மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான்காம் சுவர் - 4

நான்காம் சுவர்
பிரீமியம் ஸ்டோரி
News
நான்காம் சுவர் ( பாக்கியம் சங்கர் )

பாக்கியம் சங்கர்

“பெரிஸ்ஸா எங்க கஷ்டங்களைப் புரிஞ்சிக்க வந்துட்டே… நீயே மென்டல் ஆனாத்தான் ஒனக்கு எங்க கஷ்டம் புரியும், உருப்படியா வேற வேலே இருந்தா போய்ப்பாரு…” ‘உள்ளேயிருந்து சில குரல்கள்’ நாவலில் கோபிகிருஷ்ணன் இப்படி எழுதுகிறார். குணாவும் இதையேதான் என்னிடம் சொன்னார். மேலும், அவர் தன்னைக் குணமடைந்த நோயாளி என்றும் சொல்லிக்கொண்டார். அம்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்தார். பஞ்சு பஞ்சாய் வெண்ணிறத் தாடியில் பழம்போலக் காட்சியளித்தார். படர்ந்த நெற்றியில் நீறு பூசி வட்டமாய் பொட்டும் வைத்திருந்தார். கையில் ஒரு கூடைப்பந்தை வைத்திருந்தார். தினம் இருவேளை குளித்துவிடுவதாகவும் சொன்னார். தன்னை மலர்ச்சியாய் வைத்துக்கொள்வதில் தீவிரமாய் இருந்தார். கண்கள் மட்டும் எவ்வளவு முயன்றும் தூக்கத்தில் சோம்பிக்கிடந்தன.

நான்காம் சுவர் - 4

குணமடைந்தாலும் நோயாளி என்பது எத்தனை விசித்திரம். குணசேகரன் சுவாதீனமற்றவர் என்பதை அவர் சொன்னாலொழிய நம்மால் கண்டுபிடிக்க முடியாது. செக்யூரிட்டி பிளாக்கில் சர்மா டாக்டரின் பரிந்துரையின் பேரில் உள்ளே கூட்டிச்செல்வதாக குணா காவலாளிகளிடம் சொன்னார். காப்பகத்தை உள்ளிருந்து பார்த்தேன். அடர்ந்த வனத்தில் இங்குமங்குமாய்ப் பசுமை போர்த்திய உடையில் சில ஜீவன்கள் அலைந்துகொண்டிருந்தார்கள். ஒருவர் ஒரு திண்டில் குத்துக்காலிட்டு உட்கார்ந்தபடி பீடியை இழுத்துக்கொண்டே என்னைப் பார்த்துச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் எந்தப் பசுமையும் இல்லை. அவரைப் பொறுத்தவரை முகத்தை அசைத்துக்கொள்கிறார். அவ்வளவுதான். 

அந்த வெயிலிலும் சில்லிட்டு வந்த காற்றில் மருந்தின் நெடி அடித்தது. ஒருவித இறுக்கம் மனதில் கூடி அது முகத்தில் தெரிந்தது “ரொம்ப யோசிக்காத… இதுவே சிம்டம்ஸுக்கான அறிகுறிதான்… மூளையோட கெமிக்கல் கொறைஞ்சுதுனா… அப்புறம் தொட்டிக்குள்ளதான் வரணும்…” இனி எதையும் யோசிக்கவே கூடாதென்றே நடந்தேன்.

“ஆமா, இங்க வந்து எங்களலாம் பாத்து என்ன பண்ணப்போற...” 
  
“இந்தச் சோகமான வாழ்க்கையப் பத்தி ஒரு நாவல் எழுதலாம்னு இருக்கண்ணே.”

 என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். “பாக்கற உனக்குத்தான் துக்கம் சோகம் எல்லாம்… இதுங்களுக்கு அதெல்லாம் என்னன்னுகூடத் தெரியாது… ஒண்ணு சொல்றன்… துக்கத்தால மட்டும் பைத்தியம் புடிக்கறதில்லே… ரொம்ப சந்தோஷத்திலயும் பைத்தியம் புடிக்கும்…”

