மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன செய்தார் எம்.பி? - கோபாலகிருஷ்ணன் (மதுரை)

என்ன செய்தார் எம்.பி? - கோபாலகிருஷ்ணன் (மதுரை)
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன செய்தார் எம்.பி? - கோபாலகிருஷ்ணன் (மதுரை)

“எம்.பி வளர்ந்துட்டார்... மதுரை வளரலை!”

#EnnaSeitharMP
#MyMPsScore

2011 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களை அறிவித்துக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. மதுரை மாநகர 4-வது வார்டுக்கு கோபாலகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.

‘‘அ.தி.மு.க-வில் உறுப்பினர் அட்டைகூட இல்லாதவருக்கு சீட்டா?’’ எனக் கொதித்துப் போய் சரவணன் என்பவர் போயஸ் கார்டன் முன்பு தீக்குளிக்க முயன்றார். ஆனாலும் கோபாலகிருஷ்ணன் மாற்றப்படவில்லை. கவுன்சிலர் ஆகி, மதுரை துணை மேயரும் ஆனார். அந்த கோபாலகிருஷ்ணன்தான், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் சிபாரிசில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை எம்.பி தொகுதி வேட்பாளராகவும் ஆனார். ஜெயிக்கவும் செய்தார். நீண்ட காலம் அ.தி.மு.க-வில் உள்ளவர்களே வியக்கும் வகையில், ‘ஒரே பாடலில்’ அரசியலில் உச்சத்தைத் தொட்ட கோபாலகிருஷ்ணன், மதுரைக்கு என்ன செய்தார்?

தமிழகத்தில் அரசியல் அதிர்வலைகளை அவ்வப்போது ஏற்படுத்தும் நகரம் மதுரை. இந்த மாநகருக்குள் அடங்கிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளையும், கூடுதலாக மேலூர் சட்டமன்றத் தொகுதியையும் சேர்த்து அமைந்ததுதான் மதுரை நாடாளுமன்றத் தொகுதி.

‘‘எம்.பி ஆன பிறகு வாக்களித்த மக்களை மறந்து, டெல்லிக்கும் மதுரைக்கும் பறந்து கொண்டிருக்கிறார். அ.தி.மு.க கூட்டங்களில்கூட எப்போதாவதுதான் அவரைப் பார்க்க முடியும். கட்சியினரும் இவரை அழைக்க மாட்டார்கள். இவரும் கட்சியினரைக் கண்டுகொள்ள மாட்டார்’’ என்று கோரஸாகச் சொன்னார்கள் பலரும்.

என்ன செய்தார் எம்.பி? - கோபாலகிருஷ்ணன் (மதுரை)

‘‘சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம் இது. மதுரைக்குப் பின் பல ஆண்டுகள் கழித்து மாநகராட்சியாக மாறிய கோவை, திருச்சி, ஈரோடு, திருப்பூர் போன்ற மாநகரங்கள் கிடுகிடுவென வளர்ந்து, இன்று தொழில்துறையில் பெரு வளர்ச்சி அடைந்துள்ளன. தென் மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல், வட மாநில மக்களும் அங்கு வேலை தேடிச் செல்கிறார்கள். ஆனால், மதுரையில் வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் பெரும் தொழில்கள் ஏதுமில்லை. மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி  நெடுஞ்சாலையில் தொழில் பூங்கா திட்டம் அப்படியே கிடக்கிறது. நெசவாளர்கள் நிறைந்த மதுரையில் நெசவுத் தொழிலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும் வகையில் புதிய திட்டங்கள் இல்லை. இதுபற்றி எம்.பி-க்கு எந்த அக்கறையும் இல்லை’’ எனப் புலம்புகிறார்கள் தொழில் துறையினர்.

‘‘இந்தியாவில் முக்கியமான நகரம் மதுரை என்பதால், கோரிக்கைகள் வைக்காமலேயே மத்திய அரசின் நிதி மதுரைக்குக் கிடைத்துவருகிறது. அப்படித்தான் ஸ்மார்ட் சிட்டி, பாரம்பர்ய கோயில் நகரம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என மத்திய அரசின் திட்டங்கள் மதுரைக்கு வந்தன. இதையெல்லாம் வைத்து கோபாலகிருஷ்ணன் தப்பித்துக்கொள்கிறார்’’ என அவரது கட்சியினரே சொல்கிறார்கள்.

