மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான்காம் சுவர் - 5

நான்காம் சுவர்
பிரீமியம் ஸ்டோரி
News
நான்காம் சுவர் ( பாக்கியம் சங்கர் )

பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்

காப்பகத்து மைதானத்தில் குணமடைந்த நோயாளிகளும் குணமடைந்துகொண்டிருக்கும் நோயாளிகளும், விளையாட்டு ஒத்திகைக்குத் தயாராக நின்றுகொண்டி ருந்தார்கள்; உட்கார்ந்துகொண்டிருந்தார்கள்; சுற்றிக்கொண்டிருந்தார்கள்; ஒருவர் மேல் ஒருவர் ஏறிக் குதித்துக்கொண்டிருந்தார்கள். ஒருவர், மைதானத்தின் நடுவே தனது சிறுநீரால் என்னவோ வரைய முயன்றார். ஆனால், குளம் வற்றிப்போன கவலையில் சிரித்தார். வார்டன், இவர்களைத் தனது கட்டுக்குள் கொண்டுவர எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார்.

நான்காம் சுவர் - 5

சர்மா டாக்டர், ஒத்திகையைப் பார்வையிட அழைத்திருந்தார். ``இந்த மாதிரியான விளையாட்டுகளும் கலைகளும்தான் சார் மனுஷனுக்கான தெரபியே. ஒரு மனுஷன சுதந்திரமா விடுறதத் தவிர அவனுக்கு நீங்க வேற எந்த சந்தோஷத்தையும் கொடுத்துட முடியாது. எல்லா சுகத்தையும் எல்லாருக்கும் இந்த வாழ்க்கை கொடுக்கிறதில்லை. இப்ப பாருங்க, இந்தக் காப்பகத்துல நீங்களும் நானும் தெளிவா இருக்கிறதா நினைச்சுக்கிறோம். சொல்ல முடியாது, அடுத்த தடவை நீங்க வரும்போது நான்கூட ஒரு பேஷன்டா இருக்கலாம். இல்ல, நீங்க ஒரு பேஷன்டா இருந்து நான் ட்ரீட்மென்ட் பண்ணலாம்” என்று சிரித்தார்.

மைதானத்துக்குப் போகும் பாதையில் நானும் சர்மா டாக்டரும் நடந்து சென்றோம். பசுமை போர்த்திய நோயாளி ஒருவர், தனக்கான தோட்டத்தை உருவாக்கிக்கொண்டிருந்தார். மஞ்சள் ரோஜா ஒன்று, தொட்டியில் செழித்து வளர்ந்து பூத்துச் சிரித்தது. டாக்டரைப் பார்த்ததும் வணக்கம் வைத்து கைகளைக் கட்டிக்கொண்டார். ``என்ன சலீம்... மாத்திர போட்டீங்களா?” என்றதற்கு, `போட்டேன்’ என்பதாகத் தலையசைத்தார். அவரைக் கடந்து சென்றபோது பேக்கரி வந்தது. என்னையும் உள்ளே அழைத்துச் சென்றார். இங்கே நோயாளிகளே ரொட்டிகளைத் தயாரித்து சில மருத்துவமனைகளுக்கு அனுப்புவதாக டாக்டர் சொன்னார். குணாவும் அங்கே வந்து சேர்ந்தார். என்னைப் பார்த்ததும் சந்தோஷமாக ``எப்படி சார் இருக்கீங்க?’’ என்றார்.

``ம்... நல்லா இருக்கேன். நீங்க..?” என்று கேட்டேன்.

``எனக்கென்ன சார்... நல்லா இருக்கேன்’’ என்று சொல்லிவிட்டு, சர்மா டாக்டரிடம் ``சார், கிரவுண்ட்ல எல்லாரையும் நிக்கவெச்சிருக்கேன். வார்டன் இருக்காரு. நீங்க வந்தீங்கன்னா, ஆரம்பிச்சுடலாம்’’ என்றவர், பேக்கரியின் உள்ளே சென்று ஒரு ரொட்டித்துண்டை எடுத்து என்னிடம் நீட்டினார். ``சார்... நான் செஞ்சது. சாப்ட்டுப்பார்த்துச் சொல்லுங்க” என்றார். தேவன், எனக்கான அப்பத்தை நீட்டி ஆசீர்வதிப்பதைப்போலவே இருந்தது. ரொட்டித்துண்டை வாங்கி வாயிலிட்டேன். அப்பத்தைவிட ருசியானதொரு மனோகரம் கொண்டிருந்தது அந்த ரொட்டித்துண்டு.

