மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சோறு முக்கியம் பாஸ்! - 30

சோறு முக்கியம் பாஸ்! - 30
பிரீமியம் ஸ்டோரி
News
சோறு முக்கியம் பாஸ்! - 30

சோறு முக்கியம் பாஸ்! - 30

மீபத்திய உலக சுகாதார நிறுவன ஆய்வுகள் பலவும், மனிதனின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் முக்கியக் காரணியாக உணவைத்தான் முன்னிறுத்துகின்றன. உணவுதான் இயங்குதலுக்கான அடிப்படை. ஒவ்வொரு தட்பவெப்பத்துக்கும் தகுந்தவாறு மனிதர்களைப் படைத்த இயற்கை, அவர்களைச் சுற்றி அவர்களுக்கான உணவையும் படைத்து வைத்தி ருக்கிறது. அதை அடையாளம் கண்டு, சாப்பிட்ட வரை மனிதர்கள் ஆரோக்கியமாக இருந்தார்கள். அந்த உணவுகளைப் புறக்கணித்து அல்லது உணவுக்கான நோக்கம் மறந்து வழி தவறிய தலைமுறை, நோய்களின் பிடியில் சிக்கியது.   

சோறு முக்கியம் பாஸ்! - 30

உடலும் மனமும் ஒரே அச்சில் நின்றால் எந்த நோயும் நம்மை நெருங்காது. அதற்கு அடிப்படை, உணவு. சாப்பிட்டவுடன் வயிற்றோடு சேர்ந்து மனமும் குளிரவேண்டும். உற்சாகமாகவும் திருப்தியாகவும் இருக்க வேண்டும். புதிய புதிய சிந்தனைகள் உதிக்க வேண்டும். செயலில் வேகம் பிறக்க வேண்டும். மாறாக, வயிறு கனத்து, உடல் சோர்ந்து, மந்தம் சூழ்ந்தால் சாப்பிட்ட உணவில் பிரச்னை.

சோறு முக்கியம் பாஸ்! - 30



புதுக்கோட்டை, வடக்குராஜ வீதியில் பிருந்தாவனத்துக்கு அருகில் இருக்கிற ‘நிலாச்சோறு உணவக’த்தில் சாப்பிட்டு முடித்தவுடன் உண்மையில் அவ்வளவு உற்சாகமாக இருக்கிறது. சாப்பிட்டு முடித்தபிறகும் வயிறு காலியாக இருப்பதாகவே தோன்றுகிறது. உணவின் தன்மை, உணவகத்தின் சூழல், பரிமாறுபவர்களின் கனிவு எல்லாமே இதமாக இருக்கின்றன.

எல்லாமே மரபுணவுகள்... பெரும்பாலும் விஷமில்லாத இயற்கை வேளாண்மையில் விளைந்த தானியங்களால் செய்யப்பட்டவை. சாப்பிடும்போதே வாசனையும் சுவையும் வித்தியாசத்தை உணர்த்திவிடுகின்றன. 16 பேர் சேர்ந்து இந்த உணவகத்தை நடத்துகிறார்கள். இதில் 10 பேர் புதுக்கோட்டையில் உள்ள பிரபல மருத்துவர்கள். நம்மாழ்வார், வேதாத்திரி மகரிஷி போன்றோரின் தாக்கத்தால் ஒரு நல்வினையாக எல்லோரும் சேர்ந்து இந்த உணவகத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். ஒரு பக்கம் இயற்கைப் பொருள்கள் அங்காடி செயல்படுகிறது. உணவகத்துக்கு மேலே கலந்துரையாடல் அரங்கமும் இருக்கிறது. வாராவாரம், இயற்கை உணவு சார்ந்த கலந்துரையாடல்கள், பயிற்சி வகுப்புகள், திரையிடல்களும் இங்கு நடக்கின்றன. 

