
பாக்கியம் சங்கர்
நல்லெண்ணெயை உள்ளங்கையில் ஊற்றி திருப்பாலின் உச்சந்தலையில் தேய்த்தாள் அலமேலு. கோவணம் மட்டும் கட்டியபடி திருப்பால் எண்ணெய் வழிய பாப்பம்மாளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தார். இட்லிக் குண்டானின் மூடியைத் திறந்து இட்லியைக் குத்திப் பதம் பார்த்துக்கொண்டாள் பாப்பம்மாள். புதுச்சட்டையில் பளிச்சென வந்து நின்றான் காந்தி. கையில் மிளகாய்ப் பட்டாசும், ஊதுபத்தியும் வைத்திருந்தான். “காந்தி... சாப்புட்டுப் போயி வெடிடா… கொஞ்ச நேரத்துல கறி வெந்துடும்” எண்ணெயின் ரெண்டு சொட்டுகளைத் திருப்பாலின் கட்டை விரல் இடுக்கில் விட்டபடி சொன்னாள் அலமேலு. “பட்டாசு வெடிச்சுட்டு வந்து சாப்புட்றன் சின்னம்மா” என்று பயல்களோடு வெளியேறினான் காந்தி. கனிந்து சிவந்து களிகூர்ந்து இருந்தன கறிகள். இந்த மாதிரியான விசேஷ நாள்களில்தான் இருவீடும் ஒருவீடாய்க் காட்சியளிக்கும்.

சக்களத்திச் சண்டைகள் எல்லாம் அலுத்துப்போய் இப்போது ஒருவிதப் புரிதலுக்குள் இருக்கிறார்கள். ஆனாலும், அவ்வப்போது எட்டிப்பார்க்கும் சண்டையிலிருந்து எப்படியெல்லாம் சமாளித்து சரிக்கட்டலாம் என்கிற உலகமகா வித்தையைத் திருப்பால் கற்றுத்தேர்ந்திருக்கிறார்.
திருப்பால் சப்பணம் கூட்டி உட்கார்ந்துகொண்டார். இட்லிகளை எடுத்துவைத்தாள் பாப்பா. கறிச்சட்டியிலிருந்து கரண்டியை விட்டு கறிகளை அள்ளியெடுத்துத் தட்டில் தொப்பென்று கொட்டினாள். குழம்புச்சாறை இட்லியின்மேல் சாரல்போலத் தூவினாள். வெள்ளையாக இருந்த இட்லி குழம்போடு சேர்ந்தபின் பொன்னிறமென மின்னி, நாவில் ஜீராவை வரவழைத்தது. இட்லியைப் பிட்டு கறியோடு வாயில் போட்டார் திருப்பால். நாவில் கரைந்து உள்ளே போனபோது திருப்பால் காதலோடு தனது இரு மனைவிகளையும் பார்த்தார். இந்த ஜென்மம் கடைத்தேறிவிட்டதாக எண்ணியவர் இட்லிகளைக் குழம்புகளோடு பிசைந்து முன்னேறினார். அப்போதுதான் திருப்பாலுக்கு பாஸ்கர் டாக்டரிடமிருந்து அழைப்பு வந்தது. “சொல்லுங்க சார்” என்றார். மறுமுனையில் டாக்டர் ஏதோ சொல்ல சொல்ல திருப்பாலின் கண்கள் விரிந்தது “அப்டியா… இன்னா சார் சொல்றீங்க… தோ வண்டன் சார்… சகாயம் டூட்டிலதான சார் இருக்கான்… சர்தான் சார்… வண்டன்” என்று அழைப்பைத் துண்டித்தார். இரு மனைவிகளும் திருப்பாலைப் பார்க்க… டாக்டர் சொன்ன விஷயத்தைச் சொன்னார். “அய்யோ பாவமே… அந்த நடிகையா தற்கொல பண்ணிக்கிச்சு… இடுப்ப வளச்சு நெளிச்சி இன்னாமா ஆடும்…” என்று ஆச்சர்ய பாவம் கொண்டாள் அலமேலு. ரெண்டாந்தாரமாக அலமேலுவைக் கட்டிகொண்டு பார்த்த முதல் படத்தில் இந்த நடிகையின் நடனம் திருப்பாலுக்கு நினைவிற்கு வந்தது.
