
சீரியலில் நளினியைப் பார்த்து மாமா ஷாக்கானதுபோலத்தான் ஒவ்வொரு முறையும் திடுக்கிடவைக்கிறது திடீரென எதிர் வந்து நிற்கும் புத்தாண்டுகள்.
சமீபத்தில் குவைத்தில் இருந்து வந்துஇருந்தார் மாமா. 10 வருடங்களுக்கு முன்பு போனவர் இப்போதுதான் வருகிறார். இராக் எல்லையில், பாலைவனத்தில் வேலை. இரவெல்லாம் ஊடுருவும் பனி, பகலெல்லாம் கொளுத்தும் வெயில் எனக் கொடூரமான தட்டவெப்பத்தில் வெந்திருக்கின்றன அவரது 10 வருடங்கள்.

''வெள்ளிக் கிழமை மட்டும் லீவு மாப்ள... அன்னிக்கு சிட்டிக்குள்ள வந்தேன்னா, நம்ம ஊர் பயலுகளப் பார்ப் பேன். அந்த ஒரு நாளைக்காகத்தான் ஒவ் வொரு நாளும் உசுரு தங்கியிருக்கும் மாப்ள'' என்றார் சிரித்தபடி. முற்றாக முடி கொட்டி, கறுத்து ஆளே உருமாறிப் போய் இருந்தார். ''வேணாம்னு சொன்னாலும் கேக்காம ஒன் ஆத்தாதான் எனக்குப் பொண்ணு பாத்துக் கிட்டு அலையுது. குச்சிப்பாளையத்துல எதோ பொண்ணு இருக்காம். ஒங்கம்மா வகையறால சொந்தம்தான்னு சொல்லுச்சு. போய் பாக்கலைன்னா விடாது போலிருக்கு'' எனச் சொன்னபோதுதான், அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகாதது நினைவுக்கு வந்தது. அவரது செட் மாமாக்களின் பிள்ளைகள் கல்லூரிக்கும் வேலைக்கும் போய்க்கொண்டு இருக்கிறார்கள். விருப்பம் இல்லாததுபோல் பேசினாலும் அந்த பெண்ணைப் பற்றிப் பேசும்போது ஒரு கணம் அவருடைய முகத்தில் சந்தோஷமும் வெட்கமும்
நெளிந்து மறைந்தது... பாலை வனத்தைக் கடக்கும் ஒரு மழை மின்னல் போல. அவரிடம் பேசிக்கொண்டே டி.வி. சேனல்களை மாற்றிக்கொண்டு இருந்தேன். அப்போது ஒரு சேனலில், ஏதோ சீரியலில் ஆவேசமாக வசனம் பேசிக்கொண்டு இருந்தார் நளினி. நெடுந்தொடர்களின் பயங்கரவாத மாமியாராக வலம்வரும் நளினியைப் பார்த்த சில நொடிகளில் துள்ளிக் குதித்து எழுந்தார் மாமா.
''டேய் மாப்ள... நம்ம நளினியா இது? 'துள்ளி எழுந்தது பாட்டு’ பாடின நளினியா இது?'' எனப் பதற்றப்பட்டவர், ''நானெல்லாம் சீக்கிரமா டிக்கெட் வாங்கிருவேன் போல இருக்கே மாப்ள...'' என்றார் சீரியஸாக. ''அட, என்ன மாமா... அம்பிகா, ராதாவை எல்லாம் இன்னும் பார்க்கலையா நீயி...'' என்றதும், ''சரி விடு... ஒரு டீயைப் போடுவோம் வா மாப்ள!'' என யதேச்சையாக எழுந்து கண்ணாடியில் முகம் பார்த்தார் மாமா. சில நொடிகள்தான்... அபிவிருத்தீஸ்வரம் வடக்குத் தெருவில் இருந்து குவைத் பாலைவனம் வரைக்குமான வானத்தின் உடைந்த ஒரு துண்டினைப் போல மாறி யது அந்தக் கண்ணாடி. கனவுக் கன்னி களை உருக்குலைத்து, முடி கொட்டிய மாமாக்களின் பிம்பங்கள் காட்டும்அந்தக் கண்ணாடியைப் பார்க்க எனக்குப் பயமாக இருக்கிறது!