நான்காம் சுவர் - 4

நண்பகல் வெம்மை உச்சியில் உறைத்தது. ரெண்டு டபராக்களில் உணவை வைத்துக் கைவண்டியில் வெள்ளுடை அணிந்த பணியாளர் ஒருவர் இழுத்துச் சென்று ஒரு பிளாக்குக்குள் நுழைந்தார். பெரிய இரும்புக் கதவுகள் திறந்ததும், நாங்களும் அந்த பிளாக்கிற்குள் நுழைந்தோம். சீமை ஓடு வேய்ந்திருந்த குடில்கள். மூன்று வார்டுகள் தனித்தனியான கட்டடங்களாக  இருந்தன. அந்த பிளாக்கின் மையத்தில் ஒரு கம்பம் நட்டு சோடியம் விளக்கு பொருத்தியிருந்தார்கள். ஒரு பெரிய சின்டெக்ஸ் தொட்டியில் குடிப்பதற்காகத் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. மருந்தின் கசந்த வாசனை காற்றில் கமழ்ந்து கொண்டேயிருந்தது. பச்சைப்பசேலென்ற உடையில் உணவைப் பார்த்ததும் ஒருவர் ஓடிவந்து நைந்துபோன ஒரு அலுமினியத் தட்டை நீட்டிப் பணியாளரைப் பார்த்துச் சிரித்தார். காய்ந்த பனங்காயின் ஓட்டைப்போல அவரது தலை வறட்சிகொண்டிருந்தது. கடைவாயில் ஒழுகிய கோழை நீர் அவரது சட்டையை நனைத்திருந்தது. பக்கத்தில் வார்டன் ஒரு லத்தியுடன் விறைத்த முகத்துடன் எல்லோரையும் கவனித்தார். உணவு டபராவைப் பணியாளர் திறந்தார். ஒன்றில் தயிர்சாதமும் மற்றொன்றில் புளியோதரையும் இருந்தது.

வெகுநேரம் தட்டை நீட்டியிருந்த அந்தப் பெரியவரின் வாயிலிருந்து கோழை வடிந்து கொண்டேயிருந்தது. அவரது தட்டில் சோற்றைப் போட்டதும் அப்படியே எடுத்து முகம் முழுக்க வழிந்துகொண்டிருந்த கோழையோடு சோற்றை வாயிலிட்டுக்கொண்டார். குணாவும் பணியாளரோடு சேர்ந்துகொண்டு உணவைக் கொடுத்துக்கொண்டிருந்தார். அவரவர் வந்து வாங்கிக்கொண்டார்கள். சிலர் பசி மறந்து வானத்தை வெறித்துக்கொண்டிருந்தார்கள். பெருக்கின இடத்தையே பெருக்கிக் கொண்டிருந்தவன், ஒரு திண்டிலிருந்து குதித்துத் திரும்பவும் திண்டில் ஏறிக் குதித்தவன் எனச் சிலரை உணவுத்தட்டோடு போய் அவர்களுக்கு அவர்களின் பசியை ஞாபகப்படுத்திவிட்டுச் சோற்றுத்தட்டைக் கையில் திணித்துவிட்டு வந்தார் குணா.

மூன்றாவது வார்டில் நின்றிருந்த ஒரு இளைஞனை அழைத்தார் குணா. டபரா வண்டியில் வைத்திருந்த கூடைப்பந்தை அவனுக்கு எடுத்துக் காட்டினார். சலனமில்லாமல் இருந்த இளைஞன் உற்சாகம் கொண்டான். குணா பந்தை எறிந்தார். ஓடிவந்து அத்தனை லாகவமாய் அந்தப் பந்தை அவன் பிடித்த விதம் ஒரு விளையாட்டு வீரனுக்குரிய அழகுடன் இருந்தது. “பைத்தியம் புடிச்சாலும் வித்த மறக்கறது இல்லதான்…” என்றவர் சிரித்துக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தவரிடம் சென்றார். அவரை எப்படிச் சாப்பிட வேண்டுமென குணா சாப்பிட்டுக் காட்டிப் பயிற்சியளித்துக்கொண்டிருந்தார். பக்கத்தில் எழுந்திருக்க முடியாத குதம்போல ஒருவன் உட்கார்ந்திருந்தான். குணா அவருக்குச் சோற்றை ஊட்டினார், அதுவரை சாப்பிடாமல் இருந்த மனிதர் சாப்பிடத்தொடங்கினார். அவ்வப்போது குணாவைப் பார்த்துச் சிரிக்கிறார். பின் எதையோ சொல்ல நினைத்துப் பின் மறக்கிறார். அவனுக்கு உட்கார்ந்து உட்கார்ந்து பின்பக்கம் புண்கள் படர்ந்து சலம் வைத்திருந்தது. எந்த அசூயையும் இல்லாமல் சலத்தை ஒரு துணிகொண்டு துடைத்தெடுத்தார். பசுமை போர்த்திய பிள்ளைகளின் தேவைகள் எதுவென குணாவிற்குத் தெரிந்திருக்கிறது. இந்த மந்தைகளை வழி நடத்தும் பேராயன் அவர்.