மதுரை நகரிலிருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செட்டிகுளம் ஊராட்சிதான் கோபாலகிருஷ்ணன் தத்தெடுத்த கிராமம். மாநகரையொட்டி இருக்கும் புறநகர்ப் பகுதிகள் பெரும் வளர்ச்சியடைந்து வரும்போது, எம்.பி தத்தெடுத்த செட்டிகுளம் ஹைடெக்காக மாறியிருக்கும் என எதிர்பார்த்து அங்கே சென்றோம். ஏமாற்றம்தான் மிஞ்சியது. மிகவும் பின்தங்கிய ஊராட்சியாக அது காட்சியளிக்கிறது. அங்குள்ளவர்களிடம், “எம்.பி புதுத் திட்டங்களைக் கொண்டு வந்தாரா?” என்று கேட்டால், நம்மைப் பார்த்து முறைக்கிறார்கள். இன்னும் சிலரோ, ‘‘எங்களுக்கு யாரு சார் எம்.பி....’’ என நம்மையே திருப்பிக்கேட்டுத் திகைக்க வைத்தனர். ரவி என்பவர், “ஊமச்சிகுளம், செட்டிகுளம், திருமால்புரம், சாஸ்திரி நகர் சேர்ந்ததுதான் செட்டிகுளம் ஊராட்சி. பெரியாறு தண்ணி சீராக வராததால் விவசாயம் இல்லாமல் கூலி வேலைக்குச் செல்லும் மக்கள் அதிகம். ஊரை எம்.பி தத்தெடுக்கிறதா சொல்லி, நான்கு வருஷத்துக்கு முன் இங்கே பெரிய விழா எடுத்தார்கள். அப்பத்தான் முதல்முறையாக அவரைப் பார்த்தோம். இந்த ஊருக்கு அதைக் கொண்டுவருவேன், இதைக் கொண்டுவருவேன் எனப் பேசினார். அதன் பிறகு ஆளையே காணவில்லை. சாக்கடையால் ஊரே நாறுகிறது. பாசனக் கால்வாய் தூர்ந்து, குப்பைமேடாகிவிட்டது. நல்ல ரோடு இல்லை, குடிதண்ணீர் வசதி இல்லை. கொடுமை என்னவென்றால், தத்தெடுக்கிறதா சொல்லி நடத்துன விழாவுக்குப் பஞ்சாயத்துப் பணம் ஒன்றரை லட்சத்தைக் காலிசெய்து விட்டனர்” என்று வருத்தப்பட்டார்.

ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜரத்தினம், “மதுரையிலிருந்து சென்னைக்கோ பிற நகரங்களுக்கோ செல்லக் கூடுதல் ரயில்கள் தேவை. அதற்கு பிட் லைன்களை அதிகப்படுத்த வேண்டும். வலியுறுத்திப் பேசினால் மத்திய அரசு நிச்சயம் செய்து கொடுக்கும். மதுரை ரயில் நிலையத்தை மேம்படுத்த எதுவும் செய்யவில்லை. கூடல் நகர் ரயில் நிலையத்தை ஒரு முனையமாக்கினால், மக்களுக்குக் கூடுதல் வசதிகள் கிடைப்பதோடு மதுரைக்குள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க முடியும். இதுபற்றிப் பலமுறை கோரிக்கை வைத்தும் எம்.பி கண்டுகொள்ளவில்லை. மாறாக மத்திய அமைச்சர்களையும், மத்திய அரசு அதிகாரிகளையும் தொழிலதிபர்கள் சந்திக்க ஏற்பாடு செய்து கொடுப்பது மட்டுமே தன் வேலை என நினைக்கிறார். தன்னை வர்த்தகர்கள், தொழிலதிபர்களுக்கு மட்டும் சேவை செய்யும் எம்.பி-யாகவே நினைத்துச் செயல்படுகிறார். மதுரைக்கு மோனோ ரயில் கொண்டு வரப்படும் என ஜெயலலிதா சொல்லியிருந்தார். அது நிறைவேறவில்லை. மெட்ரோ ரயில் கோரிக்கையும் அப்படியே இருக்கிறது. மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டம், போதிய நிதி ஒதுக்காமல் முடங்கிக் கிடக்கிறது. கோரிப்பாளையத்தில் மேம்பாலம் கொண்டு வருவதாகச் சொன்னார். அதற்குப்பின் அவரையே பார்க்க முடியவில்லை” என்றார்.

