மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 101

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

ஓவியங்கள்: ம.செ.,

நாகக்கரட்டி லிருந்து முன்னி ரவுக்குள் யானை கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. இரலிமேட்டின் பக்கம் யானைகள் ஏறவே யில்லை. ஏனெனில், அந்தப் பக்கம் இருந்துதான் காட்டெருமைகள் இறங்கி வந்தன. விரட்டப்பட்ட யானைகள், காரமலையின் வலதுபுறமும் இடது புறமுமாகச் சிதறி ஓடின. பள்ளத்தாக்கின் இறுதிப் பகுதியில் நின்றிருந்த யானைகளில் ஒரு பகுதி மட்டும் மீண்டும் வேந்தர் படையின் பாசறைக்குத் திரும்பியுள்ளது. ஆனால், தளபதி உச்சங்காரி என்ன ஆனான் எனத் தெரியவில்லை.

வீரயுக நாயகன் வேள்பாரி - 101

நாகக்கரட்டெங்கும் பறம்புவீரர்களின் உணர்ச்சிப் பேரொலி இடைவிடாது கேட்டது. போர் முடிவுற்றவுடன் அங்கு இருக்கும் குடிலில் வந்து ஆயுதங்களை வைத்துவிட்டு உணவு அருந்திய பிறகு இரலிமேட்டில் இருக்கும் பாட்டாப்பிறைக்குப் போவார் தேக்கன். ஆனால், இன்று குடிலுக்கு வந்தவர் ஆயுதங்களை வைத்துவிட்டு சற்றே தலை சாய்த்துப் படுத்தார். வீரன் ஒருவன் கலயத்தில் கொண்டுவந்த கஞ்சியையும் குடிக்கவில்லை. ``சிறிது பொழுதாகட்டும். இங்கு வைத்துவிட்டுப் போ” என்று சொல்லிவிட்டார்.

இருள் கவியத் தொடங்கி நெடுநேரம் ஆன பிறகு, தேக்கனைத் தேடி முடியன் வந்தான். பறம்பு ஆசானுக்கென்று அமைக்கப்பட்டிருந்த தனிக் கூடாரத்தில் அவர் படுத்திருந்தார். முடியன் வந்த பிறகுதான் எழுந்து அமர்ந்தார். முடியனின் பார்வை கலயத்தை நோக்கிப் போனபோதுதான் கஞ்சியை எடுத்துக் குடிக்கத் தொடங்கினார்.

தேக்கனின் உடல்நிலை என்ன பாடுபடுகிறது என்பதை முடியனால் உணர முடிந்தது. ஆனாலும் அவர் போர்க்களத்தில் நிற்பது எவ்வளவு முக்கியம் என்பதை இன்றைய நாள் உணர்த்தியது. தேக்கன் சொன்ன வழிமுறைப்படி உத்தியை வகுத்திராவிட்டால், பறம்புக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு அளவிடற்கரியதாக இருந்திருக்கும். ஆனால், அது நிகழாமல் தடுக்கப்பட்டது. அப்படியிருந்தும் பறம்புவீரர்கள் அதிக இழப்பைக் கண்ட நாள் இதுதான். நண்பகல் பொழுதில் வேந்தர்படை மிகுந்த ஆவேசத்தோடு தாக்கி முன்னேறியபோது பறம்புப்படை தற்காப்புப் போரை நடத்தவேண்டிய நிலை இருந்தது. அந்நிலையில் பறம்புப்படைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது பற்றி ஆசானிடம் பேச இரலிமேட்டில் இருக்கும் பாட்டாப்பிறை நோக்கிச் சென்றான் முடியன். ஆனால், தேக்கன் ஓய்வெடுப்பதற்காக இன்று தனது குடிலிலேயே இருக்கிறார் என்ற செய்தியை அறிந்ததும் பாட்டாப்பிறைக்குச் செல்லாமல் பாதியிலேயே திரும்பி இங்கு வந்து சேர்ந்தான்.

``இதுவரை நடந்த நான்கு நாள் போரிலும் வேந்தர்படையின் எண்ணிக்கையை சரிபாதிக்குமேல் குறைத்துள்ளோம். ஆனால், நமது படையின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதே நிலையில் இந்தப் போரை நீட்டிக்க முடியாது. வேறு திட்டங்களுக்கு நாம் சென்றாக வேண்டும்” என்றான்.

``எனது சிந்தனையும் அதை நோக்கித்தான் இருக்கிறது” என்றார் தேக்கன்.

அப்போது இரவாதன் உள்ளே நுழைந்தான். இருவரையும் தேடி பாட்டாப்பிறைக்குப் போனவன் அங்கு இல்லை என்பது அறிந்து இங்கு வந்துசேர்ந்தான். `முதலில், அவன் வந்துள்ள செய்தியைக் கேட்டறிந்த பிறகு நாம் பேசிக்கொள்ளலாம்’ என்று இருவரும் பார்வையிலே முடிவுசெய்தனர்.

பறம்புப்படை பெருவெற்றியை ஈட்டிய நாளில் அதற்குரிய முழு மகிழ்வோடு இருந்தது இரவாதனின் முகம். தான் வந்துள்ளதன் காரணத்தை அவன் சொன்னான், ``நான் இன்று மூஞ்சலை முழுமையாகப் பார்த்தேன்.”

