலை செய்யவிருக்கிறது நாசா.

2069-ல் எப்படியாவது சூரியக் குடும்பத்திற்கு மிக அருகில் இருக்கிற நட்சத்திரக் கூட்டமான Alpha centauri-க்குச் செல்லவும் யோசனை வைத்திருக்கிறார்கள். இதுவரை Voyager-1 ­­மட்டும்தான் சூரியக் குடும்பத்திற்கு வெளியே சென்ற விண்கலம். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகப் பயணித்துக்கொண்டிருந்த தாத்தா காலத்து விஷயம்.

ஆல்பா சென்டாரி பூமியிலிருந்து 4.4 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. ஒளியின் வேகத்தில் பத்து சதவிகிதம் அளவு செல்லக்கூடிய ஒரு விண்கலம் ஆல்பா சென்டாரிக்கு அருகில் நெருங்க 44 ஆண்டுகள் ஆகிவிடும். அதைப் பார்க்க இந்த ஆராய்ச்சியைத் தொடங்குகிற விஞ்ஞானிகளில் எத்தனை பேர் மிச்சமிருப்பார்கள் என்பது தெரியாது. ஆனால், நாசா அதற்கான வேலைகளைச் செய்ய ஆரம்பித்திருக்கிறது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இவற்றை யெல்லாம் சாத்தியப்படுத்தும் என்று நம்புகிறது நாசா. அமெரிக்கா மட்டுமல்ல; உலகின் எல்லா விண்வெளி ஆய்வு நிறுவனங்களுக்கும் ரட்சகன் AIதான். நீண்ட தூரம் ஆண்டுக்கணக்கில் பயணிக்கிற விண்கலத்தைச் செயற்கை நுண்ணறிவு எந்திரங்களைவிடத் திறம்பட வேறு எதுவும் இயக்கமுடியாது என்று நம்புகிறார்கள். விண்வெளியில் பயணிக்கிற மனிதர்களுக்கு நல்ல தோழனாக; கடினமான வேலைகளைச் செய்யக்கூடிய உதவியாளனாக அது இருக்குமாம். (2001:Space odyssey ஞாபகம் வருகிறதா?)

சர்வைவா - 27



மிகச் சமீபத்தில் CIMON (Crew Interactive Mobile companion) என்கிற செயற்கை நுண்ணறிவு ரோபோ ஒன்றை விண்வெளிக்குக் கொண்டு சென்று பயன்படுத்திப் பார்த்திருக்கிறது ஜெர்மன் விண்வெளி ஆராய்ச்சி மையம். ``பறக்கும் மூளை (Flying brain)’’ என்கிற கார்ட்டூன் பாத்திரத்தின் அடிப்படையில் இதை உருவாக்கியிருக்கிறார்கள். இது பறக்கக்கூடிய உருண்டையான உருவம் கொண்ட ரோபோ. ஐந்து கிலோ எடைகொண்ட இந்தப் பறக்கும் ரோபோ, மனிதர்களோடு உரையாடக்கூடியது, Face recognition உதவியோடு எதிரில் இருப்பவரை அடை யாளங்கண்டு அவரு டனான உரையாடல்களை நினைவில் வைத்துப் பேசக்கூடியது. விண்வெளிப் பயணம் செய்கிற மனிதர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யக்கூடியது. பரிசோதனை முயற்சியாக இதைச் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயன்படுத்திப்பார்த்திருக் கிறார்கள். பூமியைச் சுற்றிவரும் ISS-ல் இது சக விண்வெளி வீரர்களோடு வாழ்ந்து வெற்றிகரமான வேலைக்காரனாகச் செயல்பட்டு அப்ளாஸ் வாங்கியிருக்கிறது. சிமோன் சின்னக் குழந்தைதான்...

``விண்வெளி ஆராய்ச்சியின் எதிர்காலம் சிமோன்தான். நீங்கள் நிலவுக்கோ செவ்வாய்க்கோ அல்லது இன்னும் தொலைவுக்கோ செல்கிறீர்கள் என்றால் உங்களால் பூமியிலிருந்து இன்ஜினீயர்களையும் டாக்டர்களையும் கட்டுமானத் தொழிலாளர்களையும் கூடவே அழைத்துச்செல்ல முடியாது. ஆனால் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இருந்தால், மனிதகுலத்தின் மொத்த அறிவையும் ஓர் எந்திரத்திற்குள் ஏற்றி எடுத்துச்சென்றுவிட முடியும். விண்வெளியில் நினைத்ததையெல்லாம் செய்ய முடியும்!’’ என்கிறார் சிமோன் புராஜெக்டின் தலைவரான கிறிஸ்டியன் கராஷ்.

