மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 100

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

ஓவியங்கள்: ம.செ.,

முதன்முறையாக இன்றைய போரின் பிற்பகுதியில்தான் பறம்பின் விற்படையினருக்கு முழுமையாக ஏறித்தாக்கி முன்னேறும் அனுமதியைக் கொடுத்தான் முடியன். இந்த உத்தரவுக்காகத்தான் போர் தொடங்கிய நாளிலிருந்து உதிரன் காத்திருந்தான். விற்படையின் முழு ஆற்றலும் பீறிட்டுக் கிளம்பியது. விரி அம்புகளும் பகழி அம்புகளும் இடைவெளியின்றிச் செலுத்தப்பட்டன. பறம்புப்படையை முற்றுகையிடத் துணிந்தவனுக்கு தாங்கள் யார் என்பதை உணர்த்த, ஒவ்வொரு வீரனும் துடித்தான். போர்க்களம், இதுவரை காணாத அளவுக்கு மரணத்தைக் கண்டது.  எதிரிகளின் படையை முழுமையாகச் சுற்றிவளைத்த கருங்கைவாணன், நிலைமை இப்படித் தலைகீழாக மாறும் என எதிர்பார்க்கவில்லை. எதிரிகளால் யானைப்படையைப் பிளந்துகொண்டு நண்பகலுக்குள் போர்க்களத்துக்கு ஆயுதங்களைக் கொண்டுவர முடியும் என்பதை அவனால் நினைத்துப்பார்க்கக்கூட முடியவில்லை.

வீரயுக நாயகன் வேள்பாரி - 100

பறம்புப்படையின் தாக்குதல் எல்லைக்குள் வேந்தர்படையின் முன்கள வீரர்கள் பெரும்பான்மையோர் சிக்கிக்கொண்டனர். பேரழிவுக்குப் பின்னரே நிலைமையை உணர முடிந்தது. ஆனால், உடனடியாகப் படையைப் பின்வாங்க முடியவில்லை. ஒரே பகுதியில் ஏறி நின்று தாக்கினால் பின்வாங்குதல் எளிது. ஆனால், வேந்தர்படையோ அரைச்சுற்று வட்டத்தில் பறம்புப்படையைச் சூழ்ந்து நின்றது. இத்தகைய உத்தியில் பின்வாங்குதல் எளிதல்ல.

எதிரிப்படையை முற்றுகையிட்டுத் தாக்கும் முடிவை எந்தத் தளபதியும் எளிதில் எடுக்க மாட்டான். முற்றுகை என்பது, எதிரிப்படையின் மீது முழுமையான அடைப்பை உருவாக்குவது. அந்த உத்தியை வகுத்துவிட்டால் பின்வாங்கல் என்பதற்கு இடமேயில்லை. எனவேதான் பின்வாங்கும் சூழல் ஒருபோதும் உருவாகாது என்ற முழு நம்பிக்கை இருக்கும்போது மட்டுமே முற்றுகைப்போரை நடத்துவர்.

கருங்கைவாணன், முழு நம்பிக்கையோடுதான் இந்த உத்தியை முன்னெடுத்தான். எதிரிகளின் கைகளில் ஆயுதங்கள் வந்து சேராமல் இருக்க யானைப்படையையும் கொண்டுபோய் அடைத்து நிறுத்தினான். அவன் திட்டமிட்டதைப்போலவே முற்பகலுக்குள் பறம்புவீரர்களின் கைகளில் இருந்த பெரும்பான்மையான ஆயுதங்கள் தீர்ந்தன. நிலைமை பறம்புப்படைக்கான பேரழிவை நோக்கி நகர்ந்தது. ஆனால், தேக்கன் வகுத்த உத்தியால் வேந்தர்படையின் வேகம் குறைந்தது. குழப்பத்தை உருவாக்கி கருங்கைவாணனைத் திசைதிருப்பினான். மூஞ்சலுக்கு ஆபத்து ஏதுமில்லை என உறுதிப்படுத்திக்கொள்ளும் வரை கருங்கைவாணன் முழு வேகத்தோடு தாக்குதலை முன்னெடுக்கவில்லை. அதற்குள் நிலைமை தலைகீழாக மாறியது.

பறம்பின் ஆற்றல் பீறிடத் தொடங்கியது. கடைசி ஐந்து நாழிகையில் விற்படையினர் நிகழ்த்திய தாக்குதல், இதுவரை நடந்த மொத்தத் தாக்குதல்களுக்கும் நிகரானது. அழிவு... அழிவு... வேந்தர்படையில் பேரழிவு. களத்தில் கருங்கைவாணன் கையறுநிலையில் நின்றான். யானைப்படையை அழித்து நண்பகலுக்குள் ஆயுதங்களை எப்படிக் கொண்டுவந்தனர் என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. மனம் மிரட்சியில் இருக்கும்போது ஆற்றலைக் கைக்கொள்ள முடியாது. படையினர் மீள வழிகாட்ட முடியவில்லை. நெருக்கடி நிலையில் ஒருவன் சிறந்த முடிவை எடுக்க, அவனது போர் அனுபவமே கைகொடுக்கும். ஆனால், கருங்கைவாணன் சந்தித்த எந்தப் போரும் இந்தப் போருடன் ஒப்பிடக்கூடியதன்று. அவன் அதிகமான போர்களில் வெற்றிபெற்றுள்ளான். ஒருசில போர்க்களங்களை விட்டுப் பின்வாங்கி வெளியேறியுள்ளான். ஆனால், இன்று அவனுக்கு ஏற்பட்ட அனுபவம் முற்றிலும் வேறொன்று. பறம்போடு போரிட, தனது படைக்கு எந்தத் தகுதியும் இல்லையா என்ற கேள்வியை அடிமனதில் உருவாக்கியது அது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 100

அதன் பிறகு அந்தக் கேள்வியே அவனை ஆக்கிரமித்தது. அதிலிருந்து அவன் மீண்டுவர நெடுநேரமானது. அதற்குள் நிலைமை கைமீறியது. முன்களத்தில் எண்ணற்ற வீரர்கள் பகழி அம்புக்குப் பலியாகி மடிந்தனர். கவசவீரர்களின் படைக்கே இந்நிலையானதும் மற்ற வீரர்கள் பறம்பினரை நெருங்கவே அஞ்சினர். கைவிடப்பட்ட படைவீரர்கள் மலையெனக் கொன்றுகுவிக்கப்பட்டனர். தட்டியங்காடெங்கும் குருதி பெருகி ஓடியது.