முடியனும் தேக்கனும் இரவாதனைக் கூர்ந்து பார்க்கத் தொடங்கினர். நேற்றைய போரில் முடியனும் இரவாதனும் மூஞ்சலை நெருங்கினர். அப்போதுதான் முரசின் ஓசை கேட்டு, போர் முடிவுற்றது. ஆனால், இன்றைக்கு வேந்தர்களின் படை மொத்தமும் கீழிறங்கி பறம்புப்படையைச் சூழ்ந்து முற்றுகைத் தாக்குதலை நடத்தியது. மிகச்சிறிய படைதான் மூஞ்சலைக் காத்து நின்றது. தேக்கனின் திட்டப்படி இரவாதனின் குதிரைப்படை,  முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியேறி மூஞ்சலை அடைந்தது. அங்கு எண்ணிக்கையில் குறைந்த கவசவீரர்களும் அகப்படை வீரர்களும் காத்து நின்றனர். சின்னஞ்சிறுபடை காத்து நின்றதால் மூஞ்சலை முழு வட்டமடித்துத் தாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டான். ஆனால், இரவாதனின் குதிரைப் படையும் சிறியதாக இருந்ததால் அவனால் உள்நுழைய முடியவில்லை. ஆனால், மூஞ்சலின் தன்மை முழுமையும் அவனால் கவனித்தறிய முடிந்தது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 101

முடியனிடமும் தேக்கனிடமும் விளக்கினான், ``நேற்று மூஞ்சலைச் சுற்றிப் பல்லாயிரம் வீரர்களைக்கொண்ட பெரும்படை இருந்தது. நாம் அதன் அருகில் சென்றாலும் அதன் தன்மையை முழுமையாகப் பார்க்க முடியவில்லை. ஆனால், இன்று அப்படியல்ல; மிகக் குறைந்த வீரர்களே இருந்தனர். அவர்கள் மூஞ்சலை அமைத்துள்ள விதத்தையும் அதைப் பாதுகாக்கச் செய்யப்பட்டுள்ள ஏற்பாட்டையும் முழுமையாக என்னால் பார்க்க முடிந்தது” என்றான்.

மருந்து தேய்க்கப்பட்டு, காய்ந்த வாழைமட்டை ஒன்றை அருகில் இருந்த விளக்கின் சுடரில் தேக்கன் வைத்தான். நெருப்பு சட்டெனப் பற்றியது. போதுமான அளவுக்கு அதை எரியவிட்டு விலா எலும்போடு எரிமட்டையை அமுக்கித் தேய்த்தார். கணநேரத்தில் கருகித் திரிந்தது. தேய்த்த விரல்களின் வழியே புகை வெளியேறிய படியே இருக்க, சதையின் மேல் போதுமான சூட்டோடு மருந்து அப்பி உள்ளிறங்கியது. தேக்கனின் இந்தச் செயலைப் பார்த்தபடியே இரவாதன் தொடர்ந்தான். ``மூஞ்சலை உடைக்க நமக்குப் புதிய திட்டம் வேண்டும்.”

``என்ன செய்யலாம்?”

சிறிதும் இடைவெளியின்றி இரவாதன் சொன்னான், ``அரிமான்களை உள்ளிறக்க வேண்டும்.”

அதிர்ந்தான் முடியன்.

சற்றே சிரித்தான் தேக்கன். ``இளவயது என்பதால், சட்டெனக் கேட்டுவிட்டாய். ஆனால், அதற்கு வாய்ப்பேதும் இல்லை. வேறு என்ன செய்யலாம் என்று சொல்.”

``இடர்மிகுந்த நேரத்தில்தானே அவர்களைக் களம் இறக்கலாம் என்று சொல்கிறேன்” என்று இரவாதன் தொடர்ந்தபோது முடியன் சொன்னான், ``தேக்கனின் சொல்லைப் பணிந்து கேள்.”

இப்போது தேக்கன், முடியனைப் பார்த்தான். தேக்கன் பயன்படுத்திய ஈட்டி, ஓரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. கண்களை விலக்கித் தாழ்த்திக்கொள்வதன் மூலம் எவ்வளவு உணர்வுகளைக் கடத்திவிட முடிகிறது?

முடியனின் சொல்லை ஏற்றுக்கொண்ட இரவாதன் அடுத்து கேட்டான், ``சரி, திரையர்களையாவது உள்ளிறக்கலாமா?”

``ஏன்... நம்மால் முடியாது என்ற முடிவுக்கே வந்துவிட்டாயா?” எனக் கேட்டான் முடியன்.

``மூஞ்சலைத் தகர்த்தெறியவும் அழித் தொழிக்கவும் நம்மால் முடியும். ஆனால், உள்ளே நுழைந்து நீலனை மீட்டு வெளிவருவதற்கு, கூடுதல் ஆற்றலும் தெளிவான திட்டங்களும் பலவிதமான தாக்குதல் முறைகளை ஒருங்கிணைத்தலும் வேண்டும்.”

``ஏன்?”

