மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 99

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

ஓவியங்கள்: ம.செ.,

திரிப்படையைச் சூழ்ந்து முற்றுகையிடுவது என்பது, தாக்குதல் போரில் உச்சமானதோர் உத்தி. ஏறக்குறைய முழுமுற்றாக எதிரியை அழித்துவிட முடியும் என்ற நிலையில்தான் இப்படியோர் உத்தியைக் கையாள முடியும். `பறம்புப்படை வலுவிழந்த நிலையில் இல்லை; வேந்தர்படை மிகுவலிமையோடும் இல்லை. அப்படியிருந்தும் கருங்கைவாணன் இப்படியோர் உத்தியை ஏன் தேர்வுசெய்தான்? வேந்தர்கள் எப்படி இதற்கு ஒப்புதல் வழங்கினர்?’ என்ற ஐயத்தின் பிடியிலிருந்து ஆயுதவாரியால் மீளவே முடியவில்லை. கேட்டு அறிந்துகொள்ளும் சூழலும் இல்லை. போர் தொடங்கும் முரசின் ஓசை கேட்டும்கூடப் படைக்கலப் பேரரங்கின் முன்னால் ஆயுதங்களைப் பெற்றுச் செல்லும் வண்டிகள் வருவது குறையவில்லை.

வீரயுக நாயகன் வேள்பாரி - 99

கருங்கைவாணன் வகுத்த உத்தியில் ஒரு பகுதிதான் எதிரிப்படையை முற்றுகையிடுவது. இன்னொரு பகுதி எதிரியின் எல்லைக்குள் துணிந்து நுழைவது. இரண்டையும் ஒருசேர வகுத்திருந்தான். இன்றைய தாக்குதலின் கூர்முனையாக பறம்பின் விற்படையைத்தான் இலக்கிட்டான். பறம்புப்படையின் மைய அச்சாக விற்படையினரே செயல்படுகின்றனர். விற்படையினரின் ஆற்றலைக் குறைத்து அவர்களை வீழ்த்துவது மட்டுமே பறம்பின் பிற படைகளை வெற்றிகொள்ள வழிவகுக்கும் என முடிவுசெய்து அதற்கான திட்டத்தைத் தீட்டினான்.

வேந்தர்களின் யானைப்படை, எந்த நேரத்திலும் பறம்புக்குள் நுழைய ஆயத்தநிலையில் இருந்தது. பறம்பினர் யானைப்போர் நிகழ்த்த விரும்பாத நிலையில், வேந்தர்களின் யானைகள் பறம்பின் எல்லைக்குள் நுழையும் உரிமை பெற்றவையாயின. அந்த வாய்ப்பைப் பொருத்தமாகப் பயன்படுத்தலாம் என்று வேந்தர்படை காத்திருந்தது. இன்றைய தாக்குதல் திட்டத்தின் மிகமுக்கியப் பணியை யானைப்படைக்கு வழங்கினான் கருங்கைவாணன்.

போருக்கான சங்கொலி கேட்டதும் வேந்தர் படை பறம்பின் படையைச் சூழ்ந்து முற்றுகையிடத் தொடங்கியது. அதே பொழுதில் வேந்தர்களின் யானைப்படை வடகோடியில் நாகக்கரட்டுக்கும் காரமலைக்கும் இடைப்பட்ட பள்ளத்தாக்குக்குள் நுழைந்தது. சில காதத்தொலைவே கொண்ட இந்தப் பள்ளத்தாக்கில், மிக வேகமாக யானைப் படையை விரட்டி வந்தான் அதன் தளபதி உச்சங்காரி. இந்தப் பள்ளத்தாக்கின் தென்பகுதி எல்லையை இரண்டு பொழுதுக்குள் அடையவேண்டும் என்பதுதான் உச்சங்காரிக்கு இடப்பட்ட கட்டளை. அதாவது பறம்புப்படையை முற்றுகையிட வேந்தர்படை சுற்றிவளைத்து முடிக்கும்போது, யானைப்படை பள்ளத்தாக்கின் தென் எல்லையைத் தொட்டிருக்க வேண்டும்.

நாகக்கரட்டின் பின்னால் உள்ள காரமலையில் தான் இரலிமேடு இருக்கிறது. இரண்டுக்கும் இடைப்பட்ட பள்ளத்தாக்கில்தான் பறம்புப் படையினர் தங்கும் குடில்களும், உணவும், இதர தேவைகளுக்கான ஏற்பாடுகளும் இருந்தன. இன்றைய போர் தொடங்கிய கணமே மிக வேகமாக இந்தப் பகுதிக்குள் நுழைந்தது வேந்தர்களின் யானைப்படை. அவர்களின் நோக்கம், இரலிமேட்டுக்கும் நாகக்கரட்டுக்குமான தொடர்பைத் துண்டித்தல்தான். இரலிமேட்டில் உள்ள குகைகளில்தான் பறம்பு வீரர்களுக்கான ஆயுதங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து தான் போர்க்களத்துக்கு ஆயுதங்கள் கொண்டுவரப்படுகின்றன.

வீரயுக நாயகன் வேள்பாரி - 99

பறம்புப்படையை முற்றுகையிட்டுப் போர்புரியும் இன்றைய நாளில், வேந்தர்களின் முழுப்படையோடு பறம்புப்படை மோத உள்ளது. தன்னைவிடப் பல மடங்கு அதிகமான வீரர்களை எதிர்த்துப் போரிடும்போது பறம்புப்படைக்குப் பல மடங்கு ஆயுதங்கள் தேவை. ஆனால், ஆயுதங்கள் இரலிமேட்டிலிருந்து வந்துசேரும் வழி இப்போது அடைக்கப்பட்டாகிவிட்டது. இதனால், நண்பகலுக்குமேல் பறம்புவீரர்களின் அம்பறாத்தூணியில் அம்பு எதுவும் மிஞ்சாது. பிற வகை ஆயுதங்களும் போதிய அளவு இருக்காது. சூழப்பட்ட பறம்புப்படை ஆயுதங்களின் போதாமையால், முழு வேகத்தோடு தாக்குதலைத் தொடுக்க முடியாது. இதுவே அவர்களை நசுக்கி அழிக்கச் சிறந்த வழி என உத்தியை வகுத்திருந்தான் கருங்கைவாணன்.