சோறு முக்கியம் பாஸ்! - 30

உணவகத்தின் சூழலே சிறப்பாக இருக்கிறது. சுற்றிலும் சுடுமண் சிற்பங்கள். நடுவில் திருவள்ளுவர். சுடுமண் குடுவைக்குள் எரியும் விளக்குகள் ஒவ்வொரு டேபிளுக்கும் இதமான வெளிச்சம் தருகின்றன. அழகான டைனிங்... 30 பேர் அமர்ந்து சாப்பிடலாம். மூன்று வேளையும் உணவுகள் உண்டு. அதிகாலை, உணவகத்துக்கு வெளியே ஸ்டால் போட்டு அறுகம்புல் சாறு, நெல்லிச்சாறு, சிறுதானியக்கூழ் தருகிறார்கள். ஏழரை மணிக்கு டிபன் ரெடியாகிவிடுகிறது. சிறுதானிய இட்லி, கேழ்வரகு தோசை,  கேழ்வரகுக்கூழ், கம்மங்கூழ், வரகுப் பொங்கல், கம்பு பூரி சாப்பிடலாம். தேங்காய்ச் சட்னி, மல்லிச் சட்னி, பிரண்டைச் சட்னி, கடலைச் சட்னி... இதெல்லாம் சைடிஷ். அதிகபட்ச விலையே 35 ரூபாய்தான்.

மதியம், இயற்கைச் சாப்பாடு. 80 ரூபாய். முதலில், ஒரு மண் குவளையில் சூப் தருகிறார்கள். பூண்டு சூப். ஆரம்பமே அமர்க்களம். இஞ்சி, புதினா, கறிவேப்பிலை, வாழைத்தண்டு என தினமொரு வகை செய்வார்களாம். அடுத்து வரகுப் பாயசம். இதிலும் தினமொரு வகை உண்டாம்.  ஒரு கரண்டி தினைப்பொங்கலும் வைக்கிறார்கள். தினைக்கிணையாக முந்திரியும் திராட்சையும் நிரம்பியிருக்கின்றன.  ஒரு பொரியல், ஒரு கூட்டு, ஒரு வறுவல். நமக்கு வாய்த்தது, முட்டைக்கோஸ் பொரியல், மணத்தக்காளிக் கீரைக் கூட்டு, பாகற்காய் வறுவல். பாகற்காயில் நல்லெண்ணெய் வாசனை ஈர்க்கிறது. தினமும், சமைக்காத ஒரு பசுங்காய் தொடுகறியும் உண்டாம். கேரட்  துருவலில் மிளகு, இஞ்சிச்சாறு, தயிர், எலுமிச்சைச் சாறு, கறிவேப்பிலை சேர்த்து மணக்க மணக்க அள்ளி வைக்கிறார்கள். இளம் பிரண்டைக் கொடியும் பருப்பும் சேர்த்து அரைத்த துவையல் சுவை நரம்புகளைச் சுண்டுகிறது.  கூடவே, ஒரு சுட்ட அப்பளம்.

தூயமல்லி அரிசி சாதம், கமகமகக்கிறது. அரிசியும் ஆர்கானிக்காம்.  கதம்பச் சாம்பாரும், பயறுகள் போட்ட வற்றல் குழம்பும் ஏகப் பொருத்தமாக இருக்கிறது தூயமல்லிக்கு.  மிளகு ரசமும், இஞ்சி, சீரகம், எலுமிச்சை சேர்த்துத்தாளித்த மோரும் சுகம். 

சோறு முக்கியம் பாஸ்! - 30

மீல்ஸ் விரும்பாதவர்கள், வெரைட்டி ரைஸ் சாப்பிடலாம். வரகு தக்காளி சாதம், சாமைப் புளிசாதம், தினை சாம்பார் சாதம், கொள்ளு சாதம், நெய் சாதம்  என ஏழெட்டு வகைகள் வைத்திருக்கிறார்கள். 40 ரூபாய்தான்.