``ஏனென்றால், மூஞ்சல் அமைக்கப்பட்டுள்ள விதம் அப்படி. மணற்பரப்பில் பள்ளம் பறித்தால் மறுகணமே சுற்றியுள்ள மணலெல்லாம் சரிந்து மூடிக்கொள்வதைப்போல் அதை வடிவமைத் துள்ளனர். ஆயுதங்கள் ஒன்றோடு ஒன்று செருகப் பட்டு வெளிப்புறச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்பகுதியில் கவசவீரர்களின் அணிவகுப்பு நிற்கிறது. அவர்களுக்குப் பின் மீண்டும் ஆயுதங்களின் சுவர், பிறகு வீரர்கள் என்று மூன்று அடுக்கு இருக்கின்றன. இந்தச் சுவரை எந்த இடத்தில் தகர்த்தாலும் மறுகணமே அருகில் பின்னப்பட்டு இறுகியிருக்கும் ஆயுதச்சுவர் விரிந்துகொடுத்து, தகர்க்கப்பட்ட இடத்தை மறைத்து நிரப்பிவிடும். அதேபோல வீரர்களை வீழ்த்தினாலும் அருகில் கோத்து நிற்கும் வீரர்கள் அந்த இடைவெளியை உடனே நிரப்புவர்” என்று சொன்னவன் முடியனைப் பார்த்துக் கேட்டான், ``நேற்றைய போர் நாம் மூஞ்சலை நெருங்கியவுடன் முடிவுற்றது. நான் அந்த இடம் நீண்டநேரம் நின்றேனே கவனித்தீர்களா?”

``ஆமாம். இவ்வளவு அருகில் வந்தும் பயனில்லாமற்போய்விட்டதே என்ற தவிப்பில் நின்றிருந்தாய்.”

``ஆமாம். எல்லோரும் அப்படி நினைக்க வேண்டும் என்பதால்தான் நீண்ட நேரம் நின்றிருந்தேன். ஆனால், எனது நோக்கம் வேறொன்றாக இருந்தது. போரிட்டுக் கொண்டிருந்தபோது மூஞ்சலைச் சுற்றிப் பெரும் எண்ணிக்கையில் வீரர்கள் இருந்தனர். தேர்களும் குதிரைகளும் இங்கும் அங்குமாக நின்றிருந்தன. ஆனால், போர் முடிவுற்ற முரசின் ஓசை கேட்டதும் வீரர்கள் தங்களின் பாசறைக்குத் திரும்பத் தொடங்கினர். அப்போது செய்வதறியாத தன்மையில் சற்றுக் கூடுதல் நேரம் அங்கு நின்றேன். காரணம், மூஞ்சலுக்குள் எத்தனை கூடாரங்கள், எந்தத் தன்மையில் அமைக்கப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாகப் பார்க்க வேண்டும் என்பதால்தான் அப்படிச் செய்தேன். மூஞ்சலைத் தெளிவாகவும் பார்த்தேன். பன்னிரண்டு கூடாரங்கள் இருந்தன” என்றான்.

தெரிந்த எண்ணிக்கையைத்தான் அவன் சொல்கிறான் என்பதால், முடியனின் பார்வையில் வியப்பேதுமில்லை. தேக்கனோ மருந்து தேய்க்கப்பட்ட அடுத்த வாழைமட்டையை எடுத்து, சுடரில் காட்டிப் பற்றவைத்தான். அப்போது இரவாதன் சொன்னான், ``இன்றைக்குப் பார்த்தபோது பதினைந்து கூடாரங்கள் இருந்தன.”

சுடரை நோக்கியிருந்த தேக்கனின் பார்வை, இரவாதனை நோக்கித் திரும்பியது. அவனது கண்ணுள் சுடரின் முனை சுழன்று கொண்டிருந்தது. முடியனோ சற்றே வியப்போடு அவன் சொல்லவருவதைக் கவனித்தான்.

இரவாதன் சொன்னான், ``அவை உண்மையான கூடாரங்கள் அல்ல. நூற்றுக்கணக்கான படை வீரர்கள் உள்மறைந்திருக்கும் பொய்க்கூடாரங்கள். அந்த வகைக் கூடாரங்கள் சிறியதும் பெரியதுமாக நிறைய இருக்கின்றன.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 101

பாதி எரிந்த மட்டையை விலாவெலும்பில் தேய்த்தபடி தேக்கன் கேட்டான், ``அரிமான்களும் திரையர்களும் இல்லாமல் மூஞ்சலை உடைத்து நீலனை வெளிக்கொண்டுவர, நீ சொல்லும் உத்தி என்ன?”

இரவாதனின் கண்கள் அகல விரிந்தன. பறம்பு ஆசான், இந்தப் போரின் இலக்கை அடைவதற்கான உத்தியைப் பற்றி தன்னிடம் ஆலோசனை கேட்கிறார் என்றதும் உடலெங்கும் உற்சாகம் பீறிட்டது. நீண்ட தன் இரு கைகளையும் விரித்தபடி சொல்லத் தொடங்கினான். ``மூஞ்சலை ஒரு குழு ஓர் இடத்தில் உடைத்து முன்னேற முடியாது. ஒரே நேரத்தில் மூன்று திசைகளிலும் உடைத்து உள்நுழைய வேண்டும். அப்போதுதான் அவர்களின் சங்கிலித்தொடர் காப்புமுறையைச் செயலிழக்கச் செய்ய முடியும். அதே நேரத்தில் பொய்க்கூடாரங்களை நோக்கிக் குறிவைத்துத் தாக்க வேண்டும்” என்று சொன்னவன் அம்பு ஒன்றை எடுத்துத் தரையில் கீறி, மூஞ்சலின் வரைபடத்தை உருவாக்கினான்.