எல்லாவற்றையும் பரண் மீதிருந்து பார்த்துக்கொண்டு நின்றார் திசைவேழர். நேற்றிரவுதான் அவர் கபிலரிடம் சொன்னார், ``இனி, மரணமே இந்நிலத்தை ஆட்சிசெய்யும்.” அந்தக் காட்சியைத்தான் அவர் இப்போது பார்த்துக்கொண்டிருந்தார். உடல் முழுவதும் செயலிழந்ததுபோல் இருந்தது. கண்விழி உயிரற்று அசைந்துகொண்டிருந்தது. ஆனாலும் நாழிகைக்கோலினைப் பார்த்தபடி தன் கைகளை மெள்ள உயர்த்தினார். முரசின் ஓசை எங்கும் எதிரொலித்தது. தட்டியங்காட்டின் நான்காம் நாள்
போர் முடிவுக்கு வந்தது.

லையடிவாரமெங்கும், விரட்டப்பட்ட யானைகள் சிதறித் திரிந்தன. நண்பகலுக்குப் பிறகு யானைப்படை முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்தது. தளபதி உச்சங்காரிக்கு என்ன நடந்தது என்பதே புரியவில்லை. திடீரென யானைகள் மிரளத் தொடங்கின. நடுப்பகுதி யானைகள் பாகன்களின் கட்டுப்பாட்டை மீறி மிரண்டு திமிறின. பயம்கொள்ளும் யானையின் பிளிறல் தனித்துவமாகத் தெரியக்கூடியது. ஒன்றுக்கும் மேற்பட்ட யானைகள் அதேபோலப் பிளிறியவுடன் படையின்தன்மை உருமாறியது. பெரும் எண்ணிக்கையில் காட்டெருமைகள் மொத்தமாக உள்ளே நுழைந்தபோது படை தனது கட்டுப்பாட்டை இழந்தது. மேலே இருந்த வீரர்கள் தூக்கி வீசப்பட்டனர். நாலாபக்கமும் யானைகள் சிதறி ஓடின. காட்டுக்குள் ஓடத்தொடங்கிய யானையின் மீது பாகனோ, வீரனோ உட்கார முடியாது. எல்லோரும் உயிர்பிழைத்தால் போதும் என்ற நிலையை அடைந்தனர். காரமலையின் கீழ்ப்பகுதி முழுக்க வேந்தர்படையின் யானைகளும் வீரர்களும் தவித்து அலைந்தனர்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 100எதிரிநாட்டுக்குள் போரிட நுழைந்த வர்களில் பிடிபட்டவர்களை முழுமையாக அழித்தொழிப்பதே மரபு. ஆனால், பறம்பின் தரப்பில் சொல்லப்பட்டுவிட்டது, `உயிர்பிழைக்க ஓடும் பாகன்களையோ வீரர்களையோ கொல்லவேண்டாம்’ என்று. போரிடுபவர்களை மட்டுமே எதிர்கொள்வோம். அஞ்சி ஓடுபவர்களை அழிப்பது வீரமாகாது.

நடுப்பகலிலிருந்து வேந்தர்களின் வீரர்கள் நாலாபக்கமும் ஓடிக்கொண்டி ருந்தனர். மாலையில் போர் முடிவுற்றதன் அடையாளமாக முரசின் ஓசை பரண் மேலிருந்து வெளிப்பட்டது. இன்றைய போர், வேந்தர்களுக்கானதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தொடங்கி பறம்புக்கானதாக முடிவுற்றது. பறம்புவீரர்கள் பெருமகிழ்வோடு போர்க்களத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்தனர். கபிலர் இரலிமேட்டில் பாட்டாப்பிறையில் அமர்ந்திருந்தார். வழக்கமாக போர் முடிவுறும்போது நாகக்கரட்டின் மீதிருந்து நிலைமையைப் பார்ப்பது வழக்கம். ஆனால், இன்று இரலிமேட்டிலே இருந்துவிட்டார். சிதறுண்ட யானைகள் எங்கும் அலைவது ஒரு காரணம்.  இன்னொரு காரணம், நேற்று திசைவேழர் கூறிய சொற்கள். போர்க்களத்தின் பேரழிவைக் கண்கொண்டு பார்க்க முடியாத நிலையில், `இங்கேயே இருப்போம்... எல்லோரும் வந்து சேரட்டும்’ என்று அமர்ந்திருந்தார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 100

பொழுது மறையத் தொடங்கியது. வீரர்களின் ஓசை, மலையெங்கும் கேட்டுக்கொண்டிருந்தது. கபிலரின் மனக்கண்ணில் அணங்கனே நிலைகொண்டிருந்தான். `எவ்வியூரின் வடதிசையில் ஏதோ ஒரு காட்டுக்குள் நுழைந்தவன் இத்தனை காட்டெருமைகளோடு எப்படி இங்கு வந்துசேர்ந்தான்? மனிதனின் பேராற்றலை எப்படிப் புரிந்துகொள்வது? மீண்டும் அவன் காரமலையில் ஏறிவிட்டதாகச் சொல்கிறார்கள். அவனைக் கண்டு பேசவேண்டும் எனத் தோன்றுகிறது. ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியவில்லை’ எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கையில் கபிலரின் முன்னால் வந்து வணங்கி நின்றான் ஒருவன்.