சிமோன் போலவே இன்னும் அதிநவீனச் செயற்கை நுண்ணறிவு எந்திரங்கள் நம் விண்வெளிப் பயணங்களை எதிர்காலத்தில் நிரப்பக்கூடும். விண்கலங்களை விண்வெளியிலேயே பழுதுபார்க்கிற ஆபத்தான வேலைகளை அவை செய்யும். அல்லது பயணங்களில் வெவ்வேறு சூழல்கள் கொண்ட கிரகங்களில் இறங்கி அவை ஆராய்ச்சிகளைச் செய்யலாம்.

நீண்ட தூர விண்வெளி ஆராய்ச்சிப் பயணங்களில் இருக்கிற பெரிய சவாலே, எந்த அளவுக்குத் தொலைவாக விண்கலம் செல்கிறதோ அந்த அளவுக்குத் தகவல் மற்றும் கட்டளைகள் அனுப்புவதும் கடினமாகிவிடும். அப்படிப்பட்ட நேரங்களில் தானாகவே முடிவுகள் எடுக்கிற எந்திரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எதிரில் வருகிற விண்கற்களில் மோதாமல் செல்வது, அந்த விண்கற்களைக் கடக்கும்போது அதிலிருந்து தகவல்கள் சேகரித்தல், எதிர்பாராமல் நடக்கிற விபத்துகளைச் சமாளிப்பது என நிறைய பிரச்னைகளுக்கு AI தொழில்நுட்பம் தீர்வாக இருக்கப்போகிறது. மனிதர்களாலும் அவ்வளவு தூரங்கள் பயணிக்க முடியுமா என்பதும் இன்னமும் பரிசோதிக்கப்படாமல் இருக்கிறது.

மனிதர்களைப் பலிகொடுக்காமல் தொலைதூர நட்சத்திரங்களைச் சென்றடைவதற்கான ஷார்ட்கட் இப்போதைக்கு நிச்சயமாக இதுதான். பல நூறு ஆண்டுகள்கூட வானவீதியில் பயணித்து ஓய்வுறக்கமின்றி மனச்சோர்வின்றி மூப்படையாமல் வேலை செய்யும். அதனால்தான் விண்வெளிகளை இயக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்கு நிறையவே செலவழிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மனிதனால் செல்ல முடியாத அளவுக்குப் பரந்துவிரிந்த விண்வெளியின் அடிமுடிகளை எந்திரங்களால் தொட முடியும்.

சர்வைவா - 27

ஆனால், வெறும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மட்டுமே வைத்துக்கொண்டு உலக விஞ்ஞானிகளின் கனவுகளைச் சாத்தியப்படுத்த முடியாது என்று நாசா நம்புகிறது. செயற்கை நுண்ணறி வுத்துறையின் குறைபாடுகளை பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் மூலம் களைகிற முயற்சிகளில் இறங்கியிருக்கிறது நாசா. அமெரிக்காவின் ஓஹியோவில் இருக்கிற அக்ரோன் பல்கலைக்கழகத்தில் இத்தகைய ஆராய்ச்சிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது அமெரிக்கா. இங்கே தானாகவே சிந்தித்து விண்கலங்களைச் செலுத்தக்கூடிய செயற்கை நுண்ணறிவு எந்திரங்களை, பிளாக்செயின் தொழில்நுட்பத்தோடு சேர்த்து எப்படிப் பயன்படுத்துவது என்பதை ஆராய்கிறார்கள். இதற்காக அடுத்த மூன்றாண்டுகளுக்குச் செலவிடப்படவுள்ள தொகை இருபது கோடி ரூபாய்க்கு மேல். இதுபோல பத்துக்கு அதிகமான ஆராய்ச்சிகளுக்கு நிதி உதவி செய்துகொண்டிருக்கிறது நாசா. எல்லாமே பிளாக்செயினையும் செயற்கை நுண்ணறிவுத்துறையையும் இணைக்கிற நுட்பங்கள் பற்றியவை. 

செம்புலப்பெயல் நீர்போல...


நாசாவிலும் எஸ்டோனியாவிலும் மட்டுமல்ல, செயற்கை நுண்ணறிவு + பிளாக்செயின் கூட்டணியை எப்படி ஒன்று சேர்த்துப் பயன்படுத்த முடியும் என்கிற ஆராய்ச்சிகள் உலகம் முழுக்கப் பரவலாக நடந்துகொண்டிருக்கின்றன.

