
ஓவியம்: கார்த்திகேயன் மேடி
அந்த அமெரிக்கப் பெண்ணுக்கு வயது 16. ஆனால், வயிற்றில் ஒரு குழந்தை. குழந்தையின் அப்பாவோ குடிகாரன். வேறுவழியின்றி திருமணம் நடந்தது. குழந்தை பிறந்த 17வது மாதத்தில் விவாகரத்தும் நடந்தது. அந்தக் குழந்தை அதன் தாத்தா, பாட்டியுடனே வளர்ந்தது. சிறுவயதிலேயே அறிவியல்மீது ஆர்வம். 5 வயது ஆனபோது, 1969-ல், நிலாவில் காலடி வைத்தார் நீல். அதைப் பார்த்ததிலிருந்தே விண்வெளிக்குப் போய்விட வேண்டுமென்ற ஆசை அந்தக் குழந்தைக்கு. பாட்டி கதை சொன்னால் கூட அது வானத்தில் நடந்ததாக இருந்தால்தான் கேட்பான்.

பாட்டியோ செயின் ஸ்மோக்கர். ஒருமுறை காரில் சென்றுகொண்டிருந்தபோது ரேடியோவில் ஒரு சிகரெட் நம் வாழ்நாளை எவ்வளவு குறைக்கும் என ஒரு விளம்பரம் சொன்னது. பின்சீட்டில் சும்மா உட்கார்ந்திருந்த 6 வயது சிறுவன் கணக்கு போட்டான். “பாட்டி... நீ உன் வாழ்நாளில் 12 வருஷத்தை சிகரெட்டால தொலைச்சிருக்க!” பாட்டி உருகிவிட்டார். தாத்தாவோ வண்டியை நிறுத்திவிட்டு சிறுவனைப் பார்த்தார். அந்தப் பார்வையின் அர்த்தம் அப்போது அந்தக் குழந்தைக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை.
அந்தக் குழந்தைக்கு 30 வயது ஆனது. வால் ஸ்ட்ரீட்டின் பெரிய நிறுவனத்தில் உயர் பதவி. அந்த இன்வெஸ்ட்மென்ட் கம்பெனியில் 30 வயதில் சீனியர் வைஸ் பிரெஸிடென்ட் ஆனது அவர் மட்டும்தான். அந்த ஆண்டு அவருக்கான போனஸ் மட்டுமே சில கோடிகள் காத்திருந்தது. அந்தச் சமயத்தில் “நான் ரிசைன் பண்றேன் பாஸ்” என்றார். இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து அந்த முடிவைச் சொல்லியிருந்தால் கையில் பல கோடி கிடைத்திருக்கும். ஆனால், அதைப் பற்றி யோசிக்கவில்லை. அதுதான் சரியான தருணம் என நினைத்தார். பணம் போனால் வரும்; ஆனால் வாய்ப்பு போனால் வராது என்பது அவருக்குத் தெரியும். தன்னால் அந்த கோடிகளைப்போலப் பல மடங்கு சம்பாதிக்க முடியும் என நம்பினார். இது நடந்தது 1994-ல். அந்தக் குழந்தைதான் இன்று உலகின் நெ.1 பணக்காரர். ஜெஃப் பஸாஸ்; ஆன்லைன் அண்ணாச்சி கடையான அமேசானின் நிறுவனர்.

அப்படி என்ன பொன்னான வாய்ப்பு? ஜெஃப் வேலை செய்த நிறுவனத்தின் முக்கியப் பணியே வளர்ந்து வரும் நிறுவனங்களில் முதலீடு செய்வதுதான். அதற்காக இணையத்தைத் துழாவிக்கொண்டிருந்தபோது கண்ணில்பட்ட ஒரு டேட்டா ஜெஃபை யோசிக்க வைத்தது. இணையத்தைப் பயன்படுத்துபவர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 2300 மடங்கு கூடுவதாகச் சொன்னது அந்தப் புள்ளி விவரம். இந்த ஆண்டு 1000 பேர் பிரவுஸ் செய்தால் அடுத்த ஆண்டு அந்த எண்ணிக்கை 23 லட்சம் ஆகும். ஜெஃபின் கைக்கு அற்புத விளக்கு கிடைத்தது. அதைச் சரியாகத் தேய்த்தால் ஜீபூம்பா கிடைத்துவிடும்.