எண்ணங்களிலிருந்து விடுபட்டு அவனைப் பார்த்தார் கபிலர். முதலில் வேந்தர்படையைச் சேர்ந்தவன் எனத் தோன்றியது. ஆனால், போர்வீரனுக்குரிய அடையாளங்கள் எவையும் அவனிடம் இல்லை. `யாராக இருக்கும்?’ என்ற சிந்தனையிலேயே, வணங்கிய அவனுக்கு வாழ்த்து சொன்னார்.

மறுகணமே அவன் தனது கையில் இருந்த சுருட்டப்பட்ட துணி ஓலை ஒன்றைக் கொடுத்தான்.

தான் யார் என்று சொல்லாமலேயே ஏன் இதைக் கொடுக்கிறான் என்று நினைத்தபடியே வாங்கி அதை விரித்துப் பார்த்தார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 100

பார்த்த கணத்தில் பேரதிர்ச்சிக்குள்ளானார் கபிலர். சிறிது நேரத்தில் அவரின் கண்களில் நீர் பெருகியது. ``என் தலைமாணவி பொற்சுவை” என்று உதடுகள் துடித்தபடியே உச்சரித்தன.

``என் பெயர் காராளி” என்று வந்தவன் தன்னை அறிமுகம் செய்துகொண்டான். தான் வெங்கல்நாட்டைச் சேர்ந்தவன் என்றும், போரில் ஈடுபடாத ஆறு ஊர்களில் ஒன்றைச் சேர்ந்தவன் என்றும் தன்னைப் பற்றிக் கூறினான்.

அவன் வரைந்த ஓவியம்தான் அது. அவளே திரைச்சீலைக்குப் பின்னால் நின்று பார்ப்பதுபோல் இருந்தது. ஓவியத்தை விட்டு கபிலரின் பார்வை நகரவில்லை. உள்ளுக்குள் எண்ணங்கள் பீறிட்டுக்கொண்டி ருந்தன. காராளியின் சொற்களை மனம் பெரிதாகக் கவனம்கொள்ளவில்லை.

சற்றே அவசரத்தோடு காராளி தொடங்கினான், ``இளவரசி உங்களைக் காண வேண்டும் எனக் காத்திருக்கிறார். அதற்கு உங்களின் அனுமதி வேண்டி வந்தேன்.”

காராளியின் சொல் கேட்டுத் திடுக்கிட்டார் கபிலர், ``இந்தப் போர்ச் சூழலில் அவர் ஏன் என்னைக் காண வேண்டும்?”

காராளியிடம் பதில் இல்லை.

சற்று நேரம் கழித்து, ``போர் முடிவுற்றவுடன் காணலாம் என்று சொல்.”

``இல்லை ஐயா, அவர் உங்களைக் காண விரும்புவதே போர்குறித்துப் பேசத்தானாம். போர் தொடங்கும் முன்பே உங்களிடம் அழைத்துப்போகச் சொன்னார். நானும் கடந்த ஐந்து நாள்களாகப் பெருமுயற்சி செய்துவருகிறேன். அதற்கான வாய்ப்பே கிட்டவில்லை. இன்று நடுப்பகலுக்குப் பிறகுதான் வாய்ப்பு கிட்டியது.”

`எப்படி?’ என்று கேட்பதைப்போல இருந்தது கபிலரின் பார்வை.

``நடுப்பகலுக்குப் பிறகு, வேந்தர்களின் யானைப்படை சிதறி ஓடியது. காடெங்கும் வேந்தர்படையின் வீரர்கள் உயிர்பிழைக்க இங்குமங்குமாக ஓடிக்கொண்டி ருக்கிறார்கள். இதுதான் பொருத்தமான நேரம். இதைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்தால் யாரும் ஐயம்கொள்ள மாட்டார்கள் என்றுதான் இன்று வந்துசேர்ந்தேன்” என்றான்.

அவனது அக்கறையும் அறிவுக்கூர்மையும் கபிலரை ஈர்த்தன. ஆனாலும் தயக்கத்துடனே, ``இந்தச் சூழலில் இங்கு வருவது அவருக்கு ஆபத்தாக அமைந்துவிடாதா?”

``ஓர் ஆபத்தும் வராது. நிலைமை குழப்பத்தில் இருக்கும்போதே அவரை அழைத்துவருதல் சிறந்தது. யாருக்கும் எந்தவித ஐயமும் வராது” என்றான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 100

தேக்கனிடமோ முடியனிடமோ கலந்து பேசிவிட்டுச் சொல்லலாம் என்று முடிவுசெய்தார். வழக்கமாக அவர்கள் வந்து சேரும் நேரம் கடந்துவிட்டது. ஆனாலும் இருவரும் வந்துசேரவில்லை.

காராளியோ, பொழுதாகிக்கொண்டி ருப்பதால் சற்று பதற்றத்தோடு இருந்தான். அப்போது இரலிமேட்டின் குகைப்பகுதியிலிருந்து வேகமாகக் கீழிறங்கிக்கொண்டிருந்தான் இரவாதன். அவனைப் பார்த்து ``தேக்கனும் முடியனும் ஏன் இன்னும் வந்துசேரவில்லை?” என்று சத்தம்போட்டுக் கேட்டார் கபிலர்.