``மூன்று திசைகளிலிருந்தும் மூஞ்சலை ஒரே நேரத்தில் தாக்கி முன்னேறுவோம். முடியன் இடதுபுறமும் உதிரன் வலதுபுறமும் மூஞ்சலின் தடுப்பரணை உடைக்கட்டும். நான் நேர்கொண்டு தாக்கி உள்நுழைகிறேன். மற்ற இருவரும் மூஞ்சலை உடைத்த இடத்திலிருந்து உள்நுழையாமல் ஆயுதங்களாலும் வீரர்களாலும் காக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வட்டவடிவ வெளிப்புறச் சுவரை முற்றிலும் அழிக்கும் வேலையைச் செய்யவேண்டும். நான் எனது குதிரைப்படையோடு உள்நுழைகிறேன். உள்ளே நுழைந்ததும் எனது படை மூன்றாகப் பிரியும். பிடறிமான் தலைமையிலான பிரிவு, பொய்க்கூடாரங்களில் உள்ளவர்களை மட்டும் தாக்கும். கரிணி தலைமையிலான பிரிவு, உள்ளுக்குள் காத்து நிற்கும் அகப்படை வீரர்களை மட்டும் தாக்கும். எனது தலைமையிலான பிரிவு, நீலனின் கூடாரத்தை நோக்கி முன்னேறி அவனை மீட்கும். இந்தத் தாக்குதலின்போது எதிரிகளின் முழுக் கவனமும் மூஞ்சலை நோக்கிக் குவியாமலிருக்க மூஞ்சலை விட்டு மிகத்தள்ளி, களத்தின் மையப்பகுதியில் வலிமைமிகுந்த தாக்குதலைத் தேக்கனும் ஈங்கையனும் நடத்தவேண்டும்” என்றான்.
 
``ஓரளவுக்கு சரியான திட்டம்தான். இதில் இருக்கும் பிழை என்ன? இதை நடைமுறைப் படுத்துவதில் உள்ள  சிக்கல் என்ன?” என்று கேட்டான் தேக்கன்.

``பிழை ஏதும் இருப்பதாக நினைக்கவில்லை. சிக்கல் என்பது பிடறிமானும் கரிணியும் இந்தத் திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். கூடாரத்தைச் சுற்றிக் காத்து நிற்கும் கவசவீரர்களைத் தாக்கவும் பொய்க்கூடாரங்களில் குவிந்திருக்கும் வீரர்களைத் தாக்கவும் இரு வேறு தாக்குதல் உத்திகளைப் பின்பற்ற வேண்டும். அதற்கான தெளிவான பயிற்சி வேண்டும்” என்றான் இரவாதன்.

முடியன் சொன்னான், ``உதிரன் விற்படை மூஞ்சலை விட்டு மிகத்தள்ளி நின்றால்தான் எதிரிகளின் பெரும்படை மூஞ்சலை விட்டு விலகி நிற்கும். அவர்களின் கவனமும் இருகூறாகப் பிரிந்திருக்கும். எனவே, உதிரனை வெளியில்தான் வைத்திருக்க வேண்டும்” என்றான்.

``சரி. அப்படியென்றால் ஈங்கையனின் தலைமையிலான படையை மூஞ்சலில் வலதுபுறத் தாக்குதலுக்குப் பயன்படுத்தலாமா?” எனக் கேட்டான் இரவாதன்.

``போரில் யாரை, எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதுதான் மிக முக்கியம்” என்று சொல்லியபடி அடுத்த வாழைமட்டையை எடுத்தான் தேக்கன்.

முடியனோ தேக்கன் சொல்லப்போவதைக் கேட்காமல் தரையில் வரையப்பட்ட வரைபடத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். இரவாதனோ தேக்கன் ஏன் இப்படிச் சொல்கிறான் என்ற வியப்போடு அவனைப் பார்த்தான். தேக்கன் சொன்னான், ``இத்தனை நாள் போரிலும் ஈங்கையன் சொல்லிக்கொள்ளும்படியான எந்தத் தாக்குதலையும் நடத்தி முன்னேறவில்லை. படைக்குத் தலைமையேற்று முன்னேறுவதற்குரிய பயிற்சியும் ஆற்றலும் அவனுக்கு இல்லை என நினைக்கிறேன்.”

சற்றே வியப்போடு இரவாதன் கேட்டான், ``சோழப்படையை வீறுகொண்டு தாக்கி அழித்தவன் என்று அவனையும் அவனுடன் உள்ள வீரர்களையும் பற்றி நீலனும் உதிரனும் சொன்னார்களே!”

``இருக்கலாம். அது தாக்குதல் போர் என்பதால், அவர்கள் பெரும்வீரத்தை வெளிப்படுத்தி எதிரியை ஓடச்செய்திருக்கலாம். ஆனால், படைப்பிரிவினூடாக முன்னேறும் போர் என்பது அவர்களுக்கு வசப்படவில்லை என நினைக்கிறேன்” என்றான் தேக்கன்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 101

வரைபடத்திலிருந்து கண்களை அகற்றாமலேயே முடியன் சொன்னான், ``தேக்கனும் ஈங்கையனும் பின்களத்தில் நிற்கட்டும். உதிரன் தட்டியங்காட்டின் இடதுபுறமிருந்து எதிரியை நோக்கி முன்னேறட்டும். நாளைய போரில் தேர்ப்படைத் தளபதி கூழையனுக்குப் பதில் விண்டன் களமிறங்க இருக்கிறான். நீ சொன்ன திட்டப்படியே அவனும் நானும் நீயும் மூஞ்சலுக்குள் நுழைவோம்” என்றான்.

