பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

தெர்ல மிஸ்

தெர்ல மிஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
தெர்ல மிஸ்

தெர்ல மிஸ்

``தற்போது  9-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் 14 வயதுடைய என் மகனுக்கு, அத்லெட் ஆகவேண்டும் என ஆசை. என் நண்பர்கள், `இன்னும் சின்ன வயதிலிருந்தே பயிற்சி பெற்றிருக்க வேண்டும்’ என்கிறார்கள். இதுகுறித்து உங்கள் அறிவுரை தேவை.’’
 
- மாணிக்கம், விருதுநகர்.

தெர்ல மிஸ்

``உங்கள் நண்பர்கள் கூறுவது முற்றிலும் தவறு. கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளைப்போல் தடகளத்தைச் சொல்லிவிட முடியாது. ஃபிட்னெஸ், ஸ்டாமினா போன்ற விஷயங்கள்தான் உங்கள் மகனின் வளர்ச்சியில் பங்களிக்கும். வயது ஒரு விஷயமல்ல. 14 வயது என்பது, எந்த வகையிலும் தாமதம் கிடையாது. தடகளப் பயிற்சிக்கு உகந்ததுதான். தடகளத்தில் சாதித்த பல வீரர், வீராங்கனைகள் இந்த வயதில்தான் மைதானத்துக்குள்ளேயே நுழைந்திருக்கிறார்கள். அதனால் நீங்கள் பிறர் சொல்வதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. 

தெர்ல மிஸ்

விருதுநகரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்குச் சென்று, அங்குள்ள தடகளப் பயிற்சியாளரிடம் பேசுங்கள். உங்கள் மகனைப் பார்த்துவிட்டு, எந்த மாதிரியான பயிற்சிகள் செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்பதை அவர் சொல்வார்.’’

- சாந்தி, முன்னாள் தடகள வீராங்கனை மற்றும் பயிற்சியாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை.

“எண்டோமென்ட் பாலிசி எடுப்பதைவிட டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பதே நல்லது என்று சொல்கிறார் என் பக்கத்து வீட்டுக்காரர். எது நல்லது என்று கொஞ்சம் சொல்லுங்களேன்!”

- நவநீத கிருஷ்ணன், திருச்சி.

தெர்ல மிஸ்

‘‘லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எண்டோமென்ட் மற்றும் டேர்ம் இன்ஷூரன்ஸ் என இரு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். எண்டோமென்ட் பாலிசியில் நீங்கள் கட்டிய பிரீமியம் பணம் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். ஆனால், அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் வெறும் 4 - 6% என்கிற அளவில் மட்டுமே இருக்கும். தவிர, இதில் நீங்கள் கட்டும் பிரீமியம் அதிகம். ஆனால், கிடைக்கும் இழப்பீடு குறைவு. டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது நமது டூவீலருக்கு, காருக்கு இன்ஷுரன்ஸ் எடுக்கிற மாதிரி. வண்டி தொலைந்தால்தான் பணம் திரும்பக் கிடைக்கும். இல்லாவிட்டால், கட்டிய பணத்தை மறந்துவிட வேண்டியதுதான். ‘ஐயோ, கட்டின பணம் திரும்பக் கிடைக்காதா?’ என்று கவலைப்படத் தேவையில்லை. மிகக் குறைந்த பிரீமியத்தில் மிக அதிகமான இழப்பீடு தருபவை டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகள்தாம். 25 வயதுடைய ஒருவர் அடுத்த 25 ஆண்டுகளுக்கு ரூ.50 லட்சத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க ஓராண்டுக்கு ரூ.6,000 கட்டுவார். (25 வருஷம் கட்டினாலும் ரூ.1.5 லட்சம் மட்டுமே கட்டுவார்) இந்தப் பாலிசி எடுத்தவர் எதிர்பாராத வகையில் இறந்தால், அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடாகக் கிடைக்கும். ஆனால், எண்டோமென்ட் பாலிசியில் ஒரு லட்சத்துக்கோ அல்லது இரண்டு லட்சத்துக்கோ பாலிசி எடுத்து, குடும்பத் தலைவர் இறக்கும்பட்சத்தில், இழப்பீடாகக் கிடைக்கும் அந்தப் பணத்தை வைத்துக் குடும்பத்தை நடத்த முடியாது. எனவே, எண்டோமென்ட் பாலிசியைவிட டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிதான் பெஸ்ட்.’’