``தேக்கனுக்கு சற்று ஓய்வு தேவைப்படுவதால் இங்கு வரவில்லை. அவருக்கான குடிலிலேயே தங்கிவிட்டார். அவரைக் கண்டு பேசுவதற்காக முடியன் அங்கு போயுள்ளார். அவர்கள் இருவரையும் பார்க்கத்தான் நான் போகிறேன். எதுவும் சொல்ல வேண்டுமா?” என்று கேட்டுக்கொண்டே நடந்தான் இரவாதன்.

அவசர வேலையாகப் போய்க்கொண்டி ருக்கிறான் என்று சிந்தித்த கபிலர், ``இல்லை, வந்தவுடன் நேரில் பேசிக்கொள்கிறேன்” என்றார்.

என்ன முடிவெடுப்பது எனத் தெரியவில்லை. குழப்பம் சற்று அதிகமானது. காராளியின் பதற்றமும் அதிகமானது. ``நான் விரைந்து போய்ச் சேரவேண்டும். அப்போதுதான் இரவுக்குள் இளவரசிக்குச் செய்தி சொல்ல முடியும்” என்று வற்புறுத்திக் கேட்டான்.

மீண்டும் அவனைக் கூர்ந்து பார்த்தார் கபிலர்.

``நாளையோ, நாளை மறுநாளோ இதே பொழுதில் அழைத்துவருகிறேன். அனுமதி கொடுங்கள் ஐயா” என்றான்.

மனம் முடிவெடுக்க முடியாமல் குழம்பிய நிலையில் தலை மட்டும் சம்மதித்து அசைந்தது.

கால் தொட்டு வணங்கி விடைபெற்றான் காராளி.

ட்டியங்காட்டின் பேரழிவுக்குமுன் செய்வதறியாது நின்றிருந்தான் கருங்கைவாணன். பொழுதும் மங்கி இருள் சூழ்ந்தது. தீப்பந்தங்களோடு உடல்களை அப்புறப்படுத்தும் வேலையில் கணக்கற்றோர் ஈடுபட்டனர். எங்கும் மரணத்தின் பேரோலம். இழுபடும் குரல்கள் உயிரை உதற முடியாமல் துடித்துத் தவித்தன. கருங்கைவாணனால் கூடாரத்துக்குள் இருக்கவும் முடியவில்லை; வெளியில் வந்து நிற்கவும் முடியவில்லை.

வீரயுக நாயகன் வேள்பாரி - 100

தலைமைத் தளபதியின் போர் உத்தி தோல்வியடைந்தால் ஏற்படும் இழப்புகள் எவ்வளவு கொடியவை என்பதை இன்றைய போர்க்களம் உணர்த்திக்கொண்டிருந்தது. யானைப்படைத் தளபதி உச்சங்காரி என்ன ஆனான் என்ற செய்தி ஏதும் இதுவரை கிட்டவில்லை. யானைப்படையை எப்படி நடுப்பொழுதுக்குள் கலைத்தனர் என்பது புரியவில்லை. காட்டெருமைகள் யானைப்படைக்குள் நுழைந்த இடத்தைப் பார்த்த வீரர்கள் யாரும் உயிரோடு இல்லை. முன்னும் பின்னுமாக இருந்த யாருக்கும் என்ன நடந்தது என்பது விளங்கவில்லை. பெருந்தாக்குதலால் படையைச் சிதறச்செய்துவிட்டார்கள் என்பதுதான் புரிந்தது. கருங்கைவாணன் குழம்பித் தவித்து வேதனையில் மூழ்கிக்கொண்டிருந்தான்.

வழக்கமாக வேந்தர்கள் கூடிப்பேசும் நேரம் நெருங்கிவிட்டது. ஆனால், யாரும் இன்னும் மையக்கூடாரத்துக்கு வந்துசேரவில்லை. வேந்தர்களைக் கண்டு என்ன சொல்லப்போகிறோம் என்பது புரியவில்லை. கருங்கைவாணன் வாழ்வில் இவ்வளவு மோசமான இழப்பு எந்த ஒரு போர்க்களத்திலும் அவனுக்கு ஏற்பட்ட தில்லை. ஏறக்குறைய கையறுநிலையில் அவன் நின்றான். வேந்தர்கள் ஏன் இன்னும் தங்களின் கூடாரங்களை விட்டு மையக்கூடாரத்துக்கு வராமல் இருக்கின்றனர் என்பதும் அவனுக்குப் புரியவில்லை. குழப்பத்தோடேயே உட்கார்ந்திருந்தான்.

மூவேந்தர்களும் தங்களின் படைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பைப் பற்றிய முழுமையான செய்தியை அறிந்துகொண்ட பிறகு கூடாரத்துக்கு வரலாம் எனக் காத்திருந்தனர். ஏற்பட்டுள்ளது பேரிழப்பு. போர்க்களத்திலிருந்து எண்ணிலடங்காத பிணங்களை வெளியேற்றவேண்டியிருந்தது. எண்ணிக்கையைக் கண்டறிவது இரவுக்குள் இயலாது என்று அமைச்சர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 100

போரின் போக்கு பற்றி உதியஞ்சேரலுக்கு மறுசிந்தனை உருவாகத் தொடங்கியது. `பாண்டியனை நம்பிப் பெரும்படையோடு களம்புகுந்தது சரியா?’ என்ற கேள்வி மேலெழுந்தது. இந்தக் கேள்விக்கு அடிப்படைக் காரணம் பறம்புவீரர்கள் ஒரே நேரத்தில் முற்றுகையைத் தகர்த்து அளவில்லாத இழப்பை உருவாக்கியதும், யானைப்படையைச் சிதறடித்ததும்தான். பறம்புப்படைக்கு இதைவிடப் பெரிய நெருக்கடியை இனி கொடுத்துவிட முடியாது. எனவே, இந்தப் போரின் போக்கு தனக்கான வெற்றிவாய்ப்பை இழக்கத் தொடங்கிவிட்டது என அவன் எண்ணினான். அப்போது கூடாரத்துக்குள் வந்த பணியாள் சொன்னான், ``சோழப்பேரரசர் தங்களைக் காணக் காத்திருக்கிறார்” என்று.