தேர்தலில் கோபாலகிருஷ்ணனை எதிர்த்துப் போட்டியிட்ட தே.மு.தி.க-வின் சிவமுத்துக்குமார், “தனக்கு வாக்களித்த மக்களைப் பற்றி அதற்குப் பின் அவர் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவரையே மக்கள் மறந்துவிட்டார்கள். எந்த அதிகாரத்திலும் இல்லாமலே அரசியல்வாதிகள் பலரும் மக்களுக்குச் சேவை ஆற்றிவருகிறார்கள். ஆனால், எம்.பி-யாக இருக்கும் அவர் எதையுமே செய்யவில்லை’’ என்றார்.

அ.ம.மு.க ஊடகத் தொடர்பாளர் வெற்றிபாண்டியன், “ஒரு கட்சியில் உறுப்பினராக இல்லாமல், கவுன்சிலராகவும், துணை மேயராகவும் பொறுப்பு வகித்து, அப்படியே ஜாக்பாட்டாக எம்.பி பதவி வரை சென்றவர் கட்சிக்கோ, வாக்களித்த மக்களுக்கோ எப்படி நன்மை செய்வார்? சுருக்கமாகச் சொன்னால், அவர் ஒரு பிசினஸ்மேன். அவர் மனைவியின் உறவினர் ஒரு முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி. கோபாலகிருஷ்ணனை அரசியலுக்குள் வளர்த்துவிட்டதில் அவரின் பங்கும் உள்ளது. கட்சியின் சீனியர்கள் பலரை ஓவர்டேக் செய்து, அப்படியே எம்.பி-யாகவும் ஆகிவிட்டார். இப்படி ஓர் எம்.பி இருப்பது அ.தி.மு.க-வினருக்கே தெரியாது. மக்களுக்கு எப்படித் தெரியும்? எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.பி-யின் முயற்சி எதுவுமில்லை. மதுரை முக்கியமான நகரம் என்பதால், எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு அளித்திருக்கிறது’’ என்றார்.

மடிசியா மணிமாறன், ‘‘எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையை விட்டு வேறு ஊருக்குக் கொண்டு செல்ல சிலர் முயன்றபோது, நாங்கள் முன்னெடுத்த போராட்டங்களுக்கு ஆதரவாக எம்.பி இருந்தார். டெல்லியில் எய்ம்ஸ் விஷயமாக அமைச்சர்கள், அதிகாரிகளைக் காண செல்லும்போது அவரும் எங்களுடன் வந்தார். அவரது பங்களிப்பைக் குறைத்துச் சொல்ல முடியாது. தொகுதியின் எம்.பி-யாக மதுரைக்குப் பல விஷயங்களைச் செய்யத் தவறிவிட்டார். இங்கு பெரிய தொழிற்சாலைகள் இல்லாததால், தென் மாவட்ட மக்கள் பிழைப்புத் தேடி சென்னை, திருப்பூர் மற்றும் கோவைக்குச் செல்கிறார்கள். புதிய ரயில்களைக் கேட்டு வாங்கியிருக்கலாம். சர்வதேச விமானங்கள் அதிகளவில் வந்து செல்லும் வகையில் மதுரை விமான நிலையம் விரிவுபடுத்தப்படவில்லை’’ என்றார்.

குற்றச்சாட்டுகளுக்கு கோபாலகிருஷ்ணனின் விளக்கம் என்ன? தல்லாகுளத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். ‘‘எப்படி வேண்டுமானாலும் சொல்லட்டும், எய்ம்ஸ் வருவதற்கு நானும் பங்களித்திருக்கிறேன் என்பதே உண்மை. அது என் தொகுதிக்குள் வராவிட்டாலும், என் மாவட்டத்தில் வந்துள்ளது மகிழ்ச்சிதான். மக்களின் தேவைகளை நாடாளுமன்றத்தில் கோரிக்கைகளாக வைப்பதுதான் என் வேலை. ‘தொகுதிக்கு வரவில்லை... மக்களைச் சந்திக்கவில்லை’ எனச் சொல்வதில் அர்த்தமில்லை. மதுரைக்கு வருகிற நேரத்தில் மக்களைச் சந்திக்கிறேன், நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன். வாடிப்பட்டி ஜவுளிப் பூங்காவுக்கும் இடையப்பட்டியில் மருந்தியல் கல்லூரிக்கும் மு.க.அழகிரி அமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டினார். அவை இரண்டையும் செயல்படும் வகையில் நான்தான் முயற்சி எடுத்துச் செய்திருக்கிறேன்.