போர் தொடங்கிய வேகத்தில் உச்சங்காரியின் யானைப்படை பள்ளத்தாக்கில் விரைந்து முன்னேறியது. அங்கு வீரர்களோ, தடுப்புகளோ, எதிரிகளின் யானைப்படையோ இல்லாத நிலையில் உச்சங்காரியின் வேலை மிக எளிதாக மாறியது. கருங்கைவாணன் கூறிய நேரத்தைவிட விரைவாகத் தென்கோடிக்கு வந்து சேர்ந்தான் உச்சங்காரி.

இப்போது நாகக்கரடும் இரலிமேடும் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டன. பறம்பின் ஆயுதங்களும் ஆயுதப் பொறுப்பாளரான முதுவேலரும் கபிலரும் இரலிமேட்டில் இருக்கும் குகைகளில் இருந்தனர். முறியன் ஆசானும் வாரிக்கையனும் கூவல்குடியினரும் நாகக்கரட்டின் மேல் இருந்தனர். படைக்குத் தேவையான பணியைச் செய்பவர்கள், காயம்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் என எண்ணற்ற வீரர்கள் இருபக்கமாகப் பிரிந்து இருந்தனர்.

நாகக்கரட்டின் மீதிருந்த வாரிக்கையன்தான் எதிரிகளின் யானைப்படையை என்ன செய்வது என முடிவெடுக்க வேண்டியவன். பறம்பின் யானைப்படைத் தளபதி வேட்டூர்பழையன் நேற்றைய போரில் இறந்துவிட்டான். பறம்பின் யானைகளும் அதன் வழிகாட்டிகளுமான தந்தமுத்தக்காரர்களும் இரண்டு குன்றுகளுக்கு அப்பால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வந்து தாக்குதலைத் தொடுக்க வேண்டுமென்றால், நீண்டபொழுதாகிவிடும் என்று சிந்தித்த வாரிக்கையன், ``செய்தியை முதலில் பாரிக்குத் தெரியப்படுத்துங்கள்’’ என்றான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 99

பாரி நிற்கும் குளவன்திட்டின் மேலிருந்து பார்த்தால் எதிரில் இருக்கும் தட்டியங்காட்டுப் பரப்பு முழுமையாகத் தெரியும். இடதுபுறமாக நாகக்கரடும் அதன் பின்னணியில் இருக்கும் இரலிமேடும் தெரியும். ஆனால், நாகக்கரட்டுக்கும் இரலிமேட்டுக்கும் நடுவில் இருக்கும் பள்ளத்தாக்கு தெரியாது. எனவே, யானைப்படைகள் பள்ளத் தாக்குக்குள் நுழைந்ததை, பாரியால் குளவன் திட்டிலிருந்து பார்க்க முடியாது. அதனால்தான் பாரிக்குச் செய்தியைத் தெரிவிக்க, கூவல் குடியினருக்கு உத்தரவிட்டான் வாரிக்கையன்.

இரிக்கிச்செடியின் பால்கொண்ட குறியீட்டைக் காட்டியபடி கூவல்குடியினரின் நீள்கொம்பு சுழியோசை குளவன்திட்டில் பட்டு எதிரொலித்தது. அதுவரை தட்டியங்காட்டில் சுற்றிவளைக்கும் எதிரிகளின் படையைப் பார்த்துக்கொண்டிருந்த பாரி, ஓசை கேட்டவுடன் நாகக்கரட்டுப் பக்கம் திரும்பிப் பார்த்தான். பள்ளத்தாக்குக்குள் ஏற்பட்டுள்ள ஆபத்து என்னவென்று தெரியவில்லை.

இகுளிக்கிழவன் பின்புறம் சற்றுத் தள்ளியிருக்கும் பாறை ஒன்றைக் கைகாட்டியபடி சொன்னான், ``அவ்விடம் போய்ப் பாருங்கள்; பள்ளத்தாக்கு தெளிவாகத் தெரியும்.’’

பாரியும் காலம்பனும் உடன் நின்றிருந்த கூவல்குடியினரும் அந்தப் பாறையை நோக்கி விரைந்தனர்.

ங்கே என்ன வகையான ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பதை அறிய, நாகக்கரட்டை நோக்கி வீரர்களை அனுப்பினான் முடியன். எதிரிகளின் தேர் பறம்புப்படையை முழுமையாகச் சுற்றிவளைத்து நின்றது.

``ஈக்கிமணலில் இவனது குதிரைகளால் அதிக தொலைவு பாய்ந்தோட முடியாது எனத் தெரிந்தும் படையைச் சுற்றிவளைத்து நிற்கிறான் என்றால், இவனுக்கு உரிய பாடத்தை நாம் புகட்டியே ஆகவேண்டும்’’ என்று சொல்லியபடி குதிரையில் வேகமாக ஏறினான் முடியன்.

``கொஞ்சம் பொறு. ஆபத்தை அறியச் சென்ற வீரர்கள் வரும் வரை தற்காப்புப் போரை நடத்துவோம். அது என்ன வகை ஆபத்து என அறிந்த பிறகு தாக்குதல் போரைத் தொடங்குவோம்’’ என்றான் தேக்கன்.