தன்னைப்போல நம்பிக்கை இழந்த நிலையில், அடுத்து என்ன செய்யலாம் என்பதைப் பற்றிப் பேச செங்கனச்சோழன் வந்திருப்பான் என நினைத்தான் உதியஞ்சேரல். ஆனால், உள்ளே வந்தவனின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. உதியஞ்சேரலுக்குப் புரியவில்லை.

வந்ததும் ஊன்றுகோலைச் சாய்த்துவிட்டு இருக்கையில் அமர்ந்தபடி செங்கனச்சோழன் சொன்னான், ``எல்லாம் நல்லபடியாக முடிந்தது.”

உதியஞ்சேரலுக்குப் புரியவில்லை. முகத்தில் குழப்பமே மிஞ்சியது.

அதை உணர்ந்தவாறு செங்கனச்சோழன் கூறினான், ``ஈங்கையனிடம் பேசிக்கொண்டி ருக்கிறோம் என்று சொன்னேன் அல்லவா; அது நல்லபடியாக முடிந்தது.”

உதியஞ்சேரலுக்கு உயிர்வந்தது போலிருந்தது. ``உண்மையாகவா? நீங்கள் சொல்வதைச் செய்ய ஒப்புக்கொண்டு விட்டானா?” என்று வேகமாகவும் உணர்ச்சிவசப்பட்டும் கேட்டான்.

``ஆம்” என்று தலையசைத்தான் செங்கனச்சோழன்.

அதன் பிறகு உரையாடல் தொடரவில்லை. அமைதி நீடித்தது. என்ன நடந்தது என்று அவன் சொல்வான் எனக் காத்திருந்தான் உதியஞ்சேரல்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 100

சற்று நேரத்துக்குப் பிறகு செங்கனச்சோழன் சொன்னான், ``நாளை இரவு பாரி பத்தாம் குகையில் தங்குகிறான். அங்கே ஈங்கையனின் காவல்.”

உதியஞ்சேரலுக்குப் புரியவேண்டியது புரிந்தது.

எழுந்துபோய் அவனைக் கட்டியணைத்துக்கொண்டான்.

மையக்கூடாரத்தில் வேந்தர்கள் கூடினர். கருங்கைவாணனோடு சேர்த்து மையூர்கிழாரையும் அழைத்திருந்தனர். இருவரும் வந்து வேந்தர்களுக்கு முன் நின்றனர். அவர்களுக்குச் சற்றுப் பின்னால் தளபதிகளான உறுமன்கொடி, துடும்பன், வெறுகாளன், மாகனகன் ஆகிய நால்வரும் நின்றனர்.

இரலிமேட்டின் குகையிலிருந்துதான் ஆயுதங்கள் தட்டியங்காட்டுக்கு வந்து சேர்கின்றன. இரலிமேட்டுக்கும் நாகக்கரட்டுக்கும் நடுவில் இருக்கும் பள்ளத்தாக்கு மிகக்குறுகியது. யானைப்படையைக் கொண்டுபோய் அடைத்து நிறுத்திவிடலாம். எதிரிகள் தங்களின் யானைப்படை மூலம் தாக்குதல் தொடுத்தாலும் பகற்பொழுதுக்குள் ஆயுதங்களைக் குகைகளிலிருந்து போர்க்களத்துக்கு எடுத்துவந்துவிட முடியாது. ஏனென்றால், பள்ளத்தாக்கு முழுவதும் இருதரப்பு யானைகளுமே ஆவேசம்கொண்டிருக்கும் என்று ஆலோசனையைச் சொன்னது மையூர்கிழார்தான். எனவே, இன்று விளக்கம் சொல்லவேண்டிய முதல் இடத்தில் அவரும் இருந்தார்.

கருங்கைவாணனால் வேந்தர்கள் யாருடைய முகத்தையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. மையூர்கிழாரின் முகமும் மிகுந்த கலக்கத்தில்தான் இருந்தது. ஆனால், நிமிர்ந்தே இருந்தார்.

``ஏன் இவ்வாறு நடந்தது?”

சோழவேழனின் கேள்வி யாரை நோக்கி எனத் தெரியாததால், இருவரும் சற்று அமைதியாக நின்றனர். கருங்கைவாணனால் உடனடியாக பதில் சொல்லிவிட முடியாது என்பதால், மையூர்கிழார் பேசத் தொடங்கினார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 100

``இவ்வாறு நடக்காது என்பதை நம்மில் யாராலும் ஏன் முன்னாலேயே சிந்திக்க முடியவில்லை?”

சோழவேழன் கேட்ட கேள்வியை அவையில் இருக்கும் எல்லோரையும் நோக்கிய கேள்வியாகத் திருப்பினார் மையூர்கிழார்.

முற்றுகைத் திட்டத்தைக் கருங்கைவாணன் முன்வைத்தான். ஆனால், இப்படித் தலைகீழாக மாறும் வாய்ப்பிருக்கிறது என யாரும் சிந்திக்க வில்லை. அதனால்தான் மையூர்கிழாரின் கேள்விக்கு யாரும் மறுமொழி சொல்லவில்லை.

சிறிது நேரத்துக்குப் பிறகு சோழவேழன் கேட்டார், ``நீ என்ன சொல்ல நினைக்கிறாய்?”