இரவாதனின் முகத்தில் சுடரின் ஒளி பரவி நின்றது. விண்டன், அவனது வயதொத்த இளம்வீரன். பாரி தனிப் பயணம் மேற்கொள்ளும் போது தேக்கனால் மறை பாதுகாப்புக்காக அனுப்பப்படுபவர்களில் ஒருவன். அவனும் நானும் தந்தையோடு இணைந்து போரிட்டால் மூஞ்சலை உடைத்து நீலனை மீட்கலாம்.

இந்தமுறை எடுத்த வாழைமட்டையைச் சுடரில் பற்றவைக்கவில்லை; கலயத்தில் இருந்த மூலிகைச்சாற்றில் நனைத்து இதுவரை சுட்டுத்தீய்த்த பகுதியின் மீது ஒட்டவைத்தான். ``நாளை நாம் தாக்குதல் போரை நடத்த வேண்டாம். உதிரனின் விற்படையும் குதிரைப்படையும் இன்றைய போரில் பேராற்றலை வெளிப்படுத்தி யிருக்கின்றன. அவர்களுக்கு சற்று இளைப்பாறுதல் தேவை. அப்போதுதான் நாளை மறுநாள் மூஞ்சலின் மீதான தாக்குதலை முழு வலிமையோடு நடத்த முடியும்” என்றான்.

சரியென ஏற்றுக்கொண்ட இரவாதன், ``ஆமாம். பிடறிமான், கரிணி ஆகிய இருவர் தலைமையிலான படைக்கும் தனித்த பயிற்சிகள் தேவை. இன்று மிகவும் களைத்துப்போய் இருப்பார்கள். நாளை இரவு அந்தப் பயிற்சியை முழுமையாக எடுத்துக்கொண்டு நாளை மறுநாள் தாக்குதலைத் தொடுக்கலாம்” என்றான் இரவாதன்.

ஈரமட்டையை விலாவெலும்பின் மேல் போர்த்தியபடி மீண்டும் கட்டிலில் சாய்ந்தான் தேக்கன். இரவாதன் வெளியேறிய பிறகு முடியனும் தேக்கனும் பேசிக்கொள்ளத் தேவையேதுமில்லை. இரவாதனின் பேச்சினூடே பேசவேண்டிய எல்லாம் பேசப்பட்டுவிட்டன.

பொழுது விடிந்தது. தட்டியங்காடெங்கும் சிதறிக்கிடக்கும் பிணங்களின் மீது கதிரவனின் ஒளி படர்ந்தது. இரவெல்லாம் முயன்றும் கொல்லப்பட்டுக் கிடக்கும் தன் வீரர்களின் உடல்களை வேந்தர்படையால் முழுமையாக அகற்ற முடியவில்லை. நேற்று மாலையிலிருந்து குதிரைகளும் மாடுகள் பூட்டிய வண்டிகளும் பிணங்களை எடுத்துச் சென்றபடியே இருந்தன. ஆனாலும் முடிந்தபாடில்லை. முற்றுகைப்போர் என்பதால், பறம்புப்படையினர் அணிவகுக்கும் பகுதிக்குப் பின்புறமும் எண்ணற்ற வேந்தர் படைவீரர்கள் நின்று போரிட்டனர். ஏறக்குறைய அந்தப் படைப்பிரிவினர் முழுக்க அழிக்கப் பட்டனர். எனவே, பறம்புப்பக்கம் எண்ணி லடங்காத வேந்தர்படை வீரர்களின் உடல்கள் கிடந்தன.

வீரயுக நாயகன் வேள்பாரி - 101

போர்க்களப் பணியாளர்கள், இரவெல்லாம் பந்தங்களின் வெளிச்சத்தில் எண்ணிலடங்கா உடல்களை அப்புறப்படுத்தினர். ஆனால், பொழுது விடிந்த பிறகுதான் தெரிந்தது இன்னும் நெடுந்தொலைவுக்கு வீரர்களின் உடல்கள் கிடக்கின்றன என்பது. அதுவும் எதிரிப்படையினர் நிற்கும் பகுதியில் தன் வீரர்களின் உடல்கள் கிடப்பது அவமானமாகக் கருதப்படும். போர் தொடங்கிவிட்டால் அந்த உடல்கள் எதிரிகளின் கால்களிலோ, அவர்களுடைய குதிரைகளின் கால்களிலோ, தேர்ச்சக்கரங்களிலோ நசுங்கிச் சிதைவது கொடிதிலும் கொடிது. எனவே,  அவற்றை அப்புறப்படுத்த, பணியாளர்கள் விரைந்து செயல்பட்டனர்.

மாடுகள் பூட்டிய வண்டி களிலும் குதிரை பூட்டிய வண்டிகளிலும் அப்புறப் படுத்தியவர்கள், இனி அவ்வாறு செய்து முடிக்க பொழுதில்லை என அறிந்துகொண்டனர். மாளிகையின் தரையில் இருக்கும் பெருவிரிப்புப்போல மரப் பலகைகளைக் கொண்டுவந்து ஒன்றோடொன்று இணைத்துப் பூட்டி பெருஞ்சட்டகத்தை உருவாக்கினர். இறந்துகிடக்கும் வீரர்களின் உடல்களை இழுத்துவந்து சட்டகத்தின் மீது போட்டனர். ஐந்து வண்டிகளில் கொண்டுசெல்லும் பிணங்களை ஒரு சட்டகத்தின் மேலே கிடத்தி இழுத்துச்செல்லலாம்.

