பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

சொல்வனம்

வெறுமை

காலை 5 மணிக்கே
அடிக்கும் அலாரம் இனி அடிக்காது
சாப்பிட வரும்போது
இரண்டு தட்டுகளை அம்மா
சுமக்க வேண்டாம்
பிரத்தேயமாக அவனுக்காக மட்டுமே
வாங்கிவரும் மினி ஜாங்கிரி,
இனி அப்பா வாங்கத் தேவையில்லை
சோப், ஷாம்பூ, பேஸ்ட் என எல்லாம்
ஒரு தனி கவரில் போட்டு வைத்துவிடலாம்
உடம்பு துடைத்துவிட்டு சோபாவின்
மீது அலங்கோலமாய் வீசப்பட்டிருக்கும்
துண்டுக்கு வேலையிருக்காது
அவனைக் கண்டாலே ஓடி ஒளியும்
பக்கத்து வீட்டு டாமி நாய்
தைரியமாக உலா வரலாம்
காலை குளித்தவுடன் அவன் அடிக்கும்
சென்ட் அலுங்காமல் குலுங்காமல் அலமாரியே கதியேன இருக்கும்
வாசலில் விடப்பட்டு இருக்கும்
ஆறு ஜோடி செருப்புகளும்
ஒழுங்காக அடுக்கப்பட்டிருக்கும்
நிமிடத்துக்கு ஒருமுறை
இசையருவிக்கும் சன் மியூசிக்குக்கும்
தாவிக்கொண்டே இருக்கும் டிவி
மாற்றுப் பொத்தானை யாராவது
அழுத்தும் வரை சன் டிவி-யிலே கிடக்கும்
காதலியின் ஞாபகத்தைவிட
கனக்கிறது
வெளியூருக்கு வேலைக்குப் போன
தம்பியின் ஞாபகம்!

- கலசப்பாக்கம் சீனு

சொல்வனம்

ஒற்றை நட்சத்திரம்

நம் நிமிடங்களின் வர்ணத்தூரிகைகளை எடுத்து
தனித்திருக்கும் இந்த நிமிடங்களின் மீது
வர்ணங்களைப் பூசுகிறேன்
இந்த நிமிடங்கள் அந்த நம் நிமிடங்களாகி
ஒருவருக்கொருவர் எதிரில் அமர்ந்து
பேசத் தொடங்குகிறோம்

குடையற்ற மழைக்காலச் சாலையை
அறைக்குள் அழைத்துவருகிறேன்
மழை கண்டதும் நீ என் கையைப் பிடித்தபடி
ஆடத் தொடங்குகிறாய்
நானும் உன்னோடு சேர்ந்து ஆடத் தொடங்குகிறேன்

சுவரில் ஒரு பேருந்தை வரைந்து
பயணமொன்றைத் தொடங்குகிறேன் உன்னோடு
ஜன்னலோர இருக்கை வேண்டுமென அமர்ந்த நீ
என் இடது தோள் சாய்ந்து உறங்கத் தொடங்குகிறாய்
பறந்து பறந்து என் முகத்தை இசைக்க ஆரம்பிக்கின்றன
உன் கூந்தல் இழைகள்

அறையின் தரையில் பூக்களை நட்டு
பூங்கா ஒன்றை சிருஷ்டிக்கிறேன்
அதே கல்லிருக்கையில் அமர்ந்தபடி
பொய்க்கோபம் காட்டுகிறாய்,
ஏன் இவ்வளவு தாமதமென?

அறையில் தண்ணீரை நிரப்பி அரபிக்கடலாக்குகிறேன்
நம் இருவருக்கு மட்டுமென வரும் படகொன்று
நம்மை ஏற்றிப்போகிறது கடலுக்குள்ளே
சற்றைக்கெல்லாம் வானமும் கடலும் ஒன்றாக
நாம் ஒற்றை நட்சத்திரமாகிறோம்!

- சௌவி

யானைக்காடு

குழைத்து
உறவு சேர்த்த களிமண்ணில்
யானை செய்தாள் சின்ன மகள்.
 
தும்பிக்கை அளவும்
காதுகளின் அழகும்
காடுகளில் பயணிக்கவைத்தன.
 
ஆணா பெண்ணா என
சந்தேகம் கேட்க,
திடுக்கிட்டவள்
உருவத்தைக் கலைக்கிறாள்.

பிறிதொரு நாளில்
மழையில் கரைந்து
மண் இடம் மாறி
காட்டை அடைகிறது.

கூட்டமாய் வந்த
யானைகளில்
குட்டியானை
அந்த மண்ணை நுகர்ந்து
பிளிறுகிறது.

குட்டியானையின்
கால்களில் அப்பிய மண்
காடெங்கும் பரவி
யானைகளை உண்டாக்கியது.

நேற்று முதல்
அந்தக் காட்டை
எல்லோரும் அழைக்கிறார்கள்
`யானைக்காடு’ என்று.

- செஞ்சி தமிழினியன்