``நடந்த உண்மையைத் தெரிந்துகொண்டால் நம் வீரர்கள் போரிடும் முடிவையே கைவிட்டுவிடுவார்களோ என அஞ்சுகிறேன்.”

அதிர்ந்தது அவை.

``அப்படி என்ன நடந்தது?” எனக் கேட்டார் சோழவேழன்.

``அவர்கள் காட்டெருமைப் படையை நமது யானைப்படையின் மீது ஏவியுள்ளனர். அதனால்தான் நம் யானைகள் போரிடாமலே சிதறி ஓடியிருக்கின்றன.”

``காட்டெருமைப் படையா?”

அவையில் இருந்த தளபதிகள் பலரும் நடுக்குற்று மீண்டனர்.

நேரம் கடந்து சற்றே குறைந்த குரலில் பொதியவெற்பன் சொன்னான், ``நம்பும்படியாக இல்லையே!”

``நம்மால் நம்பவே முடியாத ஆற்றல் எதிரிகளிடம் உள்ளது என்றுதானே தலைமைத் தளபதி முதலிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்.”

கருங்கைவாணனுக்கு மூச்சு வந்தது. தான் தொடர்ச்சியாகச் சொல்லிவந்ததை இன்னொருவர் வலியுறுத்திப் பேசுவது, அதுவும் இப்படியொரு நெருக்கடியான நேரத்தில் பேசுவது, சற்று ஆறுதலைத் தந்தது.

``நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள்?” எனக் கேட்டான் உதியஞ்சேரல்.

``இப்போரை இப்படி நடத்தினால் வெல்ல முடியாது.”

``ஏன்?”

``ஏனென்றால், இப்போர் பாரிக்கு எதிராக நடைபெறுகிறது.”

``பாரிக்கு எதிராகத்தான் நடைபெறுகிறது. அதை யாரும் மறுக்கவில்லையே!”

``மறுக்கவில்லை. ஆனால், உங்களுக்கு அது புரியவில்லை.”

வேந்தர்களின் முன்னால் மையூர்கிழாரின் பேச்சு மிகத்துணிச்சலாக இருந்தது. ஏற்பட்டுள்ள பேரிழப்பு இதுபோன்ற பேச்சுக்கான இடத்தை இயல்பாக உருவாக்கியது.

``என்ன புரியவில்லை என நினைக்கிறாய்?” எனக் கேட்டார் சோழவேழன்.

``நேற்று எதிரிகள் காற்றைக்கொண்டு அம்பெய்திப் பெரும்பாதிப்பை உருவாக்கினர். அது எப்படியென்று இன்னும் புரியவில்லை. இன்றோ காட்டெருமைப்படையைக்கொண்டு தாக்கியுள்ளனர். இதுவும் எப்படியென்று புரியவில்லை. நாளை அவர்கள் நடத்தப்போகும் தாக்குதலும் புரியப்போவதில்லை.”

``நீ என்னதான் சொல்ல வருகிறாய் என்பதைத் தெளிவாகச் சொல்.”

``நான் முதல் நாளிலிருந்து தெளிவாகத்தான் சொல்லிவருகிறேன். ஆனால், இந்த அவை எனது சொல்லை ஏற்க மறுக்கிறதே” என்று குற்றம்சாட்டினான் மையூர்கிழார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 100

பாண்டியப் பேரரசுக்கு உட்பட்ட ஒரு குறுநில மன்னன், பேரரசரும் பிற வேந்தர்களும் இருக்கும் அவையில் இவ்வளவு துணிந்து பேசுவது வியப்பைத் தந்தது. ஆனாலும் அவனிடம்தான் பாரியைப் பற்றியும் பறம்பைப் பற்றியும் அறிந்துகொள்ளவேண்டிய செய்திகள் இருக்கின்றன என்பதால், மற்ற இரு வேந்தர்களும் சற்றே ஆர்வத்துடன் கேட்டனர்.

ஆனால், மையூர்கிழாரின் பேச்சால் கடும்சினம்கொண்டான் பொதியவெற்பன். சற்றே உரத்தகுரலில் சொன்னான், ``புதிய தாக்குதல் திட்டத்தை நீ வைத்திருந்தால் அதை நேரடியாகச் சொல். சுற்றிவளைத்துப் பேசாதே!”

``இளவரசர் என்னை மன்னிக்க வேண்டும். நான்கு நாள் போரையும் முழுமையாகக் கவனித்ததால் சொல்கிறேன். தலைமைத் தளபதி உள்ளிட்ட நம் தளபதிகள் யாருக்கும் இந்தப் போரை எப்படி நடத்துவதென்றே தெரியவில்லை.”

அவை அதிர்ந்தது. கருங்கைவாணன் அதனினும் அதிர்ந்தான். இப்போதுதான் தனக்கு ஆறுதலாக அவனது பேச்சு இருக்கிறது என நினைத்தான். ஆனால், அடுத்த கணமே அவனைத் தகுதியற்றவனாக்கினான்.

``கருங்கைவாணன் வகுத்த திட்டத்தில் நீ கண்ட குறை என்ன?”

சோழவேழனின் கேள்விக்கு மையூர்கிழார் சொன்னார், ``ஒவ்வொரு நாளும் எதிரியின் படையை வெல்வதற்கான உத்தியையே அவர் உருவாக்கினார். அது முற்றிலும் தவறு.”

``என்ன உளறுகிறாய்... எதிரியின் படையை வெல்வதற்குத்தானே போர் நடக்கிறது. அதைச் செய்வதற்கு உத்தியை உருவாக்குவதில் தவறென்ன இருக்க முடியும்?”

``எதிரிப்படையை வெல்வது நமது இறுதி இலக்கு. ஆனால், ஒவ்வொரு நாள் போரிலும் இறுதி இலக்குக்கான உத்தியையே உருவாக்கக் கூடாது.”