இன்வெஸ்ட்மென்ட் வேலை செய்துகொண்டு யோசித்தால் ஜீபூம்பா எப்படி வரும்? ஆசை தோசை அப்பளம் வடைதான் . வேலையை விட்டுவிட்டதால் ஜெஃப் கவனம் செலுத்தி யோசிக்க முடிந்தது. ஒரு பயணம் தன் வேலையை இலகுவாக்கும் என நம்பினார். மனைவியையும், தன் அன்பான நாயையும் மட்டும் அழைத்துக்கொண்டு காரில் கிளம்பிவிட்டார் ஜெஃப். திரும்ப வரும்போது அவரிடம் அமேசானின் ப்ளூ பிரின்ட் தயார். ஜெஃபின் மூளைக்குள் `கத்தி’ தீம் மியூசிக் போல ஒன்று ஓடியது.
இணையம் மூலம் பொருள்களை விற்பதுதான் ஐடியா. என்ன என்ன பொருள்களை இணையம் மூலம் விற்க முடியுமென ஒரு பட்டியலிட்டார்.ஜெஃபின் கறாரான தேர்வுக்குத் தப்பி 20 பொருள்கள் கடைசிப் பட்டியல் வரை முன்னேறின. அதில் முதலிடத்தில் இருந்தவை... புத்தகங்கள். அதற்குக் காரணம் இருந்தது. விற்பதற்குப் பல லட்சம் புத்தகங்கள் உண்டு. அதனால் எல்லோரையும் சென்றடைய முடியும். போலவே, அத்தனை லட்சம் புத்தகங்களையும் ஒரே கடையில் அடுக்கி வைக்க முடியாது. ஆனால், இணையத்தில் அது சாத்தியம்.
ஜெஃப் ஒரு வெறித்தனமான வாசகர். புத்தகங்களால் உலகை மாற்ற முடியும் என நம்புகிறவர். ஆனால், அவற்றை இணையம் மூலம் விற்று அதன் சந்தையையே மாற்றியமைக்க முடியும் என அதுவரை அவர் நம்பவில்லை. தன் ஃபேவரைட் ஹாபியான புத்தகங்கள், தன் பிஸினஸின் பிள்ளையார் சுழியாக மாறப்போகிறது என்பதில் ஜெஃப் டபுள் ஹேப்பி. வீடு திரும்பியதும் வேலையில் இறங்கினார். பேய்த்தனமாக வேலை செய்தார்.

தன் திட்டத்தைச் சில முதலீட்டாளர்களிடம் சொன்னார் ஜெஃப். நம்பியவர்கள் பணம் தந்தார்கள். நண்பர்கள், உறவினர்களுக்கெல்லாம் ஜெஃப் அப்போதே சூப்பர் ஸ்டார். அதனால் அவர்களும் தங்களால் ஆன பணத்தைக் கொடுத்தனர். இணையம்தான் கடை என்றாலும் முகவரிக்கு ஓரிடம் வேண்டுமே!

ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் ரெகார்டிங் ஸ்டூடியோ அவர் கார் கேரேஜ்தான்.ஜெஃபும் அப்படித்தான்.... சும்மா இருந்த கார் கேரேஜைக் கடையாக்கினார். ஐந்து ஊழியர்களுடனும் பத்து லட்சம் புத்தகங்களுடனும் ‘Earth’s Biggest Bookstore’ என்ற வாசகத்துடன் அமேசான்.காம் ஒரு கார் கேரேஜில் ஆரம்பிக்கப்பட்டது. 1995-ல் ஜெஃப் பஸாஸ் ஆரம்பித்த இந்த ஆன்லைன் சந்தை எனும் புள்ளியில்தான் பலர் இன்று ரங்கோலி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
முதல் மூன்று அடி வாங்கியபின் திரும்ப அடிக்கும் எம்.ஜி.ஆர் அல்ல அமேசான். முதல் பந்தையே சிக்ஸருக்குப் பறக்கவிடும் சேவாக். தொடங்கிய நாள்முதலே ஆர்டர்கள் குவிந்தன. மவுத் டாக் வேகமாகப் பரவின. ஒருத்தரைக்கூட ‘அசால்ட்’ ஆக டீல் செய்யவில்லை ஜெஃப். ஏனெனில், ஆன்லைன் சந்தை என்பது கார் வாங்குவதுபோல ‘ஒன் டைம்’ விஷயமல்ல. சேவை பிடித்திருந்தால் ஒவ்வொரு மாதமும் வருவார்கள். அது பழக்கமானால் ஒவ்வொரு நாளும்... உலகம் போகும் போக்கைப் பார்த்தால் ஒவ்வொரு காபி பிரேக்கின் போதும் ஏதாவது ஒன்றை ஆர்டர் செய்துவிடுவார்கள்போல.