``பறம்புப்படையை முற்றுகையிடும் துணிவு இவனுக்கு எங்கிருந்து வந்தது? எண்ணிக்கையில் பெருங்கூட்டம் என்பதால்தானே ஏறிவந்து நிற்கிறான். பாறைகளை உருட்டும் பேய்க்காற்றைப்போல இவனின் படைவீரர்களின் தலைகளை உருட்டித் தள்ளுவோம்’’ என்று கத்தியபடி புறப்பட ஆயத்தமானான் முடியன்.

``அவசரப்படாதே... நில்’’ என்று கத்தினான் தேக்கன்.

``இல்லை. இப்போது பொறுமையுடன் தற்காப்புப் போரை நடத்தினால், நாம் அஞ்சிவிட்டோம் என எதிரி புரிந்துகொள்வான். நம்மீதான தாக்குதல் மிகக் கடுமையானதாக இருக்கும். நாம் இப்போது ஏறித் தாக்கினால் மட்டுமே அவனது வேகத்தையும் சீற்றத்தையும் முறித்துத்தள்ள முடியும். நாம் அஞ்சாதவர்களாக இருப்பது முக்கியமல்ல, அஞ்சாதவர்களாக இருக்கிறோம் எனக் காட்டிக்கொள்வது போர்க்களத்தில் மிக முக்கியம்’’ என்றான் முடியன்.

``உனது வேகத்தையும் தாக்குதலையும் நீ தீர்மானி. அவன் தீர்மானித்த ஒன்றை நோக்கி நகராதே’’ என்று உரத்த குரலில் சொல்லிவிட்டு, தனது கையில் இருக்கும் ஈட்டியை மண்ணில் அழுத்திக் குத்தியபடி முடியனின் கண்களை உற்றுப்பார்த்தான் தேக்கன்.

பறம்பு ஆசானின் பார்வையை அவ்வளவு எளிதில் யாரும் கடந்துவிட முடிவதில்லை. முடியனாக இருந்தாலும் மடங்கவேண்டியதோர் இடமுண்டு. இழுத்துப் பிடித்த குதிரையின் கடிவாளத்தை விரல்கள் விடுவித்தன. தேக்கனை இமைக்காமல் பார்த்துவிட்டுச் சொன்னான், ``சரி, நாகக்கரட்டிலிருந்து செய்தி வந்துசேரும் வரை தற்காப்புப் போரையே நடத்துகிறேன். நீங்கள் படையின் நடுப்பகுதிக்குச் செல்லுங்கள்.’’

முடியனின் சொல் கேட்டுப் பணிந்து நடந்தான் தேக்கன்.

தேக்கனின் சொல் கேட்டு விரைந்து சென்றான் முடியன்.

குளிக்கிழவன் சொன்ன பாறையின் உச்சியில் ஏறி நின்று பார்த்தான் பாரி. இரலிமேட்டுக்கும் நாகக்கரட்டுக்கும் நடுவில் யானைப்படை நிரம்பி நின்றது. தட்டியங்காட்டில் முழுப்படையையும் சூழ்ந்து தாக்கத் திட்டம் தீட்டியுள்ளனர். இன்னொருபுறம் ஆயுதங்களைப் போர்க் களத்துக்குக் கொண்டுசெல்ல விடாமல் தடுக்கும் உத்தியைச் செயல்படுத்துகின்றனர் என்று பாரி எண்ணிக்கொண்டிருக்கையில், காலம்பன் இறைஞ்சிக் கேட்கும் குரல் ஒலித்தது, ``நாங்கள் களமிறங்க இப்போதாவது அனுமதி வழங்கு பாரி.’’

``அனுமதிக்கிறேன். ஆனால், தட்டியங் காட்டுக்கல்ல, பள்ளத்தாக்குக்கு.’’

பெருமகிழ்வடைந்தான் காலம்பன். ``திரையர்குலம் எதிரிகளின் யானைப்படையை முழுமுற்றாக அழித்தொழிக்கும்’’ என்று சொல்லிய படி புறப்படப்போகிறவனைப் பார்த்துப் பாரி சொன்னான், ``நான் யானைப்படையை அழிக்கச் சொல்லவில்லையே.’’

அதிர்ந்து நின்றான் காலம்பன்.

``இப்போது அந்தப் படையை அழிக்கவேண்டிய தேவையேதும் நமக்கில்லை. இரலிமேட்டிலிருந்து தட்டியங்காட்டுக்கு ஆயுதங்களைக் கொண்டு செல்ல வழிவகுத்தால் போதும். எனவே, யானைப் படையோடு நாம் போரிட வேண்டாம்.’’

``வேறென்ன செய்வது?’’ எனக் காலம்பன் கேட்க.

``அணங்கன் எங்கே?’’ என்றான் பாரி.

காலம்பனுக்குப் புரிந்தது. பின்புறம் இருந்த மலைக்குன்றைக் கைகாட்டி, ``பெருங்காட்டெருமை மந்தையோடு அந்தக் குன்றில் நிற்கிறான் அணங்கன்.’’ மேலே இருக்கும் காரமலை முகட்டைக் கைகாட்டி, ``இன்னொரு காட்டெருமை மந்தையோடு செதிலன் அந்த முகட்டில் நிற்கிறான். எதிரி வேறு திசையில் மேலேறிவிடக் கூடாது என்பதால் அங்கு நிற்கச் சொன்னேன்’’ என்றான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 99

``சரி. அணங்கனுக்கு உத்தரவிடு. காட்டெருமை மந்தையை இரலிமேட்டுக்கு நேராகக் கீழே இறக்கி, யானைப்படையை இருகூறாக்கு. இரலிமேட்டில் இருக்கும் ஆயுதங்களை நடுப்பகலுக்குள் தட்டியங்காட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்’’ என்றான்.

சொல்லிக்கொண்டிருக்கும்போதே காலம்பன் வெளிப்படுத்திய சீழ்க்கை ஓசை அணங்கன் இருக்கும் குன்றில் எதிரொலித்தது. கண நேரத்துக்குள் மறு ஓசை மேலே இருந்து கீழே வந்தது.