நான்காம் சுவர் - 5

நாங்கள் மூவரும் மைதானத்துக்கு வந்ததும், விளையாட்டு வீரர்கள் வணக்கத்தைத் தாறுமாறாகச் சொன்னார்கள். ``வர்ற பொங்கல் ஃபெஸ்டிவல்ல காம்படிஷன் வைப்போம் சார். ரன்னிங், லெமன் த ஸ்பூன், லேடீஸ் பேஷன்ட்டுக்கு கோலமாவு போட்டின்னு ரொம்ப நல்லாருக்கும். நீங்களும் வரணும் சார்” என்று சர்மா டாக்டர் உற்சாகத்துடன் சொன்னார். வெளியிலிருந்து ஒரு பயிற்சியாளரை இதற்கென்றே அழைத்து வந்திருக்கிறார்கள். வார்டன், எப்போதும் வெறித்த முகத்துடனேயே காட்சியளித்துக் கொண்டிருந்தார். குணா, 100 மீட்டர் ஓட்டத்துக்குச் சிலரைத் தேர்வுசெய்தார். லெமன் த ஸ்பூன் ஆட்டத்துக்குச் சிலரைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு குழுவாகப் பிரித்தார். அப்போதுதான் வார்டன் ரோஸி, குணமடைந்துகொண்டிருக்கும் நோயாளிப் பெண்கள் குழுவை மைதானத்துக்குள் கூட்டிவந்தார்.

பசுமை போர்த்திய பெண்கள் நடந்தும் ஓடியும் வந்தார்கள். சாலையோரங்களில் பஞ்சுப்பொதிகளோடு யாரோ ஒருத்தியைப் பார்க்கிறபோதே மனம் பதைத்து நடுங்கிவிடும். பிள்ளையைப் பெற்றவனின் நடுக்கம் இது. இப்படிப் பதின்பருவத்திலும் நடுவயதிலும் பெண்களை சுவாதீனமின்மையோடு பார்ப்பது பதறவைக்கிறது. நாம் இயல்பாகப் பேசிக்கொண்டி ருந்தாலும் புடவையைச் சரிசெய்து கொள்வதிலேயே கவனம்கொண்டிருக்கும் பெண்களைப் பார்த்திருக்கிறோம். அது காலம் காலமாகப் பார்த்த பார்வையின் விளைவால் வந்த நடுக்கம் என்பதை உணர்ந்தவன் நான். ஆனால், என் முன்னால் விளையாடிக் கழிக்கும் பதின்பருவத் தோழி, தன் அங்கங்களைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் அவளது உலகத்தில் லெமன் த ஸ்பூன் விளையாடி விளையாடித் தோற்றுக்கொண்டிருக்கிறாள்.

