Published:Updated:

என்னஞ்சல்

என்னஞ்சல்
பிரீமியம் ஸ்டோரி
News
என்னஞ்சல்

என்னஞ்சல்

ஹாய் மச்சீஸ்,

எல்லாரும் நல்லா இருக்கீங்களா..? ரொம்ப பிஸியா இருப்பீங்க... எனக்காக ஒரு அஞ்சு நிமிஷம் ஒதுக்க முடியுமா மச்சீஸ்... யூனிஃபார்ம், டீச்சர் பயம் எல்லாத்தையும் மறந்துட்டு, கலர் கலர் டிரஸ்ல பந்தாவா காலேஜ் கேம்பஸ்ல காலடி வச்சோம்.  நாம யாரு, என்ன படிக்கிறோம்னு முழுசா புரிஞ்சிக்கிறதுக்குள்ளயே முதல் வருஷம்  முடிஞ்சு போச்சு. முதல் வருஷத்துல, நாம செஞ்ச ஒரே ஒரு உருப்படியான வேலை, நமக்கு வந்த ஸ்காலர்ஷிப்ல ஒண்ணா சரக்கடிச்சுட்டு, படத்துக்குப் போனதுதான். பலபேருக்கு  அதுதான் ஃபர்ஸ்ட் டைம். ஏகப்பட்ட கலாட்டா. நம்ம ‘சரக்கு’ சந்துரு ஃபுல்லாகி கோயில் குளத்துக்குள்ள இறங்கி நடந்து போனதை இப்போ நினைச்சாலும் சிரிப்பா வருது. வீட்டுல நமக்கு என்னதான் அழகழகா பேரு வச்சாலும், சரக்கு சந்துரு, பான்பராக் பாரதி, ஸ்டைல் மணின்னு பேருக்கு முன்னாடி ஒரு அடைமொழி வச்சுக்கிறதுல நமக்கெல்லாம் அப்படி ஒரு ஆனந்தம்..!  

என்னஞ்சல்

முதல் வருஷம் முடிஞ்சு இரண்டாவது வருஷமும் வந்துச்சு. ஏனோதானோன்னு சேர்ந்த நம்ம கூட்டத்த அங்கீகரிச்சு, ஒரு கூட்டணிக்குள்ள கொண்டு வந்ததுக்கு நம்ம டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் மேடத்துக்குத்தான் நன்றி சொல்லணும்.   ‘டெஸ்ட்டுல மார்க் கம்மியா எடுத்தவன்லாம் வெளியே போங்க’னு கோபமா கத்தினதும், அதே பத்துப் பேருதான் வெளியில வந்து  நின்னோம். ‘நம்மை மீறி ஏதோ ஒரு சக்திதான் நம்மை ஒண்ணா சேர்க்குது’னு சந்துரு பைய சொன்னது இப்பவும் ஞாபகம் இருக்கு. எல்லா காலேஜ்லயும் ஸ்டாஃப்ஸ் பண்ணுற  தப்பு இதுதான். ‘படிக்காம வர்றவங்களை மொத்தமா வெளியில அனுப்பிட்டா, அந்த அவமானத்துல படிக்க ஆரம்பிச்சுடுவாங்க’ன்னு தப்புக்கணக்கு போடுறது. ஆனா, வெளியில போய்  அவங்க ஒண்ணா சேர்ந்து என்னவெல்லாம் பண்ணுவாங்க, எப்படி மாறுவாங்கங்கிறதுக்கு நாமளும் ஒரு சாட்சிதானே மச்சீஸ்..!

வெளியில வந்து,  கிரிக்கெட் விளையாடுறது, சீட்டு விளையாடுறது, குளத்துல குளிக்கிறதுன்னு ஜாலியா பொழுதைப் போக்க ஆரம்பிச்சோம்.  கிளாஸ்ல இருக்குறதவிட வெளியில இருக்குறது  கொஞ்சம் பெட்டரா இருக்க, வேணும்னே படிக்காமப் போக ஆரம்பிச்சோம். ரிசல்ட் வந்த அப்புறம்தான் நம்ம எவ்வளவு சரியா கூட்டணி அமைச்சிருக்கோம்னு உறுதியாச்சு. நம்ம கேங்குல உள்ள எல்லாருக்கும் எக்கச்சக்க அரியர்ஸ். ஆனா, அரியரால  நம்ம சந்தோசத்துல எந்தத் தடையும் இல்லை. வழக்கம்போல ஜாலியாத்தான் இருந்தோம்.

