பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

‘டிராமா’யணம்!

‘டிராமா’யணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
‘டிராமா’யணம்!

‘டிராமா’யணம்!

ண்மைக்காலமாக தமிழ் நாடக மேடையில் ‘சமூகம்’ பின்னுக்குத் தள்ளப்பட்டு புராண, இதிகாச, சரித்திர நாடகங்களையே அதிகம் பார்க்க முடிகிறது. பின்னவற்றில் தங்கத் தாம்பாளத்தில் கதை தயாராகக் காத்திருப்பதால் அதற்கென்று ரூம் போட்டு யோசிக்கத் தேவையிருப்பதில்லை. செந்தமிழில் வசனம் மட்டும் எழுதிவிட்டு, கண் கவர் ‘செட்’ போட்டு ஒரு மாதிரி ஒப்பேற்றிவிட முடிகிறது. இந்த மாதிரியான தளத்தில் சமீப வரவு ராமாயணம். வசனம் பூவை தயா, இயக்கம்: குட்டி, தயாரிப்பு: கூல் ஈவன்ட்ஸ் குமார்.

‘டிராமா’யணம்!

வசனம், நடிப்பு, இசை, இயக்கம் இவற்றைவிட விஞ்சி நிற்கிறது மேடை அமைப்பு. அயோத்தி அரண்மனையும், பஞ்சவடியும், மிதிலைக்கூடமும், அசோகவனமும்... எது அமைக்கப்பட்டது (செட்), எது தொங்க விடப்பட்டது (படுதா) என்று வித்தியாசம் தெரியா வண்ணம் ஒவ்வொன்றிலும் பத்மா ஸ்டேஜ் கண்ணனின் கை வண்ணம் மிளிர்கிறது!

எல்லோருக்குமே உறுத்தாத ஒப்பனை. வஞ்சனையில்லாமல் வங்கி சேமிப்பைக் கரைத்திருக்கிறார்கள்!

ஃப்ளாஷ்பேக்கில் நாடகம் ஆரம்பம். சீதாபிராட்டியை ஆகாயத் தேரில் கடத்தி வருகிறான் ராவணன். அசோகவனத்தில் சிறை அடைக்கிறான். நான்கு பக்கங்களுக்கு வரும் உருட்டல் மிரட்டல் வசனம் பேசுகிறான். பதிலுக்கு கணவனின் வீர தீரங்களைப் பேசுகிறாள் சீதை. திரிசடை வருகிறாள். ஆறுதல் வார்த்தைகள் பேசுகிறாள். இவளுக்கு ராம காதையை சீதை விவரிப்பது மாதிரியாக ஆரம்பத்திலிருந்து பயணிக்கிறது நாடகம். சஸ்பென்ஸ் எதுவுமில்லாத ஒரு காவியத்துக்கு, வால்மீகி எழுதி வைத்துச் சென்றிருக்கும் பக்கா கதை - திரைக்கதைக்கு ஃப்ளாஷ்பேக் டெக்னிக் எதுக்கு? நேரடியாக அயோத்தியிலிருந்து ரயிலைக் கிளப்ப வேண்டியதுதானே!

திரிசடையாக வரும் வ்ருந்தா, பேச்சுப் போட்டியில் பள்ளிக்கூட மாணவி பேசுவது போன்ற ஸ்டைலில் வசனத்தை ஒப்புவிப்பதும், காட்டுக்கத்தலில் ராவணன் (முத்துகுமார்) வரிகளை வாரி இறைப்பதும் ஆரம்ப உறுத்தல்கள். 

‘டிராமா’யணம்!

