மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

மதுரை - தஞ்சை எது சிறப்பு?

##~##

விஜயலட்சுமி, சென்னை-74.

 ஒரு செய்தி எப்போது சூடாகப் பரிமாறப்படுகிறது?

முதலில் வருகிற செய்திதான் சூடானது. நிகழ்ச்சி நடந்த நேரம் சம்பந்தப்பட்டது அல்ல இது. யாருக்குமே தெரியாமல், ஒரு மாதத்துக்கு முன்பு நடந்த ஒன்றைப் பற்றிய செய்தியை முதன்முதலாகக் கண்டுபிடித்து ஒரு பத்திரிகை இப்போது வெளியிட்டாலும் அது சூடான செய்தியே! நிஜமாகவே சூடான செய்தி வேண்டும் என்றால், அச்சு இயந்திரத்தில் இருந்து பத்திரிகை வெளியே வந்து விழுந்தவுடன் அதைத் தொட்டுப்பாருங்கள். சூடாக இருக்கும்!

ஆ.கிருஷ்ணன், சென்னை-91.

அதிகம் படித்த படிப்பாளிகளால் நாட்டுக்கு நன்மை கிடைப்பதாகத் தெரியவில்லை. படிப்பாளி வேறு... அறிவாளி வேறு. எனவே, நல்லவர்களான அறிவாளிகளையே மக்கள் தேர்ந்தெடுத்து சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் அனுப்பி னால் நல்லது. தங்கள் எண்ணம் என்ன?

ஹாய் மதன் கேள்வி - பதில்

படிப்புக்கும் நேர்மைக்கும் சம்பந்தம் இல்லை! மெத்தப் படித்தவர்கள் மேலும் கெட்டிக்காரத்தனமாகக் கொள்ளை அடிப் பார்கள். விதவிதமாக ஊழல் செய்வது எப்படி என்று திட்டம் போடுபவர்கள் அறிவாளிகளாகத்தான் இருக்க முடியும். எனவே, அவர்களும் தேற மாட்டார்கள். நல்லவர்கள் பதவியில் அமர்ந்த பிறகு கெட்டுப்போகலாம். ஆகவேதான் வலிமை யான லோக்பால் வேண்டும் என்று அண்ணா ஹஜாரேவின் தலைமையில் மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார் கள். வேறு வழி இல்லை!

கல்லை. போஸ்டல் ராஜ், புதுச்சேரி.

இயேசுவின் அற்புதங்களை நேரில் கண்டவன் யூதாஸ். இயேசுவைக் காட்டிக் கொடுத்தால், அவர் புகழ் மேலும் பரவும் என்று நினைத்துக்கூட அவரைக் காட்டிக்கொடுத்து இருக்கலாம் அல்லவா?

ஹாய் மதன் கேள்வி - பதில்

இயேசு உயிர்த் தியாகம் செய்ததால், ஒரு புதிய மதம் பிறந்து பிரமாண்டமாக வளர்ந்தது உண்மை. அதற்காக அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்தான் இயேசுவின் எல்லாப் புகழுக்கும் காரணம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இது அநியாயம் இல்லையா? காந்திஜி இன்று மகாத்மாவாக, தேசத் தந்தையாகப் போற்றப்படுவதற்கு கோட்ஸேதான் காரணமா?!

வி.சந்தோஷ், திருச்சி-4.

ஆங்கிலத்தில் Jesus. தமிழில் அதே உச்சரிப்பில் 'ஜீசஸ்’ என்று அழைக்கலாம். இயேசு என்று வேறு பெயரில் அழைப்பது எப்படிச் சரியாகும்?

முதலில் இயேசு ஆங்கிலேயர் அல்ல! ஆனால், 'ஜீசஸ்’ ஆங்கில வார்த்தைதான். உண்மையில் 'ஜீசஸ்’ என்பதைவிட 'இயேசு’ சரியான வார்த்தை என்பேன்! மத்தியக் கிழக்கு நாடுகளில் பேசப்பட்ட (இயேசு பேசிய!) மொழி அரமெய்க் (Aramaic). அந்த மொழியில் அவருடைய பெயர் - இயேஷீவா! 'ரட்சிக்க வந்தவர்’ என்று அர்த்தம். கிறிஸ்து (Christ) என்பதும் கிரேக்க 'கிறிஸ்டோஸ் (Christos)’ என்பதில் இருந்து வந்ததே. அதாவது, 'சடங்கின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் (Anointed)’ என்று பொருள். 'அப்படி என்றால், அது ஒரு அடைமொழியா - Title? அவதரித்தபோது அவருக்கு வேறொரு பெயரும் இருந்திருக்குமா? சித்தார்த்தர் என்பவர்தான் புத்தர் ஆனார் அல்லவா?’ - போன்ற விஷயங்களை அலசும் புத்தகங்கள் மேலை நாடுகளில் உண்டு! நம்மைப் பொறுத்தவரையில் கிறிஸ்துவர்களின் புனித வேதத்தில் குறிப்பிட்டுள்ள பெயராலேயே அழைப்போம்!

ஜி.மாரியப்பன், சின்னமனூர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில், தஞ்சை பெரியகோயில் - கட்டடக் கலையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது எது என்று கூற முடியுமா?

கட்டடக் கலையில் என்று குறிப்பாகக் கேட்கிறீர்கள். சுருக்கமான பதில் - மதுரை கோயிலின் கட்டடக் கலையைப் பின்பற்றிக் கட்டப்பட்ட பல பெரும் கோயில்கள் தமிழ்நாட்டில் உண்டு. கட்டடக் கலை, அளவு என்று பார்க்கும்போது, தஞ்சை பெரிய கோயில் ஸ்டைலில் அது ஒன்று மட்டுமே உண்டு. நான் சொல்வது தனித்தன்மை பற்றியது!

- என்.பாலகிருஷ்ணன், மதுரை.

இன்னமும் உங்களிடம் இருந்து வெளிப்படாத திறமை என்று எதை நினைக்கிறீர்கள்?

ஹாய் மதன் கேள்வி - பதில்

வெளிப்படாத வரை அது எனக்கு எப்படித் தெரியும்? தெரிந்துவிட்டால் அது வெளிப்பட்டுவிடும். கவலை வேண்டாம்!

ஆர்.கே.கந்தரூபி, மேலகிருஷ்ணன் புதூர்.

ஜூலியஸ் சீசரை புரூட்டஸ் குத்திக் கொல்ல அடிப்படைக் காரணம் என்ன?

அப்போது ரோம் நாட்டை ஒரு விதமான 'ஜனநாயகக் கூட்டணி’ ஆண்டு வந்தது. அதில் ஒருவரான ஜூலியஸ் சீசர் மட்டும் தனிப்பெரும் சர்வாதிகாரியாக உருவாகத் திட்டம் போட்டு வருவதாக கேஷியஸ் என்கிற 'நண்பர்’ புரூட்டஸிடம் சொல்லி மூளைச்சலவை செய்ய, சதிக் கூட்டம் உருவெடுத்து, சீசர் குத்தி வீழ்த்தப்பட்டார். சீசர் அப்படித் திட்டம்போட்டது உண்மைதான் என்கிறார்கள் சில வரலாற்று அறிஞர்கள்!