- எஸ்.ஸ்ரீதரன், நிதி ஆலோசகர்

“காலில் அரிப்பு ஏற்பட்டு செதில் செதில்களாக வருகிறது. சோரியாசிஸ் என்று மருத்துவர் சொல்கிறார்.  ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளைக்கு மருந்தை நிறுத்தினாலும் மறுபடி தொந்தரவாகி விடுகிறது. முழுமையாகக் குணப்படுத்த வாய்ப்பிருக்கிறதா?”

-வெற்றிவேலன் சுப்பிரமணியன்.  

தெர்ல மிஸ்

“சோரியாசிஸ் நோயைச் சித்த மருத்துவம் மூலம் முழுமையாகக் குணப்படுத்த முடியும். ஆனால் இந்த மருந்துகளையும் முழுமையாக, முறைப்படி சாப்பிட வேண்டும்.  முதலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று குறிகுணங்களையும் சமநிலைப்படுத்த, பேதிக்கு மருந்து தரப்படும். அதன்பிறகு கந்தகத் தைலம், கந்தக மெழுகு, கருஞ்சீரகத் தைலம் போன்ற மருந்துகள் உள்மருந்தாகக் கொடுக்கப்படும். வெளிப்பூச்சு மருந்தாக வெட்பாலைத் தைலம் கொடுப்பார்கள்.  வெட்பாலை இலைகளைத் தேங்காய் எண்ணெயில் போட்டுச் சூரியப் புடமிட்டுப் பெறப்படுவதே வெட்பாலைத் தைலம். நோயின் தன்மையைப் பொறுத்து இதை உள்மருந்தாகவும் தருவார்கள். சோரியாசிஸ் பாதித்தவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள் என்பதால் உறவுகள் அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். தேவைப்பட்டால் கவுன்சலிங்கும் எடுத்துக்கொள்ளலாம்.”
 
- டாக்டர் ஆ.பிரின்ஸ், சித்த மருத்துவர்

“நண்பன் ஒருவன் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறான். அவனுக்கு மனநல மருத்துவரை நேரில் சந்திக்க விருப்பமில்லை. ஆனால் தொலைபேசியில் பேசத் தயார் என்கிறான். மனநல மருத்துவரிடம் தொலைபேசியில் மருத்துவ ஆலோசனை கேட்பது எந்தளவு பயனளிக்கும்?”

- அஷோக், தர்மபுரி


“தொலைபேசியில் மருத்துவ ஆலோசனை பெறுவது முழுப் பயனளிக்காது. இன்றைக்கு உடல்நலனில் காட்டும் அக்கறையை யாரும் மனநலனில் காட்டுவதில்லை. அது தானாகச் சரியாகிவிடும் என்று நினைப்பவர்களே அதிகம். இந்த நிலையில் ஒருவர் மனநலப் பிரச்னைக்காகத் தொலைபேசியில் ஆலோசனைபெறத் தயாராக இருப்பது வரவேற்க வேண்டியதே. எனவே, தாமதிக்காமல் ஒரு மனநல மருத்துவரிடம் பேசச் செய்யுங்கள். 

தெர்ல மிஸ்

அதே நேரத்தில் மனநலப் பிரச்னையின்போது முகத்துக்கு முகம் நேராக உட்கார்ந்து பேசும் போதுதான் முழுமையான தீர்வு கிடைக்கும். வார்த்தைகளைவிட, அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள், முகபாவனைகள், நடவடிக்கைகளின் மூலமே அவரது பிரச்னைகளை அறிந்துகொள்ள முடியும். மன அழுத்தம், மனச் சோர்வு, மனப் பதற்றம் (Anxiety), மனச் சிதைவு (Schizophrenia), பி.டி.எஸ்.டி (Posttraumatic Stress Disorder) என மனநலப் பிரச்னைகளில் பலவகை உள்ளன. சில பிரச்னைகளை பாதிக்கப்பட்டவர் மற்றும் நண்பர்களால்கூட அடையாளம் காணமுடியாது. மனநல மருத்துவரால்தான் அடையாளம் காண முடியும். எனவே முடிந்தவரை நேரில் அழைத்துச் செல்வதே தீர்வைத் தரும்.”

- ஸ்வாதிக், மனநல மருத்துவர்

வாசகர்களே... உங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் therlamiss@vikatan.com க்கு அனுப்புங்க!