``மந்தை நகரத் தொடங்கிவிட்டது. நான் உடனடியாக எதிர்த்திசைக்குப் போகிறேன். அப்போதுதான் எந்த இடத்தில் மந்தையைக் கீழே இறக்குவது என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியும்’’ என்று சொன்ன காலம்பன், ``திமிறிப் பாயும் காட்டெருமை மந்தையைக் கண்டால் யானை தெறித்து ஓடும். எனவே, பள்ளத்தாக்கில் இறங்கிய வேகத்தில் படையைப் பிளந்து பாதையை உருவாக்கிவிடலாம். ஆனால், அதைவிட முக்கியம், காட்டெருமை மந்தையைக் கொண்டே நூற்றுக்கணக்கான யானைகளை மடக்கி நிறுத்திவிடலாம். பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் மிகவும் கோழைகள். காட்டெருமையின் கனைப்பொலியைக் கேட்டு அவை தேங்கி நின்றுவிடும். எந்தப் பாகனாலும் நகர்த்திச் செல்ல முடியாது. எண்ணற்ற யானைகளை நாம் வசப்படுத்திப் பயன்படுத்திக்கொள்ளலாம்’’ என்றான்.

``நம்மிடம்தான் போதுமான யானைகள் இருக்கின்றனவே. பிறகு நமக்கு எதற்கு யானைகள்?’’ என்றான் பாரி.

``தந்தமுத்தக்காரர்களிடம் நாற்பது, ஐம்பது யானைகள்தான் இருக்கின்றன என்று கேள்விப்பட்டேன். அவை போதுமா?’’

சின்னச் சிரிப்போடு பாரி சொன்னான், ``நீதான் பழக்கப்படுத்தப்பட்ட யானைகளை `கோழைகள்’ என்று சொல்லிவிட்டாயே! பிறகு எப்படி நம் படையில் அவற்றைச் சேர்க்க முடியும்?’’

என்ன சொல்வதென்று தெரியவில்லை, `சரி’ எனத் தலையாட்டியபடி எதிர்த்திசையில் உள்ள மலை நோக்கி ஓடத் தொடங்கினான் காலம்பன்.

ற்காப்புப் போரைத் தொடங்கினான் முடியன். வேந்தர்களின் படையோ முழுவேகத்தோடு தாக்குதலைத் தொடங்கியது. காலையில் பள்ளத்தாக்குக்குள் யானைப்படை முழுமையும் சென்றதை உறுதிப்படுத்திய பிறகுதான் தட்டியங்காட்டுப் போர்முனைக்கு வந்தான் கருங்கைவாணன். தனது படையின் தாக்கும் உத்தியை மூன்றாகப் பிரித்தான். நெற்றிப் பகுதியே வலிமையான தாக்குதலை முன்னெடுக்கும் ஆற்றல் வாய்ந்தது. அதற்கு அவனே தலைமை ஏற்றான். வலக்கைப் பகுதியில் இருந்த படைப்பிரிவுக்குத் துடும்பனையும், இடக்கைப் பகுதியில் இருந்த படைப்பிரிவுக்கு உறுமன்கொடியையும் தலைமை ஏற்கச் செய்தான்.

கருங்கைவாணன் நெற்றிப்பகுதியின் முன்படையில் வந்து நின்றதும் முடியனும் அந்தத் திசையையே தேர்வுசெய்தான். வலக்கைப் பக்கம் இரவாதனையும், இடக்கைப் பக்கம் உதிரனையும் தலைமை ஏற்கச் செய்தான். தாக்குதல் தொடங்கிய கணமே வேந்தர்களின் படை ஆற்றலின் உச்சத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது. `தட்டியங்காட்டுப் போரில் எதிரியை வீழ்த்த இன்றைய நாளே சிறந்தது!’ என உறுதியாக நினைத்தான் கருங்கைவாணன். நிறைந்த அவையில் தன்னை அவமானப்படுத்தியவர்களுக்கு, தான் யார் என்பதை மெய்ப்பிக்கும் நாளாக இந்த நாளைக் கருதினான்.

கூட்டுப்படைத் தளபதி முன்களப்போருக்கு வருவது எந்தவிதத்திலும் அறிவுடைமையாகாது. ஆனால், தெரிந்தே இன்று முன்களத்துக்குக் கருங்கைவாணன் வந்துள்ளான். அவனது முக்கியமான இலக்கே விற்படைதான். பறம்பின் விற்படை இடக்கைப் பக்கம் நிற்கிறது. அந்தத் திசையில் வேந்தர்படைக்கு உறுமன்கொடியைத் தலைமையேற்கச் செய்தான். வேந்தர்படையின் மிக வலிமையான கவச அணிவீரர்களின் பத்துக்கும் மேற்பட்ட சேனைமுதலிகளை உறுமன்கொடிக்குக் கீழே நிறுத்தினான். பறம்பின் விற்படையினர் என்ன தாக்குதல் நடத்தினாலும் கவச அணிவீரர்களை ஒன்றும் செய்ய முடியாது. வேந்தர்படையைத் தடுக்க அம்புகளைப் பொழிந்து தள்ளுவர். நண்பகலுக்குள் அம்புக்கட்டுகள் தீர்ந்துபோக பறம்புப்படை கையறுநிலையில் நிற்கும். அதேநேரம் பறம்பின் விற்படையை எதிர்த்து வலிமையான தாக்குதல் நடக்கிறது என்பதை மற்றவர்கள் அறியாமல் இருக்க, கருங்கைவாணன் தானே நெற்றிப்பக்கம் உள்ள படைக்குத் தலைமையேற்றான். இயல்பாகவே கருங்கைவாணன் எந்தத் திசையில் வந்து நிற்கிறானோ அந்தத் திசையே கவனத்தை ஈர்க்கும்.