நடிகையைப் போலவே பிணவறைக்குக் கொஞ்சம் கவர்ச்சியும் கூடியிருந்தது. சகாயம் அறுவை அறையிலிருந்து வெளிப்பட்டான். திருப்பாலைப் பார்த்ததும் உற்சாகமாக “சினிமால பாத்தா மாரியே இருக்குது மாமே… மேக்கப்பு போட்டுகினு தொங்கிகிதுபோல… பாத்தாக்கா பீஸு மாறியே தோணல… இன்னிக்கு ஒரு ஆயிரம்ரூபாயாவது துட்ட தேத்தில்லாம்… தீபாவளி போனஸ்தான் மாமே” என்று சகாயம் உற்சாகம் கொண்டான்.
திருப்பால் ஓய்வறைக்கு வந்து டவுசரை மாட்டிக் கொண்டார். காலையில் பட்டுவேட்டி கட்டியது ஏனோ நினைவிற்கு வந்துபோனது. உள்ளே யாரோ வருவது போன்ற அரவம் கேட்க ஓய்வறையிலிருந்து எட்டிப் பார்த்தார் திருப்பால். மருத்துவமனையின் உயர் மருத்துவர்கள் அறுவை அறைக்கு வந்து கொண்டிருந்தார்கள். கூடவே பாஸ்கர் டாக்டரும் பின்னால் வந்தார். திருப்பால் முதல்முறையாக இவ்வளவு பெரிய மருத்துவர்கள் பிணவறைக்கு வருவதைப் பார்த்து ஆச்சர்யமடைந்தார். ஏதோ நிலவில் கால்வைப்பதைப்போல அத்தனை பாதுகாப்புக் கவசங்களோடு இருவரும் விண்வெளி வீரர்கள் தோரணையில் வந்துகொண்டிருந்தார்கள். இருவரும் அணிந்திருந்த விலையுயர்ந்த கையுறை திருப்பாலுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் பிணவறையின் எந்தக் கிருமிகளும் இவர்களை ஒன்றும் செய்துவிட முடியாது என எண்ணிக் கொண்டார்.

சிறிது நேரத்தில் பக்கத்து அறையில் வாந்தியெடுக்கும் சப்தம் கேட்டது. திருப்பால் போய்ப் பார்த்தபோது அறுவை அறைவாசலிலேயே உயர் மருத்துவர் வாந்தியெடுத்துக் கொண்டிருந்தார். கவசத்தை மீறி வாந்தியெடுத்தது திருப்பாலுக்கு ஆச்சர்யமாகத்தானிருந்தது. பாஸ்கர் டாக்டர் தண்ணீரைக் கொடுத்தார். அவரால் குடிக்க முடியவில்லை. ஓய்வறைக்குச் சென்று ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து வந்து உயர் மருத்துவரிடம் கொடுத்தார் திருப்பால். அதை அவர் வாங்கவில்லை. முதல்முறை நிணவாடையை சுவாசிக்கும் ஒருவருக்கு இப்படி நிகழும் என்பது திருப்பாலுக்குத் தெரியும். வாந்தி வராவிட்டாலும் திரும்பத் திரும்ப வருவது போன்ற பாவனையில் உவ்வே… உவ்வே என்று மருத்துவர் சோர்ந்தார். அப்போதுதான் திருப்பால் அறுவை அறையினுள்ளே எதேச்சையாகப் பார்த்தார். இவரோடு வந்த மற்றுமொரு உயர் மருத்துவர் நடிகையின் வெற்றுடலைப் பல்வேறு கோணங்களில் தீவிரமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.
அவரது பார்வை பரிசோதனை செய்வதாகத் திருப்பாலுக்குப் புலப்படவில்லை. நடிகையின் அங்கங்களில் ஏதாவது கீறல்களோ… அடிபட்ட காயங்களோ இருக்கிறதாவெனப் பார்ப்பதாக மார்பைப் பிடித்து அழுத்தினார். பிணந்தின்னும் கழுகைப்போலவே அம்மருத்துவரின் கண்கள் நடிகையின் சதைப்பற்றுகளைத் தின்றுகொண்டிருந்தது. குத்துக் காலிட்டு ‘உவ்வே’ பண்ணிக் கொண்டிருந்த மருத்துவரை முதுகில் தடவியபடியே பாஸ்கர் டாக்டர், திருப்பால் பார்ப்பதைக் கவனித்துவிட்டார்.