மூன்று ஆண்டுகளில் அமேசான் ஊழியர்கள் எண்ணிக்கை ஐந்திலிருந்து, நூறானது. ஒன்றரைக் கோடி டாலருக்கு வியாபாரம் நடந்தது. அதற்கடுத்த மூன்று ஆண்டுகளில் ஊழியர்களின் எண்ணிக்கை 300 ஆனது. வியாபாரம் 61 கோடி. ஆக, அமேசான் பிளாக்பஸ்டர் ஹிட் தானே? அங்குதான் ட்விஸ்ட்.
வியாபாரம் கோடிகளில் நடந்தாலும் லாபம் வரவில்லை. காரணம், செலவு அதிகமானது. நிறுவனம் வளர்ந்தது. வந்த லாபமெல்லாம் விரிவாக்கத்துக்கும் தள்ளுபடிக்குமே போனது. முதலீட்டாளர்களுக்கு உடனடியாக லாபம் தேவை. ஜெஃபுக்கோ மக்களின் நம்பிக்கை தேவை. அது கிடைத்துவிட்டால் மில்லியனை பில்லியனாக்கும் சாத்தியம் உண்டென அவருக்குத் தெரியும். போனஸை வேண்டாமென வெளியே வந்தவர் ஆயிற்றே ஜெஃப். சிலர் போட்ட மூலதனத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு வெளியேறினர். ஜெஃப் தன் வளர்ச்சியில் தெளிவாக இருந்தார். முதலீட்டார்களோ அல்லது சில சமயம் வாடிக்கையாளர்களோகூட நம் தயாரிப்பை சந்தேகிக்கலாம். ஆனால், நமக்கு அதில் நம்பிக்கை இருக்க வேண்டும். ஸ்டார்ட்அப் முனைவர்களுக்கான இன்னொரு முக்கியமான குணம் அது

20-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட அமேசான், முதல் லாபத்தை 21-ம் நூற்றாண்டில்தான் கண்டது. அதன்பின் தொட்டதெல்லாம் டாலர்தான். புத்தகம் மட்டுமே விற்றவர்கள் இன்று கோடிக்கணக்கான பொருள்களை விற்கிறார்கள். வறட்டியில் ஆரம்பித்து வைரம் வரை எல்லாமே அமேசானில் கிடைக்கும். ஆனால், இவையெல்லாம் அமேசானில் இல்லாதபோது ஜெஃப் இருந்தார். அவரிடம் நம்பிக்கை இருந்தது. தெளிவான திட்டமிடல் இருந்தது.
ஜெஃப் ஒரு கண்டிப்பான பாஸ். ஆனால், வாடிக்கையாளர்களுக்குச் செல்லப்பிள்ளை. அமேசானின் பல ஆண்டு வரை வாடிக்கையாளர்கள் நேரிடையாக ஜெஃபுக்கே மெயில் அனுப்ப முடிந்தது. தொடர்புடைய ஊழியருக்கு ‘?’ மட்டும் சேர்த்து அதை ஃபார்வர்டு செய்வார். பிரச்னைக்குத் தீர்வு தருவதும், ஏன் நடந்தது என்பதை எடுத்துச் சொல்லி இனி நடக்காமல் பார்ப்பதும் அந்த ஊழியரின் வேலை. அதைச் செய்யாமல் ஜெஃபிடமிருந்து சம்பளத்தை வாங்க முடியாது. எந்தத் தொழிலுக்கும் முக்கியம் ஊழியர்கள் அல்ல; வாடிக்கையாளர்கள் என்பது ஜெஃபின் அசைக்க முடியாத நம்பிக்கை. பிற்காலத்தில் ஜெஃபின் இந்தக் நடத்தை சிக்கலுக்குள்ளானது. அமேசானில் வேலை செய்ய ரோபோவால்கூட முடியாது என அதன் ஊழியர்கள் குமுறினார்கள். `உலகின் தலைசிறந்த 50 தலைவர்கள்’ பட்டியலில் தொடர்ந்து மூன்று முறை இடம்பிடித்தவருக்கு இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் பெரிதாகத் தெரியவில்லை. ‘என் டார்கெட் கஸ்டமர்ஸ்... அவ்வளவுதான்’ எனப் போய்க்கொண்டேயிருந்தார். அமேசான் லோகோவை உற்றுப்பார்த்தால், அதற்குக் கீழிருக்கும் டிசைன் ஸ்மைலி போலவே இருக்கும். அது அமேசான் வாடிக்கையாளர்களின் புன்னகை என்பார் ஜெஃப். அவருக்கும் சிரிக்கப் பிடிக்கும். அவரின் மிகப்பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டரே சிரிப்பதுதான்.