மூவேந்தர்களின் தலைமைத் தளபதிக்கு எதிராக முழு ஆற்றலையும் குவித்துப் பறம்புமக்கள் போர்புரிவர். ஆனால், பறம்பின் விற்படையினரின் மீது வேந்தர்படை நடத்திக்கொண்டிருக்கும் வலிமைமிகுந்த தாக்குதல் உடனடி கவனத்தைப் பெறாமல்போகும். போர்க்களத்தில் தாக்குதலின் போக்கு திசைமாற சில கணங்களே போதுமானவை. ஒருமுறை திசைமாறிவிட்டால் அதன்பிறகு பழைய நிலைமைக்குக் கொண்டுவர, பேரிழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

இவ்வளவு திட்டமிட்ட கருங்கைவாணன், பறம்பின் விற்படைத்தளபதி உதிரனைப் பற்றி அறிந்திருக்கவில்லை. வேந்தர்படையின் தாக்கும் ஆற்றலைப் பன்னிருவகையான வில்கொண்டு முறித்துத்தள்ளும் மாவீரன் அவன். இழுபடு நாண்கள், விடுபடு விசை, அலையலையாய் மேலெழும் அம்புகளால் காற்றையே கட்டுப்படுத்த முயல்பவன். போர் தொடங்கிய பிறகு வேந்தர்படையின் குதிரைகள் குடித்த நீரைவிட உதிரனின் விற்படையினருடைய அம்புகள் குடித்த குருதி அதிகம்.

வில்லே மலைமனிதர்களின் தலையாய ஆயுதம். காட்சியைப் பார்த்தலின் மூலமும், ஓசையைக் கேட்டலின் மூலமும் இலக்கை வீழ்த்தும் ஆற்றல்கொண்டவன் வில்லாளி மட்டுமே. பகழி அம்பும் விரி அம்பும் செலுத்தத் தெரிந்த விற்படையினரை எதிர்கொண்டு நிற்கும் படை இதுவரை இந்த மண்ணில் இல்லை. மூங்கிலம்பு பறவையைத் துளைக்கும். விரி அம்பு பனையைத் துளைக்கும். பகழி அம்பு பாறையைத் துளைக்கும். குறுங்காது முயலின் குருதி தோய்ந்த நாணிலிருந்து பறம்புவீரர்கள் விடுவிக்கும் பகழி அம்பை எதிர்கொள்ளும் கவசம் எவனிடமும் இல்லை.

ஆனாலும் பறம்பின் விற்படைக்கு முழு விசையோடு ஏறித்தாக்கும் அனுமதியை இன்றுவரை முடியன் வழங்கவில்லை. மூஞ்சலின் இருப்பிடம் மிகத்தொலைவில் உள்ளது. குதிரைப்படையால்தான் அவ்வளவு தொலைவுக்குச் சென்று மூஞ்சலைத் தாக்க முடியும். எனவே, இரவாதனுக்கே மூஞ்சலை நோக்கி முன்னேற அனுமதி கொடுக்கப்பட்டது. முன்னகர்ந்து வரும் எதிரிப்படையைத் தடுத்துப் பின்னுக்குத் தள்ளும் வேலை மட்டுமே உதிரனுக்கு வழங்கப்பட்டது. அப்படியிருந்தும் இதுவரையிலான போரில் அவன் நிகழ்த்திய அழிவை பறம்பின் வேறெந்தப் படைப்பிரிவும் நிகழ்த்தவில்லை.

வேந்தர்களின் இன்றைய போர் தனது விற்படைக்கு எதிரான உத்தியைக் கொண்டது என்பது உதிரனுக்குத் தெரியாது. ஆனால், எதிரிகள் பறம்புப்படையை முற்றுகையிட்டுத் தாக்கும் முயற்சி கடுஞ்சினத்தை உருவாக்கியிருந்தது. அவன் கண்ணெதிரே கவசம்பூண்ட பெரும்படையோடு உறுமன்கொடி வந்து கொண்டிருந்தான். தற்காப்புப் போரை மட்டுமே நடத்த வேண்டும் என்று முடியன் உத்தரவிட்டிருந்ததால், வேறு வழியில்லாமல் இடையிலக்கு ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தினான் உதிரன்.

உதிரன் மட்டுமல்ல, பறம்பின் மற்ற இரு தளபதிகளும் இடையிலக்கு ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தினர். கருவிகள் விடும் ஆயுதம், கைகள் விடும் ஆயுதம், கைகள் விடாத ஆயுதம் என்று போர் ஆயுதங்களை மூன்று வகையாகத்தான் எல்லோரும் பகுத்துள்ளனர். அம்பு, சிலை, ராயம், கொடிமரம், வல்வில், கவண், சக்கரம் ஆகியவை கருவிகள் விடும் ஆயுதங்கள். வேல், எஃகம், அயில், ஆலம், ஈட்டி உள்ளிட்டவை கைகள் விடும் ஆயுதங்கள். வாள், ஈர்வாள், கொடுவாள், மழு, நவியம், குறுந்தடி உள்ளிட்டவை கைகள் விடாத ஆயுதங்கள். ஒரு படை எந்தவிதமான ஆயுதத்தைப் பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே எதிரில் உள்ள படை தனது ஆயுதத்தைத் தேர்வுசெய்கிறது.