அவையின் ஆழ்ந்த கவனிப்பு மையூர்கிழாரின் சொல்லின்மேல் குவியத் தொடங்கியது.

மையூர்கிழார் தொடர்ந்து சொன்னார், ``இந்தப் போர் பாரிக்கு எதிரானது. ஆனால், இன்று வரை அவன் போர்க்களத்துக்கே வரவில்லை. அவன் எங்கே இருக்கிறான் என்றே தெரியாது. பிறகு எப்படி இந்தப் போர்க்களத்தை நம்மால் வெற்றிகொள்ள முடியும்?”

அவையின் அமைதி மேலும் அடர்த்திகொண்டது.

``அவன் மிக உயரமான இடத்திலிருந்து இந்தப் போரை வழிநடத்துகிறான். நமது படையின் ஒவ்வொரு நகர்வையும் அவனால் தெளிவாகப் பார்க்க முடிகிறது. அடுத்த நகர்வை அவனால் உணர முடிகிறது. நாம் செய்வதையும் செய்யப்போவதையும் அவன் எளிதில் கணிக்கிறான். நாம் அவனது கால்களுக்கு அடியிலிருந்து சண்டைபோட்டுக்கொண்டிருக்கிறோம். அவனோ நமது தலைக்கு மேலே இருந்து தாக்குதலை வழிநடத்துகிறான். காற்றையும் காட்டெருமையையும் பயன்படுத்தியது, போரிட்டுக்கொண்டிருக்கும் அவர்களின் தளபதிகள் எடுத்த முடிவுகளல்ல. இன்னும் சொல்லப்போனால், இப்படிப்பட்ட முடிவுகள் எடுக்கப்படக்கூடும் என்பதுகூட அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பாரி, மலையின் மாமனிதன்; உருளும் கற்களையும் வீசும் காற்றையும் பயன்படுத்தத் தெரிந்த பேரறிவாளன். அவனோடு போரிட்டுக்கொண்டிருக்கும் நம் தளபதிகளோ வாளையும் வேலையும் நம்பிப் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.”

அவை, அதிர்ச்சிமேல் அதிர்ச்சிகண்டு உறைநிலை அடையத் தொடங்கியது. குலசேகரபாண்டியன், எதுவும் சொல்லாமல் மையூர்கிழாரையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். மற்றவர்களோ ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்துக்கொள்ள முடியாத நிலையில் அமைதிகொண்டிருந்தனர். மையூர்கிழாரோ வேகம் குறையாமல் தொடர்ந்தார்.

``இரண்டாம் நாள் போரிலேயே தேக்கனை வெட்டி எறியும் வாய்ப்பு கிட்டியது. அதைத் தலைமைத் தளபதி தவறவிட்டார். அன்று அது நடந்திருந்தால் போரின் போக்கே மாறியிருக்கும். அதனால்தான் நான் முதலிலேயே சொன்னேன், நமது உத்தி தேக்கனுக்கும் முடியனுக்குமானதாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அது தளபதிகளுக்குப் புரியவேயில்லை. `வேட்டூர்பழையனை விரட்டிக்கொண்டு காட்டுக்குள் போகாதீர்கள்!’ என்று கத்தினேன். அதைப் பொருட்டாகவே அவர்கள் நினைக்கவில்லை. இப்படித்தான் இந்தப் போர்க்களத்தில் ஒவ்வொரு நாளும் நடக்கிறது.”

கருங்கைவாணனையும் மற்ற தளபதிகளையும் நேரடியாகத் தாக்கி, குற்றம்சாட்டின மையூர்கிழாரின் சொற்கள். ஆனால், அவற்றில் எதையும் அவர்களால் மறுக்க முடியாது. நேற்று இதே அவையில் சோழவேழன் பேசியதுக்குச் சினம்கொண்டு மறுத்துரைத்தான் கருங்கைவாணன். ஆனால், இன்று அதன் தலைகீழ் நிலை நடந்துகொண்டிருந்தது. வேந்தர்களுக்கு முன்னால் தளபதிகளின் தவறுகளையும் செயலின்மையையும் வெளிப்படையாக எடுத்துக் கூறினார் மையூர்கிழார்.

``நான் இக்கணத்தில் என் மகன் இளமாறன் உயிரோடு இல்லையே என வேதனைப்படுகிறேன். தட்டியங்காட்டையும் நாகக்கரட்டையும் இரலிமேட்டையும் அவன் அளவுக்கு அறிந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவ்வளவு பெரும்படையோடு மூவேந்தர்களும் அணிவகுத்து நிற்கும் இந்தப் போர்க்களத்தில் அவன் நின்றிருப்பானேயானால், பறம்பின் கதறலை இந்நேரம் நாம் கேட்டுக்கொண்டிருப்போம். இப்போதோ நமது கதறலை அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.”

இவன் கூறுவதை எதிர்கொள்வதற்கான சொல்லே யாருக்கும் சிக்கவில்லை. பாரி ஏற்படுத்திய பேரழிவை தனக்கான முழுவாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கி றான். அதேநேரம் தனது விசுவாசத்தை வலிமையாக நிலைநிறுத்துகிறான். இவன் நோக்கம்தான் என்ன என்பது கருங்கைவாணனுக்குப் பிடிபடவில்லை.

``சரி, இப்போது என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாய்?” கேள்வி சோழவேழனிடம் இருந்து வந்தது.

``பாரியை உடனடியாகப் போர்க்களத்துக்கு வரவழைக்க வேண்டும்.”