நான்காம் சுவர் - 5

காப்பகக் குழந்தைகளின் விளையாட்டுப் போட்டிக்கு, அதிகாரவர்க்கத்தினருக்கும் சஃபாரி அணிந்த கனவான்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மைதானத்தில் ஒரு மேடை அமைத்து, சிறப்பு விருந்தினர்கள் உட்கார வைக்கப்பட்டிருந்தனர். பசுமை போத்திய நோயாளிகள் எல்லோரும் வெண்மை அணிந்திருந்தார்கள். எனக்குப் பக்கத்தில் சர்மா டாக்டர் அமர்ந்திருந்தார். ``முதலில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம்’’ என, பயிற்சியாளர் விசிலோடு நின்றிருந்தார். `ஓடி, காப்பகத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும்’ என்பதைப்போல கர்மசிரத்தையோடு இருந்தது நம்மவர்களின் முகங்கள். ``சார், ஓடுறதுக்காக நிக்கிற பத்துப் பேர்ல மூக்கு சுண்டிக்கிட்டே இருக்கார்ல, அவர்தான் நம்ம காப்பகத்தோட எம்.ஜி.ஆர்” என்றார். நானும் பார்த்தேன். `ரிக்‌ஷாக்காரன்’ படத்தில் வரும் தலைவரைப்போல கழுத்தில் கர்ச்சீப்பெல்லாம் வைத்து அடிக்கடி மூக்கைச் சுண்டிக்கொண்டே இருந்தார். பயிற்சியாளர் விசிலடித்ததும் எம்.ஜி.ஆரும் மற்ற தோழர்களும் ஓடினார்கள். ஒருவர் காப்பக வார்டுக்குள் மாறி ஓடியதை சஃபாரி அணிந்த கனவான் ரசித்து விழுந்து விழுந்து சிரித்தார். சகல நீதிகளும் மறுக்கப்பட்ட இந்த வாழ்வின் தீராத ஓட்டங்களை அவர்கள் ஓடிக்கொண்டி ருந்தார்கள்.

குணா ``கமான்... கமான்...’’ என்று உற்சாகப் படுத்தினார். எம்.ஜி.ஆர் தீவிர கதியில் `ஜெயித்தே தீருவேன்!’ என்று ஓடியபோது, உடன் ஓடிவந்த சகதோழர் ஒருவர் கால் தடுக்கி தொப்பென விழுந்தார். இதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., பதறியபடி அவரைத் தூக்கியெடுத்து அவர் மேல் உள்ள தூசிகளைத் துடைத்து உற்சாகப்படுத்தி, மீண்டும் ஓடவைத்தார். எம்.ஜி.ஆராகத் தன்னை வரித்துக்கொண்டால் எளியவர்களைக் காப்பாற்ற வேண்டும் என, எம்.ஜி.ஆராக வாழ்ந்துகொண்டிருக்கும் ராமஜெயத்துக்கும் புரிந்திருப்பதை ஆச்சர்யத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். போட்டியின் முடிவில் எம்.ஜி.ஆர் தோற்றுப்போனார். இன்னொரு தோழர் ஜெயித்ததைக் கொண்டாடிக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.

தனது பிறந்த நாளில் `எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் வருவதைப்போலவே உடையணிந்து உத்தரத்தின் விளக்கைப் பிடித்து தலைவரைப்போலவே தொங்கிக்கொண்டு நண்பர்கள் வாழ்த்தைப் பெறவேண்டும் என நினைத்தார். மாறாக, விளக்கிலிருந்து பிடி நழுவி தொப்பென விழுந்திருக்கிறார். அன்றிலிருந்து எல்லாம் மறந்த நிலையில் காப்பகத்துக்கு வந்திருக்கிறார். ஆனால், தான் எம்.ஜி.ஆர் என்பதை மட்டும் மறக்கவில்லை.

நான்காம் சுவர் - 5

இப்படியாக, காப்பகத் தோழிகளின் லெமன் த ஸ்பூன் விளையாட்டை ரசித்து முடித்த அரசியல் மாமேதை, பேசத் தொடங்கினார். மைக் முன்னால் நின்று செருமிக்கொண்டார். எருமைமாடு கனைப்பதைப்போல ஸ்பீக்கரில் கேட்டது. போட்டியில் கலந்துகொண்ட நம்மவர்கள், ஏதாவது பரிசு கொடுக்க மாட்டார்களா என்று மேடையை சும்மனாங் காட்டியும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மாமேதை திருவாய் மலர்ந்தார். ``இந்த நாட்டிலே பணப் பைத்தியங்கள் இருந்துகொண்டிருக் கிறார்கள். நிலத்தின் மீது பித்துகொண்டு நாட்டை கான்கிரீட் வனம்போல மாற்றுகிறார்கள். பதவிமீது மோகம்கொண்டு பைத்தியமாகத் திரிகிறார்கள். அந்த அயோக்கியர்களை எல்லாம் விட்டுவிட்டு, நாம் இவர்களை `பைத்தியம்’ என்று சொல்கிறோம். இது வேதனையல்லவா... வருத்தமல்லவா..?” என்று இடையில் நிறுத்தி, திரும்பவும் செருமிக்கொண்டார்.