நடிகையின் உடலைக் கூறாய்வு செய்துகொண்டிருந்த திருப்பாலை பாஸ்கர் டாக்டர் பார்த்தார். நடிகையின் விஸ்ராவை ரசாயன பாட்டிலில் போட்டுப் பெயரெழுதினார். “திருப்பால், டாக்டர்ஸ் வந்து போனதை யார்கிட்டயும் சொல்லிக்க வேண்டாம்… அப்புறம் இனிமே மாஸ்க்கு… கிளவுஸ்… பிளீச்சிங் பவுடர்லாம் எக்ஸ்ட்ரா அலாட் பண்றதா சீஃப் சொல்லியிருக்காரு…” திருப்பால் டாக்டரைப் பார்த்தார். அந்தப் பார்வை டாக்டருக்குப் புரிந்தது. “என்ன செய்றது திருப்பால்… பாக்கணும்னு சொல்றாரு… ஒண்ணுமே புரியல… ஒருவேள நமக்குத்தான் நிர்வாணம் பழகிடுச்சுப் போல…” என்று ரிப்போர்ட் நோட்டில் குறிப்புகளை எழுதிக்கொண்டார்.
“இவங்களோட ஈத்தர வேலைக்கு நமக்குக் கொடுக்குற லஞ்சம் எக்ஸ்ட்ரா பிளீச்சிங் பவுட்ரு… க்ளவுசு… ம்… டேய் சகாயம், கால இழுத்துக் கட்றா” என்றார் திருப்பால். சகாயம் நடிகையின் காலை இழுத்து கட்டைவிரலோடு சேர்த்துக் கட்டினான். “ஏன் மாமே டென்ஷனாவுற… இவுங்க உள்ள வந்ததாலதான எக்ஸ்ட்ராவா எல்லாம் கிடைக்குது… எத்தன நாளு கை கழுவுறதுக்குக்கூட சோப்பு இல்லாம இருந்துருக்குறோம்… அழுவுன பீசு…. நாள்பட்ட பீசு… அநாத பீசுன்னு எவ்ளோ இன்பெக்சன் எடுத்தாச்சு…. நம்ம வேலைல எவன் நாப்பது அம்பது வயசுக்கு மேல உயிரோட இருந்தான்… இன்பெக்சன் எடுத்து எடுத்து… இன்னா நோயின்னுகூட தெரியாம சாவுறான்… இந்தம்மாக்குதான் நன்றி சொல்லணும்… உள்ள சேந்தாப்புல அஞ்சு நிமிசம்கூட இருக்க முடியலன்னு… இப்ப தெரிச்சுருப்பானுங்கல்ல நம்ம அதிகாரிங்க…” சகாயம் கல் உப்பை வயிற்றுப்பகுதியில் கொட்டினான்.
டாக்டர் ஈரக்குலையிலிருந்து இதயம் வரை பார்த்துப் பார்த்து ரிப்போர்ட் எழுதுவதில் கவனமாக இருந்தார். இதயத்திலிருந்து ஒரு சிறு துண்டை வெட்டி விஸ்ரா பாட்டிலில் போட்டார் டாக்டர். இதயத்தைப் பார்த்த சகாயம் “மாமே, இந்த அம்மாவோட இதயத்த மொததடவையா பாத்தது நம்பதான்ல…’’ என்று நடிகையின் இதயத்தைக் கையிலேந்தி, திரும்பவும் உள்ளே வைத்தான் சகாயம்.

குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்த டாக்டர் “சகாயம், வெளிநாட்டுல எல்லாம்… மார்ச்சுவரி ஃபைவ்ஸ்டார் ஓட்டல் மாதிரி நீட்டா சுத்தமா இருக்கு… எல்லா சேஃப்டியும் ப்ராப்பரா இருக்கும்… இங்க மட்டுந்தான் அடிப்படை வசதிக்கே போராட வேண்டி இருக்கே…” என்றார். வழிந்துகொண்டிருந்த ரத்தத்தைப் பஞ்சுகளால் துடைத்துக் கொண்டே “சார் ஃபைவ் ஸ்டார் ஓட்டலு எப்படி சார் இருக்கும்” என்று சகாயம் கேட்டான். பாஸ்கர் டாக்டர் என்ன சொல்வதெனத் தெரியாமல் குறிப்புகளை எழுதுவதாய் பாவனை கொண்டார்.
திருப்பால் பிளாஸ்டிக் கவரில் நடிகையைக் கிடத்தினார். “அந்த மாதிரி எல்லா சேப்டியும் குத்து… இன்பெக்சனும் இல்லாம இருந்தா… என் புள்ள காந்திய ராஜா மாறி வேலைக்கு இட்டுக்கலாம்… காந்தியும் பொணத்த அறுக்குறவன்தான்னு வெளிய கவுறதயா சொல்லிக்கலாம். இங்க இன்னானா ஒரு சோப்புக்கே வக்கில்ல…” டூடொன்டி பிளேடால் ஈரலை அறுக்கும் போது கையில் பட்டு, பாளமாக அறுத்து விட்டது திருப்பாலுக்கு.
முழுவதும் பொட்டலமாக மாறிப் போனார் நடிகை. “டேய் சகாயம் பவுட்ரு போட்டு உட்று” என்று அறுபட்ட விரலுக்குக் களிம்பைத் தடவி பிளாஸ்டரி சுற்றிக் கொண்டார். சகாயம் பவுடரைக் கையில் கொட்டி முகத்தில் போட்டுவிட்டான். “மாமே, நமக்குப் புடிச்ச நடிகைக்கு நாமே மேக்கப் போட்றது கொடுப்பினதான்ல… ஹிஸ்ட்ரில எழுதிக்கோ, இப்பேர்ப்பட்ட நடிகைக்கு கடைசி மேக்கப்மேன் இந்த சகாயந்தான்னு” என்று உதடுகளில் களிம்புகளைத் தடவினான். பாஸ்கர் டாக்டர் சிரித்தார்.
ட்ரான்ஸிஸ்டரை ஒலிக்கச்செய்தார் திருப்பால். சுடச்சுட முடித்து அனுப்பிய நடிகையின் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. திருப்பால் தனக்குத்தானே பாடலை முணுமுணுத்துக்கொண்டார். பனி படர்ந்த மலையுச்சியில் நடிகை ஆடுவது நினைவிற்கு வந்துபோனது. “டேய் ஒரு லோட்டா குட்றா” என்றார். சகாயம் இருவருக்குமாக ஊற்றினான். சகாயம் அணிந்திருந்த மாதா சுருவ மணிமாலை தொங்கியபடி இங்குமங்கும் ஆடிக்கொண்டிருந்தது.

சுத்தியலால் ஒரு தட்டு தட்டி தாவாங் கட்டையைச் சரி செய்தார் திருப்பால். முகம் அஷ்டகோணலாக வந்தாலும் ஒட்டித் தட்டிச் சரி செய்துவிடுவதில் வல்லவர் திருப்பால். “மாமே நீ கெளம்பு… நா பாத்துக்கறன்…” சகாயம் தொண்டைக் குழியில் டூடொன்டி பிளேடால் ஒரு கீறு கீறினான். வெட்டிரும்பைக் கொண்டு ஒரு எலும்பை உடைத்தெடுத்தான். திருப்பால் கை கழுவிக்கொண்டார். “சகாயம், தவடய நல்லா மண்டயோட சேத்துக்கட்டு… அப்பனோட மொகத்த கோரமா புள்ளைங்க பாக்கக்கூடாது… கடசியா பாக்குற மொகந்தான் வாழ்நாள் பூரா நெனப்புல இருக்கும்…”
கொன்றை மரம் பட்டுப்போயிருந்தது. திருப்பாலைப் போலவே சப்பணமிட்டு உட்கார்ந்திருந்தார் சகாயம். சரக்கை முடித்துவைத்தார். “இன்னா நோயின்னே தெர்ல… ரத்தமா கக்குச்சு… நோவுல பிளேடு கூட புடிக்க முடில… ரொம்ப வலிபட்டு செத்துப்போச்சு சார்… எனக்குக் கத்திய புடிக்கச் சொல்லிக் குடுத்ததே மாமூதான் சார்… என்னோட குரு…” திருப்பால் தீர்க்கதரிசிதான். மரியாதை எப்போதும் சாகாதுதான். சகாயம் திருப்பாலின் நினைவிலிருந்து மீண்டார். இப்போதும் நான் எனது தேவைக்காகவே இத்தலத்திற்கு வர வேண்டியிருந்தது. இப்படியாக வரும்போதுதான் திருப்பால் என்கிற மனிதரின் ஞாபகமும் வருகிறது.