ஆனாலும் வேலைகளை வேகப்படுத்துவது எளிதன்று. ஈட்டி பாய்ந்து கிடந்த வீரனின் உடலிலிருந்து ஈட்டியைப் பிடிங்கி எறிந்த பிறகே அந்த உடலைத் தூக்கி மரச்சட்டத்தின் மீது போட முடியும். இல்லையெனில், அடுத்த உடலைத் தூக்கிப்போட அது தடையாக இருக்கும். ஒவ்வோர் உடலில் இருந்தும் ஈட்டியை இழுத்துப் பிடுங்கவேண்டியிருந்தது. எல்லா உடல்களிலும் எண்ணற்ற அம்புகள் தைத்துக்கிடந்ததால் அவற்றை அப்புறப்படுத்துவது எளிய செயலாக இல்லை. அம்பு முனையின் இரு காதுப் பகுதிகளும் மிகக்கூர்மையானவை. தசைகளையும் நரம்புகளையும் இழுத்துக்கொண்டுதான் வெளியில் வரும். மருத்துவனால்கூட அதை எளிதில் வெளியே எடுக்க முடியாது. ஆனால், போர்ப் பணியாளர்களோ கைகளுக்குச் சிக்கியவற்றையெல்லாம் பிடுங்கி எறிந்து உடல்களைத் தூக்கி மரச்சட்டகங்களில் போட்டனர். வேலை வேகவேகமாக நடந்தது. இரண்டு ஆள் உயரத்துக்கு உடல்களைக் குவித்தனர். மரச்சட்டகங்களை இழுத்துச் செல்ல யானைகள் வந்தன.

உடலின் இரு பக்கங்களிலும் கட்டப்பட்ட பெருவடங்களால் மரச்சட்டங்களை யானைகள் இழுக்கத் தொடங்கின. குன்றெனக் குவிக்கப்பட்ட பிணக்குவியல்கள் தட்டியங்காட்டை விட்டு மெள்ள நகர்ந்தன. தனது முதுகுப் பகுதியில் எண்ணிலடங்காத மனித உடல்களைச் சுமந்தபடி நத்தைபோல ஊர்ந்தது மரச்சட்டகம். இழுபடும் மரச்சட்டகங்களிலிருந்து வழுவிய பிணங்களை மீண்டும் இழுத்துப்போட்டு நகர்ந்தனர்.

போர்ப்பணியாளர்கள்தாம், தாக்குதலின் தன்மையைக் கணிப்பவர்கள்; ஒவ்வொரு நாளும் தாக்குண்டு கிடக்கும் ஒவ்வொரு வீரனையும் வைத்து தாக்குவோரின் திறனை மதிப்பிடுபவர்கள். இன்றைய நாளில் வேந்தர்படையின் எண்ணிலடங்காத கவச அணிவீரர்களின் கழுத்துப் பகுதியில் அம்பு பாய்ந்து இறந்துகிடந்தனர். கவச அணிவீரர்கள் ஓரிருவர் கழுத்துப் பகுதியில் அம்பு பாய்ந்து இறக்கலாம். ஆனால், இத்தனை பேர் எப்படி குறிபார்த்து வீழ்த்தப்பட்டார்கள்? நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. அதுவும் கவச அணிவீரர்களின் உடல்களைத் தூக்கி மரச்சட்டகத்தில் போடுவது மிகக்கடினமான ஒன்று. சிலநேரத்தில் மூன்று பேர் சேர்ந்துகூட ஒருவரைத் தூக்கிப்போட முடியாது. ஆனாலும் அந்தப் பணியை வேகமாகச் செய்ய முயன்றனர்.

பிணங்களை இழுக்கும் யானையும் அதன் பாகனும் யட்சினியின் வடிவாகவே பார்க்கப்படுவர். போர் தொடங்கும்போது அழிவின் தேவதை யட்சினிக்காக பவளவந்திகையைப் பலியிட்டனர். அதேபோல போர் வெற்றியுடன் முடிந்தால் போர்க்களத்தில் பிணங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட யானைகளையும் அவற்றின் பாகன்களையும் யட்சினிக்குப் பலியிட்டுக் குளிரூட்டுவர்.

வழக்கம்போல் நாழிகை பரண் நோக்கித் தேரிலே வந்தார் திசைவேழர். ஆனால், தேரை ஓட்டும் வளவனால் குறிப்பிட்ட தொலைவைக் கடந்து தட்டியங்காட்டுக்குள் தேரைச் செலுத்த முடியவில்லை. வீரர்களின் உடல்கள் எங்கும் கிடந்தன. உயிர்த்துடிப்பு முடிவுறாமல் தவித்து மேலெழும் குரல் ஆங்காங்கே கேட்டது. உடல்களைத் தேர்ச்சக்கரங்களால் ஏற்றிவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்த வளவனால், ஒருகட்டத்துக்குப் பிறகு தேரைச் செலுத்த முடியவில்லை. கடிவாளத்தை இழுத்துக் குதிரையை நிறுத்தினான்.

தேரை விட்டுக் கீழிறங்கினார் திசைவேழர். மரணத்தின் ஆட்சி நடக்கிற நிலத்தை, கண்கொண்டு பார்க்கவும் கால்கொண்டு கடக்கவும் முடியாமல் அப்படியே நின்றார். என்ன செய்வதென்று தெரியவில்லை. நீண்டுவிழுந்த அவரது நிழல், பொழுதாவதை உணர்த்தியது. வேறு வழியேயின்றி பரண் நோக்கி நடக்கத் தொடங்கினார்.