சீரியலில் நளினியைப் பார்த்து மாமா ஷாக்கானதுபோலத்தான் ஒவ்வொரு முறையும் திடுக்கிடவைக்கிறது திடீரென எதிர் வந்து நிற்கும் புத்தாண்டுகள். வருடம் கடந்து ஏழெட்டு மாதங்கள் ஆன பிறகும், எங்காவது தேதி எழுதும்போது மறதியாக பழைய வருடத்தையே எழுதுபவர்களில் நானும் ஒருவன். ஒவ்வொரு புத்தாண்டிலும் கண்ணாடிகள் நம்மைப் பார்த்து நகைக்கின்றன. பேரண்டத்தின் குடுவையில், காலத்தின் புழுதி இன்னும் கொஞ்சம் சேர்கிறது. இயற்கையை இன்னும் கொஞ்சம் தின்கிறோம். புதிய உயிர்களின் அழுகையாலும் சிரிப்பாலும் பிரபஞ்சம் துளிர்க்கிறது. ஏதேன் தோட்டத்துக்கும் ரிலையன்ஸ் ஃப்ரெஷ்ஷ§க்குமாகத் தொடரும் ஒரு முடிச்சு வியக்கவைக்கிறது. கண்ணீர், புன்னகை, பூகம்பம், யுத்தம், சமாதானம் எனப் புது வருடத்தின் டைரியைக் கடவுள் எழுதிவைத்திருக்கக்கூடும். அந்த டைரியில், புத்தாண்டு இரவில் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு வண்டிகளில் பறக்கும் அன்பர்களுக்கான விபத்துகள் சிவப்பு மையால் அடிக் கோடு இட்டிருக்கின் றன!
சென்னைக்கு வந்த புதிதில் ஒரு புத்தாண்டு. வேலை இல்லாமல், கையில் காசும் இல்லா மல் திரிந்த நேரம் அது. 'தினசரி சோத்துக்கே சிங்கியடிக்கும்போது, நியூ இயராவது மண்ணாவது’ - என்கிற மனநிலையில் இருக்கும்போது, அசோக் அண்ணன் வந்தார். ஒரு தம்மைப் போட்டுக்கொண்டே, ''அடுத்த வாரம் நியூ இயரை நாம ஜெகஜோதியா செலிபரேட் பண் றோம். எல்லாருக்கும் காஸ்ட்லி சரக்கு, பஃபே சாப்பாடு... அண்ணன் ரெடி பண்ணிட்டேன்'' என்றார். ''எப்பிடிண்ணே?'' என்றால் ''இனிமே எல்லாம் அப்படித்தான்!'' எனச் சிரித்தார். அப்போது அசோக் அண்ணனும் சரவணன் அண்ணனும் சேர்ந்து 'பாதைவாசிகள்’ என்ற நாடகக் குழு ஆரம்பித்து இருந்தார்கள். புத்தாண்டு இரவில், காஸ்மோபாலிடன் கிளப்பில் நாடகம் போடுவதற்கு, இசைஅமைப் பாளர் ஜேம்ஸ் வசந்தன் மூலமாகவாய்ப்பு வாங்கியிருந்தார் அசோக் அண்ணன். ''டேய்... சென்னைலயே பெரிய கிளப்பு. பணக்காரய்ங்க கூடுற இடம். யாரும் எதுவும் சொதப்பிடாதீங்கடா...'' என்ற அண்ணன், ''நாம ஒரு மைம் ப்ளே பண்ணப் போறோம்'' என்றார்!
அண்ணன்கள் தலைமையில் நாங்கள் ஏழெட்டுப் பேர் சேர, கில் நகர் பார்க்கில் ரிகர்சல் ஆரம்பித்தது. மைம் என்கிற மௌன நாடக வடிவத்தில் கரகரவென எதையோ நாடகமாக்கிக் கொண்டுவந்தார் சரவணன் அண்ணன். 'சூரியன் எழுகிறது’ என்றால் நாலைந்து பேர் கையாட்டிக்கொண்டு சூரியன் மாதிரி எழ வேண்டும். 'மரம் விரிகிறது’ என்றால் கொஞ்சம் பேர் கைகளை வளைத்து நிற்க வேண்டும். பயிற்சியில் எவனாவது சொதப்பினால், ''டேய்... ஃபாரின் சரக்கு... பஃபே சாப்பாடு'' என்பார் அசோக். நிஜமாகவே எல்லோருக்கும் அதுதான் டார்கெட். ''மாப்ளே... டிராமா முடிஞ்சதும் ஒரு ஃபுல்ல எடுத்துக்கிட்டு அந்தக் கூட்டத்துல ஐக்கியமாயிர்றோம். அங்க நெறைய சேட்டுப் பொண்ணுங்கள்லாம் வருமாம்ல!'' என்றான் பஷீர்.