கிளாஸ் கட் அடிக்கிறதும், படத்துக்குப் போறதும், எக்ஸாம் அன்னைக்கு ஹாஸ்டலுக்குப் போய்ப் படுத்துத் தூங்குறதுமா ஜாலியா போயிட்டிருந்த நம்ம வாழ்க்கையோட ஆக்‌ஷன் அத்தியாயம் ஃபைனல் இயர்லதான் ஆரம்பிச்சது. எப்ப பார்த்தாலும் பிரச்னை... ‘நம்ம பிராஞ்ச்தான் கெத்து’னு காட்ட அடிதடில இறங்கினோம். காலேஜ்ல  ராக்கிங் பண்ற பசங்களை தேடிப் பிடிச்சு அடிச்சோம்.  சண்டை போட்டு மண்டைய உடைச்ச பசங்க காசுலயே ஒண்ணா படத்துக்குப் போனதெல்லாம் வேற லெவல். 

அந்தக் காலகட்டத்துலேயே, நம்ம கேங்குல சில பேருக்கு லவ்வும் செட்டாச்சு. ஒருசிலர் அதை ஆதரிச்சோம், ஒரு சிலர் கடுமையா எதிர்த்தோம். நம்மகூட படத்துக்கு வந்துகிட்டிருந்தவன் திடீர்னு  விலகுறதையும் தனியா போறதையும் நம்ம மனசு ஏத்துக்கல. என்ன ஒண்ணு, நம்ம பசங்கல லவ் பண்ணுன பொண்ணுங்க, நம்மை அண்ணனாக்கி அவங்க லவ்வ காப்பாத்திக்கிட்டாங்க. லவ் பண்ற பையனவிட நம்ம மேல பாசமா இருந்தது அவங்கதான். அந்தப் பாசத்துக்குக் கட்டுப்பட்டு நாமளும் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணினோம். நாமளே டிக்கெட் புக் பண்ணி அவங்களைப் படத்துக்கு அனுப்பியும் வச்சோம்.

கடைசி செமஸ்டர் முழுக்க நாம காலேஜுக்கே போனதில்ல. ‘புராஜெக்ட்’ங்கிற பேர்ல வீட்டுல நிறையா காசு வாங்கி ஜாலியா ஊர் சுத்தினோம்.  ஆட்டமும் பாட்டுமா அந்த செமஸ்டரை ஜாலியா கொண்டாடு னோம். ‘எப்படா வீட்டுல இருந்து காலேஜுக்குப் போவோம்’னு வாழ்ந்த  காலம் அது.

தாய்மாமா கல்யாணத்தன்னிக்குக்கூட, ‘கண்டிப்பா போயே ஆகணும்’னு சண்டை போட்டு காலேஜுக்கு வந்தவன் நான். கல்யாணத்துக்கு வந்திருந்த  சொந்தக்காரங்கல்லாம் நான் காலேஜுக்குப் போனது தெரிஞ்சு பாராட்டிட்டுப் போனாங்கன்னு எல்லாரும் சொன்னாங்க.  கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரத்துல, காலேஜ்ல இருந்து வீட்டுக்கு லெட்டர் போகுது, ‘எனக்கு அட்டண்டன்ஸ் கம்மியா இருக்கு, எக்ஸாம் எழுத முடியாது’னு.  ஒவ்வொரு செமஸ்டருக்கும் வழக்கமா போற லெட்டர்தான். போஸ்ட்மேனைக் கரெக்ட் பண்ணி லெட்டரை வாங்கிடுவோம். கடைசி செமஸ்டர் மட்டும் எப்படியோ மிஸ்ஸாயிடுச்சு. அந்த லெட்டரைப் படிச்சுட்டு வீட்டுல இருக்கிறவங்க பாத்த கேவலமான பார்வை இப்பவும் இதயத்துல முள்ளா குத்திக்கிட்டிருக்கு.