`சோபியா’ என்கிற அறிவுள்ள மனித உருவ ரோபோ குறித்து முன்பே பார்த்தோம். சிங்குலாரிட்டிநெட் நிறுவனத்தின் படைப்பான சோபியாவின் செயற்கை நுண்ணறிவு மூளையில் பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம்தான் அறிவூட்ட முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். Numerai என்கிற நிறுவனம் சர்வதேசச் சந்தையில் பல லட்சம் கோடிகளை முதலீடு செய்திருக்கிற பெரிய நிறுவனங்களுக்கான நிதி நிர்வாக மென்பொருள்களை AI-Blockchain கூட்டணியில்தான் உருவாக்குகின்றனர். டெஸ்லா தொடங்கி டிரைவர் இல்லா கார்களை உருவாக்கும் பெரும்பாலான நிறுவனங்களும் இந்தக் கூட்டணிக்குத் தாவுகின்றனர். மருத்துவத்துறையிலும் அடுத்த பாய்ச்சல் இதுதான். செயற்கை நுண்ணறிவுத்துறையில் இருக்கிற ஓட்டைகளை பிளாக்செயின் கொண்டு அடைத்துவிட இயலும் என்று நம்பப்படுகிறது.

இந்த இரண்டு தொழில்நுட்பங்களையும் சேர்த்துப் பயன்படுத்துவதால் கிடைக்கும் சில நன்மைகளைப் பட்டியலிடலாம்.

பாதுகாப்பு

நம்முடைய பர்சனல் தகவல்களைத்தான் எந்திரங்களின் நியூரல் மண்டைகளுக்குள் ஏற்றப்போகிறோம். அப்படிப்பட்ட தகவல்களை எல்லாம் அவை பாதுகாப்பாக வைத்திருக்க நினைத்தாலும் `மகத்தான சல்லிப்பயல்’களான மனிதர்கள் விட்டுவைக்க மாட்டார்கள். ஆகவே அதைப் பாதுகாப்பதுதான் எதிர்காலத்தில் பெரிய சிக்கலாக இருக்கும். அதை இந்த பிளாக்செயின் தொழில்நுட்பம் சாத்தியமாக்கும்.

புரிதல்

எந்திரம் நம்மைப் பற்றிய தகவல்களைக் கொண்டு எப்படி முடிவுகளை எடுக்கிறது, அது எப்படி புராசஸ் பண்ணுகிறது என்பவற்றையெல்லாம் இப்போது நம்மால் தெரிந்துகொள்ளவே முடியாது. ஆனால், பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு தகவலைப்பற்றிய சரித்திரத்தையே புரட்டிப் பார்த்துவிட முடியும். குறிப்பாக விண்வெளிப் பயணங்களின் போது சிக்கலான நேரங்களில் அதுவாகவே சில முடிவுகளை எடுக்கும்போது அந்த முடிவுகளுக்கு எப்படி எந்திரங்கள் வந்தடைந்தன என்பதைப் புரிந்துகொள்ளலாம். அதன்மூலம் எந்திரம் தவறான முடிவுகளை எடுக்கும்போது அதன் ஊற்றுக்கண்ணை அறிந்து கட்டுப்படுத்தலாம்.

சர்வைவா - 27

செயல்பாடு

மனிதர்களைவிடவும் பிளாக்செயினை எந்திரங்கள் சிறப்பாகக் கையாளும் என்று நம்புகிறார்கள் விஞ்ஞானிகள். பிளாக்செயின் டேட்டாவை மனிதர்கள் மூலம் இயங்குகிற Stupid கணினிகளைவிடவும் அறிவுள்ள எந்திரங்கள் சிறப்பாகக் கையாளும். பாதுகாக்கப்பட்ட தகவல்களைச் சரியான முறையில் உள்வாங்கிக்கொண்டு அதைக்கொண்டு இயங்கு வதிலும், தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்வ திலும் மனிதர்களைவிடவும் எந்திரங்கள் பெட்டர் என்பது விஞ்ஞானிகள் கருத்து.

கட்டுப்பாடு

செயற்கை நுண்ணறிவு எந்திரங்கள் நமக்கு எதிராக வேலை செய்யுமோ என்கிற அச்சம் எப்போதுமே நமக்கு உண்டு. பிளாக்செயின் மூலம் எந்திரத்தின் ஒவ்வொரு சிந்தனையையும் கண்காணிக்க முடியும் என்பதால் அப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்க்க முடியும்.

AI-Block chain கூட்டணி என்பதே பிரமாதமானதுதான். சிறப்பான பல விஷயங்களைச் செய்யக்கூடியதுதான். இந்த இரண்டு விஷயங்கள் மட்டுமல்ல, மூன்றாவதாக ஒன்று இருக்கிறது. அது இந்த இரண்டுபேர் டீமில் இருக்கிற சின்னச் சின்னச் சிக்கல்களையும் தீர்த்து, செயற்கை நுண்ணறிவுத்துறையை முழுமையாக்குகிற மூன்றாவது தொழில்நுட்பம். எந்திரங்களுக்கு முழு வலிமை தரக்கூடியது. அதுதான் Internet of things... சுறுக்கமாக IOT...

- காலம் கடப்போம்

அதிஷா - ஓவியம்: கோ.ராமமூர்த்தி