மூஞ்சல் எங்கும் போர் தொடங்கப்போகும் நேரத்துக்குரிய பரபரப்புடன் இருந்தது. உதியஞ்சேரல் மட்டும் போருக்கான கவச உடை அணிந்து தனது கூடாரத்தை விட்டு வெளியேறினான். மற்ற இரு பேரரசர்களும் இன்னும் கூடாரம் விட்டு வெளிவரவில்லை. மெய்க்காப்பாளர்களும் அகப் படையினரும் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

குலசேகரபாண்டியன் கூடாரத்தை விட்டு வெளியேறும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போது பொதியவெற்பன் அவரைக் காண வந்தான். நேற்று இரவு நடந்த உரையாடல், அவனுக்குப் பெருங்குழப்பத்தையும் கோபத்தையும் உருவாக்கியிருந்தது. ``மையூர்கிழாருக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு துணிச்சல்? மூவேந்தர்களின் தலைமைத் தளபதியை பாண்டியப் பேரரசர் இருக்கும் அவையில் அவரின் முன் தாக்குதலுக்குத் தகுதியற்ற தளபதி என்று எப்படி அவனால் சொல்ல முடிந்தது?” கொந்தளிக்கும் கேள்விகளை குலசேகரபாண்டியனிடம் முன்வைத்தான் பொதியவெற்பன்.

`இதைக்கூடப் புரிந்துகொள்ள முடியவில்லையா?’ என்றதோர் ஏளனமான பார்வையோடு குலசேகரபாண்டியன் சொன்னான், ``நேற்று நமது படை பேரழிவைக் கண்டது. முற்றுகை தகர்க்கப்பட்டு முற்றுகையிட்டவர்கள் பெருந்தாக்குதலைக் காண்பது போர்க்களத்தில் தோல்விக்கு இணையான ஒன்று. எந்த ஒரு மன்னனும் அதன் பிறகு போரிடும் முடிவைத் தொடர விரும்ப மாட்டான். சேரனுக்கும் சோழனுக்கும் நம்மீதான நம்பிக்கை முற்றிலும் சிதையும்படியான நாள் நேற்று. அந்நிலையில் வழக்கம்போல் இரவில் மூவரின் சந்திப்பு அமைந்தால் பேச்சும் முடிவும் நமக்கு எதிரானதாகத் தான் இருக்கும். அதை மாற்ற வேண்டும் எனச் சிந்தித்தேன். மையூர்கிழாரை அழைத்து, `அவையில் மூவேந்தர்களின் அனைத்து தளபதிகளின் மீதும் கடுங்குற்றச்சாட்டை முன்வைத்துப் பேசு’ என்றேன்.”

பொதியவெற்பன் வழக்கம்போல் திகைப்புற்றான். குலசேகரபாண்டியன் தொடர்ந்தார், ``ஆனால், மையூர்கிழார் இந்த வாய்ப்பைத் தனக்கானதாக முழுமையாக மாற்றிக் கொண்டான். நானே எதிர்பார்க்காத அளவு இருந்தது அவனது சீற்றம்.”

பொதியவெற்பனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ``ஆனாலும் தலைமைத் தளபதியை அவன் அவ்வாறு சொல்லியிருக்கக் கூடாது” என்று பேச்சைத் தொடர்ந்தபோது குலசேகர பாண்டியன் குறுக்கிட்டுச் சொன்னார், ``அதுவல்ல இப்போது முக்கியம். மகிழ்வூட்டும் செய்தி ஒன்று அதிகாலை என்னை வந்தடைந்தது” என்றார்.

பொதியவெற்பன், வேந்தரின் முகத்தை உற்றுப்பார்த்தபடி அவர் அடுத்து உதிர்க்கப்போகும் சொல்லுக்காகக் காத்திருந்தான். குலசேகர பாண்டியன் சொன்னான், ``இன்று மாலை பொற்சுவை, பாரியைக் காண இரலிமேட்டுக்குச் செல்கிறாள். நம் வீரர்கள் அவள் அறியாதபடி உடன் செல்லவுள்ளனர். நாம் எதிர்பார்த்த நாள் இது.”

திசைவேழரின் கை உயர்ந்ததும் தட்டியங் காட்டின் ஐந்தாம் நாள் போருக்கான முரசின் ஓசை ஒலிக்கத் தொடங்கியது. ஆனால், தட்டியங்காடெங்கும் பிணங்களை அகற்றும் பணி முழுமையாக முடியவில்லை. பெருமரச் சட்டங்களை யானைகள் இழுத்தபடியே இருந்தன. பறம்புவீரர்கள் அணிவகுத்து நிற்பதற்கு முன்பும் பின்பும் இன்னும் உடல்கள் கிடந்தன. ``உடல்களை முழுமையாக அகற்றாமல் நாம் முன்னேறிச் செல்ல வேண்டாம்” என்று கூறினான் முடியன்.

வேந்தர்களின் படையோ வெகுதொலைவில் அணிவகுத்தபடி அப்படியே இருந்தது. பறம்புப்படை முன் நகராததால் அவர்களும் முன் நகரவில்லை. யட்சினி யானைகள், பிளிறலுடன் மரச்சட்டங்களை இழுத்துக்கொண்டிருந்தன.