செமஸ்டரோட கடைசிக் கட்டம். ‘ஸ்லாம் புக்’ எழுதுறது எல்லா காலேஜ்லயும் சம்பிரதாயம். எக்ஸாம் எழுதுறமோ இல்லையோ, ‘ஸ்லாம் புக்’ல எல்லோர்கிட்டயும் எழுதி வாங்கிடணும்.  அதுவரை கிளாஸ்ல கண்டுக்காத பொண்ணுங்கல்லாம்கூட  ‘உன்னை அவ்ளோ புடிக்கும், கிளாஸ்ல நல்லா பாட்டுப் பாடுவ, ரொம்ப அமைதியான பையன், தங்கமான பையன், உன் சிரிப்பு புடிக்கும்’ னு எழுதி நம்மள கன்ஃபியூஸ் பண்ணி விட்ருவாங்க.  ஆனா அதெல்லாம், ‘இனிமே எப்படியும் இவனுங்கள பார்க்கவே போறதில்லைங்கிற தைரியத்துல எழுதுறது’னு நமக்கு லேட்டாதான் புரிஞ்சுச்சு. அதுவும், ஜூனியர் கேர்ள்ஸ்லாம் நம்மை ‘ஜில்லுன்னு ஒரு காதல்’ சூர்யா ரேஞ்சுக்கு பில்டப் பண்ணி எழுதினதையெல்லாம் நாமளும் வெக்கமே இல்லாம படிச்சு  ரசிச்சு பல்லைக் காட்டினோம்.  

 கடைசி நேரத்துல அதுவரை சேர்த்து வெச்ச அரியரையெல்லாம் க்ளியர் பண்ணணும்னு தீவிரமா படிச்சு எக்ஸாம் எழுதினோம். கடைசி எக்ஸாம் அன்னைக்கு எல்லாரும் கட்டிப் புடிச்சு கண்ணீர் விட்டுப் பிரிஞ்சோம்.  ரிசல்ட் வந்துச்சு... ஒருசிலர் தவிர எல்லாரும் டிகிரி வாங்கினோம். கிடைச்ச வேலைக்குப் போனோம். ஆளுக்கொரு திசைக்குப் பிரிஞ்சோம்.

பத்து வருஷம் ஆச்சு மச்சீஸ். எல்லோரும் எங்கெங்கயோ இருக்கீங்க. நம்ம செட்ல பாதிப்பேருக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. சிலர் கல்யாணத்துக்குக் கூப்பிட்டாங்க, சிலர் கூப்பிடல.  ஒரு சில கல்யாணத்துக்குப் போக முடிஞ்சது, சில கல்யாணத்துக்குப் போக முடியல. 
 
நாம வழக்கமா உட்கார்ற புளிய மரத்தடி, பஸ் ஸ்டாப் சுவர் எல்லாம் அடிக்கடி என் கண்ணு முன்னாடி வந்துபோகுது, ஒரு சிலரைப் பார்த்து பல வருஷம் ஆச்சு. அப்போ இல்லாத எல்லா டெக்னாலஜியும் இப்ப இருக்கு. நினைச்சா தினமும்கூடப் பேச முடியும். ஆனா, நாம பேசிக்கிறதில்ல.  யாருக்கும் அதுக்கு நேரமுமில்லை.

ஒருத்தன் அமெரிக்காவுல, ரெண்டு பேரு சிங்கப்பூர்ல, ஒருத்தன் ஊருலயே, நான் சென்னையில... இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடத்துல செட்டிலாகிட்டோம். படிப்பால மட்டும் சந்தோஷம் கிடைச்சுடாதுன்னு அந்த வயசுலயே புரிஞ்சிகிட்ட நம்மளால, பணத்தால மட்டும் சந்தோஷம் கிடைச்சிடாதுன்னு இப்ப ஏத்துக்க முடியல.  பணம், லோன், எதிர்காலம்னு நேரம் காலமில்லாம ஓடிக்கிட்டிருக்கோம்.

காலேஜ்ல கடைசி நாள் எல்லோரும் அழுதீங்க... எனக்கு அழுகை வரல... ஆனா இதை எழுதும்போது என்னையறியாம கண்ணீர் வருது...

மச்சீஸ்... எனக்கு ஒரே ஒரு ஆசை. என்னைக்காவது ஒருநாள், நம்ம காலேஜ் புளியமரத்தடியில உக்காந்து, கையில டீ, தம்மோட, நமக்கு நாமளே வச்சுகிட்ட பட்டப் பேரைக் கூப்பிட்டுகிட்டு ஜாலியா  அரைமணிநேரமாவது பேசணும்டா...

வர முடியுமாடா உங்களால..?

இப்படிக்கு

நண்பன்