நியூ இயர் இரவில், காஸ்மோபாலிடன் கிளப்பில் கூடினோம். கறுப்பு உடை, முகம் முழுக்க வெள்ளை பெயின்ட், லிப்ஸ்டிக் என எல்லோருக்கும் கொடுமை யான மேக்கப். பெர்ஃப்யூம் மணக்க இங்கிலீஷ§ம் இந்தியுமாக அங்கே கூடிக்கிடந்தவர்களைப் பார்க்கவே மிரட்சியாக இருந்தது. அது வரை பாக்காத கார்கள். செவசெவவெனக் குடும்பங்கள் கூடி ஒயின், பீர் குடித்தார்கள். ஒரு பக்கம் விதவிதமான சரக்கும் சாப்பாடுமாக இருக்க, வயிற்றைப் பிராண்டியது. ''டிராமா முடிஞ்சதும் டோக் கன் தருவானுங்க... அதுக்கப்புறம் பார்த்துக்கலாம்டா!'' என்றார் அண்ணன்.

பாட்டும் டான்ஸுமாக மொத்தமாக அருள் ஏறிக்கொண்டு இருந்தது ஏரியாவுக்கு. 11 மணிக்கு மேல் மைக்கில் எங்கள் குழுவை அழைத் தார்கள். மொத்தக் கூட்டமும் அரை போதையில் இருந்த நேரம்... நாங்கள் மேடையேறி 'மைம்’ போட ஆரம்பித்தோம். 'மௌன நாடகம்’ ஆரம்பித்த ஐந்தாவது நிமிடமே மொத்தக் கூட்டமும் திட்டிக் குமிக்க ஆரம்பித்தது. ஒரு கோட் சூட் பெரியப்பா இங்கிலீஷில் கடுமையான கெட்ட வார்த்தைகளால் திட்டி, எங்களை இறங்கச் சொன்னார். நாடகம் முடிவதற்குள் கிட்டத்தட்ட கலவரச் சூழல் உருவானது. கீழே இறங்கினால், யாரும் கண்டுகொள்ளவே இல்லை. வியர்வையில் பெயின்ட் வழிய, ஏக்கமாக சரக்கையும் சாப்பாட்டையும் பார்த்தோம். டோக்கன் வாங்கப் போன அசோக் அண்ணன் பதற்றமாக வந்தார். ''டேய்... டோக்கன் இல்லைனு அனுப்பிட்டானுங்கடா'' என்றதும் திகீரென்றது. எவன் கையிலும் காசு இல்லை. உயர் ரக மதுவும் உணவும் இறைந்துகிடந்த அந்த இடத்தில் இருந்து பசி அரிக்கும் வயிற்றுடன் வெளி யேறினோம். எவனோ, இருந்த காசில் திறந்து இருந்த மெடிக்கல் ஷாப்பில் இருந்து ஒரு பாக்கெட் பிரெட் வாங்கி வந்தான். குதூகலமும் சத்தமுமாக நகரம் நிறைந்து கிடந்தபோது, பசித்துப் படுத்த அந்தப் புத்தாண்டு... கோடானுகோடி ஏழைகளின் புத்தாண்டு!
இன்னொரு புத்தாண்டில்தான் ஏற்காட் டில் கோபியைச் சந்தித்தேன். அவர் ஒரு திருநங்கை. அற்புதமான தோழி. புத்தாண்டு இரவில் சேலத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கக் கலை இரவில்கலந்து கொண்டுவிட்டு, ஏற்காடு சென்றபோதுதான் தோழர்களுடன் கோபி அறிமுகமானாள். ஏற்காட்டில் இரவெல்லாம் கண் விழித்துத் தோழர்கள் பேசிக்கொண்டு இருந்தோம். 'தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ’ பாடலை கோபி பாடியபோது அந்த வருடம் அழகாகத் தொடங்கியது.
அவளிடம் பேசப் பேச அதிர்ந்தேன். ''எல்லாருக்கும் நியூ இயர்னா ஏதேதோ ஞாபகத்துக்கு வரும்... எனக்கு என்னை ஏலம்விட்டதுதான் ஞாபகம் வரும்!'' எனச் சிரித்தாள். மதுரையில் பிறந்த கோபி, கொஞ்சம் கொஞ்சமாகப் பாலினம் மாறியபோது, வீட்டில் வெறுத்து விரட்டப்பட்டு எங்கெங்கோ அலைந்திருக்கிறாள். வாழ்க்கை அடித்துத் துரத்த, மும்பைக்குப் போய் பார் டான்ஸராக இருந்திருக்கிறாள். 12 வருடங்களுக்கு முன்பு, தனது 18 வயதில், ஒரு புத்தாண்டு இரவில் தான் ஏலம் விடப்பட்ட கதையைச் சொன்னபோது அவள் முகத்தில் சின்ன சோகம்கூட இல்லை.