‘தன் ஊழியம் என்னவென அவன் அறிந்துள்ளானா என்பது ஒரு பொருட்டல்ல… சிறப்பாக ஊழியம் செய்பவன் எல்லா நேரமும் புரிந்துகொள்வதில்லை…’ என்ற செஸ்லா மிலோஷின் கவிதை வரிகளைத்தான் குணாவிற்குப் பரிசளிக்கத் தோன்றியது.

அப்போதுதான் சர்மா டாக்டர் உள்ளே நுழைந்தார். லத்தியோடு விறைப்பாக இருந்த வார்டன், விறைப்பிலிருந்து இளகிப் பணிவுடன் வணக்கம் வைத்தார். “என்ன சார்… என்ன சொல்றாங்க நம்ம குழந்தைங்க…” என்று கேட்டார். “நீங்க சொல்லாததெலாம் சொல்றாங்க சார்…” டாக்டர் சிரித்துக்கொண்டார். சோற்றில் பதம் சரியாக இருக்கிறதாவென ஒரு கை எடுத்து வாயிலிட்டு ருசித்துப் பார்த்தார். “சார் நீங்களும் டேஸ்ட் பாருங்க…” என்று புளியோதரையைக் கொஞ்சமாய்க் கொடுத்தார். சோற்றை வாயில் போட்டேன். உப்பும் உறைப்புமாய்ச் சாப்பிட்டுப் பழகிய இந்த நாக்குக்கு எந்தச் சுரணையும் இல்லாத இந்தச் சோறு குமட்டவே செய்தது. இருந்தாலும், சபை நாகரிகத்திற்காக மென்று முழுங்கினேன். என் முகக்குறிப்புகளை டாக்டர் கவனித்துவிட்டார். 

நான்காம் சுவர் - 4

“சார் இந்த மனுஷப் பிறவியில ரெண்டு விஷயந்தான் பொதுவானது…. அதுக்கு மட்டுந்தான் பைத்தியம் புடிக்காது… ஒண்ணு பசி… இன்னொண்ணு செக்ஸ்… இங்க பசிக்கு மட்டுந்தான் சார் சோறு… உங்களுக்குப் புரியும்னு நெனைக்கிறேன்…” டாக்டர் சொன்னது எனக்குப் புரிந்தது. ஒரு மனிதனின் ஆதார உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த யாருக்கும் உரிமை இல்லைதான். ஆனால், என்ன செய்வது, உணர்வெழுச்சிகளைச் சமன் செய்ய நமக்கு ஆயிரம் வழிகள் உண்டு… உடல் மரத்துப்போவதே இந்த மனிதர்களுக்குக் காப்பகம் செய்யும் பெரிய ஊழியமென நினைத்துக்கொண்டேன்.

டாக்டரிடம் ஒருவர் வந்தார். பணிவாக வணக்கம் வைத்துச் சிரித்தார். இவர்களின் எல்லாச் சிரிப்புகளும் ஒரே மாதிரியான கருணையைக் கொண்டவைதான். “சார் வீட்டுக்குப் போணும் சார்… அம்மா பாக்கணும் சார்… பயமா இருக்கு சார்…” செல்வம் டாக்டரிடம் கெஞ்சினார். “செல்வம் பீடி குடிச்சீங்களா…” அவர் இல்லை என்பது போல ஆமாம் என்று தலையசைத்தார். “பீடி குடிக்கக் கூடாதுனு சொல்லியிருக்கன்ல… கரெக்டா மாத்திர சாப்பிடுங்க… வீட்டுக்குப் போகலாம்…” என்றதும் ஒரு சின்னப் பிள்ளைபோல வேகமாகத் தலையசைத்தார்.