ஜெஃபின் இன்னொரு புகழ்பெற்ற வாசகம்: “ஒரு மீட்டிங்குக்கு இரண்டு பீட்ஸா வாங்கினால்கூட அந்த டீம் சைஸ் பெரியது” என்பார் ஜெஃப். எந்த மீட்டிங் என்றாலும் அதில் 4-5 பேருக்கு மேல் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் அதில் பங்கேற்பவர்களால் மனதிலிருப்பதைப் பேச முடியாது என்பார்.
ஜெஃபிடம் ஒரு ஐடியா ஓகே வாங்க, கலர் கலரான பவர்பாயின்ட் பிரசென்டேஷன் செல்லுபடியாகாது. ஐந்து பக்கத்துக்கு விளக்கமாக எழுதிக்கொடுத்தால் ஜெஃப்பைப் புன்னகைக்க வைத்துவிடலாம். இன்னமும் இங்க் பேனாவால் காகிதத்தில் எழுதுவதையே விரும்புகிறார் ஜெஃப்.
வேலை என வந்துவிட்டால் ஜெஃபுக்குள் பேய் பிடித்துவிடும். அப்படியொரு அர்ப்பணிப்புடன் வேலை செய்வார். அதே சமயம், நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்யும் `ஹார்டு வொர்க்கர்’ அல்லர் ஜெஃப். தினமும் 8 மணி நேரத்துக்குக் குறையாமல் தூங்கி எழுந்து, ஃப்ரெஷ்ஷாக வேலை செய்யும் ‘ஸ்மார்ட் வொர்க்கர்.’ அமேசானில் வாங்க முடியாத ஒரு விஷயம் தூக்கம் என்பது ஜெஃப்புக்குத் தெரியாதா என்ன?
ஜெஃப்தான் 100 பில்லியன் அமெரிக்க டாலரைச் சம்பாதித்த முதல் மனிதர். இன்று அவர் சொத்து மதிப்பு 163 பில்லியன். இந்திய ரூபாயில் 11 லட்சத்துச் சொச்சம் கோடி. (இந்த வாக்கியத்தை எழுதும்போது இருந்த தொகை முடிக்கும்போது மாறிவிடுகிறது. ஜெஃபின் உழைப்பும், ரூபாயின் மதிப்பு சரிவும்தான் அதற்குக் காரணம்). தன் சிறுவயது ஆசையை ஜெஃப் மறக்கவில்லை. அவ்வப்போது அமேசான் பங்குகளை விற்று அதை `ப்ளூ ஆரிஜின்’ என்ற நிறுவனத்தில் முதலீடு செய்கிறார். ப்ளூ ஆரிஜின், மனிதர்களை எப்படியாவது விண்வெளிக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும்; எல்லோரையும் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் ஆக்கிவிட வேண்டுமெனப் போராடும் நிறுவனம். அதன் நிறுவனரும் நம்ம மொட்டை அண்ணன்தான்.
ஜெஃபின் கனவு, விண்வெளி நிறுவனம் தான். ஆனால், அது கைகூடும்வரை அவர் காத்திருந்தார். தூரம் அதிகமாக இருந்ததால் அமேசான் என்ற டாக்ஸி பிடித்து தன் விருப்பமான இடத்திற்குச் சென்றிருக்கிறார். வெற்றிக்கான இன்னொரு சூட்சுமம் அது. நமக்கு என்ன பிடிக்கிறது என்பது மட்டும் முக்கியமல்ல; உலகம் என்ன விரும்புகிறது? அதன் தேவை என்ன? அதற்குத் தீர்வு என்ன? அந்த எண்ணம் போதும். உலகை மாற்றிவிடலாம்; ஜெஃப் நம் ஷாப்பிங் கலாசாரத்தையே மாற்றியமைத்தது போல.
- ஐடியா பிடிப்போம்
கார்க்கிபவா