தட்டியங்காட்டுப் போரில் வேந்தர்படைக்குக் குழப்பம் ஏற்படும் இடமே இதுதான். கருவிகள் விடும் ஆயுதத்தைப் பொறுத்தவரை, அது மூன்று தன்மைகளால் அறியப்படுகிறது. தொலையிலக்கு ஆயுதங்கள், இடையிலக்கு ஆயுதங்கள், அண்மையிலக்கு ஆயுதங்கள். விற்படையைப் பொறுத்தவரை எந்த வகையான வில்லில் எந்த வகையான அம்பைப் பொருத்தி எய்தால், அந்த அம்பு எவ்வளவு தொலைவில் உள்ள இலக்கை அடையும் என்பதை, வீரக்கலையைப் பயிற்றுவிக்கும் ஆசான்கள் தங்களின் பயிற்சிக்கூடத்தில் மாணவர்களுக்குச் சொல்லித்தருவர். மூவேந்தர்களின் படையணியில் வந்து நிற்கும் வீரர்கள் எல்லோரும் வீரக்கலை ஆசான்களிடம் பயிற்சிபெற்ற மாணவர்களே.

பறம்பின் வில்லும், பூட்டப்பட்ட நாணும், அம்பின் தன்மையும் முற்றும் மாறுபட்டவை. அதாவது பறம்பினர் பயன்படுத்தும் இடையிலக்கு ஆயுதங்கள் செல்லும் தொலைவுக்கு வேந்தர்படையின் தொலையிலக்கு ஆயுதங்கள் செல்வதில்லை. எனவேதான், `தற்காத்துப் போர்புரி’ என்று முடியன் சொன்னதும் உதிரன் இடையிலக்கு அம்புகளை மட்டுமே பயன்படுத்தத் தனது அணிக்கு உத்தரவிட்டான். ஆனால், அந்தத் தொலைவே வேந்தர்களின் விற்படையால் அம்பெய்ய முடியாத தொலைவாக இருந்தது. அதனால் பறம்புப்படையினர் தொலையிலக்கு அம்புகளைப் பயன்படுத்துகின்றனர் என்று நினைத்த உறுமன்கொடி, எவ்வளவு தொலைவு முன்னேற முடியுமோ அவ்வளவு தொலைவுக்கு முன்னேறித் தாக்கச் சொல்லி உத்தரவிட்டான். இதனால், பறம்புப்படை தாக்கி அழிக்கும் பொறிக்குள் வந்து நின்று போரிட்டுக்கொண்டிருந்தது வேந்தர்படை.

வீரயுக நாயகன் வேள்பாரி - 99

தற்காப்பை விடுத்து, தொலையிலக்கு அம்புகளைப் பயன்படுத்த முடியன் எப்போது உத்தரவிடுவான் என்று ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்திருந்தான் உதிரன். அதே தவிப்போடு இருந்தான் இரவாதன்.

நாகக்கரட்டுக்குச் செய்தி கேட்கப் போன வீரன் திரும்பி வந்து முடியனிடம் நிலைமையைச் சொன்னான். ``காட்டெருமைகள் பாதை வகுத்த பிறகுதான் ஆயுதங்களைத் தட்டியங்காட்டுக்குக் கொண்டுவந்து சேர்க்க முடியும். அதற்கு நண்பகலைக் கடந்து இருபொழுதாகலாம். அதுவரை இருப்பதைக் கொண்டு எதிரிகளைச் சமாளியுங்கள்’’ என்று வாரிக்கையன் சொல்லியதைக் கூறினான்.

``நிலைமையைத் தெரிந்த பிறகு முடிவெடுப்போம்’’ என்று தேக்கன் சொன்னது எவ்வளவு சரியானது என்று உணரும்போதே, முடியனுக்கு அடுத்த கவலை தொடங்கியது. நண்பகல் கடந்து இரண்டு பொழுது வரை தற்காப்புப் போரில் இழப்புகள் இல்லாமல் நீடிப்பது மிகவும் கடினமான ஒன்று. எனவே, வேறு வழியென்ன எனச் சிந்தித்தான்.

உதிரனையும் இரவாதனையும் தேக்கன் இருக்கும் நடுப்பகுதிக்கு வரச்சொல்லிச் செய்தி அனுப்பிவிட்டு, தானும் பின்னகர்ந்தான். பறம்பின் முன்கள வீரர்கள் ஆவேசத்தோடு போரிட்டு வேந்தர்படையைச் சமாளித்துக் கொண்டிருந்தனர்.

``போர் தொடங்கிப் பத்து நாழிகைகூட ஆகவில்லை. ஆனால், இன்னும் பத்து நாழிகைக்குமேல் நிலைமையைச் சமாளித்தாக வேண்டிய நிலை. அது முடியுமா என்பது பெரும் கேள்வியாக எழுந்தது. வேந்தர்படையின் ஒட்டுமொத்த வீரர்களும் இன்றைய போரில் தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கின்றனர். காற்றில் இடைவெளியின்றி அம்புகள் பறந்துகொண்டிருக்கின்றன. பறம்புப்படை, முடிந்தளவுக்குச் சமாளித்துப் போரிட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், புதிதாக ஆயுதங்கள் வந்துசேராத நிலையில், இருப்பதைக் குறைத்துப் பயன்படுத்தும் சூழல் உருவானால் வேந்தர்படையின் கை ஓங்கும் நிலை உடனடியாக உருவாகும். அது இழப்புகளை அதிகப்படுத்தும் வாய்ப்புண்டு. இன்னும் பத்து நாழிகைக்கு இதே வேகத்தோடு போரிட நம்மிடம் ஆயுதங்கள் இல்லை. வேறென்ன செய்வது?’’ என்று ஆலோசனை கேட்டான் முடியன்.

கட்டளைகளைக் கணநேரத்துக்குள் நிறைவேற்றும் பயிற்சிகொண்ட உதிரனும் இரவாதனும் களத்தில் மேலெழும் கேள்விக்குமுன் திகைத்து நின்றனர். குருதி குடிக்கும் வெறி மட்டுமே அவர்களின் கண்களில் கனன்றுகொண்டிருந்தது. எல்லாவற்றுக்குமான விடையைச் சிந்தித்துவைத்திருந்தான் தேக்கன். படையின் நடுப்பகுதியில் நின்று போர்க்களத்தின் மொத்தச் செயல்பாட்டையும் கவனித்த அவன் சொன்னான், ``நம்மிடம் இருக்கும் ஆயுதங்கள் இன்னும் ஐந்துபொழுதுக்குமேல் தாங்காது. எனவே, வேந்தர்படையை எதிர்த்தாக்குதல் நடத்தி நீண்டநேரம் சமாளிக்க முடியாது.’’