குணா அவரது வார்டுக்கு அழைத்துச் சென்றார். இருபது பேர் படுக்கக்கூடிய கூடம் அது. பழைய இரும்புக் கட்டிலில் நைந்துபோன பாயில் செல்வம் மல்லாக்கப் படுத்து அட்டணக்கால் தோரணையில் காலாட்டிக்கொண்டிருந்தார். குணாவின் கட்டிலருகே நிறைய சாமிப்படங்கள் இருந்தன. எல்லாக் கடவுளர்களும் அந்தக் கூடத்தில் ஒட்டவைக்கப்பட்டிருந்தார்கள். அதில் பூரண ஆசியை வழங்கிக்கொண்டிருந்தார்கள் கடவுளர்கள். மொத்தம் நான்கைந்து மின் விசிறிகள்தான் சுழன்றுகொண்டிருந்தன. சுவர்கள் தன் வண்ணத்தை இழந்து பல வருடங்கள் ஆகியிருக்கும்போல. அந்தச் சுவர்களிலிருந்து வரும் அநேக வாதைகளின் குரல் சன்னமாய்க் கேட்டுக்கொண்டிருந்தது. மருந்தின் கசப்பு காரமாய் மூக்கில் இறங்கிக்கொண்டிருந்தது. குணா அவரது பெட்டியைத் திறந்தார். பெட்டியின் நடுவே ஒரு கறுப்பு வெள்ளைப் படத்தில் ஒரு குழந்தை கட்டைக் குதிரையில் உட்கார்ந்து சிரித்துக்கொண்டிருந்தது. தனக்கான மாத்திரைகளை எடுத்தார். கட்டிலுக்குக் கீழே இருக்கும் பானையில் தண்ணீரை மொண்டு மாத்திரையை விழுங்கித் தண்ணீரைக் குடித்துக்கொண்டார். கொஞ்சம் ஆசுவாசமானார். “உட்காருங்க சார்… பாத்ரூம் போய்ட்டு வந்துர்றேன்…” என்றார். உட்கார்ந்தேன். ஜன்னலின் வெளியே புங்கை மரத்தில் ஒரு காகம் வந்து அமர்ந்து தனது மூக்கைக் கிளைகளில் தேய்த்துக்கொண்டது. பக்கத்துக் கட்டிலின் பக்கம் பார்வையைத் திருப்பினேன். சுள்ளிக்குச் சட்டை போட்டதைப்போல வெலவெலவென்று இருந்தார். நான் பார்த்தபோதுதான் தெரிந்தது, அவர் இவ்வளவு நேரம் என்னையேதான் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று. எவ்விதச் சலனமுமற்று இருந்த அவரது முகம் பீதியை வரவழைத்தது. இருந்தாலும் சிரித்தேன். அவர் சைகையால் குடிப்பதைப்போலக் காட்டி “குடிக்காத… குடிக்காத…” இதையே அவர் திரும்பத் திரும்பச் சொன்னார். என்ன சொல்வதென்று தெரியாமல் பார்வையை ஜன்னலின் பக்கம் திருப்பினேன்.

குணாவைப் பற்றி டாக்டர் சொன்னதைக் கேட்டேன். “நீங்கதான் நல்லா இருக்கீங்களேண்ணே… அப்புறம் ஏன் வீட்டுக்குப் போகல?” குணா சிரித்தார். “பைத்தியம்ங்கறது சுகர் மாதிரி. ஏறவும் கூடாது… இறங்கவும் கூடாது… கன்ட்ரோல்ல வச்சிக்கணும்… இப்ப நா கன்ட்ரோல்ல இருக்கன்… நல்லா ஆயிடலை... தொட்டிக்குள்ள இருந்து கன்ட்ரோல் ஆகிப் போனாலும்… வெளிய இருக்குறவனுங்க பைத்தியமாத்தான் பாப்பானுங்க…” தெளிவாகச் சொன்னார்.

குணாவைப் பரிசோதித்த சர்மா டாக்டர் ‘இம்ப்ரூவ்மென்ட் பேஷன்ட்’ என ரிப்போர்ட்டில் எழுதி வீட்டிற்குப் போகலாம் என்று சொன்னபோது குணா மிகுந்த சந்தோஷமாகக் காணப்பட்டார். காப்பகமே வண்டி வைத்து ஒரு வார்டனையும் கூடவே அனுப்பி வைத்தது. திண்டிவனத்திற்கு உள்ளே ஒரு கிராமத்தில் அவரது வீடு. தன் பிள்ளையைப் பத்து வருடம் கழித்துப் பார்க்கப் போவதில் அளப்பரிய சந்தோஷத்தில் திளைத்திருந்தார் குணா. அந்த வாகனத்தையும் வார்டனையும் வித்தியாசமாகப் பார்த்தார்கள் ஊர் மக்கள். உற்சாகமாக இறங்கினார் குணா. வீட்டில் விசேஷம் என்பதாகத் தெரிந்தது. உள்ளே நிறைய பேர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். குணாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது குணாவின் மனைவி வெளியே வந்தார். குணா தன் மனைவியைப் பார்த்தார். அவரது முகம் வரவேற்கத் தயாராக இல்லாது கலவரத்தில் மாறியது. தன் வருகை அவர்களுக்கு எந்த சந்தோஷத்தையும் கொடுக்கவில்லை என்பது தன் மனைவியின் முகக்குறிப்புகளில் தெளிவாகத் தெரிந்தது.