யாகப் பாதுகாப்புக்கு ராமனைத் தன்னுடன் அனுப்பி வைக்க தசரதனிடம் விசுவாமித்திரர் கேட்டுக்கொள்ள, முதலில் மறுக்கும் மன்னர்மன்னன் பின்னர் வசிஷ்டரின் ஆலோசனையின் பேரில் ராமலட்சுமணனை முனிவருடன் அனுப்பி வைக்கும் காட்சி உணர்ச்சிகரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தின் போது ராமன் பதினாறுக்கும் குறைவான வயதுடையவன்தான். ஆனால் நாடகத்தில் ஆரம்பம் முதலே ஆஜானுபாவ ராமனையே காட்டுகிறார்கள்! டிராமா லைசென்ஸ்? வேடமேற்பவர், டைரக்டர் குட்டி. அமைதியும் சாந்தமும் தவழும் முகத்தில் பண்பட்ட நடிப்பு. தந்தை அளித்ததாகத் தாய் கூறும் வரங்களை ஏற்று ராமன் வனம் புறப்படுவதற்கு முன்னதான கைகேயி - மந்தரை, கைகேயி - ராமன் தொடர்பான காட்சிகளில் கதையின் அழுத்தமான கட்டத்தை அழகாகப் பதிவு செய்திருக்கிறார் நாடக இயக்குநர். கைகேயியாக ‘நாஞ்சில்’ ரேவதி கச்சிதம். ‘எப்பிறப்பிலும் பிரியவிடேன் என்று கை தொட்டீரே, ஏழை ஆன சீதையை நட்டாற்றிலே விட்டீரே’ என்று வனவாசத்துக்கு உடன் அழைத்துச் செல்ல சீதை வற்புறுத்துமிடத்தை ஏனோ ஜஸ்ட் லைக் தட் கடந்துவிடுகிறார்.

ஜனகரின் சுயம்வர மண்டபத்தில் ஏதோ ராமனுக்காக மட்டும் சிவ தனுசு படுக்க வைக்கப்பட்டிருப்பது மாதிரியும், ராமன் சும்மா தூக்கிய மாத்திரத்தில் அது உடைந்துவிடுவது மாதிரியும், அதே இடத்தில் அண்ணலும் அவளும் மாலை மாற்றிக்கொண்டு விடுவது போலவும் காட்சியை அமைத்திருப்பதில் ஒரு ‘டிராமா’ இல்லை. அதே சமயம், முன்னதாக ‘அண்ணலும் நோக்கினான்... அவளும் நோக்கினாள்’ என்ற பிரபலமான மிதிலை வீதிக் காட்சியை சுவைபடக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் இங்கே ராமனும் லட்சுமணனும் பேசிக் கொள்ளும் ‘ஏட்டிக்குப் போட்டி’ கண்ணாமூச்சி வசனங்களில் பூவை தயா மணம் வீசுகிறார்!

‘டிராமா’யணம்!

ராம இலக்குவனிடம் சூர்ப்பனகை அவமானப்படுவது, ராவணனிடம் சென்று முறையிடுவது, ராவணன் மாறுவேடமிட்டு முனிவராக வந்து சீதையைக் கோடு தாண்டச் செய்வது, கண் இமைக்கும் நேரத்தில் நிஜ ராவணன் வந்து பிராட்டியைக் கடத்திச் செல்வது என்று மாயமான் உள்ளிட்ட இந்த எபிசோடு விறுவிறு சுறுசுறு! மூக்கறுபட்ட நிலையிலும் ஆவேச, ஆக்ரோஷ வசனம் பேசுகிறார் சூர்ப்பனகை (ஜெய லட்சுமி). ரத்தம் வடியும் மூக்கு வலிக்காதோ!

பின் ஆரண்ய, யுத்த காண்டங்கள் வரிசைக் கிரமமாக நகர்த்தப்பட்டு இறுதியில் பட்டாபிஷேக வைபவம். நேரம் கருதி சில சம்பவங்களைக் காட்சிப்படுத்தாமல் வசனங்களிலேயே உருட்டியிருக்கிறார்கள்.

மூன்று மணி நேர நாடகமிது. முழுவதுமாகப் பார்வையாளர்களை உட்கார வைக்க ‘நாடக ரசவாதம்’ தெரிந்திருக்க வேண்டும். நாடகத்தில் பக்தி ரசத்தை நெடுகத் தெளித்துப் பரவசப்படுத்தியிருக்க வேண்டும். இரண்டிலும் ‘பார்டரி’ல்தான் பாஸ் செய்திருக்கிறார் டைரக்டர்.

வீயெஸ்வி - படங்கள்: ஜெ.வேங்கடராஜ்