``வேறென்ன செய்வது?’’ என விரைந்து கேட்டான் இரவாதன்.

``அவர்கள் தாக்குதல் வேகத்தைக் குறைத்தால் மட்டுமே நம்மால் நிலைமையைச் சமாளிக்க முடியும்.’’

``அவர்களின் மீது வலிமையான எதிர்த்தாக்குதல் செய்ய, போதிய ஆயுதங்கள் இல்லை. பிறகு எப்படி அதைச் செய்வது?’’ எனக் கேட்டான் உதிரன்.

``அவர்களின் கவனத்தைத் திசைதிருப்புவதன் மூலமும், குழப்பத்தை உருவாக்குவதன் மூலமும் அவர்களின் வேகத்தை மட்டுப்படுத்த முடியும்.’’

``என்ன செய்ய வேண்டும்?’’ என்று கேட்டான் முடியன்.

``காலையில் நீ சொன்னதை இப்போது செய்ய வேண்டும்.’’

மூவரும் கூர்ந்து கவனிக்க, தேக்கன் சொன்னான், ``இரவாதனின் குதிரைப்படைக்கு, முன்னேறித் தாக்கும் அனுமதியைக் கொடு. சூழ்ந்திருக்கும் வேந்தர்படையின் எந்தவோர் இடத்தையும் பிளந்துகொண்டு அவனால் வெளியேற முடியும். நமது குதிரைப்படையின் வேகமும் வீச்சும் எதிரிகளின் கனவிலும் நடுக்கத்தை உருவாக்கக்கூடியவை. உதிரனின் விற்படை தற்காத்துப் போரிடட்டும். நெற்றியில் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் நீ, படையைப் பின்வாங்கச்செய்து நான் இருக்கும் இந்த இடம் வரை வந்துவிடு. உன்னை எதிர்த்துப் போரிடும் கருங்கைவாணனின் அணி வேகமாக முன்னேறி வரும். அப்போது நீ இந்த இடம் விட்டு அகன்றுவிடு. நானும் ஈங்கையனும் இங்கு தலைமையேற்று நின்றுகொள்கிறோம். அவன் இங்கு வந்துசேரும் நேரம், இரவாதனின் குதிரைப்படை எதிரிகளின் முற்றுகையை உடைத்து மூஞ்சலில் போய் தாக்குதலைத் தொடக்கியிருக்கும். இங்கு வந்துசேரும் கருங்கைவாணன் என்னைப் பார்க்கும்போதே `பின்னணியில் மூஞ்சலைத் தாக்கப் பெருந்திட்டம் நடந்துகொண்டிருக்கிறது’ என நினைப்பான். நான் கொடுக்கும் ஓசையின் மூலம் அவன் அதை மேலும் உறுதிப்படுத்திக்கொள்வான். அவனது கவனம் முழுவதும் மூஞ்சலை நோக்கித் திரும்பும். அந்நிலையில் நம் படைகள் எல்லா திசைகளிலிருந்தும் கூவல் ஒலிகளை எழுப்பிக்கொண்டே இருக்க வேண்டும். அவனது குழப்பம் பலமடங்கு அதிகமாகும். அந்நிலையில் தொடர்ந்து தாக்கி முன்னேற படைகளை அனுமதிக்க மாட்டான். தற்காப்புப் போருக்கு மாறுவான் அல்லது சற்றே பின்னேறி நிற்பான். அவனுக்குள் ஏற்படும் குழப்பம் மூஞ்சலில் நடக்கும் தாக்குதலின் தன்மையை முழுமையாக அறிந்த பிறகுதான் நீங்கும். அந்தக் கால அளவு போதும், நாம் நிலைமையைச் சமாளிக்கவும் ஆயுதங்கள் வந்துசேரவும்’’ என்றான் தேக்கன்.

தேக்கன் சொல்வதைப் பணிந்துகேட்டான் முடியன்.

தேக்கன் சொல்லியதும் பாய்ந்து விரைந்தனர் இரவாதனும் உதிரனும்.

ற்களும் பாறைகளும் உருண்டன. சிறு மரங்களும் கொப்புகளும் உடைந்தன. கனைப்பின் பேரொலியால் காடே நடுங்குவதுபோல் இருந்தது. இரலிமேட்டில் இருந்தவர்கள் இடதுபக்கமாகத் திரும்பிப் பார்த்தனர். மூக்கு விடைத்துக் கனைத்தபடி பள்ளத்தாக்குக்குள் பாய்ந்து இறங்கின காட்டெருமைகள். இரும்பினும் கடுமைகொண்ட அவற்றின் நெற்றி யானைகளின் ஆழ்நினைவுகளுக்குள் பதிந்தவை. தலையில் திருகி நீண்டிருக்கும் பெருங்கொம்புகளை ஆட்டியபடி மந்தையை வழிநடத்தும் காட்டெருமை சீறிப்பாய்ந்தது. அணங்கன், அதனருகே ஒலிக்குறிப்புகளைக் கொடுத்தபடி ஓடிக்கொண்டிருந்தான்.

உள்காட்டிலிருந்து ஒற்றைக் காட்டெருமை வருவதுதான் முதலில் தெரிந்தது. பின்னால் அணங்கன் ஓடிக்கொண்டிருப்பதைக் கபிலர் மட்டும் கவனித்தார். சிறிது நேரத்தில் பெருமந்தை ஒன்று கீழ்நோக்கி இறங்கியது. காட்டையே சரித்து இறங்கும் அதன் வேகத்தைப் பார்த்தபடி இருந்த முதுவேலர், சட்டெனத் திரும்பிப் பள்ளத்தாக்கைப் பார்த்தார். அடர்த்தியாக அணிவகுத்து நின்றுகொண்டிருந்த யானைகள், முன்னும் பின்னுமாக மிரண்டு ஓடத்தொடங்கின.