ஒரு பெரியவர் குணாவின் தோளைத் தொட்டார். குணாவைச் சிறு வயதிலிருந்தே பார்த்தவர். வாகனத்தைக் கொஞ்ச தூரம் தள்ளி நிறுத்தச் சொல்லிவிட்டு இருவரும் நடந்தார்கள். குணாவிற்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. “குணா, உன் பொண்ணுக்கு இன்னிக்கு நிச்சயதார்த்தம்ப்பா…” என்றதும் நடந்து வந்த குணா நின்று பெரியவரைப் பார்த்தார். “அப்பனுக்கு மூள பிசகிடுச்சுன்னா காலப்போக்குல புள்ளைக்கும் வந்துரும்னு காலங்காலமா நம்பிட்டு இருக்கானுங்க… எவனும் ஒம் பொண்ணக் கட்றதுக்கு வர்ல… வெளியூர்ல ஒரு பையன புடிச்சு இட்டாந்துகுதுபா உன்பொஞ்சாதி… நல்ல பையன்… நல்ல உத்யோகம்…” குணாவின் முகம் இறுக்கமாகி அமைதியாக நடந்து வந்தார். பெரியவர் தயக்கமாய் ஆரம்பித்தார் “அப்புறம் குணா… பொண்ணோட அப்பா எங்கனு கேட்டதுக்கு, செத்துப்போயிட்டாருன்னு சொல்லிட்டாங்கப்பா…” என்று பெரியவர் குணாவின் தோளை அழுத்தினார். குணா எவ்விதச் சலனமுமில்லாமல் பெரியவரைப் பார்த்து “எம் பொண்ணப் பாக்கணும்… கூட்டிட்டு வரியா மாமா…” என்று சொன்னபோது குணா அறியாமலேயே அவர் கண்களிலிருந்து கண்ணீர் பொங்கியது.

பட்டுப்புடவையில் தலை நிறைய பூச்சூடி கைகளில் வளையல்கள் குலுங்க வந்து நின்றாள் மலர்விழி. தளர்ந்திருந்த தகப்பனைக் கண்ணீரோடு பார்த்தாள். குணா முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு “மலரு… எப்படிமா இருக்க…?” என்று கேட்டார். தன் பையிலிருந்து மஞ்சள் நிறப் புடவையொன்றை எடுத்தார். “அப்பா உனக்குப் பிடிச்ச மஞ்சக் கலர் புடவ வாங்கியாந்துருக்கேன்… இந்தாம்மா…” என்றதும் மலர்விழி ஓடிவந்து அப்பாவைக் கட்டிப்பிடித்து அழுதாள். குணா தன் பிள்ளையை ஆற்றுப்படுத்தினார். “எதுவுமே பண்ணாத இந்தப் பைத்தியக்காரனுக்காக… நீ ஏன்மா அழணும்… நா செத்துப்போனவனாவே இருக்கட்டும்… எதுக்குமே பிரயோசனப்படாத இந்த அப்பா உனக்கு வேணாம்மா… நீ நல்லா இருந்தா அது போதும்” என்று குடிசையிலிருந்து வெளியேறினார். திரும்பிய குணா “என்னக் கட்டிக்கிட்டு எதுக்கும் சுகப்படாத உன் அம்மாகிட்ட அப்பாவ மன்னிச்சுரச் சொல்லும்மா…” என்று காப்பக வண்டியில் ஏறி உட்கார்ந்துகொண்டார்.

சமூகம் எனும் நாலு பேர்களிடமிருந்து விடுபட்டுத் திரும்பவும் காப்பகத்துக்குள்ளேயே வந்தடைந்தார் குணா. அன்றிலிருந்து ரெண்டு வருடம் யாரிடமும் ஒரு வார்த்தைகூடப் பேசாத மௌனியாக இருந்திருக்கிறார். கட்டைக்குதிரையில் சிரித்துக்கொண்டிருந்த மலர்விழியைப் பார்த்தவர் ட்ரங்க் பெட்டியை மூடினார். ரெண்டாம் வார்டில் ஒருவர் வம்படி செய்துகொண்டிருப்பதாக குணாவிற்கு அழைப்பு வந்தது. அம்மனிதரை ஆற்றுப்படுத்த வார்டுக்குள் நுழைந்தார் குணா எனும் பேராயன்...

- மனிதர்கள் வருவார்கள்...

ஓவியங்கள்: ஹாசிப்கான்