சகாயம் அடுத்த போத்தலைத் தயார் செய்தார். என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார். அப்போதுதான் அவன் வந்தான். ஒல்லிபாச்சானாக இருந்தான். போதையின் ரேகைகள் அவனது முகத்தில் ஓடிக்கொண்டிருந்தன. ரத்தத் திட்டுகளால் சட்டை மினுங்கிக்கொண்டிருந்தது. “சார், செத்துப்போனது உங்க ரிலேஷனா…?” ஆமாம் என்று தலையசைத்தேன். “காடாத்துணி அஞ்சு மீட்ரு... பிளாஸ்டிக் கவரு... கல்லு உப்பு ரெண்டு படி... ஒரு லைப்பாய் சோப்பு, பாண்ட்சு பவுட்ரு வாங்கியாந்துடு சார்... அடுத்த பீசு உங்களுதுதான்…” என்றான். நானும் சரி என்பதுபோல் தலையாட்டினேன். இளைஞன் சகாயத்தைப் பார்த்து “மாமா எனுக்கும் ஒரு லோட்டா ஊத்து…” என்றான். சகாயம் ஊற்றிக்கொண்டே “சார் இவன் யாருனு தெர்ல?” அவனை உற்று கவனித்தேன். “திருப்பாலோட புள்ள சார், காந்தி… டேய் காந்தி, சாரு உங்க நைனாவோட தோஸ்து…” என்று அறிமுகப்படுத்தினார். நான் காந்தியைப் பார்த்தேன். காந்தி ராவாக சரக்கை உறிஞ்சினான். “அப்டியா மாமா… வணக்கம் சார்… பொருள வாங்கியாந்துரு சார்… என்று குவளையைக் கீழே வைத்து ஊறுகாயை நக்கிக்கொண்டான். “சீக்கிரம் வா மாமா… தலைக்கு மேல பீசுங்க இருக்குது… சூஸைட் கேசு ஒண்ணு… பரிட்சைல மார்க் எடுக்கலனு தொங்கிச்சு… டீவி நியூஸ் வேற… ரெஸ்ட்ரூம் சாவிய குடு…” சகாயம் டவுசர் பாக்கெட்டில் கையை விட்டு எடுத்துக்கொடுத்தார்.
சாவியை வாங்கிய காந்தி சிறு போதையில் “இனிமே நாமல்லாம் டாக்டராவ முடியாது… பேசன்ட்டா மட்டுந்தான் ஆவமுடியும்…” என்றான். போதையின் தள்ளாட்டத்தில் சகாயம் காந்தியின் கைபிடித்துப் பிணவறைக்குள் நுழைந்தார். நான் காந்தியையே பார்த்துக்கொண்டிருந்தேன். திருப்பால் சொன்னது நினைவுக்கு வந்தது “குலத்தொழில்னு நம்மளே செய்யணும்னு சட்டம் இருக்கா இன்னா… கொஞ்ச காலத்துக்கு வேற யாராவது பொணத்த அறுக்கட்டும்… என் புள்ளையாவது வெளிச்சமா ஒரு வேலய செய்யட்டும்…” திருப்பாலைப் போலவே விந்தி விந்தி காந்தியும் உள்ளே நுழைந்தான். பிணவறையைப் பொறுத்தவரை திருப்பால்கள் எப்போதும் சாவதேயில்லை.
- மனிதர்கள் வருவார்கள்...
பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்