யானைப்பாகர்களும் மேலே இருக்கும் போர்வீரர்களும் ஏதேதோ செய்தனர். ஆனால், கண நேரத்துக்குள் யானைகளைக் காட்டின் நினைவுகள் ஆக்கிரமிக்கத் தொடங்கின. இறுகிய பாறை போன்ற உடலும், இரும்பென முன் நெற்றியும், இணையில்லாத கொம்புகளும் கொண்ட காட்டெருமைகள் தாவிக்குதித்து வரும்போது, தளர்ந்த சதையும் தொங்கும் தோலும் கொண்ட யானைகள் தம் தந்தங்களை மட்டும் நம்பி நின்றுவிட முடியாது. கனைப்பொலியைக் காதில் கேட்ட கணத்திலேயே பிளிறல் தொடங்கியது. பிளிறல் ஓசையால் காடே கலங்கியது. நாலாபுறமும் பாகன்களும் வீரர்களும் தூக்கிவீசப்பட அணங்கன் பள்ளத்தாக்கின் பாதித்தொலைவில் போய்க்கொண்டிருந்தான்.

இரலிமேட்டிலிருந்து முதுவேலரும் கபிலரும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

எறும்புக்கூட்டத்துக்கு இடையே இழுத்துக் கோடுபோடுவதுபோல, எதிர்கொண்டு நிற்க எதுவும் இல்லாமல் பிளந்து உள்நுழைந்துகொண்டிருந்தன காட்டெருமைகள். குகைக்குள் இருக்கும் ஆயுதங்களைத் திரையர்கள் தூக்கிச் செல்லத் தொடங்கினர். பெருவண்டிகளில் ஏற்றும் ஆயுதங்களை ஒவ்வொரு வீரனும் தனித்தனியே சுமந்து சென்றான். காட்டெருமை மந்தை பாதித்தொலைவு உள்ளே போனபோது, காலம்பனும் அவன் தோழர்களும் மந்தைக்குப் பின்னே வேகமாக ஓடினர். இவர்கள் அங்கு எதற்கு ஓடுகின்றனர் என்று கபிலரும் முதுவேலரும் உற்றுப்பார்த்தனர்.

முன்னோடிய காலம்பன் காட்டெருமை ஒன்றின் பின்கால்நரம்பை நோக்கி ஓங்கி அடித்தான். அந்தக் காட்டெருமை பெருங்கனைப்பொலியோடு அவ்விடமே நின்று முன்னும் பின்னுமாகச் சுற்றியது. இதேபோல அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காட்டெருமைகளின் கால்நரம்பை அடித்து, பத்துக்கும் மேற்பட்டவற்றை வழியெங்கும் நிறுத்தினர். இருபக்கமும் தெறித்து ஓடிய யானைகளுள் எதுவும் இனி இந்தப் பக்கம் தலை திருப்பாது. திரையர்கள், ஆயுதங்களின் பெருஞ்சுமையைத் தூக்கிக்கொண்டு நின்று விளையாடும் காட்டெருமைகளுக்கு நடுவில் ஓடிக்கொண்டிருந்தனர்.

தேக்கனின் திட்டம் மிகச்சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது. இரவாதன், எதிரிகளைப் பிளந்து மூஞ்சலை அடைந்தான். கருங்கைவாணன் முன்னேறி வந்து தேக்கனை அடைந்தான். களமெங்கும் கூவல்குடியினரின் குறிப்போசை மேலெழுந்தது. பெருங்குழப்பத்தோடு கருங்கைவாணன் நிற்க, அவன் கண்களுக்குத் தெரியாத திசையில் நின்றுகொண்டிருந்த முடியன் தற்செயலாக நாகக்கரட்டுப் பக்கம் திரும்பினான். கரட்டின் உச்சிவிளிம்பில் காட்டெருமை ஒன்று குதித்து ஓடியது.

பார்த்த கணத்தில் முன்னேறித் தாக்கும் பேரோசையை வெளிப்படுத்தினான் முடியன். அதற்காகவே காத்திருந்த உதிரனின் உத்தரவு இமைப்பொழுது இடைவெளியின்றி வெளிவந்தது.

பாறைகளைத் துளைக்கும் பகழி அம்புகள் காற்றெங்கும் சீறத் தொடங்கின.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

வீரயுக நாயகன் வேள்பாரி - 99

நூறு விநாடி வீடியோ!

டுத்த வாரம் ‘வீரயுக நாயகன் வேள்பாரி'க்கு நூறாவது வாரம். கடந்த 50 ஆண்டுக்கால பத்திரிகை வரலாற்றில் ஒரு தொடர்கதை நூறு வாரங்கள் வெளியாவது ஒரு மகத்தான சாதனை. `வேள்பாரி'யை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் படித்துவருகின்றனர். இந்தத் தொடரின் மூலம் பழந்தமிழர்களின் வாழ்க்கை, பண்பாடு, போர்த்திறம், கலையுணர்வு, இயற்கை அறிவு ஆகியவற்றை அறிய முடிவதாக வாசகர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்கின்றனர். நூறாவது வாரத்தை நெருங்கும் 'வேள்பாரி' பற்றிய உங்கள் கருத்துகளை நூறு விநாடிகள் உள்ள வீடியோவாக, உங்கள் செல்போனிலேயே பதிவு செய்து 87544 44121 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பவும். சிறந்த வீடியோக்களுக்குப் பரிசுகள் உண்டு. உங்கள் வீடியோக்களை அனுப்புவதற்கான கடைசி தேதி : 10.09.18.