
டீ கிளட்டரிங்
இத்தனை நாள்களில் உங்கள் வீடுகளின் ஒவ்வொரு பகுதியாகச் சுத்தம் செய்து முடித்திருப்பீர்கள். தேவையானவை எவை, தேவையற்றவை எவை என்கிற தெளிவு வந்திருக்கும். விடுபட்டுப் போன சில விஷயங்களைப் பற்றி இந்த இதழில் பார்ப்போம்.
வீடு வாங்கும்போதும், வாடகைக்குக் குடிவரும்போதும் ஜன்னல்கள் இருக்கின்றனவா எனத் தேடுவார்கள். ஆனால், குடிவந்ததும் அந்த ஜன்னல்களைத் திறந்து வைக்கிறார்களா என்பதுதான் கேள்வி. குறிப்பாக நகர்ப்புறங்களில் வசிப்போர், `ஜன்னல்களைத் திறந்துவைத்தால் வீட்டுக்குள் தூசு வரும், கொசு வரும், பிரைவசி இல்லை' என்று திறப்பதே இல்லை.
அது ஆரோக்கியமானதே அல்ல. தினமும் குறிப்பிட்ட மணி நேரத்துக்குச் சூரிய வெளிச்சமானது வீட்டுக்குள் வர வேண்டும். வெயில் என்பது இயற்கையான கிருமி நாசினி. ஜன்னல்களைத் திறக்காமலிருக்கச் சொல்கிற காரணங்களைத் தவிர்க்கத் திரைச்சீலைகள் உதவியாக இருக்கும். ஜன்னல்களைத் திறந்துவைத்து ‘ஷியர் கர்ட்டன்’களைப் பயன் படுத்தலாம். இவை வெளிச்சத்தையும் வீட்டுக்குள் அனுமதிக்கும். அதேநேரம் உங்கள் பிரைவசியும் பாதுகாக்கப்படும். சாதாரண திரைச்சீலைகளும் ஓகே. திரைச்சீலைகள் பயன்படுத்தும்போது பகல் வேளையில் ஜன்னல்களைத் திறந்து வைக்கலாம், இரவில் மூடி வைக்கலாம். பகல் வேளைகளில் வெளியில் வெளிச்சம் அதிகமாகவும் வீட்டுக்குள் வெளிச்சம் குறைவாகவும் இருக்கும். எனவே, அக்கம்பக்கத்திலிருந்து யாராவது பார்த்தாலும் அவர்களுக்கு உங்கள் வீட்டுக் காட்சிகள் தெளிவாக இருக்காது.

படுக்கையறைகளுக்குச் சற்றே கனமான திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம். `பிளாக் அவுட் கர்ட்டன்ஸ்' என்று கிடைக் கின்றன. அவை சூரிய வெளிச்சத்தைத் தடுத்துவிடும். அவ்வகைத் திரைச்சீலைகளை பெட்ரூமுக்குப் பயன்படுத்தும்போது பகல் வேளையிலும் இருட்டாகவே இருக்கும். நிம்மதியாக உறங்கலாம்.
டைனிங் ரூம் மற்றும் லிவிங் ரூமில் மெலிதான திரைச்சீலைகள் பெஸ்ட். அவை வெளிச்சத்தை முற்றிலும் தடை செய்யாதவை. பகல் வேளைகளில் அதிக வெயில் வீட்டுக்குள் வர வேண்டாம் என்று நினைப்போம். அதற்கும் ஏதுவாக இருக்கும்.

நிறைய வீடுகளில் திரைச்சீலைகளைத் தொங்கவிடுவதற்கான ராடுகளை ஜன்னல் களில் பொருத்துவார்கள். அது சரியில்லை. அந்த ராடுகள் ஜன்னலிலிருந்து மேலே நான்கு இன்ச்சும் பக்கவாட்டில் நான்கு இன்ச்சும் நீள்கிற மாதிரி பொருத்தினால் திரைச்சீலை உங்கள் ஜன்னல் முழுவதை யும் மூடும். வெளிச்சத்தைத் தடுக்கும். பிரெஞ்சு ஜன்னலுக்குத் திரைச்சீலைகள் போடப் போகிறீர்கள் என்றால் அவை தரையிலிருந்து இரண்டு இன்ச் மேலே இருக்குமாறும், சாதாரண ஜன்னல்களுக்கு, ஜன்னல் முடியும் இடத்திலிருந்து நான்கு இன்ச் கீழே இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஃபேன் பொருத்தும்போது லைட்டி லிருந்து சற்றுத் தள்ளிப் பொருத்த வேண்டும். குறிப்பாக, சீலிங் லைட் இருக்கும்போது அதனடியில் ஃபேனைப் பொருத்தக் கூடாது. அப்படிப் பொருத்தினால் ஃபேன் ஓடும்போது நிழல் ஓடுவதைக் கவனிக்கலாம். சுவரில் லைட் பொருத்தும்போது அது ஃபேனைவிட சற்றுக் குறைந்த உயரத்தில் இருப்பதால் இந்தப் பிரச்னை வருவதில்லை. இரண்டுக்கு மான இடைவெளி சரியாக இருந்தால் அறையின் சுவரில் நிழல் விழுவதைத் தவிர்க்கலாம்.
நான்கு மாதங்களுக்கொரு முறை ஃபேன் மற்றும் லைட்டுகளைத் துடைத்து, ஒட்டடை நீக்கி, வீட்டிலுள்ள அனைத்து ஃபர்னிச்சர்களையும் நகர்த்தித் துடைத்து வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். நான்கு அல்லது ஆறு மாதங்களுக்கொரு முறை என்பதை நினைவில் வைத்துக்கொண்டு முறையாகச் செய்வது சிலருக்கு நடைமுறையில் சரியாக வராமலிருக்கலாம். இந்த விஷயத்தில் நான் பின்பற்றும் வழியைச் சொல்கிறேன். பொங்கலுக்கு முன் ஒரு தடவை, நவராத்திரிக்கு முன் ஒரு தடவை என ஒரு கணக்கு வைத்துச் சுத்தப்படுத்துகிறேன். நீங்களும் உங்கள் வீட்டுப் பண்டிகை அல்லது விசேஷ நாள்களைக் கணக்கிட்டு வீட்டைச் சுத்தப்படுத்துவதை முறைப் படுத்திக்கொள்ளலாம்.
ஸ்விட்ச் போர்டு, கதவுகள், ஜன்னல் களை சோப்புத் தண்ணீர் வைத்து முழுமையாகத் துடைக்க வேண்டும். சுவரிலுள்ள அழுக்குகளையும் தரையிலுள்ள கறைகளையும்கூடத் துடைக்க வேண்டும். மெத்தைகளையும் சோஃபாவையும் வெயிலில் போட்டுத் தூசு நீக்குவதும் அவசியம். இப்படி முழுமையாகச் சுத்தப் படுத்த இரண்டு நாள்கள்கூட ஆகலாம். உதவிக்கு ஆட்களை வைத்துக்கொண்டு சுத்தப்படுத்திவிட்டீர்கள் என்றால், அதன் பிறகு உங்கள் வீடே வேறு மாதிரி மாறியதாக உணர்வீர்கள். ஒன்றிரண்டு வருடங்கள் இப்படிச் செய்து பழகிவிட்டீர்கள் என்றால் பிறகு விடவே மாட்டீர்கள்.
- குப்பைகள் அகற்றிப் பேசுவோம்!
எழுத்து வடிவம் : சாஹா
ஓவியங்கள் : ரமணன்