நீண்டநேர அமைதியை உடைத்து வெளிவந்தது பொதியவெற்பனின் குரல், ``நாளைய போர்க்களத்தில் தேக்கனையோ முடியனையோ வெட்டிச்சாய்க்கும் உறுதியை தலைமைத் தளபதி இந்த அவைக்குத் தரவேண்டும்.”

உண்மையில் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கருங்கைவாணனால் புரிந்துகொள்ள முடியவில்லை. இளவரசர் சொல்லை இந்த அவையில் ஏற்பதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக்கொள்வது சரியான ஒன்றாக இருக்குமா என நினைத்துக்கொண்டிருக்கும்போதே, மையூர்கிழாரின் குரல் கேட்டது.

``இனி அந்த உத்தியின் மூலம் பலன் கிடைக்காது. அதற்குரிய காலம் கடந்துவிட்டது.”

``ஏன் அப்படிச் சொல்கிறாய்?”

``தேக்கனையோ முடியனையோ ஒரே நாள் போரில் வீழ்த்திவிட முடியாது. வேந்தர்படை முழு ஆற்றலோடு இருக்கும்போது அது நடந்திருக்கலாம். இன்றுள்ள நிலையில் அதைச் செய்ய முடியும் என நான் நம்பவில்லை. ஒருவேளை, கருங்கைவாணன் தேக்கனின் தலையை வெட்டினால்கூட, அவன் கரப்பான்பூச்சியைப்போல அதன் பிறகும் பத்து நாள் உயிர் வாழ்வான். பறம்பு மருத்துவர்களால் எதையும் செய்ய முடியும்.”

``வேறு என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாய்?”

சட்டென மறுமொழி சொல்லி விடவில்லை. கேள்வி எழுப்பிய உதியஞ்சேரலை மட்டுமல்ல, எல்லோரையும் நோக்கி பார்வையைச் செலுத்தியபடி சொன்னார், ``என்னிடம் இருக்கும் ஆலோசனையை நான் சொல்ல ஆயத்தமாய் இருக்கிறேன். அதை நீங்கள் ஏற்பீர்களா என்பது ஐயமே!”

``ஏன் ஐயம்கொள்கிறாய்? துணிந்து சொல். பொருத்தமுடையதென்றால் ஏற்போம்.”

சோழவேழனின் சொல்லில் நின்றுகொண்டு மையூர்கிழார் சொன்னார், ``காலையில் போர் தொடங்கும்போது, பறம்பின் திசைநோக்கி நீலனின் தலையை வெட்டி வீச வேண்டும். அடுத்த பொழுதுக்குள் களம் வந்து நிற்பான் பாரி.”

பதறியது அவை. துடித்தெழுந்தான் உதியஞ்சேரல், ``உனது ஆலோசனை பைத்தியக்காரத்தனமானது. எதிரியை வீழ்த்த அவனது வலிமையைக் குறைக்கவேண்டுமேயொழிய, ஆவேசத்தைப் பெருக்கக் கூடாது.”

செங்கனச்சோழனும் அதே சீற்றத்தை வெளிப்படுத்தினான். ``பாரியை வரவழைப்பதைவிட முக்கியமானது அவனை வெற்றிகொள்வது. அதற்கான தெளிவான திட்டம் இல்லாமல் அதைச் செய்வது அறிவுடைமையாகாது.’’

``தூண்டில் முள்ளை வீசுவதற்கும் கொலைவாளை வீசுவதற்கும் வேறுபாடு தெரியாதவனை முட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்” என்றான் சோழவேழன்.

சற்றும் பின்வாங்கவில்லை மையூர்கிழார், ``எனக்குத் தெரியும், நீங்கள் இதை ஒப்புக்கொள்ள மாட்டீர்கள் என்று. தீராப்பகையும் வஞ்சினமும் இருக்கும் ஒருவனால் மட்டுமே இந்தச் செயலைச் செய்ய முடியும். எதிரியை வெட்டி வீழ்த்த நினைக்கும் தளபதிகளை வைத்துக்கொண்டு போரிடத்தான் முடியும். போர்க்களத்தில் எல்லோரும்தான் போரிடுவார்கள். அவர்களை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. மரத்தின் கிளையை வெட்டுபவனுக்கும் மரத்தையே பிடுங்கி எறிபவனுக்கும் வேறுபாடு இருக்கிறது. குருதியைக் குடிக்கும் வெறியிருப்பவனால் மட்டுமே தட்டியங்காட்டைத் தனதாக்க முடியும்.”

ஏறி மிதித்தாலும் திமிறி எழும் மையூர்கிழாரின் உறுதியும் ஆவேசமும் சோழவேழனை உலுக்கின. சட்டெனச் சொன்னான், ``இனிவரும் நாள்களுக்கு மையூர்கிழாரை ஏன் தலைமைத் தளபதியாக ஆக்கக் கூடாது?”

கொந்தளிப்பு ஏறி நிற்கும் இந்த அவையை யார் எப்படிக் கைக்கொள்வார்கள் என யாராலும் கணிக்க முடியவில்லை. சோழவேழனின் சொல், அவையைக் கூர்முனையில் நிறுத்தியது. அவையின் நடுவில் தலைகவிழ்ந்து இருந்த கருங்கைவாணன், மெள்ளத் தலைநிமிர்ந்து குலசேகரபாண்டியனைப் பார்த்தான்.

பாண்டியப் பேரரசர் பதற்றம் ஏதுமின்றிச் சொன்னார், ``இன்றைய நாள் நமக்கானதாக இல்லை. எனவே, எந்த முடிவையும் இன்று எடுக்க வேண்டாம். வழக்கம்போல் நாளைய போரை கருங்கைவாணன் முன்னெடுக்கட்டும். மற்றவற்றை நாளை இரவு பேசிக்கொள்வோம்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

சு.வெங்கடேசன்