கருங்கைவாணன் எந்த முடிவையும் எடுக்கவில்லை. பேரரசரின் உத்தரவுக்கேற்பச் செயல்படுவோம் எனக் காத்திருந்தான். பேரரசரோ கூடாரம் விட்டு காலம் தாழ்த்தித்தான் வெளியேறி வந்தார். கருங்கைவாணன், அவரின் பார்வையில் நின்றிருந்தான். அவனது முகம் இருண்டிருந்தது. அதைப் பார்த்தபடி தனது இறுக்கத்தைத் தளர்த்தாமலே பேரரசர் சொன்னார். ``தற்காத்து நில். எதிரிகள் முன்னேறிவந்தால் மட்டும் தாக்கு.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 101

முடியனும் அதே முடிவில்தான் இருந்தான். விற்படை வீரர்களுக்கு இன்று அதிக வேலை கொடுக்கக் கூடாது. அதேபோல குதிரைப் படையையும் இன்று கடினமான தாக்குதலுக்கு உட்படுத்தக் கூடாது. எனவே, காலாட்படை வீரர் களையும் தேர்ப்படை வீரர்களையும் முன்புறமாக அணிவகுக்கச் செய்தான். தேர்ப்படைத் தளபதியாக விண்டனுக்கு இன்றுதான் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவன் ஏறிச்சென்று தாக்கும் துடிப்போடு இருப்பான். எனவே, அவனிடம் தெளிவான கட்டளைகளைப் பிறப்பித்தான் முடியன்.

தட்டியங்காடெங்கும் பேரமைதி நிலவியது. `மரணத்தின் ஆட்சி கண்டு மனிதன் நிலைகுலைந்து நிற்கிறான்’ என்று திசைவேழருக்குத் தோன்றியது. போர் தொடங்குவதற்கான முரசின் ஓசையைக் கேட்ட பிறகும் இருபக்கப் படைகளும் பாய்ந்து முன் நகரவில்லை. மரணத்தின் பேயுருவுக்கு முன்பு அசைவற்று நிற்கும் காட்சி தெளிவாகத் தெரிந்தது. யட்சினி யானைகள் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பெரும்சட்டகங்களை இழுத்துக்கொண்டிருந்தன. பொழுதாகிக் கொண்டிருந்தது. போர்க்களத்தின் ஓர் எல்லையிலிருந்து மறு எல்லை வரை கண்களை ஓடவிட்டுத் துல்லியமாகப் பார்த்தார் திசைவேழர். வேறு எங்கிருந்தாவது தாக்கி முன்வருவதற்கான திட்டம் ஏதும் இருக்கிறதா எனக் கவனித்தார். அதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.

காலாட்படையின் சில அணிகள் முன் நகரத் தொடங்கின. பிற்பகலுக்குப் பிறகு அங்குமிங்குமாக சிறுசிறு மோதல்களைத் தேர்படையினர் நடத்தினர். ஆனாலும் இரு தரப்பும் மொத்தப் படையை முன் நகர்த்தவில்லை. இருபடை தலைமைத் தளபதிகளும் தெரிந்தே ஒரு விளையாட்டை விளையாடுகின்றனர். ஆனால், இறுதி நாழிகையில் பெருந்தாக்குதல் ஒன்று நடக்கும் எனக் கணித்தார் திசைவேழர்.

அந்தத் தாக்குதலின்போது நாம் கவனமாகப் பார்த்தறியவேண்டும். கடைசி நாழிகையைப் பயன்படுத்தி சதியை நிகழ்த்தலாம் என எண்ணினார். எந்தச் சூழலிலும் களத்தின் நடுவில் இருக்கும் இந்தப் பரணில் நிற்கக் கூடாது. படைகளின் போக்கிற்கேற்ப வேந்தர் தரப்பில் இருக்கும் பரண்களின் மீதோ அல்லது பறம்பின் தரப்பில் இருக்கும் பரண்களின் மீதோ ஏறி நின்று உற்றுக்கவனிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால், பிற்பகலிலும் போக்குக்காட்டும் போரைத் தான் இருதரப்பும் நடத்தின. அங்குகொன்றும் இங்கொன்றுமாக ஈட்டிகள் குறுக்கிட்டுப் பாய்ந்தன. அம்புகள் விடுக்கும் ஓசை மிக மெல்லியதாகக் காற்றில் ஏறிவந்தது. இரண்டொரு தேர்கள் அவ்வப்போது விரைந்து கடந்தன. சட்டென நினைவுவந்தவராக திசைவேழர் நாழிகைவட்டிலைக் குனிந்து பார்த்தார். அவரால் நம்பவே முடியாத ஒரு நாளாக இன்றைய நாள் முடிய இருந்தது. நீண்ட நிழல் மூன்றாம் கோட்டைத் தொட்டது. அவர் கைகளை உயர்த்தினார். முரசின் ஓசை எங்கும் மேலெழுந்தது. ஐந்தாம் நாள் போர் முடிவுற்றது.

இருதரப்புப் படைகளும் தங்களின் பாசறைக்குத் திரும்பின. கதிரவன், காரமலையின் பின்புறம் இறங்கத் தொடங்கினான். ஒளியின் கைகள் மறையத் தொடங்கின. சேரன், செங்கனச்சோழனின் கூடாரத்துக்குள் வந்தான். குலசேகரபாண்டியனின் கூடாரம் நோக்கி பொதியவெற்பன் விரைந்தான். அனைவரும் எதிர்பார்த்திருந்த இரவு வரத் தொடங்கியது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

சு.வெங்கடேசன்