இதற்குமேல் பொறுக்க முடியாத சர்மா டாக்டர், காதோரம் வந்து கிசுகிசுத்தார் ``பெரிய அயோக்கியனா இருப்பான்போல சார். அநேகமா கொஞ்சநாள்ல இங்க வந்துருவான்னுதான் நினைக்கிறேன்” என்றார். மாமேதை ஓய்வுபெற்றதும் பரிசளிப்பு நிகழ்வு தொடங்கியது. சர்மா டாக்டர் பேசினார். ``இங்க நடந்த போட்டியில யாரும் ஜெயிக்கவும் இல்லை; யாரும் தோற்கவும் இல்லை. இது ஒரு தெரபி. விளையாடுறதுதான் முக்கியம். போட்டியில கலந்துக்கிட்ட எல்லாருக்குமே நிச்சயமா பரிசு உண்டு” என்று எல்லாப் பெயர்களையும் அழைத்தார்.

எனது பக்கத்தில் இருந்த எம்.ஜி.ஆர் என்னிடம் ``ஜெயிச்சது எம்.ஜி.ஆர். ஆனா, எல்லாருக்கும் பரிசு. கேட்டா இந்த டாக்டர்பய `தெரபி... பர்பி’ன்னு கத விடுவான். ஏன்னா... யார் மனசும் கஷ்டப்படக் கூடாதாம். எம்.ஜி.ஆருக்கே காது குத்துறானுங்க சார்” என்று அவர்பாட்டுக்குப் பாடித்தீர்த்தார். இவ்வளவு சுதி சுத்தமாக, தெளிவாகப் பேசும் எம்.ஜி.ஆரை, நான் எப்படி பைத்தியம் என்பது? எம்.ஜி.ஆரைப் பார்த்தேன். அவர் புன்முறுவலோடு சொன்னார் ``இதைச் சொன்னா, நம்மள பைத்தியக்காரன்னு சொல்றாங்க” என்று மூக்கைச் சுண்டிச் சிரித்தார்.

மாமேதைக்கும் சஃபாரி கனவானுக்கும் நினைவுப்பரிசு வழங்கி, காப்பகத்திலிருந்து அந்த இரு நச்சுகளையும் வெளியேற்றியபோதுதான் சர்மா டாக்டருக்கு முகம் தெளிவடைந்தது. அலுவலகம் வரை சென்று வருவதாகச் சென்றார். குணா, நாற்காலிகளை அடுக்கிக்கொண்டிருந்தார்.

வெண்தாமரையில் சரஸ்வதி வீற்றிருக்கும் குட்டிச் சிலையோடு கையில் பிரியாணிப் பொட்டலத்தை வாங்கியபடி எம்.ஜி.ஆர் தனது வார்டுக்குள் நுழைந்தார். ``இன்னா எம்.ஜி.ஆரே... வெயிட்டுதான்போல” என்று கலாய்த்தார் குணா.

நான்காம் சுவர் - 5

``அட, நீ வேற குணா! வருஷத்துக்கு ஒரு நாள் கறிச்சோத்தப் போட்டுட்டு, சொத்தையே எழுதிவெச்சா மாதிரி பேசிட்டுப் போறான் பாரு அரசியல் கம்னாட்டி. அவுனுங்கலாம் இருக்கிறவரைக்கும் நாம வெயிட்டா மட்டும் இல்ல... ஒயிட்டாகூட ஆவ முடியாது” என்று நடந்த எம்.ஜி.ஆர்., திரும்பி குணாவைப் பார்த்து ``இதைச் சொன்னா, நம்பள பைத்தியக்காரன்னு சொல்வானுங்க” என்று நடந்தார்.

ரோஸி, குணாவிடம் வந்தார். ``குணா, ஒரு டப்பா பிரியாணி எடுத்து வையி. வீட்ல புள்ள சாப்புடுவான்” என்றார். ``வார்டுக்குப் போக்கா. கொஞ்ச நேரத்துல எடுத்துட்டு வர்றேன்” என்றவர், என்னைப் பார்த்தார். ``என்ன சார்... ஃபங்ஷன் எப்படியிருந்துச்சு?” எல்லா நாற்காலிகளையும் அடுக்கிவைத்தார்.

``நல்லா இருந்துதுண்ணே” என்றேன்.

``சார், நம்ம வார்டுக்குப் போயிட்டு வந்துடலாம் வாங்க சார்” என்றார்.

குணா, ஒரு பக்கெட்டில் பிரியாணியைப் போட்டு எடுத்துக் கொண்டார். விழா முடிந்த வெறுமையில் மைதானம் வெறிச் சோடி இருந்தது. வார்டை நோக்கி நடந்தோம். வேப்பமரத்தில் ஒரு காகம் வேப்பம்பழத்தைச் சாப்பிட்டு முடித்து அதன் கொட்டையைத் துப்பியது. இப்படி நிறைய துப்பியிருக்கும்போல, காப்பகம் முழுவதும் தான்தோன்றித் தனமாக மரங்கள் வளர்ந்திருந்தன. ஏழாம் நம்பர் வார்டில் வார்டனிடம் ஏதோ சொல்லிவிட்டு, என்னை உள்ளே கூட்டிச் சென்றார். வார்டன் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். மூன்று காரை பெயர்ந்த குடில்கள் வார்டுகளாக இருந்தன. பிரியாணி பக்கெட்டை ஏழாம் நம்பர் வார்டுக்குக் கொண்டு சென்றார். உடன் சென்றேன். சட்டென முகத்தில் அறைந்த நோயாளிகளின் நிர்வாணம், என்னை இயல்பிலிருந்து மாற்றியது. அதில் இரண்டு பேருக்கு 20 அல்லது 25 வயதுதான் இருக்கும். ஓரிருவர் மோனத்தில் லயித்திருந்தனர். ஒருவன் ஜன்னலில் நின்றபடி வெளிகளில் எதையோ தேடிக்கொண்டிருந்தான். தனது ஊனுடம்பை மறந்து, உள்ளத்துக் கோயிலின் கதவைப் பூட்டி சாவியைத் தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டி ருப்பவர்கள். என் பார்வையில்தான் அவர்கள் நிர்வாணமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆதிக் குழந்தைகளுக்கு `நிர்வாணம்’ என்ற சொல்லின் பதம் தெரியாது.

குணா, என்னைப் புரிந்து கொண்டார். பக்கெட்டிலிருந்து பிரியாணிகளை அவரவர் தட்டில் வைத்தார். ஒருசிலர் சாப்பிடத் தொடங்கினார்கள். அப்போது ரோஸி மிகவும் இயல்பாக அங்கே வந்து ஒரு தட்டை நீட்டி பிரியாணியை வாங்கினார். எனக்கு ஒன்றும் புரிய வில்லை. குணா இயல்பாக இருப்பது சரிதான். ஆனால், வார்டனாக இருந்தாலும் ஒரு பெண், நிர்வாணத்தை சகஜமாகப் புரிந்துகொள்வது என்ன மனநிலை என்று புரியவேயில்லை.

``ரோஸி, நாளைக்கு முடி வெட்டுறவரை வரச் சொல்லு. மேலயும் கீழயும் காடு மாதிரி வளத்துக்கிட்டுத் திரியுறானுங்க” என்று சொன்னதும், ரோஸி வார்டன் சிரித்துக்கொண்டே பிரியாணித் தட்டோடு போனபோது, அவர் பெண்ணல்ல, இந்தக் குழந்தைகளின் தாய் எனப் புரிந்தது. அப்போது ஒருவன் வாய் நிறைய சாப்பிட்டுக்கொண்டிருந்தான். சிக்கன் பீஸ் ஒன்று, வாய் தவறி தனது உயிர்நிலையில் விழுந்தது. சாப்பிட்ட அதே கையில் விழுந்த சிக்கனைத் தேடி எடுத்து வாயிலிட்டான். நிர்வாணம் அடைய ஒரு மனநிலை வேண்டும். அது சுவாதீனமுள்ள நமக்கெல்லாம் வாய்க்காதுதான்.