பிரதமர் நிவாரண நிதிக்கு விண்ணப்பித்தவர் களுக்கு 90 சதவிகிதம் நிதி பெற்றுத் தரப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் பணியாளர்களை அமர்த்தி மக்களிடம் மனுக்களை வாங்கி நடவடிக்கை எடுக்கிறேன். மதுரையைச் சேர்ந்த வர்த்தகச் சங்கத்தினர், தொழிலதிபர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக டெல்லி வந்தால், அவர்கள் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன். அப்படித்தான் ஊறுகாய், அப்பளம், வடாம், கடலைமிட்டாய் போன்ற பொருள்களுக்கு வரிவிலக்குப் பெறப்பட்டது. இதனால், மக்களுக்குத்தானே நன்மை. என்னைத் தேடி டெல்லிக்கு யார் வந்தாலும் உதவி செய்வேன்.

தத்தெடுத்த ஊராட்சிக்கு ஒன்றும் செய்யவில்லைதான். அது மத்திய அரசு அறிவித்த திட்டம். தொகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள சூழ்நிலையில், ஒரு கிராமத்துக்கு மட்டும் எப்படிச் செய்ய முடியும்? அதற்குத் தனியாக நிதியை பிரதமர் ஒதுக்கியிருக்க வேண்டும், ஒதுக்கவில்லை. அங்கு சாக்கடை வசதி இல்லை என்றால், அதைச் செய்ய வேண்டியது உள்ளாட்சி நிர்வாகம்தான். அதற்கு நான் பொறுப்பல்ல. நான் எப்போதும் அரசியலுக்காக எதையும் செய்ய மாட்டேன், இந்தப் பொறுப்புக்கு வந்த பிறகு மக்களுக்கு நல்லது பண்ணியிருக்கிறேன் என்று ஆத்ம திருப்தி உள்ளது’’ என்றார்.

உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, செ.சல்மான்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

தொகுதி மேம்பாடு நிதி செலவழித்தல்!

நா
டாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒவ்வொரு எம்.பி-க்கும் ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். அந்த நிதியை கோபாலகிருஷ்ணன் பயன்படுத்திய விவரம் இங்கே...

என்ன செய்தார் எம்.பி? - கோபாலகிருஷ்ணன் (மதுரை)
என்ன செய்தார் எம்.பி? - கோபாலகிருஷ்ணன் (மதுரை)

எம்.பி ஆபீஸ் எப்படி இருக்கு?

துரை தல்லாகுளத்தில் இருக்கிறது எம்.பி கோபாலகிருஷ்ணனின் அலுவலகம். வருகிறவர்களுக்கு டீ, காபி வழங்குகிறார்கள். மதுரை தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி பார்கவியின் தந்தைக்கு பார்வைக் குறைபாடு உள்ளது. அவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. எனவே, பார்கவியை தன் கல்லூரிக் கட்டணத்துக்கு உதவி கேட்டு எம்.பி அலுவலகத்தில் மனு செய்ய வைத்தோம். கூரியரில் மனு அனுப்பி, பத்து நாட்கள் கழிந்தும் பதில் இல்லை. எம்.பி அலுவலகத்தில் விசாரித்தபோது, ‘‘வருகிற மனுக்கள் அனைத்தையும் கணினியில் பதிவுசெய்து, அவற்றை எம்.பி-யின் பார்வைக்கு அனுப்பி, அவர் ஒப்புதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பிவிடுவோம். பார்கவியின் மனு வரவில்லை. பரவாயில்லை, நேரில் தரச் சொல்லுங்கள். நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்றனர் அலுவலகப் பணியாளர்கள். அப்படியானால், தபாலில் வரும் மனுக்கள் அம்போதானா?

என்ன செய்தார் எம்.பி? - கோபாலகிருஷ்ணன் (மதுரை)

எம்.பி எப்படி?

துரை நாடாளுமன்றத் தொகுதிக்குள் அடங்கியிருக்கும் மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மையம், மதுரை மேற்கு ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் 602 பேரை சந்தித்து ஜூ.வி டீம் எடுத்த சர்வே:

என்ன செய்தார் எம்.பி? - கோபாலகிருஷ்ணன் (மதுரை)
என்ன செய்தார் எம்.பி? - கோபாலகிருஷ்ணன் (மதுரை)