
ஒரு பெஞ்ச், ஒரு லைட், ஒரு நாடகம்!
சமீபகாலமாக `கி.ரா-வின் குழம்பு’ நாடகம் பற்றிய பேச்சு இலக்கியச் சூழலில் உலவிக்கொண்டிருந்தது. `கி.ரா எழுதிய நாடகம் நிச்சயம் கிராமத்துப் பின்னணியிலதான் இருக்கும். எப்படியாவது அதைப் பார்த்துடணுமே..!’ என யோசித்துக்கொண்டிருந்தபோது, ராயபுரத்தில் அந்த நாடகத்தைக் காட்சிப்படுத்தப்போவதாகச் செய்தி கிடைத்தது. நாடகம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே அங்கு சென்று காத்திருந்தேன்.

நாடகம் நடத்துவதற்கான அரங்கமோ, நடிகர்களுக்கான வசன ஒத்திகையோ, இசைக்கருவிகள் சரிபார்க்கும் ஓசையோ எதுவுமே அங்கில்லை. `ஒருவேளை இங்கிருந்து வேறு இடத்துக்குக் கூட்டிச் சென்று நாடகம் நடத்துவார்கள்போல!’ என்றெண்ணிக் காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஓர் அறிவிப்பு. ``நாடகம் தொடங்கப்போகுது. அவங்க அவங்க உக்காந்திருக்கும் சேரை மட்டும் அப்படியே எடுத்துவந்துடுங்க’’ என்று ஒருவர் வந்து சொல்லிட்டுப்போக, குழப்பத்தின் உச்சிக்கே சென்றுவிட்டேன்.
அவர்கள் அறிவித்ததுபோல உட்கார்ந்திருந்த நாற்காலியோடு சென்று பார்த்தால், அந்த வீட்டின் மொட்டைமாடியில் இரண்டே இரண்டு லைட்டை மட்டும் வைத்துக்கொண்டு, நாடகம் நடத்தத் தயாராக இருந்தனர் நாடகக் குழுவினர்.
ஒரு பெஞ்ச், மூன்று துண்டுகளுடன் `பாம்… பப்பாம்... பப்பாம்பப்பப்பாம்…’ எனப் பாடிக்கொண்டு ஆனந்த் சாமி, ரவீந்திரா விஜய், மாயா மூவரும் அறிமுகமானார்கள். ``இந்த நாடகம், கி.ரா தொகுத்த நாட்டுப்புறக் கதைகள்ல இருந்து கொஞ்சமும் எங்க கற்பனையை அதிகமும் சேர்த்துக் கலவையாகச் செய்யப்பட்ட நாடகம். அதனாலதான் இதுக்கு `கி.ரா-வின் குழம்பு’னு பேரு” என்று நாடகத்தைப் பற்றிய அறிமுகத்தோடு தங்களைப் பற்றியும் அறிமுகம் செய்து நாடகத்திற்குள் சென்றனர்.
மூன்று பேருமே கிட்டத்தட்ட 30 கதாபாத்திரங்களாக மாறி மாறி, மிகவும் உற்சாகமாக நாடகத்தை நடத்திச்சென்றனர், கி.ரா-வின் எழுத்துபோல நாடகமும் நாட்டார் வழக்குகளோடு உற்சாகமாக இருந்தது.
`` `கி.ரா-வின் குழம்பு’ நாடகம் முதன்முதல்ல 2010-லதான் நடத்தப்பட்டது. அப்ப ஆங்கிலம், இந்தி, தமிழ்னு பல மொழிகளில் கிட்டத்தட்ட 25 முறை நடத்தினோம். போன வருஷம் கி.ரா-வோட 95-வது பிறந்த நாள் விழா புதுச்சேரியில கொண்டாடினாங்க. அப்போ `இந்த நாடகத்தை மறுபடியும் போட முடியுமா?’னு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்க, இந்த நாடகத்தைப் புதுவடிவத்துல கொண்டுவர, இதையே ஒரு வாய்ப்பா எடுத்துக்கலாம்னு திட்டம்போட்டோம்.

இந்த நாடகத்துல இருக்கும் கதைங்க எல்லாமே, கி.ரா தொகுத்தது, வாயால சொன்னது. சில கதைகள் முழுசாவும் சில கதைகள் சின்னச் சின்னதாவும் சேர்த்து ஒண்ணா தொகுத்து எங்க கற்பனையைச் சேர்த்து ஒரு கதையா கோத்தோம். இதுவரை 57 முறை இந்த நாடகத்தை நடத்தி யிருப்போம். இதை ஒவ்வொரு முறை நடத்தும்போதும் நாங்க ஏதாவது புதுசா சேர்த்துக்க முடியுமானு முயற்சி பண்ணுவோம்.
இந்த நாடகத்தை நடத்த பெருசா எதுவும் தேவையில்லை. ஒரு பெஞ்ச், ஒரு லைட் அவ்வளவுதான். லைட் எப்பவும் எங்க பையிலயே இருக்கும். எங்கே போனாலும் பெஞ்ச் எளிதில் கிடைச்சுடும். அதனால பொருளாதாரரீதியில பெரிய சிக்கல்னு எங்களுக்கு எதுவும் இல்லை.
இந்த நாடகத்துல மொத்தமே மூணு நடிகர்கள், ஒரு பெஞ்ச் அவ்வளவுதான். ஒரு நடிகர், அந்த பெஞ்சையும் தன் உடம்பையும் வெச்சுக்கிட்டு பத்துக்கும் மேற்பட்ட பல கேரக்டர்களைக் கொண்டுவரணும். இதுல அஞ்சு பாட்டுக்குமேல இருக்கு. மியூஸிக் இல்லாம அதை எல்லோரும் ரசிக்கிற மாதிரி செய்றதுதான் பெரிய சவாலே! இதுல நகைச்சுவையோட சேர்ந்து அரசியலும் இருக்கும். பார்க்கிறவங்களுக்கு ஏற்றமாதிரியான சில விஷயங்களும் அதுல இருக்கணும்.
இந்த நாடகத்தை ஒவ்வொரு ஏரியாவுல நடத்தும்போதும் அவங்க பகுதிகள்ல கேள்விப்பட்ட கதைகளா இருக்குன்னு சொல்றாங்க.
அப்படித்தான் ஒருமுறை நீலகிரி பழங்குடி மக்கள் மத்தியில் இதை நடிச்சப்போ அங்க இருக்கும் மக்களும் `இதுல இருக்கிற கதைகள் எல்லாமே நாங்க முன்னாடியே கேள்விப்பட்ட கதைகள்’னு சொன்னாங்க. இப்படி எல்லோராலயும் ஈஸியா தொடர்புபடுத்திக்கிற மாதிரி இருக்கிறதுதான் இந்த நாடகத்தோட வெற்றி.
இந்த நாடகத்தை கி.ரா முதல்முறையா பார்க்கும்போதே அவருக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. ஒவ்வொரு முறையும் நாங்க இதுல மாற்றம் செய்யும்போதெல்லாம் கி.ரா-கிட்ட சொல்லி, சில அறிவுரைங்களைக் கேட்டுக்கிட்டு எங்களை உற்சாகப்படுத்திப்போம். சீக்கிரமே இந்த நாடகம் நூறாவது முறையாக அரங்கேற இருக்கு. அதைப்பற்றி எழுதக்கூட நீங்கதான் வரணும்’’ என்றனர்.
இந்தக் குழம்பு ருசியான குழம்புதான்!
அழகுசுப்பையா ச. - படம்: ஜெ.வேங்கடராஜ்