குணா, பிரியாணி பக்கெட்டைக் கழுவிப் போட்டுவிட்டு அவரது வார்டுக்குக் கூட்டிச் சென்றார். நான் கிளம்புவதாகச் சொன்னபோதும் வலுக்கட்டாயமாக வரச்சொன்னார். வார்டில் கறிச்சோற்றின் மிதப்பில் ரத்தினக்கால் தோரணையில் எம்.ஜி.ஆர் நல்ல குறட்டையில் ஆழ்ந்திருந்தார். குணா, தனது பெட்டியைத் திறந்தார். அதே பழுப்புநிறப் புகைப்படம். கட்டைக் குதிரையில் குழந்தை மலர்விழி உட்கார்ந்து சிரித்துக்கொண்டிருந்தது. தான் தைத்ததாகச் சொல்லி ஒரு பாவாடை-சட்டையை எனக்குப் பரிசளித்தார். ``எப்படியும் எம் பொண்ணுக்கு இந்நேரம் கொழந்த பொறந்திருக்கும். அது எப்படி இருக்கும்னு தெரியாது. நானா கற்பனை பண்ணித் தச்சது. எப்பவாவது அனுப்பலாம்னு நினைப்பேன். அப்புறம் நானாவே எம் பொண்ண கஷ்டப்படுத்த வேணாம்னு பொட்டியில வெச்சிடுவேன். என்னமோ தெரியலை தம்பி, உங்களுக்குக் கொடுக்கணும்னு தோணுது. உங்க பிள்ளைக்கு இதைப் போட்டு உடுவீங்களா? யாரு வாங்கிக் கொடுத்ததுன்னு கேட்டா... தாத்தா வாங்கிக் கொடுத்ததுன்னு சொல்லுங்க” என்றபோது அவர் கரங்களைப் பற்றிக்கொண்டேன். குணாவின் ஒருநாள் வாழ்வை நாம் ஒருகாலும் வாழ்ந்துவிட முடியாதுதான். நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பதாக பாவனை செய்து கொண்டிருப்பவர்கள்.

குணா கொடுத்த விலைமதிப்பற்ற பரிசைச் சுமந்துகொண்டு அவரிடமிருந்து விடைபெற்றபோது, தூரத்திலிருந்து ரோஸி வார்டன் குணாவை நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்தார். ``உமன்ஸ் வார்டுல ஜெயாவுக்கு பீரியட் வந்து நிக்காமப் போவுது குணா. வார்டுல நாப்கின் தீர்ந்துபோச்சு. ஸ்டோர் ரூம்ல போயி நாப்கின் எடுத்துக்கிட்டு வர்றீயா? ரொம்ப ரத்தம் போச்சுன்னா, ப்ராப்ளம் ஆயிடும்” என்று ரோஸி வார்டன் சொன்னார்.

யோசித்த குணா என்னிடம் ``தம்பி, அந்தப் பாவாட-சட்டையக் கொடு” என்றார். நானும் கொடுத்தேன். ``ரோஸி, இப்போதைக்கு இந்தத் துணியவெச்சு சமாளி. நான் போயி நாப்கினை எடுத்துட்டு வந்துர்றேன்” என்று ரோஸி வார்டனிடம் துணிகளைக் கொடுத்தார்.

என்னிடம் திரும்பி ``கோச்சுக்காதீங்க தம்பி, அடுத்த தடவ நீங்க வரும்போது தச்சிருவேன். வர்றேன் தம்பி” என்று ஸ்டோர் ரூம் நோக்கி விரைந்து நடந்தார் குணா எனும் குணமடைந்த நோயாளி. வாழ்வின் அற்புத கணத்தைப் பரிசளித்துவிட்டுப் போகும் குணாவைப் பார்த்துதான் `பைத்தியம்’ என்று சொல்கிறோம், தெளிவாக இருப்பதாக நினைத்துக்கொள்ளும் நாம். எம்.ஜி.ஆர் மொழியில் சொல்வதானால் ``இதச் சொன்னா, நம்பள பைத்தியக்காரன்னு சொல்வானுங்க.’’

- மனிதர்கள் வருவார்கள்...