மாலை, இயற்கை தானியங்களில் செய்யப்படும் பலகாரங்கள்; இரவு, தானியப் பொடி தோசை வகைகள், இடியாப்பம் - தேங்காய்ப்பால், நவதானிய அடை சாப்பிடலாம். குழந்தைகளைக் கவர்வதற்காக வரகு, சாமை, குதிரைவாலி நூடுல்ஸும் வைத்திருக்கிறார்கள். முருங்கைக்காயில் உள்ள சதை, பொட்டுக்கடலை மாவு என இதற்கான சேர்மானங்கள் வித்தியாசமாக இருக்கின்றன. 

சோறு முக்கியம் பாஸ்! - 30

‘நிலாச்சோறு’ உணவகத்தின் இன்னொரு சிறப்பு, குடிநீர். பெரிய பானையில் தண்ணீர் நிரப்பி நன்னாரி, வெட்டி வேர், மாகாளி, அதிமதுரம் நான்கையும் ஒரு துணியில் கட்டி உள்ளே போட்டு வைத்திருக்கிறார்கள். தண்ணீரின் வாசனையும் குளிர்ச்சியுமே வித்தியாச அனுபவத்தைத் தருகிறது. உணவகத்தின் உள்ளே தனியாக மரச்செக்கு வைத்து, தேவையான எண்ணெய் வகைகளை சுயமாகத் தயாரித்துக்கொள்கிறார்கள். பரிமாறுபவர்கள் அனைவரும் மாணவர்கள். பகுதிநேரமாக வேலை செய்கிறார்கள். சமைக்கும் பெண்கள், முறைப்படி இயற்கை உணவு சமையல் பயிற்சி பெற்றவர்கள்.

சிறுதானிய உணவு என்றாலே சப்பென்று சுவையற்று இருக்கும் என்ற கற்பிதம் இருக்கிறது. நிலாச்சோற்றில் சாப்பிட்டால் அந்த எண்ணம் உடைந்து நொறுங்கிவிடும்.  நல்லுணவு வழங்குவதைத் தொழிலாக அல்லாமல் ஒரு இயக்கமாக முன்னெடுத்துச் செல்கிறது நிலாச்சோறு. புதுக்கோட்டைப் பக்கம் போனால், இங்கே சாப்பிட மறந்துவிடாதீர்கள்!

- பரிமாறுவோம்

வெ.நீலகண்டன் - படங்கள்: ம.அரவிந்த்

சோறு முக்கியம் பாஸ்! - 30

செம்புப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஃபேஷனாகி விட்டது. அதில் உணவுகளை வைத்துச் சாப்பிடலாமா?

சோறு முக்கியம் பாஸ்! - 30

 “செம்புப் பாத்திரங்களில் உணவுகளை வைத்துச் சாப்பிடுவது நல்லதல்ல. விரைவிலேயே உணவு கெட்டுப் போய்விடும். தண்ணீரைச் சுத்திகரிக்கக் கூடிய ஆற்றல் செம்புக்கு இருக்கிறது. அதனால் தண்ணீரை வைத்துக் குடிக்கலாம். செம்புப் பாத்திரங்களை முறையாகப் பராமரிக்கவேண்டும். இல்லாவிட்டால்  பாத்திரத்தில் ஒருவிதக் களிம்பு உருவாகிவிடும். களிம்பு சேர்ந்த பாத்திரத்தில் தண்ணீரை வைத்துக் குடிக்கும்போது அது நச்சாக மாற வாய்ப்புண்டு. விபூதி, சாம்பல், உப்பு போன்றவற்றைப் பயன்படுத்தி நன்றாகக் கழுவியபிறகே  செம்புப் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். சமைக்கவும், உணவுகளை வைத்துப் பயன்படுத்தவும் மண் பாத்திரங்களே சிறந்தவை. உணவுகளில் உள்ள நீர்ச்சத்தைத் தக்கவைத்து, கெட்டுப் போகாமல் பாதுகாக்கும்...”

- செந்தில் கருணாகரன், சித்த மருத்துவர்