''நான் அங்ஙன டான்ஸரா கான்ட்ராக்ட்லதான் வேல பாத்தேன். அந்த மொதலாளி... மொன்ன நாயி. என்ட்ட எதுவும் சொல்லவே இல்ல. நியூ இயர் அன்னிக்கு நைட், ஸ்பெஷல் ஷோனு எல்லா டான்ஸர்க்கும் டிரெஸ்ஸைக் கொறைக் கச் சொன்னானுங்க. பாதி ராத்திரில பார்த்தா திடுதிப்புனு எங்கள செலெக்ட் பண்ணி ஏலம்விட ஆரம்பிச்சிட்டானுங்க. விளையாட்டுக்குத்தான்னு நான்கூட சும்மா இருந்தேன். சீரியஸாவே ரேட்டு பேசி அந்த மொதலாளி என்னை வித்துட்டான். ஒரு மார்வாடி என்னை வாங்கிட்டுப் போனான். ஒரு திருநங்கைகூட இருந்தா தொழில் செழிக்கும்னு எவனோ சொன்னதுக்காக. என்னைக் கொண்டுபோய் ஒரு வீட்ல வெச்சுக்கிட்டான். அவன்ட்ட இருந்து தப்பிச்சு வர்றதுக் குள்ள... யப்பே... அது நரகம்பா... இப்பிடி ஒரு நியூ இயரைப் பார்ப்பேன்னெல்லாம் நெனச்சே பாக்கல...'' என கோபி சொன்னபோது, அந்தப் புத்தாண்டு ராத்திரி ஏதேதோ செய்தது!
இப்போது கோபி ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். நிறையக் கவிதைகள் எழுதுகிறாள். ஊர் ஊராகப் போய் குழந்தைக் கல்விபற்றி விழிப்பு உணர்வுப் பிரசாரம் செய்கிறாள். புத்தாண்டு இரவில் எங்கு இருந்தாலும் அவளுடைய பெருஞ்சிரிப்பு பூத்த வாழ்த்து என்னை வந்தடையும்!
எத்தனையோ புத்தாண்டுகளில் குடித்துவிட்டு இரவுஎல்லாம் திரிந்திருக்கிறோம். மெரினாவில் கூடிக் கும்மியடித்திருக்கிறோம். போதையில் ரோட்டில் எதிர்ப்படுபவர்களை எல்லாம் கட்டிப்பிடித்துக் களே பரம் பண்ணியிருக்கிறோம். கிண்டி ஒயின் ஷாப்பில் யார், ஏன், எதற்கு என்றே தெரியாமல் ஒரு கும்பல், நண்பன் போலீஸ் சுரேஷ் தலையில் கத்தி சொருக, நிலைகுலைந்து ஆஸ்பத்திரியில் கிடந்திருக்கிறது ஓர் இரவு. ரெசிடென்ஸி டவர்ஸில், வி.ஜி.பி. கோல்டன் பீச்சில் பணக்கார நண்பர்களோடு மினுங்கி இருக்கின்றன சில இரவுகள். பெரும்பாலானவர்கள் இப்படித்தான் திரிகி றார்கள். மது விடுதிகளில் கூடிக் கொண்டாடு கிறார்கள்.
கோயில்களிலும் தேவாலயங்களிலும் கூட்டம் கூட்டமாகப் பிரார்த்திக்கிறார்கள். சபதங்கள் எடுத்துக்கொள்கிறார்கள். ஏராளமான கனவுகளை விதைக்கிறார்கள். தொலைக்காட்சியில் யார் யாரோ வாழ்த்து சொல்கிறார்கள். பெரு நிறுவனங்கள் கொட் டும் கோடிகளின் வியாபாரத்தில், சினிமா, அரசியல், வி.ஐ.பி-க்களின் பார்ட்டிகளில் பளபளக்கிறது அந்த இரவு. எங்கெங்கும் பட்டாசு வெடித்து, பைக்கில் பறந்து, பலூன்கள் கட்டி... நாளையே மானுடம் மாறப்போவதாக இருக்கிறது இந்த இரவு!
ஆனால், சைதாப்பேட்டை ஏ.ஜி.எஸ். சர்ச்சுக்கு, ஒவ்வொரு புத்தாண்டு இரவிலும் ஏராளமான பிரார்த்தனைகளுடன் பெருங்களத்தூரில் இருந்து வரும் ஒரு ஏழைத் தம்பதிக்கு பிரியாணிப் பொட்டலம், ஒரு சோப்புக்கட்டி, பவுடர், எண்ணெய் டின் தவறாமல் கிடைத்துவிடுகிறது. ஸ்டான்லி மருத்துவமனையில் உடல் சிதைந்துகிடக்கும் ஓர் ஏழைத் தகப்பனுக்கு ஆசீர்வாதமும் ஒரு புதுச் சட்டையும் கிடைத்துவிடுகிறது. விடிய லில் தெருமுனைக் குப்பைத் தொட்டியில் காலி மதுபாட்டில்கள் பொறுக்க வரும் தலை கலைந்த சிறுமிதான் தொடங்கிவைப்பாளா இந்தப் புத்தாண்டையும்?
(போட்டு வாங்குவோம்...)
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!
Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan