பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

நேற்றைய கதையல்ல; இன்றைய தேவை!

நேற்றைய கதையல்ல; இன்றைய தேவை!
பிரீமியம் ஸ்டோரி
News
நேற்றைய கதையல்ல; இன்றைய தேவை!

நேற்றைய கதையல்ல; இன்றைய தேவை!

‘வீரயுக நாயகன் வேள்பாரி’ - ஆனந்த விகடன் வாசகர்களின் மனம் கவர்ந்த மகத்தான கதை. வாரந்தோறும் அடுத்து என்ன நடக்கும் என்று ஆவலோடு எதிர்பார்ப்பைத் தூண்டும் பாரி, நூறாவது வாரத்தை நெருங்கியிருக்கிறான். போரும் உச்சத்தை எட்டியிருக்கிறது. இந்தக் கொண்டாட்டத் தருணத்தில் பாரி உருவாக்க நினைவுகளைப் பகிர்கிறார் சு.வெங்கடேசன்.

நேற்றைய கதையல்ல; இன்றைய தேவை!

எத்தனையோ தமிழ் மன்னர்கள் இருக்க, ஏன் பாரியைத் தேர்வு செய்தீர்கள்?

“சங்க இலக்கியத்தில் நான் கண்ட காவியத்தலைவன் வேள்பாரிதான். பாரி வரலாற்று நாயகன். கொடை வள்ளலும் குன்றா வீரமும் கொண்ட மாமனிதன்.முல்லைக்குத் தேர் கொடுத்ததும், மூவேந்தர்களை வென்று முடித்ததும் ஒரே செயலின் இரு விளைவுகள்.  இயற்கையை நேசிப்பதும், இயற்கையைக் காப்பதும்தான் பாரியின் அடையாளம். அதனால்தான் பாரியை எழுத முடிவுசெய்தேன்.

பாரி, நேற்றைய கதையல்ல. இன்றைய தேவை.”

“வேள்பாரி நூறு வாரங்களைத் தொட்டுவிட்டது. இந்தத் தொடரின் சவால் என நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?”

“1980-க்கும் முன்னால் தொடர்கதை படித்த வாசகர்களும், முதன்முதலாகத் தொடர்படிக்கும் இன்றைய இளந்தலைமுறை வாசகர்களும் ஒருங்கே படிக்கும்  தொடர் இது.

முந்தைய தலைமுறை வாசிப்பிலிருந்து முற்றிலும் புதியதொரு கதைசொல்லும் முறையில் வேள்பாரி எழுதப்படுகிறது. நவீனக் கதைசொல்லலின் அனைத்து வடிவங்களையும் இதில் பயன்படுத்தி யுள்ளேன். முதலில் பின்தொடர சற்றே சிரமப்பட்ட வாசகர்கள்கூட பின்னால் இந்தக் கதை சொல்லல் முறைக்குத் தங்களைத் தயார் படுத்திக்கொண்டனர்.

‘டிஜிட்டல் உலகில் மூன்று பத்திகளுக்கு மேல் யாரும் எதையும் படிப்பதில்லை’ என்று கூறப்பட்ட நிலையில் வாரந்தோறும் பத்துக்கும் மேற்பட்ட பக்கங்களுடன் நூறுவாரங்கள் கடந்து பயணிக்கிறது வேள்பாரி. இதற்கு இன்னொரு முக்கிய காரணம், இளந்தலைமுறையின் வேகத்துக்கும் நுட்பத்துக்கும் ஈடுகொடுக்கும் மொழியில் இது எழுதப்பட்டுள்ளது. Game of Thrones 7 Season-ஐயும் பார்த்துவிட்டு உட்கார்ந்திருக்கும் இன்றைய தலைமுறையிடம் அதைக்கடந்த கதையும் வாழ்வும் புனைவும் நம்மிடம் இருக்கின்றன என்பதை அவர்கள் வியக்கும் அளவுக்குச் சொல்ல வேண்டும்.

இவை இரண்டும்தான் வேள்பாரி சந்தித்த மிகமுக்கியமான சவால் என்று நினைக்கிறேன்.”

வரலாற்று நாவலான இதில், மிகுபுனைவு (ஃபேண்டஸி) அதிகம் இருக்கிறதே?

“மரபார்ந்த சமூகத்தின் அடியுரமாகத் தொன்மமும், மிகுபுனைவும் (ஃபேண்டஸி) செழித்துக்கிடக்கும். சங்க இலக்கியத்தில் எவ்வளவோ உதாரணங்களைச் சொல்ல முடியும், அன்னம், அசுணமா, சக்கரவாகப்பறவை, அறுபதாம் கோழி, ஆளி என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

அவற்றைப்பற்றித் தொடர்ந்து நாம் பேசவில்லை. மேற்கத்திய ஃபேண்டஸி குறியீடுகளும், தொன்மங்களும் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்றன. அவர்களின் கிரேக்கத்தொன்மத்துக்கு இணையானது, நம்முடைய தொன்மக்கதைகளும், ஃபேண்டஸிக் கதைகளும்.

நேற்றைய கதையல்ல; இன்றைய தேவை!

இன்றைக்கு வரை ஐரோப்பியக் கலை உலகம் கொண்டாடும் கதாபாத்திரமெல்லாம் கிரேக்க வீரயுககாலத்தில் எழுதப்பட்ட கதாபாத்திரங்கள்தான். அதேகாலத்தில் தமிழ் நிலத்தில் உருவானவன்தான் வேள்பாரி. சின்னஞ்சிறு டிராய் நகரை மொத்த கிரேக்கப்படையும் சூழ்ந்து தாக்கியதைப் போலத்தான் சின்னஞ்சிறு பறம்புநாட்டை மூவேந்தர்களின் கூட்டுப்படை சூழ்ந்து தாக்கியது.

ஹெக்டரையும், அகிலீஸையும்விட மாவீரம் பொருந்திய காவியநாயகன் வேள்பாரி.  அவனைப்பற்றி எழுதும்போது கதை கூறலின் அனைத்து முறைகளையும் சாத்தியப்படுத்தினால் மட்டுமே உண்மையை நெருங்கவும், முழுமைப்படுத்தவும் முடியும். அதைத்தான் நான் செய்துள்ளேன்.

அதுமட்டுமல்ல, தென்னிந்தியாவை அதிலும் குறிப்பாகத் தமிழகத்தை Ethnography Surprise Land என்று மானுடவியலில் கூறுவார்கள். சமூக, பண்பாட்டு வரலாற்றில் பல்லாயிரம் ஆண்டுக்கால முடிச்சுகள் அவிழ்படாமல் கிடக்கும் நிலம் இது. இந்த முடிச்சுகளை அவிழ்த்தால் மேற்குலகின் திகைப்புகள் பொலிவிழக்கும்.”

வேள்பாரி பிற்காலத்தில் ஒரு வரலாற்று ஆவணமாகப் பார்க்கப்படுமா? ஆமென்றால் இதிலுள்ள புனைவுத்தன்மை குறித்து என்ன சொல்வீர்கள்?

“இலக்கியத்தை வரலாறாகப் பார்ப்பது ஆபத்தானது. இரண்டின் வேலைகளும் வெவ்வேறானவை. இலக்கியம் வரலாற்றைத் தனக்கான பாடுபொருளாக எடுத்துக் கொள்ளும். வரலாற்றின் இடைவெளியை நிரப்பும். வரலாற்றின் முழுமையை உருவாக்க முயலும். ஆனாலும் அது இலக்கியம்தானே தவிர வரலாறல்ல.

இலக்கியத்தின் வேலை மனிதனின் அக உலகில் நடக்க வேண்டிய ரசாயனமாற்றம் சார்ந்தது. வரலாற்றின் வேலை முற்றிலும் புறவயமானது.”

`முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி’ என்பது இத்தனை நூற்றாண்டுகளாகத் தொன்மமாகப் பார்க்கப்பட்டு வந்தது. உங்கள் தொடர் அதை உடைத்தது. அந்த அத்தியாயம் எழுதியபோது உங்கள் மனநிலை, அந்த அத்தியாயம் எழுதும் எண்ணம் பிறந்தது பற்றிக் கூறுங்கள்...

“இத்தொடர் எழுத ஆரம்பித்ததில் இருந்து மனதுக்குள் இருந்த கேள்வி இதுதான். ஈராயிரம் ஆண்டாக அந்த ஒற்றை வரியின் வழியாகத்தான் பாரி மீண்டும் மீண்டும் அறியப்படுகிறான். அவ்விடத்தை எப்படிக் கையாளப் போகிறோம்?

உதிரும் இலையின் பின்நரம்பை வைத்து மரத்தின் வயதையும் தன்மையையும் கண்டறியக்கூடியவன் வேள்பாரி. இயற்கையைப்பற்றிய அவனது அறிவும் அவதானிப்பும் இணையற்றது. அப்படிப் பட்டவன் முல்லைக்கொடிக்குத் தேரைத் தருவது எளியதொரு கொடைச்செயலாக மட்டும் இருந்திருக்க முடியாது. அதைக் கடந்த ஒன்றாகத்தான் இருந்திருக்க முடியும்.

நான் உருவாக்கியுள்ள பாரியின் குணநலனும் பண்பும் இந்நிகழ்வை எப்படிக் கையாளும் என்பதைப் பார்க்கும் ஆசை தொடக்கம் முதல் எனக்கும் இருந்தது. குமிழ் நிறைய வண்ணங்களை வைப்பதுதான் நம் வேலை,  தூரிகையால் அதை எடுத்துக் கலக்கும்போது உருவாகும் நிறத்தை யாரால் முன்னுணர முடியும்?

முல்லைக்குத்  தேர் கொடுத்தான் பாரி - இதுமட்டுந்தான் என்கையில் இருந்த வண்ணம். அதைக் காதலின் உச்சத்தில் கொண்டுபோய் மலரவைத்தவர்கள் பாரியும் ஆதினியும்.

கதாபாத்திரத்தின் எல்லாச் செயலுக்கும் நாம் உரிமை கொண்டாடிவிட முடியாது. ஏனென்றால், கதாபாத்திரம் என்பது நான் கூடுபாய்ந்த இடம்தான். கூட்டின் தன்மைக்குக் காலமும் சூழலும்கூட உரிமைகொண்டாடிக்கொள்ள முடியும்.”

`வீரயுகநாயகன் வேள்பாரி’ என்ற தலைப்புக்கு முன் நீங்கள் யோசித்த மற்ற தலைப்புகள் என்ன?


“வேள்பாரி என்று எழுதி, கீழே அடைப்புக்குறிக்குள் ‘வீரயுக நாயகன்’ எனக் குறிப்பிட்டிருந்தேன். ஆனந்த விகடனின் அன்றைய ஆசிரியர் ரா.கண்ணன், கீழே அடைப்புக்குறிக்குள் இருக்கும் வீரயுக நாயகன் என்பதை வேள்பாரிக்கு முன்னால் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்று கூறினார். எனக்கும் சரியென்று பட்டது. அதுவே தலைப்பானது.”

உங்கள் தொடரில் எத்தனை சதவிகிதம் வரலாறு? எத்தனை சதவிகிதம் புனைவு?

“ஐம்பொன் சிலை உருவாக்கப்பட்டபின் உலோகங்களை எப்படிப் பிரித்தறிவது?”

தமுஎச-வில் பொறுப்பு, ஆராய்வுப் பணிகள், பயணங்கள் என்பதற்கு இடையே திடீரென்று வேள்பாரியின் உலகத்துக்குள் மனதளவில் சென்றுவரும் சவாலை எப்படிச் சமாளித்தீர்கள்? 

“இந்தக்காலம் முழுவதும் சங்க இலக்கியத்தின் ஏதாவதொரு நூல் கையில் இருக்கும்படி பார்த்துக்கொண்டேன். குறிப்பாக 1910-லிருந்து 1950 வரை சங்க இலக்கியம் தொடர்பாக வெளிவந்த பெரும்பாலான நூல்களை வாசித்தேன். அந்த உலகம் என்னை விட்டு அகலாமல் இருக்கப் பார்த்துக்கொண்டேன்.

புனுகுப்பூனையின் புனுகு வேப்பமுத்து அளவுதான் இருக்கும், ஆனால் வீடுமுழுவதும் மணம்வீசும். அப்படித்தான் குறுந்தொகையின் ஒரு பாடல் உங்களின் மொத்தப் பயணத்திலும் பறம்பு மலையின் வாசனையைத் தவறவிடாமல் பார்த்துக்கொள்ளும்.

ஆனாலும் வாழ்க்கை அதனினும் வலிமை வாய்ந்தது. நம்மை அடித்துத் தூக்கிப்போட அதற்குத்தான் எத்தனை கைகள் இருக்கின்றன. மண்ணில் விழுந்து புரண்டு மீண்டும் பறம்பு வந்து சேருவேன். இப்படியாக சமாளித்தேன்.”

இந்தத் தொடருக்காக நீங்கள் மேற்கொண்ட பயணங்கள் பற்றி...

“கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக மலைமக்களை நோக்கி எண்ணற்ற பயணங்களை மேற்கொண்டுள்ளேன். அப்பயணங்களே இத்தொடரை எழுதும் நம்பிக்கையைக் கொடுத்தது. காடறிதல் ஒரு கலை. சிறந்த ஆசான்களின் வழியே காடறிய வாய்ப்பு கிட்டியவன்  பாக்கியவான். நான் அப்பாக்கியம் பெற்றவன்.  என்னை வழிநடத்தியவர்களின் பின்னே எந்த வியப்போடு நான் பயணப்பட்டேனோ, அதே வியப்போடு வாசகர்களைப் பறம்புமலைக்கு அழைத்துச் சென்றுள்ளேன்.

ஆழியாற்றின் மேல்கடவில் இருக்கும் காடர்கள் குடியிருப்புக்கும் நீலகிரி மலையின் தென்கிழக்கு மூலையில் இருக்கும் செம்மனாரைக்கும் போய்த் திரும்பினால் நீங்கள் எவ்வியூருக்கு அருகில் போய்வந்த அனுபவத்தை உணர்வீர்கள்.

பொதிகை மலையின் உச்சியில் உள்ள இஞ்சிக்குளம் காணிகளிடம் பேசிப்பாருங்கள். மலையாளம் பிரிவதற்கு முன்பு இருந்த  ஆதித்தமிழின் அழகை அனுபவிப்பீர்கள்.

மலையெங்கும் நீலக்குறிஞ்சி பூத்திருக்கும் காட்டை எதிர் விளிம்பில் நின்று பாருங்கள், கபிலன் சொற்களை ஏன் சுருக்கிக் கொண்டான் என்பது புரியும். இப்படி நான் உணர்ந்து, அனுபவித்து, புரிந்து கொண்டதைத்தான் எழுதிப் பார்த்துள்ளேன்.”

போர்க்காட்சிகள் பற்றிய குறிப்பு இத்தனை துல்லியமாக இதுவரை எந்த இலக்கியத்திலாவது பதியப்பட்டிருக்கிறதா?

“நானறிந்த வரை இல்லை. நமது புராணங்களில் எழுதப்பட்ட மந்திர தந்திரக்காட்சிகளையே போர்க்களக் காட்சியாகத் திரும்பத்திரும்ப எழுதிக்கு வித்துள்ளனர்.

நம் வீரக்கலைகள் (Martial Arts) பற்றி எந்த ஆய்வும் புனைவும் இதுவரை சொல்லிக்கொள்ளும்படி எழுதப் படவில்லை.

ஒரு பெரும் போரில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், உத்திகள், போர் தொடர்பான நடைமுறைகள், முன்தயாரிப்புகள், விதிமுறைகள், ஆகியவற்றைப்பற்றி மிக விரிவாகவும் முழுமையாகவும் இதில் எழுதியுள்ளேன். அதனால்தான் போரினை முப்பது அத்தியாயங்களுக்கு  மேல் விரிக்க முடிந்தது. வாசகர்கள் நாகக்கரட்டின் மேல்நின்றுகொண்டு தட்டியங்காட்டுப் போரைத் துல்லியமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இது தொடர்பான எனது ஆய்வே தனித்த புத்தகமாக எழுதக்கூடியது.”

பரிசல் கிருஷ்ணா